Dec 29, 2009

புது வருடத்தை தொடங்கி வைப்பது யார்?

புத்தாண்டு வந்தால் இந்த 'சம்பவம்'ம் வரும், நினைவுக்கு.. நடந்தது சின்ன வயதில். புதுவருட, தினசரி காலண்டர் ஒன்று கொண்டு வந்தார் அப்பா. சின்ன ஊர் என்பதால் நிறைய எல்லாம் கிடைக்காது. ஒன்று இரண்டு தான். பர்சேசிங் என்ற சர்தார்ஜி அப்போ ரொம்ப இல்லை. அந்த வருடம் வறண்டதால் ஒரு காலண்டர் தான் (மொக்க படம் ஒன்றை போட்டு இருந்தார்கள்).

31 ஆம் தேதி திடீர் என்று சண்டை எனக்கும் என் அக்காவுக்கும். யார் முதலில் தேதி கிழித்து அந்த வருடத்தை தொடங்கி வைப்பதென்று.. வாய்ச்சண்டை முற்றி கைகலப்பாகி, ரத்த காவு கடந்து, அம்மா வந்து சமாதானப்படுத்தி, இருவரும் சேர்ந்தே அந்த வருடத்தை துவக்கி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

வெற்றிகரமாக 31 இரவு 12 மணிக்கு, தள்ளி முள்ளி நான்கு கைகளால் தேதி கிழிக்கப்பட்டு, அந்த வருடம் சிறப்பாக துவக்கி வைக்கப்பட்டது.

எல்லா களேபரமும் முடிந்ததும்., இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எங்கள் பாட்டி.. "ஏண்டா.. இன்னிக்கு தேதி கிழிச்சா, அது ரெண்டாந்தேதி ஆகிடாது..? இன்னிக்கி தேதி ஒன்னு தான?"

பேய் முழி முழித்து, 'ஹீ ஹீ சர்யான லூசு' என்று அக்காவை கிண்டல் செய்து நான் சட்டென்று சைடு மாறி விட்டேன். இந்த வரலாற்று தவறை அவள் மட்டும் செய்ததாக மாற்றி ஓரளவு வெற்றியும் பெற்றேன் (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே)..

இப்பொழுதும் கிண்டலடிப்பதுண்டு அவளை.. என்ன, இப்போ ஏகப்பட்ட காலண்டர் (கர்சீப் வாங்குனா கூட ஒன்னு கொடுக்கிறார்கள்). ஆனால், தேதி எல்லாம் கிழிப்பது இல்லை. ஏன், சுவற்றில் தொங்கும் காலண்டரில் கடைசியாக தேதி பார்த்தது எப்போது என்றே நினைவில்லை..
முழுதும் படிக்க..

Dec 22, 2009

பிடித்த படம் - அன்பே சிவம்

ஒரு பழைய புகைப்பட ஆல்பத்தை திரும்(ப்)பி பார்க்கும்போது கிடைக்கும் உற்சாகம் அலாதியானது. பல தடவை பார்த்திருந்தாலும், ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒரு சந்தோஷம். அதிலும் கும்பலாக பார்க்கும் போது? சிரித்து, கிண்டலடித்து, மாற்றங்களை விமர்சித்து என போகும் நேரம்.. போன தடவை பார்க்கும் போது நம் கண்களில் சிக்காத ஒன்று இந்த தடவை சிக்கும் (சிடு மூஞ்சி குமாரு இதுல எப்படி இளிச்சிட்டு இருக்கார்!..). ரொம்ப பிடித்த ஒன்றை மறுபடி சிலாகிப்பதும் நடக்கும். ரொம்ப நாள் கழித்து நிறைய நண்பர்கள் கூடும் அறைகளில் இப்படி ஃபோட்டோ பார்க்கும் செஷனுக்காக நேரம் ஒதுக்கப்படுவது உண்டு.

அந்த மாதிரி.. (உஸ்ஸ் கொள்கை விளக்கம் கொடுத்தாச்சானு புலம்பல்கள் கேக்குது?), நாம் பல முறை பார்த்து மகிழ்ந்த, கொண்டாடிய, திட்டிய திரைப்படங்களை அசை போடுவதும் சுகமானது தானே? விமர்சனமாக இல்லாமல் பிடித்த காட்சிகள், வசனங்கள் இவற்றை பற்றி.. ஒரு திருப்பி பார்த்தல்.. அனைவருமே பார்த்திருப்பார்களாதலால், விமர்சனம் தேவையும் இருக்காது. ஆக, முதலில் எந்த படத்தை திருப்புவது? கொஞ்ச நாள் கழித்து பார்த்த-பல தடவை ஏற்கனவே பார்த்த-இன்னமும் பிரமிப்பு குறையாத- அன்பே சிவம்.

கமல் படங்களில் எப்போதுமே ஒரு ஸ்பெஷல் - ரொம்பவே நுணுக்கமான பல பல விஷயங்கள் ஒளிந்திருக்கும். பல தடவை பார்த்தாலும், அடுத்த தடவை பார்க்கும் போது ஒரு புது விஷயம் கண்ணில் படும் ('உன்னை போல் ஒருவன்' வலை உலகில் அத்தனை கூறு போடப்பட்டதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை).



அன்பே சிவத்தில் கமலின் character change கவனத்திற்குரியது. ஒரு கோபக்கார இளைஞனாக ஃப்ளாஷ் பாக்கில் வரும் நல்லசிவம், அந்த விபத்திற்க்கு பிறகு ஒரு குழந்தையை போல் நடந்து கொள்வார் (ஆனால் அதே கூர்மை). எதனால் இருக்கும்? ஒரு விபத்து மனித மனத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பிரம்மாண்டமானது. விபத்து எற்படுத்தும் உளவியல் சிக்கலினால் இருக்கலாம் (இது இங்கே கண்டு கொள்ளப்படாத ஒன்று). அல்லது தலையில் பட்ட அடியினால் கூட...

தசாவதாரத்தில் பெரிதாக பேசப்பட்ட பட்டர்ஃபிளை எஃபக்டை  இதிலேயும் பார்க்க முடிந்தது. ஒரு வேளை அந்த நாய் (சங்கு) இல்லை என்றால், கடைசியில் தொழிலாளர்களுக்கு ஞயாயம் கிடைக்காமல் போயிருக்கலாம் அல்லவா? (பல பேர்க்கு சங்கு ஊதினாலும் சங்குவிற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் என்று யோசித்ததில்.. ஹீ ஹீ..).

படத்தின் முக்கிய அம்சம் 'அனைத்து' பேருடைய நடிப்பு. அந்த மலை மேல் கடை வைத்திருக்கும் அம்மா, 'இந்தா, இவங்களுக்கும் சின்ன வயசுல கால் சரி இல்லாம இருந்துச்சு. இப்போ சரி ஆய்டுச்சு'  என்று வெள்ளந்தியாக ஆறுதல் கூறும் அழகை உதாரணத்திற்க்கு சொல்லலாம். 'நாட்டுக்கொரு சேதி' வீதி நாடக கலைஞர்கள் பாதி பேர் உண்மையான கலைஞர்களாம்! அந்த குழுவில் ஆண்-பெண் இருவருக்குள்ளும் இருக்கும் ஒரு கண்ணியம் ரசிக்க கூடியது. இவர்களை போன்ற கலைஞர்களிடம் இயல்பாக இருக்கும் ஒரு விஷயம் இது. ஒரு களத்தை எடுத்துக்கொண்டால், அதன் ஸ்பெஷல்களை சிறப்பாக (விலாவாரியாக அல்ல) காட்டி விடுவார் கமல் (பின்ன சுந்தரா?)..




படத்திற்கு நடந்த மேலும் இரண்டு சிறந்த விஷயங்கள் - வித்யாசாகர் மற்றும் மதன். வித்யாசாகர் தந்ததிலேயே சிறந்த இசை என்று இப்படத்தை நிச்சயமாக குறிப்பிடலாம். 'புதுப்பாட்டு பாடிடுவோம் புதுப்பாட்டு' பாடும் போது சூடாகும் ரத்தம், 'யார் யார் சிவம்' என்று கமல் கேட்கும் போது, குளிர்வதை உணர முடியும். இன்னும் 'மௌனமே பார்வையாய்' கேட்டு இருக்கீர்களா? ரொம்பவும் அருமையான பாடல் (ஏன் இந்த பாடலை படத்தில் சேர்க்க வில்லை என்று S.P.B. செல்லமாக கோபித்து கொண்டார் கமலிடம்.., ஒரு பேட்டியில்).

'இந்த படம் ஒரு காப்பியாண்டா' என்று கொஞ்ச நாள் முன் ஒரு நண்பன் பொலம்ப, அடித்து பிடித்து 'ஒரிஜினல்' என்று சொல்லப்பட்ட 'Planes, Trains and Automobiles' பார்த்தேன். அது முற்றிலும் வேறு தளத்தில் சொல்லப்பட்ட ஒரு கதை. Planes.. படத்தில் வரும் இருவரும் மற்றவரை புரிந்து கொள்வது மட்டுமே படம். மற்றபடி அன்பே சிவத்தின் சிறப்புக்களான.., கடவுள், Ideological clash போன்ற பலது அந்த படத்தில் இல்லை. ஒன்றிரண்டு ஒற்றுமைகள் இருப்பதால், இதை காப்பி என்று சொல்வது அநியாயம். அன்பே சிவம் ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டர் (கண் கலங்கும் அடுத்த நொடி சிரிப்பு வரும்.. பல காட்சிகளில்..).

இறுதியாக, கமல் படம் ஆதலால் அவரை பற்றி ஒரு துணுக்கு. அவர் படங்களில் வரும் சில விஷயங்கள் கொஞ்ச நாட்களிலேயே உண்மையாக நடந்து விடும். உ.தா. சிகப்பு ரோஜக்கள் - ஆட்டோ சங்கர்; அன்பே சிவம் - சுனாமி இப்படி பல (sms, emailஇல் பார்த்திருப்பீர்களே?). அந்த வரிசையில், பேப்பர் படிக்கும் போது 'கண நேரத்தில்' எனக்கு தோன்றிய ஒன்று -
மும்பை தாக்குதல்களில் தொடர்பு என அமெரிக்காவில் கைதான டேவிட் ஹெட்லீ ஒரு முன்னால் CIA ஏஜெண்டாம் (தசாவதாரம் ஃப்ளெட்சர் பாத்திரம்).
முழுதும் படிக்க..

Dec 13, 2009

85-65-75 : கதை... ஆனால் கதை இல்லை!

முதல் முறையாக எனது படைப்பு (கதை) யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது. அதுவும் யூத்ஃபுல் விகடனின் டிசம்பர் மின்னிதழில்... பார்க்க இங்கு கிளிக் பண்ணவும்


யூத்ஃபுல் விகடன் டிசம்பர் மின்னிதழ்





ட்டடங்கள் மட்டும் பெரிது பெரிதாக இருக்கும் கல்லூரிகள் ஒரு வித மிரட்சியை உண்டு பண்ணும். ஆனால் இந்த அமைதியான, மரங்களடர்ந்த கல்லூரி அப்படி இல்லை. நம் சொந்த வீடு, ஊர் போல் ஒரு உணர்வை கொடுக்கிறது. ஓஹோ என்று இல்லாவிட்டாலும், அதுவும் தரமான ஒரு கல்லூரி தான்.

அதோ அந்த துறையின் இறுதி ஆண்டில் படிப்பவர்களை பார்ப்போம். அவர்களை ஒருவாறு மூன்று வகைப்படுத்தலாம். முதல் வகையினர், எந்த நேரமும் செமஸ்டர், டெஸ்ட் என்று திரிபவர்கள். இவர்களுக்கு தெரிந்த (பிடித்த) இடங்கள் இவை தான் - வகுப்பறை, லேப், புத்தக கடைகள் (பாட புத்தகம் மட்டும்). அதிலும் ஸ்டாஃப் ரூம் தான் இவர்களுக்கு சினிமா தியேட்டர். உள்ளே நுழைந்தால் ஒரே உற்சாகம் தான் போங்கள். சராசரியாக 85 சதவீதம் எடுப்பவர்கள் (94 வரை கூட போகும், நான் சொல்வது சராசரி). சுருக்கமாக, உருப்படற பிள்ளைங்க.

இரண்டாவது வகை, இதற்கு நேர் எதிர். அடக்குமுறையை எதிர்ப்பவர்கள். எஃஸாம் நெருங்கினாலும் படிக்காமல் தைரியமாக அரியர் வைப்பவர்கள். இவர்களை 65 சதவீதத்தினர் (அரியர்/ஜஸ்ட் பாஸ்) என்று அழைக்கலாம் அல்லவா? பிரச்னைகளை எப்போதுமே பனியன் போல் அணிந்திருப்பார்கள் (போர்வை என்றால் இரவு மட்டும் தான். அதனால் பனியன்). பிரச்னைகளின் போது தேடவெல்லாம் வேண்டாம், இவர்களாகவே ஆஜர் ஆகிவிடுவார்கள். இவர்களுக்கும், முதல் வகையினருக்கும் ஆகாது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒருவர் மற்றவரை கண்டால், இப்படியும் ஜந்துக்கள் எப்படித்தான் இருக்கிறதோ என்று தவிர்த்து விடுவார்கள் (இதில் மட்டுமே ஒரே மாதிரி சிந்தனை).

மூன்றாவது, இந்த கதைக்கு முக்கியமானவர் இருக்கும் 75 கோஷ்டி (ஓயாம பெயர் காரணம் சொல்லிட்டு இருக்க முடியாது). இவர்களால் மேலே சொன்ன 2 பேருடனும் சேர முடியாது. எஃஸாம் நெருங்கும் போது மட்டும் நன்றாக படித்து (!), பெரிய பிரச்னைகளை முதல் வரிசையில் நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் (சிறியவைகளுக்கு இவர்கள் தான் நாட்டாமை). இவர்கள் 85 கோஷ்டிக்கு சின்ன ரவுடி. 65க்கு கொழந்த பசங்க

நம் நாயக 75-ம் (பெயர் முக்கியமில்லை) அவன் நண்பர்களும், வாழ்க்கை வாழ்வதற்கே என்று எண்ணுபவர்கள். சினிமா, சாப்பாடு, மொபைலில் குறும்படங்கள் எடுப்பது, படங்களுக்கு டப்பிங் கொடுப்பது என்று அவர்களுக்கு தெரிந்த வகையில் எஞ்சாய் செய்து, கல்லூரி வாழ்க்கையை அணுவணுவாக ரசிப்பவர்கள். 85/65 இருவருடனும் சினேகமாகவே இருப்பர் - 85 உடன் படிப்பு சம்பந்தமான உதவிகளுக்காக (xerox எடுக்க உன் புக் குடு, ப்ராக்டிகல்ஸ் இத்யாதிகள்), 65 உடன் கல்லூரியின் சீரான செயல்பாடுகளுக்காக (பின்னே? 65க்கு தெரியாமல் எதுவும் நடக்காதாக்கும்).

கொஞ்ச நாள் முன்னாடி காம்பஸ் இன்டர்வியூக்கென கம்பனிகள் வந்தார்கள். 85 கோஷ்டி டிரைனில் ரிசர்வெஷன் செய்தவர்கள் போல், பெரிதாக அலட்டி கொள்ளாமல் வேலை வாங்கினர். 75-ஐ சேர்ந்தவர்கள் அன்-ரிசர்வர்டில் அடித்து பிடித்து இடம் பிடிப்பதை போல் ஏதோ ஒரு கம்பனியில் வாங்கி விட்டார்கள். 65-இல் கிட்ட தட்ட எல்லாரும் டிரைனை தவற விட்டனர் (கொஞ்சம் பேர் ஊரிலேயே இல்லை).




இது நடந்து கொஞ்ச நாள் ஆகி விட்டது. முதல் ஆண்டில் எல்லாம் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஊருக்கு சென்று கொண்டிருந்த நம் 75, நீண்ட விடுமுறைகளிலும் ஹாஸ்டலிலேயே பழியாக கெடந்தான் (இறுதி ஆண்டும் முடிய போகிறதல்லவா..) இந்த நண்பர்கள் இல்லாத வாழ்க்கையை அவனால் கற்பனை பண்ண முடியவில்லை. அவன் பயந்ததை போல இறுதி ஆண்டு செமஸ்டரும் முடிந்தது. கடைசி நாளும் வந்தது. அன்று தான் நாம் உள்ளே நுழைந்திருக்கிறோம்.

வகுப்பினுள் நின்று கொண்டிருந்த நம்ம 75 அருகில் வந்த 65, "ஒரு வழியா சனியன் முடிஞ்சது... இங்க வந்து சேர்ந்ததுக்கு நல்ல காலேஜ்லயாச்சும் சேர்ந்திருக்கலாம். வேலயாச்சும் கெடச்சு இருக்கும். சரி சரி.. எதாச்சும் கெட்-டுகெதர்லாம் வச்சா கூப்பிடுங்கடா..." என்று கூறி விட்டு நகர்ந்து போனான்.

அப்போது, அங்கு வந்த 85 (இவனை பார்த்து தான் அவன் நகர்ந்திருக்க வேண்டும்), "இன்னிக்கி எஃஸாம் ஈசியாதான் இருந்துச்சு இல்ல (!)? டேய், கம்பனில இருந்து நாம ஜாயின் பண்றதுக்கு முன்னாடி படிக்கறதுக்கு டாகுமெண்ட்ஸ்லாம் அனுப்பி இருக்காங்க பாத்தியா? அத பிரின்ட் அவுட் எடுக்கத்தான் இப்போ போய்ட்டு இருக்கேன். நீ ஏண்டா ஒரு மாதிரி இருக்க?" என்று சொல்லி விட்டு, கடைசி நாள் என்ற நினைப்பே இல்லாமல் கடந்து போனான்.

முதல் நாளில் இருந்து நடந்த ஆயிரமாயிரம் நினைவுகள் அவன் கண் முன்னே ஓடின. நாளையிலிருந்து வகுப்புக்கு அவசரம் அவசரமாக கிளம்ப வேண்டியதில்லை; லேட்டா போய் திட்டு வாங்க வேண்டியதில்லை; ஹாஸ்டல் கிடையாது; கடைசி நேர படிப்புகள் இல்லை; ரெக்கார்ட்/அசைன்மென்ட்டுகள் இல்லை; மட்டமான அந்த மெஸ் சாப்பாடு இனி கிடையாது; சண்டை சச்சரவு இல்லை; ஏன், இனி இந்த கல்லூரியின் மாணவனே கிடையாது என்ற உண்மைகள் சடாரென்று அவனை தாக்க, கண்ணீர் தானாக துளிர்த்து அழ ஆரம்பித்தான்.
முழுதும் படிக்க..