May 27, 2010

பதினைந்தாவது ரொபாட்

அதி ரகசியமான அந்த ப்ராஜக்ட் வெர்ல்ட் ரூல் (Project World Rule) பற்றி  தெரிந்தவர்கள் மொத்தம் எட்டு பேர் தான். அமெரிக்க அதிபருக்கு கூடத்தெரியாது. இந்த ப்ரொக்ராமின் அ,ஆ வான மார்க் மற்றும் டாம் அன்று இறுதி கட்ட செக்கப்கள் முற்றிலும் முடிந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள். படபடப்புடந்தான்.

"இது எந்த அளவு வெற்றி பெரும் என்று நினைக்கிறாய் டாம்?", கேட்டவர் மார்க்.
"முழு வெற்றி தான். கூடிய சீக்கிரம் இந்த உலகமே நம் சொல் படி ஆட போகிறது!" உணர்ச்சிவசப்பட்டார் டாம்.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் உருவாக்கப்பட்ட 15 ரொபாட்களும், பதினைந்து முக்கிய நாடுகளில் விடப்படும். ஐந்து வருடங்கள் கழித்து, அந்தந்த நாடுகளின் சக்தி வாய்ந்த பதவிகளில் இருந்து கொண்டு, அந்த நாட்டையே ஆட்டி படைக்கக் கூடியவர்களில் ஒருவராக ஆக வேண்டும் (ஆகும்).. இதுவே அந்த பதினைந்து 'பேரின்' உள்ளே ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ப்ரொக்ராமின் சாராம்சம்.

"ஐந்து வருடங்களில் இவை அத்தகைய உயர்வை எட்ட வாய்ப்பு இருக்கு என்றா நினைக்கிறாய்?", இம்முறை சந்தேகத்துடன் டாம்.


"மனிதனின் சுய சிந்தனையும், மிஷினின் உண்டு - இல்லை என்கிற துல்லியமும் ஒரு சேர வாய்ந்தவை இவை. இந்த கூட்டின் சக்தி அளவிட முடியாதது டாம். அதுவும் இவைகளை செயற்கை என்று யாராலும் சொல்ல முடியுமா? இதோ 'இதுக்கு' இருக்கும் மீசையைப்பார்" ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இருக்கும் ரொபாட்டின் மீசையை த்டவிக்கொண்டே மார்க்.. டாமிற்கு இது எல்லாம் தெரிந்தாலும் கடைசி நேர படபடப்பை அடக்க யாரால் முடிகிறது?

ஒரு வழியாக எல்லாம் முடிந்தது. அந்தந்த நாடுகளில் கொண்டு போய் விடப்பட்டனர் அந்த பதினைந்து பேரும், அந்தந்த நாடுகளின் குடிமகன்களாக.

....

முதல் முறை பார்த்ததை விட, 5 வருடங்களில் கொஞ்சம் குண்டாகி விட்டிருந்தனர் மார்க்கும் டாமும்.. அவர்களின் கண்டுபிடிப்புகள் எந்த பதவியில் இருந்து, உலக நாடுகளை எப்படி ஆண்டு கொண்டு இருக்கிறது என்று ஆய்வு செய்து, அடுத்த கட்டத்திற்கு தயாராக 'உலகச் சுற்றுப்பயணம்' கிளம்பினர் இருவரும்.

"அவைகளின் நியூரல் நெட்வொர்க்கும் மனித மூலையை ஒத்து இருப்பதால், எல்லாம் ஒரே அளவு அறிவுடன் இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த பதினைந்தில் எது மிக அறிவானது, எது சக்தி வாய்ந்தது என்பதயும் பார்க்க வேண்டும்" பிளைட்டில் பாதி தூக்கத்தில் முனகிக்கொண்டார் டாம்.

முதலில் அவர்கள் இறங்கிய இடம் அவர்களின் தலை நகரான வாஷிங்டன். இவர்களின் 'அது' அந்த நாட்டின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராக இருந்தது.

"ஆகா. என்ன சக்தி வாய்ந்த பதவி? நாம் நினைத்ததை விட நம் ப்ராஜக்ட் பெரும் வெற்றி தான்" என்று ஆனந்த் குக்கூரலிட்டார் மார்க்.

அடுத்து ஐரோப்பா, சீனா, ஆஸ்திரேலியா என்று பயணப்பட்டனர். ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாப்பு அமைச்சர், பிரதமர், ராணுவ தளபதி (பாகிஸ்தான்) என்று விதவிதமான, சக்தி வாய்ந்த பதவிகளில் இருந்தார்கள் இவர்களின் கண்டுபிடிப்புகள்.

எல்லா நாட்டையும் முடித்துக் கொண்டு, கடைசியாக இந்தியா வந்து, அந்த பதினைந்தாவது ரொபாட் வீட்டின் முன் இறங்கியதுமே... இருவரும் சிறிது அதிர்ச்சி அடைந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பின்னே மத்த 14 நாடுகளில் பார்க்காத காட்சியை அல்லவா இங்கு கண்டனர்? அந்த 'வீட்டு அரண்மனையின்' வெளியே ஒரே மக்கள் கூட்டம். எக்கச்சக்க கார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டவை 'நானும் விஐபி தான்' என்று சொல்லிக்கொள்ளும் சிகப்பு விளக்கு பொருத்த பட்டவை.


"அதோ, அங்கு நிற்பவர் இவர்களின் பிரதமர் போல் அல்லவா இருக்கிறார்? அவரே வெளியில் காத்து கொண்டு இருக்கிறாரே? 'இவர்தான்' பதினைந்து பேரில் மிகுந்த சக்தி வாய்ந்தவராக இருக்க வேண்டும்.. எவ்வளவு கூட்டம்? " வாயை பிளந்தார் டாம்.

"ஆம். உண்மைதான். ஆனால், பிரதமரை விட உயர்ந்தவராக இருந்தாலும், இவர் எந்த பதவியில் இருக்கிறார் என்று தெரியவில்லையே?" என்றபடியே அங்கு இருந்த 'காரிய தரிசி'யிடம் உள்ளே சொல்லி அனுப்பினார் மார்க்.

அவர்கள் உடனே உள்ளே விடப்பட்டு, 'அவர்' எதிரில் நிற்க வைக்கப்பட்டனர்.

தன் ஒளி பொருந்திய கண்களை திறந்து, இவர்களை நோக்கி புன்முறுவல் பூத்தார் ஸ்ரீ ஸ்ரீ ரூபானந்த ஸ்வாமிகள்..


                                                                ************

டிஸ்கி: இது நான் ஏற்கனவே எழுதி வெளியிட்ட கதை தான். என்னடா இவன், எழுதியதே 25 பதிவுகள் தான் இருக்கும். அதற்குள் மீள் பதிவா என்று பெரியவர்கள் கோபித்துக்கொள்ளாமல், ஆதரவை 'அள்ளி' வழங்குமாறு கேட்டு கொள்கிறேன் ;)
முழுதும் படிக்க..

May 22, 2010

பாசக்கார பதிவர்களுக்கு பாராட்டு விழா..

மின்மினி.com என்ற வலைத்தள திரட்டி இருப்பதை கேள்வி பட்டு இருப்பீர்கள். இதைப்பற்றி சுருக்கமாக இங்கே படிக்கலாம். இதில் என்ன விஷயம் என்றால், முதல் 101 பதிவர்களை இலவசமாக இணைக்கிறார்கள். அதில் சில பிரபல பதிவர்களை அவர்களே தேர்ந்தெடுத்து இணைத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் அண்ணன் (நாந்தான்) இரண்டாம் வரிசையில் முதலில் இடம் பெற்றுள்ளேன்..

இதை பற்றி ஒரு துணுக்கு இந்த பதிவின் கடைசியில்...

                                                                ****************

முதல்முறையாக நமக்கு (வைர) விருது அளித்து அண்ணன் சைவகொத்துப்பரோட்டா பெருமை படுத்தி உள்ளார். அதுவும் சிறப்பாக எழுதுபவர்கள் என்று நம்மால் கருதப்படுவர்களுக்கு கொடுக்கலாம்.. அப்புறம் எப்படி எனக்கு கிடைத்தது என்று யோசித்து கொண்டு இருக்காமல், இதோ அந்த விருதை இவர்களுக்கு அளிப்பதில் நான் மேலும் பெருமைப்பட்டு கொள்கிறேன் -

ஜெய்
Illuminati
ஜெயந்தி
மகேஷ் : ரசிகன்
தக்குடுபாண்டி
பட்டாபட்டி
ருத்ர வீணை
prabhakaran


                                                                ****************

என்னது, இவன் பிரபல பதிவரா, இவனை எதற்கு 'மின்மினியில்' போட்டார்கள், ஏன், எப்படி என்று எல்லாம் பொங்க கூடாது.. நானே மெயில் அனுப்பி 'யப்பா என்னையும் சேர்த்துகோங்க' என்று கேட்டவுடன் இணைத்து விட்டார்கள் (ஹீ ஹீ). 101 பேருக்கு தான் இலவசம் என்பதால், முந்திக்கொள்ளுங்கள்..
முழுதும் படிக்க..

May 7, 2010

பிடித்த பத்தும்., ராவணன் பாடல்களும்..

பிடித்த பத்தை எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று இப்போது தான் தெரிகிறது.. பிடித்த படம், அதற்கு கீழே ஏன் என்று..

************

சபாஷ் மீனா
நகைச்சுவை, சிவாஜி (இயல்பான நடிப்பு), சந்திரபாபு

நாயகன்
மணி, கமல்

முள்ளும் மலரும்..
ரஜினி,ரஜினி,ரஜினி

அன்பே சிவம்
செவத்த அன்பு :)

பேசும் படம்
புதுமை

தில்லு முள்ளு
'வெண்கல கடையில் யானை புகுந்தது போல' படம்..

மௌன ராகம்
மென்மை, பெண்மை, பிளாஷ்பேக்

பம்பாய்
இரண்டாம் பகுதி (எதுக்குடாப்பா இதெல்லாம் என்று தோன்ற வைப்பதால்)

காக்க காக்க
ஸ்டைல், ஹீரோயிசம் (வித்அவுட் பன்ச் டைலாக்ஸ்)

16 வயதினிலே..
பேரை கேட்டாலே.. மழை வரும் போல இருக்குமே, அந்த வாசனை.

விட்ட படங்கள் என்னை மன்னிக்குமாக.. இதை எழுத அழைத்த ஜில்தண்ணி அவர்களுக்கு நன்றி..


************

இரண்டு நாட்கள் முன்னாடி இப்படி இல்லை - ராவணன் பாடல்கள் அனைத்தும் மிகவும் பிடிக்கிறது இன்று.. அதனால், எதுவாக இருந்தாலும் 'ஒரு' இரண்டு நாட்கள் கேட்டு விட்டு முடிவுக்கு வரவும். முடிந்தால் ஹெட் போனில் கேட்கவும் (எவ்வளவு வித்தியாசம்?).
சிறந்த இசையில், ஒரு மெல்லிய சோகம் நிச்சயம் இருக்கும் என்ற என் எண்ணத்தை இதிலும் சில பாடல்கள் உறுதி படுத்துகின்றன..
 
'காட்டு சிருக்கி'யில் பாடல் கூடவே வரும் அந்த வாத்தியங்களின் இசை.. வார்த்தைகளுடன் அதன் சங்கமம்.. அற்புதம்..
 
'கள்வரே' பாடலின் மென்மை, அப்படியே வருடி சொக்க வைக்கிறது (படுத்து கேட்டால் தூங்கி விடலாம்).
 
'கெடாக்கறி' கல்யாண பாடல் ஜாலியாக செல்கிறது, 'யாரோ யாரோடி' மாதிரி.
 
'வீரா' - 'என் யுத்தம் நீ செஞ்சா, நீ ராமன் தான்.. ராவணன் தான்' என்று சொல்வது, 'செ'யின் quote போல இருக்கிறது.. இடையில் வரும் 'குடியே மிஸ்தி...' என்பது போல ஏதோ ஒன்றை பாடும் குரலும் அதை தொடரும் இசையும் (ட்ரைலரில் வரும்).. கேட்டு பாருங்கள்..
 
'உசிரே போகுதே' ஆணின் தாபத்தை அருமையாக சொல்கிறது.. மிக மெதுவாக, உச்ச குரலில், வேகமாக என்று அவன் மன நிலை போலவே நகரும் பாடல்.. இது தான் பெஸ்ட் என்று சொல்ல முடியாது.. இந்த படத்தில் எல்லாமே எனக்கு பெஸ்ட் தான் (ஒரு வேளை, குருட்டு மணி/ரஹ்மான் வழிபாடு செய்கிறேனா? அதெல்லாம் தெரியாதுபா)..
 
'கோடு போட்டா' மிக முக்கியமான பாடலாக தெரிகிறது.. பென்னியின் இனிமையான குரலை விட கொஞ்சம் கரடு முரடான குரலாக இருந்தால் இன்னும் ஆக்ரோஷத்தை எடுத்து காட்டி இருக்கும்.. முதல் சரணத்திற்கு பிறகு வரும் அந்த பீஸ் (பீப்பி மாதிரி).. டாப் கிளாஸ்.. சில வரிகள் (கீழே கொஞ்சம்) எதிர்பார்ப்பை எக்கச்சக்கச்சக்கமாக கிளறி விட்டு விட்டது..
 
'வில்லை போல வளைந்த கூட்டம்,
வேல போல நிமிர்ந்து விட்டோம்'
 
'வேலி போட்டா, வெட்டி போடு'
 
'பாட்டன் பூட்டன் பூமிய யாரும்
பட்டா போட கூடாது'
முழுதும் படிக்க..

May 3, 2010

உலகின் கடைசி மனிதன்

கண் முழித்து பார்த்தால், வீடு கரகர என்று அமைதியாக இருந்தது (மின்விசிறி மட்டும்). முகம் கழுவலாம் என்று போனால், குழாயில் தண்ணி வரவில்லை. என்ன, யாரும் மோட்டர் போடவில்லையா? போய் போட்டு விட்டு வந்தான். பின்னால் போகும்போது தான் கவனித்தான். பக்கத்து வீடும் அமைதியாக இருந்தது. அதற்கு வாய்ப்பு இல்லாததால், சற்று குழம்பி, இவர்களுடன் சேர்ந்து வீட்டில் இருப்பவர்கள் வெளியில் சென்று விட்டார்களா? அப்படியே வெளியில் வந்து பார்த்தால்...

வீதி அம்போ என்று தனியாக இருந்தது. கொஞ்சம் வண்டிகள் நடு நடுவில் நிறுத்தப்பட்டு இருந்தன. ஒரு வேளை, விபத்து ஏதாவது நடந்து, தெருக்காரர்கள் எல்லாம் ஆஸ்பத்திரி போயிருக்கிறார்களா?

வண்டிகளை பார்த்தான். விபத்து நடந்த மாதிரி தெரியவில்லை. அப்படியே சுற்றிலும் உள்ள வீடுகள், கடைகள்.. எல்லாமே கூட்டு களவாணிகள் போல் கம் என்று இருந்தன. பக்கத்து தெரு, அடுத்தவர்கள் வீடு என்று நுழைந்து துழாவினான். ஒரு நாய் கூட இல்லை (நாயைத்தான்). மொபைலை எடுத்து ஒவ்வொரு நம்பராக முயற்சித்து, யாரும் எடுக்காமல் போகவே, நிறுத்திவிட்டு, வீட்டிற்கு திரும்பி வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். பிரதான சாலை முதல் முறையாக யாரும் கண்டு கொள்ளப்படாமல் அமைதியாக, வண்டிகள் அங்கங்கு சிதறி இருந்தது. நெஞ்சம் திடும் திடும் என்றது.

வட இந்தியாவில் இவனுக்கு தெரிந்த ஒரே நண்பனுக்கு கால் பண்ண, 'தி நம்பர் யு டயல்ட்..' என்று சொன்ன குரல் பயமுறுத்தியது. கொஞ்ச தூரம் போய் பார்த்து விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து, அவசரமாக டிவியை போட்டான். பாதி சேனல்கள் கறுப்பு வெள்ளை ரவைகளை காட்டியது. வந்த ஒரு சேனலில் (பொதிகை) யாரோ சொரியாசிஸ் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள்.

பயம் வர ஆரம்பித்தது. முன்னாடியே ஆரம்பித்து விட்டது. இப்போது கொஞ்சம் அதிகமாக, நிச்சயமாக.. ஆங்கில படங்களில் பார்த்தது போல் எல்லாரும் இல்லாமல் ஆகி, நான் தான் கடைசி மனிதனா? அப்படியும் நடக்குமா? கொஞ்சம் யோசித்தான். வந்து மோடத்தை ஆன் செய்து (ஆன் ஆனது) கம்ப்யூட்டரை இயக்கினான். ஒன்றும் தெரியவில்லை. நேற்றைய சம்பவங்களே (வரைக்கும்தான்) இருந்தன.

யாருமே இல்லையா..? அப்பா, அம்மா, பாட்டி, சுப்பு, ஜென்சி எல்லாம் போய் விட்டார்களா? சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்தான். எத்தனை மணி நேரம் ஓடி இருக்கும் தெரியவில்லை.
இப்படி உட்கார்ந்து இருந்தால் சரிப்படாது.. சட்டென்று எழுந்து, தேவைகளை யோசித்தான். முதலில் சாப்பாடு. கடையில் இருக்கும் பொருட்கள், 3 அல்லது 4 மாதங்களுக்கு தாங்குமா? மின்சாரம்.. கண்டிப்பாக வேண்டும். இன்னும் வந்து கொண்டு இருக்கிறது, எப்போது நிற்கும் என்று தெரியாது.. இணையத்தில், ஜெனரேட்டர்களை இயக்குவது எப்படி என்று தேடி, சேமித்து வைத்துக்கொண்டான். ஏதோ பொறி தட்ட, காப்பி போடுவது எப்படி, சோறு வைப்பது எப்படி என்று ஆரம்பித்து பல தரப்பட்ட விஷயங்களை சேமித்து வைத்தான். தனக்கு எத்தனை அன்றாடம் தேவைப்படும் விஷயங்கள் தெரியவில்லை என்பது குறித்து வெட்கப்பட்டான்.

ஏதோ ஒரு நம்பிக்கையில் வெளியே வந்து, தெருவில் சாவியுடன் டக்கென்று நின்று போயிருந்த பைக்கை எடுத்துக்கிளப்பினான். திரும்பவும் தெருத்தெருவாக சுற்றினான். உயிரினங்கள் எதுவும் தட்டுப்படவில்லை.. செடி கொடிகள் மட்டும் இருக்கின்றதே..?

தான் விரும்பிய தனிமை, அபிரிமிதமாகவே கிடைத்துவிட்டது என்று திடீரென்று சந்தோஷப்பட்டான். அது அவனுக்கே ஆச்சர்யத்தை அளித்தது. பயம் வேண்டுமானால் நிரம்ப இருக்கிறது.. எது ஆனாலும், தனிமையில் பைத்தியமாக மட்டும் ஆகக்கூடாது என்று நினைத்துக்கொண்டு திரும்ப வீடு சேர்ந்தான்.. பகலில் பரபரப்பாக ஓடிய பொழுது, இரவில் மெது.......வாக நடந்தது.. தூக்கம் வரவில்லை. ஒவ்வொரு நிமிடமும் பீதியுடன் கழிந்தது..

மறு நாள் காலை, இன்னும் இருந்தான்.. ஒரு முடிவுடன், கடைகளுக்கு போய் புத்தகங்களை சேமிததான். படங்களை, இசை சிடிக்களை  சேகரித்தான். கொஞ்சம் பெரிய பக்கத்து வீட்டை தனது இருப்பிடமாக மாற்றி, ஜெனரேட்டர் இணைத்து சரிபார்த்துக்கொண்டான்.. மனிதர்கள் இருக்கும் போதே வராத மின்சாரம் இன்னும் வந்து கொண்டு இருந்தது.. அறையை விட்டு வெளியே வராமல், பல வருடங்களாக புத்தகங்களை மட்டுமே படித்து வாழ்ந்தவர்களை பற்றி படித்திருப்பதை நினைவு படுத்தி, அப்படி நினைத்துக்கொண்டு போகிறது என்ற முடிவுக்கு வந்தான்.

அந்த பக்கத்து வீட்டு சோபாவில் சாய்ந்து கொண்டு, கண்கள் மூடி அமர்ந்தான். நிலைமையை சமாளிக்க கூட ஒரே ஒரு பெண் இருந்தால்? அது பேராசை.., ஒரு ஆண்? அட்லீஸ்ட், I am legend போல ஒரு நாய்..? ஆனால், எல்லாம் முடிந்து விட்டது என்று இன்னும் நம்ப முடியவில்லை. இப்படியா முடிய வேண்டும்? சுவடே இல்லாமல்..

ஏதோ ஒரு படத்தை போட்டு, மனிதர்களை பார்த்ததும் எச்சிலை முழுங்கி முழுங்கி, டிவியை நிறுத்தி விட்டான். உலகிலேயே தான் ஒரு ஆள் தான் பாக்கி என்ற பிரம்மாண்டத்தை அவனால் கிரகிக்க முடியவில்லை.

அறையை விட்டு வெளியே வராமல் பல வருடங்கள் இருந்தவர்களை திரும்பவும் நினைத்தான். அவர்களுக்கு வெளியில் ஆள் நடமாட்டம் இருப்பது தெரிந்து அல்லவா இருந்தார்கள்? இந்த அண்டத்திலேயே யாரும் இல்லை என்பது தெரிந்து எப்படி நிம்மதியுடன் இருக்க முடியும்? ராபின்சன் க்ரூசோவுக்கும், சக் நோலண்டிற்கும் மனிதர்கள் எங்கோ இருக்கிறார்கள் என்ற அந்த ஒற்றை நம்பிக்கையாவது இருந்ததே? தனக்கு?

ஏன்? ஒரு மனிதன் தனக்கே உரிய இலக்குடன், தனியாக இருக்க முடியாதா? ஒரு வேளை இலக்குகளையே, அடுத்தவர்களுக்காகத்தான் வைத்துக் கொள்கிறோமா? 'பார், நான் இலக்கை அடைந்து விட்டேன். முன்னேறி விட்டேன். ஜெயித்து விட்டேன்' என்பதெல்லாம் அடுத்தவர்களுக்கு சொல்ல மட்டும் தானா? தன்னுடைய சுய மகிழ்வுக்கு இல்லையா? அடுத்தவர்கள் பார்த்தால் தானே அந்த மகிழ்ச்சிக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது?

மண்டை குழம்பியது.. எதிலும் முழுதாக மனதை செலுத்த முடியவில்லை. ரஹ்மானின் உற்சாக பாடல்கள் கூட அழுகையை வரவழைத்தது.. கொஞ்சம் ரொட்டியை கொறித்துவிட்டு, கதவுகளை அடைத்துவிட்டு படுத்தான். அசந்து தூங்கிபோனான். கனவுகளும் அன்று அவனை புறக்கணித்தன..

மூன்றாம் காலை சிறிது புத்துணர்ச்சியாக, தெளிவாக யோசிக்க முடிந்தது. 'ஒரு' காரை எடுத்துக்கொண்டு, தனக்கு தேவையான பொருட்கள் என்று எது எல்லாம் தோன்றுகிறதோ, அதை எல்லாம் சேமித்தான். கூட ஒருத்தராவது இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டான்.

********

ஓடியே விட்டது 2 வருடங்கள்.. இப்போது எல்லாம் 'யாராவது இருக்கிறார்களா' பற்றி அதிகம் சிந்திப்பது இல்லை. ஆனால் அடிக்கடி காரணம் இல்லாமல் அழுவது உண்டு. இப்போது தேர்ந்த விவசாயியாகவும் ஆகியவன், அன்றைய அறுவடையை முடித்துக்கொண்டு தனது இருப்பிடத்திற்கு திரும்பினான்.

பிடித்த புத்தகங்களை எல்லாம் வேகமாக முடித்து விடுகிறான். எங்கே எல்லா புத்தகங்களும் முடிந்து விடுமோ என்று வேகத்தை குறைத்துக்கொண்டு படித்தான். நிச்சயமாக வேறு யாரும் கிடையாது என்று தெரிந்து இருந்தது. பாதுகாப்பிற்கு காவல் நிலையத்தில் எடுத்த துப்பாக்கிகளை வைத்திருக்கிறான் ஆனாலும் என்ன என் இலக்கு? யாருக்காக இவை எல்லாம்? என்று ஒரு வெறுமை எப்போதும். அவனுடைய இருப்பிடத்தை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வளர்த்து, ஒரு ராஜாங்கமே நடத்திக்கொண்டு இருந்தான். இந்த விஷயத்தில் கர்வம் தான்.

********

கடைசியாக அழுதது எப்போது என்று நினைவில்லை. எதிர் பார்த்ததை விட வேகமாக 5 வருடங்கள் ஓடி விட்டது. தனக்கு என்று ஒரு சுழற்சியை உருவாக்கி கொண்டு அவன் பாட்டுக்கு இருந்தான். புத்தகங்களாலா தெரிய வில்லை, ஒரு ஞானி போல் தேஜஸ் அவன் முகத்தில்.
ஆனால், கொஞ்ச நாட்களாக, ஆரம்ப காலத்தில் இருந்த அந்த காரணம் புரியாத பயம் திருப்பி வர ஆரம்பித்தது. என்ன காரணம் என்று ஊகிக்க முடியவில்லை. கொஞ்சம் தீவிரமாக ரோந்து வர ஆரம்பித்தான்.

*********

வழக்கம் போல் சுற்றி வந்து கொண்டிருக்க.. திடீரென ஒரு நாள், சிலிர்க்க வைத்த அந்த காட்சி. இரண்டு கால்களில்.. ஒரு உருவம். வந்து கொண்டிருந்தது. திகைத்து போய், துப்பாக்கியை எடுத்து தயார்படுத்தினான். மனித உருவம் தான். ஒரு பெண். மிகவும் சோர்ந்து போய்.. நெடு நாட்கள் சாப்பிடாமல் இருப்பதை போல். முதல் முறையாக, ஒரு அசையும் உயிரை பார்க்கிறான்.

பலம் எல்லாம் இழந்து போய் எங்கே மூர்ச்சையாகி விடுவோமோ என்று பயந்தான். இல்லை கூடாது.. அவளை நோக்கி கை அசைத்தான். அவள் தட்டு தடுமாறி.. இவன் அருகில் வந்தாள்.

'பசிக்குது.. சாப்பிட எதாச்சும் இருக்கா? '

அமைதியாக பையில் இருந்த சோளத்தை எடுத்து கொடுத்தான். சாப்பிட்டு விட்டு தண்ணி குடித்தாள்.

'எங்க இருந்து வர?'

'ரொம்ப தூரத்துலேர்ந்து..'

'நீ மட்டும் தானா?'

'இல்ல.. ஒரு நூறு பேர் கிட்ட இருக்காங்க.. எல்லாம் பின்னாடி வராங்க'

முகம் இருண்டது. இல்லை.. இல்லை. இப்படி நடக்க முடியாது. முடியவே முடியாது. இப்படியும் இருக்குமா? இது என் இடம்..

'மரியாதையா வேறு எங்கயாச்சும் போயிடுங்க' என்று கண்ணில் நீர் மறைக்க கத்தி விட்டு.. தன் இடத்திற்கு போய் தாழிட்டுக்கொண்டான்.

ஜன்னல் வழியே, தெருவை நோக்கி தயாராக இருந்தது.. ஒரு துப்பாக்கி..!


முழுதும் படிக்க..

May 1, 2010

ஔவையார் விண்வெளி ஆராய்ச்சியாளரா?

'அண்ணே, ஔவையார் பெரிய விண்வெளி ஆராய்ச்சியாளர்னு கண்டு பிடிச்சிருக்கேன்' என்றபடியே ஓடி வந்தான் மானஸ்தன்.

இவனை பற்றி நன்றாக தெரிந்தவர் ஆதலால், மணி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், 'என்னடா சொல்ற' என்றார்.

 'ஔவையார் பெரிய விண்வெளி ஆராய்ச்சியாளர்னு கண்டு பிடிச்சிருக்கேன்' என்று மறுபடியும் அதையே சொன்னான்.

'டேய் டகால்டி மண்டையா.. எத வச்சி சொல்றனு கேக்கறேன்?'

'அண்ணே.. இங்க்லீஷ்காரனே கண்டு புடிச்சு சொல்லி இருக்கான். ஆனா நம்ப ஆளுங்க அத கண்டுக்காம உட்டுட்டாங்க..'

'டேய் பில்ட் அப் குடுக்காம மேட்டர சொல்லு' என்றார் மணி.

சிறிது நேரம் தீவிர யோசனைக்கு பிறகு..

இந்த கவிதை வரிய பாருங்கண்ணே..
'டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்..
ஔவை வொண்டர் வாட் யூ ஆர்..'

'பாருங்க அந்த இங்க்லீஷ் கவிஞன் நம்ப பாட்டி ஏதோ ஒரு நட்சத்திரத்த பத்தி ஆராய்ச்சி பண்ணினத எவ்வளோ அழகா சொல்றான்.. அனேகமா இவன் எந்த நூற்றாண்டோ இந்தியாவுக்கு வருகை செஞ்சு இருக்கான்.. அதை கண்டு புடிச்சு...'
என்று மானஸ்தன் ஆதாரங்களை அடுக்கிக்கொண்டே போக.., மணி உருட்டுக்கட்டையை தேடிக்கொண்டு இருந்தார்.
.
.
.


ஔவையார் அந்த நட்சத்திரத்த ஆராய்ச்சி செய்த போது எடுத்த படம்


 
*******

டிஸ்கி: இன்னும் கொஞ்ச நாள்ல இலக்கியவாதி ஆன பிறகு, இப்படி மொக்கைகளை போட முடியாது ஆகையால்.. இப்போதே போட்டுக்கொள்கிறேன்..
முழுதும் படிக்க..