Jun 9, 2010

வெள்ளை நிறத்தில் ஒரு பூனை..

அது வீட்டின் சேமிப்பு அறை மற்றும் ஆடைகள் தொங்கவிடப்படும் அறை மற்றும் பூஜை அறை. தீர்ந்து போனால் புது சோப்பு எடுப்பது போன்ற 'காரிய நிமித்தம்', அங்கு எப்போதாவது போவது உண்டு. அன்று அப்படி தற்செயலாக செல்ல, க்ர்ர்ர்ர் என்று உறுமல் சத்தம். குனிந்து பார்த்தால், அங்கு வெள்ளை நிறத்தில் ஒரு பூனை. கீழே வைக்கப்பட்டு இருந்த பாத்திரங்களை அரணாகக்கொண்டு..

அவசரமாக வெளியே வந்து அம்மாவிடம் இதை சொல்ல.. நேற்றில் இருந்தே அது அங்கு இருப்பதாகவும், அதனுடன் இன்னும் ஒரு குட்டியும் இருப்பதாகவும் தகவலறிய முடிந்தது. புரிந்தது, அந்த உறுமலுக்கான காரணம்.

முதல் இரண்டு நாட்கள் தாய் எப்பொழுது வெளியே செல்கிறது? எங்கே சாப்பிடுகிறது? என்பதை அறிய முடியவில்லை. இரண்டு நாட்கள் எங்களின் நடவடிக்கைகளை பார்த்த தாய், 'சரி, இவர்களை நம்பலாம்' என்று ஒருவாறு தயங்கி எங்கள் கண் முன்னே வெளியே சென்றது. அடுத்து பாலை வைத்ததும், அப்படியே ஒட்டிக்கொண்டது. குட்டியை எங்கள் பொறுப்பில் விட்டு விட்டு போகும் அளவிற்கு அதற்கு தைரியம் வந்தது.. அது இல்லாத நேரத்தில் குட்டி அந்த பாத்திர அரணை விட்டு வெளியே வருவேனா, தரிசனம் தருவேனா என்றது. தாய் அருகில் இருக்கையில், வெளியே வந்தாலும், காலடி சத்தம் கேட்டதும் ஓட்டமாக ஓடி அதன் இடத்தில் பதுங்கியது..

(தாய் மீது தூங்கிக்கொண்டிருக்கும் குட்டி)

இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தது. இப்போது வேளா வேளைக்கு சாப்பாடு வந்து கேட்கும் அளவிற்கு தோழியாகி விட்டது தாய். பால் வைக்க வில்லை என்றால் மியாவ் மியாவ் என்று கத்தி கூப்பாடு போட்டு, மெதுவாக காலில் செல்லமாக உரசும் (அதற்கு மேல் சாப்பாடு வைக்காமல் இருக்க முடியாது). ஆனால் குட்டி இன்னமும் வெளியே வந்த பாடில்லை..

அடுத்த நாள்தான் அந்த 'திவ்விய' தரிசனம்.. தாய் பாதுகாப்பில் குட்டி, பாத்திர அரணை விட்டு வெளியே வந்தது.. கண் படாமல் இருக்கத்தான் வெளியே வராமல் இருந்திருக்கிறது குட்டி.. அத்தனை அழகு. அப்பப்பா அமைதியான குட்டி என்று நினைத்தது எங்கள் தவறுதான்.. வெளியே சமையலறைக்கு வந்த அது, தாய் அருகே இருக்கும் மிதப்பில், இங்கும் அங்கும் ஓடி, தாவி, குதித்து என்று என்ன ஒரு விளையாட்டு. ஏன் குட்டிகள் வளர்ந்து விடுகின்றன? அப்படியே இருக்கக்கூடாதா?

தாய் சோம்பலாக உட்கார்ந்து ஓரக்கண்ணால் இந்த சேட்டையை ஒரு நோட்டம். தாய் வாலை ஆட்டி, குட்டி அதை தவ்வி பிடிப்பது அவைகளுக்கு பிடித்தமான விளையாட்டு. இரையை பிடிக்க தாய் தரும் பயிற்சி அது என்பதை உணர வெகு நேரம் ஆகவில்லை. நாங்கள் அருகே தூக்கச்சென்றால் மட்டும் ஓடிப்போய் ஒளிந்து கொள்ளும் குட்டி. போக போக அதையும் ஒரு விளையாட்டாகவே செய்ய ஆரம்பித்தது.. கொஞ்ச நேரம் ஏதாவது பொருளை உருட்டி விளையாடும்.. சலிப்பு தட்ட ஆரம்பித்ததும் திடீரென்று நிறுத்தி விட்டு. எங்களை பார்த்து பயப்படுவது போல் ஓடிப்பதுங்கும் (நாங்கள் பாட்டுக்கு இருந்தாலும்).

அடுத்த நாள். வழக்கும் போல குட்டியை விட்டுவிட்டு இரை தேட வெளியே போன தாய்.. போனது போனதுதான்.. இரவை தாண்டியும் வரவில்லை. பாவமே உருவாக, வைக்கும் பாலையும் குடிக்காமல், அரணை விட்டு வராமல், சோகமாக தவம் இருந்தது குட்டி. தாய் மீது முதன்முதல் கோபம் வந்தது அப்போதுதான்..என்ன ஆனதோ? என்பதை விட எங்கு போய் தொலைந்த்தோ என்பதாகவே இருந்தது எண்ணம்.

அடுத்த நாள். காலை ஐந்து மணி அடித்ததும் கத்த தொடங்கி விட்டது பெரியது.. ஞாயிறு இப்படி எழுப்பி விடுகிறதே என்பதை விட, அது திரும்பி வந்த நிம்மதியில்.. கொஞ்சம் அதிகமாகவே பால் வைக்கப்பட்டது அன்று..

(தாயுடன் வலது ஓரத்தில், பவ்யமாக இருப்பது போல நடிக்கும் குட்டி)

இப்போது குட்டி எங்கள் படுக்கையறை வந்து விளையாட ஆரம்பித்து விட்டது.. அவ்வப்பொழுது பயந்து ஓடும் விளையாட்டும் இருக்கத்தான் செய்தது.. தாய் குட்டிக்கு தரும் பயிற்சிகளும்தான். குட்டி மிகவும் தடுமாறிய ஒரு பயிற்சி, ஜன்னல் மீது தாவி ஏறி, வெளியே செல்வதுதான். இது மட்டும் அதற்கு இயலாத ஒன்றாக, வயதுக்கு மீறியதாக இருந்தது.. அதற்கு படி போல் உதவ, ஒரு சிறு பெட்டி வைக்கப்பட்டது.. அதன் மீதே குட்டியால் ஏற முடியவில்லை.. தாயும் மிகுந்த பிரயத்தனப்பட்டு பார்க்கத்தான் செய்தது.. ஏன், கொஞ்ச காலம் விளையாடிக்கொண்டே இருக்கட்டுமே, இப்போது இதற்கு என்ன இவ்வளவு அவசரம் என்ற கேள்வியும் மனதில்..

அன்று இரவு என்ன ஆனதோ, ஜன்னல் மீது ஏற முடியாத குட்டியை அலேக்காக தூக்கிக்கொண்டு வெளியே சென்றது தாய்.. ஹ்ம்ம்ம் வெளியே ஏதோ பயிற்சி போல என்று நாங்களும் விட்டு விட்டோம்.. திடீர் என்று ஒரு சந்தேகம்.. உள் பக்கத்தில் பெட்டி உதவியுடன் சுலபமாக ஏறிய தாய், வெளி பக்கத்தில் இருந்து குட்டியை தூக்கிக்கொண்டு ஏற முடியுமா? இரண்டும் வரும் சுவடில்லை. கவலை அதிகமானது.. குட்டி  பாட்டுக்கு எந்த கவலையும் இல்லாமல் விளையாடிக்கொண்டு இருந்தது.. அதுக்கு கற்றுக்கொடுக்கிறேன் நன்மை செய்கிறேன் என்று, அதன் பால்யத்தை வெடுக்கென்று இவ்வளவு அவசரமாக பிடுங்க வேண்டியதன் அவசியம் என்ன?

அடுத்த நாள்.. நாங்கள் எழும்போது, தாய் கத்திக்கொண்டு இருந்தது.. அவசரமாக அவர்களின் இடத்தில் போய் தேடினால், குட்டியை காணவில்லை. கேள்வியுடன் நாங்கள் தாயை பார்த்தோம்.. இல்லை.. முறைத்தோம். அது பதிலுக்கு எங்களை வந்து உராசியது.. கத்தியது.. அதற்கு பின் அது செய்த செயல், சாகும் வரை மறக்காது..

'இதற்கு மேல் விளையாடாதீர்கள்.. மறைத்து வைத்திருக்கும் குட்டியை தந்து விடுங்கள்' என்று எங்களை கெஞ்சல் பார்வை பார்த்துக்கொண்டே, அறை அறையாக சென்று குட்டியை தேடியது.. தேடித்தேடி அலுத்து, கடைசியில் வெளியில் கிளம்பிவிட்டது.. எப்படியும் குட்டியை கண்டுபிடித்துக்கொண்டு வந்து விடும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தோம்..

இரண்டுமே கடைசி வரை திரும்பி வரவில்லை..

22 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

உயி்ர்வலி.

Chitra said...

பாவம்ங்க....

ஹேமா said...

தனக்கென்ற சுதந்திரம் எல்லா உயிர்களுக்குமே.நீங்கள் சொல்லியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது பிரசன்னா.

சௌந்தர் said...

நாங்களும் பூனை வளர்த்து இருக்கிறோம்.

ஜெய் said...

பிரசன்னா..

பாவம் பூனை... :( எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்...

சூப்பரான எழுத்துநடை... ரொம்ப அழகா விவரிச்சு இருக்கீங்க...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை.......

பத்மா said...

பிரசன்னா ,
அந்த குட்டி பூனை மெத்து பாதம் எடுத்து நடந்து வருவது போல அழகிய நடை.
நடுநடுவே கொஞ்சம் ஆத்ம விசாரம் .மிகவும் சிறந்த நுண்ணிய பார்வையுடன் கூடிய ஒரு இயல்பான பதிவு. படிக்க மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது .
நிறைய எழுதுங்கள் .வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் said...

நல்லதொரு பகிர்வு. சிறப்பான எழுத்து நடையில். பூனை மேல் பரிதாபம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

Prasanna said...

@ முனைவர்.இரா.குணசீலன்,
உண்மைதான்.. முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி :)

@ Chitra,
ஆமாம்.. மிக்க நன்றி..

@ ஹேமா,
அந்த பூனைக்குட்டிக்கும், குழந்தைகளுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை என்பதே என் எண்ணம்.. மிக்க நன்றி..

@ soundar,
முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.. தொடர்ந்து வாங்க..

Prasanna said...

@ ஜெய்,
அதே தான் எனக்கும் தோனுச்சு.. ஆனால் அது இன்னும் இருக்குமா என்ற கேள்விதான் பயத்தை தருகிறது.. மிக்க நன்றி!

@ உலவு.காம்,
மிக்க நன்றி!

@ padma,
கண்டிப்பாக எழுதுகிறேன்.. தங்கள் ஊக்கம் தெம்பளிக்கிறது..மிக்க நன்றி :)

@ அக்பர்,
ஆமாம் உண்மைதான்.. ஊக்கத்திற்கும், கருத்திற்கும் நன்றி!

மகேஷ் : ரசிகன் said...

அடப்பாவி...

Prasanna said...

@ மகேஷ் : ரசிகன்,
:))

பட்டாசு said...

எனக்கும் இந்த பூனை அனுபவம் ஏற்பட்டது. எப்படி என்று தெரிந்துகொள்ள எனது ப்ளாகுக்கு வரவும். நன்றி.

அண்ணாமலை..!! said...

அழகான தலைப்பு!
"வெள்ளை நிறத்திலொரு பூனை"

ரசனையா எழுதுனீங்க..
கடைசியில் ரணமும்!

Prasanna said...

@ பட்டாசு,
எல்லார்க்குமே ஒரு பூனை கதை இருக்கும் அல்லது வரும் போல.. உங்கள் அனுபவம் இன்னும் திகிலா இருந்தது.. மிக்க நன்றி.

@ அண்ணாமலை,
தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும், நன்றி :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

பாவம் தான்... தாய்மை எல்லாவற்றிலும் ஒரே மாதிரி தான்,....

Philosophy Prabhakaran said...

நீங்கள் எனக்கு கொடுத்த விருதினை பகிர்ந்திருக்கிறேன்... எப்படி இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள்...

http://philosophyprabhakaran.blogspot.com/2010/06/blog-post.html

துரோகி said...

கற்றது தமிழ்ல ஒரு வசனம் வரும்
"நாய் வளர்த்து பாத்தீங்க எண்டால்,
ஒரு நாயிட மரணம்
எவ்வளவு கொடுமையானது எண்டு தெரியும்" எண்டு....
வார்த்தைகளை தேட வேண்டி இருக்குது..........வாழ்த்துக்கள்!

ILLUMINATI said...

அப்பு!எங்கய்யா போய்ட்ட?சீக்கிரம் என்னத்தையாவது எழுதி போடு. :)

Prasanna said...

@ அப்பாவி தங்கமணி,
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி..

@ philosophy prabhakaran,
தாமதத்திற்கு மன்னிக்கவும்.. இதோ வந்து பார்த்து விடுகிறேன்..

@ துரோகி,
பிரிவு தான் உலகத்திலேயே மிகப்பெரிய வலி என்று நினைக்கிறேன்.. அது நிரந்தரம் என்றால்..? மிக்க நன்றி..

@ ILLUMINATI,
இதோ இதோ வந்துட்டேன்.. இன்னும் ஒரு நாள் ஒரே நாள்..

//சீக்கிரம் என்னத்தையாவது எழுதி போடு//

:))))))))

தக்குடு said...

சொன்ன விதம் அந்த குட்டி பூனையை விட அழகாக இருந்தது தோஸ்த்!! கவலை படாதீங்கோ! தாயும் சேயும் வேற இடத்துல பத்ரமா இருக்கும்.,,,:)

Prasanna said...

மிக்க நன்றி தக்குடு.. வாழ்த்துக்கும், ஆறுதலுக்கும் :)