Apr 24, 2014

என்னைப் பற்றி..

என்னைப்பற்றி ஒரு குறிப்பு கூட நான் இயங்கும் தளங்களில் தரவில்லை என்பது உறுத்தியதும் இதை எழுதத் தொடங்கி விட்டேன்.

1985ல் வேலூரில் பிறந்தேன். பிறகு தந்தையின் வேலை நிமித்தமாகச் சென்னையில் குடியேறினோம் (வேலூரும் வேலை நிமித்தம்தான்). வீட்டில் எந்தப்பக்கம் திரும்பினாலும் புத்தகத்தில்தான் இடிக்கும். வீடு காலி பண்ணும்போது புத்தகம் அல்லாத பொருட்களை நாங்கள் நால்வருமே எடுத்துக்கொண்டு கிளம்பிவிடலாம். புத்தகத்திற்காக மட்டும் ஒரு வண்டி வைக்க வேண்டியிருந்தது. ஆனாலும் புத்தகங்கள் மீது வெறுப்பு வரவில்லை.

படக்கதைகள், நூலகத்தின் சிறுவர் புத்தகங்கள் (அம்மாவை வாசிக்கச் சொல்லி தொல்லை) என்று புத்தகங்களை அவ்வபோது வாசிக்கவும் செய்தோம். பரணில் இருந்து திடீர் திடீரென்று மேலே விழும் புத்தகங்கள் புரியாது, அதனால் நூலகப் புத்தகங்கள். அப்பாவுக்கு வாசிப்பு, எழுத்து என்று நல்ல வட்டம் உண்டு. அதைப்பார்த்தோ என்னமோ ஐந்தாவதில் ஒரு சிறு பத்திரிகை நடத்தினேன். ஒரே பதிப்பு கண்ட கையெழுத்துப் பிரதி. நானே வெவ்வேறு புனை பெயர்களில் கதை, தொடர்கதை, ஜோக்ஸ் என்று எழுதித்தள்ளினேன். ஏதோ பத்திரிகையில் வந்த ஒரு ஜோக் எழுத்தாளர் பெயரை அதில் உபயோகிக்க, சில நாட்கள் கழித்து நாங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்ட தமுஎச கலை இரவில் அந்த எழுத்தாளரையே சந்தித்தது நேற்று நடந்தது போல் இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் நான் எழுதிய கதை கோகுலம் தமிழில் வெளிவந்தது. முப்பது ரூபாய் சன்மானம் அனுப்பினார்கள். எனது முதல் பிரசுரம் மற்றும் சம்பாத்தியம்! இதையெல்லாம் பார்த்த என் அம்மா சுதாரித்தார். படித்து வேலை வாங்கவில்லையென்றால் என் நிலை என்ன என்பதை எப்படியோ உணர்த்தினார். அவருக்கு என் நன்றிகள்! பன்னிரெண்டாவதில் பள்ளியிலேயே முதலாவதாக வந்து (வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இதைச் சொல்லிவிடுவது), என்ஜினீயரிங் முடித்து, கேம்பஸில் வாய்ப்புகள் கிடைத்து... இப்போது சதுர வில்லைகளை தட்டிக்கொண்டிருக்கிறேன்.

எனது அரசியல் நிலைப்பாடு மற்றும் கருத்துக்கள் பெரும்பாலும் இடது சாரி மற்றும் சுதந்திரவாத அறிவுஜீவிகளுடனே பொருந்துகிறது (அல்லது அவர்கள் சொல்வது சரியாகத்தான் இருக்குமென்று நினைத்துக்கொள்கிறேன்?). சமநீதி, பரந்த மனப்பான்மை, சகிப்புத்தன்மை, தனி மனித சுதந்திரம் ரீதி வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை என்று நம்புகிறேன். இந்த டாபிக்கில் பெரும் தேடலில் இருக்கிறேன், இதுவே மிகவும் தாமதமான ஆரம்பம்.

புதியவர்களுடன் கூச்சத்துடன் பழகும் சுபாவம். தாழிடப்படாமல் மூடிய கதவு போதும் என்னை தடுத்து நிறுத்த. வலைப்பூ, ட்விட்டர் போன்றவற்றில் இருக்கிறேன் என்றே ஒரு சிலர் தாண்டி யாருக்கும் தெரிவிப்பதில்லை (சொல்லிட்டாலும்...). எனது சொந்த பேஸ்புக் கணக்கு இல்லாமல் தமிழ் எழுத்துலகுடன் 'டச்'சில் இருக்கத் தனிக் கணக்கு. அதில் இருக்கும் ஒருவரின் தொலைபேசி எண்ணும் எனக்குத் தெரியாது (இது தான் இந்தக் குறிப்பு எழுத முக்கியக் காரணம்)! இந்த அணுகுமுறையை மாற்ற விருப்பம். நண்பர்கள் யோசிக்காமல் தொடர்பு கொள்ளவும்.

2012ல் திருமணம். எனது கனவுகளுக்கு ஊக்கம் கொடுக்கும் அன்பான மனைவி. இதோ இப்போது பிப்ரவரி 2014ல் பெண் குழந்தை.  எனது பிரசுரமான படைப்புகளை இங்குப் பார்க்கலாம்.

(சிந்தனையாளராக நடித்தபோது எடுத்தது)

வேறெதையும் விட வாசிப்பதும் எழுதுவதும், Of course திரைப்படம் பார்ப்பதும் பிடிக்கிறது. புத்தகம் வாசிக்காமல் கல்லூரி காலத்தை விரயம் செய்ததில் இன்று வரை வருத்தம் உண்டு, அதைவிடச் சிறந்த காலகட்டம் வேறொரு முறை வாய்க்காது. அதிகம் எழுதப்படாத தலைப்புகளில், குறிப்பாக அறிவியல் கதைகளை புனைவுகளை சுவாரசியமாக எழுதுவது என் கனவு. இந்த வலைப்பூவின் பதிவுகளை வைத்து என்னை மதிப்பிட வேண்டாம் (அதிலும் முதல் சில வருட பதிவுகள்) என்றும் வேண்டுகோள் வைத்துக்கொள்கிறேன். நான் எழுதவிரும்பியதில் ஒரு துளியைக்கூட ஆரம்பிக்கவில்லை. அதற்கு நிறைய உழைக்க வேண்டியிருப்பதால் (சொல்ல மறந்து விட்டேன், சரியான சோம்பேறி) கொஞ்சம் கொஞ்சமாக எழுத உத்தேசம்.

தொடர்புக்கு:
tamilkothu [at] gmail [dot] com

https://twitter.com/prasannag6

https://www.facebook.com/tamilkothu