Dec 15, 2014

வால்விழுங்கி நாகம் (அறிவியல் புனைவு)

"சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் மிகவும் முன்னேறிய ஒரு சமூகம் இருந்தது.. அது அழிவற்றது என்று தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டது"

டாக்டர் கோபால் (பிஎச்டி) தனது குறிப்புகளின் முதல் வரிகளை ஆயிரம் முறை படித்திருந்தாலும், அதன் மீது கண்கள் ஓடியதும், மனது தன்னையறியாமல் மறுபடி படித்தது. இந்த வருட புதிய மாணவர்களுக்கு மறுபடியும் முதலில் இருந்து வரலாற்றைச் சொல்ல வேண்டும். ஆனால் சிந்து சமவெளி நாகரிகம் மட்டும் அவனுக்கு அலுக்காத ஒன்று. சமயத்தில் அதைப்பற்றி ஆழமாக வேறு யாராவது பேசினாலோ எழுதிவிட்டாலோ தனது காதலியை வேறு எவனோ வர்ணித்ததைப் போல் எரிச்சலை அப்பிக்கொள்கிறான். பெரும்பாலும் புது மாணவர்கள் முதல் வகுப்பின் முடிவிலேயே அவனது ரசிகர்களாகியிருப்பார்கள். மெட்ராஸ் யுனிவர்சிட்டி வரலாற்று பிரிவின் பேராசிரியர்கள் வரலாற்றிலேயே மிகவும் வயது குறைந்தவனாக (32) இருப்பது மட்டுமே அதற்கு காரணமாக இருக்கமுடியாது. 

வரலாறு/Archeological Survey of India - ASI/எபிக்ரஃபி வட்டார பெரிசுகள் பலரும் கூட அவன் பெயரை தெரிந்து வைத்திருந்தார்கள். சமீபத்தில் கோபாலும் அவனது வழிகாட்டி டாக்டர் ராவும் சேர்ந்து எழுதிய ஆராய்ச்சி பேப்பர் சர்வதேச அளவில் தர்ம அடி வாங்கினாலும், நல்ல கவனத்தைப் பெற்றது. தோண்டி எடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துருக்கள் ஒரு மொழியின் எழுத்துக்கள் என்பது அந்த ஆராய்ச்சியின் சாரம். எதிர்த்தரப்பு அவை வெறும் சின்னங்களே என்கிறது. தகவல்கள் இந்த அளவிலேயே கிடைத்திருப்பதால் அதன் அர்த்தங்களைப் பல்லாண்டுகளாகப் பலர் முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்றுமே கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம்.

கோபால் முந்தைய இரவு சரியாகத் தூங்காததால், பல ஆசிரியர்கள் உபயோகித்து மழுமழுப்பேரிய மேஜையில் சாய்ந்து கண்களை சற்றே மூடியதும், அவனது அறைக்கதவில் யாரோ டக் டகாடக் டக்என இசைத்தார்கள். மலர்ந்து உட்கார்ந்தான். இந்த ஒரு வாரத்திலேயே அந்த ராகமான கதவுத்தட்டல் அர்ச்சனாவுடையது என்பது பழக்கமாகிவிட்டது. Theoretical physicist. சுவிட்சர்லாந்தில் கடவுள் துகள் படைக்கும் CERNல் வேலை! ஆனால் துளி பந்தா இல்லை. இங்கு ஏதோ நிகழ்ச்சிக்காக வந்தவள் கோபாலை தேடித்தேடி வந்து பேசினாள். அவனைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்ததோடு, அவனது வேலையையும் கவனமாக நோண்டி நோண்டி கேட்டுக்கொண்டாள்.  ஆனாலும் ரிசர்ச் செய்பவர்களில் சிலர் அரசியல்வாதிகளை விட மோசமானவர்கள். ஏதோவொரு நோக்கத்தை மட்டுமே கொண்டு மற்ற எதையும் கண்டு கொள்ளாதவர்கள் ஆபத்தானவர்கள்தானே?

"வாங்க அர்ச்சனா.. கான்ஃபிரன்ஸ் முடிஞ்சதா?"

"இல்லை.. ரொம்ப அறுவை.. அதான் நழுவி இங்க ஓடி வந்துட்டேன். நீங்க கிளாஸ்க்கு போகனுமா?"

"இல்லை லஞ்சுக்குப் பிறகுதான்.. நீங்க சொல்லுங்க"

"கேக்கணும்னு இருந்தேன். அன்னிக்கு பேசிட்டு இருந்தப்போ நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்க.. சிந்து நாகரிக மக்கள் பல ஆயிரம் வருஷத்துக்கு முன்ன எழுதி வச்சிட்டு போன விஷயங்களைப் படிச்சு புரிஞ்சிக்க என்ன வேணாலும் செய்வேன், எவ்வளவு தூரம் வேணாலும் போவேன்னு.."

"அது ஒரு வார்த்தை இல்லை.. பல வார்த்தைகள்"

ஒரு சிலரின் சிரிப்போ அழுகையோ செயற்கை என்று கண்டுபிடிக்கவே முடியாது. அப்படி ஒன்றை சிரித்துவிட்டு, "ஐயோ.. சரி பல வார்த்தைகள்.. அதுக்காக எவ்வளவு தூரம் போவீங்க?"

அவளின் கேள்வி அந்த இடத்தில் பொருந்தாமல், அவளது குரலின் விளையாட்டுத்தனத்தையும் மீறி தொக்கியிருந்த முக்கியத்துவம் அவனுக்கு நெருடியது.

"அப்படிப் படிச்சிட முடியும்னா, என் உயிரைக்கூடக் கொடுப்பேன்" அவனை மீறி வார்த்தைகள் வந்து விழுந்தன. அவ்வளவு தீர்க்கத்தை அவளும் எதிர்பார்க்கவில்லை.

"நான் ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசணும். எங்க ஆரம்பிக்கனு தெரியலை"

"சும்மா தயங்காம சொல்லுங்க அர்ச்சனா"

"சுருக்கமா சொன்னா லூசோன்னு நினைப்பீங்க.. அதனால விலாவாரியாவே சொல்றேன். இது ரொம்ப ரகசியம். வெளிய போகாம பாத்துக்கறது உங்க பொறுப்பு.. For friends’ sake!"

தெரியாத ஒருவர் தன்னிடம் அவ்வளவு ஆர்வம் காட்டியது ஏதோ வேலைக்காக என்பது வழக்கமான அயர்ச்சியைத் தந்தாலும், இவனுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கோபாலை வேறு எதையும் யோசிக்க விடவில்லை.

"நிச்சயம் யார்ட்டயும் சொல்லலை. ரொம்பப் பயமுறுத்தாம சீக்கிரம் சொல்லுங்க"

"வார்ம்ஹோல் கொண்டு காலப்பிரயாணம் பத்தி உங்களுக்குத் தெரியுமா? ஐன்ஸ்டைன் கூட அதப்பத்தி சொல்லியிருக்கார். இப்போ ஒரு படம் கூட வந்ததே?"






அவனுக்குத் தெரிந்த கொஞ்சத்தைச் சொன்னதும் அர்ச்சனா ஓரளவு சரிதான்’ என மூச்சு வாங்கிக்கொண்டே இப்படி விளக்கினாள்:

இரு வேறு கால வெளிகளுக்கு இடையே சுரங்கப்பாதை போல் ஒரு இணைப்பை ஏற்படுத்தினால் அதுதான் வார்ம்ஹோல். பாதையின் இரண்டு பக்கமும் நுழைய Funnel மாதிரி நுழைவாயில்கள். *வளவளகொழகொழ* ஆனால் இந்த நுழைவாயில்கள், பாதை எல்லாம் உருவாக்குவது அவ்வளவு சுலபம் அல்ல. பிரபஞ்சத்தில் இயற்கையாகவே காணப்படும் பிளாக் ஹோல் மூலம் இந்த நுழைவாயில்கள் சாத்தியம் என பல அறிஞர் மண்டைகள் கருதின.

*வளவளகொழகொழ* பிளாக் ஹோல் தெரியுமல்லவா? ஒரு மாபெரும் நட்சத்திரம் இறக்கும்போது அளவில் மிகவும் சிறுத்து, அவ்வளவு நிறையும் ஒரு புள்ளியில் தேங்கி உருவாவது. அதன் அடர்த்திக் காரணமாக மைய ஈர்ப்பு மிக அதிகமாக, சுற்றி இருக்கும் அனைத்தையும் இழுக்கும். அனைத்தையும் என்றால் ஒளியை கூடத் தப்பவிடாமல் இழுப்பதால் அதன் பெயர் கருந்துளை. *வளவளகொழகொழ* கிட்டத்தட்ட பிரபஞ்சத்தின் அனைத்து கேலக்சியின் மத்தியிலும் இப்படி ஒரு கருந்துளை உருவாகி சுற்றி இருப்பவற்றை இழுத்துக்கொண்டிருக்கிறது.

இப்படி ரொம்ப ரொம்பக் குட்டியான இடத்தில் மாபெரும் அடர்த்தியை உருவாக்க முடிந்தால், கருந்துளையைப் பூமியிலேயே செய்ய முடியும். ஆனால் அதற்கு அபிரிமித சக்தியும், பூமியை அது உறிந்துவிடாமல் கட்டுக்குள் வைக்க மெகா உபகரணங்களும் தேவை. CERNஇல் இருப்பது போல்.

படபடப்பாக நிறுத்தினாள்.

பாதிப் புரிந்து பாதிப் புரியாமல் கேட்டான் நீங்க கருந்துளையை உருவாக்கிட்டீங்களா என்ன?”

2005 லேயே

இன்னும் முழுசாக அதன் பெருமை தெரியாததால் பெரிய ஆச்சர்யம் காட்டாமல் வாவ், குட் வொர்க்என்றான்..

உனக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியலையா?” அவள் கேட்டதை யோசித்ததும் சிறிது நேரம் விட்டு கோபாலுக்கும் படபடக்க ஆரம்பித்தது.

நீங்க.. அங்க.. வார்ம்ஹோல் காலப்பயணம்?”

யெஸ்.. யெஸ்அவள் குதித்ததில் ஏதோ கீழே விழுந்து உருண்டது. இருவருமே அதைக் கண்டுகொள்ளவில்லை. அவளே தொடர்ந்தாள்.

கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆச்சு அது கருந்துளைதான்னு எங்களுக்குத் தெரிய. அதை அளவில பெரிசாக்கவும், ஸ்திரமா வைக்கவும் இத்தனை வருஷம் ஆகியிருக்கு. இப்போ ஒரு ஆள் அவனுக்குத் தேவையான பொருள்களோட நுழையற அளவுக்குக் கொண்டு வந்தாச்சு!

வார்ம்ஹோலின் ஒரு முனை இங்க இருக்கு சரி.. எதிர் முனை?”

எங்க கணக்குப்படி இன்னிலேர்ந்து ஐயாயிரம் வருஷத்துக்கு முன்னால் இருக்கும்னு தெரிஞ்சிருக்கு

ஐயாயிரம் வருடம் என்றதும் அவனுக்கு முதலில் சிந்து சமவெளி தான் நினைவுக்கு வந்தது. அப்போது கூட அவள் எதை நோக்கி போகிறாள் என்பது அவனுக்கு உரைக்கவில்லை.

எடுத்த எடுப்புலேயே ஆளையா அனுப்ப போறீங்க?”

ஏற்கனவே ஒரு வீடியோ கேமரா, குரங்கு இதெல்லாம் அனுப்பியாச்சு

என்ன ஆச்சு

ஒண்ணுமே ஆகல. அந்தப் பக்கம் என்ன நடந்ததுன்னே தெரியலை.. நாங்களும் விதவிதமா முயற்சி செஞ்சு பாத்தாச்சு. ஒரு முக்கியமான விஷயம், கருந்துளையை ஸ்திரமா வைக்க அதை வாக்யூம் சேம்பர்ல  வைக்கனும். இந்தப் பக்கம் அத செஞ்சாச்சு. அந்தப் பக்கம் போன உடனே அதை வெற்றிடத்தில் அடைக்கணும். இல்லனா எதுவும் திரும்ப வராது. அதுக்குதான் ஒரு மனுஷன அனுப்ப முடிவெடுத்திருக்காங்க

சிறிது நேரம் மின்விசிறி சப்தம் மட்டும் பெரிதாகக் கேட்டது. ஆரம்பத்தில் இருந்து அவனுக்குள் ஓடிய கேள்வியை அவளின் பார்வையைப் பார்க்க பயந்து ஜன்னலை பார்த்துக்கொண்டு கேட்டே விட்டான். இதெல்லாம் ஏதோ கனவுல கேக்கறா மாதிரி இருக்கு. இதுல நான் என்ன செய்யணும்?”

ஐயாயிரம் வருடங்களுக்கு முன் என்றால் ஏதோ ஒரு பண்டைய நாகரிகத்தில் போய்ச் சேரவே சாத்தியம். எகிப்துமெசபடோமியாசிந்து என்று மூன்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டுஅரசியல் காரணங்களால் இந்தியா தான் அவர்களின் முதல் தேர்வு. அதைப்பற்றி ஓரளவிற்கு அறிந்த ஒருவனால் தான் அங்குச்சென்று தாக்குப்பிடித்துத் திரும்பி வரமுடியும். கூடவே அறிவு நுட்பம், உடல் தகுதி உள்ளிட்ட நிறைய அம்சங்களை பெற்றிருக்கவேண்டும். இவற்றில் பெரும்பாலானவற்றுடன் அங்கு போய் வர கோபால்தான் பொருந்தி வருகிறான். ஆகவே அவனுக்கு மனித வரலாற்றிலேயே முதல் காலப்பயணியாகும் வாய்ப்பு. அப்படி நடந்தால் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கே தேடி வந்து அவனுக்குக் கும்பிடு வைத்துவிட்டு போகக்கூடும்.

வேக வேகமாக மெல்லிய குரலில் அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே இவனுக்கு வேறு யோசனை ஓடியது.
இதெல்லாம் சாத்தியம்தானா, ஒப்புக்கொண்டு போனாலும் திரும்பி வர முடியுமா? என்னதான் சிந்து காலகட்டத்தை நேரில் பார்க்க வாய்ப்புக் கிடைத்து, முடிந்தால் அவர்களின் மொழியைக் கற்றுக்கொண்டு வந்தாலும்..

அவனுக்கென்று அப்பா தவிர யாருமில்லை, அவரும் ஆசிரமத்தில் சாமியாகி பல வருடங்களாகி விட்டது. அவன் பெரிதாகச் சாதா பயணங்களே போனதில்லை. இதையெல்லாம் விட முக்கியமாக M.Sc., சமயத்தில் சௌம்யாவுடன் ஒரு குருட்டுச் சந்தர்ப்பத்தில் மேலாக நெருக்கமாக இருந்ததைத் தவிர வாழ்க்கையில் பெரிதாக எதையும் சுகித்துவிடவில்லை. போவதற்கு முன் தனது முழுக்காதலையும் அவளிடம் வெளிக்காட்டலாம் என்றால் கூட காலம் கடந்துவிட்டது. அவளும் அவளது கணவனும் சேர்ந்து ஜோடியாக உதைப்பார்கள்.

எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலீங்க

அதனாலும் தான் உன்னைத் தேர்ந்தெடுத்தது என்று சொல்லாமல், ‘யோசிச்சி சொல்லுங்க..என்று மட்டும் சொல்லிவிட்டு அர்ச்சனா போய் விட்டாள்.

***

கோபால் நிச்சயம் வருவான் என்று எண்பது பேர் கொண்ட அவளின் டீமுக்குத் தெரிந்திருந்தது. இவனுக்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருந்தனர். அர்ச்சனா அவனிடம் விளக்கிய ஒவ்வொரு வார்த்தையும் பல நூறு பக்க கணித சமன்பாடுகளாக உருப்பெற்றுக் கிடந்தது. ஏகப்பட்ட உபகரணங்களுடன் அந்த இடம் வயர்கள் செழித்து வளரும் வயல் போலிருந்தது. கருந்துளையைச் சுவிட்சர்லாந்தில் இருந்து வெற்றிட பெட்டியில் கொண்டு வந்தும் விட்டார்கள்.

எந்த இடத்தில் கருந்துளையில் நுழைகிறோமோ, ஐயாயிரம் வருடங்களுக்கு முன் அதே இடத்தில் இறங்குவோம். ஆகவே அது கடலாகவோ காடாகவோ இருந்துவிடாமல், மனித குடியிருப்புகளின் மிக அருகில் இருக்கும் இடமாக இருக்க வேண்டும். குஜராத்தில் லோத்தல் கிராமத்தை தேர்ந்தெடுத்திருந்தார்கள். அந்தக் காலத்தில் கப்பல் போக்குவரத்துக்குப் பெயர் போன இடம், வெளிநாட்டு வர்த்தகர்கள் வந்து போயிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கும் இடம். ஊருக்குள் கோபால் ஒரு வெளிநாட்டு வர்த்தகர் என்று சொல்லிக்கொண்டு நுழைவதாக ஏற்பாடு. அந்தக் காலத்தில் மதிப்பு நிறைந்ததாகக் கருதப்படும் செம்பு, தங்கம் போன்றவற்றைக் கொடுத்தனுப்புகிறார்கள். அதனுடன் ஒரே ஒரு துப்பாக்கி.

கூடவே கதிரியக்க ஐசோடோப்கள் சிலவற்றைப் பழைய ஊர்களின் முக்கியத்துவம் பொதிந்த இடங்களில் புதைத்து விடவேண்டும். பிறகு நிகழ்காலத்தில் Zinc Sulfide டிடக்டர்கள் மூலம் அந்த இடங்களைக் கண்டு பிடித்து ASI உதவியுடன் அகழ்ந்து கிடைக்கும் பொருட்களைச் சாவகாசமாக ஆராய்ந்து கொள்ள வேண்டியது. இவன் கேட்டுக்கொண்டதன் பேரில், சிந்து எழுத்துக்களில் தகவல்களைப் பதிக்கும் இடங்களில் அந்த ஐசோடோப்களைப் போடுவதற்கு ஒப்புக்கொண்டார்கள். அங்கு இருக்கப்போகும் சில நாட்களில் கோபாலின் முக்கிய வேலை அந்த எழுத்துக்கள் பற்றியும் அந்தக்கால வார்த்தைகளையும் தெரிந்து கொள்வது. மற்ற அறிவியல்களை விஞ்ஞானிகள் பார்த்துக்கொள்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை இதெல்லாம் போனஸ், அவர்களுக்குக் காலப்பயணம் சாத்தியப்பட வேண்டும், அவ்வளவுதான்.

பயிற்சியே மூன்று வாரத்திற்குக் கொடுத்தார்கள். கிளம்ப வேண்டிய தினம் வந்ததும் விண்வெளி பயணம் போகிறவர்களுக்கான அதே உடையில் கோபால் ஆர்ம்ஸ்டிராங் மாதிரிதான் தெரிந்தான். முலாமிட்ட கை பெட்டியில் மற்ற சமாச்சாரங்கள். எல்லோரிடமும், அர்ச்சனாவிடமும் சொல்லிக்கொண்டு வெற்றிட பெட்டிக்குள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த கருமுட்டையை நோக்கி இறங்கினான். அதனுள் குதிக்குமுன் கலங்கிய கண்களை முகக்கவசத்தைத் தாண்டி துடைக்கக் கூட முடியவில்லை. குதித்தான்.

***

அர்ச்சனா சரியாகத் தூங்கி மூன்றாவது வாரம் இது. திட்டத்தின் படி கோபால் போய்ச்சேர்ந்ததும் சமிக்ஞை தரவேண்டும். ஆனால் தரவில்லை. வாரத்திற்கு ஒரு முறை எல்லாம் சரி என்று தகவலனுப்ப வேண்டும். எதுவுமே வரவில்லை. ரகசியமாக அந்தச் சமிக்ஞைகளை அனுப்ப முடியாமலும் போகலாம் என்பதால், என்ன ஆனாலும் மூன்று வாரத்திற்குள் திரும்பி விட உத்தரவு. நேற்றோடு மூன்று வாரக்கேடு முடிந்தது. இன்னும் திரும்பவில்லை. தண்ணீர் இருக்க வாய்ப்பு மிகவும் குறைவான ஒரு கருங்கிணற்றில் அப்பாவி ஒருவனை நீச்சலடிக்கத் தள்ளிவிடுவதைப்போல் அவளுக்குத் தொடர் கனவுகள்.

அவள் அறைக்கதவை யாரோ டமடமவெனத் தட்டவும் முகம் வீங்கிய நிலையில் மெதுவாகச் சென்று கதவை திறந்ததும் சக ஆராய்ச்சியாளன் கத்தினான். வாக்யூம் சேம்பர்ல் ரீடிங்க்ஸ் எகிறுதாம்.. உடனே கிளம்பு”.

கோபால் திரும்பிவிட்டான்!

***

கோபாலுக்கான மருத்துவப் பரிசோதனைகள் நடக்க வெளியில் அர்ச்சனா, பிடித்த இரு விஷயங்களுக்கு இடையில் அல்லாடும் குழந்தையை போல் இங்கும் அங்கும் தத்தளித்தாள். ஒருவழியாக வெளிவந்ததும் அவனிடம் ஓடி தலை திரும்ப அறைந்து ஏண்டா ஒரு செய்தி கூட அனுப்புல? தட் யூ ஆர் ஓகே?”
அவன் வெகுவாக மாறியிருந்தான். சோர்வாக இருந்தாலும் அட்டகாசமான ஒளி அவன் கண்களில்..

ஹேய்.. எனக்கு இப்போ வயசு பத்தாயிரம் தெரியுமில்ல? பெரியவங்கள அடிக்கலாமா?” என்று சொன்னதும் அனைவருடனும் சேர்ந்து அவளும் சிரித்தாள்.

***

மூன்று வாரக்கதைதான் என்றாலும் எவ்வளவு சொல்லியும், எழுதியும் அவனுக்குத் தீரவில்லை. பாம்பு மாத்திரை மாதிரி அவ்வளவு சிறிய மனிதனிடமிருந்து ஒரு யுகத்திற்குண்டான தகவல் பொங்கி வந்துகொண்டே இருந்தன. பெரும்பாலான சிந்து எழுத்துக்களையும், ஏராளமான வார்த்தைகளுக்கு அர்த்தமும் சேகரித்திருந்தான். அவனால் தூங்கவே முடியவில்லை, மாத்திரை போட்டு தூங்க வைக்க வேண்டியிருந்தது. நடுநடுவே அர்ச்சனாவின் குழு அவர்களின் ரகசிய ஆராய்ச்சி முடிவுகள் குறித்துச் சொன்னது எதுவும் இவனுக்குக் காதில் ஏறவேயில்லை.

முதல் முறை சிந்து சமவெளி காலத்துக்குப் போய்ச் சேர்ந்ததும் ஏதோ எண்பதுகளின் தமிழகக் கடலோர நகரம் என்று நினைத்திருக்கிறான். பிறகுதான் சரியாகவே போய்ச் சேர்ந்திருக்கிறோம் என்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது. இவர்களின் திட்டம் கிட்டத்தட்ட கச்சிதமாகவே நடந்திருக்கிறது. சிந்து மக்கள் அவனைத் தனியாக எங்கும் விடவில்லை என்பதால் அவ்வபோது வந்து எதிர்முனைக்குச் சமிக்ஞை மட்டும் கொடுக்க முடியவில்லை. அவன் கொண்டு சென்ற செம்பும் தங்கமும் அவனுக்கு நல்ல மதிப்பையும் விரும்பியதை செய்யும் சுதந்திரத்தையும் அளித்திருந்தது. திட்டப்படியே கல்வி நிலையங்கள், நூலகங்கள் போன்றவற்றில் ஐசோடோப்புகளைப் புதைத்துவிட்டு வந்தாகிவிட்டது. இவர்களின் உதவியுடன் ASI அந்த இடங்களைக் கண்டுபிடித்து அகழ்ந்ததில் ஏராளமான செப்புப் பட்டயங்கள், எழுத்து அச்சுக்கள், மண்பாண்டங்கள் மீது வண்ணத்தில் எழுதப்பட்ட கதைகள் என்று கிடைத்தன.

அவனுக்கு நினைவிருக்கும்போதே அத்தனை எழுத்துக்களையும் வார்த்தைகளையும் வரிசைப்படுத்திக் குறித்து வைத்ததும் நல்லதாகப் போயிற்று. அகழ்ந்து கிடைக்கும் தகவல்கள் அத்தனையையும் கட்டுடைக்கக் கோபால் தலைமையிலேயே எபிக்ரஃபி நிபுணர்கள் குழு ஒன்று ராப்பகலாக இயங்கியது. அவனும் நாளை என்பதே இல்லை என்பதைப் போல் அதிலேயே கழித்தான். பல வார்த்தைகள் அவனுக்கு மனப்பாடமாக, குறிப்புகளைப் பார்க்காமலே படிக்குமளவு பயிற்சி வந்திருந்தது. தோண்டத் தோண்ட புதையலைப் போல் சிந்து சமவெளி அரங்கேறிய பல நூற்றாண்டு கதைகள் குவிந்து கொண்டே இருந்தன.

***

களைப்பு மேலிட்ட ஒரு காலையில் வரலாறு என்று தலைப்பிட்ட சில செப்புப் பட்டயங்கள் கோபாலின் கவனத்தை ஈர்த்தன. பல துறைகளில் முன்னேறிய சிந்து சமவெளி சமூகம் அவர்களின் வரலாற்றுக்கும் நிச்சயம் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். 

பல ஆயிரம் வருடங்களுக்கு முன் கோபாலைப்போலவே ஏதோவொரு வரலாற்று ஆய்வாளன் எழுதியது. அதில் பகுதி ஒன்று என்று குறிக்கப்பட்ட பட்டயத்தை எடுத்துக்கொண்டு தனது வழக்கமான இருக்கையில் அமர்ந்து மொழிபெயர்க்க தொடங்கி, முதல் இரண்டு வரிகளைத் தோராயமாக முடித்ததும் வாசித்துப்பார்த்தான்.

"சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் மிகவும் முன்னேறிய ஒரு சமூகம் இருந்தது.. அது அழிவற்றது என்று தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டது"..


(சொல்வனம்.காமில் வெளிவந்த அறிவியல் புனைவு)



முழுதும் படிக்க..

Nov 6, 2014

இரண்டாவது முகம் - நீல பத்மநாபன்


வானம் எப்படி அவ்வளவு தூரம் போனது என்று கர்ண பரம்பரை கதை ஒன்றுண்டு. சிறு வயதில் நாம் அனைவருமே கேட்டதுதான். பாட்டி ஒருத்தி கோலம் போட்டு நிமிர்கையில் வானம் அவள் முதுகில் இடித்ததாம். உடனே 'எட்டாத உயரத்துக்குப் போய்த்தொலை' என்று அதைச் சபித்தாள். அப்போது கைக்கு எட்டாமல் போன அது, பிறகு திரும்பவில்லை. அறுபது வயது திருமணமாகாத அர்ச்சகர் ஒருவர், தனது பால்ய சினேகிதி கோமு இறந்த தினத்தன்று, வானத்தைப் பார்த்தவாறு படுத்திருக்கையில் இக்கதையை நினைத்துப்பார்க்கிறார். கோமுதான் உன் மனைவி என்று சொல்லி வளர்க்கப்பட்ட அர்ச்சகர், அவள் வேறு இடத்தில் வாழ்க்கை பட்டும், இவர் வேறு யாரையும் தேடாமல் அம்மனையே துணையாகக் கொண்டு நடத்தும் வாழ்க்கை நம் முன்னே விரிகிறது. ஆனால் எப்படியோ கோவிலுக்கு நாள் தவறாமல் வந்துவிடுகிறது கோமு அவள் கையாலேயே உருவாக்கும் துளசி மாலை. அதே கோமுதான் அன்று இறந்துவிட்டாள். அம்மன் இனியும் ஒரு மாற்றாக இருக்க முடியுமா?

நைவேத்தியம் என்னும் இக்கதைதான் இந்தச் சிறுகதை தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சற்றே நீளமானதும் அதுவே. சிறுகதைகளுக்கான தேவைதான் என்ன?, ஓரிரு வரிகளில் சொல்ல வந்ததை சட்டு புட்டென்று சொல்ல வேண்டியதானே? என்று சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் கேள்விக்கும் இங்கு விடை கிடைக்கிறது. '60 வயதான பேச்சிலர் தனது பால்ய தோழி இறந்தன்னைக்குத் தானும் இறக்கிறார்' என ட்விட்டர் பாணியில் ஒரே வரியில் இக்கதையைச் சொன்னால், இந்தக் கதை அளிக்கும் விஸ்தாரமான சித்திரம் தவறிவிடும்.


Image courtesy: http://www.eramurukan.in

ரொம்பப் பிடித்த இன்னொரு கதை, காத்திருப்பு. 48 வயது திருமணமாகாத வாத்தியார் (இதுதான் கடைசி, இதற்கு மேல் திருமணமாகாத வயதானவர்கள் யாரும் வரமாட்டார்கள்) ஒருவருக்கு, தன்னிடம் கையும் பிட்டுமாகப் பிடிபட்ட மாணவி ஒருத்தி கொடுக்கும் வாக்குறுதி - 'மாட்டிவிடாதீர்கள் ப்ளீஸ், நான் உங்களை இன்றிரவு திருப்திபடுத்துவேன்' (அதற்கு ட்ரைலராக தனது முந்தானையையும் நழுவ விடுகிறாள்)! அன்றிரவு அவரின் தவிப்பு, கொந்தளிப்பு, வெறி, ஆற்றாமை இத்யாதிகள் அத்தனையும் அருகில் இருப்பதைப் போல் உணரமுடிந்தது. அட்டகாசம்!
பார்க்கப்போனால், இத்தொகுப்பில் உள்ள 21 கதைகளின் அடிச்சரடாக காமம், விடுபடுதல், சாமானியனின் சுயவெறுப்பு, அற்பத்தனம் போன்ற சில பொதுவான அம்சங்களைப் பார்க்க முடிகிறது. அதிலும் இந்த விடுபடுதல் தீம் அந்தத் தலைமுறையின் விருப்பமானது போலும் (அசோகமித்திரன் அடிக்கடி நினைவுக்கு வந்தார் - விடுதலை குறுநாவலில் முற்றிலும் துறந்தவரும், மானசரோவர் கோபாலும்). தனது ஆசைகளை ஒளித்து, போராட்டமாகவே போய்க்கொண்டிருக்கும் லௌகீக வாழ்க்கையை உதறிவிட்டு ஆன்மிகத்தில் தஞ்சமடைய விழையும் கதாபாத்திரத்தை 'விடுபடுதல்' கதையில் பார்க்க முடிகிறது. தன் இஷ்டத்திற்கு வாழ்ந்து கொண்டிருக்கும் சாமியார் ஆகிவிட்ட அவனது நண்பனுடன் ஆசிரமத்திற்கு போகும்போது கிடைக்கிறது அவனுக்கான ஸ்பார்க்.

இதே மையம் '(அ)லட்சியம்' கதையில் வேறு விதமாகப் பரிமளிக்கிறது. சமூகம் எதிர்பார்க்கும் அலங்கார பாவனைகளை அலட்சியமாக மதிக்கும், அதை மூர்க்கமாகத் தவிர்க்கும் நெல்லையப்பன். அந்த பாவனைகளில், வாழ்வின் போராட்டங்களில் இருந்து தப்ப முடியாமல் சிக்கி கிடக்கும் அவனது நண்பன். அப்படி அலட்சியமாக இருந்தும் நெல்லையப்பனுக்கு அவன் விருப்பத்தை விட நிறைவாகவே நடக்கிறது, கிடைக்கிறது. ஆனால் அப்படி அலட்சியமாக இருப்பதே பெரிய லட்சியம்தான் என்பது இறுதியில் புரிகிறது. கடைசிக்கதையான 'பசி', யார் நினைத்தாலும் அப்படி ஒன்றும் முற்றும் துறந்து விடமுடியாது என்பதை முகத்தில் அறைய அறைய உணர்த்துகிறது.

காமத்தின் பன்முகப்புகளை (multiple facets) பேசும் பிற கதைகளில், காமமின்றி அமையாது உலகு என்பதைச் சற்றே அங்கதத்துடன் உணர்த்தும் 'உயிர்' கதை. பிரசவத்திற்குப் பிறகு அம்மா வீட்டில் இருக்கும் ருக்கு. இரவில் 'படுத்துக்கொண்டிருக்கும்' அண்ணா-அண்ணி, அப்பா-அம்மா தம்பதிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது அவளின் அழும் குழந்தை. 'ஒரே ஒரு உதவி' கதையில் மனைவி ஒருத்தி கணவரின் சக ஊழியர் ஒருவருடன் இருப்பதும் அதற்கு அந்தக் கணவனின் எதிர்வினையும் கரு (பள்ளிகொண்டபுரம் நாவலிலும் இதே சம்பவம் மையமாக வரும்). நடந்த 'சம்பவம்' பற்றி உரையாடிக்கொண்டிருக்கும் சக ஊழியர்கள், பின்பு அந்தக் கணவனின் வருகை என்று அந்த அறையின் டென்ஷன் அபாரமாகப் பதிவாகியிருந்தது இக்கதையில்.

களவியல் கதையில் ரதீஷ் ஒரே பெண்ணிடம் சிறு வயதில் இருந்தே மறுபடி மறுபடி ஏமாறுகிறான். அவள் தன்னை உபயோகப்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறான், ஏன்? முத்தாய்ப்பாக 'தேடல்' கதையில் விபச்சாரியிடம் காமத்தை தேடுவதற்கும் வீட்டுக்குள் கணவன் மனைவி சட்டபூர்வமாகத் தேடுவதற்கும் என்ன வித்தியாசம்? அது அற்பம் என்றால் இதுவும் அற்பம் தானா எனும் கேள்வியை எழுப்புகிறது. தலைப்புக்கதையான இரண்டாவது முகம் காமத்தின் மற்றொரு நுட்பமான விஷயம் பற்றிப் பேசுகிறது. மத்திய வயதில் கணவன் மனைவிக்கிடையில் மாறும் கெமிஸ்ட்ரி, அதனால் வரும் விலகல், அப்போது திரண்டு வரும் வெறுப்பு விஷம், ஒருவரை ஒருவர் பழிவாங்கும் தோரணைகள் என்று அருமையான கதை. 

தன கை மீறின விஷயங்களின் முன் சுயகழிவிரக்கத்தில் வாடும் பைல்ஸ் நோயாளி (மூலாதாரம்) மற்றும் சற்றே அநியாயமாக இடம் மாற்றப்படும் அலுவலக ஊழியர் (இட மாற்றம்) கதைகளில் வரும் உணர்ச்சிகளுடன் கிட்டத்தட்ட அனைவருமே ஒன்ற முடியும். இந்த உணர்ச்சிகளை வாழ்வில் ஒரு முறையாவது கடந்திருப்போமே?

கசு அண்டி மற்றும் தரித்திரவாசி கதைகள் எந்தக் காலத்திலும் தீராத விளிம்பு நிலை தொழிலாளர்களின் அவலங்களை எடுத்துரைக்கின்றன. இதில் தரித்திரவாசி monologue வகையில் அந்த வீட்டு வேலை செய்யும் சிறுவனே சொல்வதாக விரிந்திருக்கிறது. புதுமனை புகுவிழா, வட்டு சார், பொருத்தம் போன்ற கதைகள் மனிதனை என்றும் பிரியா அற்பத்தனத்தைப் படம் போல் காட்டுகின்றன.
நீல பத்மநாபன் நாவல்கள், சிறுகதைகள் என்று புகழ்பெற்ற பல படைப்புகளை எழுதிய ஒரு முன்னோடி படைப்பாளி.

அலங்காரங்கள் ஏதுமற்ற இந்தக் கதைகள் 1971-74 காலகட்டத்தில் எழுதப்பட்டவை. அப்போது நீல பத்மநாபன் தனது முப்பதுகளில் இருக்கிறார். இத்தனை வருடங்கள் கழித்து இந்தக் கதைகளைப் படித்தும் நான் எதிர்பார்த்ததைப் போல் அவை எனக்கு பழையதாகத் தோன்றவில்லை. மனிதனின் மாறாத அடிப்படை உணர்ச்சிகள் கால வெளி தாண்டி ஒன்றுதான் எனும்போது, பல கோடி பேர் ஏற்கனவே வாழ்ந்த வாழ்வையே வேறு பல கோடி பேர்கள் திரும்பத்திரும்ப வாழ்கிறோம் எனும்போது பழசெங்கே புதுசெங்கே? இப்போது இணையத்தில் ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட பத்திருபது சிறுகதைகளைப் படிக்கிறேன். அதிலும் சில கதைகளை (பின் நவீனத்துவம்) படித்து முடித்ததும் நான் ஏமாற்றப்பட்டதைப் போல் உணர்வதுண்டு. அவற்றுக்கு நடுவில் இத்தொகுப்பு ஆசுவாசம் அளித்தது எனக்கே வியப்புதான் (கதைகளின் பழைய வார்த்தைகள், உரையாடல்கள், கதை சொல்லும் முறைகள் போன்றவற்றையும் மீறி)!

நீல பத்மநாபன் பற்றி ஒரு சுவாரசியமான தகவல். அவரது அலுவலகத்தில் வைத்தே ஒருமுறை தாக்கப்பட்டார் (இது உனக்கு சுவாரசியமா?) என்று கேள்விப்பட்டேன். அது அவரின் கதைகளைப் படித்து என்றால், தாக்கியவர்கள் அவற்றை ஒழுங்காகப்படிக்கவில்லை என்றே தோன்றுகிறது. சரியாக உள்வாங்கியிருந்தால் வணங்கிவிட்டு வந்திருப்பார்கள்.

முழுதும் படிக்க..

Sep 8, 2014

ஜிகர்தண்டா பற்றி சில உதிரி சிந்தனைகள்

(சில spoilers உண்டு. படம் பார்த்தவர்களும், படம் பார்க்குமுன்னமே முழுக்கதையையும் தெரிந்து கொண்டு போகும் வினோத ஐந்துக்களும் மட்டும் மேலே தொடரவும்)

சமீபத்திய படங்களில் இந்தளவிற்கு குதூகளித்தது ஜிகர்தண்டா பார்த்துதான். It is a treat for movie buffs. நலன் குமாரசாமியை அறிமுகக் காட்சியில் வைத்தது, கார்த்திக் என்கிற கதாநாயகன் பெயர் போன்றவை மூலம் ஆரம்பத்திலேயே படத்தை வெகு நெருக்கமாக்கி (personalize) விடுகிறார் இயக்குனர்.

இந்தப் படத்தை கேங்ஸ்டர் படம், சினிமா படம் என்றெல்லாம் வகைப்படுத்தினாலும், இப்படி ஒரு தரமான முழு நீள நகைச்சுவை படம் வந்து வெகு நாட்களாகிவிட்டது. இரண்டாம் பாதியில் மையத்திலிருந்து தடம் மாறுவதாகச் சொல்லப்படும் மாஸ்டர் கோச்சிங் காட்சிகள் கூட hilarious. நாயகனை ஏமாற்றி எடுக்கும் காட்சிகள் வெள்ளித்திரை படத்தை நினைவு படுத்தியது.

படத்தில் Tarantino வின் தாக்கத்தைப் பற்றி பேசப்பட்டாலும், எனக்குப் பிடித்த இன்னொன்று Nolan ஸ்டைலின் தாக்கம் - இறுதியில் எழுச்சியான இசையில் துண்டு துண்டான பிளாஷ்பேக் காட்சிகள் மூலம் உண்மையை உணர்த்துவது, அதன் பிறகு வரும் open ended climax (பீட்சாவிலும் இவை நன்றாக அமைந்தது).

சேதுவின் வில்லத்தனம் பெரிதாகக் காண்பிக்கப்பட்டாலும், படத்தில் ஜிகர்தண்டனாக (cold heart) வரும் மற்றொருவர், கதாநாயகன் சித்தார்த். மாரல் வேல்யூஸ் துளி கூட இல்லாமல்.. தனது பிழைப்புக்காக அனைவரையும் உபயோகப்படுத்திக்கொள்ளும், அவ்வளவு வன்முறையும் ஒரு சின்னப் பாதிப்பை கூட ஏற்படுத்தாத ஒரு கதாபாத்திரம் அது. சேதுவை அவன் கடைசியில் எதிர்ப்பதும் தன் மடியில் கை வைப்பதால் தான். சொல்லப்போனால் படத்தின் பிரதான பாத்திரங்களில் கொஞ்சமாவது மனசாட்சியுடன், பாசத்துடன் இருப்பது ஊருணி தான். ஆனால் அவர் ஒரு காமெடியன் மட்டுமே (சூது கவ்வும் எம்.எஸ்.பாஸ்கர் நினைவிற்கு வருகிறாரா?). தந்தையின் வளையல் தொழிலை தொடரும் ஒரு பழைய ஆள் அவர். அவரை மாதிரி ஆட்கள் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போயாகிவிட்டது.

சேதுவுக்கும் சித்தார்த்துக்கும் ஒரே வித்தியாசம்தான். சித்தார்த்திடம் அரிவாள் கிடையாது, அவர் இயங்கும் தளமும் வேறு. ஆனால், அதுவும் படத்தின் கடைசியில் முழுமை அடைகிறது. அந்த கடைசிக் காட்சிகளை தேவையில்லாதவையாக நான் கருதவில்லை. சொல்லப்போனால் கார்த்திக் கதாபாத்திரத்தை நிறைவு செய்வதே அந்தக் காட்சிகள்தான். அந்தக் காட்சியில் அவருக்கு வரும் அழைப்பில் மறுமுனையில் மனைவியாக சேலைத்திருடி கயல் இருப்பதற்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு.


முழுதும் படிக்க..

Aug 25, 2014

சக்கரம் - சிறுகதை

தினமலர் நாளிதழுடன் வெளிவந்த சென்னை தின சிறப்பிதழ், அறிவியல் புனை கதைகளின் (Science Fiction) தொகுப்பாக வெளிவந்துள்ளது. உணவு என்பதையே இல்லாமல் ஆக்கிவிட்டால் என்ன ஆகும் என்பது எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த மையம். அதில் வெளிவந்த எனது சிறுகதை.. தினமலர் இ-பக்கத்தில் படங்களுடன் படிக்க இங்கு அழுத்தவும்

***
சக்கரம்

இன்டர்வியூ நேரில்தான் வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இது என்ன புது வழக்கம்? மனு குழம்பினான். தொலைபேசி வழியாகவே இணைந்துகொள்கிறேன் என்று சொன்னதற்கு அக்குழுவின் நிர்வாகி என்ன பேச்சு பேசினாள்? நேரில் காண்பதால்தான் அதற்கு நேர்காணல் என்று பெயராம்.. பெண் என்கிற திமிர். ஆனால் இப்போது இருக்கும் குழுவை விட்டு வெளியேறுவதும், புதிய வேலையும் அவனுக்கு அவசியமாக இருந்தது.. வேலை இல்லையென்றால் அத்தனை சுலபமாக வேறு குழுவில் இணைய முடியாது. அதனால் அவளின் கறார் பேச்சுக்கு பொறுமை காட்டினான்.

வாகனப்பயணம் எல்லாம் இப்போது முன்னிலும் கடுமை ஆக்கப்பட்டுவிட்டது. அரசாங்கம், பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அதெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று அவள், அந்த மேடம், சொல்லிவிட்டதால் முதல்முறையாக மெட்ரோவில் பயணிக்கும் வாய்ப்பு. தனக்கு வரலாற்றின் மேல் ஆர்வம் வர வைத்த மூப்பரிடம் மட்டும் சொல்லிக்கொண்டு குறித்த நாளில் கிளம்பினான். தனது வளர்ப்பு தாய் இறந்த பிறகு இவர்தான் அவனுக்கு எல்லாம்.
"என்னாப்பா ரயில்ல போற அளவுக்கு பெரிய ஆள் ஆகிட்ட? இதைவிட பெரிய இடங்களுக்கு போக வேண்டியவன் நீ.. நல்லாயிரு"

***

ஐநூறு வருடங்கள் பழமையான சென்னை மெட்ரோ. பல் போன பலகை மட்டும் அவனை அன்புடன் வரவேற்றது. பல வித அடித்தல் திருத்தல்களுக்கு பிறகு, இப்போது ஓடும் மிகச்சில வண்டிகளைப் போலவே சூரிய சக்தியில் இயங்குவதாக மாற்றியாகிவிட்டது. பெட்ரோலியம் கிட்டத்தட்ட காலியாகிவிட்டதால் பறக்கும் ஒன்றிரண்டு பிளைட்டுகளையும் கூட சூரிய சக்தியில்தான் இயக்குகிறார்கள். மனிதன் அடைந்த உயரங்களுக்கு சிறு சாட்சியாக ஒரு பூச்சியைப் போல் இன்னும் ஊர்ந்து கொண்டிருக்கிறது மெட்ரோ.

பல கட்ட தடைநீக்கல்களுக்குப் பின், பெட்டிக்குள் கால் வைத்ததும் ஒரு சிலிர்ப்பு. எத்தனையோ கோடி பேரை பல காலமாகச் சுமந்து சென்ற வண்டி. பெரும்பாலும் அரசாங்க ஆட்கள் கடுகடுவென்று உட்கார்ந்திருந்தார்கள். யார் இவன் என சில சந்தேகப்பார்வைகள். பலர் தங்களது சினிமாவில் மூழ்கியிருந்தார்கள். அவர்கள் காற்றில் கைகளை அசைத்து சேனல் மாற்றும்போதெல்லாம் நடனம் ஆடுவது மாதிரி தெரியவே மனுவிற்கு சிரிப்பு வந்தது. வண்டியில் ஏறியவுடனே கை மணிக்கட்டில் உள்ள பட்டனை அழுத்தி சினிமாவை இயக்கும் மற்றவர்களைப் பார்க்க கடுப்பும் வந்தது. அவன் தனது சினிமாவை இயக்கவில்லை, இந்த பயணத்தை முழுக்க முழுக்க அனுபவிக்கவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தான். சினிமா சாதனம் ஒரு காலத்தில் உலகையே இணைத்தது. அன்றாடத் தேவைகள் அனைத்தையும் அது ஒன்றே பூர்த்தி செய்தது. இன்று அதில் சேமிப்பாகியிருக்கும் கேளிக்கைகளை சுகிக்கவும், தொலைபேசவும் மட்டும் சுருங்கி விட்டது. புதிய உற்பத்திகளும் இல்லை, ஓடும் வரை ஓடவேண்டியது.

வெள்ளையாக, பார்ப்பதற்கு அரச மரம் போல தோன்றிய இரண்டு பெண்கள் எதிர் இருக்கையில் ஏறி அமர்ந்து, இவனை பார்வையாலேயே தீண்டி நெளியவைத்தார்கள். 'பீசு சும்மா கிண்ணுனு இருக்குல்ல?' கொல்லென்று செயற்கையாக சிரித்தார்கள். மனு பார்வையை திருப்பாமல், எதிர்வினை காட்டாமல், மூச்சு கூட அடக்கி வைத்திருந்ததும், அவனிடம் ஆர்வமிழந்து தங்களது சினிமாக்களை இயக்கினார்கள். அது அவர்களை சுற்றி திரைகளை எழுப்பவே, சுற்றத்தை மறந்து அதனுள் மூழ்கினார்கள். என்ன பார்க்கிறார்கள் என்பதை அவர்களின் முக அசைவுகளை வைத்து ஊகிக்க முயன்று, பயந்து திரும்பிக்கொண்டான். வேலைக்கு கூப்பிட்டு அனுப்பியவளின் திமிர் பேச்சு அதே அட்டகாசமான குரலில் அவனுடைய மனக்காதில் மறுபடி ஒலித்தது. ஆண் என்றால் ஒரு இளக்காரம். மெட்ரோவை கட்டியவர்கள் பெரும்பாலும் ஆண்கள் தெரியுமா என்று அவளைப் பார்த்து கேட்க வேண்டும்.

மெட்ரோ நகர ஆரம்பித்தது. முதல் ரயில் பயணம்! தனது குழு இருக்கும் குடியிருப்பிலேயே பெரும்பாலான காலத்தை கழித்துவிட்டதால், அக்கம் பக்கத்து சென்னையை பார்த்திருந்தாலும் முழுதாக பார்ப்பது இப்போதுதான். வழியில் பெரும்பாலான கட்டிடங்கள் பெயர்ந்து, காடாக கிடந்தது. சிங்கம், புலி கூட பெருகி விட்டதாக புரளி. இவன் கண்களுக்கு வேகமாக கடக்கும் புதர் காடுகளில் எல்லாம் புலிகளும் பாம்புகளுமாக தோற்ற மயக்கங்கள். நடுநடுவே குடியிருப்புகள் மட்டும் பளிச். கடைசி நிறுத்தம் வந்ததும் இறங்கி ஏற்கனவே சொல்லப்பட்ட வழியில் நடந்து, அவன் இதுவரை பார்த்ததிலேயே பெரிய குடியிருப்பை பிரமித்தபடி அடைந்தான். பார்த்தவுடனே தங்களுடையதை போல் அல்லாமல் அரசாங்கத்துடன் நேரடி தொடர்பில் இருக்கும் இடம் என்பது தெரிந்தது. வேலை கிடைத்தால் நலம்.

***

உள்ளே வந்து அரசு அலுவலகத்துக்கே உரிய பளபள கட்டிடத்தின் முன் நின்று, மேடத்தை அழைத்து, அவர் சொன்னபடி நேராகப் போய் இடப்புறம் திரும்பியதும் அறை. நுழைந்தான். கருப்பாக, கச்சிதமாக அவ்வளவு அழகை இவன் எதிர்பார்க்கவில்லை.. கோபம் கூட ஒரு கணம் மறைந்தது. உள்ளங்கை சில்லிட்டது நேர்காணல் பயத்திலா, அவளை ரசித்த பயத்திலா?

"வணக்கம்"

"ஆ, மனு.. உட்காருங்கள்"

மறுபடியும் அவள் மீது இருந்த காழ்ப்பு தலை தூக்கியது. குழுத்தலைவர் பதவிக்கு வருமளவிற்கு இவளுக்கு வயதாகவில்லை. மூளை கொழுப்பு அதிகமாக இருக்கவேண்டும். குழந்தைகள் பெற்றிருப்பதும் ஒரு காரணம், வயிற்றின் வரிகளும் மார்பு திரட்சியும் காட்டி கொடுத்தது.

"நாம் பேச ஆரம்பிக்குமுன், இங்கு பேசப்படும் எதுவும், நீங்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறீர்களோ இல்லையோ, வெளியே போகாது எனும் உத்தரவாதம் தேவை. இதில் கையெழுத்திடுங்கள்"

காற்றில் தோன்றும் தொடுதிரையைக் காட்டுவார் என்று நினைத்தால் தட்டச்சு செய்த ஒரு காகிதத்தை நீட்டினார். எஞ்சியிருக்கும் மின்னணு சாதனங்கள் எல்லாம் இன்னும் சில வருடங்களே வரும். புதிய உற்பத்தி என்பது கிட்டத்தட்ட எங்குமே இல்லை. இது இல்லாமல் வேறு காரணங்களுக்காகவும் பல ஆண்டுகளாகவே அரசாங்க சங்கதிகளுக்கு சாதனங்கள், இணையம் போன்றவை உபயோகிப்படுவதில்லை. டைப்ரைட்டர், பேனா என்று கொண்டு வந்துவிட்டார்கள். இதெல்லாம் அவன் அறிந்திருந்ததால் சுதாரித்துக்கொண்டு கையெழுத்திட்டான். டைப்ரைட்டர் எல்லாம் அறுநூறு வருட சமாச்சாரம். கூடவே ஏதோ ரகசிய சங்கதி என்பதை அறிந்ததும் மீண்டும் உள்ளங்கை குளிர்ந்து பேனா வழுக்கியது.

"நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?" நேரடியாக ஆரம்பித்தாள்.

"நான் வரலாற்று தரவுகளைச் சேகரிப்பவன். பெரும்பாலான தகவல்கள் இன்று பொது வெளியில் இல்லை என்பதால் தேடி தேடி செய்திகளை, நினைவுகளை சேகரித்து, தகவல்களாக உருவம் கொடுத்து, உபயோகம் உள்ளவர்களுக்கு அந்த தகவல்களை சேவையாக அளிக்கிறேன். பதிலுக்கு வேறு சேவைகளை பெற்றுக்கொள்வேன்"

"பணம் வாங்குவதில்லையா?"

"பணத்தை நான் அறிந்தவரை எங்கள் குழுவில், நாங்கள் தொடர்பில் இருக்கும் குழுக்களில் யாரும் உபயோகிப்பதில்லை"

"தூரமாகப் பயணம் செய்திருக்கிறீர்களா?"

"ரொம்ப தூரம் இல்லை. கடற்கரை, தெற்கே ஒரு சூரியக்கோவில் என்று குதிரைவண்டி கட்டிக்கொண்டு சில தடவை போனதுண்டு"

"குதிரையா?"

"ஆம், இப்போது பல இடங்களில் பயணத்திற்கு அதுதான். நம்மால் வெகு தூரம் நடக்க முடியாதல்லவா?"

"உண்மை. அதைப்பற்றித் தான் முக்கியமாக பேச இருக்கிறேன். இப்போது இருக்கும் நமது உடல்வளர்ச்சி முறை பற்றி என்ன நினைக்கிறாய்?"

சில நொடிகள் யோசித்து, சொல்ல ஆரம்பித்தான்.. "உணவு என்பதையே முற்றாக ஒழித்து, ஸ்டெம் செல் முறையில் திசு மற்றும் உறுப்புகள் தானாகவே வளர்ந்து வேலை செய்ய, மருந்துகள் செலுத்திக்கொள்ளும் வழக்கம் வந்து இது ஏழாவது தலைமுறை. மருத்துவ ஆராய்ச்சிகளின் படி இன்னும் சில நூற்றாண்டுகளில் நமது குடல் நீளம் வெகுவாகக் குறைந்து, மறைந்து கூட விடக்கூடும்...."

"நிறுத்து நிறுத்து.. அந்த முறை எப்படி இயங்குகிறது என்று கேட்கவில்லை. அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்டேன்"

"அது வந்து... இந்த முறை நமக்கு ஏற்றதல்ல என்று கருதுகிறேன்"

"ஏன்? இந்த முறையில் என்ன குறையை கண்டாய்? நன்மைகளே இல்லையா?"

"நிச்சயம் நிறைய நன்மைகள் உண்டு.. ஒரே தள்ளில் உலகின் பஞ்சங்கள் விழுந்தன. மனிதனுக்கு ஏராளமான நேரம் கிடைத்து.. தன்னை முன்னேற்றிக்கொள்ள முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் ஓடினான். எத்தனை கண்டுபிடிப்புகள்? எவ்வளவு மாற்றங்கள்?"

"அவ்வளவுதானா?"

அவள் எதைக் கேட்கிறாள் என்பதை ஊகித்தான்.

"முக்கியமாக பெண்கள் பெரிய அளவில் விடுபட்டுக்கொண்டார்கள். சமூகத்தில் அவர்களின் பங்களிப்பும் வெகுவாக சேரவே மனிதனுக்கு நாலு கால் பாய்ச்சல்.. ஆனால் உணவு ஒழிப்பு  மட்டுமே அவர்களின் இன்றைய தலைமை நிலைக்கு காரணமில்லை என்பது எனது கருத்து"

புருவத்தை உயர்த்தி சற்றே அதட்டும் தொனியில்.. "வேறு என்ன காரணங்கள்?" அவளின் சுழிப்பை பார்த்து ஒரு நிமிடம் எங்கு இருக்கிறோம் என்பதை மறந்து, மயங்கி விழித்து, பின் தயங்கியபடியே தொடர்ந்தான்.

"குழந்தைகள்.. குழந்தைகளை பெற்று எடுக்கும் பெண்களுக்கு பல ஆண்டுகளாகவே பெரும் மரியாதை தோன்ற ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக உயிர் உண்டாக்கும் திறன் ஆண் பெண் இருவருக்குமே நிறைய குறைய ஆரம்பித்த பிறகு.. இந்திய மக்கள் தொகை இருபது கோடியாகக் குறைந்த பிறகு..."

மக்கள் தொகை கணக்கெல்லாம் இவனுக்கு எப்படித் தெரியும் என்று கேட்க நினைத்து, பின் வாயை மூடிக்கொண்டாள். அவன் தொடர்ந்தான்..

"அது முக்கியக் காரணம்.. மேலும் பாரம்பரிய குடும்ப முறை ஒழிந்த பிறகு குழுக்களின் கூட்டு வாழ்க்கை முறை தோன்றியது.. அதில் கணவன், மனைவி போன்ற மரபான உறவுகள் இல்லாமல், குழந்தைகளை பெற்றெடுப்பதே முக்கியம் என்று ஆனது. பெண்ணை கட்டுப்படுத்தும் சக்திகள் ஒவ்வொன்றாக குறைந்ததால், அவளுக்கு மேலும் அதிக சுதந்திரமும், அதே நேரம் அடுத்தவர் மீது செலுத்தக்கூடிய மிதமிஞ்சிய அதிகாரமும்.." என்று சொல்லிவிட்டு பல்லை கடித்துக்கொண்டான். ஏற்கனவே அதிகமாகப் பேசுகிறோமோ என்கிற நினைப்பு ஓரத்தில் ஓடியபடியே இருக்க, இப்போது கண்டிப்பாக வேலை கிடைக்காது என்று முடிவு செய்தான். அது இதுவரை இல்லாத தைரியத்தை அளித்தது.

நீ என்னை ஈர்த்து விட்டாய் என்பது போல் அவளிடம் ஒரு புன்னகை வெட்டு.. அதை அவன் கவனிக்கவில்லை. அவனுக்கு தற்போதைய குழுவின் தலைவி நினைவுக்கு வந்து, அவளினால் அனுபவிக்கும் கொடுமைகள்.. அங்கிருந்து எப்படியாவது தப்பி வேறு குழுவுக்கு செல்லும் முனைப்புகள்.. ஒரு பெருமூச்சை விட்டான். ஆனால் அவள் அடுத்த கேள்விக்கு போனதும் மீண்டும் ஒரு சின்ன நம்பிக்கை துளிர்த்து, மீண்டும் சின்னதாகப் பயம்..

"இவ்வளவு நன்மைகள் இருக்க ஏன் இந்த வளர்ச்சி முறையை எதிர்க்கிறாய்?"

"உணவில் இருந்து விடுவித்துக்கொண்டதால் கிடைத்த நேரமும், அத்தனை மக்களின் உழைப்பும் பெருநிறுவனங்களின் கட்டற்ற லாப வெறியில் போய் முடிந்தது. கிட்டத்தட்ட அத்தனை கனிமங்களும் இன்று வெட்டி எடுக்கப்பட்டாகி விட்டது. இனி உறிவதற்கு ஏதுமில்லை என்று ஆகி.. ஏற்கனவே இருக்கும் பொருட்களை உருக்கி உருக்கி மறுபடி உபயோகித்து.. இன்று அதுவும் தீர்ந்துபோய்.. ஐநூறு வருடங்களுக்கு முன்பு இருந்த வசதிகள் கூட இன்று நமக்கு இல்லை"

உண்மையில் இது பற்றி எல்லாம் திட்டு திட்டாக, அங்கே இங்கே என்று தான் மக்களுக்குத் தெரியும். இப்போது இருப்பது மாதிரியேதான் எப்போதும் இருந்தது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.. இவன் இப்படி கோர்வையாக நிறைய ஆராய்ந்து வைத்திருந்தது முழு நம்பிக்கையை ஏற்படுத்தியதும், விஷயத்தை ஆரம்பித்தாள்..

"மனு.. நீங்கள் சொல்வதை பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிறேன்.. நீங்கள் சொல்லாத மற்றொன்று.. இந்த வளர்ச்சி முறையின் முக்கிய தடுமாற்றங்கள்.. உணவு முறையை ஒழித்து வந்த ஸ்டெம் செல் வளர்ச்சி முறையினால்தான் கரு உருவாக்கும் திறன் குறைந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அது அல்லாமல் மேலும் பல சிக்கல்களும் உண்டு. இந்த முறையில் இயற்கையின் பல கோடி கண்ணிகளில் சில இழைகள் விடுபட்டு போயிருக்கின்றன"

"அடங்கொனியா"

"அதனால் மீண்டும் உணவு முறையைக் கொண்டு வரும் முயற்சிகள் ஆரம்பம் ஆகிவிட்டன"

"என்ன? அது சாத்தியமா?"

"நீங்கள் தான் சாத்தியப்படுத்த வேண்டும்!"

புழுக்கத்தில் வீசும் திடீர் காற்றைப் போல் இருந்தது அவள் சொன்னது. அலை அலையாக, அவர்கள் பேசியது எல்லாம் மறுபடி ஓடி, இந்த உரையாடலின் அர்த்தம் முழுமையும் அவனுக்கு விளங்கியது..

"உங்களின் வரலாற்று அறிவும், தரவுகளைச் சேகரிக்கும் திறமையும் எங்களுக்கு அவசியம். வேறு சில குழுக்கள் ஏற்கனவே இதற்கான முயற்சிகளை ஆரம்பித்துவிட்டன. நார்வேயின் ஸ்வால்பார்ட் விதை சேகரிப்பு மையம் மற்றும் நமது மியூசியங்களில் இருந்து பயிர் விதைகளைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. ஆனால் அதற்கு சில வருடங்கள் ஆகலாம்.. உங்களது வேலை விவசாயம் சம்பந்தப்பட்ட அத்தனை தரவுகளையும் சேகரிப்பது, அதை செயல்படுத்தும் அணியை சரியாக வழிநடத்துவது. அழிந்தது போக மீதமிருக்கும் அரசாங்க தகவல்களுக்கும் உங்களுக்கு அனுமதி வழங்கப்படும்"

ஏதோ ஒரு குமாஸ்தா வேலை என்று நினைத்து வந்த இடத்தில்.. இப்படி ஒரு வாய்ப்பு.. ஆனால் மறுபடியும் உணவை எங்கிருந்து உண்ணத் தொடங்குவது? எதில் தொடங்குவது?

"மேடம்.. விவசாயம் எல்லாம் மறுபடி ஆரம்பித்து செயல்படுத்த பல வருடங்கள் ஆகலாம்.. அதற்கு முன் காட்டுப்பழங்கள், கிழங்குகள்.. போன்றவற்றில் ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.. பிறகு விலங்குகள்.. விலங்குகளை வேட்டையாடவும் ஆயுதங்கள் தேவைப்படலாம். நாம் ஏற்கனவே உபயோகிக்க ஆரம்பித்திருக்கும் எலும்பை கூட அதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.. நமது குடலை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது"

"அதற்குள் வேலையை பற்றி யோசிக்க ஆரம்பித்தாகிவிட்டதா?" என்று காகிதங்களில் எதையோ எழுதியபடியே சிரித்தாள்.
அழகும் அறிவும் அரிதாக இணையக்கூடும்.. அவற்றுடன் கூட பண்பும் இணைவது என்பது அதிர்ஷ்டம். அப்படி இணையப்பெற்ற ஒருவரை சுற்றி இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம். பழைய கொடுமைக்காரியின் முகம் நினைவுக்கு வந்தது.. அந்த குழு பக்கம் எட்டிக்கூட பார்க்க கூடாது.. புதிய பொறுப்பை நினைத்து நினைத்து மலைப்பாக இருந்தது.

"மறுபடியும் முதலில் இருந்து, குருடன் யானையை உணரும் கதையாய் தடவித்தடவி எல்லாவற்றையும் உருவாக்கப்போகிறோமா மேடம்?"

"இல்லை.. நமக்கும் மூதாதையர்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. யானை எப்படி இருக்கும் என்பதை ஓரளவிற்கு அறிந்தவர்கள் நாம். ஆகவே மீள் உருவாக்கம் செய்வது சற்றே சுலபம்.. நீங்கள் இன்றில் இருந்தே வேலையை ஆரம்பிக்கலாம். உங்களுக்கு கீழே எட்டு பேர். நீங்கள் என்னிடத்தில் அறிக்கைகள் தர வேண்டும். மணி உங்களுக்கான இருப்பிடத்தை காட்டுவார்" என்று ஒரு மணி அடித்தார். மணி உள்ளே வந்ததும் அறிமுகப்படுத்திக்கொண்டு, கும்பிடு வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே வரும்போதுதான் நினைவுக்கு வந்தது..

"மேடம்.. உங்கள் பெயர்?"


தலையை குனிந்த படியே சொன்னாள்.. "ஏவாள்"

***
முழுதும் படிக்க..