Aug 30, 2011

திருத்தகம்

(இக்கதை திண்ணை இதழில் வந்துள்ளது. திண்ணையில் படிக்க இங்கு செல்லவும் http://puthu.thinnai.com/?p=3594)

                                                                  **********

சண்முகம் முடி திருத்த ஏன் அன்றைய தினத்தை தேர்ந்தெடுத்தார்? அவரே இதை பின்னாட்களில் பலமுறை நினைத்து நொந்து கொண்டதுண்டு. இத்தனைக்கும் அது ஒரு ஞாயிறு. மயிறு திருத்த அனைவரும் படையெடுத்து தள்ளுமுள்ளு ஏற்படுத்தும் நாள். இருந்தாலும் அடிக்கும் வெயிலினாலும், நகக்கண் எல்லாம் கருப்பானதாலும் இதற்க்கு மேல் தள்ளி போட முடியாமல் அந்த ஞாயிறுதான் என முடிவெட்ட முடிவெடுத்தார் திரு சண்முகம்.

அன்று எனப்பார்த்து சில்லரையாக ஐம்பது ருபாய் இல்லாமல் போனது அவர் அப்பா செய்த பாவம் (முடி வெட்ட அவர் செலவு செய்ததே இல்லை). ஒரே ஒரு ஆயிரம் ரூபாய் தாள் மட்டுமே இருக்க, சரி அப்படியே சில்லறை மாத்திய மாதிரியும் ஆயிற்று என்று சமாதானப்படுத்தி அதையே எடுத்துக்கொண்டார். எங்கு போவதென்பது எப்போதும் ஏற்படும் குழப்பம். அந்த ஏ.சி கடையில் கொள்ளை அடிப்பான். வழக்கம் போல இங்கனயே போவோம் என்று 'லோக்கல்'  கடைக்குள் நுழைந்தார். கூட்டம் நிறையவே இருந்தது. தினத்தந்தியை வாசித்தார். 

மேலும் மேலும் வந்து கொண்டே இருந்தனர். முன்பதிவு செய்து விட்டு சென்ற சிலர் நடுவில் புகுந்தனர். தன்னையே நொந்து கொண்டு, தந்தி புகைப்படங்கள் தெளிவில்லாமல் இருப்பதை திட்டியபடியே திரும்பவும் புரட்ட ஆரம்பிக்க, சார் நீங்க வாங்க என்று கடைக்கண் பார்வையை வீசினார் ஆரோக்கியம் (முடி திருத்துபவர்). ஆஹா பரவாயில்லை என்று ஒரு பதைப்புடன் ஓடி போய் ஆரோக்கியம் மனசு மாறுமுன் அமர்ந்து கொண்டார். படபடப்பு அடங்க கொஞ்ச நேரம் ஆனது. வழக்கம் போல் சுமாராக வெட்டி முடித்து, இவர் வேண்டாம் என்று சொல்வதற்குள் மண்டையில் போட்டு கொத்தி சடக் சடக் என்று முகத்தை பிடித்து திருப்பி சொடுக்கு எடுத்து எல்லாம் முடிந்துவிட்டது..

பாக்கெட்டை துழாவி ஆயிரம் ரூபாயை நீட்ட, ஆரோக்கியத்தின் சிவந்த கண்கள் ஒரு நொடி ஒளிர்ந்து அடங்கியது. 'சில்ற இல்லையா?' என்று கேட்டபடியே வாங்கி கொண்டார். கடையில் ஒருவர் தான் பாக்கி. 'சரி, மாத்திட்டு வந்திடறேன்' என்று சொல்லியபடியே பக்கத்து கடைக்கு போனார். அங்கு ஏதோ சொல்ல, அப்படியே கெளம்பி தெரு முனைக்கு சென்று மறைந்தார்.
காத்திருந்து கடுப்பாகி கடைசி ஆளும் பொலம்பிக்கொண்டே போய் விட்டார். அவருக்கென்ன, இன்று இல்லை என்றால் நாளை வெட்டிக்கொள்ளலாம். எனக்கு? இருந்து மீதிப்பணத்தை வாங்கிக்கொண்டே போய் விடுவோம் என்று தோன்றியது. இருட்ட தொடங்கியது. என்னடா இன்னும் காணோம் என்று எரிச்சல் அதிகரிக்க, சரி வீட்டுக்கு போய் குளித்து விட்டு வந்து வாங்கிக்கொள்வோம் என்று வந்து வேக வேகமாக குளித்துவிட்டு திருப்பி கடைக்கு சென்றார். 

கடை மூடி இருந்தது. துணுக்குற்று, சரி நாளை வாங்கிக்கொள்ளலாம் என்று திரும்பினார். அடுத்தநாள் மதியம் வரை கடை மூடி இருந்தது. முதல் முறையாக அவருக்குள் சின்ன கவலை. மாலை கடை திறந்ததும் முதல் ஆளாக நுழைந்தார் சண்முகம். ஆரோக்கியம் இவரை தெரியாத மாதிரி பார்க்க, இவருக்கு பகீர் என்றது. 'என்ன சார் இந்த பக்கம் என்று கேட்டு விடுவானோ'?

'வாங்க சார், என்ன நேத்து நீங்க பாட்டுக்கு போயிட்டீங்க'?
'நான் இங்கதான் இருந்தேன், நீங்கதான் ரொம்ப நேரம் வரல. அப்புறம் நான் போயிட்டு வரதுக்குள்ள கடைய சாத்திட்டீங்க'
'அப்படியா? இல்லீங்களே?'
இவருக்கு 'பணமா, இல்லீங்களே?' என்று கேட்டது. எச்சிலை விழுங்கி, 'சரி மிச்சம் கொடுக்குறீங்களா?' என்றார்.
'என்ன சார், இப்போதான கடை தொறந்தேன். இன்னிக்கு நைட்டு வாங்க, வர காச கொடுத்திடறேன்'.
'இல்ல, எனக்கு வேல இருக்கு, இப்போவே கொடுங்க'
'இப்போ இல்ல சார்' என்று பாக்கெட்டை கொட்டி ஆரோக்கியம் சைகை காட்ட,
'சரி நைட்டு வரேன். மறக்காம எடுத்து வைங்க' என்று நைட்டு டான் என்று போய் நின்றார்.
'ஒன்னும் கலக்சன் ஆகலைங்க, நாளைக்கு வாங்க கண்டிப்பா எடுத்து வைக்கிறேன்'.

இவருக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. இப்படியே நாளுக்கு நாள் விதவித காரணங்கள் சொல்லி வெறுப்பேத்தினான். ஆயிரம் ரூபாயையும் விட முடியவில்லை. அடுத்து முடி வெட்டும் காலமே வந்து விட்டது. சரி முடி வெட்டியே கழிக்கலாம் என்று அவனிடமே போய் வெட்ட, அவன் வெட்டி முடித்ததும் 'சார் காசு?' என்றான்.
'ஹலோ? நீங்க எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கணும் மறந்து போச்சா?'
'இல்ல இல்ல, சில்லறை இருக்கானு கேட்டேன்'.

அடுத்து முறை இதே மாதிரி முடி வெட்டி பணம் கழிக்க இவர் போனதும் அவன் எரிச்சலுடன் வெளியில் சென்று வெகு நேரம் வரவில்லை. அடுத்தநாளும் போய் உட்கார்ந்து, அவன் அதே மாதிரி வெளியேறினான். இவர் விடாமல் பின் தொடர்ந்தார். அவன் நேராக டாஸ்மாக் சென்று பாருக்குள் புகுந்தான். இவருக்கு அந்த ஆயிரம் ரூபாய் எந்த கல்லாவுக்கு போயிருக்கும் என புரிந்தது.

அவன் குடும்பத்திற்கு உபயோகப்பட்டிருந்தால் கூட விட்டிருக்கலாம். போயும் போயும் குடிப்பதற்கு செலவாகியிருக்கிறது.. சரி இத விட்றதில்லை, முடி வெட்டி கழித்தே தீர்வது என்று அவனிடமே விடாமல் சென்றார். முடி தனியாக, ஷேவிங் தனியாக, ட்ரிம்மிங் என்று எல்லாத்துக்கும் போனார். ஆயிரம் ரூபாயை எப்போது கழித்து முடிக்க? வாரா வாரம் ஏறும் விலைவாசி நம்பிக்கை கொடுத்தது சீக்கிரம் கழித்துவிடலாம் என்று. இவரைக்கண்டாலே ஆகாதவன் போல் முறைக்க ஆரம்பித்தான் ஆரோக்கியம்.

இந்த காலகட்டத்தில் அவருக்கு பகீர் என்று ஒரு பயம் வந்தது. கழுத்தில் கத்தி இருக்கும் போது, வேண்டுமென்றே லேசாக கீறி விட்டால்? இல்லை முகத்தில் கோடு போட்டால்? இந்த யோசனை மண்டைக்குள் புகுந்த பிறகு அவரால் முடி வெட்டி முடியும் வரை நிம்மதியாக உட்கார முடியவில்லை. ஒவ்வொரு தடவையும் எப்போடா முடியும் என்று இருந்தது.

நாள் ஆக ஆக இந்த பீதி அதிகமாகி, ச்சீ போனால் போகுது. இப்படி பயந்துகிட்டே வெட்டிக்கிட்டு இருக்க முடியாது என்று கடையை மாற்றினார். அப்போதும் விடாமல் கொஞ்ச நாள் கேட்டுதான் பார்த்தார். 'இதோ இந்த ஸ்டூல் ரெண்டை கொண்டு போய்டுவேன் பாத்துக்கோங்க' என்றெல்லாம் வேறு மிரட்டினார். மழலையின் மிரட்டலை லாவகமாக கையாளும் அம்மாவை போல் இவரை சுலபமாக புரந்தள்ளினான் ஆரோக்கியம்.

அதன்பிறகு ஒரு தடவை அவரது அலுவலகத்தில் குடிப்பது தவறா என்ற வாதத்தில், தவறுதான் என்று ரத்தம் கொதிக்க இவர் போட்ட சண்டையை பார்த்து பலர் ஆச்சர்யப்பட்டனர்.

முழுதும் படிக்க..