Jan 31, 2014

கற்றதும் பெற்றதும்

இந்த தொடர் இன்றுடன் நிறைவடைகிறது (நிம்மதி பெருமூச்சை கொஞ்சம் அமைதியாக விடலாமே?).  எழுதிய முப்பத்தியோரு நாட்களில், இருபது நாட்கள் நிறுத்திவிடலாமா என்று யோசித்துக்கொண்டே போட்டதுதான். இருந்தாலும் ஒரு மாதத்துக்கு மேல் தாண்டுகிறதா, பார்ப்போம் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்ட ஒரே காரணத்திற்காக எப்படியாவது ஒரு மாதமாவது பதிவிட வேண்டும் என்று தொடர்ந்து இதுவரை வந்தாகிவிட்டது.

இது புதுவித அனுபவம். எத்தகைய பதிவுகள் அதிகம் ரசிக்கப்படுகின்றன என்பது முதற்கொண்டு இதில் கற்றதும் பெற்றதும் நிறைய. ஆனால் நிறுத்த முக்கிய காரணம் நேரமின்மை. மறு வாசிப்பு, எடிட்டிங் கூட செய்யாமல் பதிவிட்ட இந்த பதிவுகளை தட்டச்சு செய்ய கால் மணிநேரம். தலைப்பு சம்பந்தமான தரவுகளை தேட, சரி பார்க்க முக்கால் மணி நேரம் (சுமாராக). இப்படி ஒரு மாதத்திற்கு முப்பது மணி நேரம். இந்த நேரத்தில் உருப்படியாக ஒரு கட்டுரையையோ, கதையையோ எழுதலாம்.. இது... படிக்கலாம் அல்லவா? எனவே நிறுத்தி விட்டேன்.

எனக்கு பெர்சனலாக மிகவும் திருப்தி தந்த ஒரு செயல்பாடு இது. பதிவுகளின் தரத்தில் அல்ல. அடுத்தவர்களை பற்றி கவலைப்படாமல் என்னால் ஒரு செயலை செய்ய முடியும் என்று புரிய வைத்ததற்காக (I am an Introvert). அதை விட பெரிய நன்மை, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பைத்தியம் பெரிதும் தெளிந்தது (இத்தனைக்கும் அங்கு வேடிக்கைதான் பார்க்கிறேன்).

இது வரை வருகை தந்த ஆறாயிரத்து சொச்சம் பார்வையாளர்களுக்கும் நன்றிகளை கூறிக்கொண்டு, தரமான ஒரு கட்டுரையையோ, கதையையோ படை(டி)க்க கிளம்புகிறேன். வாழ்த்துங்கள் :)

31/365


முழுதும் படிக்க..

Jan 30, 2014

இன்னொரு டில்பர்ட்

இப்போ பேசு இப்போ பேசு :)


நன்றி: http://www.dilbert.com/

30/365


முழுதும் படிக்க..

Jan 29, 2014

மகாபாரதம்

மெயின் கதைச்சுருக்கத்தை கேட்கும்போதே அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது மகாபாரதம். நாங்கல்லாம் அப்பவே அப்படி என்று பிதற்றாமல், என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை நுட்பமாக பிரித்தறிந்து, நூற்றாண்டுகளுக்கு முன்பான மக்களை பற்றி, மானுடத்தை பற்றி, நம்மை பற்றியே கூட, அறிந்து கொள்ள முற்படலாம். கீழ்கண்ட குடும்ப மரம் புதிதாக ஆரம்பிப்பவர்களுக்கு (தொலைக்காட்சியோ, வெண்முரசோ, மூலமோ எதோ ஒன்று) உதவக்கூடும்.


(தேடிய படங்களில் இது கொஞ்சம் பரவாயில்லை ரகம். நன்றி: இணையம்) 

கடைசியில் யாருமே மிஞ்சவில்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை. அந்த இடத்தில் டாவின்சி கோட் டைப் நாவலுக்கு ஒரு விதை உண்டு. அபிமன்யுவின் மகன்!முழுதும் படிக்க..

Jan 28, 2014

சில நேரங்களில் சில மனிதர்கள்

ஒரு வீடு ஒரு மனிதன்... படித்துவிட்டு உடனே இதை ஆரம்பித்தேன். இரண்டும் இரண்டு extreme! உக்கிரமான நாவல் இது. அக்னிபிரவேசம் என்ற சிறுகதை முதலில் எழுதி அது சர்ச்சையாகி பின் அதை அடிப்படையாக வைத்து ஜெயகாந்தன் எழுதிய நாவல். இதே விஷயம் ஆட்டோ பிக்ஷன் அது இது என்கிறார்களே, அது போல நாவலில் RKV என்ற எழுத்தாளர் எழுதுவதாக வருகிறது (இதை படமாக எடுத்தபோது இந்த பாத்திரத்தில் நடித்தவர் நாகேஷ். இயக்குனர் பீம்சிங் ஜெயகாந்தனை ஓட்டியிருக்க வாய்ப்புகள் குறைவு) .

கங்காவின் வெறுமைதான் கதை. தனிமையினால் வரும் வெறுமை. Furnace அருகில் நின்று பார்ப்பது போல் கங்காவின் தனிமையை படிக்கையில் உணர்ந்தேன். சீதையின் வடிவம் அவள் என்று சொல்லும் இந்த பதிவை விட அழகாக என்னால் இந்த நாவலைப்பற்றி சொல்ல முடியாது -

ஜெயமோகனின் கருத்து

ஒரு வீடு ஒரு மனிதனில் எங்கும் ஒரே வெளிச்சம். இங்கு பயங்கர இருள். எழுத்தின் சாத்தியங்கள்!

28/365


முழுதும் படிக்க..

Jan 27, 2014

அசோகமித்திரனுக்கு வயதாகி விட்டது

வயோதிகம் என்னை பயமுறுத்துகிறது. அதைக்கண்டாலே அஞ்சி நடுங்குகிறேன். அடுத்தவர்களின் தள்ளாமையை கூட என்னால் தாங்கமுடிவதில்லை. இந்தப்படம் அந்தளவிற்கு பாதித்ததற்கு காரணம் வயதாவதன் மீதான பயம்தான் என்று நினைக்கிறேன்!

அதில் எது குறிப்பாக பயமுறுத்துகிறது என்பதையும் யோசிப்பதுண்டு. நினைத்ததை செய்ய முடியாமல் இருக்கும் நிலையா? அடுத்தவர்களை சார்ந்து இருப்பதா? தள்ளாமையா? இல்லாமலாதல் பற்றிய பயமா? தெரியவில்லை.இன்று அசோகமித்திரனின் பேட்டியை படிக்க நேர்ந்தது. அவரின் சமீபத்திய புகைப்படங்களைப் பார்த்தாலே சோகமாகி விடும் எனக்கு, இந்த கேள்வியும் பதிலும் பெரும் துக்கத்தை கொடுத்தது.

உங்களுடைய அன்றாட வாழ்க்கை குறித்து...

மூணு நாலு வருஷத்திற்கு முன்பு இறந்துவிடுவேன் என நினைத்தேன். நினைவே இல்லாமல் இருந்தேன். எல்லோரும் அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. இந்த விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில் நடப்பதாகச் சொன்னார்கள். அங்கே 20 படிகள் இருக்கும். கைப்பிடி இருக்காது. உள்ளே போனால் அது உடனே கீழிறங்கும். உள்ளே ஒரு படி மாதிரி இன்னொரு படி இருக்காது. அத்துடன் எனக்கு என்ன கவலை என்னவென்றால் விருதைப் படியேறி வாங்க வேண்டும். நான் அங்கு ஒரு நாடகத்தின்போது கால் தவறிக் கிழே விழுந்திருக்கிறேன். அந்தக் காயம் ஆற ஆறு மாதம் ஆனது.


இந்த பதிலை திரும்ப திரும்ப படித்தேன். சில தடவைகள் படித்ததும் ஒரு சிறிய புன்முறுவல் தோன்றியது. வயதாகி புலம்புவதைக் கூட இவருக்கு நீட்டி முழக்கி செய்யத் தெரியவில்லை!

27/365

முழுதும் படிக்க..

குழந்தைகள் இலக்கியம்

சின்ன வயதில் வேகமாக, கோர்வையாக படிக்க வராது என்பதால் அம்மாவை படிக்கச்சொல்லி நானும் அக்காவும் கேட்பதுண்டு. அதில் ஒரு கதையில் கபாலீசுவரி என்கிற வில்லி கதாபாத்திரம் இன்றும் நினைவிருக்கிறது. கபாலீசுவரியை இன்னும் பயங்கரமானவராக ஆக்கி அவளுக்கு பாலீசுவரி என்று பெயர் வைத்து ஒரு கதை எழுதினேன் (நான்காவதில்). அதை ஐந்தாவது படிக்கும்போது நீட்டு பேப்பரில் 'அழகாக' எழுதி கோகுலம் இதழுக்கு அனுப்பி வைத்தேன். அதை அவர்களும் பிரசுரித்து இதழையும் அனுப்பிவிட, அன்று முழுக்க ஒரு இடத்தில் நிற்கவே முடியவில்லை. முதல் பிரசுரம்! அதற்கு சன்மானமாக அவர்கள் அனுப்பிய மணியார்டர் தான் எனது முதல் சம்பாத்தியம். அந்த கிளுகிளுப்பு இன்றும் அப்படியே மனத்தில் உண்டு!

குழந்தை இலக்கியத்திற்கு ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று தேடும்போது கீழ்கண்ட கட்டுரைகள் தென்பட்டது. உங்களுக்கும் உதவக்கூடும். இந்த தலைப்பில் புதிய உபயோகமான தரவுகள் கிடைக்க கிடைக்க இங்கு சேர்த்துக்கொண்டே இருக்கப்போகிறேன்.

ச.தமிழ்ச்செல்வன்

பா.ராகவன்

இப்போதைக்கு இந்த வகை எழுத்து பற்றி சில குறிப்புகள் -
எளிமையாக, சுவாரசியமாக, தகவல் பிழையில்லாமல் இருக்க வேண்டும். அனைத்து தரப்பு குழந்தைகளையும் மனதில் வைத்து எழுதப்பட வேண்டும். நீதி சொல்லக்கூடாது (நம்மள நல்லா ஏமாத்திட்டாங்க). குழந்தைகளின் வயதை தீர்மானித்து அதற்கேற்றவாறு கதையை அமைக்க வேண்டும். வாசிப்பவர்களை கதையில் ஒன்ற வைத்து அவர்களுக்கு கதையின் மீது ஒரு ஆதிக்கத்தை அளிக்க வேண்டும். கதையின் போக்கிலேயே செய்திகளை அறிய வைக்க வேண்டும். விளக்கக்கூடாது.

..தொடரும்..

26/365
முழுதும் படிக்க..

Jan 26, 2014

அ.முத்துலிங்கமும் பத்மினியும்

விகடன் மேடையில் அ.முத்துலிங்கத்திடம் ஒரு கேள்வி. 'பத்மினி பற்றி எழுதும்போது மட்டும் காதல் ததும்புகிறதே, என்ன சங்கதி?' என்று. அவருக்கே உரிய பாணியில் சுவாரசியமாக அவருடனான நினைவுகளை பகிர்ந்திருக்கிறார். அந்த பகிரலின் முழு வடிவம் இங்கே

எனக்கு மிகவும் கவர்ந்தது விகடனில் இருந்த புகைப்படம் தான். அதில் பத்மினியை விட முத்துலிங்கத்தையே கவனித்தேன். எப்போதுமே (நான் பார்த்த புகைப்படங்களில்) ஒரு தீவிரத்தன்மையுடன் இருக்கும் அவரின் முகம், இதில் அவ்வளவு இளகி, நிறைவாக, சாந்தமுடன் காட்சியளிக்கிறது.

முதல் கேள்விக்கு அந்த புகைப்படமே பதில்..

25/365


முழுதும் படிக்க..

Jan 25, 2014

மணல்வீடு

மணல்வீடு சிறுபத்திரிகையை வாசிக்க நேர்ந்தது. இரு மாதத்திற்கு ஒருமுறை வரும் இது கதை, கவிதை, கட்டுரை, உலக இலக்கியம் என்று ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ். அம்பையின் சிறுகதை வழக்கம் போல் எளிமை, அருமை. முரகாமியின் சிறுகதை என்று ஒரு குறுநாவல் இருக்கிறது. இனிதான் படிக்கவேண்டும்.

இதில் கவர்ந்தது கெட்டவார்த்தை பேசுவோம் என்கிற பெருமாள்முருகன் தொடர். ஏற்கனவே இதே பெயரில் புத்தகமும் வந்திருக்கிறது. இத்தொடர் அந்த புத்தகத்தில் உள்ளவையா அல்லது அதன் தொடர்ச்சியா தெரியவில்லை.

(18+)

வாயில் விழைதல் என்று ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்னாலேயே வழக்கத்தில் இருக்கும் வாய்வழி புணர்ச்சி பற்றி பேசுகிறது. 'ஆசாரமாக வாழ்வது எப்படி?' என்று இன்று வந்திருந்தால் பெயர் வைத்திருக்கக்கூடிய ஆசாரக்கோவை 'அதை' செய்துவிட்டு குளித்துவிட வேண்டும் என்று சொல்கிறதாம். மேலும் பல சுவாரசிய தகவல்கள்.. நம்மூரிலும் காலம்காலமாக (பிரிவு 377 படி) குற்றவாளிகளாக வாழ்ந்திருக்கிறோம் என்பது உவகையே அளிக்கிறது :)

24/365


முழுதும் படிக்க..

Jan 23, 2014

பனிப்புயல்

அமெரிக்காவில் தற்போது பொழிந்துகொண்டிருக்கும் பனியால் -50 டிகிரி கூட அனாயாசமாக தொடுகிறதாம் வானிலை. இதை ஒட்டி டிஸ்கவரியில் இதற்கு முன் வந்த பனிப்புயல்களால் நடந்த பாதிப்புகளை காட்டிக்கொண்டு இருந்தனர்.

அதீத மழை, வெயில் கூட சமாளிக்க வழி வகையாவது உண்டு. பள்ளம் ஏற்படுத்தினால் தண்ணீர் அதை நோக்கி பாயும் - ஆற்றை நோக்கி திருப்பி விடலாம். ஆனால் பனியை கையாள்வது அத்தனை சுலபம் அல்ல. காருக்குள் சிக்கிக்கொண்டவர்கள் மயிரிழையில் தப்பித்தது எல்லாம் படு த்ரில்லாக காட்டினார்கள்.

இவ்வளவிலும் உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு இசையமைக்கிறார் இந்த மாட்டுப்பய :)

23/365


முழுதும் படிக்க..

Jan 22, 2014

விருமாண்டியும் ரங்கனும்

வறுமையின் நிறம் சிகப்பில் ரங்கனும் (கமல்ஹாசன்) தேவியும் (ஸ்ரீ..) பூங்காவில் நெருக்கமாக அமர்ந்திருக்கும்போது ஒருவர் எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருப்பார். கோபம் வந்த ரங்கன் அவரை போய் சப் சப்பென்று அடித்துவிடுவார். ஆனால் அவர் ஓவியம் வரையத்தான் தங்களை நோட்டம் விட்டார் என்று தெரிந்ததும் சாந்தம் (ஊமை என்பதை அறிந்து குற்றவுணர்ச்சியும்) அடைந்து  நண்பர்களாகி விடுவார்கள்.

கிட்டத்தட்ட அதே உருவ அமைப்பில் விருமாண்டியிலும் ஒரு ஆசிரியர் இவர்களின் நெருக்கமான தருணங்களை ஓவியமாக வரைகிறார். ஆனால் இங்கு ஓவியங்களை பார்த்த பிறகுதான் விருமன் ஓவியரை சாத்துவார்.
(இதில் ஓவியர் கதாபாத்திரம் விருமனின் வாழ்க்கையை அமைதியாக பார்த்து குறித்துக்கொண்டிருக்கும் ஒரு குறியீடு - காலம்/விதி? இயக்குனர்? பார்வையாளர்கள்?)

விருமாண்டி மற்றும் ரங்கன் இருவரின் இயல்பையும் இந்த சம்பவங்களில் இருந்து புரிந்து கொள்ளலாமா? வநிசி படத்தை மனத்தில் வைத்துதான் கமல் அந்த ஓவியரை அடிக்கும் காட்சியை வைத்தாரா? The resemblance is uncanny..

22/365


முழுதும் படிக்க..

Jan 21, 2014

பண அடிமைகள்

நாராயன் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்த இந்த கட்டுரை, பண அடிமையாகி மீண்ட ஒருவரின் வாக்குமூலம். பல தலைமுறை உட்கார்ந்து அழித்தாலும் தீராமல் இருக்குமாறு ஆயிரக்கணக்கில் மோசடியாக பணம் சேர்ப்பவர்களை பார்த்தால் 'எதற்காக இப்படி சேர்க்கிறார்கள்' என்று தோன்றும். அப்படி பண அடிமைகளை பற்றி ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிந்தது (இவர் so called legitimate வழியில் பணம் சேர்த்திருந்தாலும்).

http://www.nytimes.com/2014/01/19/opinion/sunday/for-the-love-of-money.html?_r=0

என்னடா இவன் லிங்க கொடுத்து ஓப்பி அடிக்கிறான் என்று நினைக்கவேண்டாம். இதை தமிழாக்கம் செய்யக்கூட விருப்பம்தான், ஆனால்... நேரமில்லாமல்.. முடியல.....

21/365


முழுதும் படிக்க..

Jan 20, 2014

ஹாரன்

விடாமல் ஹாரன் அடிப்பவர்களை அவர்களுக்கே பிடிக்குமா தெரியவில்லை. ஆனாலும் ராஜ் டிவி விளம்பரம் போல் நிறுத்தாமல் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி செய்பவர்கள் பெரும்பாலும் சுமோ சைஸ் வண்டி அல்லது டேக்சிதான். இப்படி செய்பவர்களுக்கு வேண்டுமென்றே வழி விடாமல் இருப்பது (பெரிய ஆம்புலன்ஸ்னு நினைப்பு), அவர்களை முன்னாள் விட்டு பின்னால் சென்று அவர்கள் காதருகில் பாண் பாண் என்று ஹாரன் அடித்து பழி வாங்குவது போன்ற பொதுச்சேவைகளில் நான் அடிக்கடி ஈடுபடுவது வழக்கம். ரொம்ப அநியாயமாக சத்தம் போட்டால் போய் 'ஏன் இப்படி பண்றீங்க?' என்று கேட்டுக்கூட விடுவது.

இன்று இரவு அலுவலகத்திலிருந்து வரும்போது ஒரு கேஸ் மாட்டியது. சுமோவேதான். ஒரே ஒரு செகண்ட் கூட நிறுத்தாமல் ஹாரனில் அலறிக்கொண்டே முன்னேறினார்கள். அது அநியாயம் கூட இல்லை. அராஜகம் கேட்டகிரி.  இவர்களுக்கு எப்படியாவது பாடம் கற்பிக்க வேண்டுமென்று ட்ராபிக்கில் சிரமப்பட்டு அவர்கள் அருகில் நெருங்கி ஜன்னலில் எட்டி பார்த்தேன். ஆறு பேர். முரட்டுத்தனமாக உட்கார்ந்து கிடந்தார்கள்.

'ஏய்ய்' என்று உச்ச ஸ்தாதியில் ஆரம்பித்தேன்.

ஆறு பேரும் போட்டிருந்தது காக்கிச்சட்டை.

'ஏய்ய் ஹா ஏய்ய், அட டியோ டியோ டோலே' - இந்த பாடலை இன்று யாரோ ஒருவன் பைக்கில் பாடிக்கொண்டே போவதை நீங்கள் யாராவது பார்த்திருந்தால், அது நான்தான்! ஹாய்!

20/365

முழுதும் படிக்க..

Jan 19, 2014

வெங்கட் பிரபு

சென்னை 28 பார்த்து விட்டு ஆகா, தமிழுக்கு ஒரு அசல் கேளிக்கைகாரர் கிடைத்துவிட்டார் என்று மகிழ்ந்திருந்தேன். முக்கிய காரணம் படத்தில் இருந்த Innocence, craft மற்றும் இயல்பான நகைச்சுவை.

பாட்டி போட்டோ ஒடஞ்சிருச்சி, சில்ர இல்ல, ஜெய் எதிரி அணியை தோற்கடிக்க முனைப்பாக ஐடியா கொடுக்கும்போது அதை கவனிக்காமல் சுற்றி காமெடி செய்துகொண்டிருக்கும் நண்பர்கள்,
அவுட் ஆகிவிட்டு பேட் கொடுக்காமல் அழிச்சாட்டியம், பெட் மேட்ச், Rivalry, அட்டகாசமான முடிவு என்று படத்தை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். It is indeed a cult movie. அடுத்து வந்த சரோஜாவும் நகைச்சுவையில் குறை வைக்கவில்லை. அதில் fighting மற்றும் chasing சீன்கள் மட்டும் மொக்கை. சொல்லப்போனால் அவைதான் வெங்கட் பிரபு படங்களின் பெரும் குறைபாடுகள்.

ஆனால் அதற்கு பிறகு வந்த அவர் படங்கள் எதிலுமே ஒட்டமுடியவில்லை. அதற்கு முக்கிய காரணம், அவர் இயல்பில் இருந்து விலகிவிட்டார். திரைக்கதையும் அத்தனை கட்டுக்கோப்பாக இல்லை (நான் கதையை எதிர்பார்க்கவில்லை). எப்போதும் குடித்துக்கொண்டு கிளப்புகளில் ஆடுவது என்பது அனைவருக்கு வாய்க்காது. அவர் படங்களின் பலமான Innocent comedy-ஐ குறைத்துவிட்டு, குறைபாடான fighting, chasing சீன்களை அதிகப்படுத்த ஆரம்பித்து விட்டார்.

பிரியாணி, கோவா படங்களில் கூட ஆங்காங்கே பளிச்சிடும் அந்த இயல்பான நகைச்சுவையை (தூக்கில் தொங்குவதற்கு முன் 'நான் இன்னும் கன்னி கூட கழியலை', Gay ஜோடி எமோஷனலாக பேசிக்கொண்டிருக்கும் போது 'தண்ணி வரலீங்க') பெரும்பாலும் தேடவேண்டி இருக்கிறது. 'நான் புக்கெல்லாம் படிக்கறது இல்லை' என்று சொல்லும் வெங்கட், புதிய விஷயங்களை வேறு எந்த வழியாக பிடித்தாலும் பரவாயில்லை. ஆனால் பழையபடி அவர் ஃபார்முக்கு வர பெரும்பாலான இளைஞர்களின் இயல்பை ஒட்டி எடுப்பதன் மூலமும், புதிய களங்களை, நல்ல திரைக்கதையை அமைப்பதன் மூலமுமாகவே முடியும்.

- A Venkat Prabhu Fan

19/365


முழுதும் படிக்க..

Jan 18, 2014

தமிழகத்தில் தேவதாசிகள்

முனைவர் சதாசிவத்தின் பல்லாண்டு ஆய்வின் பயனாக வந்திருக்கிறது 'தமிழகத்தில் தேவதாசிகள்' புத்தகம். இந்த தலைப்பில் இதுவரை இத்தனை முழுமையான புத்தகம் வந்ததில்லை என்று சொல்லப்படுகிறது. ஆங்கிலத்தில் பல ஆண்டுகள் முன்னமேயே வெளிவந்திருந்த இந்த புத்தகத்தை இந்த ஆண்டு அகநி பதிப்பகம் தமிழில் வெளியிடுகிறது. தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்திருப்பவர் கமலாலயன்.

தேவதாசி முறையின் தோற்றம், வளர்ச்சி, அதன் கோல்டன் பீரியட், பின்பு அதன் சரிவு (கிருஷ்ணதேவராயர் ஆட்சியின் கடைசியில்), அதன் சமூக (முக்கியமாக கலை சார்ந்த) பங்களிப்பு என்று ஏராளமான தகவல்களைக் காண முடிகிறது. அவர்களை குறிப்பிடும் வார்த்தைகள் பின்னாட்களில் வசைச்சொல்லாக மாறும் என்று அந்நிறுவனம் செழித்திருந்த காலத்தில் சொல்லியிருந்தால் தேவர் அடியார்கள் சிரித்திருப்பார்கள். அப்படி ஒரு வாழ்க்கை!உலகம் முழுக்க, இந்தியா முழுக்க, பல மதங்களில் கோவிலுக்காகவே நேர்ந்து விடும் வழக்கம் பல வாரியாக இருந்து வந்திருக்கிறது என்பது எனக்கு புதிய தகவல். மொகஞ்சதாரோ காலத்திலேயே இந்த வழக்கம் இருந்திருக்கக்கூடும் (நடனப்பெண்ணின் சிலை) என்பதை படிக்கும்போது, கிட்டத்தட்ட வழிபாடு தோன்றிய காலந்தொட்டே இந்த வழக்கம் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

முழுக்க படித்துவிட்டு விலாவாரியாக எழுதுகிறேன். சுவாரசியமாக போகிறது.

தமிழகத்தில் தேவதாசிகள், முனைவர் கே.சதாசிவன்
தமிழில்: கமலாலயன்
அகநி வெளியீடு (ஸ்டால் எண்: 277)
Rs. 300/-

18/365


முழுதும் படிக்க..

Jan 17, 2014

நுட்ப காமெடி

பேயோனின் இந்த இரண்டு படைப்புகளையும் இன்று காண நேரிட்டது. சிரிக்காமல் இவற்றை கடக்க வாய்ப்பு இல்லை.

கம்பரசம்

சாட்டையடி - இது மின் புத்தக வடிவில்.. பேயோனின் ட்ரேட்மார்க் ட்விட்டுகளின் தொகுப்பு.

இவர் எனது தீவிர வாசகராக இருப்பாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம். நிறைய பேருக்கு அதே கவலை இருக்குமா?

17/365


முழுதும் படிக்க..

Jan 16, 2014

ரோசெட்டா

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து ரோசெட்டா விழிக்கப்போகிறாள்! இன்னும் மூன்று நாட்களில். கண் விழிக்கப்போவது யாருடைய முகத்தில் தெரியுமா? பூமியெல்லாம் உருவாவதற்கு முன்னமே திரிந்து கொண்டிருந்த ஒரு வால் நட்சத்திரத்தில்! இதுவரை எந்த விண்கலமும் ஒரு வால் நட்சத்திரத்திடம் இத்தனை நெருக்கம் காட்டியதில்லை. வால் நட்சத்திரங்கள் மூலமாகவே பூமியில் உயிர்கள் தோன்ற தேவையான மூலப்பொருட்கள் கிடைத்ததாக பரவலான கருத்து உண்டு. இந்த ரோசெட்டா விண்கலம் மூலம் இந்த கருப்பொருள் கருதுகோள் பற்றி தீர்மானமாக ஒரு கருத்தை பெறலாம் (கரு கரு).

ஐரோப்பாவின் விண்வெளி நிறுவனத்தின் இருபதாண்டு கனவான இத்திட்டத்தின் சிறப்பம்சம், ஒரு குட்டி லேண்டர்! திட்டம் மட்டும் சரியாக நடந்தால் வால் முளைத்து ஓடும் ஐஸ் பாறையின் மீது இறங்கும் முதல் மனிதப்பொருள் அதுவாகவே இருக்கும். அந்த பொடியனுக்கு பெயர் ஃபைலே.

இந்த விண்கலத்திற்கு ரோசெட்டா என்று பெயர் வைத்தது கூட மிகப்பொருத்தம். எகிப்திய நாகரிகத்தை பற்றி கண்டறிய காரணமாக அமைந்தது தற்செயலாக கண்டெடுக்கப்பட்ட ஒரு கல். அதன் பெயர் ரோசெட்டா கல். அதே மாதிரி மனித நாகரிகத்தின் மூலத்தை இந்த ரோசெட்டாவின் மூலம் தெரிந்துகொள்ள முடியுமா என்பது இன்னும் ஒரு வருடத்தில் தெரியும்.

16/365


முழுதும் படிக்க..

Jan 15, 2014

Dilbert

டில்பர்ட் காமிக்குகள் சில சமயங்களில் வெடிச்சிரிப்பை வர வைப்பவை. இந்த இணைப்பில் இருப்பது மாதிரி.

டில்பர்ட்டின் சிறப்பம்சம் அலுவலக காமெடிகளின் நுணுக்கமான வெளிப்பாடு. பாஸ் மற்றும் அல்லக்கை அலப்பறைகள், உடன் பணி புரிபவர்களின் தொல்லைகள், ஒவ்வாத மீட்டிங்குகள், அநியாய அறிவிப்புகள் என்று கிட்டத்தட்ட அனைத்துடனுமே நமது அலுவலக சூழல்களை பொருத்திக்கொள்ள முடியும்.

தொடரை எழுதும் ஸ்காட் ஆடம்ஸ் வாழ்வில் பல தொடர் தோல்விகளை சந்தித்தவராம். பெரும் சோகங்களை சுமப்பவர்கள் நல்ல நகைச்சுவை உணர்வோடு இருப்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு!

15/365


முழுதும் படிக்க..

Jan 14, 2014

அப்போது மட்டும் ஏன் பிடித்தது?

துப்பாக்கி படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை சின்ன வயதில் பார்த்திருந்தால் ரொம்ப பிடித்திருக்கும் என்று நிச்சயம் தெரிகிறது. ஆனால் இப்போது ஒன்ற முடியவில்லை. இப்படி சின்ன வயதில் ரொம்ப பிடித்து, பைத்தியமாக திரிந்த விஷயங்களை இப்போது யோசித்தால் 'இதற்கா இத்தனை அலப்பறை' என்றே தோன்றுகிறது. இப்படி மாறிப்போன விஷயங்கள் சில ஞாபகத்திற்கு வந்தது..

கடவுள்

அமானுஷ்யம்

சைக்கிள்

பக்கத்து வீட்டு ரசம் சாதம்

உறவினர் வீடு

இராணுவம் மற்றும் லேட்டஸ்ட் தளவாடங்கள்
(அமேரிக்காவோட F16 நமக்குதான்)

போர்
(ஏன் அடிக்கடி சண்டை போட மாட்டேங்கிறோம்?)

மேஜிக்

குரு சிஷ்யன், நீயா

கிரிக்கெட்

ரஜினிகாந்த்

14/365


முழுதும் படிக்க..

Jan 13, 2014

நார்த் 24 காதம்

அருமையான ரோட் மூவி பார்த்து கொஞ்ச நாள் ஆகிவிட்டதே என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே, இதோ, நார்த் 24 காதம் பார்த்தாகிவிட்டது. ரோட் மூவிக்களை விரும்ப முக்கிய காரணம், அதில் இழையோடும் மனிதாபிமானம். இதிலும் அது நிரம்பவே உண்டு.

பந்த் நடக்கும் நாளில் கிட்டத்தட்ட நானூறு கிலோமீட்டர் வடக்கு நோக்கி பயணிக்க வேண்டிய கட்டாயம் ரொம்ப வயதான ஒரு பெரியவருக்கு. அந்த பயணத்தில் அவருக்கு உதவும் இரண்டு பேர். அந்த மூன்று பேரும் பயணத்தில் எதை இழக்கிறார்கள், எதைப் பெறுகிறார்கள் என்பது கதை.

ட்ரெயின், பேருந்து, படகு, நடை, வேன் என்று பலவாரியாக செல்லும் பயணம், கேரளாவின் கலாச்சாரத்தை அழகாக, அனாயாசமாக காட்டிச்செல்கிறது. கதாபாத்திரங்களின் இயல்பான தன்மையும் நடிப்பும் படத்தை இன்னும் நெருக்கமாக்கி விடுகிறது. வயதான காம்ரேட், களப்பணி ஆற்றும் சேவகி, obsessive compulsive disorder இருப்பவர் -  அப்படித்தானே இருப்பார்கள்? ஒரு துக்க செய்தியை கூடவே இருப்பவரிடம் சொல்லாமல் பயணிப்பது என்பது பெரிய கொடுமை. அந்தக் கொடுமையை நான் அனுபவித்து இருக்கிறேன். சொல்லாமல் விட்டால் மட்டும் துக்கம் மாறிவிடுமா என்ன? அது என்னமோ, போய்ச்சேர்ந்ததும் விழப்போகும் இடியைத்தாங்க அந்த பயணத்தையாவது அவர் நிம்மதியாக கடக்கட்டுமே என்கிற நப்பாசை.

கடைசியில் ஆட்டோவில் வரும்போதே செய்தியை உள்ளுணர்வால் உணர்ந்துவிடும் பெரியவர், இறங்கியதும் நிச்சயித்துக் கொள்கிறார். தெருவில் இருந்து வீட்டுக்கு ரொம்ப தூரம், ரொம்ப தூரம் என்று உடன் வந்தவர்களிடம் சொல்லிக்கொள்கிறார். 24 காத தூரம் வந்தவருக்கு இந்த தூரத்தை எளிதில் கடக்க முடியவில்லை. மொகிதீனே மொகிதீனே என்று அரற்றிக்கொண்டே வரும் அந்த நீண்ட நடை.. கிளாசிக்!

விஜய் சேதுபதியை பார்த்தே ஆச்சர்யம் கொள்ளும் எனக்கு, ஃபகத் ஃபாசிலுக்கு கிடைக்கும் படங்களை பார்க்கையில்... அவரை லக்கி என்று மட்டும் சொல்லி விலக முடியாது. அவர் ஒரு அற்புதமான நடிகன் என்பதைத்தாண்டி சிறந்த ரசிகனாகவும் இருக்கவேண்டும். விஜய், அஜீத் போன்றவர்களுக்கு இப்படியெல்லாம் படங்களை பார்த்து ஆசையாக இருக்குமா இருக்காதா?

ரோட் மூவிக்கள் சில:

அன்பே சிவம்
Le grand voyage
நந்தலாலா


13/365


முழுதும் படிக்க..

Jan 12, 2014

ஹிட்லரை சுடாமல் விட்டவர்

முதல் உலகப்போர் முடிவடையும் சமயம். ஹென்றி டாண்டே என்பவரின் படையினரிடம் சிக்கினர் ஜெர்மானிய படைவீரர்கள் சிலர். அதில் அடிபட்ட ஒரு வீரனை நோக்கி துப்பாக்கி உயர்த்தப்படுகிறது. அடிபட்டவர்கள், நிராயுதபாணிகளை கொல்லக்கூடாது என்பது யுத்த தர்மங்களில் (I hate this oxymoron) ஒன்று. கண நேரக்கருணை. துப்பாக்கி இற(ர)க்கப்படுகிறது. அந்த வீரன் தப்புகிறான்.

இருபத்திரண்டு வருடங்கள் கழித்து தான் தப்பிக்க விட்டது ஹிட்லர் என்பதை அறிந்து வருந்துகிறார் ஹென்றி. ஒரு துப்பாக்கி அழுத்தில் பல லட்சம் உயிர்களை காப்பாற்றியிருக்க முடியுமே எனும் பதைப்பு. இந்த செய்தியெல்லாம் பொய்யாக கூட இருக்கக்கூடும். ஆனால் வரலாற்றில் இந்த கேள்வி அடிக்கடி எழும்புவதுண்டு - 'ஒரு வேளை அப்படி ஆகியிருந்தால்?'. ஆனால் வரலாற்று அறிவு இந்த கேள்வியை விட முக்கியமான கேள்வியை நம்மை கேட்க வைக்கிறது, 'இனி அப்படி நடக்காமல் தடுப்பது எப்படி?'. வெறுப்பை மையமாக வைத்திருக்கும் எதையும், எவரையும் நிராகரிப்பதே அதற்கான பதில்.

இப்படி 'ஒரு வேளை' கேள்வியை கற்பனையாக்கி டெரண்டினவ் எடுத்த படம் 'Inglourious Basterds'. ஏனோ அந்தப்படம் கருத்தியல் ரீதியாக எனக்கு பிடிக்கவில்லை.  அமெரிக்கர்களின் அடுத்த நாட்டை 'காப்பாற்றும்' நல்லெண்ணத்தை விதந்தோதுவதாக அப்படத்தை புரிந்து கொண்டதால் கூட இருக்கலாம் (பின்னாலேயே வந்த ஜாங்கோ அவரை மீண்டும் பிடித்தவராக்கியது).

எதிலோ ஆரம்பித்து எங்கோ போயாகிவிட்டது. ஓகே. அடுத்த மனிதரை எக்காரணம் கொண்டும் கொல்லக்கூடாது என்ற கருத்துடைய எனக்கு முன் இப்படி சுட (அவன் ஹிட்லர் தான் என்று தெரிந்து) ஒரு வாய்ப்பு வந்தால் ஹிட்லரை சுடுவேனா?

தெரியவில்லை.

12/365


முழுதும் படிக்க..

Jan 11, 2014

சிலைத் திருட்டு

தமிழகம் முழுக்க கோவில்களில் இருக்கும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள். கண்டுகொள்ள ஆள் இல்லாமல் களவு போகின்றன. கிட்டத்தட்ட அனைத்து கோவில்களும் சிலைகளும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் அவர்களிடம் கோவில்களில் இருக்கும் சிலைகளை பற்றியும், அதன் தொன்மத்தைப் பற்றியும் ஆவணங்கள் கிடையாது. சிலைத்திருடி கோடிக்கணக்கில் விற்பவர்களிடம் மட்டும் இந்த டேட்டாபேஸ் எப்படியோ இருக்கிறது போலும் (Information is wealth என்பது இவர்களுக்கு ரொம்ப பொருந்துகிறது. அவர்களை பிடித்து தகவல்களை ரீ யூஸ் செய்துகொள்ளலாம்).

ஆட்கள் மற்றும் நிதிப்பற்றாக்குறையால் இருக்கும் இந்த துறைகளுக்கு ஏன் இந்துத்துவர்கள் உதவக்கூடாது? பிரச்சினைக்குரிய இடங்களில் கோவில்களை கட்டுவதையும், முக்குக்கு ஒரு பிள்ளையார் கோவில் எழுப்புவதையும் விடுத்து, இப்படி பாழடைந்து கிடக்கும் கோவில்களை சுத்தப்படுத்தி, அவற்றின் பராமரிப்பில் உதவலாமே?

வெளியில் இருந்து வந்து நம்மை அழித்துவிடுவார்கள், இந்து மதம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும் போன்ற கற்பனையான பயத்தை தூண்டுவதை விடுத்து இப்படி பாழடையும் கோவில்களையும் சிலைகளையும் பாதுகாப்பதை போன்று உருப்படியாக ஏதாவது செய்யலாம்.

11/365


முழுதும் படிக்க..

Jan 10, 2014

அராஜகக் குழந்தை

சிடின் என்பவரின் இந்த பதிவை படித்து பல இடங்களில் சிரித்தேன். குட்டி பாப்பாவின் பார்வையில் எழுதப்பட்டிருந்தாலும், குட்டியின் சேட்டையால் 'பாதிக்கப்படும்' பெற்றோரின் காண்டு பதிவு முழுக்க வழிந்தோடுகிறது :)

http://www.whatay.com/blog/2014/1/5/my-baby-between-the-times-of-3-and-4-am-a-poem

10/365


முழுதும் படிக்க..

Jan 9, 2014

பிட்டு

பிரபல பிட்டுப்பட வலைத்தளம் ஒன்று கார்டியன் செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவல்கள் நல்ல சுவாரசியம். ஐந்தாறு நாடுகள், முக்கியமாக இங்கிலாந்தை அடிப்படையாக கொண்ட தகவல்கள் என்றாலும், சில முடிவுகள் நமக்கும் பொருந்தக்கூடும்.

பிட்டு அதிகம் பார்க்கப்படும் நாள் திங்கள்கிழமை. ஜப்பானியர்கள் மட்டும் சனியை விரும்புகிறார்கள். நம்மூர் ஜப்பானையே பின்பற்றும் என்று நினைக்கிறேன். வேலை நாட்களில் நோ கேளிக்கை (ஆசியா டா). மாதங்களில் ஜனவரி, நவம்பர் முன்னிலை. தேடப்படும் முக்கிய வார்த்தைகள் லெஸ்பியன், டீச்சர் (!), அமெச்சூர், டீன். லிசா அன் என்கிற அம்மணி, முன்னணி வகிக்கிறார்.

இன்னொரு முக்கிய தகவல், எந்த நாட்டவராக இருந்தாலும் அவர் முதலில் தேடுவது அவர் சொந்த நாட்டைச் சேர்ந்தவர்களின் பிட்டுக்களையே. தேசப்பாசம்! (இனப்பாசம்?).

9/365


முழுதும் படிக்க..

Jan 8, 2014

இந்தியாவில் ஜனநாயகம்

'இந்தியா மாதிரி ஒரு நாட்டில் எப்படிய்யா இன்னும் ஜனநாயகம் இருக்கிறது? வாய்ப்பே இல்லையே?'' என்று அறிஞர்கள் பலர் மண்டையை குழப்பிக்கொள்கிறார்கள்.  அதுவும் 'அமெரிக்கா போய் கூட சுலபமாக சமாளிக்கலாம், அம்ரிஸ்தர் போய் இருக்க முடியாது' எனும் அண்டை மாநிலத்தை பற்றிய அங்கலாய்ப்புகள் இருக்கும் ஒரு நாட்டில். ஏன், ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்களே அடித்துக்கொள்ளும் அளவிற்கு வேற்றுமைகள் குழம்பிக்கிடக்கும் இடத்தில்..

நம்மைப்போலவே காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று, ஜனநாயகம் ஆன நாடுகள் பல. ஆனால் இன்றும் அதே நிலையில் நீடிக்கும் நாடுகள் சிலதுதான். அத்தனையும் மொரிஷியஸ், ஜமைக்கா என்று குட்டி குட்டி நாடுகள். 'இது எப்படி எப்படி' என்கிற கேள்விக்கு "Battles Half Won - India's Improbable Democracy" என்கிற புத்தகத்தில் விடை இருப்பதாக கூறுகிறார் எழுத்தாளர் விவேக் கவுல். இந்த வருடம் படிக்க வேண்டிய புத்தக லிஸ்டில் இதுவும் உண்டு. இந்த கேள்வியை ஆராயும் புத்தகம் தமிழில் இருக்கிறதா, தெரியவில்லை. 'இங்கயும் சவூதி மாதிரி கல்லடிச்சே கொல்ற தண்டனைகள் கொண்டு வரணும்' என்று போகிற போக்கில் சொல்பவர்கள் என் அகத்தை அதிரச்செய்கிறார்கள். ஜனநாயகத்தின் அருமையை அறிய எமர்ஜென்சி கொடுமைகள், மற்ற சர்வாதிகார நாடுகளில் நடக்கும்  கொடுமைகளைப்பற்றி படித்தாலே போதும். 

அர்ஜுன், விஜயகாந்த் ஆகியோர் 'இந்தியானா என்னன்னு தெரியுமாடா?' என்று ஏதேதோ புடைக்க கத்தியது எல்லாம் புரிய எனக்கு இன்னும் சில வருடங்கள் ஆகும்.

8/365


முழுதும் படிக்க..

Jan 7, 2014

ஸ்மார்ட்போன்

நண்பர் ஒருவர் (க்ளிஷே அலர்ட்) புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை கீழே போட்டுவிட்டார். கடையில் போய் கேட்டால் சரிசெய்ய ஒன்பதாயிரம் ஆகும் என்றிருக்கிறார்கள். மொபைல் விலையே பதிமூன்றாயிரம் தான். எனக்கு உடனே  'அந்த காலத்து' 1100 ஞாபகம் வந்துவிட்டது. பத்து வருடம் கழித்து இன்னமும் நல்லாவே வேலை செய்கிறது. அதில் டிங் டங் சத்தங்கள் கொண்ட ரிங்டோன்களை சொந்தமாக உருவாக்கியது எல்லாம் நினைவுக்கு வந்தது. இப்போது அதை யார் உபயோகிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? வீட்டு காயலாங்கடையான எங்க அப்பா தான்.

இப்படி ரொம்ப நாட்கள் வேலை செய்கிற மாதிரி பொருட்கள் இப்போதெல்லாம் யாரும் தயாரிப்பது இல்லை என்கிறார்கள். உண்மைதான். யோசித்துப்பார்த்தால் எல்லா பொருட்களையுமே FMCG அதாவது பேஸ்ட், சோப்பு மாதிரி வேகமாக தீரும்/விற்கும் பொருட்களாக மாற்றிவிட்டார்கள். வண்டி தயாரிப்பில் இருந்து பல துறைகளில் இந்த மாற்றத்தை காண முடிகிறது. சீப் சைனா செட் பற்றி அங்கலாய்க்கும் நாம் ஏனோ இவற்றை கண்டுகொள்வதில்லை.

சொல்ல வந்தது இந்த 'ஸ்மார்ட்'போன்கள் பற்றி. நினைத்து பார்க்க முடியாத விஷயங்களை விரல் நுனியில் செய்ய உதவினாலும், பொசுக்கென்று கோவப்பட்டுவிடுகிறது. ஈரப்பத மாற்றத்தால் கூட சிப்பு நனைந்து பாழாகி விடுமாம், சர்வீஸ் சென்டரில் சொல்கிறார்கள். நான் அங்கு போயிருந்த சமயம், தண்ணி தொட்டிக்குள் மொபைலை போட்ட ஒருவர், 'தண்ணி பட்டிருக்கா? சான்சே இல்லையே?' என்று சண்டை போட்டுக்கொண்டிருந்தார். மொபைல் நனைந்தால் கண்டுபிடிக்க அதிலேயே வெள்ளை பட்டைகள் உண்டு. தண்ணீர் பட்டதும் அது சிகப்பாக மாறி விடும். பேட்டரி உட்பட இரண்டு மூன்று இடங்களில் இது இருக்கிறது.

பேசாமல் ஒரு பேஸிக் மாடல் மொபைலை பேசுவதற்கு வைத்துக்கொண்டு, மற்ற சமாச்சாரங்களுக்கு (காசிருந்தால்) டேப்லட்டை வைத்துகொள்ள வேண்டியதுதான்.

7/365


முழுதும் படிக்க..

Jan 6, 2014

என்றென்றும் புன்னகை

இது வரை வெளிவந்த இந்திய மசாலா படங்களிலேயே நேர்த்தியான திரைக்கதை அமைப்பு, நல்ல கதை, கலைத்தன்மை, இசை எல்லாம் ஒருங்கே கூடிவந்த ஒரு படம் தில் சாஹ்தா ஹை (இந்தி). மேல் தட்டு நண்பர்களின் 'பேச்சிலர் வாழ்க்கை டு கல்யாணம்' காலக்கட்டத்தை காட்டும் படம். பல தடவை பார்த்தும் அலுதத்தில்லை. இப்படி ஒரு படம் தமிழில் வர வேண்டும் என்று ரொம்ப நாளாகவே காத்துக்கொண்டு இருக்கிறேன்.

அந்த எண்ணத்திற்கு பதைப்பை ஏற்படுத்தும் விதமாக தில் சாஹ்தா ஹை படத்தில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சீன்களை சுட ஆரம்பித்தனர் சிலர். ஆனால், அந்த படம் முழுதாக சூரையாடப்படுவதற்குள்  'என்றென்றும் புன்னகை' வந்து பீரை வார்த்தது. இதில் தில் சாஹ்தா ஹை படத்தின் பாதிப்புகள் இருந்தாலும், எதையும் திருப்பி எடுக்காமல் யோசித்து வேறு கதையை எடுத்திருக்கிறார் இயக்குனர் (இன்ஸ்பிரேஷன்). ஆனால் இயக்குனரின் முதல் படமான வாமணன் பாலோயிங், எனிமி ஆப் தி ஸ்டேட் போன்ற படங்களின் கலவையாக இருந்ததால் இது சொந்த சரக்காகத்தான் இருக்கும் என்று நம்புவோமாக. குடிகாரரின் பார்வையில் வரும் அந்த சாய்வு காட்சியெல்லாம் புதுசு. இப்போது வரும் காமெடிக்குத்து படங்கள் போல் இல்லாமல், ஜாலியாக பார்க்க ஏற்ற படம்.

**

நேற்று ஏவப்பட்ட GSLV அற்புதமான ஒரு வெற்றியை இஸ்ரோவிற்கு அளித்துள்ளது. ஒரு சின்ன டவுட் மனதின் ஓரத்தில் சொரிந்து கொண்டே இருந்த எனக்கு இந்த வெற்றி புல்லரிப்பை கொடுத்தது!


முழுதும் படிக்க..

Jan 5, 2014

GSLV மற்றும் மாவோ

இரண்டு செய்திகள். முதலாவது இந்தியா ஏவப்போகும் ஜிஎஸ்எல்வி. சொன்னதை அப்படியே கேட்கும் PSLV ராக்கெட் இந்தியாவிற்கு ஒரு வரப்பிரசாதம். ஆனால் PSLVயால் அதிக எடையை சுமக்க முடியாது. இரண்டு டன்னுக்கும் அதிகமான சுமையை தூக்கிச்செல்ல வலுவான ஒரு ராக்கெட் தேவை. அதை பூர்த்தி செய்யவே ஜிஎஸ்எல்வி உருவாக்கப்படுகிறது. ஆனால் கடந்த இரண்டு தடவையுமே ஜிஎஸ்எல்வி சிறிது மக்கர் செய்துவிட்டது. இந்தியா சொந்தமாக தயாரித்த சிக்கலான கிரையோஜெனிக் என்ஜின் ஜிஎஸ்எல்வி-யின் ஹைலைட். இந்த புதிய ராக்கெட்டை கொண்டுதான் சந்திராயன்-2 போன்ற எதிர்கால விண்கலன்களை ஏவ முடியும். அதனால் இஸ்ரோவிற்கு இதை சாத்தியப்படுத்தயே ஆக வேண்டிய கட்டாயம். இன்று மாலை நான்கரை மணி வாக்கில் இதன் முடிவு தெரிந்துவிடும்.

இரண்டாவது மாவோவின் கொள்கைகளால் சீனாவில் 1960 வாக்கில் நடந்த அழிவுகள் பற்றிய ஒரு செய்தி. இந்த பின்புலன் மற்றும் அதற்கு பிறகு நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட Wolf Totem நாவலையும், அந்த காலக்கட்ட வரலாற்றையும் படிக்க ஆவல் கூடியுள்ளது. Wolf Totem ஓநாய் குலச்சின்னம் என்று மொழிபெயர்க்கப்பட்டு தமிழிலும் கிடைக்கிறது (சி.மோகன், நற்றிணை). கம்யூனிசம் சார்ந்த வரலாற்றை எப்போதும் ஒரு வித வெறுப்போடு அணுகும் இன்றைய சூழலுக்காகவே அப்போது நடந்த சம்பவங்களையும், மாவோ மூலம் கிடைத்த நன்மைகளையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகமாகிறது.

5/365


முழுதும் படிக்க..

Jan 4, 2014

தூரம்

'வெளியூரில் இருந்து வர முடியாதவர்கள் பேஸ்புக் வழியாக இறுதி சடங்கை காண்கிறார்கள்' என்கிற தகவல் கவனத்தை ஈர்த்தது. டிவியில் கேட்டது. உடனே எனக்கு எனது தாத்தாவின் இறுதி தருணங்கள் நினைவுக்கு வந்தது.

இரண்டாயிரம் வாக்கில் BSNL மற்றும் போஸ்டல் டிபார்ட்மெண்ட் வேலைநிறுத்தம் செய்திருந்த சமயம். திடீரென்று தாத்தாவுக்கு சீரியசாகி அவர் மகனுக்கு (என் அப்பா) தகவல் அளிக்க ஊரில் இருந்து பல்வேறு வழிகளில் முயல்கிறார்கள். எதிலும் பிடிக்கமுடியவில்லை. தாத்தா வேறு தன் மகனை பார்க்க வேண்டும் என்று ரொம்ப புலம்பியிருக்கிறார். கடைசியில் எப்படியோ ஒரு தந்தி வந்து சேர்ந்து நாங்கள் போய் சேருவதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.

ஒரு வேளை அப்போது பேஸ்புக், ஸ்கைப் எல்லாம் இருந்திருந்தால் போவதற்கு முன் வீடியோ கால் செய்து பேசியிருப்போமா?

சந்தேகம்தான்.

4/365


முழுதும் படிக்க..

Jan 3, 2014

மறக்காத ஒரு கனவு

கதை சொல்வது போல் ஆரம்பமாகும் பாடல்கள் எப்போதுமே எளிதில் கவர்ந்து விடுகின்றன
"ஒரு மலையோரம் 
அங்கு கொஞ்சம் மேகம், 
அதன் அடிவாரம் ஒரு வீடு" 
என்கிற அவன்-இவன் பாடல் மாதிரி.

'தற்செயலாக' இன்றும் 'ஒரு நாள் ஒரு கனவு, அதை மறக்கவும் முடியாது' பாடலை கேட்க வேண்டியதாகிவிட்டது. கண்ணுக்குள் நிலவு என்கிற பாசில் படம். பாசில் படம் என்றதும் மப்பும் மந்தாரமுமான மாலை மஞ்சள் நினைவுக்கு வருகிறதே, ஏன்?

ஆனால் ஒன்று. குழந்தையின் கன்னம் போன்ற மென்மையை இசையில் வடித்தால் ஒரு நாள் ஒரு கனவு பாடல் போல்தான் இருக்கும். மென்மைக்கு காரணம் இசையா, வரிகளா? இந்தளவிற்கு ஒரு மேகத்தொடுதலை 'பூவே செம்பூவே' போன்ற பாடல்களில் அனுபவித்ததுண்டு.

தெரிந்துவிட்டது. அந்தளவு மிருதுத்தன்மை கூடி வர காரணம் அப்பாடல்களை பாடிய ஜேசுதாஸ்!

3/365முழுதும் படிக்க..

Jan 2, 2014

படித்த முதல் நாவல்

'நீங்கள் படித்த முதல் நாவல் எது?' என்கிற கேள்வி இன்று என்னை கவர்ந்தது. காரணம், யோசித்தாலும் அது எனக்கு சரியாக நினைவுக்கு வரவில்லை. குட்டிக்கதைகள், நீதிக்கதைகள், சிறுகதைகள் என்று சிறுவயதில் இருந்தே படித்தாலும் முதல் நெடுங்கதையை எப்போது படித்தேன், அது என்ன என்பது நினைவில் வர மறுத்தது. பள்ளி நாட்களில் பொன்னியின் செல்வனை கூட நாவலாக அல்லாமல் கல்கியில் தொடர்கதையாகவே படித்தேன்.

நினைவில் தட்டுபட்டபடி, முதல் நாவல் சிட்னி ஷெல்டனின் Master of the game என்று நினைக்கிறேன். வறுத்தெடுத்த ஒரு என்.சி.சி கேம்பில் எனக்கு ஆசுவாசமளித்த புத்தகம். புத்தகத்தை கடன் வாங்கி இருக்கிறேன் என்பதையே மறந்து (அதான) எந்நேரமும் நானே படித்துக்கொண்டிருந்தேன். அதன் விஸ்தாரம் கொடுத்த பிரமிப்பில் சிட்னி மாபெரும் இலக்கியவாதி என்றெல்லாம் கூட நினைத்திருந்தேன்.

பிறகு விடுதிக்கு திரும்பியதும், தமிழில் ஏதாவது ஆரம்பிப்போம் என்று எப்படியோ என்னிடம் வந்து சேர்ந்த சுஜாதாவின் 'நில்லுங்கள் ராஜாவே' ஆரம்பித்தேன்.

திடீரென்று ஒரு நாள் மனைவி, நண்பர்கள், குழந்தைகள் அனைவரும் 'யார் நீ?' என்று உங்களைப்பார்த்து கேட்டால் எப்படி இருக்கும்? அதுவும் உங்கள் இடத்தில் வேறொருவன் இருக்கிறான். அவனைத்தான் நீங்கள் என்று எல்லோரும் நினைத்துக்கொள்கிறார்கள். அனைவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் நாடகமாட வாய்ப்பே இல்லை. இப்படி ஒரு சிக்கலான சூழலில் சிக்கிக்கொள்கிறார் ஒருவர். சிக்கலை தீர்க்கிறார்கள் கணேஷ்-வசந்த் (கிட்டத்தட்ட பாதி கதை முடிந்த பிறகு தான் இவர்களின் என்ட்ரி).

ஒரே மூச்சில் இந்த கதையை படித்ததும், சிட்னியாவது சட்னியாவது என்று ஆகிவிட்டது எனக்கு. அன்று முதல் பலரையும் போல் எனக்கும் சுஜாதா பிடித்தமானவராகிவிட்டார். இன்றும் கூட படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு நான் முதலில் பரிந்துரைப்பது சுஜாதா கதைகளே. தோரணம், சீரியல் லைட்டுலாம் போட்ட நல்ல அலங்காரமான வாசல் அவர் (இவரைப்பற்றிய  உவமைகள் வேகமாக தீர்ந்துகொண்டிருக்கிறது).

சரி, நீங்கள் படித்த முதல் நாவல்?


முழுதும் படிக்க..

Jan 1, 2014

கவர்ந்த விஷயம் - 365 நாள் பிராஜக்டு

365 நாள் பிராஜக்டுகள் என்றழைக்கப்படும் பதிவுகள் வலையில் ஏற்கனவே பிரபலம். ஏதாவது தலைப்பை தேர்ந்தெடுத்து, அது குறித்து தினம் ஒரு பதிவு போடுவது அதன் தார்ப்பாய் (தாத்பரியம்).

அன்றன்றைய தினத்தில் 'கவர்ந்த விஷயம்' (கவி) ஒன்றை பற்றி எழுதலாம் என்று எனக்கு ஒரு எண்ணம். இந்த பிராஜக்ட் ஆரம்பிக்க ஒரு முக்கிய காரணம், ஜனவரி ஒன்று. வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கக்கூடிய 365 பிராஜக்டை கழுதைய புத்தாண்டு வந்து விட்டதே என்கிற காரணத்திற்காக நானும் ஆரம்பிக்கிறேன். எனக்கு தெரிந்து லதாமகனும், கருப்பையாவும் இரண்டு புதிய முன்னூற்று அறுபத்தைந்தை ஆரம்பிக்கிறார்கள் - இரண்டுமே கவிதைகள் பற்றி!

பொதுவாக இப்படி பிராஜக்டுகள் தனி வலைத்தளத்தில் ஆரம்பிக்கப்படுகிறது. சும்மா இருக்கும் கொத்து பரோட்டா துருப்பிடிக்காமல் இருக்க, இதிலேயே என்னுடைய முன்னூற்று அறுபத்தைந்தை எழுதுகிறேன். 'கவர்ந்த விஷயம்' என்கிற தலைப்பை நான் தேர்ந்தெடுக்க 'முக்கிய' காரணம், ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் எழுதுவதெல்லாம் ரொம்ப கஷ்டம் ப்ரோ. இப்படி பொதுவான தலைப்பாக இருந்தால் சுலபமாக ஜல்லியடிக்கலாம். மேலும் எதிலும் கமிட் ஆவதே எனக்கு ஒவ்வாததால், இந்த பதிவுகள் எல்லாம் ஒரு மாதத்துக்கு மேல் தாண்டுகிறதா, பார்ப்போம். இத்தனை கஷ்டப்பட்டு இதை எழுதியே ஆகணுமா என்று நினைப்பவர்களுக்கு - தினம் மார்ச் பாஸ்ட் செய்து கட்டுக்கோப்பாக இருக்கும் ராணுவத்தை போல் இதில் கிடைக்கும் நன்மைகள் பல; என்பது இப்படி பதிவிடுகிறவர்களின் அபிப்ராயம். செய்துதான் பார்ப்போமே?

இன்றைக்கு கவர்ந்த விஷயம் இந்த 365 நாள் பிராஜக்டுகள் தான். இன்னிக்கு கோட்டா ஓவர்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


முழுதும் படிக்க..