Jan 12, 2015

படித்த புத்தகங்கள் - 2014


2014 ல் படித்த புத்தகங்கள் பற்றிய சிறுகுறிப்பு.

The Last Juror

கறுப்பின வெறுப்பு பரவலாக இருந்த ஒரு காலகட்டத்தில் நடக்கும் கதை. அமெரிக்காவின் சின்ன ஊர் ஒன்றில் பத்திரிகை நடத்தும் இளம் ஹீரோ. அடுத்தவரை பாதிக்காத அளவிற்கு சுயநலமானவர். அங்கு அவர் பெறும் அனுபவங்கள், வெற்றிகள். Coming of age வகை. 'ஒரு தடவை படிக்கலாம்'.

6174 - சுதாகர்
டேன் பிரவுன் ஸ்டைல் த்ரில்லர்/அறிவியல் புனைவு. 'க்ளூக்கள் மூலம் உண்மையை தேடி நெருங்கும் நல்ல குழு-கெட்ட குழு' கதைகள் நான் பெரிதும் விரும்பிப்படிப்பவை/பார்ப்பவை (உதா. National treasure). ஆகவே இந்த நாவலும் சட்டென பிடித்துவிட்டது.  அதையே தமிழில் படிப்பது ஒரு சுக்ஹானுபவம். பெரும் உழைப்பு தேவைப்பட்டிருக்கும்.

ஏழு தலைமுறைகள்
கருப்பென்றால் தாழ்ச்சி, அசிங்கம், கருப்பர்களுக்கு எதுவும் தெரியாது, காட்டுமிராண்டிகள் போன்ற கருதுகோள்கள் நம்மிடையே வெகு பிரபலம். இத்தகைய கருத்துக்கள் எப்படி உருவாகின, யார் உருவாக்கியது, ஏன் அவை வெள்ளையர்களுக்கு மிக முக்கியமாக இருந்தன? கருப்பர்களை வெறும் உடைமையாக, செருப்பு பழசாகிடுச்சு, தூக்கி போட்டுட்டு வேற வாங்கணும் என்பது மாதிரி மட்டும் எப்படி அவர்களால் கருத முடிந்தது?  அவர்களின் உழைப்பை முழுக்க சுரண்டி தன்னை வளர்த்துக்கொண்ட வெள்ளையர்கள் எத்தனை பேர்? ஆப்ரிக்காவில் ஆரம்பிக்கும் கதை. குதிரை பிடிப்பது போல் அடிமையாக அமெரிக்காவுக்கு இழுத்துச்செல்லப்படும் குண்ட்டா. கதையை எழுதும் அலெக்ஸ் குண்ட்டாவின் வம்சத்தில் ஏழாவது தலைமுறை. விரிவான புத்தக அறிமுகத்தை இங்கே படிக்கலாம்

அறம்
மனிதத்தின் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் கதைகள். 'இந்த லோகத்துல யாருக்கும் மனிதாபிமானம் இல்ல' என அடிக்கடி தலையில் 'ஜலம்' விட்டுக்கொள்வது என் வழக்கம் (ஓடி ஓடி உதவுவதில்லை, ஆனால் முடிந்தவரை அடுத்தவருக்கு சிரமம் கொடுக்காமல் இருக்க விழைகிறேன்). அந்த மனக்குளிருக்கு கதகதப்பாக இருந்தது இந்த புத்தகம்.

புறப்பாடு படித்தது இந்த வருடமா போன வருடமா?ஆயிஷா
மிகச்சிறிய புத்தகம், மேற்கண்ட இணைப்பில் படிக்கலாம். கல்வித்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் அதோடு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் (ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்.. முக்கியமாக ஆசிரியர்கள்) அவசியம் வாசிக்க வேண்டிய கதை.. ஆயிஷா.. வெளிவந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் இக்கதை பேசும் விஷயம் இன்னும் ப்ரெஷ்ஷாக இருக்கிறது என்பது சோகமான விஷயம்..

அதிலும் நாமக்கல் டைப் பள்ளிகள், ப்ரீகேஜி க்கு ஒரு லட்சம் வாங்கும் பள்ளிகள் (மற்றும் அவை உருவாகி வந்த காரணங்கள்) ஆயிஷாவின் ஆசையை கண்ணுக்கு எட்டாத தொலைவிற்கு கொண்டு சென்று விட்டன..

வந்தாரங்குடி
நெய்வேலி மின் நிலையங்களால் நிலமிழந்தவர்களின் கதை. சமீபமாக அடிக்கடி கேட்கும் சொற்றொடர் 'Need massive investments in Infrastructure'. அதற்கு தொல்லை இல்லாத வகையில் சட்டம் கூட சமீபத்தில் திருத்தி அமைக்கப்பட்டது. அது நல்லதுதானே? கொடுக்கும் நஷ்ட ஈட்டை வாங்கிக்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டியதுதானே? என கேட்பவர்கள் இந்த நாவலை படிக்கவேண்டும். வேதாந்தா முதற்கொண்டு மீத்தேன் வரை பலதை புது விழிகள் கொண்டு பார்க்கவைக்கும் இந்தக் கதை. கட்டற்ற-உடனடி லாப வெறி  vs நிலைநிறுத்தத்தக்க வளர்ச்சியில் எதை நோக்கி நாம் செல்ல வேண்டும் என முக்கிய முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதனாலேயே வந்தாரங்குடி முக்கியமான நூல் ஆகிறது. பாமக ஆதரவு என்பது போல் சில இடங்கள் தென்பட்டாலும், அந்த மக்களின் பார்வையில் எழுதப்பட்டது/காலக்கட்டம் போன்றவற்றை கருத்தில் கொண்டால் அவற்றை எளிதில் தாண்டிவிடலாம்.

இரண்டாவது முகம் - நீல பத்மநாபன்
அருமையான கதைகள் அடங்கிய சிறுகதை தொகுப்பு. நூல் மதிப்புரையை இங்கே படிக்கலாம்.


Museum of Innocence - Orhan Pamuk
இந்த வருடத்தில் எனது பேவரிட் இதுதான். வண்ணதாசனோடு சேர்த்து பாமுக்கையும் நுண்ணிய விஷயங்களின் மனிதன் என்பேன். காதலை அடைய ஒருவன் எவ்வளவு தூரம்  போவான் என நூலை சுருக்கமாக அறிமுகம் செய்யலாம். எதை எதையோ நைச்சியமாக பேசி கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை நம்மை சுமக்க வைத்துவிடுவது ஓரான் சிறப்பம்சம். போகிற போக்கில் இவர் தெளிக்கும் நுண்ணிய விஷயங்கள் ஒவ்வொன்றும் பல நாட்கள் யோசிக்க வைக்க கூடியவை.

இவரின் முந்தைய நாவலான 'பனி'யில் இருண்ட பிரதேசத்தில் ஒரு அரசியல் சடுகுடுவில் மாட்டிய நாயகனின் காதல். இந்த நாவலில் மற்றதை விலக்கிவிட்டு முழுக்க முழுக்க காதல் மட்டுமே. காதலின் ரண வேதனை, obsession, காதலின் நினைவுகளை சுமக்கும் சின்னஞ்சிறிய பொருட்கள் என திக்குமுக்காட்டிய நாவல். கதாசிரியர் ஒரு பாத்திரமாக உள்ளே நுழைவது கதையின் கற்பனைத்தன்மையை காணாமல் ஆக்குகிறது. இது காதலன் காதல் அல்ல, குணா காதல்.


அரசூர் வம்சம் - இரா.முருகன்
கதை பாணியிலேயே எழுதப்பட்ட (ஆசிரியர் மன்னிப்பாராக) ஒரு அபத்தமான நூல் மதிப்புரையை இங்கே படிக்கலாம்.


திரும்பிப் பார்க்கிறேன் - டைரக்டர் ஸ்ரீதர்
டைரக்டர் ஸ்ரீதரின் சுவாரசியமான நினைவுகள். தரமான, சற்றே எதிர்காலத்திற்கு படங்களை எடுத்த ஒரு ஆளுமையை அவர் கூடவே திரிந்ததைப்போல் தெரிந்துகொள்ளலாம். என்ன பிரச்சினை என்றால் ஏதாவது பாட்டை பற்றி குறிப்பு வந்துவிட்டால் அதை ஒருதரம் பக்கத்தில் இருக்கும் கணினியில் கேட்காமல் மேலே நகர முடியவில்லை..


Snow - Orhan Pamuk
Museum of Innocence படித்துவிட்டு வேறு ஒருவரின் பக்கம் போக முடியுமா? ஆகவே இவரின் முந்தைய நாவலான 'பனி'யை ஆரம்பித்தேன். இலக்கியவாதி ஒருவர் அரசியல் த்ரில்லர் எழுதினால் பனி போல்தான் இருக்கும். இன்று நமது தேசம் போய்க்கொண்டிருக்கும் பாதையில் எங்கு போய் சேருவோம் (ஆல்ரெடி சேர்ந்தாச்சு?) என கதையை படிக்கும்போது பதைக்கிறது. அதனாலேயே மிகவும் நெருக்கமும் ஆகிவிடுகிறது.

கொள்கையில் மூர்க்கம் சேர்ந்தால், அது வலதோ இடதோ, என்ன ஆகும்? முதலில் அவர்கள் முக்கியம் என கருதுவது முக்கியம்தானா? சாதி/மதவாதிகள் பேசும் பெரும்பாலான விஷயங்கள் எனக்கு அபத்தமானவையாக, வாழ்க்கைக்கு தேவையே இல்லாதவையாக தோன்றும். அதையே 'கண்ணுக்கு முன் அவ்வளவு வறுமை, இதில் பெண்கள் தலையை மூடுவதுதான் முக்கிய பிரச்சினையா?' என இங்கும் மறைமுகமாக தோன்ற வைத்துவிடுகிறார் ஓரான். 'வாழ்க்கையில் மகிழ்ச்சியை அடைவதே முக்கியம்' எனும் 'கா'விடம். 'மகிழ்ச்சியை துரத்திக்கொண்டே வேண்டுமானால் இருக்கலாம். எப்போதுமே அடைய முடியாது' எனும் 'ப்ளூ'வின் சொற்கள்தான் நாவலின் சாராம்சமா?


Everybody Loves a Good Drought - Palagummi Sainath*
முடிக்கப்போகிறேன். முடித்துவிட்டு எழுதுகிறேன் (அப்புறம் எதற்கு இதை லிஸ்டில் சேர்த்தாய்?)


வெண்முரசு - முதற்கனல் - ஜெயமோகன்
'உலகில் சொல்லப்படும் அனைத்து கதைகளும் ஏற்கனவே மகாபாரதத்தில் உண்டு' எனும் ஆசிரியரின் பேவரிட் கூற்றை அவரே நிரூபிப்பதை போல் எழுதிக்கொண்டிருக்கும் மகாபாரத நாவல்கள். துரோகமிழைக்கப்பட்ட அம்பை - மற்றவர்களை சுமக்கும் பீஷ்மர் முதற்கனலின் மையங்கள். கதை முழுக்க நுரைக்கும் மனித மனத்தின் நுண் உணர்வுகளை படிக்கையில் வெண்முரசு முடிவதற்குள் அந்த முதலில் சொன்ன கூற்று நிஜமாகும் என்றே தோன்றுகிறது. இந்த நாவல் யாருக்கு பயன்பட போகிறது என்பதை பற்றி கவலைப்படாமல் இப்போதைக்கு சுயநலமாக அதன் கலையை மட்டும் ரசிப்பதாக உத்தேசம்.

Short stories by Arthur C Clarke
பிடித்தமான அறிவியல் புனைவு எழுத்தாளராக, ஆதர்சமாக ஆர்தரை ஆக்கிய கதைகள். அத்தனையும் அவ்வளவு தெளிவாக, பெரும் உற்சாகம் ஏற்படுத்துகின்றன. எழுதப்பட்டு ஐம்பது வருடங்கள் கழித்தும் அவை ஏற்படுத்தும் தாக்கம் - நவீன உத்திகளுடன் புரியாத மாதிரி கடினமான கதைகள் கட்டாயமில்லை என்கிற தெளிவை எனக்கு ஏற்படுத்திய கதைகள்.

***

மேலே குறிப்பிட்டவை நினைவில் தங்கியவை மட்டும். இவை இல்லாமல் ஏராளமான சிறுகதைகள், இணைய கட்டுரைகள்..நூற்றுக்கணக்கில்.. அவற்றையும் அடுத்த வருடம் குறித்து வைத்து நல்லவற்றை தொகுக்க உத்தேசம்.

***

2015 இலக்குகள்
வாசிப்பில் பெரும் பாய்ச்சலை (ஆச்சர்யகுறி) நிகழ்த்தப்போகும் வருடம், வேலைகள் குறுக்கிடாதவரை. ஜனரஞ்சக, பல்ப் புத்தகங்களை வாசிக்கும் மனமும் வாய்த்திருக்கிறது. எனது மையமான அறிவியல் புனைவுகளை நிறைய படிக்க உத்தேசம். என் பிரச்சினை, ஒரே புத்தகத்தை பல மாதங்களாக இடைவெளி விட்டு, பாதி கதாபாத்திரங்களின் பெயர்களை மறந்துவிட்டு படிப்பது. அப்படி இல்லாமல் இரண்டு வாரத்திற்கு ஒன்று என கடுமையான ஒரு விதியை நிர்ணயித்துக்கொள்ள போகிறேன் (இதையேதான் போன வருஷமும் சொன்னான்...). ஆக, வருடத்திற்கு குறைந்தது இருபத்தைந்து புத்தகங்கள், இணைய வாசிப்பு நீங்கலாக.

கீழே கொடுத்துள்ளது படிக்க வேண்டிய லிஸ்டில் உள்ளவை. தமிழில் வழக்கமாக லிஸ்ட் வைத்துக்கொள்வதில்லை - கிடைப்பதை எல்லாம் படிப்பதால். இது மிகவும் உத்தேசமான லிஸ்ட் தான் - முற்றிலும் வேறு செட்டை கூட படித்திருப்பேன். அங்கங்கே 'இது அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்' என பார்த்து, புத்தகத்தின் சிறுகுறிப்பும் என்னை கவர்ந்தால் லிஸ்டில் இடம் பெற்றுவிடும்.

English
--My Name is Red (2000)
--Zia Haider Rahman - “In the Light of What We Know”
--Serious men by Manu Joseph
--Aunt Julia and the Scriptwriter by Mario Vargas Llosa
--Chronicle of a Death Foretold by Gabriel Garcia Marquez
--Kazuo Ishiguro, Muragami books (Japan)
--Tell no one, Harlen coben (Thriller)
--My Antonia ; Willa Cather
--One Day In The Life Of Ivan Denisovich

--Capital by Thomas Piketty
--No Place to Hide: Edward Snowden, Glenn Greenwald
--Why Your World Is About to Get a Whole Lot Smaller: Oil and the End of Globalization

SciFi
Ancillary Justice by Ann Leckie
Blackout and All Clear by Connie Willis
Other Nebula/Hugo/ArthurCClarke award winning books

Others
The Execution Channel, by Ken MacLeod (Tor)-political thriller
Pattern Recognition, by William Gibson  - techno thriller
Rainbows End, by Vernor Vinge (Tor) - techno thriller
The Mount, by Carol Emshwiller (Small Beer Press) - Alien
Geoff Ryman’s Air (2005) - Future
M.J. Locke’s Up Against It  (2012) (space) -Future
Benjamin Percy’s The Dead Lands - Post apocalyptic

Workplace novels
Joshua Ferris’ Then We Came to the End
Allegra Goodman - Intuition (medical post doc researcher's)
Personal Daze by Ed Park
Domestic Violets, by Matthew Norman

(பட நன்றி: கூகுள்)


2 comments:

Philosophy Prabhakaran said...

6174 சுதாகரின் அடுத்த நூல் வெளியாகியிருக்கிறது... பெயர் 7.83 Hz

Prasanna said...

இந்த வருடம் படிக்கணும் பிரபா..