Nov 13, 2013

மங்கள்யான் - செவ்வாய்க்கு செல்லும் இந்தியன்

செவ்வாய் கிரகத்துக்கு (Mars) 'ராக்கெட் விடுவது' என்பது அத்தனை அபூர்வமான செய்தியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதை இந்தியா அனுப்புகிறது என்பது பெருஞ்செய்தி. இதுவரை அந்த கிரகத்தை அடைய எடுத்த நாற்பதுக்கும் மேற்பட்ட முயற்சிகளில் பாதிக்கும் மேல் தோல்வி என்பதும் இத்திட்டத்திற்கு கூடுதல் கவனத்தை ஏற்படுத்தி விட்டது. இத்தனைக்கும் அனுப்பியவர்கள் அனைவரும் விண்வெளி ஆராய்ச்சியில் நம்மை விட முன்னேறியவர்கள்.

ஒப்பு நோக்கு அளவில் மற்ற நாடுகளின் மார்ஸ் திட்டங்களை விட, நமது மங்கள்யான் குறைந்த செலவில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் நாசாவும் செவ்வாய்க்கு MAVEN என்கிற விண்கலத்தை அனுப்புகிறது. கிட்டத்தட்ட இந்தியாவின் (450 கோடி) செலவை விட பத்து மடங்கு அதிகம் எப்படி விண்கலத்தை குறைந்த செலவில் செவ்வாய்க்கு கொண்டு சேர்க்கப்போகிறது இஸ்ரோ? 

வேகப்பந்து வீச்சாளர் போடும் பந்தில் இருக்கும் வேகம் போல், பிரபஞ்சமே நமக்கு அபிரிமித சக்தியை வழங்கி உள்ளது. அந்த சக்தியை திறமையான பேட்ஸ்மேன் போல் உபயோகித்து பந்தை இலக்குக்கு அனுப்பவேண்டும். இங்கு நாம் உபயோகிக்கபோவது பூமியின் ஈர்ப்பு சக்தியை. இதை விளக்க மற்றொரு விளையாட்டை துணைக்கு அழைப்போம். வட்டெறிதல் தெரியுமா? Discus Throw என்று 'தமிழில்' சொல்வோமே? அதை கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த வீரர்கள் சில தடவைகள் சுழன்று, ஒவ்வொரு சுற்றுக்கும் வேகம் பெற்று கடைசி சுற்றில் வட்டை அப்பால் எறிவார்கள். கீழே இருக்கும் படத்தில் கிருஷ்ணா பூனியா தான் பூமி. வட்டு தான் மங்கள்யான்.ஆக PSLV ராக்கெட்டை கொண்டு விண்கலத்தை பூமியின் சுற்றுப்பாதையில் தான் இப்போது சேர்த்திருக்கிறோம், அதற்கு மேல் அனுப்புவது பூமியின் சக்தி மற்றும் கலத்திலேயே இருக்கும் சிறிய எஞ்சின்+எரிபொருள். ஒவ்வொரு சுற்றுக்கும் கலத்தில் இருக்கும் எரிபொருளை கொண்டு கலத்தின் சுற்றுப்பாதையை விரிவாக்க (அதாவது) வேகத்தை அதிகரிக்க சின்ன திருத்தம் செய்யப்படும் - கடைசி சுற்றில் செவ்வாயை நோக்கி மங்கல்யானை கடாசிவிட வேண்டியது. கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும் இது மிக சிக்கலான விளையாட்டு - நவம்பர் இறுதியில் இதன் முடிவு தெரியும். இதற்கு மாறாக நாசா அனுப்பும் ராக்கெட்டோ சக்தி வாய்ந்தது - நேரடியாக செவ்வாய்க்கு செல்லும் பாதையில் கலத்தை செலுத்தி விடுகிறது. அதனால் அதிக செலவு, ஒப்பீட்டளவில் சுலபமானது (நாசாவின் அதிக செலவுக்கு வேறு சில காரணிகளும் உண்டு).

இந்த முதல் வெற்றியை விட முக்கியமான வெற்றி செவ்வாயை நெருங்கும்போது தேவைப்படுகிறது. விண்கலத்தை செவ்வாயின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்துவது என்பது அத்தனை சுலபம் அல்ல. கிரிக்கெட்டில் wide ball மாதிரி விண்கலம் செவ்வாயின் கையில் சிக்காமலே போய் விடக்கூடும்; ஒரே வித்தியாசம் இங்கு பவுண்டரியே கிடையாது (ஜப்பானின் கலம் இப்படித்தான் வழுக்கிக்கொண்டு செவ்வாயை கடந்து சென்று விட்டது). மேலும் கதிர்வீச்சுகளால் விண்கலத்திற்கு பாதிப்புகள் வரக்கூடும். பத்து மாதங்கள் அண்டத்தின் குளிரில் பயணித்த பிறகு, கலத்தின் இயந்திரங்கள் மீண்டும் ஒழுங்காக உயிர் பெற வேண்டும். இப்படி பல 'டும் டும் டும்'கள். இதன் முடிவு Sept. 24, 2014 அன்று தெரிந்துவிடும்.

எதற்கு இத்தனை சிரமப்பட்டு அனுப்புகிறோம்? செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் எப்படி இல்லாமல் ஆனது, உயிர்கள் இருப்பதற்கு அறிகுறியான மீத்தேன் உண்டா, மண் மற்றும் கனிம வளங்களை அளப்பது போன்ற ஆராய்ச்சிகளை மங்கள்யான் மேற்கொள்ளும். ஆனால் மற்ற கிரகங்களுக்கு விண்கலன்களை அனுப்பும் அந்த மாபெரும் ஞானம் - அதை வளர்த்துக்கொள்வது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். டூர் போய் விட்டு கேமரா இல்லை என்றால் எப்படி? மங்கல்யானில் ஒரு கலர் கேமராவும் உண்டு. இந்த உபகரணங்களின் மொத்த எடையே பதினைந்து கிலோதான். இவை தங்களுக்கு தேவையான மின்சக்தியை சூரிய ஒளியில் இருந்து பெற்றுக்கொள்ளும்.

எப்படி தரையில் இருந்துகொண்டு கலத்தை இயக்கப்போகிறோம்/செய்திகளை பெறப்போகிறோம்? பெங்களூர் தான் தலைமை கட்டுப்பாட்டகம். அதனருகே உள்ள deep space network (பெரீய்ய ஆண்டனாக்கள்) மற்றும் தரைக்கட்டுப்பாட்டு அறைகளுடன் இதற்காகவே பிஜி  தீவுக்கருகே இரு கப்பல்கள் தேவையான இயந்திரங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாசாவின் deep space network-ம் இதில் நமக்கு சிறிது உதவ போகிறது. கட்டளைகளை கலத்திற்கு பிறப்பித்துவிட்டு, அதன் முடிவு நமக்கு தெரிய 6-45 நிமிடங்கள் வரை ஆகலாம். மிக மெதுவான இணைய இணைப்பு உள்ள கணினியில் ஒரு லின்க்கை அமுக்கி விட்டு அந்த வலைத்தளம் திரையில் தோன்றும் வரை திட்டிக்கொண்டே காத்திருப்போமே, அது மாதிரி. இதனாலும் கூடுதல் சிக்கல்கள்.

இப்போதுதான் நாம் நிலவையே நெருங்கினோம். அதற்குள் கடினமான செவ்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதுவும் இத்திட்டம் பிரதமரால் அறிவிக்கப்பட்டது 2012ல். அதன்பிறகு ஒரே வருடத்தில் செயற்கைக்கோள் தயார்! ஏன் இந்த அவசரம்? சீனாவின் சமீபத்திய செவ்வாய் திட்டம் தோல்வி, அதனால் கூட நாம் வேக வேகமாக அனுப்பி அவர்களை முந்துகிறோம் என்று ஒரு கருத்து. இது cold war டைப் சண்டைகளை விரும்பும் மேலை நாடுகளால் சொல்லப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அரசால் இது ஒரு சாதனையாகக்கூட காட்டப்படக்கூடும். ஆனால் இதெல்லாம் பல ஆண்டுகள் முன்னமேயே தொலைநோக்காக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது, மற்ற நாடுகளின் திட்டங்களோ, தேர்தல்களோ நம் திட்டங்களை மாற்றி அமைக்க முடியாது என்று ISRO கூறுகிறது ('நமக்கு நாம்தான் போட்டி').

இந்தியாவை பொறுத்தவரை இது ஒரு 'காஸ்ட்லி' திட்டம்தான். இந்த பணத்தில் நிச்சயம் சுகாதாரமான கழிவறைகளை கட்டமுடியும். பாதாள சாக்கடைகளை சுத்தப்படுத்தும் கருவிகளை கண்டுபிடிக்கலாம். இவை ஒரு செயற்கை கோளை விட முக்கியமும் அவசியமும் கூட. ஆனால், எது முக்கியம் என்பதை விட எது அவசியம் என்பதில் இதற்கு ஒரு விடை கிடைக்கக்கூடும். பல ஆயிரம் கோடிகளை கொட்டி சிலைகளை வைப்பது, உயிர்களை கொல்லும் ஆயுதங்கள் தயாரிப்பது போன்ற தேவையில்லாத திட்டங்களில் போடப்படும் பணத்தை, மனிதனின் அறிவை பல மடங்கு பெருக்கும் ஒரு விஞ்ஞான முயற்சியில் போடுவது நல்லது அல்லவா? செவ்வாய் என்பது நிச்சயம் அடைய வேண்டிய, பெருமையான ஒரு இலக்கு. பிரபஞ்சத்தை அளக்க சந்திராயான் நாம் வைத்த முதல் அடி. மங்கள்யான் இரண்டாவது.

நன்றி:
http://www.isro.org/mars/home.aspx
விக்கிபீடியா


(தமிழ்பேப்பர் இணையதளத்தில் வெளிவந்த கட்டுரை)
(திருத்தப்படாதது)


No comments: