Nov 1, 2010

The Way Home 2002 - வீடு திரும்பல்

ஒரு சூரிய சாப்பாட்டு வேளையில், வழியில் உட்கார்ந்து ஒரு பாட்டி கையேந்திக்கொண்டு இருந்தார். ரொம்ப வருந்தாமல், கண்களாலேயே.. சுலபமாக அவரை பார்க்காமல் கடந்து விட முடியும். ஆனால் நான் பார்த்துவிட்டேன்., பணம் கொடுப்போமா என்றும் எவ்வளவு கொடுக்கலாம் என்றும் யோசித்து முடிக்குமுன் அந்த இடத்தை கடந்தாயிற்று. சரி வரும் போது தரலாம் என்று முடிவு செய்து, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, திரும்பும்போது ஞாபகமாக அவரை தேடிக்கொண்டுதான் வந்தேன். அவர் அங்கே இல்லை. சரி, எனக்கு சமீபத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கும், இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம்?

குடும்ப பிரச்சினை காரணமாக நகரச்சிறுவன், வாய் பேச முடியாத அவன் பாட்டியுடன் கொஞ்சநாள் தங்க வருகிறான். அந்த மலைக்கிராமத்தில் நடக்கும் எளிமையான சம்பவங்கள்தான் கதை. ஆனால் அது ஏற்படுத்தும் அதிர்வு அதிகம்.


துடுக்கான சிறுவன், எடுத்த எடுப்பிலேயே அந்த இடத்தையும், அழுக்கான பாட்டியையும் வெறுக்கிறான், பகட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் நம்மை போலவே. தான் கொண்டு வந்த நொறுக்குத்தீனிகள் மற்றும் வீடியோகேம்கள் துணை கொண்டு தனக்கே உரிய உலகில் வாழ்கிறான். அவன் இருப்பது வேறு இடத்தில் என்பதையே கண்டு கொள்ளவில்லை.

பாட்டி எதையும், யாரையும் எதிர்பார்ப்பது இல்லை. எம் பணி அன்பு காட்டுவது மட்டுமே, என்று ஒரு நாயை போல, ஆம், ஒரு நாயை போல எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவனை அரவணைக்கிறாள். இவளின் தேவையை முதன்முதலில் வீடியோகேமின் பாட்டரி தீரும்போதே உணர்கிறான். அவளிடம் இல்லாத பணத்தை கேட்கிறான், அது கிடைக்காததும் மேலும் வெறுப்படைந்து அவளின் செருப்பை ஒளித்து வைக்கிறான். ஊருக்குள் வந்து பாட்டி கொண்டை கட்ட பயன்படுத்தும் கம்பியை விற்க வந்து வழி மறக்கிறான். தனிமை தரும் பயம், அப்போது முதன் முறையாக பாட்டியின் முக்கியத்தை உணர்கிறான்.

அவன் கொண்டு வந்த தீனி தீர்ந்ததும், பாட்டி அவன் 'சிக்கன்' கேட்டான் என்பதற்காக அவளிடம் இருக்கும் பொருளை விற்று மழையில் நனைந்த படி ஒரு கோழி வாங்கி வந்து சமைத்து கொடுக்கிறாள். ஆனால் அது அவன் கேட்ட வறுத்த கோழி இல்லை. கத்துகிறான். இளையவர்களின் எதிர்பார்ப்பு, அதை பூர்த்தி செய்ய பெரியவர்கள் செய்யும் மெனக்கெடல்கள்.. இருந்தும் அது இளையவர்களை திருப்தி படுத்தாதது.. அடிக்கடி நமக்கு நடப்பது தான்..

ஒரு நாள் காலை பாட்டியுடன் சந்தைக்கு கிளம்புகிறான். வாய் பேச முடியாத பாட்டி சந்தையில் பொருட்களை விற்க படும் அவஸ்தை. இருந்தும் இவனின் தேவைகள் பூர்த்தி ஆகும் போது அவளின் பாசத்தை புரிந்து கொள்கிறான், அதற்காக அவளின் அழுக்கு மூட்டையை எடுத்துக்கொண்டு அவன் 'கேள் பிரண்ட்' முன் பயணம் செய்யும் அளவுக்கு இன்னும் தயாரில்லை.

பாட்டி, சந்தைக்கு அருகில் தனது 'பிரெண்டு' பாட்டியை சந்திக்கிறாள். முடிவை எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கும் அவர்களுக்கு, தன்னிடம் எப்போதாகவேனும் அன்பாக பேச, நலம் விசாரிக்க யாராவது இருந்தால் அதுவே பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எப்படியோ பணம் சம்பாதித்து இவனிடம் பாட்டரி வாங்க காசு கொடுக்கும் பாட்டி. அவளை சிறுவன் முற்றும் புரிந்து கொள்ளும் நெகிழ்வான காட்சி அது. அழுகிறான். ஆனால் அதே நேரத்தில் அவன் அம்மா திரும்ப அழைத்து போக வருவதாக கடிதமும் வருகிறது.

பாட்டியை அவசர அவசரமாக எழுத பழக்குகிறான். ஆனால் முடியவில்லை. வெற்று கடிதம் அனுப்பினால் அவளுக்கு உடம்பு சரி இல்லை என்று புரிந்து கொள்வதாகவும் உடனே வருவதாகவும் அவளுக்கு வாக்களிக்கிறான். பிறகு இரவு முழுதும் கண் விழித்து விதவிதமாக கடிதங்களை தயாரித்து அவளிடம் கொடுத்து விட்டு கண்ணீருடன் கிளம்புகிறான். பாட்டி, எப்போதும் போல், தனது வீட்டிற்கு போகிறாள் தனியாக. அது பேரன் பிரிவினால் மிக நீண்ட பயணமாக அமைகிறது.


இந்த படம் தந்த உணர்வை என்னால் வார்த்தையில் வடிக்க முடியவே இல்லை. இது அழுகையை வரவைக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட manipulative cinema இல்லை கலகலப்பான படம்தான். ஆனால் ஏனோ பாட்டியை பார்க்கும் போதெல்லாம் தொண்டையை அடைக்கிறது. போனால்போகிறது, கிழடுகளிடத்தில் அன்பு காட்டலாம் என்று நாம் முடிவு செய்திருக்கும் போது, அவர்கள் இல்லாமல் போகலாம். நான் முதல் பத்தியில் கூறிய சம்பவம் நடப்பதற்கு முன் இந்த படத்தை பார்த்திருந்தால், சாப்பிட்டு வரும் வரை காத்திராமல் அந்த பாட்டிக்கு உடனே உதவியிருப்பேன்..!

15 comments:

Samuthra said...

Unga Punniyathula thaan intha padattha paathean... Thank u very much...

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...

"அன்பில் வாழும் இதயம் தன்னை தெய்வம் கண்டால் வணங்கும்."

Anisha Yunus said...

எல்லோருமே இப்படி எதாவது ஒரு அற்ப விஷயத்துக்காக எளியவர்களின் உரிமையை தாமதப்படுத்த தானே செய்கிறோம். அருமையான கதை. பார்க்க வேண்டும். :)

Chitra said...

போனால்போகிறது, கிழடுகளிடத்தில் அன்பு காட்டலாம் என்று நாம் முடிவு செய்திருக்கும் போது, அவர்கள் இல்லாமல் போகலாம். நான் முதல் பத்தியில் கூறிய சம்பவம் நடப்பதற்கு முன் இந்த படத்தை பார்த்திருந்தால், சாப்பிட்டு வரும் வரை காத்திராமல் அந்த பாட்டிக்கு உடனே உதவியிருப்பேன்..!


....மனதை கனமாக்கிய வரிகள்!

ப்ரியமுடன் வசந்த் said...

முதன் முறையாக ஒரு ஆங்கிலபட விமர்சனம் படித்து இப்பொழுதே பார்க்கவேண்டும் என்று ஏக்கப்படுத்திய எழுத்து!

சூப்பர்ப்!

Philosophy Prabhakaran said...

இதுவரை இந்தப் படம் பார்க்கவில்லை... பதிவிறக்க முயற்சிக்கிறேன்... அமாம், அத்துனூண்டு பைய்யனுக்கு கேர்ள் பிரண்டா.... அவ்வ்வ்வவ்....

Anonymous said...

நைஸ் :)

சைவகொத்துப்பரோட்டா said...

இந்த படம் ஏற்படுத்திய தாக்கம் உங்கள் வரிகளில் தெரிகிறது பிரசன்னா. (கவனத்திற்கு:உங்கள் ப்ளாக் பக்கம் திறக்க அதிக நேரம் எடுக்கிறது பிரசன்னா, நன்றி)

ILLUMINATI said...

படம் உங்கள் மனதை கனமாக்கியது தெரிகிறது.கொரியப் படங்களின் அழகு அது!வாழ்கையின் சுகத்தையும் துக்கத்தையும் சற்றே நகைச்சுவை கலந்து சொன்னாலும்,அதில் மிளிரும் கவித்துவம் மகத்தானது.படம் பார்த்த பின் நெஞ்சில் ஒரு கனத்தையோ,அல்லது மகிழ்ச்சி வெறியையோ ஏற்படுத்தக் கூடிய படங்கள் அவை.

பார்க்க வேண்டிய கொரியப் படங்கள் வரிசையில் இதுவும் உண்டு.சீக்கிரம் பார்க்கிறேன். :)

செந்திலின் பாதை said...

எனுடைய அவ யாபகம் வந்துவிட்டது ரொம்ப நாள் பின் அழுதேன் ......................... நன்றி

Prasanna said...

@Thiruppathi Samuthra,
'செந்தில் சார்' சொன்னார்.. உங்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.. மிக்க நன்றி :)


@ ஒரிஜினல் "மனிதன்",
அற்புதம் :)


@ அன்னு,
நிச்சயம் பாருங்கள் :)


@ Chitra,
இந்த படத்தின் அறிமுகம் விகடனில் வந்திருந்தது (செழியன்).. அதை வாசிக்கும் போதே கலங்கியது எனக்கு :)

Prasanna said...

@ ப்ரியமுடன் வசந்த்,
இது பெரிய பாராட்டு எனக்கு :)


@ philosophy prabhakaran,
அங்கல்லாம் அப்படித்தான் :)


@ Balaji saravana,
மிக்க நன்றி :)


@ சைவகொத்துப்பரோட்டா,
மிக்க நன்றி.. ஆகா ஆம் நேரம் எடுக்கிறது.. மறுபடியும் டெம்ப்ளேட் மாத்தணுமா ஐயோ


@ ILLUMINATI,
நிச்சயம்.. நிறைய படங்களை மிஸ் பண்ணி இருந்திருக்கிறேன். இப்போதான் தெரிகிறது :)


@ sam,
எனக்கும்.... நானும்....

Ramesh said...

அருமையான விமர்சனம் படிக்கும் போதே.. மனசு ஒரு மாதிரி இருக்கு.. கண்டிப்பா பார்த்துடறேங்க.. இந்தப் படத்தை..

pichaikaaran said...

அருமையான அறிமுகம் . படத்தை பார்க்க ஆவல் ஏற்படுகிறது. நள்ளிரவு நேரத்திலும் படிக்க தூண்டும் வகையில் சினிமா அறிமுகம் இருக்கிறது

அம்பிகா said...

மிக அருமையான விமர்சனம்.
பகிர்வுக்கு நன்றி ப்ரசன்னா.