Oct 27, 2011

ஓ குடிகாரர்களே..


நான் குடிக்கிறேன் என்று தாங்கள் குடிப்பதை தொடர்ந்து பறைசாற்றி, குடியைப்பற்றி வித விதமாக தொடர்ந்து பேசி அதன் மீது ஒரு செயற்கையான கவர்ச்சியை உண்டு பண்ணுபவர்களுக்கு என்ன நோக்கம் இருக்கும்? அந்த 'மகிழ்ச்சியை' பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அதை எடுத்துக்கொள்ள முடியுமா? தான் செய்யும் செயலை ஒரு இயல்பானதாக ஆக்க செய்யும் முயற்சியா? குற்ற உணர்ச்சி அண்டாமல் இருக்க, கூட்டணி சேர்க்கிறார்களா?
அல்லது குடிக்காமல் இருக்கும் சிலரையும் எப்படியாவது குடிக்க வைத்துவிட வேண்டும் என்ற வெறியா? இந்த கடைசி விஷயம் சின்னபிள்ளைதனமான குற்றச்சாட்டாக தெரிந்தாலும், குடிக்கும் பலரிடம் இந்த வெறியை பார்த்திருக்கிறேன். குடிக்காதவர்களை மட்டம் தட்டுவது, அது ஏதோ பெரிய சாதனை போல் பேசி தங்களை cool dudes ஆக காட்டிக்கொள்வது, குடிக்க ஆபர் பண்ணுவது, மறுத்தால் கேவலமாக பேசுவது என்று இவர்கள் விடாமல் பண்ணும் சேட்டைக்கு வேறு ஏதும் காரணம் இருக்குமா?

மேலும் ஒரு தடவை குடித்துவிட்டு நிறுத்தி விடுவேன் என்று ஆரம்பிப்பவர்கள் இதுவரை அப்படி நிறுத்தி பார்த்ததில்லை. அது வாசலிலேயே ட்ராபிக் போலீஸ் நிற்கும் ஒரு ஒன்-வே பாதை.
உடனே இது அசைவம் சாப்பிடுபவர்களை சைவம் சாப்பிடுவார்கள் குறை சொல்வது போல் உள்ளது என்று திசை திருப்ப வேண்டாம். டாக்டர் அசைவம் சாப்பிடலாம் என்று சொல்வார், குடி என்று சொல்வாரா? குடிப்பது அவரவர் விருப்பம் தான், அதில் மாற்று கருத்தில்லை. அதை விளம்பரப்படுத்தி, திணிப்பதில் தான் சங்கடம். இது குடிமகன்கள் பலருக்கு பிடிக்காமல் போகலாம். அடுத்தவரை தொல்லை பண்ணாமல் மொடாக்குடி குடிக்கும் உண்மையான குடிமக்களை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து வணங்குகிறேன். குடிக்காத சிறுபான்மியருக்கு இதை சமர்ப்பிக்கிறேன். வாழ்க உங்கள் தன்னடக்கம்! 
பி.கு. புனிதராக உருவெடுக்கவோ, சைடு டிஷ் கேட்டதற்கு, குடிச்சாதான் தருவேன் என்று சொன்னதால் தான் இதை போடுகிறேன் என்றோ யாரும் தவறாக எண்ணக்கூடாது.

முழுதும் படிக்க..