Oct 29, 2009

நாயோ போபியா - பாகம் 2

எப்படி 'நாயோ போபியா பாகம் 2' படிக்க பாகம் 1 அவசியம் கிடையாதோ, அது போல மனுஷங்களுக்கும் நாய் தேவை கிடையாது. அப்படிங்கறது என் வாதம். கேக்க மாட்டீங்களே? ஒ.கே, அதுங்க அட்டூழியத்த பாருங்க..



என் சிநேகிதன் வீட்டில் மிகவும் பிடித்து ஒரு நாய் வளர்த்தாங்க, சின்ன வயசில் இருந்தே (அதாவது நாயோட சின்ன வயசு).. அவனுக்கு ஒரே ஒரு குறை, அந்த நாயின் குரை (ரைமிங்கை கவனிக்க). அதாவது அது எப்போமே குரைக்காது. ரொம்ம்ப சோம்பேறி. யாராவது வீட்டுக்கு வந்தால் ஓடி போய் ஒளிஞ்சிக்கும். என்னடா இப்படி கூட ஒரு நாய் இருக்கேனு, எனக்கும் அதைப்பத்தி கேக்கும் போதே புடிச்சு போச்சு. ஒரு டூர் விஷயமா அவன் வீட்டில் நாங்க ஒரு பத்து பேர் தங்க வேண்டி வந்தது.

அவங்க வீட்டுக்குள்ளே நாங்க எல்லாம் நுழைஞ்ச உடனே பயங்கரமா கொலைக்கர (கார) சத்தம். திபு திபுனு ஓடி வந்து 'என் மேல' பாஞ்சிடுச்சு (என்னை சுத்தி பத்து பேர் இருந்தார்கள் என்பதை நினைவில் கொள்க). இப்படி பிறந்ததில் இருந்து எதுவுமே பண்ணாம, 'தூக்கத்தை அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே' என்றிருந்த அது, இவ்வளவு சுறு சுறுப்பானதில் நண்பன் வீட்டில் எல்லார்க்கும் சந்தோஷம் தான். வீட்டுக்கு அடிக்கடி வந்து போக சொன்னார்கள்.



அது நடந்தது காலேஜ் படிக்கும் போது. அப்புறம் அடிச்சு புடிச்சு ஒரு வேலையில் சேர்ந்து, நைட் ஷிப்ட் பார்த்துன்னு, 'அது' என் வாழ்க்கைல கொஞ்ச நாள் காணாமல் போய் இருந்தது. ஷிப்ட் என்பதால் வீட்டுக்கு கம்பனி வண்டி அனுப்புவார்கள் (நைட் எல்லாம் எங்க தெருல நடக்க முடியாது. அவ்ளோ நாய்). வண்டிக்குள் ஒரு வசந்தம் என்பது போல் கொஞ்ச நாட்களாக என் கூட எங்க ஏரியா எம்ப்ளாயீ (பொண்ணு) ஒன்ன club செஞ்சி இருந்தாங்க (ஒரே ஷிப்டுங்கர்தால).

எங்க வீடு தாண்டி தான் அவங்க வீடு. சோ, எங்க வீட்டு வழியாத்தான் போகணும். ஒரு நாள் எங்க வீட்டை நெருங்கும் போது.. திடீர்னு எருமை மாட்ட சுத்தின ஓநாய்கள் மாதிரி ஒரு பத்து நாய் (இங்கயும்) வண்டிய சுத்தி ரவுண்ட் கட்டிடுச்சு. டிரைவர் மெதுவா ஓட்டிட்டு போனார், எங்க எதையாச்சும் ஏத்தி தொலைச்சிடுவோமோனு.

திடீர்னு அந்த பொண்ணு ஜன்னல் பக்கம் ஒரு நாய் கால் எடுத்து வச்சி பல்ல க்ளோஸ்-அப்ல காட்டி 'வவ்'னுச்சு. அவ நடுநடுங்கி போய்ட்டா (நானா? தனியா வேற சொல்ணுமா?).

வேகமா ஜன்னல சாத்தி என் பக்கம் திரும்பி, 'உங்க நாய்ங்க மாதிரி நான் எங்கயுமே பாத்தது இல்ல'னு கோவமா நடுங்கிட்டே சொன்னா; கையை கர்சீப்பால் தொடைத்து கொண்டே (நாயின் எச்சில் தெறிச்சு இருக்கலாம்)..
"ஒ, அது என் நாய்ங்க இல்ல. Stray டாக்ஸ். பயந்துடீங்களா.. ஹா ஹா ஹா"னு சத்தமாவே சிரிச்சு தொலைச்சேன் (நம்ப பய புள்ளைக்கு தான் எங்க எப்டி நடந்துக்கணும்னு தெரியாதே? பாவம்!).

'இப்போ எதுக்கு லூசு மாதிரி சிரிக்கர'ன்ற மாதிரி அவ பார்த்த பார்வை, பத்து நாய் மேல விழுந்து புடுங்குன மாதிரி இருந்துச்சு (பத்து என் ராசியான நம்பர் இல்ல போல). அதுக்கு அப்புறம் அவளை அந்த ஷிப்டில் பார்க்கலை.




இப்போ சமீபமா நடந்தத கேளுங்க.. எங்க வீட்டு பின்னாடி, நாய் ஒன்னு சுமார் 4 குட்டி (அதாவது பப்பி) போட்டுடுச்சு. எல்லாம் வித விதமான கலர்ல, அவ்ளோ சூப்பரா. குழந்தைகள் போல அதுகள் வெளயாடினத பாத்து, ஆசப்பட்டு பக்கத்து வீடுகளில் ஆளுக்கு ஒரு குட்டிய எடுத்துகிட்டாங்க. ஒன்னு மீந்தது. அதை நாம வளக்கலாமானு எங்க வீட்ல ஒரு பேச்சு வேற வந்துருக்கும் போல (நான் இல்லாத போது). எனக்கும் அந்த நாய் குட்டி அவ்ளோ பயங்கரமானதா தெரில.

ஒரு வாரம் கழிச்சு திடீர்னு அந்த மீந்த குட்டி செத்து போச்சு. ஈ மொய்த்து கொண்டு அது கிடந்த கோலத்தை பார்த்தா யாராலயும் தாங்க முடியாது. எனக்கு ரெண்டு நாளைக்கு வயிறு சரி இல்லாத மாதிரியே ஒரு பீலிங். அது செத்த அன்னிக்கி என் அக்கா அழுததை போல், வேற எதுக்கும் அவ்ளோ அழுது நான் பாத்தது இல்ல.

வள வளனு எதுக்கு பேச்சு? நாய்கள் வேண்டாம்னு சொன்னா கேட்டு தான் தொலைங்களேன்!!!
முழுதும் படிக்க..

Oct 23, 2009

ஃப்ரண்ட்ஸ் தொடர் (Friends Series) - ஒரு அறிமுகம்

ஃப்ரண்ட்ஸ் என்னும் உலக அளவில் மிக பிரபலமான இத் தொடர் NBC சேனலில் 1994-2004 ஆம் வருடம் வரை ஒலி பரப்பு ஆகிய sitcom வகை சிரிப்புத் தொடர் (அடங்கப்பா, எவ்ளோ பெரிய வரி). sitcom என்றால், நடிகர்கள் நடிக்கும் போதே அதை ரசிகர்கள் எதிரில் அமர்ந்து ரசிப்பார்கள். அவர்களின் ரியாக்ஷங்களும் அப்பொழுதே பதிவு செய்ய படும் (Eg. பால சந்தரின் TV சிரிப்பு சீரியல்கள், லொல்லு சபா போன்றவை- இவைகளில் சிரிப்பு சத்தம் ரெக்கார்ட் செய்ய பட்டவை).





அருமையான comedy ஐ எதிர்பார்க்கும் எவரையும் இத்தொடர் கவராமல் போகாது. இது 6 நண்பர்களை பற்றிய கதை. 10 வருடங்கள் அவர்கள் வாழ்கையில் நடக்கும் சம்பவங்களை மிகவும் கலகலப்பாக நமக்கு எடுத்து காட்டுகிறது. DVD-இல் ஒரு எபிசொட் பார்க்க ஆரம்பித்தால், எழுந்து போக மனசு வராது. மொத்தம் 10 சீசன், 236 எபிசொட்கள்.

6 நண்பர்களில் மூவர் ஆண்கள், மூவர் பெண்கள். அவர்களை பற்றிய சிறிய அறிமுகம்.

1. மோனிகா (Monica): திரு திரு பட ஹீரோயினி போல எல்லாத்தயும் ஒழுங்கு படுத்திகொண்டே அலையும் ஒரு காரக்டர். 6 பேரில் மிக பொருப்பானவர். Perfectionist. சமையல் செய்வது மிக பிடித்த ஒன்று (Hotel Chef ஆக பின்னாளில் வேலை).

2. ராஸ் (Ross): மோனிகா வின் தம்பி. Paleontology (related to fossils), அதாவது தொல்லியல் எச்ச துறையில் (!) இருப்பவர். Chandler-இற்கு அடுத்து அதிக பல்ப் வாங்குபவர். 3 முறை திருமனம் செய்தும் (ஒரு தடவை தெரியாமல் நடந்தது) தனியே வாழ்பவர். அறிவியல் விஷயங்களில் ஈடுபாடு அதிகம் (மற்றவர்களுக்கு இது பிடிக்காது).

3. சாண்ட்லர் (Chandler): அதிக பல்ப் வாங்குபவர். புள்ளியியல் துறையில் வேலை செய்பவர். இவரின் கிண்டல்கள் மிக பிரசித்தி (அடுத்தவர்களை திட்டாமல், உதைக்காமல், அடி வாங்காமல் இவர் செய்யும் கிண்டல்கள் மிக மிக ரசிக்க வைக்க கூடியது). மோனிகா வின் எதிர் வீட்டில் வசிப்பவர். பின்னாளில் மோனிகா வை மணப்பார். ராஸின் கல்லூரி தோழனும் கூட.




4. ஜோயி (Joey): சாண்ட்லரின் ரூம் மேட். நடிப்பு சான்ஸ் தேடி அலைபவர். அழகானவர், பெண்களை எளிதில் வசப்படுத்தி விடுவார். நடிப்பு சான்ஸ் தேடி அலைவதால் பெரும்பாலும் சாண்ட்லர் ஐயே பணத்துக்காக நம்பி இருப்பவர். இவர் தான் பல்ப் வாங்குபவதில் No. 1. ஆனால் தான் பல்ப் வாங்கிகிறோம் என்றே அரியாத வெள்ளை மனசுக்காரர். அதனால் சாண்ட்லர் No. 1

5. பீபி (Phoebe): அலாதியான character. சிறு வயது முதல் பல கஷ்டங்களை அனுபவிததால், நடவடிக்கைகள் சிறிது வித்தியாசமாக இருக்கும் (நமது வாழ்விழும் இப்படிப் பட்டவர்களை பார்க்க முடியும் அல்லவா?). இன்னொரு வெள்ளை மனசுக்காரர். அதனாலோ என்னமோ தனக்கு சில அமானுஷ்ய சக்தி இருப்பதாக நம்புவார் (அது உண்மையும் கூட). மச்சாஜ் செய்வது வேலை.

6. ரேச்சல் (Rachel): அழகானவர் (6 பேரில் மிகவும் ப்ரபலமானவரும் கூட). மோனிகா வின் பள்ளி கால தோழி. ஒரு கட்டத்தில் ராஸை காதலித்து பின் பிரிபவர். ஆர்வம் ஃபேஷனில். முதலில் மோனிகா வின் ரூம் மேட் ஆக இருந்து பின் ஜோயி ரூம் மேட் ஆவார் (சாண்ட்லர் - மோனிகா திருமணம் போது).

ஆறு பேரும் ஆறு தினுசில் இருந்தாலும், இவர்களின் நட்பு நம்மை பொறாமை கொள்ள செய்ய கூடியது. இவர்களை இணைக்கும் ஒரே விஷயம், இவர்கள் அனைவருமே நல்லவர்கள். இதன் கடைசி எபிசொட் 52.5 மில்லியன் மக்களால் கண்ணீருடன் (சிரிப்பு தொடர் என்றாலும் கூட) பார்க்கபட்டது.


இது ஒரு அறிமுக கட்டுரை மட்டுமே, விமர்சனம் அல்ல. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற நோக்கத்தில் எழுதபட்டது. பார்க்காத்வர்கள் நிச்சயம் பாருங்கள், வருந்த மாட்டீர்கள். பார்த்தவர்கள் பார்க்காத்வர்களை ஊக்குவியுங்கள்.
முழுதும் படிக்க..

Oct 20, 2009

பேரரசுகள்

பேரரசு இருக்காரே, அவர பத்தி பேச ஆரம்பிச்சா பேசிட்டே இருக்கலாம். அவரு விஜய் மாதிரி யான ஆட்களுக்கு ஒரு மணி ரத்னம். பரத் மாதிரி ஆட்களுக்கு சத்யஜித் ரே. இப்படி ஒரு சிறந்த இயக்குனர் பத்தி எழுதலனா எபடிங் நா. இவரு எப்டி என்றால், இவரின் காவியங்களில் எல்லாம் சமுதாயத்துக்கு பல நல்ல கருத்துக்கள எடுத்து கூறுவார். உதாரணத்துக்கு கதாநாயகி கொஞ்சமா டிரஸ் போட்டுட்டு வர கூடாதுன்னு அட்வைஸ் பண்ணுவார். அடுத்த கனவு பாட்டுல ரெட்டை அர்த்த வரிகள்ள பின்னி பிடல் எடுப்பார்.



இவர் ஹீரோக்கள் எல்லாம் உடம்பை நெளித்து கொண்டே இருப்பார்கள் (காமெடி காட்சிகளில்). செண்டிமெண்ட் பத்தி சொல்லவே வேணாம். நண்பன் இறந்துடுவான். இல்ல தங்கச்சி புருஷன் சாக பாப்பான். இல்ல தங்கச்சி குச்சி மிட்டாயில, மிட்டாய் இருக்கும் - குச்சி இருக்காது. இப்படி பல துன்பங்களை ஹீரோ சந்திப்பார். கடைசியில் வெற்றி பெறுவார். இப்படி இவருக்கு இணை யாரும் இல்லையா நு சினி உலகம் கலங்கினப்போ நீ எல்லாம் என்ன டா சின்ன பய நு ஒரு என்ட்ரி கொடுத்தார்கள் ரித்தீஷ், ஆர்.கே. , சாம் அன்டர்சன் (!) போன்றோர்.


சரி, இவர்களிடத்தில் கத்துக்க எதுவும் இல்லயா? இருக்கு. அவர்களின் தன்னம்பிக்கை!! யாரிடமும் கத்து கொள்ள விஷயம் உண்டு :-) நான் ப்ளாக் எழுத ஆரம்பிக்க இவர்கள் கொடுத்த நம்பிக்கையும் ஒரு காரணம் தான்..
முழுதும் படிக்க..

சாப்ட்வேர் - 'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009'


அட எவ்வளவு பயமாக இருக்கிறது கொஞ்ச நாட்களாக? ஏன் என்றா கேட்கிறீர்? ஒருவித நிச்சயமற்ற தன்மை தருகிற பீதிதான். பின்னே? என் நண்பர்கள் ஒருவார் பின் ஒருவராக வெளியில் துரத்தப்படுவதை பார்த்தால், அடி வயிறு கனமாகி லப்டப் அதிகம் ஆகுமா ஆகாதா?

இதை பார்த்து அவன் குஷியடையத்தான் செய்வான். யாரா? நாங்கள் உட்கார்ந்த இடத்தில் சாப்பிடுவதை பார்த்து எரிச்சல்படுகிறானே, அவன்தான். ஒரு பருக்கை உண்ண அவன் காடு மேடு எல்லாம் அலைய வேண்டி இருக்கிறதாம். அதற்காக எங்களை திட்டலாமா? விலை ஏற்ற இறக்கத்திற்கு எல்லாம் எங்களை காரணகர்த்தாவாக்கி திட்டுகிறான். திடீர் தட்டுபாடுகளுக்கும் எங்களை கை காட்டி கொக்கரிக்கிறான்.

அவனுக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறேன். `நாட்டு பயல்’. பிடித்திருக்கிறதா? என்ன இது ஒரு பேரா என்று முகம் சுளிக்காதீர்கள். என் தரப்பு நியாயங்களை கேட்டால் கடைசியில் நீங்களும் அவனை அப்படித்தான் அழைப்பீர்கள்.

இப்படி திட்டும் அளவிற்கு நாங்கள் செய்த பாவம்தான் என்ன? நாங்கள் சௌகரியமாக இருப்பது கண்ணில் அகப்பட்ட தூசிபோல இருக்கிறது அவனுக்கு. தனித்தனி அறையாம் எங்களுக்கு. அதை பார்த்து அரை லிட்டர் அமிலம் அவன் வயிற்றில். இதில் அன்று என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வி வேறு- `அது எப்பிட்ரா எல்லாரும் சொல்லி வெச்ச மாதிரி வெள்ளையா இருக்கீங்க?’ செகப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல் இப்படி புரளிகள் வேறு.





ஆனால் நாங்கள் படுகிற அல்லல்களை அறிவானா அவன்? முன்னெல்லாம் கொஞ்சம் பேர் தான் இருந்தோம். இப்போ எங்கே பார்த்தாலும் வதவத என்று எங்கள் வகையறாதான். பிறந்த ஊர்களைவிட்டு எங்கோ பாஷை தெரியாத ஊர்களில் பிழைப்பு. அவனை மாதிரியா? பிறந்த ஊரிலேயே வேலை செய்து, குடும்பத்துடன் சாப்பிட்டு -அதுவல்லவா சொர்க்கம் (இன்னும் திருமணம் ஆக வில்லை)? நாங்கள் அலையாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதை பற்றி அங்கலாய்க்கிறானே- உட்கார்ந்தால்தான் தெரியும் அதில் உள்ள நமைப்பு.

அட, என் பீதியை பற்றி பாதியிலேயே விட்டுவிட்டேன் பார்த்தீர்களா? முதலில் ஆங்காங்கே தூரமாக துரத்தப்படுவதை கேள்விப்பட்டபோது, நமக்கு அந்த நிலை வராது என்று நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால், என் நண்பர்கள்- பக்கத்து அக்கத்தில் வேலை பார்த்தவர்கள்- காணாமல் போவதை பார்த்தால் கலங்குமா? கலங்காதா?

இதோ -என் உயிர் நண்பன்- நானும் அவனும்தான் ஒரே அறையில் வேலை செய்தோம். அவனை துரத்தப்போகிறார்கள். என் கண் எதிரே அந்த காட்சி நடந்ததுதான் ரொம்ப கஷ்டமாக இருந்தது. இவ்வளவு நாளாக எங்களுக்கு படியளந்து சோறுபோட்ட மேனேஜர், கண்ணில் இறக்கமில்லாமல் இவனை அழைத்துக்கொண்டு போகிறார். இவனது கலக்கத்தை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. எத்தனை பேரை துரத்தி இருப்பார்? எல்லாம் பழக்கம்தான் போல. என்ன ஒரு கழுத்தறுப்பு? சே! என் கழுத்துக்கு எப்போ வரப்போகுதோ தெரியலை -கத்தி.

உங்களை கேட்க மறந்தேனே? என்னை பார்த்திருக்கிறீர்களா நீங்கள்? நேற்று கூட எங்கள் கறிக்கடையை தாண்டி போகும்போது உங்களை பார்த்தேனே? ம்ம்ம்... என்னை திரும்பி பார்த்தால்தானே உங்களுக்கு முகம் தெரிய? கறுப்பு கூண்டுக்குள் இருக்கும் இந்த பிராய்லர் கோழியை உங்களுக்கு எங்கே நினைவிருக்கப்போகிறது?

சரி பரவாயில்லை. அதோ வருகிறான் பார் -நாட்டுக்கோழிப்பயல்- கேலிச்சிரிப்புடன். என் நண்பன் கதியை பார்த்திருப்பானோ?

டேய் என்னடா சிரிப்பு? என்னா மறுபடி ஆரம்பிக்கப் பாக்கறியா? போடா அந்தாண்ட!


                                                            ***************


சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி
முழுதும் படிக்க..

Oct 19, 2009

நாயோ போபியா - பாகம் 1

நாய எவன் கண்டு புடிச்சான்? அது சரி எல்லா ஜீவா ராசி போல் அதுவும் ஒன்னு. எனக்கு அது மேல் இருக்கும் பயம் போல வேற யாருக்குமே இல்லையா னுட்டு சில சமயம் எரிச்சலா இருக்கும். எனக்கும் நாய்க்கும் ஆன இந்த பகை இன்னிக்கி நேத்திக்கி இல்ல. ரைட் பரம் மை சைல்ட் வூட். எத்தனை கிலோ மீட்டர் ஓடி இருப்பேன் இது வரைக்கும்? ஆனால் பெருசா கடி வாங்கினது கெடயாது. ஏனோ ஒரு எரிச்சல். கடுப்பு. பயம். ஏழு கழுத வயசு ஆய்டுச்சு. நாய் பயம் மட்டும் போக மாட்டேன்குது. எரும ச்சே.





இப்படி தான் ஒரு தடவ ஸ்கூல் முடிச்சி வந்துகிட்டு இருந்தேன். தெனம் அந்த வழியாதான் வருவேன். அன்னிக்கி பாத்து மூஞ்சில வெல்ல கலர் அடிச்சகருப்பு நாய் (கிட்ட தட்ட இந்த படத்துல இருக்கற மாதிரி, இன்னும் கொடூரமா). மொதல்ல ஒரு உர்ர்ர். அப்புறம் ஒரு கர கரப்பு. அப்புறம் ஆரம்பிச்சது பாருங்க. கொரகொர நு கொரைகுது. இதுல அந்த தெரு நாய் அத்தனையும் சப்போர்ட்க்கு  சேர்ந்துகிடுச்சு. சப்த நாடியும் அடங்கி போச்சு. அந்த நேரம் பார்த்து என் கிளாஸ் பொண்ணுங்க அந்த பக்கம் வர, வெளிறி போன என் மூஞ்ச பாக்க, இத்தனநாள் நான் சேத்து வச்சி இருந்த கௌரவம் செத்து போச்சு. என் ரவுடி இமேஜும் போச்சு. அன்னிக்கி முடிவு பண்ணினேன். நாய் தான் என் ஜென்ம எதிரினு .

நாயை கூட விடுங்க. அத வளக்கரவுங்க பன்ற சேட்டை இருக்கே. ஐயோ. அதுக்கு நாயே பரவ இல்ல. மூஞ்சி உசரத்துக்கு ஒரு நாய். அவங்க வீட்டுக்கு ஒரு நாள் போனேன் (முன்னாடியே தெரியாது. இப்டி ஒன்னு இருக்குன்னுட்டு). அதுக்கு வழக்கமா நாய் முதலாளிங்க யூஸ் பண்ற டயலாக் - "சும்மா வாங்க, கடிக்காது."

அது தண்ணி அடிச்ச பண்ணி ஆட்டம் கண்ணு ரெட் ஆயி கொர்ர் நு சொல்லுது. டேய் உனக்கு மனசாட்சியே இல்லையா டா? நாயே வளக்க சொன்ன ஒரு குதுரைய  வளத்துகிட்டு இருக்கான் (இது முதலாளிக்கு, கௌண்டர் ஸ்டைலில் படிக்கவும்). அப்டியே வளத்தாலும் யாராவது விருந்தாளி   வந்தா கட்டி போட வேண்டியதானே? அது வந்து கால தூக்கி என் தோளுல வெக்குது (என்ன ரொம்ப புடிக்குதாம்!).
முழுதும் படிக்க..

முதல் ப்ளாக்

முதல் ப்ளாக் தமிழில் இருந்தால் நலம் என்று எண்ணினேன். இதற்கு முக்கிய காரணம் நான் படித்து வியந்த தமிழ் ப்ளாகுகள். தமிழிற்கு என்று ஒரு நடை அழகு உண்டு.

ப்ளாகில் இங்கிலீஷ் டு தமிழ் வசதி இருப்பது பெரும் நன்மை. டவலப்பர்களுக்கு மிக்க நன்றி. இந்த ப்ளாகிற்கு பிறகு தமிழிலேயே முழுமையாக எழுதினால் என்ன என்று தோன்றுகிறது!
முழுதும் படிக்க..