Jan 2, 2014

படித்த முதல் நாவல்

'நீங்கள் படித்த முதல் நாவல் எது?' என்கிற கேள்வி இன்று என்னை கவர்ந்தது. காரணம், யோசித்தாலும் அது எனக்கு சரியாக நினைவுக்கு வரவில்லை. குட்டிக்கதைகள், நீதிக்கதைகள், சிறுகதைகள் என்று சிறுவயதில் இருந்தே படித்தாலும் முதல் நெடுங்கதையை எப்போது படித்தேன், அது என்ன என்பது நினைவில் வர மறுத்தது. பள்ளி நாட்களில் பொன்னியின் செல்வனை கூட நாவலாக அல்லாமல் கல்கியில் தொடர்கதையாகவே படித்தேன்.

நினைவில் தட்டுபட்டபடி, முதல் நாவல் சிட்னி ஷெல்டனின் Master of the game என்று நினைக்கிறேன். வறுத்தெடுத்த ஒரு என்.சி.சி கேம்பில் எனக்கு ஆசுவாசமளித்த புத்தகம். புத்தகத்தை கடன் வாங்கி இருக்கிறேன் என்பதையே மறந்து (அதான) எந்நேரமும் நானே படித்துக்கொண்டிருந்தேன். அதன் விஸ்தாரம் கொடுத்த பிரமிப்பில் சிட்னி மாபெரும் இலக்கியவாதி என்றெல்லாம் கூட நினைத்திருந்தேன்.

பிறகு விடுதிக்கு திரும்பியதும், தமிழில் ஏதாவது ஆரம்பிப்போம் என்று எப்படியோ என்னிடம் வந்து சேர்ந்த சுஜாதாவின் 'நில்லுங்கள் ராஜாவே' ஆரம்பித்தேன்.

திடீரென்று ஒரு நாள் மனைவி, நண்பர்கள், குழந்தைகள் அனைவரும் 'யார் நீ?' என்று உங்களைப்பார்த்து கேட்டால் எப்படி இருக்கும்? அதுவும் உங்கள் இடத்தில் வேறொருவன் இருக்கிறான். அவனைத்தான் நீங்கள் என்று எல்லோரும் நினைத்துக்கொள்கிறார்கள். அனைவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் நாடகமாட வாய்ப்பே இல்லை. இப்படி ஒரு சிக்கலான சூழலில் சிக்கிக்கொள்கிறார் ஒருவர். சிக்கலை தீர்க்கிறார்கள் கணேஷ்-வசந்த் (கிட்டத்தட்ட பாதி கதை முடிந்த பிறகு தான் இவர்களின் என்ட்ரி).

ஒரே மூச்சில் இந்த கதையை படித்ததும், சிட்னியாவது சட்னியாவது என்று ஆகிவிட்டது எனக்கு. அன்று முதல் பலரையும் போல் எனக்கும் சுஜாதா பிடித்தமானவராகிவிட்டார். இன்றும் கூட படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு நான் முதலில் பரிந்துரைப்பது சுஜாதா கதைகளே. தோரணம், சீரியல் லைட்டுலாம் போட்ட நல்ல அலங்காரமான வாசல் அவர் (இவரைப்பற்றிய  உவமைகள் வேகமாக தீர்ந்துகொண்டிருக்கிறது).

சரி, நீங்கள் படித்த முதல் நாவல்?


1 comment:

Philosophy Prabhakaran said...

நான் படித்த முதல் நாவல் எது என்று சரியாக நினைவில்லை... ஆரம்பத்தில் ரமணி சந்திரன் வகையறா குடும்ப நாவல்கள் சிலவற்றை படித்திருக்கிறேன்... பெயர்கள் மறந்துவிட்டன... அப்புறம் பாக்கெட் நாவல்கள் சிலது படித்திருக்கிறேன்...

ஒருமுறை சுஜாதாவின் என் இனிய இயந்திரா படித்துவிட்டு முந்தயதை எல்லாம் கை கழுவிவிட்டேன்...