Mar 11, 2012

அண்ணா நூற்றாண்டு நூலகம் - திடீர் விசிட்


IT கம்பெனி வளாகத்தை விட சுத்தமாக, துல்லியமாக பராமரிக்கிறார்கள். பார்க்கிங்கில் ஆரம்பித்து எதற்குமே ஒரு பைசா கூட செலவில்லை

உறுப்பினர் எல்லாம் ஆக வேண்டியதில்லை. ஆனால் புத்தகங்களை வீட்டிற்கு கொண்டு வரமுடியாது (திருட்டுத்தனம் செய்தால் RFID அலறிவிடும்)

கட்டிட வடிவமைப்பு அபாரம். எஸ்கலேட்டர், லிப்ட் என்று நல்ல வசதி

குளிர்சாதனங்கள், உட்கார்ந்து படிக்க சோபாக்கள், அமைதியான சூழல், புத்தகங்கள் தேட கம்ப்யூட்டர் என்று நிறைய சொகுசு

கிட்டத்தட்ட அத்தனை தலைப்புகளிலும் அத்தனை புத்தகங்களும் கிடைக்கிறது. எனக்கு ஓர் அளவிற்கு அறிமுகமான தமிழ் எழுத்தாளர்கள் பிரிவை வைத்து சொல்கிறேன். 

ஒவ்வொரு மாடியிலும் ஒவ்வொரு வகையான பிரிவு (குழந்தைகள் பிரிவின் வடிவ நேர்த்தி ஏற்கனவே நிறைய சிலாகிக்கப்பட்டு விட்டது). பிரபஞ்சத்தையும் அதை தாண்டியதையும் இந்த 9 மாடியில் அடக்கி விட்டனர்

என்னமோ நகைக்கடைக்கு போனவர் மாதிரி இதை படிக்கலாமா அதை படிக்கலாமா ஐயோ இன்னும் 4 மாடி இருக்கு என்று ஒரே பரபரப்பு

இப்படி ஒரு நூலகத்தை இடிக்க ஆலோசனை தந்தவருக்கு பகை, எதிர்ப்பை தாண்டி கடும் வன்மம் 'எதன்மீதோ' இருக்கவேண்டும்

நிறைய மாணவர்களை நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தனர் (இடம் தேர்வு அருமை. சுற்றிலும் கல்லூரிகள்). பேனாவை வைத்து பேப்பரில் எழுத வேண்டும் என்று ஆசையாக இருந்தது

எனக்கு ரொம்ப பிடித்த அம்சம் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள், அத்தனை அன்புடன், மிரட்டல்கள் இல்லாமல் பாசமாக நடந்து கொண்டார்கள். புதுசாக, சோகமாக இருந்தது
முழுதும் படிக்க..

Mar 4, 2012

அரவான் - ஒரு பார்வை

George Orwell எழுதிய உலகப்புகழ் பெற்ற 'A Hanging' (இங்கு சென்று வாசிக்கலாம்) என்ற கட்டுரையை (slash கதையை)  வாசித்து முடிக்கும்போது ஏற்படும் ஒரு வெறுமையை, இந்த படத்தின் பிறகும் உணர முடிந்தது. கதைக்கும் கடைசியில் போடும் எண்டு கார்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று சிலர் சொல்கிறார்கள், ஆனால் எனக்கு சொல்லவந்த மையக்கருத்தை வசந்தபாலன் வெற்றிகரமாக சொல்லிவிட்டார் என்றும் தோன்றுகிறது (பிற படங்களிலும் சொல்லித்தான் விடுகிறார். ஆனால் 'சுவாரசியமாக' இருந்ததா என்பது அடுத்த கேள்வி). ஒரு நல்ல படைப்பை பிடிக்குது, பிடிக்கல என்று ஒற்றை வார்த்தைகளில் அடைக்க முடியுமா தெரியவில்லை. அரவான் படத்தில் எனக்கு பல காட்சிகள் பிடித்திருந்தது, சில இடங்கள் தோய்வாக தோன்றியது.


படத்தில் முதலில் பிடித்த அம்சம் ரொம்பவே சுவாரசியமான சம்பவங்களின் கோர்வை - ஒன்றன் பின் ஒன்றாக நாம் வழக்கமாக பார்த்திராத சம்பவங்களின் கட்டமைப்பு, முதல் பாதியில் ஒரு சின்ன முடிச்சு, இரண்டாம் பாதியில் அதை அவிழ்ப்பது என்று திரைக்கதை முதல் பாதியில் மிக நன்றாகவே இருந்தது. ஒளிப்பதிவும், இடங்களின் தேர்வும்  அருமை. பலரின் நடிப்பு அபாரம், ஓரிருவரை மட்டும் சொல்ல முடியவில்லை.

புத்தகம் வாசித்த சிலர் அது மாதிரியே இல்லை, மாற்றிவிட்டார்கள் என்று கூறியிருந்தார்கள். புத்தகங்களை அப்படியே எடுத்து டப்பா டான்ஸ் ஆடின நிறைய படங்களை பார்த்திருக்கிறோம். சினிமாவுக்கு ஏற்றார் போல் அது மாற்றப்படவேண்டும். அப்போதுதான் வெற்றிபெறும்.


பீரியட் படங்களில் நான் முதலில் கவனிப்பது மொழி. ஒரு ஆவணப்படத்தில் வேண்டுமானால் authenticity தேவை, அதை நாம் வணிகப்படங்களில் எதிர்ப்பார்க்க தேவையில்லை (ஆயிரத்தில் ஒருவன் தமிழும் திட்டப்பட்டது என்பதை கவனத்தில் கொள்க). அதற்காக சுத்தமாக சமகால தமிழிலும் கதைப்பது சரியில்லை. அந்த வகையில் அரவானில் பேச்சு மொழி எந்த நெருடலும் தராதது ஆதரவளித்தது. மேலும் கதைகளத்துக்கும் நமக்கும் ஒரு 250 வருடங்கள் தான் இடைவெளி. இதில் மொழி பெரிதாக மாறியிருக்குமா தெரியவில்லை.


சாகும் நாள் தெரிந்த பின் ஆதி முகத்தில் ஏறும் அந்த நிரந்தர சோகம் அருமை. 'நான் பலிக்கு போகல' என்று அவர் மனைவியிடம் அழுவதும் ரொம்பவே உண்மையான உணர்ச்சி. இந்த இடங்களில் இவர் உயிர் போய்விட கூடாதே என்ற நம் தவிப்பு, இறுதி காட்சியில் ஏனோ இல்லை. இதுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம் (கடைசியில் போடும் எண்டு கார்டு எதற்கு என்று கேட்பது இந்த Impact இல்லாததால்தான்). அந்த நீளமான மலை ஏறல் ஒரு காரணமா தெரியவில்லை. இதைவிட ஆதியின் நண்பர் பலியிடப்ப்படும்போது அதிக அதிர்வு இருந்தது.


இதை தமிழர்களின் வரலாறு/பெருமை என்றெல்லாம் முருகதாசுத்தனமாக உளறாமல் இருப்பது ஆறுதல். இது ஒரு மனிதனுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் கதை. இதில் அவன் சார்ந்த அந்த இனக்குழுக்களை/காலத்தை பதிவு செய்திருக்கிறார்கள். சொல்லப்போனால் தமிழர்களின் (அல்லது இந்தியர்களின்) ஒட்டுமொத்த வரலாறு என்று ஒரு படம் எடுக்கவே முடியாது. மேலும் இந்த படம் வெளிவந்திருக்கும் timing அபாரமானது. தூக்கு தண்டனை, என்கவுண்டர் போன்ற 'செய்திகளை' நாம் விவாதித்துக்கொண்டிருக்கும் போது வந்திருக்கிறது!


சிறுதெய்வங்கள் சாதாரண மக்களாக இருந்து அவர்கள் சந்ததியினரால் தெய்வமாக்கப்பட்டவர்கள். பெருதெய்வங்கள் ஒருகாலத்தில் அரசர்களாக இருந்தவர்கள் (அப்படியும் இருக்கக்கூடும்). இதுபோன்ற செய்திகளை உள்வாங்கி நுணுக்கமாக காட்ட வசந்தபாலன் போன்றவர்களால் முடியும், வெளிநாட்டு படத்தை பார்த்து அப்படியே படமெடுப்பவர்களால் முடியாது. அதனால் தான் எனக்கு இந்த படம் பிடித்ததுமுழுதும் படிக்க..

Feb 15, 2012

வாகன ஓட்டி

நமது தெருக்களில் தான் எத்தனை விதமான வண்டி ஓட்டிகள்? அவர்களை வகைப்படுத்தினால்? இது பெரும்பாலும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு என்றாலும் பெருவாகன ஓட்டிகளுக்கும் சிலது பொருந்தும். அவர்களுடைய 'நிக்நேம்' மற்றும் அவர்களை பற்றிய சிறு குறிப்பு:

சொறி முத்து:
இவருக்கு வண்டியில் ஏறி ஓட்ட ஆரம்பித்த உடனே சொரிய ஆரம்பித்துவிடும். அதுவும் முதுகு, கெண்டைகால் என்று அணுக முடியாத இடங்களில்தான்..
என்னதான் சொரிந்து கொண்டே இருந்தாலும் இவருக்கு ஒழுங்கு என்பது மிக முக்கியம். அவிழ்ந்திருக்கும் ஷூ லேசை கட்டுவது, பெல்ட் சரி பண்ணுவது, சரியாக சட்டை இன் செய்யப்பட்டிருக்கிறதா என் சோதனை செய்வது (ஆம் அத்தனையும் வண்டி ஓட்டிக்கொண்டேதான்) என்று தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பார். இதனால் வண்டி சைடு வாங்கும் தான், பின்னால் வருபவர்கள்தான் ஒதுங்கி போக வேண்டும். ஒழுங்கு முக்கியமில்லையா?


மன்மோகன் ஜி:
இவர் அமைதியானவர். பெரும்பாலும் வயதானவர் அல்லது சமீபமாக விழுந்து வாரியவர். பத்து கி.மீ. வேகத்தில்தான் வண்டி ஒரு ஓரமாக ஓடும். இவர் யார் வம்புக்கும் போக மாட்டார், இவர் வம்புக்கும் யாரும் போக வேண்டாம். ஓவர்டேக் பண்ணி பொய் கொள்ளுங்கள்

பிரபுதேவா:
வண்டியோடு சேர்ந்து வளைந்து நெளிந்து தெருவில் நடனமாடியபடியே ஓட்டுபவர். இந்த லேனில் இருந்து அங்கு தவ்வுவது, மறுபடி அங்கிருந்து இங்கு வருவது, 180 டிகிரியில் அப்படியே நகர்வது என்று பலவித சேட்டைகள்.. ஆபத்தானவர். மன்மோகன் ஜிக்கு பாவம் இவரை கண்டாலே பயம்சங்கீத ஸ்வரங்கள் மம்மூட்டி:
இவருக்கு செல்போனில் வண்டி ஓட்டும்போது பேச மிக பிடிக்கும். எங்கு அழைப்பு தவறி விடுமோ என்று வைப்ரேஷனில் வைத்து, வண்டி ஓட்டிக்கொண்டே அந்த டைட்டான பாக்கெட்டில் இருந்து கஷ்டப்பட்டு எடுத்து பேசிவிடுவார். இவர் இப்போது அதே  டைட்டான பாக்கெட்டில் இருந்து எடுத்து குருஞ்செய்திகளுக்கும் உடனுக்குடன் பதில் அளிக்கிறார். பின்னால் வருபவர்கள் இவரின் காதலை ஒன்றும் தொந்தரவு பண்ண வேண்டாம்


கலா ரஸிகர்:
தெருவை தவிர அத்தனை விஷயங்களிலும் கண் இருக்கும். இவர் கண்ணில் இருந்து ஒரு பேனர், கடை, இயற்கை காட்சி தப்பிவிடாது. தினம் பார்த்தாலும் ஒவ்வொரு முறை ஒவ்வொரு தரிசனம் காணுவார். இவருக்கு பிறரால் தொடர்ந்து தடங்கல்கள் உண்டு. இருந்தாலும் கடைசி நொடியில் ப்ரேக் போடுவது, திடீரென்று சுதாரிப்பது என்று கலைபயணத்தை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறார்


ரவீந்திர ஜடேஜா:
இவர் எப்போது நன்றாக ஒட்டினாரோ, யாருக்கும் தெரியாது. ஒன்றிரண்டு தடவை ஆள் இல்லாத தெருவில் ஓட்டிவிட்டு 'சூப்பரா வண்டி ஓட்டுகிறேன்' என்று இவராக நினைத்துக்கொண்டு மெயின் ரோட்டில் இறங்கிவிடுவார். சேதாரம் உண்டு

சுவாமிஜி:
யாராவது பெண்கள் ரோட்டில் தென்பட்டுவிட்டால் இவருக்கு குஷி ஆகிவிடும். தொடர்ந்து சென்று சைட் அடிப்பது, ஸ்கூட்டி பக்கத்திலயே போய் லவ்வு பண்ணுவது என்று, தெருவில் எவ்வளவு ரணகளமாக இருந்தாலும் இவர் காரியத்தில் கண்ணுங்கருத்துமாயிருப்பார்விஜயகாந்த்:
செவ்விழிகளுடன், நாக்கை துருத்திக்கொண்டு விடாமல் ஹார்ன் அடிப்பவர். சைக்கிளாக இருந்தாலும் அதில் லாரி ஹார்ன் பொருத்தி இருப்பார். சிக்னலின் சிகப்பில் எல்லாரும் நின்று கொண்டிருந்தாலும் சரி, ட்ராபிக் ஜாமாக இருந்தாலும் சரி.. இவருக்கு அதெல்லாம் தெரியாது. கடுங்கோபத்துடன் ஹார்ன் அடித்து அனைவரையும் வழிவிட சொல்வார். நாட்டை உடனடியாக காப்பாற்ற வேண்டும் அல்லவா? ஆங்


முழுதும் படிக்க..

Jan 25, 2012

ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்


படிக்கும் புத்தகங்களை பற்றி இனி பதிவு போடலாம் என்று ஒரு எண்ணம்.. என்னுடைய வாசிப்பு இலக்கு - தமிழ் பிதாமகர்களின் புத்தகங்கள்.  நடு நடுவே  சமகால இலக்கியங்கள் (மானே தேனே பொன்மானே)

முதலில் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம். ஜெயகாந்தன் (மீனாட்சி புத்தக நிலையம்). புத்தகத்தில் எனக்கு பிடித்த அம்சங்கள்..

ஆனந்த விகடனில் தொடர்கதையாக எழுபதுகளில் வந்தது. ஆனால் அவரே முன்னுரையில் சொல்வது போல் காலங்களுக்குள் அடைக்க முடியாதுதான்..

மனித எண்ணங்களை அப்படியே குடைந்தெடுத்து, விலாவாரியாக காட்டுவது எனக்கு பிடித்திருந்தது. பல இடங்களில் சிம்பிளாக ஒரு வரி வரும், அது எதற்கு அந்த இடத்தில் என்று யோசித்தால் நிறைய தரிசனங்கள் உண்டு..

கதையில் (வாழ்க்கையில்?) அனைவருக்கும் ஏதாவது 'கெட்ட பழக்கம்' இருந்தாலும், அனைவரும் நல்லவர்கள் அல்லது அப்படி பார்க்கப்பட வேண்டியவர்கள். Nothing is black or white (எதையுமே/யாரையுமே நல்லது-கெட்டது என்று வகைப்படுத்த முடியாது) என்று என் பெரியப்பா ஒரு முறை சொன்னார். அது எவ்வளவு பெரிய வார்த்தை என்பதும், அது அவர் அத்தனை வருட வாழ்வில் கண்டறிந்த உண்மை என்பதும் இந்த கதையின் மூலம் புரிகிறது..

எதிலுமே மிகுதியான பற்றற்று, அந்தந்த நொடிகளில் வாழ்வது  என்பது ஒரு லட்சியவாதம்தான். கடினம்தான். ஆனால் அப்படி இருப்பதற்கு இந்த நூல் தூண்டுகிறது, நன்றாகத்தான் இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது. மேலும் அன்பு/மனிதாபனம் எல்லாம் ரொம்பவே contagious
என்று புரியவைக்கிறது.

இந்த புத்தகத்தை முடித்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சியும் மனித வாழ்க்கையின் மீது ஒரு பெரும் நம்பிக்கையும் இயல்பாக தோன்றுகிறது. சும்மாவா ஜெயகாந்தனின் எழுத்துக்கள் எல்லாருக்கும் பிடிக்கிறது?
முழுதும் படிக்க..