Jun 1, 2014

மொழிபெயர்ப்பு சவால்களும் உத்திகளும் - கிழக்கு பதிப்பகத்தின் கருத்தரங்கு

நான் இதுவரை எந்த இலக்கிய கூட்டத்திற்கும், கருத்தரங்கிற்கும் போனதில்லை. கூச்ச சுபாவமானதால் மிகவும் தயக்கத்துடன் தான் இந்த கூட்டத்திற்கு போனேன். அதுவும் தனியாக! கிழக்கு நடத்தும் முதல் மொழிபெயர்ப்புக் கருத்தரங்கும் இதுதான், ஆனால் நேர்த்தியாக நடத்தப்பட்டது. பல்வேறு தலைப்புகளில் நலங்கிள்ளி, அ.குமரேசன், ராமன் ராஜா, ஜி.குப்புசாமி, பத்ரி ஆகியோர் சிறப்பாக பேசினர். ஏராளமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டாலும், டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் பாணி ஜிஸ்ட் (இந்த ஒரு வரியிலேயே எவ்வளவு ஆங்கிலம்) இதோ.

அபுனைவு (நலங்கிள்ளி, அ.குமரேசன், ராமன் ராஜா):
ஆங்கிலத்தில் நீள் வாக்கியங்கள் சகஜம். அவசியம் இருந்தாலொழிய அதை அப்படியே வைக்க வேண்டியதில்லை. சிறு வாக்கியங்களாக உடைக்கலாம்.

வார்த்தைக்கு வார்த்தை மாற்ற வேண்டியதில்லை. தேவையில்லாதவற்றை நீக்கி விடலாம்.
Sudha is drinking her coffee
இது 'சுதா அவளுடைய காபியை குடித்துக்கொண்டிருக்கிறாள்' பதிலாக இப்படியிருக்கலாம் -
'சுதா காபி குடித்துக்கொண்டிருக்கிறாள்'
(பின்ன வேற யாருடையது?)

ஆங்கிலத்தில் Passive voice அடிக்கடி வரும். தமிழில் அது சரிவராது. Active ஆக மாற்றிக்கொள்ளலாம்.

தமிழில் Punctuation-களை அறிந்து உருவான மொழியல்ல. ஆகவே அதை முடிந்தவரை ஒதுக்கிவிடலாம்.
Rama said, "Narendar is dangerous". இதை,
ராமா கூறினார், "நரேந்தர் அபாயகரமானவர்" இதற்கு பதிலாக
"நரேந்தர் அபாயகரமானவர்" என ராமா கூறினார்.
Subject-ஐ முடிந்தவரையில் verb அருகில் வைக்கவும்.

'மொழிபெயர்ப்பு மாதிரியே இருக்கு' என்று படிப்பவரை முகம் சுழிக்க வைக்காமல் எப்படி மாற்றுவது? ஆங்கில கருத்தை உள்வாங்கிக்கொண்டு அதை உங்கள் குழந்தைக்கோ, பாட்டிக்கோ சொல்வது போல் சொல்லிப்பார்த்து பிறகு எழுதலாம். இது அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மாற்றத்தை தடுக்கும்.

மூலத்திற்கு நேர்மையாக இருப்பது என்றால் என்ன? அதன் கருத்தை மாற்றமில்லாமல் தருவது. அதுதான் முக்கியம். கலை அலங்காரம் போன்றவற்றை அந்த நேர்மைக்கு பாதிப்பில்லாமல் செய்யலாம்.

தவிர்க்க வேண்டியவை: 'மற்றும்' என்பது அடிக்கடி வருகிறது. A வரும்போதெல்லாம் ஒரு/ஓர் தேவையில்லை. His/Her எல்லா இடத்திலேயும் அவளுடைய/அவனுடைய ஆக வேண்டியதில்லை.

கலைச்சொற்கள்/தொழில்நுட்ப வார்த்தைகள்: இது விவாதமாக போனது. எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், தேவையில்லை ஆங்கில வார்த்தைகளையே பயன்படுத்தலாம், இரண்டையும் கலந்து சாதுர்யமாக உபயோகிக்கலாம் என்று பல வாதங்கள்.. நலங்கிள்ளி சொன்ன விஷயம் உபயோகமானது. "காரணப்பெயர்களை அதன் உண்மையான காரணத்தை உணர்ந்து தமிழிலும் பயன்படுத்தலாம். Graviton எனும் துகளை ஈர்மம் என்று மாற்றினேன். தமிழ் மாணவர்களுக்கு சட்டென்று விளங்கும். ஆனால் இதற்கு உழைக்கவேண்டும். சில வார்த்தைகளுக்கு (உதாரணமாக Quantum, Positron) நிறைய உழைத்தேன்".

வார்த்தைகளுக்கான அரசியலை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். Moral police என்பதை கலாச்சார காவலர்கள் என்று பயன்படுத்தலாம்தான். ஆனால் படிப்பவர்கள் 'கலாச்சாரத்தை காப்பவர்கள்.. நல்ல விஷயம்' என்று புரிந்து கொள்ளக்கூடும். ஆகவே அதன் அபாயத்தையும் மொழி பெயர்ப்பில் காட்ட வேண்டும் (அ.குமரேசன்: "கலாச்சார போலீஸ் என்றே உபயோகித்தேன்").

Idioms and phrases, அவரவர் கலாச்சாரத்திற்குரிய வார்த்தைகள் போன்றவற்றில் கவனம் தேவை. 'கட்டையில போறவன்' என்பதை He travels on the wood ஆக்க முடியாது அல்லவா? வார்த்தைகளில் சிறிது சந்தேகம் இருந்தாலும் சோம்பேறித்தனம் படாமல் அதைப்பற்றி தேட வேண்டும்.

புனைவு (ஜி.குப்புசாமி):
மேலே பேசிய பெரும்பாலான விஷயங்களை மறந்து விடுங்கள். புனைவை மொழிபெயர்ப்பது முற்றிலும் வேறு மாதிரியான சங்கதி.

"முதலில் ஒரு மிகச்சிறந்த வாசகனாக இருக்க வேண்டும்". இது புனைவை மொழிபெயர்க்க மிக முக்கிய தகுதி. மூல படைப்புக்கு, அந்த கலைக்கு உண்மையாக இருக்க முடியும் என்று மனதார நம்பினால், அதில் கை வை. இல்லை என்றால் மூடி வை.

எழுத்தாளன் எழுதிய ஒவ்வொரு சொல்லுக்கும், அரை/காற்புள்ளிகளுக்கும், வாக்கிய அமைப்புக்கும் ஒரு அர்த்தம் இருக்கக்கூடும். அவர் இதையே தமிழில் எழுதியிருந்தால் எப்படி எழுதியிருப்பார் என்று யோசித்து எழுதுவது நல்லது.

உதாரணமாக ருஷ்டியின் இந்த கதையில் "The Emperor Abul-Fath Jalaluddin Muhammad, King of Kings" என ஆரம்பிக்கும் வரி முடிவதற்குள் ஒரு IPL போட்டியை பார்த்துவிட்டு வரலாம். "அதற்கு உண்மையிலேயே அவசியம் இருப்பதாக நான் நினைத்ததால், நானும் அதை உடைக்கவில்லை".
மூலம்: http://www.newyorker.com/fiction/features/2008/02/25/080225fi_fiction_rushdie?currentPage=all

My name is red கதையை மொழிபெயர்த்ததில் சந்தித்த சவால்கள், சிக்கல்கள் என்று மிக சுவாரசியமாக பேசினார் குப்புசாமி. பத்ரி ஒரு மொழிபெயர்ப்பு சாப்ட்வேர் உருவாக்கத்தில் இருப்பதாக தெரிவித்தார். வந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். 

நிகழ்ச்சி அனுபவங்கள்:
கலந்து கொள்ளும் முதல் கருத்தரங்கு என்பதால் காலங்காத்தாலேயே கிளம்பி முதல் ஆளாக போய் விட்டேன். கிருஷ்ண பிரபுவும் அப்போதுதான் நுழைந்தார். சொன்ன மாதிரி பத்து மணிக்கு ஆரம்பித்தார்கள். மதிய உணவு, தேநீர், போண்டா, நோட் பேட் என்று கச்சிதமான ஏற்பாடுகள். அங்கு பார்வைக்கு வைத்திருந்த புத்தகங்களை இலவசமாக எடுத்துக்கொண்டார்கள் என்று வீட்டுக்கு வந்துதான் தெரியும். அப்போது எரிய ஆரம்பித்த வயிறு இன்னமும் ஜெலுசில் குடித்துக்கொண்டிருக்கிறேன். (இப்படி அடித்து பிடித்து புத்தகங்கள் வாங்குகிறார்களே என்று அப்போதே மைல்டாக ஒரு டவுட்டுதான்). Aravindh Sachidanandam போன்றவர்களை சந்தித்தேன். யுவா, சிவராமன், ஜவர்லால் ஆகியோரை பார்க்கமுடிந்தது. 

நிகழ்ச்சியில் மேலே சொன்ன கருத்துக்கள் அல்லாமல் அரூபமாக பல விஷயங்களை கிரகித்துக்கொள்ள முடிந்தது. இதற்காகத்தான் நேரில் சென்று இப்படி கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள் போலும். 
மொத்தத்தில் மிகவும் நிறைவாக இருந்தது. 

கடைசியில் சிறிய பயிற்சி. சில பத்திகள் நாங்கள் முதலில் மொழிபெயர்த்தோம். பிறகு திரையில் கிழக்கின் மொழிபெயர்ப்பை காட்டி இதை எப்படி செறிவாக்கலாம் என்று பத்ரி கேட்டார்.  அப்போது காதில் விழுந்தவை - "இது என்ன நல்லாவே இல்லையே", "அப்படி வரவே வராது. நான் செஞ்சத கேளுங்க.. என்னுது தான் சரி" ரீதியில்.. ஸ்க்ரீனை கிழித்துவிடுவார்களோ என்று பயமாகிவிட்டது. 

நிகழ்ச்சியில் பெர்சனலாக எனக்கு ஒரு சின்ன பிரச்சினை மட்டும் தெரிந்தது. பங்கேற்பாளர்களில் வல்லுனர்கள் அதிகம். இதனால் கேள்வி பதில், சந்தேகங்கள் போன்றவற்றிற்கு நேரம் போதவில்லை. கலைச்சொற்கள் மொழியாக்கம் போன்ற நல்ல விவாதங்கள் நடந்தாலும், சில பேர் தங்களுக்கு தெரிந்ததையெல்லாம் சொல்லி விட வேண்டும் என்று துடித்தனர். May be that is the whole idea. அவர்களுக்காகத்தான் நிகழ்ச்சி. என்னைப் போன்ற புதியவர்கள்/வெளியாட்கள்தான் எக்ஸ்ட்ரா. இளைஞர்கள்/புதியவர்களுக்காக மட்டும் ஒரு கருத்தரங்கை யோசித்துக்கொண்டிருப்பதாக பத்ரி கூறினார். ஒரு வேளை அதில் நான் எதிர்பார்த்தபடி கற்றுக்கொள்ள வந்தவர்கள் நிறையவும், வல்லுனர்கள் குறைவாகவும் இருக்கக்கூடும்.


முழுதும் படிக்க..