Apr 26, 2010

சில பாடல்களும் எண்ணங்களும்..

ரொம்ப நாள் கழித்து, கிழக்கு சீமையிலே படத்தில் கத்தாழங்காட்டு வழி பாடலை பார்த்தேன்.. ஒரு பெண் மணம் முடித்து புகுந்த வீடு போகும் போது, அண்ணனும் தங்கையுமாக தங்கள் மனதில் உள்ள வலியை (பிரிவு என்றாலே வலிதானே?)  பாடுவதாக இருக்கும். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க, இருவர் உள்ளம் மட்டும் பழைய நினைவுகளை நினைத்து அழும்..

இனி, நான் என் வீட்டில் இருக்க போவதில்லை என்ற உண்மை அவளை தாக்கும் அந்த பொழுதில், கண்ணீரை அடக்க முடியுமா..? பாடல் படமாக்கப்பட்ட விதமும் நன்றாகவே இருந்தது..ஜெயச்சந்திரன் குரலில், மிகவும் அற்புதமாக உயிர் பெறும் அந்த பாடல்.. இந்த வரிகளை பாருங்கள்..
வாசப்படி கடக்கையிலே வரல்லியே பேச்சு..
பள்ளபட்டி தாண்டிப்புட்டா பாதி உயிர் போச்சு..

இது நாள் வரையில் தான் வளர்ந்த வீட்டை விட்டுவிட்டு, வேறு வீடு போகும் பெண்ணின் உள்ளம் எப்படி இருக்கும்? முற்றிலும் புதிய சூழலை அவளால் எப்படி எதிர்கொள்ள முடிகிறது? இது எனக்கு என்றுமே பெரும் வியப்பை அளிக்கும் விஷயங்கள்.. இது போன்ற பல சமயங்களில் கள்ள சந்தோஷம் அடைந்து கொள்வதும் உண்டு, நல்ல வேளை ஆணாக பிறந்தோம் என்று..!

*****
அப்புறம் ஜெயச்சந்திரன் குரலில் ஏதோ ஒன்று உள்ளது.. காந்தம் காந்தம் என்று சொல்வார்களே.. அது போல.. சமீபமாக அவர் பாடிய இன்னும் சில பாடல்கள் - என் மேல் விழுந்த (மே மாதம்).. ஒரு தெய்வம் தந்த (கன்னத்தில் முத்தமிட்டால்)..

சில நாட்கள் கழித்து கருத்தம்மா பாடல்களையும் கேட்டேன். 'போறாளே பொன்னுத்தாய்' இரண்டு வெர்ஷனும் இரண்டு எக்ஸ்ட்ரீம்.. அப்புறம், இதில் வரும் காடு பொட்டகாடு.. விவசாயிகளின் வலியை அற்புதமாக விவரிக்கும் வரிகள். இந்த பாடலை இத்தனை நாளாக எப்படி கேட்காமல் விட்டேன் தெரியவில்லை. கேட்டு பாருங்களேன்..
 
"வானம் பாத்து வாழும் பூமி
தூங்கி போச்சு எங்க சாமி"


"ஆறு எங்கே ஆறு அட போடா வெட்க கேடு
மழை வந்தா தண்ணி ஓடும்..
மறு நாளே வண்டி ஓடும்"
 
"பட்ட மரத்து மேலே,
எட்டி பார்க்கும் ஓணான் போலே,
வாழ வந்த பூமி மேலே..."
முழுதும் படிக்க..

Apr 19, 2010

பிடித்த படம் - Shawshank Redemption (ஷாஷன்க் ரிடம்ப்ஷன்)

'சிறைக்குள் இருக்கும் எல்லாரும் கெட்டவங்க இல்லை. வெளியில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியன்கள் இல்லை' என்பது படத்தின் உட்கரு. ஆனால் எனக்கு படத்தில் பிடித்தது- ஒரு மனிதன் வாழ்க்கையில் எதை இழந்தாலும், 'நம்பிக்கை' இழக்காமல் இருந்தால் போதும் என்பதே. மற்றும் ஞயாயம் இறுதியில் வென்றே தீரும் என்ற இயற்க்கையின் தீர்ப்பு. மற்றும் விடா முயற்சி.. தன்னம்பிக்கையின் சக்தி.. இன்னும் பல 'மற்றும்'கள்.. இத்தனை விஷயங்களையும் போகிற போக்கில், அலுக்காமல், விளக்காமல் சொல்லிவிட்டு போய் விடுகிறார்கள்.


முழுக்க முழுக்க சிறைச்சாலை தான் களம். சிறையின் நுட்பமான அவலங்களை, அப்பட்டமாக நமக்கு காட்டுகிறது படம். முதலில், (கதையின் நாயகன் போலவே) எல்லாவற்றையும் ஒரு வித சந்தேகத்துடன்/வெறுப்புடன் பார்க்கும் நாம், போக போக சிறையின், கைதிகளின் கூட்டாளிகளாகி விடுகிறோம். அவர்களை விறும்ப ஆரம்பிக்கிறோம்.

ஒரு களத்தின் நுணுக்கமான விஷயங்களை ரத்தமும் சதையுமாக சொன்னால் மட்டும் யதார்த்த படம், சிறந்த படமாகி விடாது. அந்த களத்தின் மூலம் சொல்ல வருகிற விஷயம் மற்றும் சொல்லப்படும் விதம்- அதில் தான் உன்னதம் இருக்கிறது. 'ஷாஷங்க்'கில் படத்தை எடுத்திருக்கும் விதம் மற்றும் இதன் மிக மிகச்சிறப்பான வசனங்கள்- இந்த படத்தை மகத்தான ஒன்றாக ஆக்குகிறது. ஒவ்வொரு காட்சியின் நேர்த்தியிலும் தான் படத்தின் பிரம்மாண்டம் காட்டப்படுகிறது.

***

கதை சுறுக்கம் (சரி..கொஞ்சம் பெருசு தான்) இங்கே.. (கலரில் உள்ளது திருப்பு முனை காட்சிகள்.. படம் பார்க்காதவர்கள் அதை மட்டும் படிக்க வேண்டாம்)..

படம் ஆரம்பம் ஒரு கோர்ட்டு தீர்ப்பு நாளில்.. கடைசி கட்ட வாதங்கள் 'திறமையாக' நடத்தப்பட்டு.. தனது மனைவி மற்றும் அவளின் காதலனை கொன்றதற்காக நாயகனுக்கு (ஒரு பிரபல வங்கி அதிகாரி.. கொலைகளை தான் செய்ய வில்லை என்று மறுத்தும்..) இரட்டை ஆயுள் வழங்கப்படுகிறது. ஷாஷங்க் என்ற சிறைச்சாலைக்கு அனுப்ப படுகிறார்.

அங்கு இருக்கும் கைதிகள், புதிதாக வருபவர்களை வரவேற்கிறார்கள். அவர்களுக்குள் வழக்கமாக நடக்கும் ஒரு போட்டி- புதியவர்களில் யார் முதலில் அழப்போகிறார்கள் என்பது. 'ரெட்' என்ற கைதி, நாயகனின் மேல் பந்த்யம் கட்டுகிறார். சிறையில் நுழைந்த புதியவர்களின் தடுமாற்றம்.. மிகுந்த கடவுள் பக்தியுடன் பார்க்க கொஞ்சம் நல்லவர் போல் இருக்கும் வார்டன் அவர்களை வரவேற்கிறார்.. பார்மாலிடீஸ் முடிந்து செல்லில் அடைக்கப்படுகிறார்கள். முதல் இரவில் அவர்களில் ஒருவன் அழுகிறான். கத்துகிறான் (நாயகன் அல்ல). நான் இங்கு இருக்க வேண்டியவன் இல்லை என்று கதறுகிறான். கடுப்பான 'தலைமை காவல் அதிகாரி' அழுதவனை போட்டு உதைத்து, உதைத்து.. உதைத்து .. கொன்றே விடுகிறான்.

அடுத்த நாள் காலையில், நாயகனின் சாதத்தில் புழு இருக்கிறது. ஒரு சக கைதி அதை எனக்கு தருகிறாயா? என்று கேட்டு, தன் வாயருகே கொண்டு போகும் போது, ஒரு கொடுமையான ஜெயில் சூழலை காண தயாராகிறோம். அடுத்த காட்சியிலேயே, அந்த புழுவை, தன் பையில் இருக்கும் ஒரு சிறு பறவைக்கு கொடுக்கும் போது.. அவர்களும் மனிதர்கள் தான் என்று சுலபமாக உணர்ந்து கொள்கிறோம்.

ரெட், சிறையின் அண்ணாச்சி. யாருக்கு எது வேண்டுமோ வெளியில் இருந்து கடத்திக்கொண்டு உள்ளே விற்பவர். நாயகன் அவரிடம் போய், எனக்கு ஒரு சிறு உளி வேண்டும் என்று கேட்கிறார். 'இதை வைத்து ஓட்டை போட்டு தப்பிக்க நினைக்கிறாயா?'  என்று கேட்கும் ரெட், அந்த சின்ன உளியை பார்க்கும் போது புரிந்து கொள்கிறார். இது நாயகனின் கற்கள் செதுக்கும் பொழுது போக்கிற்கு என்று உணர்கிறார். மேலும், இதை வைத்து குழி தோண்டி தப்பிப்பதென்றால், 600 வருடங்கள் ஆகும் என்றும் உணர்கிறார்.


சரியான வாய்ப்பை சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த நொடி கடந்து விட்டால், திரும்பி பிடிக்க முடியாது. இப்படி ஒரு வாய்ப்பு, நாயகனுக்கு கிடைக்கிறது- ஒரு நாள், கட்டடத்தின் மேற் கூரையை செப்பனிடுவதற்காக ஆள் எடுக்கிறார் வார்டன். வழக்கம் போல் ரெட் மற்றும் அவர் கூட்டாளிகள் செலக்ட் ஆகிறார்கள். அந்த இடத்தில் காவல் அதிகாரி (ஒருத்தனை அடித்தே கொன்ற அதே 'தலைமை' தான்) தனது வரிப்பிரச்சனையை சொல்லி புலம்புகிறார். இதை கேட்டுக்கொண்டிருக்கும் நாயகன், துனிந்து, முன்னே சென்று நான் இதை சரி செய்ய முடியும் என்று சொல்கிறார். ஆத்திரமடையும் தலைமை, மாடியில் இருந்து அவனை தள்ளி விட வரும் போது, எப்படி இதை சரி செய்ய முடியும் என்று அவசர அவசரமாக சொல்லி, பதிலுக்கு தன் நன்பர்களுக்கு பியர்கள் வேண்டும் என்று கேட்டு, ஒப்புதலும் வாங்கி விடுகிறார்.  சிறைக்குள் நண்பர்களை பெருவதற்காண நாயகனின் உத்தி இது  என்று ரெட் உணர்கிறார்.

கொஞ்ச நாள் கழித்து, ரெட்டிடம் ஒரு சினிமா நடிகையின் போஸ்டர் கேட்கிறார் நாயகன். வாங்கி தன் செல்லில் ஒட்டியும் வைத்துக்கொள்கிறார். செல் இன்ஸ்பெக்ஷன் என்று சொல்லி வார்டன் நாயகன் அறைக்கு வந்து, போஸ்டர் முதலியவற்றை பார்த்து.., இருக்கட்டும் பரவாயில்லை என்று சலுகை அளிக்கிறார். அவனுக்கு லைப்ரரியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் அளிக்கிறார். ஆனால், சிறை அதிகாரிகளின் கணக்கு வழக்குகளை பார்த்துக்கொள்ளத்தான் அங்கு மாற்றப்பட்டதை பின்பு தெரிந்து கொள்கிறார் நாயகன். அனைத்து அதிகாரிகளின் (வார்டன் உட்பட) கணக்குகளையும் கவனிக்கிறார். வருடங்கள் கரைகின்றன.

வார்டன் இந்த சமயத்தில், கைதிகளை வைத்து பல திட்டங்களை வகுக்கிறார். இதன் மூலம் நிறைய பணம் வருகிறது லஞ்சமாக.. கருப்பு பணங்களை நிர்வகிக்கும் பொறுப்பும் நாயகனுக்கே வருகிறது. திறம்பட செய்கிறார் ('வெளியில் இருக்கும் வரை உண்மையான ஒருத்தனாக இருந்தேன்.. உள்ளே வந்து திருட்டு தனங்களை செய்கிறேன்'). இல்லாத ஒரு மனிதனை உருவாக்கி, அவன் பெயரில் பணம் போட்டு வைக்கப்படுகிறது. வார்டன் பணக்காரனாக ஆகி வருகிறார். இந்த நிலையில், புதிதாக வருபவர்களில், ஒரு இளம் கைதி, நாயகன்-ரெட் செட்டில் சேர்கிறான். ஒரு நாள், நாயகனின் கதையை கேட்கும் அவன், இதற்கு முன்னால் தான் இருந்த சிறையில் ஒரு சக கைதி சொன்னதை சொல்கிறான். அதாவது நாய்கனின் மனைவி மற்றும் அவள் காதலனை கொன்றது அந்த சக கைதியே என்பது. இந்த இடத்தில் ரெட்டுடன் சேர்ந்து நாமும் அதிர்கிறோம் (இது வரையில் நாயகன் உண்மையிலேயே கொலை செய்தாரா இல்லையா என்பது தெளிவாக தெரியாது). இதை போய் வார்டனிடம் சொல்ல, அவர் நாயகனை தண்டிப்பதுடன், அந்த இளம் கைதியையும் போட்டு த்ள்ளுகிறார்.


தண்டனை முடிந்து வரும் நாயகன் (அதாவது சிறைக்குள்ளேயே கொடுக்கப்படும் கொடூர சப்-தண்டனை), ரெட்டிடம் தன் மனைவி இறந்ததற்க்கு தானும் ஒரு வகையில் காரணம் தான், அவளை மகிழ்ச்சியாக வைக்கவில்லை. அதற்கான தண்டனையாக இதை ஏற்றுக்கொள்கிறேன் என்றும் சொல்கிறார். மேலும், தனக்கு மெஃஸிகோவில், பசிபிக் கடலில் இருக்கும் ஊரில் போய் வாழ்க்கையை கழிப்பது தான் கனவு என்பதை சொல்கிறார். இதை கேட்ட ரெட், வீண் கனவுகளில் கவனம் செலுத்தாதே, இருப்பதை வைத்து சந்தோஷப்படு என்று அறிவுறுத்துகிறார். மிகுந்த வேதனையுடன் நாய்கன், என்றாவது ரெட் வெளியே வந்தால், பஃஸ்டனில் இருக்கும் ஒரு பெரிய மரத்தடியில் இருக்கும் சிறிய பெட்டி ஒன்றை போய் எடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறார். ரெட் சம்மதிக்கிறார்.


நாயகனின் வருத்ததை புரிந்து கொள்ளும் அவர் கூடடாளிகளிடம், அவன் வித்தியாசமாக நடந்து கொள்வதாக ரெட் சொல்கிறார். அதற்கு ஒரு நண்பர், 'ஐயையோ, அவன் 6 அடி நீளத்துக்கு ஒரு கயிறு வேண்டும் என்று கேட்டான், நானும் கொடுத்தேன்' என்று சொல்கிறான். ரெட் கலவரமாகிறார். வழக்கம் போல், வார்டன் அறையில் அவரின் கணக்கு வழக்குகளை முடித்து விட்டு, தாமதமாக வரும் நாயகனை தனது செல்லில் இருந்து கவலையுடன் பார்க்கிறார் ரெட். இரவு இறுக்கமாக கழிகிறது. அடுத்த நாள். அனைத்து கைதிகளும் வெளியில் வர அழைக்கப்படுகிறார்கள் வழக்கம் போல். நாயகன் வர வில்லை. போய் பார்த்தால்......

நாயகனின் அறை காலியாக இருக்கிறது (20 வருடங்கள் கழித்து முதல்முறையாக). வார்டன் முதற்கொண்டு அனைவரும் வந்து பார்க்கிறார்கள். கத்துகிறார் வார்டன். ஒரு கல்லை எடுத்து அந்த சினிமா நடிகையின் போஸ்டர் மீது எரிகிறார். அது உள்வாங்குகிறது. பிரித்து பார்த்தால், அங்கு ஒரு குழி செல்கிறது... தப்பி விட்டார் நாயகன். எப்படி தப்பிக்கிறார் என்று காட்டப்படுகிறது. இந்த இடங்களில், நமக்கு வரும் உணர்ச்சிகள்.. இதுவல்லவா படம் என்று திகைக்க வைக்கிறது. வந்ததும், வார்டன் மற்றும் தலைமையின் வண்டவாளங்களை லெட்டர் மூலம் ஆதாரத்துடன் போட்டு கொடுக்கிறார். தலைமை கைது.. வார்டன் தற்கொலை..

ரெட் பரோலில் வெளி வந்து, நாயகன் சொன்னபடி அந்த மரத்தடி பெட்டியை பார்க்கிறார். அதில் இருக்கும் பணத்தை வைத்து, நாயகன் இருக்கும் மெஃஸிகோவிற்கு போய் சேர்கிறார். அவர்கள் இருவரும் சந்திப்பதுடன் படம் நிறைவு பெருகிறது.

***

சிறை வாசம் எப்படி கைதிகளை 'பிடித்துவைத்துக்' கொள்கிறது. உள்ளே மிகவும் திறமையான, முக்கியமானவர்கள் எப்படி வெளியில் செல்லாக் காசாகிறார்கள். கைதிகள் எப்படி மனிதர்களாக இருப்பதை மறக்க வைக்கப்படுகிறார்கள் (அந்த இசை ஒலிபரப்பும் காட்சி).. கடவுள் பக்திக்கும் நல்லவர்களாக இருப்பதற்கும் சம்பந்தமில்லை (இது எனக்கு எப்போதுமே வியப்பைத்தான் தருகிறது.. கடவுளுக்கு மிகவும் பயப்படும் ஒருவர், எப்படி தீமைகளை செய்கிறார்?) வருடக்கணக்காக உள்ளே இருந்து வாழ்க்கையை தொலைப்பவர்கள்.. இன்னும் பல பல உள்ளது படத்தில்... இங்கு கொஞ்சம் தான் சொல்லி இருக்கிறேன்..


உதாரணம் இந்த ஒரு காட்சி- பரோலில் வெளியே வருவதற்கு ஒரு நேர்முகம் நடக்கும், 10 வருடத்திற்கு ஒரு முறை. ரெட் ஒவ்வொரு முறையும் போய், நான் திருந்தி விட்டேன் என்று சொல்லுவார். ஒவ்வொரு முறையும் ரிஜெக்ட் செய்து விடுவார்கள். கடைசி முறை, 40 வருட சோகத்தையும் சேர்த்து வெடிப்பார். ஆனால் விட்டு விடுவார்கள். எப்படி? அவர் பேசியதாலா? இல்லை, எப்போதும் போல் இல்லாமல், இந்த தடவை ஒரு இளம் டீம் நேர்முகத்திற்கு வந்ததாலா (முதல் முறையாக ஒரு பெண்ணும் அதில்)? அதிலும் அந்த டீம் தலைவர், Please sit down என்று கூறுவார்.. இப்படி பல விஷயங்களை யோசிக்க வைத்து விடுகிறார்கள்..

நம்பிக்கை என்பது எப்படி எந்த நிலையிலும் உதவுகிறது. ஏன் எனக்கு மட்டும் இப்படி/இதற்கு மேல் முடியாதுப்பா என்று நம்பிக்கையை இழப்பவர்கள்..  செய்யாத தப்புக்காக இரட்டை ஆயுள் வாங்கியும் நம்பிக்கையுடன் அதை எதிர்கொள்ளும் நாயகனின் இந்த கதையை கண்டிப்பாக பார்க்க வேண்டும். அந்த கதாபாதிரம் எனக்கு ஆதர்சமாக தெரிகிறது.

'சிறைக்குள் இருக்கும் எல்லாரும் கெட்டவங்க இல்லை. வெளியில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியன்கள் இல்லை' என்ற அந்த கருத்து, இன்றைய தேதிக்கு மிகவும் அர்த்தமுள்ளதாகிறது அல்லவா..!
முழுதும் படிக்க..

Apr 17, 2010

தனிமை

ரயில் பயணத்தில், வெளியில் தெரியும் இருட்டில், திடீரென்று ஒரு வீடு தெரிகிறது. அதில் ஒற்றை மஞ்சள் பல்பு. வெளியில் ஒரு குழந்தை வேறு உட்கார்ந்திருக்கிறதே? சட்டென்று பார்வையில் இருந்து அக்காட்சியை மறைத்து விடும் ரயிலின் வேகம். இப்படி தனிமையை அப்பட்டமாக பார்த்ததில் ஒரு பிரமிப்பு கலந்த பரிதாபம். அந்த வீட்டை சுற்றி பல கிலோ மீட்டருக்கு ஒன்றும் கிடையாது. அப்படி ஒரு வீட்டை பார்த்தவுடன் பல கேள்விகள் மனதில்..

அந்த தனி வீட்டில் இருப்பவர்கள் உடம்பு சரி இல்லை என்றால், எங்கே போவார்கள்? குழந்தை எங்கு படிக்கும்? மளிகை சாமான் எல்லாம் எங்கு வாங்குவார்கள்? அய்யோ..இப்படி 'கவிதை'த்தனமாக யோசித்துக்கொண்டு இருக்கும் போதே.. ரயிலில் 3 பேர் உட்கார வேண்டிய இடத்தில் நாலு பேர் உட்கார்ந்து, போட்டு நசுக்கி உயிரை வாங்குகிறார்கள். மனிதர்களை விட்டு தனியாக எங்காவது ஓடிப்போய் விட்டால் என்ன என்று, இப்போது யோசித்து கொண்டிருக்கிறேன்.
முழுதும் படிக்க..

Apr 9, 2010

இன்பர்மேஷன் கலெக்டரா நீங்கள்?

அவருக்கு தெரியாமல் அவர் சுற்று வட்டாரத்தில் ஒரு அணுவும் அசையாது (பாய்ஸ் செந்தில் மாதிரி), என்பது போல் ஒரு காரெக்டர் எல்லா க்ரூப்பிலும் நிச்சயம் இருக்கும்.  உதாரணத்திற்கு, என் அலுவலகதில் இருக்கும் இப்படி ஒரு 'கலெக்டர்'ஐ பற்றி சொல்கிறேன். யார் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் பூர்விகம்/ஜாதி மதம், சொத்து போன்ற எல்லா விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பான். இவனுடைய தகவல் திரட்டும் திறனை கண்டு பல முறை ஆச்சர்யம் (அதிர்ச்சி) அடைந்துள்ளோம்.

இவனால் பெரிதும் பாதிக்கப்படுவது, வெளியில் தெரியாமல் காதலித்துக்கொண்டு இருக்கும் ஜோடிகளே. 'டேய், நேத்து அவுங்க ரெண்டு பேரையும் மாம்பலம்ல பார்த்தேன்' என்று குண்டை வீசுவான். வேறு ஒரு பெண்ணை வேறு யாருடனோ ECR-இல் பார்ப்பான். (நீ மட்டும் எப்படிடாப்பா எல்லா இடத்திலும் எல்லாரையும் பார்க்க முடியுது? வீட்டிலேயே இருக்க மாட்டியா?)

சில சமயங்களில், அவனின் கணிப்பு நம்மை அதிர வைக்கும். 'அவன் கூடிய சீக்கிரம் வேற கம்பனி போயிடுவான்' என்பான். சொல்லி வைத்த மாதிரி அவன் சொன்னவனும் 'மச்சி, அடுத்த வாரம் கெளம்பறேன்' என்று வந்து நிற்பான். 'தெரியுமே' என்று சொன்னால், 'எப்படி டா? நான் யார்ட்டயும் சொல்லவே இல்லையே?' என்று கேட்க, நாங்கள் கலெக்டரை பார்த்து ரகசியமாக சிரிப்போம்.


ஓயாத தேடல் இருந்தால் ஒழிய இந்த அளவிற்கு செய்தி சேகரிக்க முடியாது. விலை நிலவரங்கள், எந்த கடை எங்கு இருக்கிறது, எந்த பஸ் அங்கு போகும், ஹோட்டல், அங்கு எந்த உணவு நன்றாக இருக்கும் என்பது போன்ற நுணுக்கமான பொதுச்செய்திகளும் உண்டு. நான் எப்படி ஆள் என்றால், ஐஸ்லாந்தின் தலை நகரம் என்ன என்றால் சொல்லி விடுவேன். ஆனால் எங்கள் தாஹ்சில்தார் ஆபீஸ் எங்கே என்று தெரியாது! என்னை போன்ற ஆசாமிகளுக்கு கூகுளை போன்று தகவல்களை அள்ளி இறைப்பான்.

இவனை போன்றோரின் ஒரு குணாதிசியம், இவனை போன்றே இருக்கும் மற்றவர்களுடன் 'டச்'சிலேயே இருப்பான். இரண்டு டேட்டாபேஸ்களும் தங்கள் தகவல்களை 'sync' செய்து கொள்வது உண்டு. அந்த நேரத்தில் அங்கே இருந்தீர்கள் என்றால், ஒரே தகவல் சரவெடி தான். இன்னொரு குணாதிசியம் - போலீஸை போன்ற சந்தேகம். எல்லாவற்றையும் சந்தேகப்படுவான். அவ்வளவு சீக்கிரம் சொல்கிறதை ஒப்புக்கொள்ள மாட்டான். ஒரு உதாரணம். எங்கள் செட்டில் எது செய்தாலும் மற்றவர்களுக்கு சொல்லி விட வேண்டும். அப்படி சொல்லாமல் செய்த ஒருவன் கலெக்டரிடம் எப்படி சிக்குகிறான் பாருங்கள்.

அவன்: நேத்து எனக்கு ஆக்சிடன்ட் ஆய்டுச்சு.. கைல பாரு காயம்.
நம் கலெக்டர்: அடாடா.. எங்க டா..
அவன்: கடலைகாரத் தெரு கிட்ட..
நம் கலெக்டர்: அந்த பக்கம் உனக்கு என்ன வேலை..? நீ வெளியவே வர மாட்டியே?
அவன்: அது அது (மாட்டினான்)
நம் கலெக்டர்: அங்க எனக்கு தெரிஞ்சு 'தம்பு IAS அகாடமி' தான் இருக்கு. நீ IASக்கு தான படிக்க போற? எனக்கு ஏற்கனவே அந்த டவுட் இருந்துச்சு. இப்போ கன்ஃபர்ம்டு. ('ஆர்குட்டில் IAS கம்யூனிட்டில இருக்கறத பாத்துட்டேன்')
அவன்: ஆக்சிடன்ட் ஆய்டுச்சு, சொல்லலாம்னு பாத்தா.. இப்படி பண்றியேடா.. என்று சோக மூஞ்சியுடன் இடத்தை காலி செய்தான். இப்படி சமய, சந்தர்ப்ப, சாட்சிகளை வைத்து அவன் குற்றவாளியை (!) கண்டுபிடிப்பது சுவாரஸ்யம்.

இப்படி ஜாலியாக போய்க்கொண்டு இருக்கும் போது, திடீர் என்று வேறு வேலைக்கு போய் விட்டான் (அவன் செய்வதை கண்டு பிடிக்க முடிய்மா?). அவன் போனதில் எங்கள் எல்லாருக்குமே வருத்தம் தான். பின்ன? தகவல்கள் தெரியாமல் பாதிக்கப்படுவது நாங்கள் தானே? அவன் போன கொஞ்ச நாளில், எங்கள் டீமில் ஒருத்தி இப்படி ஃபோன் பேசிக்கொண்டு இருந்ததாக சொன்னார்கள்..

'என்னது? அவன் உன் கம்பெனிக்கா வந்துருக்கான்? அடப்பாவமே..? யார் என்ன பண்றாங்க, எங்க சுத்துறாங்க, இந்த டீடைல்ஸ் கலெக்ட் பண்றது தான் அவன் வேலையே. ஹா ஹா ஹா' என்று நிம்மதியாக சிரித்தாளாம்.
பாதிக்கப்படுவர்களுக்கு தான் தெரியும் கஷ்டம்.

--------

வந்தது வந்துட்டீங்க.. அப்படியே என் முந்தைய பதிவையும் படிச்சுட்டு போய்டுங்க
முழுதும் படிக்க..

Apr 5, 2010

ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது..?

ஏன் எனக்கு மட்டும் இப்படி ஆகுது என்று தோன்ற வைக்கும் சம்பவம் எல்லாருக்குமே நடந்திருக்கும். எப்போது நினைத்தாலும் கடுப்பை ஏற்றும், அப்படிப்பட்ட, எனக்கு நடந்த (அடிக்கடி), இப்போது நினைவில் இருப்பவை சில (பல நடக்கும்..இங்கு சில மட்டும்)
.
.

பேருந்தில் எனக்கு அருகில் இருக்கும் சீட்டில் இருப்பவரை தவிர, மத்த அனைவரும் இறங்குவது.. என் அருகில் இருப்பவர் இறங்கும் போது, பேருந்தே காலியாகி விடுவது..


'முக்கியமான' வேலை ஏதாச்சும் செய்ய வேண்டி இருக்கும் போது (பிளாக் அல்ல)/வேர்த்து விறுவிறுத்து வெளிய போயிட்டு வரும்போது பவர் கட் ஆவது..

கக்கூஸில் இருக்கும் போது, அனைவரும் கங்கனம் கட்டிக் கொண்டு கால் பண்ணுவது.. (இவ்ளோ நேரம் சும்மா தான இருந்தேன்.. அப்போ பண்ண வேண்டீதான?). அப்புறம், ஏண்டா எப்போ ஃபோன் பன்னாலும் எடுக்க மாட்டிங்கற? என்று திட்டுவது..

24/7 இயங்கி வரும் ஒரு கடை, நான் அவசரமாக ஏதாவது வாங்க போகும் போது மூடி இருப்பது.. அன்றைக்கு என்று சுற்று வட்டாரத்தில் அனைத்து கடைகளுமே சாத்தி இருப்பது (பந்த்)

எங்கு சென்றாலும், நான் இருக்கும் இடத்திற்கு, 1 கி.மீ சுற்றளவில், பெண்களின் சுவடே இல்லாமல் இருப்பது (நீ ஒரு ராசி கெட்டவன், எங்க கூட வராத என்று திட்ட துவங்கி விட்டார்கள் சக சிடிசன்ஸ். லேடீஸ் ஸ்பெஷல் பஸ்ஸில் டிரைவராக போய் விடாதே.. கலெக்ஷனே ஆகாது என்று கிண்டல் வேறு)


கழுத்தில் கத்தி இருக்கும் போது முதுகில் பயங்கரமாக அரிப்பது (ரவுடி எல்லாம் இல்ல.. சலூன் கடையில சொன்னேன்)

மிகவும் எதிர் பார்த்து காத்திருக்கும் கிரிக்கெட் தொடர். ஆவலோடு அந்த நேரத்திற்கு போட்டால், தூர்தர்ஷனில் ஒரு சேட்டு ஷெனாய் வாசித்து கொண்டு இருப்பார் (இது சின்ன வயசில்.. அடிக்கடி நடக்கும்)

.
.

இத்தோட நிறுத்திக்கிறேன்..
முழுதும் படிக்க..