Dec 30, 2011

நேரம்


'உனக்கு விடுதலை' என்று வார்டன் மைக் சொன்னது சசிக்கு விளங்கவில்லை. இந்த உலகில் இருந்து என்பதை கவித்துவமாக சொல்கிறாரா? 

'புரியலை மைக்'

'எனக்கும் புரியலதான் சசி, இன்னிக்கு உன்னை தூக்கில் போட முடியாது. அதுமில்லாம உனக்கு விடுதலை'

'இது ஏதாவது நான் சோகமாக சாகக்கூடாதென்று விளையாட்டா?'

'நம்பு சசி. உனக்கு டிசம்பர் 30 தூக்கு என்று தீர்ப்பு. ஆனா இன்னிக்கு இங்க செஞ்ச நேர மாற்றத்தில் அந்த தேதியே வரவில்லை. இன்னிக்கு டிசம்பர் 31'.

'விடுதலை எப்படி சாத்தியம்? நான் செத்தாதான் இந்த சமொவா தீவுக்கு சுபிட்சம்னு சொல்றவங்க இதுக்கு ஒப்புக்கொள்ள மாட்டார்களே?'

'நீ விபத்தில் வண்டி ஏற்றி அவர்களை கொன்றதற்கு தூக்கு தேவையில்லைன்னு நம்புகிறவர்களில் நானும் ஒருவன். தூக்கின் பிறகு கைதியை எரிக்கவோ புதைக்கவோதான் இங்கு விதிகள் உண்டு. 'தூக்கின் பிறகு உயிருடன்' இருப்பவருக்கு இல்லை. ஆனால் நீ இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறாய்'

தங்கள் அட்டவணையில் ஒரு நாள் இல்லாதது பற்றியோ, இல்லாத நாளால் வாழ்க்கையே திருப்பிக்கிடைத்த சசி பற்றியோ சமோவா தீவுவாசிகள் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. என்றும் போல் அன்றும் நேரம் மாறாமல் மாறிக்கொண்டுதானிருந்தது.
முழுதும் படிக்க..

Dec 29, 2011

கொத்து பரோட்டா விருதுகள் - 2011

சிறந்த படம்: எங்கேயும் எப்போதும்


சிறந்த திரைக்கதை/இயக்குனர்: சரவணன் (எங்கேயும் எப்போதும்)

சிறந்த நடிகர்: தனுஷ்

சிறந்த நடிகை: அஞ்சலி, இனியா, ரிச்சா

சிறந்த இசையமைப்பாளர்: ஜிப்ரான் (வாகை சூட வா)

சிறந்த பாடல்: போறானே போறானே(வாகை சூட வா) 

சிறந்த பாடகர்: நரேஷ் ஐயர் (கோ)

சிறந்த பாடகி: நேகா பசின் (போறானே)

சிறந்த ஒளிப்பதிவு: ராம்ஜி

சிறந்த புத்தகம்: நினைவுகள் அழிவதில்லை (நிரஞ்சனா)*

சிறந்த தளம்**: http://amuttu.net

முக்கிய நிகழ்வு: உலகமயமாக்கலின் சரிவு 

சிறந்த மனிதர்: மக்கள்*** 

சிறந்த தொலைகாட்சி: புதிய தலைமுறை

சிறந்த விளையாட்டு நிகழ்வு: இந்தியா வென்ற உலக கோப்பை

சிறந்த முகநூல்காரர்: விஜயலட்சுமி (http://www.facebook.com/vglakshmy)

சிறந்த ட்விட்டர்: அராத்து (@araathu)

சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி: Big Bang Theory

---------
பி.கு:
இது முற்றிலும் தனி நபர் விருப்பங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. பெருவாரி விருப்பம் கணக்கில் கொள்ளப்படவில்லை. சில தலைப்புகள் விடுபட்டு போயுள்ளன. முடிந்தால் அடுத்த பதிவில்..

*நான் படித்தது இந்த வருடம்தான்
**இந்த வருடம் அதிகம் பதிவுகள் படிக்க முடியவில்லை. படித்தவரைக்கும்..
***தன்னிச்சையான மக்கள் போராட்டங்கள் தெரியப்படுத்தும் கூட்டு சக்தி

முழுதும் படிக்க..

Oct 27, 2011

ஓ குடிகாரர்களே..


நான் குடிக்கிறேன் என்று தாங்கள் குடிப்பதை தொடர்ந்து பறைசாற்றி, குடியைப்பற்றி வித விதமாக தொடர்ந்து பேசி அதன் மீது ஒரு செயற்கையான கவர்ச்சியை உண்டு பண்ணுபவர்களுக்கு என்ன நோக்கம் இருக்கும்? அந்த 'மகிழ்ச்சியை' பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அதை எடுத்துக்கொள்ள முடியுமா? தான் செய்யும் செயலை ஒரு இயல்பானதாக ஆக்க செய்யும் முயற்சியா? குற்ற உணர்ச்சி அண்டாமல் இருக்க, கூட்டணி சேர்க்கிறார்களா?
அல்லது குடிக்காமல் இருக்கும் சிலரையும் எப்படியாவது குடிக்க வைத்துவிட வேண்டும் என்ற வெறியா? இந்த கடைசி விஷயம் சின்னபிள்ளைதனமான குற்றச்சாட்டாக தெரிந்தாலும், குடிக்கும் பலரிடம் இந்த வெறியை பார்த்திருக்கிறேன். குடிக்காதவர்களை மட்டம் தட்டுவது, அது ஏதோ பெரிய சாதனை போல் பேசி தங்களை cool dudes ஆக காட்டிக்கொள்வது, குடிக்க ஆபர் பண்ணுவது, மறுத்தால் கேவலமாக பேசுவது என்று இவர்கள் விடாமல் பண்ணும் சேட்டைக்கு வேறு ஏதும் காரணம் இருக்குமா?

மேலும் ஒரு தடவை குடித்துவிட்டு நிறுத்தி விடுவேன் என்று ஆரம்பிப்பவர்கள் இதுவரை அப்படி நிறுத்தி பார்த்ததில்லை. அது வாசலிலேயே ட்ராபிக் போலீஸ் நிற்கும் ஒரு ஒன்-வே பாதை.
உடனே இது அசைவம் சாப்பிடுபவர்களை சைவம் சாப்பிடுவார்கள் குறை சொல்வது போல் உள்ளது என்று திசை திருப்ப வேண்டாம். டாக்டர் அசைவம் சாப்பிடலாம் என்று சொல்வார், குடி என்று சொல்வாரா? குடிப்பது அவரவர் விருப்பம் தான், அதில் மாற்று கருத்தில்லை. அதை விளம்பரப்படுத்தி, திணிப்பதில் தான் சங்கடம். இது குடிமகன்கள் பலருக்கு பிடிக்காமல் போகலாம். அடுத்தவரை தொல்லை பண்ணாமல் மொடாக்குடி குடிக்கும் உண்மையான குடிமக்களை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து வணங்குகிறேன். குடிக்காத சிறுபான்மியருக்கு இதை சமர்ப்பிக்கிறேன். வாழ்க உங்கள் தன்னடக்கம்! 
பி.கு. புனிதராக உருவெடுக்கவோ, சைடு டிஷ் கேட்டதற்கு, குடிச்சாதான் தருவேன் என்று சொன்னதால் தான் இதை போடுகிறேன் என்றோ யாரும் தவறாக எண்ணக்கூடாது.

முழுதும் படிக்க..

Aug 30, 2011

திருத்தகம்

(இக்கதை திண்ணை இதழில் வந்துள்ளது. திண்ணையில் படிக்க இங்கு செல்லவும் http://puthu.thinnai.com/?p=3594)

                                                                  **********

சண்முகம் முடி திருத்த ஏன் அன்றைய தினத்தை தேர்ந்தெடுத்தார்? அவரே இதை பின்னாட்களில் பலமுறை நினைத்து நொந்து கொண்டதுண்டு. இத்தனைக்கும் அது ஒரு ஞாயிறு. மயிறு திருத்த அனைவரும் படையெடுத்து தள்ளுமுள்ளு ஏற்படுத்தும் நாள். இருந்தாலும் அடிக்கும் வெயிலினாலும், நகக்கண் எல்லாம் கருப்பானதாலும் இதற்க்கு மேல் தள்ளி போட முடியாமல் அந்த ஞாயிறுதான் என முடிவெட்ட முடிவெடுத்தார் திரு சண்முகம்.

அன்று எனப்பார்த்து சில்லரையாக ஐம்பது ருபாய் இல்லாமல் போனது அவர் அப்பா செய்த பாவம் (முடி வெட்ட அவர் செலவு செய்ததே இல்லை). ஒரே ஒரு ஆயிரம் ரூபாய் தாள் மட்டுமே இருக்க, சரி அப்படியே சில்லறை மாத்திய மாதிரியும் ஆயிற்று என்று சமாதானப்படுத்தி அதையே எடுத்துக்கொண்டார். எங்கு போவதென்பது எப்போதும் ஏற்படும் குழப்பம். அந்த ஏ.சி கடையில் கொள்ளை அடிப்பான். வழக்கம் போல இங்கனயே போவோம் என்று 'லோக்கல்'  கடைக்குள் நுழைந்தார். கூட்டம் நிறையவே இருந்தது. தினத்தந்தியை வாசித்தார். 

மேலும் மேலும் வந்து கொண்டே இருந்தனர். முன்பதிவு செய்து விட்டு சென்ற சிலர் நடுவில் புகுந்தனர். தன்னையே நொந்து கொண்டு, தந்தி புகைப்படங்கள் தெளிவில்லாமல் இருப்பதை திட்டியபடியே திரும்பவும் புரட்ட ஆரம்பிக்க, சார் நீங்க வாங்க என்று கடைக்கண் பார்வையை வீசினார் ஆரோக்கியம் (முடி திருத்துபவர்). ஆஹா பரவாயில்லை என்று ஒரு பதைப்புடன் ஓடி போய் ஆரோக்கியம் மனசு மாறுமுன் அமர்ந்து கொண்டார். படபடப்பு அடங்க கொஞ்ச நேரம் ஆனது. வழக்கம் போல் சுமாராக வெட்டி முடித்து, இவர் வேண்டாம் என்று சொல்வதற்குள் மண்டையில் போட்டு கொத்தி சடக் சடக் என்று முகத்தை பிடித்து திருப்பி சொடுக்கு எடுத்து எல்லாம் முடிந்துவிட்டது..

பாக்கெட்டை துழாவி ஆயிரம் ரூபாயை நீட்ட, ஆரோக்கியத்தின் சிவந்த கண்கள் ஒரு நொடி ஒளிர்ந்து அடங்கியது. 'சில்ற இல்லையா?' என்று கேட்டபடியே வாங்கி கொண்டார். கடையில் ஒருவர் தான் பாக்கி. 'சரி, மாத்திட்டு வந்திடறேன்' என்று சொல்லியபடியே பக்கத்து கடைக்கு போனார். அங்கு ஏதோ சொல்ல, அப்படியே கெளம்பி தெரு முனைக்கு சென்று மறைந்தார்.
காத்திருந்து கடுப்பாகி கடைசி ஆளும் பொலம்பிக்கொண்டே போய் விட்டார். அவருக்கென்ன, இன்று இல்லை என்றால் நாளை வெட்டிக்கொள்ளலாம். எனக்கு? இருந்து மீதிப்பணத்தை வாங்கிக்கொண்டே போய் விடுவோம் என்று தோன்றியது. இருட்ட தொடங்கியது. என்னடா இன்னும் காணோம் என்று எரிச்சல் அதிகரிக்க, சரி வீட்டுக்கு போய் குளித்து விட்டு வந்து வாங்கிக்கொள்வோம் என்று வந்து வேக வேகமாக குளித்துவிட்டு திருப்பி கடைக்கு சென்றார். 

கடை மூடி இருந்தது. துணுக்குற்று, சரி நாளை வாங்கிக்கொள்ளலாம் என்று திரும்பினார். அடுத்தநாள் மதியம் வரை கடை மூடி இருந்தது. முதல் முறையாக அவருக்குள் சின்ன கவலை. மாலை கடை திறந்ததும் முதல் ஆளாக நுழைந்தார் சண்முகம். ஆரோக்கியம் இவரை தெரியாத மாதிரி பார்க்க, இவருக்கு பகீர் என்றது. 'என்ன சார் இந்த பக்கம் என்று கேட்டு விடுவானோ'?

'வாங்க சார், என்ன நேத்து நீங்க பாட்டுக்கு போயிட்டீங்க'?
'நான் இங்கதான் இருந்தேன், நீங்கதான் ரொம்ப நேரம் வரல. அப்புறம் நான் போயிட்டு வரதுக்குள்ள கடைய சாத்திட்டீங்க'
'அப்படியா? இல்லீங்களே?'
இவருக்கு 'பணமா, இல்லீங்களே?' என்று கேட்டது. எச்சிலை விழுங்கி, 'சரி மிச்சம் கொடுக்குறீங்களா?' என்றார்.
'என்ன சார், இப்போதான கடை தொறந்தேன். இன்னிக்கு நைட்டு வாங்க, வர காச கொடுத்திடறேன்'.
'இல்ல, எனக்கு வேல இருக்கு, இப்போவே கொடுங்க'
'இப்போ இல்ல சார்' என்று பாக்கெட்டை கொட்டி ஆரோக்கியம் சைகை காட்ட,
'சரி நைட்டு வரேன். மறக்காம எடுத்து வைங்க' என்று நைட்டு டான் என்று போய் நின்றார்.
'ஒன்னும் கலக்சன் ஆகலைங்க, நாளைக்கு வாங்க கண்டிப்பா எடுத்து வைக்கிறேன்'.

இவருக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. இப்படியே நாளுக்கு நாள் விதவித காரணங்கள் சொல்லி வெறுப்பேத்தினான். ஆயிரம் ரூபாயையும் விட முடியவில்லை. அடுத்து முடி வெட்டும் காலமே வந்து விட்டது. சரி முடி வெட்டியே கழிக்கலாம் என்று அவனிடமே போய் வெட்ட, அவன் வெட்டி முடித்ததும் 'சார் காசு?' என்றான்.
'ஹலோ? நீங்க எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கணும் மறந்து போச்சா?'
'இல்ல இல்ல, சில்லறை இருக்கானு கேட்டேன்'.

அடுத்து முறை இதே மாதிரி முடி வெட்டி பணம் கழிக்க இவர் போனதும் அவன் எரிச்சலுடன் வெளியில் சென்று வெகு நேரம் வரவில்லை. அடுத்தநாளும் போய் உட்கார்ந்து, அவன் அதே மாதிரி வெளியேறினான். இவர் விடாமல் பின் தொடர்ந்தார். அவன் நேராக டாஸ்மாக் சென்று பாருக்குள் புகுந்தான். இவருக்கு அந்த ஆயிரம் ரூபாய் எந்த கல்லாவுக்கு போயிருக்கும் என புரிந்தது.

அவன் குடும்பத்திற்கு உபயோகப்பட்டிருந்தால் கூட விட்டிருக்கலாம். போயும் போயும் குடிப்பதற்கு செலவாகியிருக்கிறது.. சரி இத விட்றதில்லை, முடி வெட்டி கழித்தே தீர்வது என்று அவனிடமே விடாமல் சென்றார். முடி தனியாக, ஷேவிங் தனியாக, ட்ரிம்மிங் என்று எல்லாத்துக்கும் போனார். ஆயிரம் ரூபாயை எப்போது கழித்து முடிக்க? வாரா வாரம் ஏறும் விலைவாசி நம்பிக்கை கொடுத்தது சீக்கிரம் கழித்துவிடலாம் என்று. இவரைக்கண்டாலே ஆகாதவன் போல் முறைக்க ஆரம்பித்தான் ஆரோக்கியம்.

இந்த காலகட்டத்தில் அவருக்கு பகீர் என்று ஒரு பயம் வந்தது. கழுத்தில் கத்தி இருக்கும் போது, வேண்டுமென்றே லேசாக கீறி விட்டால்? இல்லை முகத்தில் கோடு போட்டால்? இந்த யோசனை மண்டைக்குள் புகுந்த பிறகு அவரால் முடி வெட்டி முடியும் வரை நிம்மதியாக உட்கார முடியவில்லை. ஒவ்வொரு தடவையும் எப்போடா முடியும் என்று இருந்தது.

நாள் ஆக ஆக இந்த பீதி அதிகமாகி, ச்சீ போனால் போகுது. இப்படி பயந்துகிட்டே வெட்டிக்கிட்டு இருக்க முடியாது என்று கடையை மாற்றினார். அப்போதும் விடாமல் கொஞ்ச நாள் கேட்டுதான் பார்த்தார். 'இதோ இந்த ஸ்டூல் ரெண்டை கொண்டு போய்டுவேன் பாத்துக்கோங்க' என்றெல்லாம் வேறு மிரட்டினார். மழலையின் மிரட்டலை லாவகமாக கையாளும் அம்மாவை போல் இவரை சுலபமாக புரந்தள்ளினான் ஆரோக்கியம்.

அதன்பிறகு ஒரு தடவை அவரது அலுவலகத்தில் குடிப்பது தவறா என்ற வாதத்தில், தவறுதான் என்று ரத்தம் கொதிக்க இவர் போட்ட சண்டையை பார்த்து பலர் ஆச்சர்யப்பட்டனர்.

முழுதும் படிக்க..

Mar 21, 2011

வலைப்பூவுக்கு எப்படி பெயர் வைக்க கூடாது?

சில வருடங்களுக்கு முன்..

சில பல வலைப்பூக்களை படித்து கொண்டிருந்துவிட்டு, சரி ஒன்றை ஆரம்பித்து விடுவோம் என்று முடிவு செய்தாயிற்று. ப்ளாகரில் லாகின் பண்ணி படிவ பூர்த்தியின் போது தான் உரைத்தது பெயர் ஒன்றை வைக்கணும் என்று. நாமதான் மெயின் மேட்டரை விட இந்த மாதிரி துணை பிரச்சினைகளுக்கு அதிக நேரம் ஒதுக்குபவராயிற்றே? எந்த பெயர் யோசித்தாலும் (புலம்பல்கள், கிறுக்கல்கள் இத்யாதிகள்) அதில் ஏற்கனவே யாராவது பதிவு செய்திருந்தார்கள். 'பூதம்', 'ரத்தக்காட்டேரி' உட்பட அனைத்தையும் பிடித்து வைத்திருந்தார்கள்.

சரி இப்போ வேண்டாம் என்று மூடி வைத்து விட்டு பெயர் யோசிக்க ஆரம்பித்தேன். அதோடு மறந்தேன். அடுத்த நாளும் படிவ பூர்த்திவரை யோசிக்காமல், அந்த நேரம் மட்டும் யோசித்ததில் ஒன்றும் தோன்றவில்லை.

அந்த நேரம் பார்த்து நண்பன் 'வாங்கடா, முனியாண்டி விலாஸ்கு சாப்பிட போகலாம்'. அந்த பெயரை கேட்டதும் மறுபேச்சில்லாமல் நானும் சுற்றி இருந்தவர்களும் கிளம்பினோம். பேசாமல் அந்த பெயரையே வைத்தால் என்ன? பொறுமை, பொறுமை.. யோசிப்போம்.


எங்களை பார்த்ததுமே மாஸ்டர் கல்லில் கொத்து குத்த ஆரம்பித்தார். கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் சிநேகமாக சிரித்தார் (நாங்கள் போக ஆரம்பித்த பிறகு அந்த கடையில் நிறைய மாற்றங்கள். டைல்ஸ் ஒட்டி, நெறைய Fan வாங்கி மாட்டி. மொத்தத்தில் சுபிட்சம்).

சூடாக கொத்து வந்தது. 'ஆயிரம் இருந்தாலும் கொத்து கொத்துதான்' என்றான் ஒருவன். தினம் இதை சாப்பிடுகிறோம், அலுக்கவில்லையே? அதுவும் பல வஸ்த்துக்களை போட்டு ஒன்றாக கலந்து, கொத்தி, சுவையாக பரிமாறுவதை பார்த்தால்........  மின்னல் வெட்டு!

திரும்பி ஆபிஸ் வந்து சேரில் உட்கார்ந்ததும் படிவத்தை வேக வேகமாக பூர்த்தி செய்து கொத்து பரோட்டா என்று பெயர் சூட்டினேன் (அந்த பெயரும் புக்ட. அதனால் லிங்க் பெயர் மட்டும் தமிழ் கொத்து).

இதில் இருந்து நான் சொல்ல வருவது என்னவென்றால், புதிதாக வலைப்பூ தொடங்கும் தமிழர்களே தமிழர்களே, வலைப்பூவிற்கு பெயரை கொஞ்சம் யோசித்து வையுங்கள். ஏதோ ஒரு நாள் சாப்பிட்டு பிடித்த உணவு பதார்த்த பெயரை எல்லாம் வைத்தால் பின்னால் வருத்தப்பட வேண்டிவரும்.

முழுதும் படிக்க..