Dec 13, 2009

85-65-75 : கதை... ஆனால் கதை இல்லை!

முதல் முறையாக எனது படைப்பு (கதை) யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது. அதுவும் யூத்ஃபுல் விகடனின் டிசம்பர் மின்னிதழில்... பார்க்க இங்கு கிளிக் பண்ணவும்


யூத்ஃபுல் விகடன் டிசம்பர் மின்னிதழ்





ட்டடங்கள் மட்டும் பெரிது பெரிதாக இருக்கும் கல்லூரிகள் ஒரு வித மிரட்சியை உண்டு பண்ணும். ஆனால் இந்த அமைதியான, மரங்களடர்ந்த கல்லூரி அப்படி இல்லை. நம் சொந்த வீடு, ஊர் போல் ஒரு உணர்வை கொடுக்கிறது. ஓஹோ என்று இல்லாவிட்டாலும், அதுவும் தரமான ஒரு கல்லூரி தான்.

அதோ அந்த துறையின் இறுதி ஆண்டில் படிப்பவர்களை பார்ப்போம். அவர்களை ஒருவாறு மூன்று வகைப்படுத்தலாம். முதல் வகையினர், எந்த நேரமும் செமஸ்டர், டெஸ்ட் என்று திரிபவர்கள். இவர்களுக்கு தெரிந்த (பிடித்த) இடங்கள் இவை தான் - வகுப்பறை, லேப், புத்தக கடைகள் (பாட புத்தகம் மட்டும்). அதிலும் ஸ்டாஃப் ரூம் தான் இவர்களுக்கு சினிமா தியேட்டர். உள்ளே நுழைந்தால் ஒரே உற்சாகம் தான் போங்கள். சராசரியாக 85 சதவீதம் எடுப்பவர்கள் (94 வரை கூட போகும், நான் சொல்வது சராசரி). சுருக்கமாக, உருப்படற பிள்ளைங்க.

இரண்டாவது வகை, இதற்கு நேர் எதிர். அடக்குமுறையை எதிர்ப்பவர்கள். எஃஸாம் நெருங்கினாலும் படிக்காமல் தைரியமாக அரியர் வைப்பவர்கள். இவர்களை 65 சதவீதத்தினர் (அரியர்/ஜஸ்ட் பாஸ்) என்று அழைக்கலாம் அல்லவா? பிரச்னைகளை எப்போதுமே பனியன் போல் அணிந்திருப்பார்கள் (போர்வை என்றால் இரவு மட்டும் தான். அதனால் பனியன்). பிரச்னைகளின் போது தேடவெல்லாம் வேண்டாம், இவர்களாகவே ஆஜர் ஆகிவிடுவார்கள். இவர்களுக்கும், முதல் வகையினருக்கும் ஆகாது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒருவர் மற்றவரை கண்டால், இப்படியும் ஜந்துக்கள் எப்படித்தான் இருக்கிறதோ என்று தவிர்த்து விடுவார்கள் (இதில் மட்டுமே ஒரே மாதிரி சிந்தனை).

மூன்றாவது, இந்த கதைக்கு முக்கியமானவர் இருக்கும் 75 கோஷ்டி (ஓயாம பெயர் காரணம் சொல்லிட்டு இருக்க முடியாது). இவர்களால் மேலே சொன்ன 2 பேருடனும் சேர முடியாது. எஃஸாம் நெருங்கும் போது மட்டும் நன்றாக படித்து (!), பெரிய பிரச்னைகளை முதல் வரிசையில் நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் (சிறியவைகளுக்கு இவர்கள் தான் நாட்டாமை). இவர்கள் 85 கோஷ்டிக்கு சின்ன ரவுடி. 65க்கு கொழந்த பசங்க

நம் நாயக 75-ம் (பெயர் முக்கியமில்லை) அவன் நண்பர்களும், வாழ்க்கை வாழ்வதற்கே என்று எண்ணுபவர்கள். சினிமா, சாப்பாடு, மொபைலில் குறும்படங்கள் எடுப்பது, படங்களுக்கு டப்பிங் கொடுப்பது என்று அவர்களுக்கு தெரிந்த வகையில் எஞ்சாய் செய்து, கல்லூரி வாழ்க்கையை அணுவணுவாக ரசிப்பவர்கள். 85/65 இருவருடனும் சினேகமாகவே இருப்பர் - 85 உடன் படிப்பு சம்பந்தமான உதவிகளுக்காக (xerox எடுக்க உன் புக் குடு, ப்ராக்டிகல்ஸ் இத்யாதிகள்), 65 உடன் கல்லூரியின் சீரான செயல்பாடுகளுக்காக (பின்னே? 65க்கு தெரியாமல் எதுவும் நடக்காதாக்கும்).

கொஞ்ச நாள் முன்னாடி காம்பஸ் இன்டர்வியூக்கென கம்பனிகள் வந்தார்கள். 85 கோஷ்டி டிரைனில் ரிசர்வெஷன் செய்தவர்கள் போல், பெரிதாக அலட்டி கொள்ளாமல் வேலை வாங்கினர். 75-ஐ சேர்ந்தவர்கள் அன்-ரிசர்வர்டில் அடித்து பிடித்து இடம் பிடிப்பதை போல் ஏதோ ஒரு கம்பனியில் வாங்கி விட்டார்கள். 65-இல் கிட்ட தட்ட எல்லாரும் டிரைனை தவற விட்டனர் (கொஞ்சம் பேர் ஊரிலேயே இல்லை).




இது நடந்து கொஞ்ச நாள் ஆகி விட்டது. முதல் ஆண்டில் எல்லாம் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஊருக்கு சென்று கொண்டிருந்த நம் 75, நீண்ட விடுமுறைகளிலும் ஹாஸ்டலிலேயே பழியாக கெடந்தான் (இறுதி ஆண்டும் முடிய போகிறதல்லவா..) இந்த நண்பர்கள் இல்லாத வாழ்க்கையை அவனால் கற்பனை பண்ண முடியவில்லை. அவன் பயந்ததை போல இறுதி ஆண்டு செமஸ்டரும் முடிந்தது. கடைசி நாளும் வந்தது. அன்று தான் நாம் உள்ளே நுழைந்திருக்கிறோம்.

வகுப்பினுள் நின்று கொண்டிருந்த நம்ம 75 அருகில் வந்த 65, "ஒரு வழியா சனியன் முடிஞ்சது... இங்க வந்து சேர்ந்ததுக்கு நல்ல காலேஜ்லயாச்சும் சேர்ந்திருக்கலாம். வேலயாச்சும் கெடச்சு இருக்கும். சரி சரி.. எதாச்சும் கெட்-டுகெதர்லாம் வச்சா கூப்பிடுங்கடா..." என்று கூறி விட்டு நகர்ந்து போனான்.

அப்போது, அங்கு வந்த 85 (இவனை பார்த்து தான் அவன் நகர்ந்திருக்க வேண்டும்), "இன்னிக்கி எஃஸாம் ஈசியாதான் இருந்துச்சு இல்ல (!)? டேய், கம்பனில இருந்து நாம ஜாயின் பண்றதுக்கு முன்னாடி படிக்கறதுக்கு டாகுமெண்ட்ஸ்லாம் அனுப்பி இருக்காங்க பாத்தியா? அத பிரின்ட் அவுட் எடுக்கத்தான் இப்போ போய்ட்டு இருக்கேன். நீ ஏண்டா ஒரு மாதிரி இருக்க?" என்று சொல்லி விட்டு, கடைசி நாள் என்ற நினைப்பே இல்லாமல் கடந்து போனான்.

முதல் நாளில் இருந்து நடந்த ஆயிரமாயிரம் நினைவுகள் அவன் கண் முன்னே ஓடின. நாளையிலிருந்து வகுப்புக்கு அவசரம் அவசரமாக கிளம்ப வேண்டியதில்லை; லேட்டா போய் திட்டு வாங்க வேண்டியதில்லை; ஹாஸ்டல் கிடையாது; கடைசி நேர படிப்புகள் இல்லை; ரெக்கார்ட்/அசைன்மென்ட்டுகள் இல்லை; மட்டமான அந்த மெஸ் சாப்பாடு இனி கிடையாது; சண்டை சச்சரவு இல்லை; ஏன், இனி இந்த கல்லூரியின் மாணவனே கிடையாது என்ற உண்மைகள் சடாரென்று அவனை தாக்க, கண்ணீர் தானாக துளிர்த்து அழ ஆரம்பித்தான்.

10 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

கலகலப்பா சொல்லிட்டு வந்து கடைசியில கண்ணீரோட முடிச்சுருக்கீங்க நானும் அனுபவித்திருக்கிறேன் அந்த கல்லூரி வாழ்வின் பிரிவை...

ரொம்ப சிறப்பா வந்துருக்கு பிரசன்னா

விகடன் மின்னிதழில் வந்தமைக்கு மகிழ்ச்சி

பாராட்டுக்கள் பிரசன்னா...

Hisham Mohamed - هشام said...

வாழ்த்துக்கள் பிரசன்னா தொடருங்கள்.

Jegan. said...

Nice one man. am also 75 category. it reflects my college last day. i just sat down half an hour on my chair in last day..

Prasanna said...

@பிரியமுடன்...வசந்த்,

உங்கள் தொடர் ஊக்கம் மிகுந்த உற்சாகத்தை தருகிறது.. நன்றி வசந்த்!

Prasanna said...

@Hisham Mohamed - هشام,

உங்கள் அன்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது :) மிக்க நன்றி..

Prasanna said...

@Jegan,
Final moments of college life are always painful..
Thanks for the visit & comment :)

மகேஷ் : ரசிகன் said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,,,,, அழக்கூடாதுப்பா! பத்து நிமிஷம் கேண்டீனும் க்ளாஸ் ரூமும் கண் முன்னாடி வந்துட்டு போச்சு! தேங்க்ஸ்!

Prasanna said...

@மகேஷ்,
//அழக்கூடாதுப்பா//
:) சரிங்கண்ணே..

//கேண்டீனும் க்ளாஸ் ரூமும் கண் முன்னாடி வந்துட்டு போச்சு//

அப்ப கூட கான்டீன் தான் முதல்ல வருதா :)

ராமலக்ஷ்மி said...

முடிவு நெகிழ்வு. நல்ல கதைங்க. எல்லோரும் தாண்டி வந்த அனுபவமே.

யூத் விகடனில் வந்தமைக்கும் என் வாழ்த்துக்கள்.

Prasanna said...

@ராமலக்ஷ்மி,
தங்கள் முதல் வருகைக்கும், ஊக்கத்திற்கும், கருத்திற்கும் நன்றி :)