Jun 29, 2010

Rope (ரோப்) - சிறந்த படம்

ஒரு கொலையை எந்தவித உள்நோக்கமும் (Motive) இல்லாமல், 'கொலை செய்ய வேண்டும்' என்ற ஒரு காரணத்திற்காகவே செய்ய முடியுமா?
ஒரு உயிரை பறிப்பதில்.., உயிரை உருவாக்குவதில் உள்ளதை போலவே அல்லது அதைவிட அதிகமாக அளவுக்கடங்கா கிளர்ச்சி/திருப்தி இருக்குமா?
கொலையை திறம்பட திட்டம் போட்டு செய்தவனுக்கு, அதை யாராவது 'கண்டு பிடித்துத்தான் பார்க்கட்டுமே' என்ற ஒரு ஆசை ஆழ்மனதில் இருக்குமா?


இப்படி தினுசான கேள்விகளையும் இன்னும் சில விஷயங்களையும் ஒரு வீடு, எட்டு பேர் மற்றும் ஒரு பெட்டி - இவற்றைக்கொண்டு அலசுகிறது 1948-இல் வெளிவந்த Rope படம். மொத்தமே ஒன்னேகால் மணி நேரம் தான் படம். ஆரம்பமே கொலைதான். அப்புறம் அதில் என்ன த்ரில்? படம் முழுக்க கொலையாளியின் மன நிலையில் நம்மையும் அந்த பதைப்பை அனுபவிக்க வைப்பதுதான் படத்தின் சிறப்பம்சம் (Mrs. Wilson அந்த பெட்டியை திறக்கப்போகும்போது நமக்கு வருமே ஒரு படப்பிடிப்பு ச்ச படபடப்பு..).


கதைச்சுறுக்கும் வேணுமா? கதையே சுருக்கம் தான் - ரெண்டு பேர் ஒருத்தனை திட்டம் போட்டு கொலை செய்து ஒரு பெட்டியில் போட்டு விடுகிறார்கள். எதற்கு? சும்மாதான்.. பண்ணிவிட்டு, கொல்லப்பட்டவனுக்கு சம்பந்தப்பட்ட ஆட்களை அழைத்து அந்த பெட்டி மீதே உணவுகளை அடுக்கி பார்ட்டி வைக்கிறார்கள். இவர்கள் கடைசியில் மாட்டுகிறார்களா? என்பதுதான் படம் (படம் இதை விட நறுக்குனு இருக்கும்).

கொலையாளி நம் 1 ப்ராண்டன் (ஸ்டூடன்ட் நம்பர் 1 மாதிரி சொல்ற?) படம் முழுக்க கொலைக்கான காரணம் என்று சொல்வது, நீட்ஷேவின் 'சூப்பர்மேன்' தத்துவம். அதாவது, மனித இனத்திலேயே 'மேலானவர்கள்' என்று உள்ளவர்களுக்கு சரி, தவறு என்ற வரையரை எல்லாம் கிடையாது.. அப்புறம், 'கீழானவர்கள்' உயிருடன் இருக்க தகுதி அற்றவர்கள் (ஹிட்லர் ஞாபகம் வரானா..?). மேலும் கொலை என்பது ஒரு கலை (ரைமிங்க் கவனிக்க), அதை சிலரால் தான் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்புபவன். கொலைக்கு தெரிந்தோ தெரியாமலோ இந்த தத்துவத்தை விளையாட்டாக இவர்களிடம் பள்ளி நாட்களில் பகிர்ந்து கொண்ட ஆசிரியர் ஒரு காரணம் ஆகிறார். அவரும் பார்ட்டிக்கு அழைக்கப்படுகிறார் (படிக்க.. பதிவின் மூன்றாவது வரி).

சரி.. உண்மையிலேயே, 'கொலை செய்ய வேண்டும்' என்ற ஒரு நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்பட்டதா அந்த கொலை? வேறு மோட்டிவ் இல்லையா? ஒரு வெங்காயமும் கெடையாது.. கொலை செய்யப்பட்டவன் மீது இருக்கும் ஆழ்மன வெறுப்பே கொலைக்கு காரணம் என்று மறைமுகமாக சொல்கிறார் இயக்குனர் (படிக்க.. பதிவின் முதல் வரி). கொலையுண்டவனின் காதலி, ப்ராண்டனின் முன்னாள் காதலி.. அவளை வைத்து சில இடங்களில் அந்த வெறுப்பை வெளிப்படையாக காட்டுகிறான் ப்ராண்டன்.


படத்தின் சிறப்பம்சங்கள் என்ன? ஒன்றா இரண்டா? பட்டியலே இருக்கிறது.. இங்கே சிலது மட்டும்..

பெரிய பெரிய ஷாட்கள் (மொத்தமே ஆறேழு ஷாட்ஸ் தான், ஒவ்வொன்றும் இடையில் கட்டே இல்லாமல்). ஒரே வீடு (அதான் ஏற்கனவே சொல்லிட்டியே).
சீன் ஒன்றொன்றும் மிக அற்புதமாக ஷூட் செய்யப்பட்டு இருக்கும். ஒரு சிலதை சொல்ல வேண்டும் என்றால்..
-எல்லாரும் சாப்பாடு முடித்து டேவிட் எங்கே என்று பேசிக்கொண்டு இருக்கும்போது, கேமிரா அவர்களை கவனிக்காமல், டேவிட் இருக்கும் பெட்டியை போகஸ் செய்து கொண்டு இருக்கும்.. படு டென்ஷனான சீன் அது..
-தைரியம்கரது பயம் இல்லாத மாதிரி நடிப்பது - ப்ராண்டனின் விரல்கள் நடுங்கும் அந்த ஷாம்பெயின் குடிக்கும் காட்சி..
-கொலையாளி நம் 2 அவன் மன நிலையை ப்ரதிபலிப்பதை போல் மெதுவாக, வேகமாக என்று பியானோ வாசிப்பது
-படம் முழுக்க பல குறியீடுகள் (சிறந்த இயக்குனர்களுக்கே உரிய குணாதிசியம் அல்லவா இது)..கொலை செய்வதின் திருப்தியை 'அதனுடன்' (படிக்க.. பதிவின் இரண்டாம் வரி) ஒப்பிட்டு வரும் ஆரம்ப காட்சிகள்.. உதா கொலையை முடித்தவுடன் இப்படி ஒரு வசனம் 'Let's stay this way for a minute'.. அதை தொடர்ந்து ப்ராண்டன் திருப்தியுடன் பிடிக்கும் சிகரட்.

கொலையுண்டவனின் தந்தையாக வரும் செட்ரிக்கின் நடிப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். பிரமாதப்படுத்தி இருப்பார். ஆசிரியராக வரும் (கதாநாயகன்?) James Stewart (Its a beautiful life, The rear window) வழக்கம் போல் அட்டகாசம் + அபாரம் .

அப்புறம், இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.. சரி, அந்த காலத்திலேயே இப்படி படங்களை எடுத்த ஹிட்ச்காக், இப்போது இருந்திருந்தால், இன்றைய தொழில் நுட்பத்தை வைத்து எப்படி மிரட்டி இருப்பார்? ஆனால், அவர் ஆவி இப்படி சொன்னாலும் சொல்லும் -
'போய்யா, எல்லா வேலையையும் கம்ப்யூட்டரே செஞ்சுட்டா அப்புறம் நான் எதுக்கு?'


குறிப்பு: கொஞ்ச நாட்களாக எனக்குள் தூங்கிக்கொண்டு இருந்த சினிமா மிருகம் திரும்பவும் முழித்துக்கொண்டது.. ஜெய்யின் சில பதிவுகளால்.. ஆகவே இனி அடிக்கடி சினிமா கட்டுரைகளை ரசிகர்கள் ரசித்து மகிழலாம் (ஹேய் யாரு அழுகின தக்காளி எடுக்கறது)..
முழுதும் படிக்க..

Jun 9, 2010

வெள்ளை நிறத்தில் ஒரு பூனை..

அது வீட்டின் சேமிப்பு அறை மற்றும் ஆடைகள் தொங்கவிடப்படும் அறை மற்றும் பூஜை அறை. தீர்ந்து போனால் புது சோப்பு எடுப்பது போன்ற 'காரிய நிமித்தம்', அங்கு எப்போதாவது போவது உண்டு. அன்று அப்படி தற்செயலாக செல்ல, க்ர்ர்ர்ர் என்று உறுமல் சத்தம். குனிந்து பார்த்தால், அங்கு வெள்ளை நிறத்தில் ஒரு பூனை. கீழே வைக்கப்பட்டு இருந்த பாத்திரங்களை அரணாகக்கொண்டு..

அவசரமாக வெளியே வந்து அம்மாவிடம் இதை சொல்ல.. நேற்றில் இருந்தே அது அங்கு இருப்பதாகவும், அதனுடன் இன்னும் ஒரு குட்டியும் இருப்பதாகவும் தகவலறிய முடிந்தது. புரிந்தது, அந்த உறுமலுக்கான காரணம்.

முதல் இரண்டு நாட்கள் தாய் எப்பொழுது வெளியே செல்கிறது? எங்கே சாப்பிடுகிறது? என்பதை அறிய முடியவில்லை. இரண்டு நாட்கள் எங்களின் நடவடிக்கைகளை பார்த்த தாய், 'சரி, இவர்களை நம்பலாம்' என்று ஒருவாறு தயங்கி எங்கள் கண் முன்னே வெளியே சென்றது. அடுத்து பாலை வைத்ததும், அப்படியே ஒட்டிக்கொண்டது. குட்டியை எங்கள் பொறுப்பில் விட்டு விட்டு போகும் அளவிற்கு அதற்கு தைரியம் வந்தது.. அது இல்லாத நேரத்தில் குட்டி அந்த பாத்திர அரணை விட்டு வெளியே வருவேனா, தரிசனம் தருவேனா என்றது. தாய் அருகில் இருக்கையில், வெளியே வந்தாலும், காலடி சத்தம் கேட்டதும் ஓட்டமாக ஓடி அதன் இடத்தில் பதுங்கியது..

(தாய் மீது தூங்கிக்கொண்டிருக்கும் குட்டி)

இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தது. இப்போது வேளா வேளைக்கு சாப்பாடு வந்து கேட்கும் அளவிற்கு தோழியாகி விட்டது தாய். பால் வைக்க வில்லை என்றால் மியாவ் மியாவ் என்று கத்தி கூப்பாடு போட்டு, மெதுவாக காலில் செல்லமாக உரசும் (அதற்கு மேல் சாப்பாடு வைக்காமல் இருக்க முடியாது). ஆனால் குட்டி இன்னமும் வெளியே வந்த பாடில்லை..

அடுத்த நாள்தான் அந்த 'திவ்விய' தரிசனம்.. தாய் பாதுகாப்பில் குட்டி, பாத்திர அரணை விட்டு வெளியே வந்தது.. கண் படாமல் இருக்கத்தான் வெளியே வராமல் இருந்திருக்கிறது குட்டி.. அத்தனை அழகு. அப்பப்பா அமைதியான குட்டி என்று நினைத்தது எங்கள் தவறுதான்.. வெளியே சமையலறைக்கு வந்த அது, தாய் அருகே இருக்கும் மிதப்பில், இங்கும் அங்கும் ஓடி, தாவி, குதித்து என்று என்ன ஒரு விளையாட்டு. ஏன் குட்டிகள் வளர்ந்து விடுகின்றன? அப்படியே இருக்கக்கூடாதா?

தாய் சோம்பலாக உட்கார்ந்து ஓரக்கண்ணால் இந்த சேட்டையை ஒரு நோட்டம். தாய் வாலை ஆட்டி, குட்டி அதை தவ்வி பிடிப்பது அவைகளுக்கு பிடித்தமான விளையாட்டு. இரையை பிடிக்க தாய் தரும் பயிற்சி அது என்பதை உணர வெகு நேரம் ஆகவில்லை. நாங்கள் அருகே தூக்கச்சென்றால் மட்டும் ஓடிப்போய் ஒளிந்து கொள்ளும் குட்டி. போக போக அதையும் ஒரு விளையாட்டாகவே செய்ய ஆரம்பித்தது.. கொஞ்ச நேரம் ஏதாவது பொருளை உருட்டி விளையாடும்.. சலிப்பு தட்ட ஆரம்பித்ததும் திடீரென்று நிறுத்தி விட்டு. எங்களை பார்த்து பயப்படுவது போல் ஓடிப்பதுங்கும் (நாங்கள் பாட்டுக்கு இருந்தாலும்).

அடுத்த நாள். வழக்கும் போல குட்டியை விட்டுவிட்டு இரை தேட வெளியே போன தாய்.. போனது போனதுதான்.. இரவை தாண்டியும் வரவில்லை. பாவமே உருவாக, வைக்கும் பாலையும் குடிக்காமல், அரணை விட்டு வராமல், சோகமாக தவம் இருந்தது குட்டி. தாய் மீது முதன்முதல் கோபம் வந்தது அப்போதுதான்..என்ன ஆனதோ? என்பதை விட எங்கு போய் தொலைந்த்தோ என்பதாகவே இருந்தது எண்ணம்.

அடுத்த நாள். காலை ஐந்து மணி அடித்ததும் கத்த தொடங்கி விட்டது பெரியது.. ஞாயிறு இப்படி எழுப்பி விடுகிறதே என்பதை விட, அது திரும்பி வந்த நிம்மதியில்.. கொஞ்சம் அதிகமாகவே பால் வைக்கப்பட்டது அன்று..

(தாயுடன் வலது ஓரத்தில், பவ்யமாக இருப்பது போல நடிக்கும் குட்டி)

இப்போது குட்டி எங்கள் படுக்கையறை வந்து விளையாட ஆரம்பித்து விட்டது.. அவ்வப்பொழுது பயந்து ஓடும் விளையாட்டும் இருக்கத்தான் செய்தது.. தாய் குட்டிக்கு தரும் பயிற்சிகளும்தான். குட்டி மிகவும் தடுமாறிய ஒரு பயிற்சி, ஜன்னல் மீது தாவி ஏறி, வெளியே செல்வதுதான். இது மட்டும் அதற்கு இயலாத ஒன்றாக, வயதுக்கு மீறியதாக இருந்தது.. அதற்கு படி போல் உதவ, ஒரு சிறு பெட்டி வைக்கப்பட்டது.. அதன் மீதே குட்டியால் ஏற முடியவில்லை.. தாயும் மிகுந்த பிரயத்தனப்பட்டு பார்க்கத்தான் செய்தது.. ஏன், கொஞ்ச காலம் விளையாடிக்கொண்டே இருக்கட்டுமே, இப்போது இதற்கு என்ன இவ்வளவு அவசரம் என்ற கேள்வியும் மனதில்..

அன்று இரவு என்ன ஆனதோ, ஜன்னல் மீது ஏற முடியாத குட்டியை அலேக்காக தூக்கிக்கொண்டு வெளியே சென்றது தாய்.. ஹ்ம்ம்ம் வெளியே ஏதோ பயிற்சி போல என்று நாங்களும் விட்டு விட்டோம்.. திடீர் என்று ஒரு சந்தேகம்.. உள் பக்கத்தில் பெட்டி உதவியுடன் சுலபமாக ஏறிய தாய், வெளி பக்கத்தில் இருந்து குட்டியை தூக்கிக்கொண்டு ஏற முடியுமா? இரண்டும் வரும் சுவடில்லை. கவலை அதிகமானது.. குட்டி  பாட்டுக்கு எந்த கவலையும் இல்லாமல் விளையாடிக்கொண்டு இருந்தது.. அதுக்கு கற்றுக்கொடுக்கிறேன் நன்மை செய்கிறேன் என்று, அதன் பால்யத்தை வெடுக்கென்று இவ்வளவு அவசரமாக பிடுங்க வேண்டியதன் அவசியம் என்ன?

அடுத்த நாள்.. நாங்கள் எழும்போது, தாய் கத்திக்கொண்டு இருந்தது.. அவசரமாக அவர்களின் இடத்தில் போய் தேடினால், குட்டியை காணவில்லை. கேள்வியுடன் நாங்கள் தாயை பார்த்தோம்.. இல்லை.. முறைத்தோம். அது பதிலுக்கு எங்களை வந்து உராசியது.. கத்தியது.. அதற்கு பின் அது செய்த செயல், சாகும் வரை மறக்காது..

'இதற்கு மேல் விளையாடாதீர்கள்.. மறைத்து வைத்திருக்கும் குட்டியை தந்து விடுங்கள்' என்று எங்களை கெஞ்சல் பார்வை பார்த்துக்கொண்டே, அறை அறையாக சென்று குட்டியை தேடியது.. தேடித்தேடி அலுத்து, கடைசியில் வெளியில் கிளம்பிவிட்டது.. எப்படியும் குட்டியை கண்டுபிடித்துக்கொண்டு வந்து விடும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தோம்..

இரண்டுமே கடைசி வரை திரும்பி வரவில்லை..
முழுதும் படிக்க..

Jun 4, 2010

பரிணாமம்

மூன்றாவது கையில் விசிறி போன்ற அமைப்புடன் முதலில் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்தது.,
தமிழகத்தில்..குறிப்பு: இந்த 'கதை' புரியாதவர்கள் என்னுடைய முந்தைய பதிவான இந்த புலம்பலை படித்தால் புரியும்..
முழுதும் படிக்க..

Jun 2, 2010

பவர் கட்

எனக்கு வேற எதுவும் வருத்தம் இல்லை.. அது எப்படி நான் தூங்கும் நேரம் ஈ.பி (EB) ஆட்களுக்கு இவ்வளவு சரியாக தெரிகிறது? நான் தூங்கும் நேரத்தை மிகத்துல்லியமாக பாதியாக பிரித்து, அந்த புள்ளியில் மின்சாரம் நிறுத்தப்படுவதை சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறேன். அது பகலாக இருந்தாலும் சரி.. உதாரணத்திற்கு, 10 PM - 4 AM தூங்குகிறேன் என்று வைத்து கொள்ளுங்கள் (அட சும்மா ஒரு பேச்சுக்கு). சரியாக 1 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்படும். மதியமாக இருந்தாலும் இதே டெக்னிக் தான்.

ஒரு நாள், இரு நாள் கதை அல்ல இது. அக்னி வெயில் (?) ஆரம்பித்ததில் இருந்து.. இப்படியே தொடர்ந்து.. அது எப்படி அய்யா சரியாக 1 மணிக்கு தினமும் நிறுத்துகிறீர்கள்? அலாரம் வைத்து எழுந்து, பவரை நிறுத்திவிட்டு, பாத்ரூம் போய் விட்டு திருப்பி தூங்கிவிடுவீர்களா?இருக்கும் வெப்பத்தில்.. மின்சாரமும் மின்விசிறியும் டப் என்று நிற்கும் அந்த நொடியில்.. உலகமே இருண்டு.. முதலில் மென்மையாக ஆரம்பிக்கும் கசகசப்பு, நேரம் ஆக ஆக (ரொம்ப நேரமெல்லாம் இல்லை.. ஓரிரு நிமிடங்கள்) வெப்பம் வெப்பன் போல தாக்க.. வியர்வை சுரப்பிகள் திடும் என்று விழித்துக்கொண்டு கடும் வேலை செய்ய.. கையா முயா என்று சொரிந்து கொள்ள வேண்டும் என்று வரும் இச்சையை (சுய அரிப்பு) கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி முடிப்பதற்குள் மண்டை மூஞ்சி எல்லாம் நனைந்து போயிருக்கும். அதற்கு மேல் படுக்க-தடுக்க முடியாது (ஒரு தடவை பாக்கலாம் ஒரு கை என்று முரண்டு பிடித்து படுத்து தான் பார்த்தேன்.. தலையணை நம்பர் 1 போனது போல நனைந்து வெயிலில் காய வைத்ததுதான் மிச்சம்)..

எழுந்து உட்கார்ந்ததும், அழுகை அழுகையாக வரும். இந்த நேரம் பார்த்து பக்கத்தில் நியூஸ் பேப்பர், புத்தகம் எதுவும் இருக்காது.. அடிச்சி பிடிச்சி தேடி, விசிறு விசிறென்று விசர் பிடித்தது போல விசிறி, துண்டை வைத்து முகத்தை (கண்ணீரையும்) துடைத்துக்கொண்டு உட்காரும் அந்த நேரத்தில்...

கேயின்ன்ன் வ்ர்ர்ரர்ர் சார்ர்ர்ரர்ர் என்று கொசுக்கள் 'பெண் சிங்கமாக' மாறி காதருகில் பறக்க, இதற்கு முன் இருந்த நிலைமையே மேல் என்று ஜென் தனமாக தத்துவம் உணர வைத்து, என்ன விரட்டினாலும் போகாமல் குடையும். இங்குதான் யாரையாவது பிடித்து அடிக்கலாமா என்று தோன்றும்.. பின்பு நம்மையே அடித்து கொள்ளலாம் என்று (கவுண்டமணி சாட்டை வைத்து அடித்து கொள்வது போல).. வியர்வை ஊத்துவதும் நின்ற பாடில்லை, கொசு பாடுவதும் நிற்கவில்லை. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, கடன் வாங்கியாவது நாளைக்கு இன்வர்டர் அல்லது ஜெனெரேட்டர் வாங்கி வைத்துவிட வேண்டும் என்று தோன்றுவது இப்போதுதான் (தினமும் இதே இடத்தில் தான் இந்த எண்ணம் வரும்)..

இந்த நேரத்தில், சுவாரஸ்யமான ஒரு விளையாட்டு விளையாடுவார் கரண்டுகாரர்.. 'கம்கு' என்று ஒரு செகண்ட் மின்சாரத்தை விட்டு நிறுத்துவார். அந்த ஒரு நொடிப்பொழுதில் நம் கண்ணில் வந்து மறையும் நம்பிக்கை - கடைசி பந்தில் சிக்சர் அடித்து ஜெயிக்க வேண்டிய கட்டத்தில், பந்து உயர உயர பறந்து.. கடைசியில் காட்ச் ஆவதற்கு சமம்.. அல்லது அதனினும் கொடூரம்..


எல்லா உணர்ச்சிகளும் ஓய்ந்து கிடக்கும் போது, கடவுளுக்கு என் மேல் இரக்கமே
 இல்லையா என்று சரணாகதி அடைந்து கடைசியாக ஒரு ட்ரை.. அதற்கும் எந்த அசைவும் இருக்காது. செத்த பிணம் (?) போல உட்கார்ந்திருக்கும் நேரத்தில் (கொசுவின் சங்கீதம் கூட பழக ஆரம்பிக்கும் வேளை), பொழச்சு போங்க என்று விடப்படும் மின்சாரம்.. மகிழ்ச்சியடையக்கூட தெம்பில்லாமல் தூங்கி விடுகிறேன்..

*****

தமிழ்நாட்டு வெளியூர்கார நண்பன் ஒருவன் வடிவேலு பாணியில் சொல்கிறான்.,

'போங்க தம்பி.. என்னமோ ரெண்டு மணி நேரம் கரண்ட் போறதுக்கு பெருசா பீத்தறீங்க.. அங்கல்லாம் ரெண்டு நாள் ஆனாலும் கரண்டு வராது.. எங்கிட்ட இருந்து துளி சத்தம் வராது, எங்கயும் ஓடுனதும் கிடையாது..' என்று சொல்லி விட்டு, எங்கோ பார்த்து கை அசைத்து,

'ஹலோ, நேத்து கரண்டு வரும்னு சொன்னீங்க வரவே இல்ல?' என்ற படியே நகர்கிறான்..

******

டிஸ்கி: மூன்று நாட்கள் வெளியூர் போக வேண்டி இருந்தது.. போய் விட்டு திரும்பியதும் அம்மா சொன்னது 'டேய், இந்த மூணு நாளும் கரண்டு போகவே இல்ல'- பிரசன்னா (கொத்து பரோட்டா)
முழுதும் படிக்க..