Dec 6, 2010

பாட்டின் பொழுதுகள்


ஒரு பாடல். இரு வேறு சூழல்கள். இரண்டு விதமான உணர்ச்சிகளை தருகிறதே? அதை விட, சூழலை பொறுத்து ஒரு பாடல் பிடித்தோ பிடிக்காமலோ கூட போய் விடுகிறது. சின்ன வயதில் (இப்போவும் தான் யூத், நான் சொல்வது குழந்தையில்..), 'சுந்தரி நீயும்.. சுந்தரன் ஞானும்' பாடல், நாங்கள் இருந்த 'லைன்' வீட்டில், பக்கத்து வீட்டின் ஒரு சிகப்பு கலர் டேப் ரெக்கார்டரில் தினம் சாயந்திரம் ஓடும். அந்த வேளை தான் பொடிசுகளுக்கு வீட்டு பாடம் எழுதி, படிக்கும் நேரம். அடுத்தநாள் வகுப்பில் என்ன நடக்குமோ, டெஸ்ட் வைப்பார்களா என்று ஒரே பீதியான பொழுதுகள். துரதிர்ஷ்டவசமாக, அந்த பீதி, சுந்தரி நீயும் பாடலில் வந்து ஒட்டிக்கொண்டது. இன்று அந்த பாடலை கேட்டாலும், இனம் புரியாத பீதி, கருமை என்று ஒரு மாதிரிதான் இருக்கு.
முழுதும் படிக்க..

Dec 4, 2010

நான் எப்படிப்பட்டவன் (ஐம்பதாவது பதிவு)

திக்கி முக்கி ஐம்பது பதிவு வந்தாச்சு (எனக்கும் ஆசைதான் மாதத்திற்கு 15 பதிவு போடணும்னு.. ஹ்ம்ம் என்ன செய்ய?). ஐம்பதாவதா நம்மள பத்தியே எழுதலாம்னு யோசிச்சப்ப, அன்னு அக்கா பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன் எழுத அழைச்சாங்க. நல்லதா போச்சுன்னு, இதோ..

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
Prasanna (பிரசன்னா)

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
உண்மை பெயர்தான். என் பெயரில் ரொம்ப பேர் எழுதவில்லை என்று நினைக்கிறேன். அதனால்..

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
நான் 2008 இல் ஆங்கில வலைப்பூவை தொடங்கினேன் (கொத்து பரோட்டா மாதிரி இல்லை, அதில் நான் பெரிய ஆளாக்கும். போய் பாருங்கள் தெரியும்). அப்போ தமிழில் வலைப்பூக்கள் இருப்பது தெரியாது. எப்படியோ ஏதோ ஒரு லிங்க் கிடைக்க, அதன் மூலம் வினவு பக்கம் வந்து சேர்ந்தேன். அந்த நடை அட்டகாசமாக இருந்தது. அப்புறம் பாலோயர்ஸ் மூலமாக மற்ற வலைப்பூக்களையும் பார்க்க முடிந்து, சென்ற ஆண்டு இறுதியில் (அடடே ஒரு ஆண்டு முடிந்து விட்டது) கொத்து பரோட்டா ஆரம்பித்தேன். ஏன் இப்படி ஒரு பெயர் என்று தனி பதிவு போடுகிறேன் :)

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
கொஞ்சம் படித்தேன். நிறைய ஓட்டும், பின்னூட்டமும் போட்டேன். திரட்டிகளில் இணைத்தேன். வந்த புதிதில் யாரும் வரமாற்றாங்களே என்று நிறைய புலம்பினதுண்டு

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
அவ்வபோது பகிர்வதுண்டு. நான் அவமானப்பட்டதை 'நண்பன்' பட்டதாகவும், நண்பன் 'காமெடி' பண்ணியதை நான் பண்ணியதாகவும் மாற்றி எழுதிக்கொள்வேன் (அத்தகைய படைப்பு சுதந்திரம் எனக்கு உண்டு ஹீ ஹீ).

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
போழுபோக்குக்காக எழுத ஆரம்பித்து, இப்போ என் பொழுதெல்லாம் போகிறது. ஆமா இதுல துட்டு வருமா ;)

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இரண்டு. ஒண்ணு இது, இன்னொன்னு ஆங்கில வலைப்பூ. என் தமிழ் பதிவுகளை (!)மொழிமாற்றம் (!!) செய்து வெளியிட ஆசை. மொழிபெயர்ப்பு எவ்வளவு கடினம் என்பதை இதில் தெரிந்து கொண்டேன். அது வெறுமனே வரிக்கு வரி மாற்றுவதல்ல. திரும்பி முழு கான்செப்டையும் யோசித்து எழுத வேண்டும்!

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.
நான் கொஞ்சம் சாப்ட்டான ஆளா? அதனால அடுத்தவங்கள போட்டு மோசமா திட்றவங்க, சண்டை போடறவங்க எல்லாரையும் பாத்தா கோபம் வரும். ஆனா அது நண்பர்கள் மீது கோபம் வருவது போன்றது தான். என் எதிரி கூட நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன் (கேக்குது, உச்சு கொட்றது. பேசிட்டு இருக்கேன்ல? சைலன்ஸ்). பொறாமை, நல்ல எழுத்துக்களை பார்க்கும்போதெல்லாம்..

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.
முதல் பின்னூட்டம் கடைத்தெரு அவர்கள் போட்டது எனது மூன்றாவது பதிவில். பயங்கர ஹாப்பி பார்த்துவிட்டு. முதலில் தொடர்பு கொண்டு பேசியது என்றால் அண்ணன் ரசிகன் மகேஷ்தான் (அவருக்குதான் என் நம்பர் தெரியும், அதுனால.. இல்லனா நெறைய பேரு போன் பண்ணி இருப்பாங்க).  உலகின் கடைசி மனிதன் என்ற என் அறி-புனை கதையை படித்துவிட்டு ரொம்ப சிறப்பாக இருப்பதாகவும், மேலும் நிறைய எழுத வேண்டும் என்றும் சொன்னார். நம்பவே முடியவில்லை :)

10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
பன்னிரெண்டாம் வகுப்பில் நாந்தான் ஸ்கூல் பர்ஸ்ட் (சரியான பெருமை பீத்தகளையங்கள் என்று திட்டக்கூடாது. என் வாழ்க்கைல பெருமையா சொல்லிக்கற மாதிரி யோசிச்சு யோசிச்சு இது ஒண்ணு தான் தேறுச்சு ஹீ ஹீ)முழுதும் படிக்க..

Nov 29, 2010

ஒரு என்சிசி மாணவனின் கதை

ஒழுங்கு, ஒழுங்கு. இது தான் தேசிய மாணவர் படை என்னும் என்சிசி (NCC). எல்லா பயல்களையும் போலவே எனக்கும் சிறுவயது முதலே ராணுவம், துப்பாக்கி, camouflage உடை, பச்சை ஜீப், தொப்பி (இது முக்கியம்) இதுங்க மீது ஒரு ஈர்ப்பு. முதல் நாளே கல்லூரியில் பெயர் கொடுத்து ஆர்வத்துடன் சேர்ந்தாயிற்று ('நேர்முகத்தில் இதுக்கெல்லாம் வெயிட் அதிகம்').

கல்லூரியின் அந்த முதல் வார சனிக்கிழமை 'துள்ளுவதோ இளமை' புகழ் செல்வராகவன் எடுத்த காதல் கொண்டேன் படத்திற்கு போயிருக்கலாம். போகவில்லை. திடும் திடும் என்று எல்லா விடுதி அறைகளில் இருந்தும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டு விடுதி முன் வரிசையாக நிற்க வைக்கப்படுகின்றனர். ஒரு 45 வயது சொல்லத்தக்க கண்ணாடி போட்டவர் முன்னாடி நின்று கொண்டு 'நீங்கள் எல்லாரும் இன்று முதல் என்சிசி மாணவர்கள்.. என்ன'? என்று கர்ஜிக்கிறார். நாங்கள் எங்களுக்குள் சாதக பாதகங்களை விவாதிக்கிறோம். சுற்றி நிற்கும் சீனியர்கள் ஸ்தம்பிக்கிறார்கள். ஏன்?
முழுதும் படிக்க..

Nov 26, 2010

நந்தலாலா - நாவலான கவிதை புத்தகம்

ரொம்ப நாள் கழித்து முதல் நாளே ஒரு திரைப்படத்தை பார்த்தேன். முதல் முறை சுடச்சுட படப்பார்வையும் (இதை விமர்சனம்னு சொல்ல முடியுமா தெரியலை). மிஷ்கின் என்ற பெயர் மீது இருக்கும் ஒரு ஈர்ப்பே காரணம்.

15-20 சிறுகதைகள் கொண்ட ஒரு தொகுதியினை படித்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது இப்படம் (கவிதையை ரசிப்பவர்களுக்கு கவிதைத்தொகுதி). சிறுவயதில் தொலைத்த தன் தாயை தேடிப்போதல் என்ற ஒற்றை இலக்கில், இச்சிறுகதை தொகுதி நாவலாக உருப்பெறுகிறது!


மனநலம் பாதிக்கப்பட்ட மிஷ்கின் மற்றும் ஒரு சிறுவன் தங்கள் தாயை தேடி போகும் பயணமே படம். எல்லா பயணத் திரைப்படங்களும் போலவே, இதிலும் பயணத்தின் மூலமாக வாழ்க்கையை, அதன் சாராம்சத்தை சொல்கிறார்கள். வழியில் சேட்டை செய்கிறார்கள். அடி வாங்குகிறார்கள். தாய்களை பார்க்கிறார்கள். பலருக்கு தாய் ஆகிறார்கள்.

நாயகர்கள் இருவரையும் எப்படிப்பட்டவர்கள் என்று முதலில் சொல்லி விடுகிறார்கள். அதனால் ஒவ்வொரு சிறுகதையிலும், கணேஷ், வசந்த்தை போல (போலதான். அவர்களே அல்ல) அவர்கள் நமக்கு நன்கு தெரிந்தவர்களே. புதிதாக வரும் பாத்திரங்களை கொண்டு கதைகள் சொல்லப்படுகிறது. நாயகர்களும் தங்கள் இலக்கை நோக்கி நகர்கிறார்கள்!

முதலில் படத்தின் சிறப்பு என்று சொல்ல வேண்டியது காட்சி அமைப்புகள். எல்லாமே புதுசு (மிஷ்கினின் ட்ரேட்மார்க் வைட் ஆங்கிள் மற்றும் கால்களை மட்டும் காட்டும் காமிரா). டயலாக்குகள் ரொம்ப குறைவு, உச்ச காட்சிகளில் கூட. எல்லா டயலாக்குகளையும் காமிராவே பேசுகிறது. எப்படி ஒரு காமெடியன் டயலாக் சொல்லி முடித்ததும் சிரிப்போமா, அப்படி ஒரு காமிரா அசைவிற்கு பிறகு சிரிக்கிறோம்! அழுகிறோம்! அதிர்கிறோம்! இதுவே படத்தை மிக மிக வித்தியாசமாக காட்டுகிறது. அதே போல் வசனம் பேசாமல் செயல்களின் மூலம் ரியாக்ஷன்கள் காட்டுவதும் (மிஷ்கின் ஒரு கயிறால் கட்டப்பட்ட கடிக்க வரும் நாயை போல, மெண்டல் என்று கூறிய சிறுவனை நோக்கி பாயும் காட்சி). படம் முழுக்க குறியீடுகள். அனைத்தும் புரிந்துவிடவில்லை. அதனால் திரும்ப பார்த்தால் வேறு அர்த்தங்கள் கிடைக்ககூடும்.

ஒளிப்பதிவு கொள்ளை அழகு (அந்த மஞ்சள் சலித்த மாலை வேளை!). இசை 'வழக்கம் போல' அருமை! பாடல்களை விட பின்னணி இசை அபாரம். நடிப்பு ஒரு சில இடங்களைத்தவிர அருமை. ஓவென அழும் காட்சிகளை தவித்து இருக்கலாம், காட்சிக்கவிதைகள் படைக்கும் மிஷ்கினிக்கு இது ஒன்று பெரிய விஷயம் இல்லை. நான் இன்னும் கிகுஜிரோ பார்க்கவில்லை. ஆனால் அதை அப்படியே அடிக்கும் அளவிற்கு மிஷ்கின் சுய சிந்தனை இல்லாத ஆள் இல்லை என்று நினைக்கிறேன்.

சிறுகதைகளில், ஒரு சில கதைகள் புரியாது. அதுபோல ஒரு சில காட்சிகள் தோய்வாக செல்லுவது போல தோன்றியது, அது எனக்கு புரியாததால். எனக்கு (நன்றாக இருக்கும்) மெதுவாக போகும் படங்கள் பிடிக்கும், அதனால் தடால் புடால் படங்கள் விரும்புகிறவர்கள் தவிர்க்கவும். மற்றபடி புதுமையான அனுபவம் வேண்டுபவர்கள் நிச்சயம் பார்க்கலாம்! 
முழுதும் படிக்க..

Nov 25, 2010

பட்டாம்பூச்சி அதிர்வு

ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார் இன்று மதியம்.

நேற்று, தனது வீட்டில் வந்து ஒன்றுக்கு இருந்த ஒரு கொழுத்த நாயை ஒரு கொழுத்த கனவான் கொழுத்த கல்லால் அடிக்க, அது வலி மிகுந்து கத்திக்கொண்டு அதன் முதலாளி சிறுவனிடம் ஓட, அவன் 'அப்சட்' ஆகி வீட்டு (விலை உயர்ந்த) பொருள் ஒன்றை உடைத்தான்.

பதிலுக்கு 'அப்சட்' ஆன சிறுவனின் அம்மா, கரண்டி வளையும் அளவுக்கு அவனை அடித்து விட்டு, அவன் சேட்டையை அடக்க வழி தெரியாமல் உட்கார்ந்து அழுதாள். அந்த நேரம் பார்த்து, வெளியில் போயிட்டு வந்த அவள் கணவன் வழக்கம் போல 'என்னடி இன்னும் டீ போடலியா?' என்று கத்த, ஒரே களேபரமாகி இரவு முழுதும் யாரும் தூங்கவில்லை..

அடுத்த நாள், அதாவது இன்று காலை, அந்த வங்கி மேலாளர் கணவன் சாப்பிடாமல் கொள்ளாமல் கோபமாக தன் வேலைக்கு கிளம்பினார். விவசாயக்கடன் ரத்து/புதுக்கடன் வழங்குதல் என்று பரிசீலனைக்கு வந்த அத்தனை கோப்புகளையும் வேகுவேகென்று நிராகரித்தார்.

ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார் இன்று மதியம்.
இதை ஆங்கிலத்தில் படிக்க...
முழுதும் படிக்க..

Nov 20, 2010

ட்விட்டர் மொழிகள்-2

எனக்கு மதிய நேரத்தில் உறங்கவே பிடிக்காது.. அதனால், இரவு தூங்கி மதியத்திற்கு முன்னமே எழுந்து விடுவேன்..

                                                                              ############
எனக்கு தெரிந்து காதலர்களுக்கு தான் முதலில் திருமணம் நடக்கிறது.. வேறு யாருடனோ..

                                                                              ############


பதிவர்கள் எல்லாரும் இந்து வெறியர்கள். எல்லார் பக்கங்களிலும் RSS-க்கு 
லிங்க் கொடுத்திருக்காங்க.

                                                                              ############
ஹார்ட் டிஸ்கு சைசும், வாங்கும் சம்பளமும், ஒண்ணு.. எவ்வளவு இருந்தாலும் பத்தாது :)
                                                                             ############
நண்பர்கள் சொல்வதுண்டு.'நல்லா சம்பாரிச்சிட்டு,கொஞ்சம் வயசான பெறகு (சொந்த) கிராமத்துல போய் செட்டில் ஆகிடனும்'#isitpossible
                                                                             ############
25ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்கினால் ஒரு iMandu பாய்ண்டு. இப்படி 500 பாய்ண்டுகள் சேர்த்தால் ஒரு கைக்குட்டை
  
                                                                            ############
கூலிங்க்ளாஸ் போட்டா மாதிரி என்னிடம் புகைப்படம் இல்லை.. இப்போ எப்படி ப்ரோபைல் போட்டோ வைக்க?

  
                                                                            ############
வெயில் காலங்களில் விடுமுறைகளே இல்லாததும், Oct-Jan நேரத்தில் அதிக விடுமுறைகள் இருப்பதும் தற்செயலாக நிகழ்ந்ததா? #Diwali
  
  
                                                                          ############
என்னை படுக்கையிலேயே ’நம்பர் ஒன்’ போக வைக்க எப்படியெல்லாம் பிரயத்தனப்படுகிறது கனவு #டாங்க் புல் #Inception
                                                                             ############
ஆங்கிலத்தில் இதை படிக்க...

முழுதும் படிக்க..

Nov 12, 2010

காட்சி மாறுதல் (திடுக்)

நிலவற்ற தனி இரவில்,
நெடுந்தெருவில்
தயங்கி நடக்க
திடீரென்று எங்கிருந்தோ தோன்றி,
பயங்கர சத்தத்துடன்,
எதையோ
விளையாடும் குழந்தைகள்..

*******************

அரட்டை
சிரிப்பு
குழந்தை அழுகை
கும்மாளம்
நிசப்தம்-அலறல்
விபத்து

(விபத்தை போன்ற திடுக் காட்சி மாற்றம் மனிதனுக்கு வேறு இல்லை)

*******************

நூறு
ஆயிரம்
லட்சம்
வைரஸ்

*******************

நொடி தாமதித்தாலும்
சளார் சளார் ஹாரன்கள்
வசைகள்
இன்று அதே தெருவில்
கிரிக்கெட்
பந்த்

*******************

வியர்வை
கொடுத்த
சாவுக் கனவு
முழுதும் படிக்க..

Nov 1, 2010

The Way Home 2002 - வீடு திரும்பல்

ஒரு சூரிய சாப்பாட்டு வேளையில், வழியில் உட்கார்ந்து ஒரு பாட்டி கையேந்திக்கொண்டு இருந்தார். ரொம்ப வருந்தாமல், கண்களாலேயே.. சுலபமாக அவரை பார்க்காமல் கடந்து விட முடியும். ஆனால் நான் பார்த்துவிட்டேன்., பணம் கொடுப்போமா என்றும் எவ்வளவு கொடுக்கலாம் என்றும் யோசித்து முடிக்குமுன் அந்த இடத்தை கடந்தாயிற்று. சரி வரும் போது தரலாம் என்று முடிவு செய்து, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, திரும்பும்போது ஞாபகமாக அவரை தேடிக்கொண்டுதான் வந்தேன். அவர் அங்கே இல்லை. சரி, எனக்கு சமீபத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கும், இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம்?
முழுதும் படிக்க..

Oct 30, 2010

ஆனந்த விகடனில் என் ட்வீட்..!

வாரா வாரம் ஆனந்த விகடன் வாங்கியதுமே, வலைபாயுதேவில் நமக்கு தெரிந்தவர்கள் யார் யாரின் ட்வீட்கள் வந்துள்ளன என்று பார்ப்பது வழக்கம். இந்த தடவை, அந்த பக்கத்தில் இருந்த தோனி சம்சாரம் சகிதம் இருந்த படத்தை பார்த்து கடந்து விட்டேன். திரும்ப புரட்டும் போது அட இதை எப்படி விட்டோம் என்று வந்த ட்வீட்களை படித்துக்கொண்டு இருக்க, கனவு போல என் பெயரும் இருந்தது.. prasannag6@twitter.co (m விட்டு போய் இருந்தது. 'எம்', 'என்' என்று சுயநலத்தை கை விட்டால் நீதான் ராஜா (கோ) என்று சொல்கிறார்களோ?)

வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அடுத்து சில நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தெரிவித்ததும், 'நெருங்கிய நண்பன்' (நானும் ஜவுளி கடைல சேர்ந்த நாள்ல இருந்து பாக்கறேன்..) அழைத்து..
'டேய் என்ன டா எழுதின?'
'அது வந்து சும்மா தாண்டா.. எப்டி போட்டாங்கன்னு தெரில'
'சரி, என்னனு சொல்லு'
'அது சொன்னா அவ்ளோ நல்லா இருக்காதே?'
'*&^ இப்போ சொல்றியா இல்லையா?'
சொன்னேன்..
'என்ன டா? இதையா போட்டாங்க?'
'..... எப்டியோ போட்டுட்டாங்க விடேன்'
'யாருடா இத செலக்ட் செஞ்சது?'
'டேய் சரியா கேக்கல, அப்புறம் கால் பண்றேன்'

****

அவன் கெடக்கான் அந்த ட்வீட் இதுதான்.. மற்ற ட்வீட்களை படிக்க http://twitter.com/prasannag6 பார்க்கவும். அந்த 120 ஆம் பக்கத்தை இங்கு பார்க்கலாம் http://www.vikatan.com/av/2010/nov/03112010/p120a.jpg
(2010 Nov 03 தேதியிட்ட இதழ்)

"ஒரு வேளை கடவுள் இருந்தால்? என்று சந்தேகம் நாத்திகனுக்கு.. ஒரு வேளை வேற்று மதக்கடவுள் இருந்தால்? என்று சந்தேகம் ஆத்திகனுக்கு."

***
(updated on Jan 2011)
விகடனில் வெளிவந்த மற்றொரு ட்வீட்:

"காரில் முன்னிருக்கையில் இருந்துகொண்டு பாடல்கள் மாற்றுபவர் நமக்கு நேர் எதிரான ரசனையையே கொண்டிருப்பார்"


முழுதும் படிக்க..

Oct 18, 2010

Le Grand Voyage (2004) - மகத்தான பயணம்

பயணங்களின் கதை சொல்லும் படங்கள் எப்போதுமே எனக்கு மிக பிடித்தவை..  அதிகம் பயணப்படாதவன் என்பதாலா என்று தெரியவில்லை (அது 'ண', ண் அல்ல) .. அந்த வகையில் எழுத்தாளர் எஸ்.ராவின் வலைத்தளத்தில் தெரிந்துகொண்டு பார்த்த இப்படமும், இதுவரை பார்த்ததிலேயே சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது..


ஒரு சிறப்பான படம் எப்போதும் பல தளங்களில் இயங்கும். அதை நிரூபிக்கும் வகையில் இதுவும் தந்தை-மகன் உறவு, பயணத்தின் மகத்துவம், வாழ்க்கையின் அர்த்தம் என்று பல விஷயங்களை போகிற போக்கில் சொல்கிறது.

முழுதும் படிக்க..

Jul 26, 2010

ஆழ்மனம் குட்டிக்கதை - ஒரு அலசல்

சில நண்பர்கள் என்னுடைய முந்தைய பதிவான இந்த குட்டிகதை புரியவில்லை என்று சொன்னதால (சின்ன கதை தான்.. படிக்கவும்), கதையை பற்றி ஒரு சின்ன விளக்கம் (இலக்கியவாதிகள் பொதுவாக இதை செய்யக்கூடாது.. திட்டுவார்கள்.. நான் ’அது’வாக ஆவதற்கு இன்னும் காலம் இருப்பதால் சொல்கிறேன்).
கதை படித்து விட்டீர்களா? சரி இப்போ விளக்கம்.


அவரவர் நம்பிக்கை அவரவற்கு என்றாலும், ஒரு மூட நம்பிக்கையினால் அதை நம்பாதவரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுவர் என்பதே கதையின் கரு.


முதல் விவாதம் நடந்தது சில வருடங்கள் முன், தூர்தர்ஷன் காலம் என்பதை விளக்க ஒலியும் ஒளியும்.. 
இரண்டாவது பத்தி - நிகழ்காலம் என்பதை காட்ட, சுரேஷுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையேயான அந்த வெளிப்படையான பேச்சு, 
மூன்றாவது பத்தியில் காலம் வெளிப்படையாக சொல்லப்படுகிறது.சுரேஷ், தான் மணக்க விறும்பிய (இரண்டாவது பத்தியில் வரும்) பெண்ணை, எப்படி தனக்கு சம்பந்தம் இல்லாத நம்பிக்கையால் இழக்கிறான் என்பது இரண்டாவது பத்தியில் சொல்லப்படுகிறது.

சுரேஷ் சிறுவனாக இதைப்பற்றி சுதர்சனிடம் விவாதித்ததை மறந்து விட்டான். ஆனால் அவனுடைய ஆழ்மனம் மறக்கவில்லை.. 'பார் அதை நம்பாத நான் எப்படி பாதிக்கப்படுகிறேன்' என்பதை சுதர்சனிடம் சண்டை போட்டு (கனவில்) காட்ட முற்படுகிறது.. அவ்வளவுதான். விளக்கம் முடிந்து விட்டது. கதையில் இன்னும் சில விஷயங்களை மறைத்து வைத்துள்ளேன்.. திருப்பி படித்து கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு: பதிவு போடுவதற்கு விஷயமே கிடைக்கவில்லை என்பதை இப்பதிவின் மூலம் சூசகமாக கூறியுள்ளேன்.. அதையும் கவனித்துக் கொள்ளவும்..
முழுதும் படிக்க..

Jul 23, 2010

ஆழ்மனம்'உனக்கு நம்பிக்கை இல்லனா விட்ரு, எதுக்கு அடுத்தவங்க நம்பிக்கைல தலையிடற..?' 
'சுதர்சன்.. இது மூட நம்பிக்கை. நம்பாதனு சொல்றேன்.. உன் நல்லதுக்கு தான சொல்றேன் ?'
'அதெல்லாம் எங்களுக்கு தெரியும்.. உன் கிட்ட வந்து இத நம்பு, அத நம்பாதனு எதாச்சும் சொல்றோமா? உன் வழி உனக்கு, என் வழி எனக்கு.. நான் ஜாதகம், ஜோசியம் இதெல்லாம் நம்பறேன், அவ்வளவுதான்'
அவன் சொல்வதும் சரியாகவே தோன்றியது.. 'ஹ்ம்ம் சரி.. எப்படியோ போ' - என்று சொல்லிவிட்டு ஒளியும் ஒலியும் பார்க்க கெளம்பினான்..பத்தாம் வகுப்பு, அது ஒன்றைத்தான் பார்க்க விடுவார்கள் விடுதியில்..
**
'உன்னை ரொம்ப பிடிக்கும், இல்லன்னு சொல்லல. ஆனா முடியாது சுரேஷ். வேற எதுனாலும் ஒத்துப்பாங்க. ஜாதகத்துல மட்டும் சமரசமே கிடையாது. அதுவும் செவ்வாய் தோஷம். ஒத்துக்க மாட்டாங்க'
'நீ நம்பறியா இதை?'
'நானும் நம்பறேன்'
'ஓகே.. Thanks for being so open, நாளைக்கு பாப்போம்'
'பாப்போம்.. சாரி..'
**
அடுத்த நாள் காலை..
எப்போதோ தன்னுடன் படித்த.. அவன் பேர் என்ன? ஆ சுதர்சன்.. அவனுடன் தெருவில் உருண்டு சண்டை போடுவது போல் சம்பந்தம் இல்லாமல் கனவு வந்தது குறித்து ஆச்சர்யப்பட்டான் சுரேஷ்..

முழுதும் படிக்க..

Jul 21, 2010

நண்பர்களை குத்த வேண்டும் என்று தோன்றும் தருணங்கள்..

மனைவியும் இல்லாமல் தோழியும் இல்லாமல் அல்லாடுபவர்கள்,  இரண்டும் இருக்கும் நண்பர்களை (அட தனித்தனியாதான்... ஐயோ வேற வேற... அட எப்படி சொன்னாலும் தப்பா வருதே?) ஓங்கி குத்த வேண்டும் என்று தோன்றும் தருணங்கள்..
.
சார்ஜ் இல்ல என்று சொல்லி, 'அஞ்சு நிமிஷம் உன் மொபைல் குடு மச்சி' என்று வாங்கி விட்டு, தொலை நோக்கோடு நாம் ஆறு மாதத்திற்கு போட்டு வைத்து இருந்த ரீசார்ஜ் தொகையை ஒரே நாளில் தீர்த்து விடுவானே, அப்போ..


கூட வாடா என்று போட்டு இருக்கும் கைலியோடு இழுத்துச்சென்று, ஒரு இடத்தில் நின்று கொண்டு இருக்க.. திடீரென்று அவன் தோழி எங்கிருந்தோ வர.. ஓகே மச்சி பாப்போம் என்று மனசாட்சியே இல்லாமல், பேருந்துக்கு பணம் கூட கொடுக்காமல் நட்டாற்றில் விட்டு செல்லும்போது..


பசங்களோடு படத்திற்கு போக டிக்கெட் புக் பண்ணிக்கொண்டு இருக்க, அங்கு வந்து கிண்டலாக சிரிக்கும் போது.. 


'நீங்க எல்லாம் பட்டிகாட்டானுங்க மாதிரி இருக்கீங்களாம்' என்று தோழி சொன்னதாக கொலை வெறியுடன் சொல்லி ரணகளப்படுத்தும்போது..


ஒரு டீ கூட எங்களுக்கு வாங்கித்தராமல், அந்த பக்கம் புது துணி, செருப்பு எல்லாம் வாங்கி கொடுக்கும் போது..


திடீரென்று சம்பந்தம் இல்லாமல் நடந்து கொள்ளும்போது.. உதா. வெளியூர் டூர் ப்ளான் எல்லாம் போட்டு, கெளம்ப இருக்கும் சமயத்தில், அடிக்கும் வெயிலில் போர்வையை போர்த்திக்கொண்டு  'நான் வரல' என்று சொல்லும் போது.. 


டைப் பண்ணி வைத்திருக்கும் இந்த இடுகையை பார்த்து, மச்சி பொறாம தான? என்று சரியாக கணிக்கும்போது (லைட்டா)..

முழுதும் படிக்க..

Jul 14, 2010

தமிங்கலம்..

ஒரு நடுத்தரமான ஹோட்டலில்..

அவர்: What would you like to have, sir?
நான்: என்ன இருக்குங்க..
அவர் மெனுவை நீட்டுகிறார்.
நான்: ஒரு கொத்து பரோட்டாங்க..
அவர்: Sure.. Hot water or cold water, sir?
நான்: ஏதோ ஒண்ணு..

கொண்டு வருகிறார்..
அவர்: Shall I serve for you..?
நான்: ஐயோ அதெல்லாம் வேண்டாம்..

மொச்சக் மொச்சக் என்று தின்பதை சிறிது வெறுப்புடன் அடிக்கடி பார்க்கிறார்..

அவர்: Anything else?
நான்: இல்ல போதும்..
அவர்: Here is your bill, cash or card..
நான்: பணமாவே கொடுக்கறேன்,

போய் விட்டு மீதியை கொடுக்கும் போது,

நான்: ஏங்க பீடா, வாழைபழம்லாம் கெடையாதா?
அவர்: இல்ல, ஆய் போச்சு.. இன்னிக்கி சரக்கு வரல.. 
நான் (மனதிற்குள்): அப்படி வாங்க வழிக்கு.. வெற்றி வெற்றி.. ஹீ ஹீ
முழுதும் படிக்க..

Jul 13, 2010

விழாக்களில் பெண்கள்

பொதுவாக, திருமணம் போன்ற பொது நிகழ்ச்சிகளில் பெண்களின் ஆளுமை பயமுறுத்துவதாக இருக்கும்.. நம்ம பயல்கள் டென்ஷனாக இங்கும் அங்கும் ஓடியபடி சத்தம் போட்டு திரும்பி வருவதற்குள் ஒரு தீர்வை ஏற்படுத்தி வைத்திருப்பார்கள்.
.
ஜீவநதி என்பது வேறு எதுவும் இல்லை. பெண்களின் பேச்சுதான். தெரிந்தவர்களோ, புதிதாக சந்திப்பவர்களோ.. அனாயசமாக அடுத்த ஆள் கிடைக்கும் வரை பேச்சு ஓடிக்கொண்டே இருக்கும் - 'உங்க ஒன்னு விட்ட சித்தபபா பையன் யூஸ்ல எந்த ஸ்டேட்டில் இருக்கான்?' என்ற அளவுக்கு நேர்த்தியாக. வரும் தகவல்கள் டேடாபேசில் பதிவாகி, பின்னாளில் கணவன்'மார்களுக்கு' ஆப்படிக்கும் (நீங்க இருக்கும் போது தானே சொன்னாங்க.. புதுசா கேக்கறீங்க?)

முழுதும் படிக்க..

Jul 12, 2010

The Matrix படத்தை தமிழில் போடுகிறார்கள்

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்..
வரும் வெள்ளிக்கிழமை, 7.30 PM இந்திய நேரத்திற்கு கலைஞர் தொலைகாட்சியில் மாட்ரிக்ஸ் (The Matrix) படத்தை தமிழில் போடுகிறார்கள். தவறாமல் பார்க்கவும். ஏற்கனவே பார்த்து விட்டீர்களா? பரவாயில்லை, இன்னொரு முறை பாருங்கள்..முழுதும் படிக்க..

Jul 6, 2010

முதல் நாள் கல்லூரி

நேற்று நடந்த சம்பவங்களே நினைவில் நிற்க மறுக்கும் போது, 7 வருடங்கள் முன் (அத்தனை காலம் தாண்டி விட்டதா?), முதல் நாள் கல்லூரி காட்சிகள் 'பச்சக்' என்று ஞாபகத்தில் எப்படி?


முதல் நாள் விடுதி அறையினுள் நுழைய, எனக்கு முன்னமே அங்கு இரண்டு பேர். உன்னுடன் தான் குப்பை கொட்ட வேண்டுமா என்ற பார்வைகள் (பின்னர் அறை குப்பைகள் வெளியில் கொட்டப்படவே இல்லை என்பது வேறு விஷயம்).. கைக்குளுக்கல்கள்.. விசாரிப்புகள்..முழுதும் படிக்க..

Jul 2, 2010

தேவதை விருதுகள் அறிவிப்பு

சேர்ந்து விட்டார்கள் எனக்கு 50 பாலோவர்கள் (இப்போ 51).. என்னளவில் இது ஒரு பெரிய மைல்கல்.. ஏன் என்றால், ஆரம்பித்த சில நாட்களில், என்னடா இது, நம்ம பக்கம் யாரும் வர மாட்றாங்க என்று சில நேரம் வருத்தப்பட்டு  புலம்பியதும் உண்டு.. ஆனால், எழுத எழுததான், அடுத்தவர்களையும் படிக்க படிக்கத்தான் நம் எழுத்தோ, சொன்ன கருத்தோ (அப்படி வேற நெனச்சிட்டு இருக்கியா நீயி) இல்லை எதுவோ பிடித்து, கண்டிப்பாக நமக்கு என்று ஒரு நட்பு வட்டம் உருவாகும் (#அறிவுரை)..முழுதும் படிக்க..

Jul 1, 2010

பதிவுலகம் பற்றி திரு. கமல்..

அனைவருக்கும் வணக்கம்! நான் நடிகர் கமல் பேசுகிறேன்.. பதிவுலகை பற்றி கமல் பேசுகிறானா? என்ன தகுதி இருக்கிறது இவனுக்கு என்று முந்திரிக்கொட்டை தனமாக கேள்வி கேட்பவர்களுக்கு.. மக்கள் மனதில் தேவையான கருத்துக்களை பதிப்பவன் என்ற முறையில்.. நானும் ஒரு பதிவர்தான் என்று என்னால் பெருமையாகவே சொல்லிக்கொள்ள முடியும்.

எனக்கு தமிழ் வலையுலகம் மிகப்பிடிக்கும். அதில் வரும் படைப்புகள், வாதங்கள் முதலியவற்றை பார்த்தாலே நாம் எந்த கொம்பனுக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பது புலனாகும். ஆனால், எனக்கு பிடிக்காத ஒரு அம்சம்.. அடுத்தவர்கள் என்ன எழுத வேண்டும் என்று தீர்மானிக்கும் ஆசை.. அவ்வபோது தலை தூக்கிக்கொள்ளும் அந்த ஆசை...

நீ ஏன் இதைப்பற்றி எழுதவில்லை? நீ அதை ஆதரிக்கிறாயா..
நீ ஏன் இதைப்பற்றி எழுதுகிறாய்? நீ ஒரு சொம்பு தூக்கியா..
இவர்கள் இதை கண்டு கொள்ளவே இல்லையே? பின்னூட்டம் கூட போடவில்லை.. எனக்கு ரத்தம் கொதிக்கிறது..

என்பது போன்ற, அடுத்தவனின் பேனாவை பிடுங்கி தான் எழுதும் இந்த போக்கு, கண்டிக்கத்தக்கது.. 'யாரும் இப்படி சொல்லக்கூடாது என்று நீ சொல்கிறாயே, இது சர்வாதிகாரம் இல்லையா கமல்'? என்று கேட்பவர்களுக்கு.. மற்றவர்கள் என்ன எழுத வேண்டும் என்று ஆணையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்று சொல்லும் உரிமை எனக்குண்டு என்றே நம்புகிறேன்..

உன் சுதந்திரம் அடுத்தவனின் மூக்கு நுனிவரை தான் என்பதை புரிந்து கொண்டு, கருத்து சுதந்திரதிற்கு கை கொடுப்போம்.. அந்த சுதந்திரம் அடுத்தவர்களை பாதிக்காமல் பார்த்துக்கொள்வோம். நன்றி.. வணக்கம்!


குறிப்பு: இது என் பக்கத்து தெரு மேடை நாடக நடிகர் திரு. கமல் சக்சேனா சொன்ன கருத்துக்கள் (பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் ஹீ ஹீ) ..
முழுதும் படிக்க..

Jun 29, 2010

Rope (ரோப்) - சிறந்த படம்

ஒரு கொலையை எந்தவித உள்நோக்கமும் (Motive) இல்லாமல், 'கொலை செய்ய வேண்டும்' என்ற ஒரு காரணத்திற்காகவே செய்ய முடியுமா?
ஒரு உயிரை பறிப்பதில்.., உயிரை உருவாக்குவதில் உள்ளதை போலவே அல்லது அதைவிட அதிகமாக அளவுக்கடங்கா கிளர்ச்சி/திருப்தி இருக்குமா?
கொலையை திறம்பட திட்டம் போட்டு செய்தவனுக்கு, அதை யாராவது 'கண்டு பிடித்துத்தான் பார்க்கட்டுமே' என்ற ஒரு ஆசை ஆழ்மனதில் இருக்குமா?


இப்படி தினுசான கேள்விகளையும் இன்னும் சில விஷயங்களையும் ஒரு வீடு, எட்டு பேர் மற்றும் ஒரு பெட்டி - இவற்றைக்கொண்டு அலசுகிறது 1948-இல் வெளிவந்த Rope படம். மொத்தமே ஒன்னேகால் மணி நேரம் தான் படம். ஆரம்பமே கொலைதான். அப்புறம் அதில் என்ன த்ரில்? படம் முழுக்க கொலையாளியின் மன நிலையில் நம்மையும் அந்த பதைப்பை அனுபவிக்க வைப்பதுதான் படத்தின் சிறப்பம்சம் (Mrs. Wilson அந்த பெட்டியை திறக்கப்போகும்போது நமக்கு வருமே ஒரு படப்பிடிப்பு ச்ச படபடப்பு..).


கதைச்சுறுக்கும் வேணுமா? கதையே சுருக்கம் தான் - ரெண்டு பேர் ஒருத்தனை திட்டம் போட்டு கொலை செய்து ஒரு பெட்டியில் போட்டு விடுகிறார்கள். எதற்கு? சும்மாதான்.. பண்ணிவிட்டு, கொல்லப்பட்டவனுக்கு சம்பந்தப்பட்ட ஆட்களை அழைத்து அந்த பெட்டி மீதே உணவுகளை அடுக்கி பார்ட்டி வைக்கிறார்கள். இவர்கள் கடைசியில் மாட்டுகிறார்களா? என்பதுதான் படம் (படம் இதை விட நறுக்குனு இருக்கும்).

கொலையாளி நம் 1 ப்ராண்டன் (ஸ்டூடன்ட் நம்பர் 1 மாதிரி சொல்ற?) படம் முழுக்க கொலைக்கான காரணம் என்று சொல்வது, நீட்ஷேவின் 'சூப்பர்மேன்' தத்துவம். அதாவது, மனித இனத்திலேயே 'மேலானவர்கள்' என்று உள்ளவர்களுக்கு சரி, தவறு என்ற வரையரை எல்லாம் கிடையாது.. அப்புறம், 'கீழானவர்கள்' உயிருடன் இருக்க தகுதி அற்றவர்கள் (ஹிட்லர் ஞாபகம் வரானா..?). மேலும் கொலை என்பது ஒரு கலை (ரைமிங்க் கவனிக்க), அதை சிலரால் தான் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்புபவன். கொலைக்கு தெரிந்தோ தெரியாமலோ இந்த தத்துவத்தை விளையாட்டாக இவர்களிடம் பள்ளி நாட்களில் பகிர்ந்து கொண்ட ஆசிரியர் ஒரு காரணம் ஆகிறார். அவரும் பார்ட்டிக்கு அழைக்கப்படுகிறார் (படிக்க.. பதிவின் மூன்றாவது வரி).

சரி.. உண்மையிலேயே, 'கொலை செய்ய வேண்டும்' என்ற ஒரு நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்பட்டதா அந்த கொலை? வேறு மோட்டிவ் இல்லையா? ஒரு வெங்காயமும் கெடையாது.. கொலை செய்யப்பட்டவன் மீது இருக்கும் ஆழ்மன வெறுப்பே கொலைக்கு காரணம் என்று மறைமுகமாக சொல்கிறார் இயக்குனர் (படிக்க.. பதிவின் முதல் வரி). கொலையுண்டவனின் காதலி, ப்ராண்டனின் முன்னாள் காதலி.. அவளை வைத்து சில இடங்களில் அந்த வெறுப்பை வெளிப்படையாக காட்டுகிறான் ப்ராண்டன்.


படத்தின் சிறப்பம்சங்கள் என்ன? ஒன்றா இரண்டா? பட்டியலே இருக்கிறது.. இங்கே சிலது மட்டும்..

பெரிய பெரிய ஷாட்கள் (மொத்தமே ஆறேழு ஷாட்ஸ் தான், ஒவ்வொன்றும் இடையில் கட்டே இல்லாமல்). ஒரே வீடு (அதான் ஏற்கனவே சொல்லிட்டியே).
சீன் ஒன்றொன்றும் மிக அற்புதமாக ஷூட் செய்யப்பட்டு இருக்கும். ஒரு சிலதை சொல்ல வேண்டும் என்றால்..
-எல்லாரும் சாப்பாடு முடித்து டேவிட் எங்கே என்று பேசிக்கொண்டு இருக்கும்போது, கேமிரா அவர்களை கவனிக்காமல், டேவிட் இருக்கும் பெட்டியை போகஸ் செய்து கொண்டு இருக்கும்.. படு டென்ஷனான சீன் அது..
-தைரியம்கரது பயம் இல்லாத மாதிரி நடிப்பது - ப்ராண்டனின் விரல்கள் நடுங்கும் அந்த ஷாம்பெயின் குடிக்கும் காட்சி..
-கொலையாளி நம் 2 அவன் மன நிலையை ப்ரதிபலிப்பதை போல் மெதுவாக, வேகமாக என்று பியானோ வாசிப்பது
-படம் முழுக்க பல குறியீடுகள் (சிறந்த இயக்குனர்களுக்கே உரிய குணாதிசியம் அல்லவா இது)..கொலை செய்வதின் திருப்தியை 'அதனுடன்' (படிக்க.. பதிவின் இரண்டாம் வரி) ஒப்பிட்டு வரும் ஆரம்ப காட்சிகள்.. உதா கொலையை முடித்தவுடன் இப்படி ஒரு வசனம் 'Let's stay this way for a minute'.. அதை தொடர்ந்து ப்ராண்டன் திருப்தியுடன் பிடிக்கும் சிகரட்.

கொலையுண்டவனின் தந்தையாக வரும் செட்ரிக்கின் நடிப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். பிரமாதப்படுத்தி இருப்பார். ஆசிரியராக வரும் (கதாநாயகன்?) James Stewart (Its a beautiful life, The rear window) வழக்கம் போல் அட்டகாசம் + அபாரம் .

அப்புறம், இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.. சரி, அந்த காலத்திலேயே இப்படி படங்களை எடுத்த ஹிட்ச்காக், இப்போது இருந்திருந்தால், இன்றைய தொழில் நுட்பத்தை வைத்து எப்படி மிரட்டி இருப்பார்? ஆனால், அவர் ஆவி இப்படி சொன்னாலும் சொல்லும் -
'போய்யா, எல்லா வேலையையும் கம்ப்யூட்டரே செஞ்சுட்டா அப்புறம் நான் எதுக்கு?'


குறிப்பு: கொஞ்ச நாட்களாக எனக்குள் தூங்கிக்கொண்டு இருந்த சினிமா மிருகம் திரும்பவும் முழித்துக்கொண்டது.. ஜெய்யின் சில பதிவுகளால்.. ஆகவே இனி அடிக்கடி சினிமா கட்டுரைகளை ரசிகர்கள் ரசித்து மகிழலாம் (ஹேய் யாரு அழுகின தக்காளி எடுக்கறது)..
முழுதும் படிக்க..

Jun 9, 2010

வெள்ளை நிறத்தில் ஒரு பூனை..

அது வீட்டின் சேமிப்பு அறை மற்றும் ஆடைகள் தொங்கவிடப்படும் அறை மற்றும் பூஜை அறை. தீர்ந்து போனால் புது சோப்பு எடுப்பது போன்ற 'காரிய நிமித்தம்', அங்கு எப்போதாவது போவது உண்டு. அன்று அப்படி தற்செயலாக செல்ல, க்ர்ர்ர்ர் என்று உறுமல் சத்தம். குனிந்து பார்த்தால், அங்கு வெள்ளை நிறத்தில் ஒரு பூனை. கீழே வைக்கப்பட்டு இருந்த பாத்திரங்களை அரணாகக்கொண்டு..

அவசரமாக வெளியே வந்து அம்மாவிடம் இதை சொல்ல.. நேற்றில் இருந்தே அது அங்கு இருப்பதாகவும், அதனுடன் இன்னும் ஒரு குட்டியும் இருப்பதாகவும் தகவலறிய முடிந்தது. புரிந்தது, அந்த உறுமலுக்கான காரணம்.

முதல் இரண்டு நாட்கள் தாய் எப்பொழுது வெளியே செல்கிறது? எங்கே சாப்பிடுகிறது? என்பதை அறிய முடியவில்லை. இரண்டு நாட்கள் எங்களின் நடவடிக்கைகளை பார்த்த தாய், 'சரி, இவர்களை நம்பலாம்' என்று ஒருவாறு தயங்கி எங்கள் கண் முன்னே வெளியே சென்றது. அடுத்து பாலை வைத்ததும், அப்படியே ஒட்டிக்கொண்டது. குட்டியை எங்கள் பொறுப்பில் விட்டு விட்டு போகும் அளவிற்கு அதற்கு தைரியம் வந்தது.. அது இல்லாத நேரத்தில் குட்டி அந்த பாத்திர அரணை விட்டு வெளியே வருவேனா, தரிசனம் தருவேனா என்றது. தாய் அருகில் இருக்கையில், வெளியே வந்தாலும், காலடி சத்தம் கேட்டதும் ஓட்டமாக ஓடி அதன் இடத்தில் பதுங்கியது..

(தாய் மீது தூங்கிக்கொண்டிருக்கும் குட்டி)

இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தது. இப்போது வேளா வேளைக்கு சாப்பாடு வந்து கேட்கும் அளவிற்கு தோழியாகி விட்டது தாய். பால் வைக்க வில்லை என்றால் மியாவ் மியாவ் என்று கத்தி கூப்பாடு போட்டு, மெதுவாக காலில் செல்லமாக உரசும் (அதற்கு மேல் சாப்பாடு வைக்காமல் இருக்க முடியாது). ஆனால் குட்டி இன்னமும் வெளியே வந்த பாடில்லை..

அடுத்த நாள்தான் அந்த 'திவ்விய' தரிசனம்.. தாய் பாதுகாப்பில் குட்டி, பாத்திர அரணை விட்டு வெளியே வந்தது.. கண் படாமல் இருக்கத்தான் வெளியே வராமல் இருந்திருக்கிறது குட்டி.. அத்தனை அழகு. அப்பப்பா அமைதியான குட்டி என்று நினைத்தது எங்கள் தவறுதான்.. வெளியே சமையலறைக்கு வந்த அது, தாய் அருகே இருக்கும் மிதப்பில், இங்கும் அங்கும் ஓடி, தாவி, குதித்து என்று என்ன ஒரு விளையாட்டு. ஏன் குட்டிகள் வளர்ந்து விடுகின்றன? அப்படியே இருக்கக்கூடாதா?

தாய் சோம்பலாக உட்கார்ந்து ஓரக்கண்ணால் இந்த சேட்டையை ஒரு நோட்டம். தாய் வாலை ஆட்டி, குட்டி அதை தவ்வி பிடிப்பது அவைகளுக்கு பிடித்தமான விளையாட்டு. இரையை பிடிக்க தாய் தரும் பயிற்சி அது என்பதை உணர வெகு நேரம் ஆகவில்லை. நாங்கள் அருகே தூக்கச்சென்றால் மட்டும் ஓடிப்போய் ஒளிந்து கொள்ளும் குட்டி. போக போக அதையும் ஒரு விளையாட்டாகவே செய்ய ஆரம்பித்தது.. கொஞ்ச நேரம் ஏதாவது பொருளை உருட்டி விளையாடும்.. சலிப்பு தட்ட ஆரம்பித்ததும் திடீரென்று நிறுத்தி விட்டு. எங்களை பார்த்து பயப்படுவது போல் ஓடிப்பதுங்கும் (நாங்கள் பாட்டுக்கு இருந்தாலும்).

அடுத்த நாள். வழக்கும் போல குட்டியை விட்டுவிட்டு இரை தேட வெளியே போன தாய்.. போனது போனதுதான்.. இரவை தாண்டியும் வரவில்லை. பாவமே உருவாக, வைக்கும் பாலையும் குடிக்காமல், அரணை விட்டு வராமல், சோகமாக தவம் இருந்தது குட்டி. தாய் மீது முதன்முதல் கோபம் வந்தது அப்போதுதான்..என்ன ஆனதோ? என்பதை விட எங்கு போய் தொலைந்த்தோ என்பதாகவே இருந்தது எண்ணம்.

அடுத்த நாள். காலை ஐந்து மணி அடித்ததும் கத்த தொடங்கி விட்டது பெரியது.. ஞாயிறு இப்படி எழுப்பி விடுகிறதே என்பதை விட, அது திரும்பி வந்த நிம்மதியில்.. கொஞ்சம் அதிகமாகவே பால் வைக்கப்பட்டது அன்று..

(தாயுடன் வலது ஓரத்தில், பவ்யமாக இருப்பது போல நடிக்கும் குட்டி)

இப்போது குட்டி எங்கள் படுக்கையறை வந்து விளையாட ஆரம்பித்து விட்டது.. அவ்வப்பொழுது பயந்து ஓடும் விளையாட்டும் இருக்கத்தான் செய்தது.. தாய் குட்டிக்கு தரும் பயிற்சிகளும்தான். குட்டி மிகவும் தடுமாறிய ஒரு பயிற்சி, ஜன்னல் மீது தாவி ஏறி, வெளியே செல்வதுதான். இது மட்டும் அதற்கு இயலாத ஒன்றாக, வயதுக்கு மீறியதாக இருந்தது.. அதற்கு படி போல் உதவ, ஒரு சிறு பெட்டி வைக்கப்பட்டது.. அதன் மீதே குட்டியால் ஏற முடியவில்லை.. தாயும் மிகுந்த பிரயத்தனப்பட்டு பார்க்கத்தான் செய்தது.. ஏன், கொஞ்ச காலம் விளையாடிக்கொண்டே இருக்கட்டுமே, இப்போது இதற்கு என்ன இவ்வளவு அவசரம் என்ற கேள்வியும் மனதில்..

அன்று இரவு என்ன ஆனதோ, ஜன்னல் மீது ஏற முடியாத குட்டியை அலேக்காக தூக்கிக்கொண்டு வெளியே சென்றது தாய்.. ஹ்ம்ம்ம் வெளியே ஏதோ பயிற்சி போல என்று நாங்களும் விட்டு விட்டோம்.. திடீர் என்று ஒரு சந்தேகம்.. உள் பக்கத்தில் பெட்டி உதவியுடன் சுலபமாக ஏறிய தாய், வெளி பக்கத்தில் இருந்து குட்டியை தூக்கிக்கொண்டு ஏற முடியுமா? இரண்டும் வரும் சுவடில்லை. கவலை அதிகமானது.. குட்டி  பாட்டுக்கு எந்த கவலையும் இல்லாமல் விளையாடிக்கொண்டு இருந்தது.. அதுக்கு கற்றுக்கொடுக்கிறேன் நன்மை செய்கிறேன் என்று, அதன் பால்யத்தை வெடுக்கென்று இவ்வளவு அவசரமாக பிடுங்க வேண்டியதன் அவசியம் என்ன?

அடுத்த நாள்.. நாங்கள் எழும்போது, தாய் கத்திக்கொண்டு இருந்தது.. அவசரமாக அவர்களின் இடத்தில் போய் தேடினால், குட்டியை காணவில்லை. கேள்வியுடன் நாங்கள் தாயை பார்த்தோம்.. இல்லை.. முறைத்தோம். அது பதிலுக்கு எங்களை வந்து உராசியது.. கத்தியது.. அதற்கு பின் அது செய்த செயல், சாகும் வரை மறக்காது..

'இதற்கு மேல் விளையாடாதீர்கள்.. மறைத்து வைத்திருக்கும் குட்டியை தந்து விடுங்கள்' என்று எங்களை கெஞ்சல் பார்வை பார்த்துக்கொண்டே, அறை அறையாக சென்று குட்டியை தேடியது.. தேடித்தேடி அலுத்து, கடைசியில் வெளியில் கிளம்பிவிட்டது.. எப்படியும் குட்டியை கண்டுபிடித்துக்கொண்டு வந்து விடும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தோம்..

இரண்டுமே கடைசி வரை திரும்பி வரவில்லை..
முழுதும் படிக்க..

Jun 4, 2010

பரிணாமம்

மூன்றாவது கையில் விசிறி போன்ற அமைப்புடன் முதலில் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்தது.,
தமிழகத்தில்..குறிப்பு: இந்த 'கதை' புரியாதவர்கள் என்னுடைய முந்தைய பதிவான இந்த புலம்பலை படித்தால் புரியும்..
முழுதும் படிக்க..

Jun 2, 2010

பவர் கட்

எனக்கு வேற எதுவும் வருத்தம் இல்லை.. அது எப்படி நான் தூங்கும் நேரம் ஈ.பி (EB) ஆட்களுக்கு இவ்வளவு சரியாக தெரிகிறது? நான் தூங்கும் நேரத்தை மிகத்துல்லியமாக பாதியாக பிரித்து, அந்த புள்ளியில் மின்சாரம் நிறுத்தப்படுவதை சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறேன். அது பகலாக இருந்தாலும் சரி.. உதாரணத்திற்கு, 10 PM - 4 AM தூங்குகிறேன் என்று வைத்து கொள்ளுங்கள் (அட சும்மா ஒரு பேச்சுக்கு). சரியாக 1 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்படும். மதியமாக இருந்தாலும் இதே டெக்னிக் தான்.

ஒரு நாள், இரு நாள் கதை அல்ல இது. அக்னி வெயில் (?) ஆரம்பித்ததில் இருந்து.. இப்படியே தொடர்ந்து.. அது எப்படி அய்யா சரியாக 1 மணிக்கு தினமும் நிறுத்துகிறீர்கள்? அலாரம் வைத்து எழுந்து, பவரை நிறுத்திவிட்டு, பாத்ரூம் போய் விட்டு திருப்பி தூங்கிவிடுவீர்களா?இருக்கும் வெப்பத்தில்.. மின்சாரமும் மின்விசிறியும் டப் என்று நிற்கும் அந்த நொடியில்.. உலகமே இருண்டு.. முதலில் மென்மையாக ஆரம்பிக்கும் கசகசப்பு, நேரம் ஆக ஆக (ரொம்ப நேரமெல்லாம் இல்லை.. ஓரிரு நிமிடங்கள்) வெப்பம் வெப்பன் போல தாக்க.. வியர்வை சுரப்பிகள் திடும் என்று விழித்துக்கொண்டு கடும் வேலை செய்ய.. கையா முயா என்று சொரிந்து கொள்ள வேண்டும் என்று வரும் இச்சையை (சுய அரிப்பு) கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி முடிப்பதற்குள் மண்டை மூஞ்சி எல்லாம் நனைந்து போயிருக்கும். அதற்கு மேல் படுக்க-தடுக்க முடியாது (ஒரு தடவை பாக்கலாம் ஒரு கை என்று முரண்டு பிடித்து படுத்து தான் பார்த்தேன்.. தலையணை நம்பர் 1 போனது போல நனைந்து வெயிலில் காய வைத்ததுதான் மிச்சம்)..

எழுந்து உட்கார்ந்ததும், அழுகை அழுகையாக வரும். இந்த நேரம் பார்த்து பக்கத்தில் நியூஸ் பேப்பர், புத்தகம் எதுவும் இருக்காது.. அடிச்சி பிடிச்சி தேடி, விசிறு விசிறென்று விசர் பிடித்தது போல விசிறி, துண்டை வைத்து முகத்தை (கண்ணீரையும்) துடைத்துக்கொண்டு உட்காரும் அந்த நேரத்தில்...

கேயின்ன்ன் வ்ர்ர்ரர்ர் சார்ர்ர்ரர்ர் என்று கொசுக்கள் 'பெண் சிங்கமாக' மாறி காதருகில் பறக்க, இதற்கு முன் இருந்த நிலைமையே மேல் என்று ஜென் தனமாக தத்துவம் உணர வைத்து, என்ன விரட்டினாலும் போகாமல் குடையும். இங்குதான் யாரையாவது பிடித்து அடிக்கலாமா என்று தோன்றும்.. பின்பு நம்மையே அடித்து கொள்ளலாம் என்று (கவுண்டமணி சாட்டை வைத்து அடித்து கொள்வது போல).. வியர்வை ஊத்துவதும் நின்ற பாடில்லை, கொசு பாடுவதும் நிற்கவில்லை. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, கடன் வாங்கியாவது நாளைக்கு இன்வர்டர் அல்லது ஜெனெரேட்டர் வாங்கி வைத்துவிட வேண்டும் என்று தோன்றுவது இப்போதுதான் (தினமும் இதே இடத்தில் தான் இந்த எண்ணம் வரும்)..

இந்த நேரத்தில், சுவாரஸ்யமான ஒரு விளையாட்டு விளையாடுவார் கரண்டுகாரர்.. 'கம்கு' என்று ஒரு செகண்ட் மின்சாரத்தை விட்டு நிறுத்துவார். அந்த ஒரு நொடிப்பொழுதில் நம் கண்ணில் வந்து மறையும் நம்பிக்கை - கடைசி பந்தில் சிக்சர் அடித்து ஜெயிக்க வேண்டிய கட்டத்தில், பந்து உயர உயர பறந்து.. கடைசியில் காட்ச் ஆவதற்கு சமம்.. அல்லது அதனினும் கொடூரம்..


எல்லா உணர்ச்சிகளும் ஓய்ந்து கிடக்கும் போது, கடவுளுக்கு என் மேல் இரக்கமே
 இல்லையா என்று சரணாகதி அடைந்து கடைசியாக ஒரு ட்ரை.. அதற்கும் எந்த அசைவும் இருக்காது. செத்த பிணம் (?) போல உட்கார்ந்திருக்கும் நேரத்தில் (கொசுவின் சங்கீதம் கூட பழக ஆரம்பிக்கும் வேளை), பொழச்சு போங்க என்று விடப்படும் மின்சாரம்.. மகிழ்ச்சியடையக்கூட தெம்பில்லாமல் தூங்கி விடுகிறேன்..

*****

தமிழ்நாட்டு வெளியூர்கார நண்பன் ஒருவன் வடிவேலு பாணியில் சொல்கிறான்.,

'போங்க தம்பி.. என்னமோ ரெண்டு மணி நேரம் கரண்ட் போறதுக்கு பெருசா பீத்தறீங்க.. அங்கல்லாம் ரெண்டு நாள் ஆனாலும் கரண்டு வராது.. எங்கிட்ட இருந்து துளி சத்தம் வராது, எங்கயும் ஓடுனதும் கிடையாது..' என்று சொல்லி விட்டு, எங்கோ பார்த்து கை அசைத்து,

'ஹலோ, நேத்து கரண்டு வரும்னு சொன்னீங்க வரவே இல்ல?' என்ற படியே நகர்கிறான்..

******

டிஸ்கி: மூன்று நாட்கள் வெளியூர் போக வேண்டி இருந்தது.. போய் விட்டு திரும்பியதும் அம்மா சொன்னது 'டேய், இந்த மூணு நாளும் கரண்டு போகவே இல்ல'- பிரசன்னா (கொத்து பரோட்டா)
முழுதும் படிக்க..

May 27, 2010

பதினைந்தாவது ரொபாட்

அதி ரகசியமான அந்த ப்ராஜக்ட் வெர்ல்ட் ரூல் (Project World Rule) பற்றி  தெரிந்தவர்கள் மொத்தம் எட்டு பேர் தான். அமெரிக்க அதிபருக்கு கூடத்தெரியாது. இந்த ப்ரொக்ராமின் அ,ஆ வான மார்க் மற்றும் டாம் அன்று இறுதி கட்ட செக்கப்கள் முற்றிலும் முடிந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள். படபடப்புடந்தான்.

"இது எந்த அளவு வெற்றி பெரும் என்று நினைக்கிறாய் டாம்?", கேட்டவர் மார்க்.
"முழு வெற்றி தான். கூடிய சீக்கிரம் இந்த உலகமே நம் சொல் படி ஆட போகிறது!" உணர்ச்சிவசப்பட்டார் டாம்.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் உருவாக்கப்பட்ட 15 ரொபாட்களும், பதினைந்து முக்கிய நாடுகளில் விடப்படும். ஐந்து வருடங்கள் கழித்து, அந்தந்த நாடுகளின் சக்தி வாய்ந்த பதவிகளில் இருந்து கொண்டு, அந்த நாட்டையே ஆட்டி படைக்கக் கூடியவர்களில் ஒருவராக ஆக வேண்டும் (ஆகும்).. இதுவே அந்த பதினைந்து 'பேரின்' உள்ளே ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ப்ரொக்ராமின் சாராம்சம்.

"ஐந்து வருடங்களில் இவை அத்தகைய உயர்வை எட்ட வாய்ப்பு இருக்கு என்றா நினைக்கிறாய்?", இம்முறை சந்தேகத்துடன் டாம்.


"மனிதனின் சுய சிந்தனையும், மிஷினின் உண்டு - இல்லை என்கிற துல்லியமும் ஒரு சேர வாய்ந்தவை இவை. இந்த கூட்டின் சக்தி அளவிட முடியாதது டாம். அதுவும் இவைகளை செயற்கை என்று யாராலும் சொல்ல முடியுமா? இதோ 'இதுக்கு' இருக்கும் மீசையைப்பார்" ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இருக்கும் ரொபாட்டின் மீசையை த்டவிக்கொண்டே மார்க்.. டாமிற்கு இது எல்லாம் தெரிந்தாலும் கடைசி நேர படபடப்பை அடக்க யாரால் முடிகிறது?

ஒரு வழியாக எல்லாம் முடிந்தது. அந்தந்த நாடுகளில் கொண்டு போய் விடப்பட்டனர் அந்த பதினைந்து பேரும், அந்தந்த நாடுகளின் குடிமகன்களாக.

....

முதல் முறை பார்த்ததை விட, 5 வருடங்களில் கொஞ்சம் குண்டாகி விட்டிருந்தனர் மார்க்கும் டாமும்.. அவர்களின் கண்டுபிடிப்புகள் எந்த பதவியில் இருந்து, உலக நாடுகளை எப்படி ஆண்டு கொண்டு இருக்கிறது என்று ஆய்வு செய்து, அடுத்த கட்டத்திற்கு தயாராக 'உலகச் சுற்றுப்பயணம்' கிளம்பினர் இருவரும்.

"அவைகளின் நியூரல் நெட்வொர்க்கும் மனித மூலையை ஒத்து இருப்பதால், எல்லாம் ஒரே அளவு அறிவுடன் இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த பதினைந்தில் எது மிக அறிவானது, எது சக்தி வாய்ந்தது என்பதயும் பார்க்க வேண்டும்" பிளைட்டில் பாதி தூக்கத்தில் முனகிக்கொண்டார் டாம்.

முதலில் அவர்கள் இறங்கிய இடம் அவர்களின் தலை நகரான வாஷிங்டன். இவர்களின் 'அது' அந்த நாட்டின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராக இருந்தது.

"ஆகா. என்ன சக்தி வாய்ந்த பதவி? நாம் நினைத்ததை விட நம் ப்ராஜக்ட் பெரும் வெற்றி தான்" என்று ஆனந்த் குக்கூரலிட்டார் மார்க்.

அடுத்து ஐரோப்பா, சீனா, ஆஸ்திரேலியா என்று பயணப்பட்டனர். ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாப்பு அமைச்சர், பிரதமர், ராணுவ தளபதி (பாகிஸ்தான்) என்று விதவிதமான, சக்தி வாய்ந்த பதவிகளில் இருந்தார்கள் இவர்களின் கண்டுபிடிப்புகள்.

எல்லா நாட்டையும் முடித்துக் கொண்டு, கடைசியாக இந்தியா வந்து, அந்த பதினைந்தாவது ரொபாட் வீட்டின் முன் இறங்கியதுமே... இருவரும் சிறிது அதிர்ச்சி அடைந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பின்னே மத்த 14 நாடுகளில் பார்க்காத காட்சியை அல்லவா இங்கு கண்டனர்? அந்த 'வீட்டு அரண்மனையின்' வெளியே ஒரே மக்கள் கூட்டம். எக்கச்சக்க கார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டவை 'நானும் விஐபி தான்' என்று சொல்லிக்கொள்ளும் சிகப்பு விளக்கு பொருத்த பட்டவை.


"அதோ, அங்கு நிற்பவர் இவர்களின் பிரதமர் போல் அல்லவா இருக்கிறார்? அவரே வெளியில் காத்து கொண்டு இருக்கிறாரே? 'இவர்தான்' பதினைந்து பேரில் மிகுந்த சக்தி வாய்ந்தவராக இருக்க வேண்டும்.. எவ்வளவு கூட்டம்? " வாயை பிளந்தார் டாம்.

"ஆம். உண்மைதான். ஆனால், பிரதமரை விட உயர்ந்தவராக இருந்தாலும், இவர் எந்த பதவியில் இருக்கிறார் என்று தெரியவில்லையே?" என்றபடியே அங்கு இருந்த 'காரிய தரிசி'யிடம் உள்ளே சொல்லி அனுப்பினார் மார்க்.

அவர்கள் உடனே உள்ளே விடப்பட்டு, 'அவர்' எதிரில் நிற்க வைக்கப்பட்டனர்.

தன் ஒளி பொருந்திய கண்களை திறந்து, இவர்களை நோக்கி புன்முறுவல் பூத்தார் ஸ்ரீ ஸ்ரீ ரூபானந்த ஸ்வாமிகள்..


                                                                ************

டிஸ்கி: இது நான் ஏற்கனவே எழுதி வெளியிட்ட கதை தான். என்னடா இவன், எழுதியதே 25 பதிவுகள் தான் இருக்கும். அதற்குள் மீள் பதிவா என்று பெரியவர்கள் கோபித்துக்கொள்ளாமல், ஆதரவை 'அள்ளி' வழங்குமாறு கேட்டு கொள்கிறேன் ;)
முழுதும் படிக்க..

May 22, 2010

பாசக்கார பதிவர்களுக்கு பாராட்டு விழா..

மின்மினி.com என்ற வலைத்தள திரட்டி இருப்பதை கேள்வி பட்டு இருப்பீர்கள். இதைப்பற்றி சுருக்கமாக இங்கே படிக்கலாம். இதில் என்ன விஷயம் என்றால், முதல் 101 பதிவர்களை இலவசமாக இணைக்கிறார்கள். அதில் சில பிரபல பதிவர்களை அவர்களே தேர்ந்தெடுத்து இணைத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் அண்ணன் (நாந்தான்) இரண்டாம் வரிசையில் முதலில் இடம் பெற்றுள்ளேன்..

இதை பற்றி ஒரு துணுக்கு இந்த பதிவின் கடைசியில்...

                                                                ****************

முதல்முறையாக நமக்கு (வைர) விருது அளித்து அண்ணன் சைவகொத்துப்பரோட்டா பெருமை படுத்தி உள்ளார். அதுவும் சிறப்பாக எழுதுபவர்கள் என்று நம்மால் கருதப்படுவர்களுக்கு கொடுக்கலாம்.. அப்புறம் எப்படி எனக்கு கிடைத்தது என்று யோசித்து கொண்டு இருக்காமல், இதோ அந்த விருதை இவர்களுக்கு அளிப்பதில் நான் மேலும் பெருமைப்பட்டு கொள்கிறேன் -

ஜெய்
Illuminati
ஜெயந்தி
மகேஷ் : ரசிகன்
தக்குடுபாண்டி
பட்டாபட்டி
ருத்ர வீணை
prabhakaran


                                                                ****************

என்னது, இவன் பிரபல பதிவரா, இவனை எதற்கு 'மின்மினியில்' போட்டார்கள், ஏன், எப்படி என்று எல்லாம் பொங்க கூடாது.. நானே மெயில் அனுப்பி 'யப்பா என்னையும் சேர்த்துகோங்க' என்று கேட்டவுடன் இணைத்து விட்டார்கள் (ஹீ ஹீ). 101 பேருக்கு தான் இலவசம் என்பதால், முந்திக்கொள்ளுங்கள்..
முழுதும் படிக்க..

May 7, 2010

பிடித்த பத்தும்., ராவணன் பாடல்களும்..

பிடித்த பத்தை எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று இப்போது தான் தெரிகிறது.. பிடித்த படம், அதற்கு கீழே ஏன் என்று..

************

சபாஷ் மீனா
நகைச்சுவை, சிவாஜி (இயல்பான நடிப்பு), சந்திரபாபு

நாயகன்
மணி, கமல்

முள்ளும் மலரும்..
ரஜினி,ரஜினி,ரஜினி

அன்பே சிவம்
செவத்த அன்பு :)

பேசும் படம்
புதுமை

தில்லு முள்ளு
'வெண்கல கடையில் யானை புகுந்தது போல' படம்..

மௌன ராகம்
மென்மை, பெண்மை, பிளாஷ்பேக்

பம்பாய்
இரண்டாம் பகுதி (எதுக்குடாப்பா இதெல்லாம் என்று தோன்ற வைப்பதால்)

காக்க காக்க
ஸ்டைல், ஹீரோயிசம் (வித்அவுட் பன்ச் டைலாக்ஸ்)

16 வயதினிலே..
பேரை கேட்டாலே.. மழை வரும் போல இருக்குமே, அந்த வாசனை.

விட்ட படங்கள் என்னை மன்னிக்குமாக.. இதை எழுத அழைத்த ஜில்தண்ணி அவர்களுக்கு நன்றி..


************

இரண்டு நாட்கள் முன்னாடி இப்படி இல்லை - ராவணன் பாடல்கள் அனைத்தும் மிகவும் பிடிக்கிறது இன்று.. அதனால், எதுவாக இருந்தாலும் 'ஒரு' இரண்டு நாட்கள் கேட்டு விட்டு முடிவுக்கு வரவும். முடிந்தால் ஹெட் போனில் கேட்கவும் (எவ்வளவு வித்தியாசம்?).
சிறந்த இசையில், ஒரு மெல்லிய சோகம் நிச்சயம் இருக்கும் என்ற என் எண்ணத்தை இதிலும் சில பாடல்கள் உறுதி படுத்துகின்றன..
 
'காட்டு சிருக்கி'யில் பாடல் கூடவே வரும் அந்த வாத்தியங்களின் இசை.. வார்த்தைகளுடன் அதன் சங்கமம்.. அற்புதம்..
 
'கள்வரே' பாடலின் மென்மை, அப்படியே வருடி சொக்க வைக்கிறது (படுத்து கேட்டால் தூங்கி விடலாம்).
 
'கெடாக்கறி' கல்யாண பாடல் ஜாலியாக செல்கிறது, 'யாரோ யாரோடி' மாதிரி.
 
'வீரா' - 'என் யுத்தம் நீ செஞ்சா, நீ ராமன் தான்.. ராவணன் தான்' என்று சொல்வது, 'செ'யின் quote போல இருக்கிறது.. இடையில் வரும் 'குடியே மிஸ்தி...' என்பது போல ஏதோ ஒன்றை பாடும் குரலும் அதை தொடரும் இசையும் (ட்ரைலரில் வரும்).. கேட்டு பாருங்கள்..
 
'உசிரே போகுதே' ஆணின் தாபத்தை அருமையாக சொல்கிறது.. மிக மெதுவாக, உச்ச குரலில், வேகமாக என்று அவன் மன நிலை போலவே நகரும் பாடல்.. இது தான் பெஸ்ட் என்று சொல்ல முடியாது.. இந்த படத்தில் எல்லாமே எனக்கு பெஸ்ட் தான் (ஒரு வேளை, குருட்டு மணி/ரஹ்மான் வழிபாடு செய்கிறேனா? அதெல்லாம் தெரியாதுபா)..
 
'கோடு போட்டா' மிக முக்கியமான பாடலாக தெரிகிறது.. பென்னியின் இனிமையான குரலை விட கொஞ்சம் கரடு முரடான குரலாக இருந்தால் இன்னும் ஆக்ரோஷத்தை எடுத்து காட்டி இருக்கும்.. முதல் சரணத்திற்கு பிறகு வரும் அந்த பீஸ் (பீப்பி மாதிரி).. டாப் கிளாஸ்.. சில வரிகள் (கீழே கொஞ்சம்) எதிர்பார்ப்பை எக்கச்சக்கச்சக்கமாக கிளறி விட்டு விட்டது..
 
'வில்லை போல வளைந்த கூட்டம்,
வேல போல நிமிர்ந்து விட்டோம்'
 
'வேலி போட்டா, வெட்டி போடு'
 
'பாட்டன் பூட்டன் பூமிய யாரும்
பட்டா போட கூடாது'
முழுதும் படிக்க..

May 3, 2010

உலகின் கடைசி மனிதன்

கண் முழித்து பார்த்தால், வீடு கரகர என்று அமைதியாக இருந்தது (மின்விசிறி மட்டும்). முகம் கழுவலாம் என்று போனால், குழாயில் தண்ணி வரவில்லை. என்ன, யாரும் மோட்டர் போடவில்லையா? போய் போட்டு விட்டு வந்தான். பின்னால் போகும்போது தான் கவனித்தான். பக்கத்து வீடும் அமைதியாக இருந்தது. அதற்கு வாய்ப்பு இல்லாததால், சற்று குழம்பி, இவர்களுடன் சேர்ந்து வீட்டில் இருப்பவர்கள் வெளியில் சென்று விட்டார்களா? அப்படியே வெளியில் வந்து பார்த்தால்...

வீதி அம்போ என்று தனியாக இருந்தது. கொஞ்சம் வண்டிகள் நடு நடுவில் நிறுத்தப்பட்டு இருந்தன. ஒரு வேளை, விபத்து ஏதாவது நடந்து, தெருக்காரர்கள் எல்லாம் ஆஸ்பத்திரி போயிருக்கிறார்களா?

வண்டிகளை பார்த்தான். விபத்து நடந்த மாதிரி தெரியவில்லை. அப்படியே சுற்றிலும் உள்ள வீடுகள், கடைகள்.. எல்லாமே கூட்டு களவாணிகள் போல் கம் என்று இருந்தன. பக்கத்து தெரு, அடுத்தவர்கள் வீடு என்று நுழைந்து துழாவினான். ஒரு நாய் கூட இல்லை (நாயைத்தான்). மொபைலை எடுத்து ஒவ்வொரு நம்பராக முயற்சித்து, யாரும் எடுக்காமல் போகவே, நிறுத்திவிட்டு, வீட்டிற்கு திரும்பி வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். பிரதான சாலை முதல் முறையாக யாரும் கண்டு கொள்ளப்படாமல் அமைதியாக, வண்டிகள் அங்கங்கு சிதறி இருந்தது. நெஞ்சம் திடும் திடும் என்றது.

வட இந்தியாவில் இவனுக்கு தெரிந்த ஒரே நண்பனுக்கு கால் பண்ண, 'தி நம்பர் யு டயல்ட்..' என்று சொன்ன குரல் பயமுறுத்தியது. கொஞ்ச தூரம் போய் பார்த்து விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து, அவசரமாக டிவியை போட்டான். பாதி சேனல்கள் கறுப்பு வெள்ளை ரவைகளை காட்டியது. வந்த ஒரு சேனலில் (பொதிகை) யாரோ சொரியாசிஸ் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள்.

பயம் வர ஆரம்பித்தது. முன்னாடியே ஆரம்பித்து விட்டது. இப்போது கொஞ்சம் அதிகமாக, நிச்சயமாக.. ஆங்கில படங்களில் பார்த்தது போல் எல்லாரும் இல்லாமல் ஆகி, நான் தான் கடைசி மனிதனா? அப்படியும் நடக்குமா? கொஞ்சம் யோசித்தான். வந்து மோடத்தை ஆன் செய்து (ஆன் ஆனது) கம்ப்யூட்டரை இயக்கினான். ஒன்றும் தெரியவில்லை. நேற்றைய சம்பவங்களே (வரைக்கும்தான்) இருந்தன.

யாருமே இல்லையா..? அப்பா, அம்மா, பாட்டி, சுப்பு, ஜென்சி எல்லாம் போய் விட்டார்களா? சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்தான். எத்தனை மணி நேரம் ஓடி இருக்கும் தெரியவில்லை.
இப்படி உட்கார்ந்து இருந்தால் சரிப்படாது.. சட்டென்று எழுந்து, தேவைகளை யோசித்தான். முதலில் சாப்பாடு. கடையில் இருக்கும் பொருட்கள், 3 அல்லது 4 மாதங்களுக்கு தாங்குமா? மின்சாரம்.. கண்டிப்பாக வேண்டும். இன்னும் வந்து கொண்டு இருக்கிறது, எப்போது நிற்கும் என்று தெரியாது.. இணையத்தில், ஜெனரேட்டர்களை இயக்குவது எப்படி என்று தேடி, சேமித்து வைத்துக்கொண்டான். ஏதோ பொறி தட்ட, காப்பி போடுவது எப்படி, சோறு வைப்பது எப்படி என்று ஆரம்பித்து பல தரப்பட்ட விஷயங்களை சேமித்து வைத்தான். தனக்கு எத்தனை அன்றாடம் தேவைப்படும் விஷயங்கள் தெரியவில்லை என்பது குறித்து வெட்கப்பட்டான்.

ஏதோ ஒரு நம்பிக்கையில் வெளியே வந்து, தெருவில் சாவியுடன் டக்கென்று நின்று போயிருந்த பைக்கை எடுத்துக்கிளப்பினான். திரும்பவும் தெருத்தெருவாக சுற்றினான். உயிரினங்கள் எதுவும் தட்டுப்படவில்லை.. செடி கொடிகள் மட்டும் இருக்கின்றதே..?

தான் விரும்பிய தனிமை, அபிரிமிதமாகவே கிடைத்துவிட்டது என்று திடீரென்று சந்தோஷப்பட்டான். அது அவனுக்கே ஆச்சர்யத்தை அளித்தது. பயம் வேண்டுமானால் நிரம்ப இருக்கிறது.. எது ஆனாலும், தனிமையில் பைத்தியமாக மட்டும் ஆகக்கூடாது என்று நினைத்துக்கொண்டு திரும்ப வீடு சேர்ந்தான்.. பகலில் பரபரப்பாக ஓடிய பொழுது, இரவில் மெது.......வாக நடந்தது.. தூக்கம் வரவில்லை. ஒவ்வொரு நிமிடமும் பீதியுடன் கழிந்தது..

மறு நாள் காலை, இன்னும் இருந்தான்.. ஒரு முடிவுடன், கடைகளுக்கு போய் புத்தகங்களை சேமிததான். படங்களை, இசை சிடிக்களை  சேகரித்தான். கொஞ்சம் பெரிய பக்கத்து வீட்டை தனது இருப்பிடமாக மாற்றி, ஜெனரேட்டர் இணைத்து சரிபார்த்துக்கொண்டான்.. மனிதர்கள் இருக்கும் போதே வராத மின்சாரம் இன்னும் வந்து கொண்டு இருந்தது.. அறையை விட்டு வெளியே வராமல், பல வருடங்களாக புத்தகங்களை மட்டுமே படித்து வாழ்ந்தவர்களை பற்றி படித்திருப்பதை நினைவு படுத்தி, அப்படி நினைத்துக்கொண்டு போகிறது என்ற முடிவுக்கு வந்தான்.

அந்த பக்கத்து வீட்டு சோபாவில் சாய்ந்து கொண்டு, கண்கள் மூடி அமர்ந்தான். நிலைமையை சமாளிக்க கூட ஒரே ஒரு பெண் இருந்தால்? அது பேராசை.., ஒரு ஆண்? அட்லீஸ்ட், I am legend போல ஒரு நாய்..? ஆனால், எல்லாம் முடிந்து விட்டது என்று இன்னும் நம்ப முடியவில்லை. இப்படியா முடிய வேண்டும்? சுவடே இல்லாமல்..

ஏதோ ஒரு படத்தை போட்டு, மனிதர்களை பார்த்ததும் எச்சிலை முழுங்கி முழுங்கி, டிவியை நிறுத்தி விட்டான். உலகிலேயே தான் ஒரு ஆள் தான் பாக்கி என்ற பிரம்மாண்டத்தை அவனால் கிரகிக்க முடியவில்லை.

அறையை விட்டு வெளியே வராமல் பல வருடங்கள் இருந்தவர்களை திரும்பவும் நினைத்தான். அவர்களுக்கு வெளியில் ஆள் நடமாட்டம் இருப்பது தெரிந்து அல்லவா இருந்தார்கள்? இந்த அண்டத்திலேயே யாரும் இல்லை என்பது தெரிந்து எப்படி நிம்மதியுடன் இருக்க முடியும்? ராபின்சன் க்ரூசோவுக்கும், சக் நோலண்டிற்கும் மனிதர்கள் எங்கோ இருக்கிறார்கள் என்ற அந்த ஒற்றை நம்பிக்கையாவது இருந்ததே? தனக்கு?

ஏன்? ஒரு மனிதன் தனக்கே உரிய இலக்குடன், தனியாக இருக்க முடியாதா? ஒரு வேளை இலக்குகளையே, அடுத்தவர்களுக்காகத்தான் வைத்துக் கொள்கிறோமா? 'பார், நான் இலக்கை அடைந்து விட்டேன். முன்னேறி விட்டேன். ஜெயித்து விட்டேன்' என்பதெல்லாம் அடுத்தவர்களுக்கு சொல்ல மட்டும் தானா? தன்னுடைய சுய மகிழ்வுக்கு இல்லையா? அடுத்தவர்கள் பார்த்தால் தானே அந்த மகிழ்ச்சிக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது?

மண்டை குழம்பியது.. எதிலும் முழுதாக மனதை செலுத்த முடியவில்லை. ரஹ்மானின் உற்சாக பாடல்கள் கூட அழுகையை வரவழைத்தது.. கொஞ்சம் ரொட்டியை கொறித்துவிட்டு, கதவுகளை அடைத்துவிட்டு படுத்தான். அசந்து தூங்கிபோனான். கனவுகளும் அன்று அவனை புறக்கணித்தன..

மூன்றாம் காலை சிறிது புத்துணர்ச்சியாக, தெளிவாக யோசிக்க முடிந்தது. 'ஒரு' காரை எடுத்துக்கொண்டு, தனக்கு தேவையான பொருட்கள் என்று எது எல்லாம் தோன்றுகிறதோ, அதை எல்லாம் சேமித்தான். கூட ஒருத்தராவது இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டான்.

********

ஓடியே விட்டது 2 வருடங்கள்.. இப்போது எல்லாம் 'யாராவது இருக்கிறார்களா' பற்றி அதிகம் சிந்திப்பது இல்லை. ஆனால் அடிக்கடி காரணம் இல்லாமல் அழுவது உண்டு. இப்போது தேர்ந்த விவசாயியாகவும் ஆகியவன், அன்றைய அறுவடையை முடித்துக்கொண்டு தனது இருப்பிடத்திற்கு திரும்பினான்.

பிடித்த புத்தகங்களை எல்லாம் வேகமாக முடித்து விடுகிறான். எங்கே எல்லா புத்தகங்களும் முடிந்து விடுமோ என்று வேகத்தை குறைத்துக்கொண்டு படித்தான். நிச்சயமாக வேறு யாரும் கிடையாது என்று தெரிந்து இருந்தது. பாதுகாப்பிற்கு காவல் நிலையத்தில் எடுத்த துப்பாக்கிகளை வைத்திருக்கிறான் ஆனாலும் என்ன என் இலக்கு? யாருக்காக இவை எல்லாம்? என்று ஒரு வெறுமை எப்போதும். அவனுடைய இருப்பிடத்தை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வளர்த்து, ஒரு ராஜாங்கமே நடத்திக்கொண்டு இருந்தான். இந்த விஷயத்தில் கர்வம் தான்.

********

கடைசியாக அழுதது எப்போது என்று நினைவில்லை. எதிர் பார்த்ததை விட வேகமாக 5 வருடங்கள் ஓடி விட்டது. தனக்கு என்று ஒரு சுழற்சியை உருவாக்கி கொண்டு அவன் பாட்டுக்கு இருந்தான். புத்தகங்களாலா தெரிய வில்லை, ஒரு ஞானி போல் தேஜஸ் அவன் முகத்தில்.
ஆனால், கொஞ்ச நாட்களாக, ஆரம்ப காலத்தில் இருந்த அந்த காரணம் புரியாத பயம் திருப்பி வர ஆரம்பித்தது. என்ன காரணம் என்று ஊகிக்க முடியவில்லை. கொஞ்சம் தீவிரமாக ரோந்து வர ஆரம்பித்தான்.

*********

வழக்கம் போல் சுற்றி வந்து கொண்டிருக்க.. திடீரென ஒரு நாள், சிலிர்க்க வைத்த அந்த காட்சி. இரண்டு கால்களில்.. ஒரு உருவம். வந்து கொண்டிருந்தது. திகைத்து போய், துப்பாக்கியை எடுத்து தயார்படுத்தினான். மனித உருவம் தான். ஒரு பெண். மிகவும் சோர்ந்து போய்.. நெடு நாட்கள் சாப்பிடாமல் இருப்பதை போல். முதல் முறையாக, ஒரு அசையும் உயிரை பார்க்கிறான்.

பலம் எல்லாம் இழந்து போய் எங்கே மூர்ச்சையாகி விடுவோமோ என்று பயந்தான். இல்லை கூடாது.. அவளை நோக்கி கை அசைத்தான். அவள் தட்டு தடுமாறி.. இவன் அருகில் வந்தாள்.

'பசிக்குது.. சாப்பிட எதாச்சும் இருக்கா? '

அமைதியாக பையில் இருந்த சோளத்தை எடுத்து கொடுத்தான். சாப்பிட்டு விட்டு தண்ணி குடித்தாள்.

'எங்க இருந்து வர?'

'ரொம்ப தூரத்துலேர்ந்து..'

'நீ மட்டும் தானா?'

'இல்ல.. ஒரு நூறு பேர் கிட்ட இருக்காங்க.. எல்லாம் பின்னாடி வராங்க'

முகம் இருண்டது. இல்லை.. இல்லை. இப்படி நடக்க முடியாது. முடியவே முடியாது. இப்படியும் இருக்குமா? இது என் இடம்..

'மரியாதையா வேறு எங்கயாச்சும் போயிடுங்க' என்று கண்ணில் நீர் மறைக்க கத்தி விட்டு.. தன் இடத்திற்கு போய் தாழிட்டுக்கொண்டான்.

ஜன்னல் வழியே, தெருவை நோக்கி தயாராக இருந்தது.. ஒரு துப்பாக்கி..!


முழுதும் படிக்க..

May 1, 2010

ஔவையார் விண்வெளி ஆராய்ச்சியாளரா?

'அண்ணே, ஔவையார் பெரிய விண்வெளி ஆராய்ச்சியாளர்னு கண்டு பிடிச்சிருக்கேன்' என்றபடியே ஓடி வந்தான் மானஸ்தன்.

இவனை பற்றி நன்றாக தெரிந்தவர் ஆதலால், மணி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், 'என்னடா சொல்ற' என்றார்.

 'ஔவையார் பெரிய விண்வெளி ஆராய்ச்சியாளர்னு கண்டு பிடிச்சிருக்கேன்' என்று மறுபடியும் அதையே சொன்னான்.

'டேய் டகால்டி மண்டையா.. எத வச்சி சொல்றனு கேக்கறேன்?'

'அண்ணே.. இங்க்லீஷ்காரனே கண்டு புடிச்சு சொல்லி இருக்கான். ஆனா நம்ப ஆளுங்க அத கண்டுக்காம உட்டுட்டாங்க..'

'டேய் பில்ட் அப் குடுக்காம மேட்டர சொல்லு' என்றார் மணி.

சிறிது நேரம் தீவிர யோசனைக்கு பிறகு..

இந்த கவிதை வரிய பாருங்கண்ணே..
'டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்..
ஔவை வொண்டர் வாட் யூ ஆர்..'

'பாருங்க அந்த இங்க்லீஷ் கவிஞன் நம்ப பாட்டி ஏதோ ஒரு நட்சத்திரத்த பத்தி ஆராய்ச்சி பண்ணினத எவ்வளோ அழகா சொல்றான்.. அனேகமா இவன் எந்த நூற்றாண்டோ இந்தியாவுக்கு வருகை செஞ்சு இருக்கான்.. அதை கண்டு புடிச்சு...'
என்று மானஸ்தன் ஆதாரங்களை அடுக்கிக்கொண்டே போக.., மணி உருட்டுக்கட்டையை தேடிக்கொண்டு இருந்தார்.
.
.
.


ஔவையார் அந்த நட்சத்திரத்த ஆராய்ச்சி செய்த போது எடுத்த படம்


 
*******

டிஸ்கி: இன்னும் கொஞ்ச நாள்ல இலக்கியவாதி ஆன பிறகு, இப்படி மொக்கைகளை போட முடியாது ஆகையால்.. இப்போதே போட்டுக்கொள்கிறேன்..
முழுதும் படிக்க..

Apr 26, 2010

சில பாடல்களும் எண்ணங்களும்..

ரொம்ப நாள் கழித்து, கிழக்கு சீமையிலே படத்தில் கத்தாழங்காட்டு வழி பாடலை பார்த்தேன்.. ஒரு பெண் மணம் முடித்து புகுந்த வீடு போகும் போது, அண்ணனும் தங்கையுமாக தங்கள் மனதில் உள்ள வலியை (பிரிவு என்றாலே வலிதானே?)  பாடுவதாக இருக்கும். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க, இருவர் உள்ளம் மட்டும் பழைய நினைவுகளை நினைத்து அழும்..

இனி, நான் என் வீட்டில் இருக்க போவதில்லை என்ற உண்மை அவளை தாக்கும் அந்த பொழுதில், கண்ணீரை அடக்க முடியுமா..? பாடல் படமாக்கப்பட்ட விதமும் நன்றாகவே இருந்தது..ஜெயச்சந்திரன் குரலில், மிகவும் அற்புதமாக உயிர் பெறும் அந்த பாடல்.. இந்த வரிகளை பாருங்கள்..
வாசப்படி கடக்கையிலே வரல்லியே பேச்சு..
பள்ளபட்டி தாண்டிப்புட்டா பாதி உயிர் போச்சு..

இது நாள் வரையில் தான் வளர்ந்த வீட்டை விட்டுவிட்டு, வேறு வீடு போகும் பெண்ணின் உள்ளம் எப்படி இருக்கும்? முற்றிலும் புதிய சூழலை அவளால் எப்படி எதிர்கொள்ள முடிகிறது? இது எனக்கு என்றுமே பெரும் வியப்பை அளிக்கும் விஷயங்கள்.. இது போன்ற பல சமயங்களில் கள்ள சந்தோஷம் அடைந்து கொள்வதும் உண்டு, நல்ல வேளை ஆணாக பிறந்தோம் என்று..!

*****
அப்புறம் ஜெயச்சந்திரன் குரலில் ஏதோ ஒன்று உள்ளது.. காந்தம் காந்தம் என்று சொல்வார்களே.. அது போல.. சமீபமாக அவர் பாடிய இன்னும் சில பாடல்கள் - என் மேல் விழுந்த (மே மாதம்).. ஒரு தெய்வம் தந்த (கன்னத்தில் முத்தமிட்டால்)..

சில நாட்கள் கழித்து கருத்தம்மா பாடல்களையும் கேட்டேன். 'போறாளே பொன்னுத்தாய்' இரண்டு வெர்ஷனும் இரண்டு எக்ஸ்ட்ரீம்.. அப்புறம், இதில் வரும் காடு பொட்டகாடு.. விவசாயிகளின் வலியை அற்புதமாக விவரிக்கும் வரிகள். இந்த பாடலை இத்தனை நாளாக எப்படி கேட்காமல் விட்டேன் தெரியவில்லை. கேட்டு பாருங்களேன்..
 
"வானம் பாத்து வாழும் பூமி
தூங்கி போச்சு எங்க சாமி"


"ஆறு எங்கே ஆறு அட போடா வெட்க கேடு
மழை வந்தா தண்ணி ஓடும்..
மறு நாளே வண்டி ஓடும்"
 
"பட்ட மரத்து மேலே,
எட்டி பார்க்கும் ஓணான் போலே,
வாழ வந்த பூமி மேலே..."
முழுதும் படிக்க..

Apr 19, 2010

பிடித்த படம் - Shawshank Redemption (ஷாஷன்க் ரிடம்ப்ஷன்)

'சிறைக்குள் இருக்கும் எல்லாரும் கெட்டவங்க இல்லை. வெளியில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியன்கள் இல்லை' என்பது படத்தின் உட்கரு. ஆனால் எனக்கு படத்தில் பிடித்தது- ஒரு மனிதன் வாழ்க்கையில் எதை இழந்தாலும், 'நம்பிக்கை' இழக்காமல் இருந்தால் போதும் என்பதே. மற்றும் ஞயாயம் இறுதியில் வென்றே தீரும் என்ற இயற்க்கையின் தீர்ப்பு. மற்றும் விடா முயற்சி.. தன்னம்பிக்கையின் சக்தி.. இன்னும் பல 'மற்றும்'கள்.. இத்தனை விஷயங்களையும் போகிற போக்கில், அலுக்காமல், விளக்காமல் சொல்லிவிட்டு போய் விடுகிறார்கள்.


முழுக்க முழுக்க சிறைச்சாலை தான் களம். சிறையின் நுட்பமான அவலங்களை, அப்பட்டமாக நமக்கு காட்டுகிறது படம். முதலில், (கதையின் நாயகன் போலவே) எல்லாவற்றையும் ஒரு வித சந்தேகத்துடன்/வெறுப்புடன் பார்க்கும் நாம், போக போக சிறையின், கைதிகளின் கூட்டாளிகளாகி விடுகிறோம். அவர்களை விறும்ப ஆரம்பிக்கிறோம்.

ஒரு களத்தின் நுணுக்கமான விஷயங்களை ரத்தமும் சதையுமாக சொன்னால் மட்டும் யதார்த்த படம், சிறந்த படமாகி விடாது. அந்த களத்தின் மூலம் சொல்ல வருகிற விஷயம் மற்றும் சொல்லப்படும் விதம்- அதில் தான் உன்னதம் இருக்கிறது. 'ஷாஷங்க்'கில் படத்தை எடுத்திருக்கும் விதம் மற்றும் இதன் மிக மிகச்சிறப்பான வசனங்கள்- இந்த படத்தை மகத்தான ஒன்றாக ஆக்குகிறது. ஒவ்வொரு காட்சியின் நேர்த்தியிலும் தான் படத்தின் பிரம்மாண்டம் காட்டப்படுகிறது.

***

கதை சுறுக்கம் (சரி..கொஞ்சம் பெருசு தான்) இங்கே.. (கலரில் உள்ளது திருப்பு முனை காட்சிகள்.. படம் பார்க்காதவர்கள் அதை மட்டும் படிக்க வேண்டாம்)..

படம் ஆரம்பம் ஒரு கோர்ட்டு தீர்ப்பு நாளில்.. கடைசி கட்ட வாதங்கள் 'திறமையாக' நடத்தப்பட்டு.. தனது மனைவி மற்றும் அவளின் காதலனை கொன்றதற்காக நாயகனுக்கு (ஒரு பிரபல வங்கி அதிகாரி.. கொலைகளை தான் செய்ய வில்லை என்று மறுத்தும்..) இரட்டை ஆயுள் வழங்கப்படுகிறது. ஷாஷங்க் என்ற சிறைச்சாலைக்கு அனுப்ப படுகிறார்.

அங்கு இருக்கும் கைதிகள், புதிதாக வருபவர்களை வரவேற்கிறார்கள். அவர்களுக்குள் வழக்கமாக நடக்கும் ஒரு போட்டி- புதியவர்களில் யார் முதலில் அழப்போகிறார்கள் என்பது. 'ரெட்' என்ற கைதி, நாயகனின் மேல் பந்த்யம் கட்டுகிறார். சிறையில் நுழைந்த புதியவர்களின் தடுமாற்றம்.. மிகுந்த கடவுள் பக்தியுடன் பார்க்க கொஞ்சம் நல்லவர் போல் இருக்கும் வார்டன் அவர்களை வரவேற்கிறார்.. பார்மாலிடீஸ் முடிந்து செல்லில் அடைக்கப்படுகிறார்கள். முதல் இரவில் அவர்களில் ஒருவன் அழுகிறான். கத்துகிறான் (நாயகன் அல்ல). நான் இங்கு இருக்க வேண்டியவன் இல்லை என்று கதறுகிறான். கடுப்பான 'தலைமை காவல் அதிகாரி' அழுதவனை போட்டு உதைத்து, உதைத்து.. உதைத்து .. கொன்றே விடுகிறான்.

அடுத்த நாள் காலையில், நாயகனின் சாதத்தில் புழு இருக்கிறது. ஒரு சக கைதி அதை எனக்கு தருகிறாயா? என்று கேட்டு, தன் வாயருகே கொண்டு போகும் போது, ஒரு கொடுமையான ஜெயில் சூழலை காண தயாராகிறோம். அடுத்த காட்சியிலேயே, அந்த புழுவை, தன் பையில் இருக்கும் ஒரு சிறு பறவைக்கு கொடுக்கும் போது.. அவர்களும் மனிதர்கள் தான் என்று சுலபமாக உணர்ந்து கொள்கிறோம்.

ரெட், சிறையின் அண்ணாச்சி. யாருக்கு எது வேண்டுமோ வெளியில் இருந்து கடத்திக்கொண்டு உள்ளே விற்பவர். நாயகன் அவரிடம் போய், எனக்கு ஒரு சிறு உளி வேண்டும் என்று கேட்கிறார். 'இதை வைத்து ஓட்டை போட்டு தப்பிக்க நினைக்கிறாயா?'  என்று கேட்கும் ரெட், அந்த சின்ன உளியை பார்க்கும் போது புரிந்து கொள்கிறார். இது நாயகனின் கற்கள் செதுக்கும் பொழுது போக்கிற்கு என்று உணர்கிறார். மேலும், இதை வைத்து குழி தோண்டி தப்பிப்பதென்றால், 600 வருடங்கள் ஆகும் என்றும் உணர்கிறார்.


சரியான வாய்ப்பை சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த நொடி கடந்து விட்டால், திரும்பி பிடிக்க முடியாது. இப்படி ஒரு வாய்ப்பு, நாயகனுக்கு கிடைக்கிறது- ஒரு நாள், கட்டடத்தின் மேற் கூரையை செப்பனிடுவதற்காக ஆள் எடுக்கிறார் வார்டன். வழக்கம் போல் ரெட் மற்றும் அவர் கூட்டாளிகள் செலக்ட் ஆகிறார்கள். அந்த இடத்தில் காவல் அதிகாரி (ஒருத்தனை அடித்தே கொன்ற அதே 'தலைமை' தான்) தனது வரிப்பிரச்சனையை சொல்லி புலம்புகிறார். இதை கேட்டுக்கொண்டிருக்கும் நாயகன், துனிந்து, முன்னே சென்று நான் இதை சரி செய்ய முடியும் என்று சொல்கிறார். ஆத்திரமடையும் தலைமை, மாடியில் இருந்து அவனை தள்ளி விட வரும் போது, எப்படி இதை சரி செய்ய முடியும் என்று அவசர அவசரமாக சொல்லி, பதிலுக்கு தன் நன்பர்களுக்கு பியர்கள் வேண்டும் என்று கேட்டு, ஒப்புதலும் வாங்கி விடுகிறார்.  சிறைக்குள் நண்பர்களை பெருவதற்காண நாயகனின் உத்தி இது  என்று ரெட் உணர்கிறார்.

கொஞ்ச நாள் கழித்து, ரெட்டிடம் ஒரு சினிமா நடிகையின் போஸ்டர் கேட்கிறார் நாயகன். வாங்கி தன் செல்லில் ஒட்டியும் வைத்துக்கொள்கிறார். செல் இன்ஸ்பெக்ஷன் என்று சொல்லி வார்டன் நாயகன் அறைக்கு வந்து, போஸ்டர் முதலியவற்றை பார்த்து.., இருக்கட்டும் பரவாயில்லை என்று சலுகை அளிக்கிறார். அவனுக்கு லைப்ரரியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் அளிக்கிறார். ஆனால், சிறை அதிகாரிகளின் கணக்கு வழக்குகளை பார்த்துக்கொள்ளத்தான் அங்கு மாற்றப்பட்டதை பின்பு தெரிந்து கொள்கிறார் நாயகன். அனைத்து அதிகாரிகளின் (வார்டன் உட்பட) கணக்குகளையும் கவனிக்கிறார். வருடங்கள் கரைகின்றன.

வார்டன் இந்த சமயத்தில், கைதிகளை வைத்து பல திட்டங்களை வகுக்கிறார். இதன் மூலம் நிறைய பணம் வருகிறது லஞ்சமாக.. கருப்பு பணங்களை நிர்வகிக்கும் பொறுப்பும் நாயகனுக்கே வருகிறது. திறம்பட செய்கிறார் ('வெளியில் இருக்கும் வரை உண்மையான ஒருத்தனாக இருந்தேன்.. உள்ளே வந்து திருட்டு தனங்களை செய்கிறேன்'). இல்லாத ஒரு மனிதனை உருவாக்கி, அவன் பெயரில் பணம் போட்டு வைக்கப்படுகிறது. வார்டன் பணக்காரனாக ஆகி வருகிறார். இந்த நிலையில், புதிதாக வருபவர்களில், ஒரு இளம் கைதி, நாயகன்-ரெட் செட்டில் சேர்கிறான். ஒரு நாள், நாயகனின் கதையை கேட்கும் அவன், இதற்கு முன்னால் தான் இருந்த சிறையில் ஒரு சக கைதி சொன்னதை சொல்கிறான். அதாவது நாய்கனின் மனைவி மற்றும் அவள் காதலனை கொன்றது அந்த சக கைதியே என்பது. இந்த இடத்தில் ரெட்டுடன் சேர்ந்து நாமும் அதிர்கிறோம் (இது வரையில் நாயகன் உண்மையிலேயே கொலை செய்தாரா இல்லையா என்பது தெளிவாக தெரியாது). இதை போய் வார்டனிடம் சொல்ல, அவர் நாயகனை தண்டிப்பதுடன், அந்த இளம் கைதியையும் போட்டு த்ள்ளுகிறார்.


தண்டனை முடிந்து வரும் நாயகன் (அதாவது சிறைக்குள்ளேயே கொடுக்கப்படும் கொடூர சப்-தண்டனை), ரெட்டிடம் தன் மனைவி இறந்ததற்க்கு தானும் ஒரு வகையில் காரணம் தான், அவளை மகிழ்ச்சியாக வைக்கவில்லை. அதற்கான தண்டனையாக இதை ஏற்றுக்கொள்கிறேன் என்றும் சொல்கிறார். மேலும், தனக்கு மெஃஸிகோவில், பசிபிக் கடலில் இருக்கும் ஊரில் போய் வாழ்க்கையை கழிப்பது தான் கனவு என்பதை சொல்கிறார். இதை கேட்ட ரெட், வீண் கனவுகளில் கவனம் செலுத்தாதே, இருப்பதை வைத்து சந்தோஷப்படு என்று அறிவுறுத்துகிறார். மிகுந்த வேதனையுடன் நாய்கன், என்றாவது ரெட் வெளியே வந்தால், பஃஸ்டனில் இருக்கும் ஒரு பெரிய மரத்தடியில் இருக்கும் சிறிய பெட்டி ஒன்றை போய் எடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறார். ரெட் சம்மதிக்கிறார்.


நாயகனின் வருத்ததை புரிந்து கொள்ளும் அவர் கூடடாளிகளிடம், அவன் வித்தியாசமாக நடந்து கொள்வதாக ரெட் சொல்கிறார். அதற்கு ஒரு நண்பர், 'ஐயையோ, அவன் 6 அடி நீளத்துக்கு ஒரு கயிறு வேண்டும் என்று கேட்டான், நானும் கொடுத்தேன்' என்று சொல்கிறான். ரெட் கலவரமாகிறார். வழக்கம் போல், வார்டன் அறையில் அவரின் கணக்கு வழக்குகளை முடித்து விட்டு, தாமதமாக வரும் நாயகனை தனது செல்லில் இருந்து கவலையுடன் பார்க்கிறார் ரெட். இரவு இறுக்கமாக கழிகிறது. அடுத்த நாள். அனைத்து கைதிகளும் வெளியில் வர அழைக்கப்படுகிறார்கள் வழக்கம் போல். நாயகன் வர வில்லை. போய் பார்த்தால்......

நாயகனின் அறை காலியாக இருக்கிறது (20 வருடங்கள் கழித்து முதல்முறையாக). வார்டன் முதற்கொண்டு அனைவரும் வந்து பார்க்கிறார்கள். கத்துகிறார் வார்டன். ஒரு கல்லை எடுத்து அந்த சினிமா நடிகையின் போஸ்டர் மீது எரிகிறார். அது உள்வாங்குகிறது. பிரித்து பார்த்தால், அங்கு ஒரு குழி செல்கிறது... தப்பி விட்டார் நாயகன். எப்படி தப்பிக்கிறார் என்று காட்டப்படுகிறது. இந்த இடங்களில், நமக்கு வரும் உணர்ச்சிகள்.. இதுவல்லவா படம் என்று திகைக்க வைக்கிறது. வந்ததும், வார்டன் மற்றும் தலைமையின் வண்டவாளங்களை லெட்டர் மூலம் ஆதாரத்துடன் போட்டு கொடுக்கிறார். தலைமை கைது.. வார்டன் தற்கொலை..

ரெட் பரோலில் வெளி வந்து, நாயகன் சொன்னபடி அந்த மரத்தடி பெட்டியை பார்க்கிறார். அதில் இருக்கும் பணத்தை வைத்து, நாயகன் இருக்கும் மெஃஸிகோவிற்கு போய் சேர்கிறார். அவர்கள் இருவரும் சந்திப்பதுடன் படம் நிறைவு பெருகிறது.

***

சிறை வாசம் எப்படி கைதிகளை 'பிடித்துவைத்துக்' கொள்கிறது. உள்ளே மிகவும் திறமையான, முக்கியமானவர்கள் எப்படி வெளியில் செல்லாக் காசாகிறார்கள். கைதிகள் எப்படி மனிதர்களாக இருப்பதை மறக்க வைக்கப்படுகிறார்கள் (அந்த இசை ஒலிபரப்பும் காட்சி).. கடவுள் பக்திக்கும் நல்லவர்களாக இருப்பதற்கும் சம்பந்தமில்லை (இது எனக்கு எப்போதுமே வியப்பைத்தான் தருகிறது.. கடவுளுக்கு மிகவும் பயப்படும் ஒருவர், எப்படி தீமைகளை செய்கிறார்?) வருடக்கணக்காக உள்ளே இருந்து வாழ்க்கையை தொலைப்பவர்கள்.. இன்னும் பல பல உள்ளது படத்தில்... இங்கு கொஞ்சம் தான் சொல்லி இருக்கிறேன்..


உதாரணம் இந்த ஒரு காட்சி- பரோலில் வெளியே வருவதற்கு ஒரு நேர்முகம் நடக்கும், 10 வருடத்திற்கு ஒரு முறை. ரெட் ஒவ்வொரு முறையும் போய், நான் திருந்தி விட்டேன் என்று சொல்லுவார். ஒவ்வொரு முறையும் ரிஜெக்ட் செய்து விடுவார்கள். கடைசி முறை, 40 வருட சோகத்தையும் சேர்த்து வெடிப்பார். ஆனால் விட்டு விடுவார்கள். எப்படி? அவர் பேசியதாலா? இல்லை, எப்போதும் போல் இல்லாமல், இந்த தடவை ஒரு இளம் டீம் நேர்முகத்திற்கு வந்ததாலா (முதல் முறையாக ஒரு பெண்ணும் அதில்)? அதிலும் அந்த டீம் தலைவர், Please sit down என்று கூறுவார்.. இப்படி பல விஷயங்களை யோசிக்க வைத்து விடுகிறார்கள்..

நம்பிக்கை என்பது எப்படி எந்த நிலையிலும் உதவுகிறது. ஏன் எனக்கு மட்டும் இப்படி/இதற்கு மேல் முடியாதுப்பா என்று நம்பிக்கையை இழப்பவர்கள்..  செய்யாத தப்புக்காக இரட்டை ஆயுள் வாங்கியும் நம்பிக்கையுடன் அதை எதிர்கொள்ளும் நாயகனின் இந்த கதையை கண்டிப்பாக பார்க்க வேண்டும். அந்த கதாபாதிரம் எனக்கு ஆதர்சமாக தெரிகிறது.

'சிறைக்குள் இருக்கும் எல்லாரும் கெட்டவங்க இல்லை. வெளியில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியன்கள் இல்லை' என்ற அந்த கருத்து, இன்றைய தேதிக்கு மிகவும் அர்த்தமுள்ளதாகிறது அல்லவா..!
முழுதும் படிக்க..

Apr 17, 2010

தனிமை

ரயில் பயணத்தில், வெளியில் தெரியும் இருட்டில், திடீரென்று ஒரு வீடு தெரிகிறது. அதில் ஒற்றை மஞ்சள் பல்பு. வெளியில் ஒரு குழந்தை வேறு உட்கார்ந்திருக்கிறதே? சட்டென்று பார்வையில் இருந்து அக்காட்சியை மறைத்து விடும் ரயிலின் வேகம். இப்படி தனிமையை அப்பட்டமாக பார்த்ததில் ஒரு பிரமிப்பு கலந்த பரிதாபம். அந்த வீட்டை சுற்றி பல கிலோ மீட்டருக்கு ஒன்றும் கிடையாது. அப்படி ஒரு வீட்டை பார்த்தவுடன் பல கேள்விகள் மனதில்..

அந்த தனி வீட்டில் இருப்பவர்கள் உடம்பு சரி இல்லை என்றால், எங்கே போவார்கள்? குழந்தை எங்கு படிக்கும்? மளிகை சாமான் எல்லாம் எங்கு வாங்குவார்கள்? அய்யோ..இப்படி 'கவிதை'த்தனமாக யோசித்துக்கொண்டு இருக்கும் போதே.. ரயிலில் 3 பேர் உட்கார வேண்டிய இடத்தில் நாலு பேர் உட்கார்ந்து, போட்டு நசுக்கி உயிரை வாங்குகிறார்கள். மனிதர்களை விட்டு தனியாக எங்காவது ஓடிப்போய் விட்டால் என்ன என்று, இப்போது யோசித்து கொண்டிருக்கிறேன்.
முழுதும் படிக்க..

Apr 9, 2010

இன்பர்மேஷன் கலெக்டரா நீங்கள்?

அவருக்கு தெரியாமல் அவர் சுற்று வட்டாரத்தில் ஒரு அணுவும் அசையாது (பாய்ஸ் செந்தில் மாதிரி), என்பது போல் ஒரு காரெக்டர் எல்லா க்ரூப்பிலும் நிச்சயம் இருக்கும்.  உதாரணத்திற்கு, என் அலுவலகதில் இருக்கும் இப்படி ஒரு 'கலெக்டர்'ஐ பற்றி சொல்கிறேன். யார் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் பூர்விகம்/ஜாதி மதம், சொத்து போன்ற எல்லா விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பான். இவனுடைய தகவல் திரட்டும் திறனை கண்டு பல முறை ஆச்சர்யம் (அதிர்ச்சி) அடைந்துள்ளோம்.

இவனால் பெரிதும் பாதிக்கப்படுவது, வெளியில் தெரியாமல் காதலித்துக்கொண்டு இருக்கும் ஜோடிகளே. 'டேய், நேத்து அவுங்க ரெண்டு பேரையும் மாம்பலம்ல பார்த்தேன்' என்று குண்டை வீசுவான். வேறு ஒரு பெண்ணை வேறு யாருடனோ ECR-இல் பார்ப்பான். (நீ மட்டும் எப்படிடாப்பா எல்லா இடத்திலும் எல்லாரையும் பார்க்க முடியுது? வீட்டிலேயே இருக்க மாட்டியா?)

சில சமயங்களில், அவனின் கணிப்பு நம்மை அதிர வைக்கும். 'அவன் கூடிய சீக்கிரம் வேற கம்பனி போயிடுவான்' என்பான். சொல்லி வைத்த மாதிரி அவன் சொன்னவனும் 'மச்சி, அடுத்த வாரம் கெளம்பறேன்' என்று வந்து நிற்பான். 'தெரியுமே' என்று சொன்னால், 'எப்படி டா? நான் யார்ட்டயும் சொல்லவே இல்லையே?' என்று கேட்க, நாங்கள் கலெக்டரை பார்த்து ரகசியமாக சிரிப்போம்.


ஓயாத தேடல் இருந்தால் ஒழிய இந்த அளவிற்கு செய்தி சேகரிக்க முடியாது. விலை நிலவரங்கள், எந்த கடை எங்கு இருக்கிறது, எந்த பஸ் அங்கு போகும், ஹோட்டல், அங்கு எந்த உணவு நன்றாக இருக்கும் என்பது போன்ற நுணுக்கமான பொதுச்செய்திகளும் உண்டு. நான் எப்படி ஆள் என்றால், ஐஸ்லாந்தின் தலை நகரம் என்ன என்றால் சொல்லி விடுவேன். ஆனால் எங்கள் தாஹ்சில்தார் ஆபீஸ் எங்கே என்று தெரியாது! என்னை போன்ற ஆசாமிகளுக்கு கூகுளை போன்று தகவல்களை அள்ளி இறைப்பான்.

இவனை போன்றோரின் ஒரு குணாதிசியம், இவனை போன்றே இருக்கும் மற்றவர்களுடன் 'டச்'சிலேயே இருப்பான். இரண்டு டேட்டாபேஸ்களும் தங்கள் தகவல்களை 'sync' செய்து கொள்வது உண்டு. அந்த நேரத்தில் அங்கே இருந்தீர்கள் என்றால், ஒரே தகவல் சரவெடி தான். இன்னொரு குணாதிசியம் - போலீஸை போன்ற சந்தேகம். எல்லாவற்றையும் சந்தேகப்படுவான். அவ்வளவு சீக்கிரம் சொல்கிறதை ஒப்புக்கொள்ள மாட்டான். ஒரு உதாரணம். எங்கள் செட்டில் எது செய்தாலும் மற்றவர்களுக்கு சொல்லி விட வேண்டும். அப்படி சொல்லாமல் செய்த ஒருவன் கலெக்டரிடம் எப்படி சிக்குகிறான் பாருங்கள்.

அவன்: நேத்து எனக்கு ஆக்சிடன்ட் ஆய்டுச்சு.. கைல பாரு காயம்.
நம் கலெக்டர்: அடாடா.. எங்க டா..
அவன்: கடலைகாரத் தெரு கிட்ட..
நம் கலெக்டர்: அந்த பக்கம் உனக்கு என்ன வேலை..? நீ வெளியவே வர மாட்டியே?
அவன்: அது அது (மாட்டினான்)
நம் கலெக்டர்: அங்க எனக்கு தெரிஞ்சு 'தம்பு IAS அகாடமி' தான் இருக்கு. நீ IASக்கு தான படிக்க போற? எனக்கு ஏற்கனவே அந்த டவுட் இருந்துச்சு. இப்போ கன்ஃபர்ம்டு. ('ஆர்குட்டில் IAS கம்யூனிட்டில இருக்கறத பாத்துட்டேன்')
அவன்: ஆக்சிடன்ட் ஆய்டுச்சு, சொல்லலாம்னு பாத்தா.. இப்படி பண்றியேடா.. என்று சோக மூஞ்சியுடன் இடத்தை காலி செய்தான். இப்படி சமய, சந்தர்ப்ப, சாட்சிகளை வைத்து அவன் குற்றவாளியை (!) கண்டுபிடிப்பது சுவாரஸ்யம்.

இப்படி ஜாலியாக போய்க்கொண்டு இருக்கும் போது, திடீர் என்று வேறு வேலைக்கு போய் விட்டான் (அவன் செய்வதை கண்டு பிடிக்க முடிய்மா?). அவன் போனதில் எங்கள் எல்லாருக்குமே வருத்தம் தான். பின்ன? தகவல்கள் தெரியாமல் பாதிக்கப்படுவது நாங்கள் தானே? அவன் போன கொஞ்ச நாளில், எங்கள் டீமில் ஒருத்தி இப்படி ஃபோன் பேசிக்கொண்டு இருந்ததாக சொன்னார்கள்..

'என்னது? அவன் உன் கம்பெனிக்கா வந்துருக்கான்? அடப்பாவமே..? யார் என்ன பண்றாங்க, எங்க சுத்துறாங்க, இந்த டீடைல்ஸ் கலெக்ட் பண்றது தான் அவன் வேலையே. ஹா ஹா ஹா' என்று நிம்மதியாக சிரித்தாளாம்.
பாதிக்கப்படுவர்களுக்கு தான் தெரியும் கஷ்டம்.

--------

வந்தது வந்துட்டீங்க.. அப்படியே என் முந்தைய பதிவையும் படிச்சுட்டு போய்டுங்க
முழுதும் படிக்க..