Mar 25, 2014

முன்னாள் காதலிகள்

அடிக்கடி கீழ்வரும் கான்செப்டில் ஸ்டேட்டஸ் அல்லது கதை கண்ணில் படுகிறது:

கதாநாயகன் ஊருக்கோ, எங்கேயோ போகும்போது வெகு நாட்கள் கழித்து தற்செயலாகவோ வேண்டுமென்றேவோ தான் ஒரு தலையாகவோ அல்லது பரஸ்பரமாகவோ காதலித்த நபரை பார்க்கிறார் (பெண்தான்).

உடனே தனது பழைய நினைவுகளில் மூழ்குகிறார். அந்த பெண் நபரின் செழுமையான வாழ்வை, அவளின் கனவுகளை, ஆசைகளை நினைத்துபார்க்கிறார். அதை கம்பேர் செய்து அவளின் தற்போதைய நிலையை நோக்குகிறார். அந்த பெண் நபரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனது கண்றாவியான வாழ்க்கையை கதாநாயகனுக்கு தெரியப்படுத்தி விடுகிறார் ('ஏதோ இருக்கேன் சரவணா' என்ற படியே உருண்டோடிய கண்ணீரை தெரியாமல் சிரித்துக்கொண்டே துடைத்து, அழும் குழந்தையை வேண்டா வெறுப்பாக தூக்கினாள்).. பெரும்பாலும் அவளுக்கு வயதான, சந்தேகப்படும், கொடுமையான கேரக்டர் தான் கணவர்.

கடைசியில் கதாநாயகன் அவளின் நிலையை எண்ணி, துக்கம் தொண்டையை அடைக்க வெளியேறுவதாக அந்த சம்பவம் முடியும்.

எனக்கு என்ன தோணும்னா, கற்பனையில் கூட நாம் விரும்பிய பெண் சந்தோஷமாக இருப்பது நமக்கு பிடிக்காதோ?


முழுதும் படிக்க..

Mar 22, 2014

ஏழு தலைமுறைகள்


கருப்பென்றால் தாழ்ச்சி, அசிங்கம், கருப்பர்களுக்கு எதுவும் தெரியாது, காட்டுமிராண்டிகள் போன்ற கருதுகோள்கள் நம்மிடையே வெகு பிரபலம். இத்தகைய கருத்துக்கள் எப்படி உருவாகின, யார் உருவாக்கியது, ஏன் அவை வெள்ளையர்களுக்கு மிக முக்கியமாக இருந்தன? கருப்பர்களை வெறும் உடைமையாக, செருப்பு பழசாகிடுச்சு, தூக்கி போட்டுட்டு வேற வாங்கணும் என்பது மாதிரி மட்டும் எப்படி அவர்களால் கருத முடிந்தது?  அவர்களின் உழைப்பை முழுக்க சுரண்டி தன்னை வளர்த்துக்கொண்ட வெள்ளையர்கள் எத்தனை பேர்? அவர்களின் உழைப்பில் அமெரிக்காவே வளர்ந்தது!

இப்படி முற்றிலும் அநியாயமான, மனசாட்சிக்கு விரோதமான ஒன்றை நடத்த ஒரு பெரும் தர்க்கம் வெள்ளையர்களுக்கு தேவைப்பட்டது. எப்படி மத/சாதிக்கலவரங்களில் கொலை, கற்பழிப்பு போன்றவற்றை 'ஆமா, அவனுங்கள இப்படி செஞ்சாத்தான் அடங்குவாங்க' என்று சொல்லி நம்மையே திருப்திபடுத்திக்கொள்கிறோமோ, அது மாதிரி.. அந்த நியாயம்தான் முதல் பத்தியில் சொல்லப்பட்ட கருதுகோள்கள். 'அவர்களுக்கு ஒன்னும் தெரியாது, மிருகங்கள். நாம்தான் வாழ்க்கை தந்தாக வேண்டும்'. ஆனால் அவர்களின் வாழ்வு எத்தகையது? எப்படிப்பட்ட மண்ணில் இருந்து அவர்களை பிடுங்கி வேறு இடத்தில் நட்டார்கள்?


  
1750 வாக்கில் காம்பியாவின் ஜப்பூரை சேர்ந்த குண்ட்டா கின்ட்ட்டே பிறப்பதில் ஆரம்பித்து கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள், ஏழு தலைமுறைகள் கடந்து அமெரிக்காவில் அலெக்ஸ் ஹேலியில் முடிகிறது இந்த நாவல். அலெக்ஸ் ஹேலிதான் நாவலாசிரியர். கருப்பர்களின் வரலாற்றை, அமெரிக்காவில் அவர்களை வைத்து நடந்த மாபெரும் அசிங்கத்தை, அந்த இருநூறு வருட சரித்திரத்தை இந்த ஏழு தலைமுறைகளின் வாயிலாக அனாயாசமாக வரைந்து காட்டுகிறது இக்கதை. பிரச்சார நெடியில்லாமல் சுவாரசியமாக; ஒவ்வொரு இரவும் வெகு நேரம் ஆனாலும் இன்னும் சில பக்கம், இன்னும் சில பக்கம்  என்று படித்துக்கொண்டே இருக்க வைத்துவிட்டது.

முதல் சில அத்தியாயங்களில் ஜப்பூர் கிராமத்தின் வாழ்க்கை முறை விலாவாரியாக சொல்லப்படுகிறது. எல்லாவற்றையும் மிக திட்டமிட்டு, இயற்கையோடு இயைந்த ஒரு வாழ்க்கையை வாழும் சமூகமது. இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மக்கள், மதகுரு வழியாக கல்வி கற்கிறார்கள். வயதுக்கு வந்ததும் சிறுவர்கள் அனைவருக்கும் ஊருக்கு வெளியே போர்ப்பயிற்சி (Training camp!). அது முடிந்து வந்ததும் தனிக்குடிசை, தனி நிலம், பிடித்த பெண்ணை மணந்து கொண்டு வாழ்க்கை என்று ஒரு தொடர்ச்சங்கிலி வாழ்க்கை. அச்சமூகத்தில் இருக்கும் சிற்சில பிற்போக்கான நடைமுறைகளும் எந்தவித பூச்சும் இன்றி இயல்பாக சொல்லப்படுகிறது.

இதில் பெரும்பாலானவை குண்ட்டாவின் பார்வையில் சொல்லப்படுவதால் அந்தந்த பருவங்களுக்கே உரிய கிளர்ச்சிகள், கற்பனைகள், கனவுகள் இயல்பாக விவரிக்கப்படுகின்றன. சொல்லப்போனால் அந்த கனவுகளும், கற்பனைகளும், ஆசைகளும்தான் பின்பு நடக்கும் கொடுமைகளை இன்னும் அழுத்தமாக நம் மனதில் பதிக்கின்றன.

அப்போதே அவர்களுக்கு வெளிறிப்போய் வித்தியாசமான தோற்றம் கொண்ட, (கவனிக்க) கடும் நாற்றம் வீசும் பிள்ளை பிடிப்பவர்களை பற்றி எச்சரிக்கப்படுகிறது. அந்த அடிமைத்தரகர்களின் வேலை கருப்பர்கள் தனியாக இருக்கும் போது பிடித்துக்கொண்டு போய் அமெரிக்காவில் விற்பது என்பது அவர்களுக்கு தெரியாது (யாரும் திரும்பி வந்ததில்லை). குண்ட்டாவும் தனது விடலைப்பருவத்தில் ஒரு நாள் காட்டில் தனியாக இருக்கும் போது பிடிபட்டுவிடுகிறான். அதன்பிறகு அவர்கள்செய்யும் கடுமையான கடல் பயணம், ஏலம், புதிய முதலாளி, அங்கு அனுபவிக்கும் கொடுமைகள், சிறிது சிறிதாக தப்பிக்கும் எண்ணம் மறைந்து அடிமைவாழ்வுமுறையை ஏற்றுக்கொள்ளுதல், பல வருடங்கள் கழித்து திருமணம், அவனின் சந்ததியினர் என்று கதை நீள்கிறது.

வெற்றிமாறன் தனக்கு பிடித்த நூலாக Roots ஐ குறிப்பிடுகிறார். அவரின் ஆடுகளத்தில் வரும் கோழி சண்டையின் inspiration இதில் உள்ளது (ஐயா இது சினிமாவில் ஊறிய உடம்பு.. எதைப்பற்றி ஆரம்பித்தாலும் சினித்துணுக்கு நடுவில் வந்துவிடுகிறது!). ஆப்பிரிக்க-தமிழக தொடர்புபற்றி இங்கும் பல துப்புகள். உதாரணமாக காம்பியாவின் ஊர்கள் ஜப்பூர், கஞ்சூர் மாதிரி ஊர் ஊர் என்று முடிகிறது (கபாலீஸ்வரர் கோவில் எங்க இருக்கு? மைலாப்பூர்).

கதை சொல்முறையில் கடின கசடதபற இல்லை. நியோ போட்டோ பாட்டியின் 'ஏ பேராண்டிகளா, கதை ஒன்னு சொல்றேன் கேளுங்கடா' மாதிரிதான் நாவல் முழுவதுமே இருந்தது. நான் படித்தது ஏ.ஜி. எத்திராஜுலு தமிழில் மொழிபெயர்த்த சவுத் விஷன் வெளியீடு. தமிழில் படித்துவிட்டு ஆங்கிலத்தில் சில பக்கங்கள் மேய்ந்து பார்த்தேன், ஆங்கிலத்திலும் இதே முறைதான் போலும். நாவலின் இறுதியில் தனது முன்னோர்களின் மூலம் பெற்ற சிற்சில குறிப்புகளை எடுத்துக்கொண்டு ஜப்பூரை எப்படியோ கண்டுபிடித்து செல்கிறார் அலெக்ஸ். அங்கு நூற்றாண்டுகளாக முன்னோர் பாடல்களை பாடும் பெரியவர் ஒருவரையும் கண்டுபிடிக்கிறார். ஏழு தலைமுறைகளுக்கு முன், ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காகொண்டு வரப்பட்ட குண்ட்டாவை பற்றியும், அப்போதிருந்தவர்களை பற்றியும் பாடுகிறார் பெரியவர். இந்த இடத்தில் அலெக்சுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை நம்மால் நேரடியாக உணர முடிகிறது.

அடுத்தவர்களின் உழைப்பை சுரண்ட தனக்கென்று ஒரு நியாயம் வைத்துக்கொண்ட வெள்ளையர்கள் பற்றி படிக்கும்போது, இங்கும் பல்லாண்டுகளாக சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் நினைவு எழுவதை தடுக்கவே முடியாது. மேலும் இன்றும் கூட வெறுப்பு அரசியல்களால் போகிற போக்கில் நம்மை சாராதவர்களை பற்றிய பொதுப்படையான மட்டமான கருத்துக்களை உதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.இனவெறி பற்றிய சிந்தனைகளில் இப்போதுதான் நாம் தொடக்க நிலையில் இருக்கிறோம்.  மீண்டும் மீண்டும் பெரும் சண்டைகளுக்கும், பேரழிவுகளுக்கும் பிறகே, மனிதநேயம்தான் முக்கியம் என்பதை மனிதன் கண்டு கொள்கிறான். வரலாற்றின் தவறுகளை திரும்ப செய்யாமல் இருப்பதன் மூலமும், வெறுப்பரசியலுக்கு எதிராக தொடர்ந்து பேசுவதன் மூலமும் அந்த வழக்கத்தை விட்டொழிக்கலாம்.

ஆங்கில மூலம் : அலெக்ஸ் ஹேலி
தெலுங்கில் இருந்து தமிழில் : ஏ.ஜி.எத்திராஜீலு
வெளியீடு : சவுத் ஏசியன் புக்ஸ்
கீழைக்காற்று : 044-28412367
இணையத்தில் வாங்க : உடுமலை ரூ.80 


முழுதும் படிக்க..

Mar 20, 2014

பிட்காயின் – பரிணாமமா, பரிநாமமா?

ஆழம் இதழில் வெளிவந்த பிட்காயின் பற்றிய அறிமுகக்கட்டுரை.. அங்கு செல்ல
(சுருக்கப்படாத வடிவம் கீழே)

அஸ்ஸாமில் கிட்டத்தட்ட அறுநூறு ஆண்டுகளாக பண்டமாற்று முறையில் நடைபெறும் ஒரு சந்தையும், அதை தக்கவைத்திருக்கும் பழங்குடிகளையும் பற்றிய செய்தி நிஜமாகவே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.பணம் என்கிற வஸ்து தோன்றுவதற்கு முன் இருந்த நடைமுறை! தானியங்கள், கால்நடைகள், உலோகங்கள் என்று பண்டமாற்றிக்கொண்டு வளர்ந்த பொருளாதாரத்தில், பணம் என்கிற விஷயம் கண்டுபிடிக்கப்பட்டதும் மாற்றுமுறை ஒரு ஸ்திரத்தன்மையை அடைந்தது. பல நூற்றாண்டுகளாக மாறாமல் பணமே நிலையாக தொடர்கிறது. ஆனால் இன்று தொழில்நுட்பத்தினால் மாபெரும் மாற்றங்களை சந்தித்து கொண்டிருக்கும் மனிதகுலம், பணத்திலும் சந்திக்கப்போகிறது. ஆம். பணத்தின் தொழில்நுட்ப பரிணாமம் பிட்காயினை வரவேற்க தயாராகிக்கொள்ளுங்கள்.

தற்போதைய சிக்கல்கள்
இணைய உலகிற்கான நாணயம் என்று பிட்காயினை சொல்லலாம். ஏன், நான்தான் ஏற்கனவே ஆன்லைனில் பொருட்களை சுலபமாக வாங்குகிறேனே என்று ஒருவர் கேட்கக்கூடும். அதனால் இப்போது இருக்கும் முறையில் உள்ள குறைபாடுகளையும், பிட்காயின் அவற்றில் எதைக் களைய முயல்கிறது என்பதையும் முதலில் பார்க்கலாம்.

இப்போது நாம் செய்யும் ஆன்லைன் கொடுக்கல் வாங்கல் அனைத்துமே ரூபாய் அல்லது வேறு கரன்சி கொண்டே செய்கிறோம். ரூபாயை கட்டுப்படுத்துவது ரிசர்வ் வங்கி. மேலும் அந்த சேவையை பெற விற்பவர், வாங்குபவர் இருவருமே ஒரு குறிப்பிட்ட தொகையை கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கும், மாஸ்டர் கார்ட், விசா போன்ற நிறுவனங்களுக்கும் செலுத்தவேண்டியிருக்கும் (இவர்களுக்கு கட்டவேண்டிய தொகை முக்கியமாக அவர்கள் செய்யும் மத்தியஸ்தம் மற்றும் பிரச்சினை வரும்போது சரிசெய்வதற்காகவே).

அதுமட்டுமில்லாமல், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் இருக்கவேண்டும் போன்ற வரம்புகளையும் இந்த நிறுவனங்கள் விதிக்கக்கூடும். இன்னொரு முக்கியமான விஷயம், இந்த முறையில் வாங்குபவர், விற்பவர் ஆகிய தகவல்களின் அப்பட்டமான தன்மை. உதாரணமாக, ஒருவர் போர்னோ வகை படத்தை வாங்க விரும்புகிறார். ஆனால் அவரின் கணக்கில் வாங்கினால் சுலபமாக, அவர் வருங்காலத்தில் டெல்லி முதலமைச்சர் ஆகும் சமயத்தில், இவர் ஒரு காலத்தில் ‘அபச்சாரமான படத்தை’ அவர் கணக்கில் வாங்கியிருக்கிறார் என்று கண்டுபிடித்து பெயரை ரிப்பேர் செய்ய முடியும்.

ஆக, இப்போதைய முறையில் இருக்கும் கெடுபிடிகள் - பணத்தை கட்டுப்படுத்தும் (அதன் மதிப்பை மாற்றக்கூடிய) ஒரு மத்திய வங்கி அல்லது அரசு, சேவைதாரர்களுக்கு கட்டவேண்டிய தொகை, உச்ச வரம்புகள், வாங்குபவர்/விற்பவர் பற்றிய வெளிப்படை தகவல்கள் போன்றவற்றை களைய முற்படுகிறது பிட்காயின். இது எப்படி நடக்கும்? அதுவும் ஒரு மத்திய கட்டுப்பாட்டகமின்றி பொருளாதார அமைப்பு எப்படி சாத்தியம்?

பிட்காயின்
2009 இல் மறையீட்டியல் (க்ரிப்டோக்ரபி) துறையில் சடோஷி நகமொடோ என்பவர் தாக்கல் செய்த பேப்பரில் பிட்காயினின் அடிப்படை பற்றியும் அதை நடைமுறை படுத்த ஒரு மாதிரி மென்பொருளையும் ஓப்பன் சோர்ஸ் முறையில் வெளியிட்டார். (இதில் அந்த சடோஷி பற்றிய தகவல்கள் சுவாரசியமான தனிக்கதை. அவர் தனியாளா, பலர் சேர்ந்த குழுவா, யார் அவர்(கள்) போன்றவை இன்று வரை ரகசியமாக இருக்கிறது).

முழுக்க முழுக்க பிட்காயின் நெட்வொர்க்கில் இணைந்திருப்பவர்கள் அவர்களாகவே பணத்தை புதிதாக உருவாக்கி, பரிமாற்றங்கள் செய்து, நடக்கும் பரிமாற்றங்களை சரிபார்த்து இயங்கும் ஒரு அமைப்பே பிட்காயின். இங்கு உருவாக்கப்படும் நாணயம் முழுக்க முழுக்க வெர்ச்சுவல் உலகிற்கானது. மற்ற கரன்சிகள் மாதிரி அச்சடிக்கப்படாது.
அப்படி வெளியிடப்பட்ட ஒரு கருதுகோள் பலரையும் ஈர்க்க, கடந்த சில ஆண்டுகளிலேயே மளமளவென்று வளர்ந்துவிட்டது பிட்காயின்.

புதிதாக அதற்குள் ஒருவர் நுழைய என்னென்ன தேவை? வாலெட் (Wallet - பணப்பை) எனப்படும் மென்பொருள் அல்லது செயலியை கணினியிலோ, மொபைலிலோ நிறுவி விட்டால் போதும். அது உங்களுக்கு ஒரு முகவரியை கொடுத்துவிடும். அதன் மூலம் வேண்டிய பொருட்களை பிட்காயின்கள் கொண்டு வாங்கிக்கொள்ளலாம், விற்கலாம்.

பிட்காயினுக்கு போய் யார் பொருளை விற்பார்கள் என்று நினைப்பவர்களுக்கு – ஏகோபித்த ஆதரவு இல்லையென்றாலும் அப்படி பொருட்கள் விற்பவர்களின் பட்டியல் வேகமாக வளர்ந்துவருகிறது. இப்போதைக்கு நன்கு தெரிந்த நிறுவனங்கள் என்றால் வேர்டுபிரஸ், ரெட்டிட் போன்றவை பிட்காயின்களை ஒப்புக்கொள்கின்றன.

பிட்காயின்களை அனுப்புவது வெகு சுலபம். வேலட்டை திறந்து, யாருக்கு அனுப்புகிறீர்களோ அவர்களின் முகவரி, எவ்வளவு பிட்காயின் என்று கொடுத்து அனுப்பு என்று அழுத்தினால் முடிந்தது. சரி பிட்காயின்கள் கொடுத்து எதையாவது வாங்கலாம் என்று முடிவெடுத்துவிட்டீர்கள். ஆனால், அவர்களுக்கு கொடுக்க முதலில் உங்களிடம் பிட்காயின்கள் வேண்டுமே? அதை எப்படி பெறுவது?

மூன்று வகைகளில் பெறலாம். பங்குச்சந்தைகளில் பணம் கொடுத்து பங்குகள் வாங்குவது போல், பிட்காயின் எக்ஸ்சேஞ்சுகளில் வாங்கிக்கொள்ளலாம். இரண்டாவது முறை பொருட்களை விற்று பணத்திற்கு பதிலாக பிட்காயின்கள் பெற்றுக்கொள்வது. மூன்றாவது மைனிங் மூலம்.

மைனிங்கும் சில அடிப்படைகளும்
எப்படி கனிமங்களை சுரங்கங்களில் வெட்டி எடுக்கிறார்களோ, அது மாதிரி பிட்காயின்களை எடுக்க சற்று உழைக்கவேண்டும். ஆனால் உண்மையான தொழிலாளிகள் ஆபத்தான சூழல்களில் வேலை செய்வது போல் அல்ல. ஏசி அறையில் அமர்ந்து கொண்டு கூட செய்யலாம், அதாவது மெஷின் வேலை செய்வதை வேடிக்கை பார்க்கலாம். இங்குதான் பிட்காயினின் அடிப்படையை பார்க்கவேண்டியுள்ளது. ஒரு சின்ன எடுத்துக்காட்டு மூலம் இதை பார்க்கலாம்.

*      கவுண்டமணி செந்திலிடம் ஒரு வாழைப்பழம் வாங்க வேண்டும். அதன் மதிப்பு ஐந்து பிட்காயின்கள் என்று வைத்துக்கொள்வோம். இருவருமே பிட்காயின் வேலட் நிறுவி, ஒரு முகவரியும் வைத்திருக்கிறார்கள்.

*      ஒவ்வொரு முகவரிக்கும் பொது, தனி என்று இரண்டு சாவிகள் (Keys) உருவாக்கப்படும். இதில் பொதுச்சாவியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளலாம். தனிச்சாவி நமக்கே நமக்கானது. இப்படி நினைவில் வைத்துக்கொள்வோம் - தனிச்சாவி என்பது கைநாட்டு; அது கவுண்டமணியின் கைநாட்டுதான் என்று செந்தில் சரிபார்க்கும் உபாயம்தான் பொதுச்சாவி.

*      கவுண்டமணி செந்திலின் முகவரிக்கு ஐந்து பிட்காயின்கள் அனுப்புகிறார். அப்படி அனுப்புகையில் தனிச்சாவி மூலம் கவுண்டமணியின் கைநாட்டு வைக்கப்பட்டு விடும். பிறகு நான் அனுப்பவில்லை, இவ்வளவுதான் அனுப்பினேன் என்றெல்லாம் மாற்றி பேச முடியாது. செந்தில் தன்னிடம் பகிரப்பட்டிருக்கும் பொதுச்சாவி மூலம் இதை அனுப்பியது கவுண்டமணிதான் என்று உறுதிப்படுத்திக் கொள்வார். அதாவது அவர்கள் வைத்திருக்கும் மென்பொருள் இது அத்தனையையும் செய்துவிடும்.

*      இந்த பரிவர்த்தனையில் கவுண்டமணியிடம் ஐந்து பிட்காயின்கள் கழிக்கப்பட்டு, செந்திலிடம் கூட்டப்படும். ஆனால் தனியாட்களின் வரவு செலவை பிட்காயின் சேமிப்பதில்லை. அப்படியென்றால் கவுண்டமணியிடம் ஐந்து காயின்கள் இருந்தது என்பது எல்லாருக்கும் எப்படி தெரியும்? இதுவரை பிட்காயினில் நடந்த அத்தனை பரிவர்த்தனைகளும் சோதிக்கப்பட்டு இவரிடம் ஐந்து காயின்கள் வந்து சேர்ந்தது ஊர்ஜிதப்படுத்தப்படும். இதற்காக இதுவரை நடந்த அத்தனை பரிமாற்றங்களும் சேமித்து வைக்க வேண்டிய தேவை எழுகிறது.

*      அதுதான் பிளாக் செயின் என்கிற மாபெரும் பொதுப்பதிவேடு. பிட்காயினில் இணைந்திருக்கும் அனைவரிடமும் இதன் நகல் இருக்கும். இந்த பதிவேட்டில் உலகம் முழுக்க நடக்கும் அத்தனை பிட்காயின் கொடுக்கல் வாங்கலும், ஆதி பிட்காயின் உருவானது முதல், பதிக்கப்பட்டிருக்கும்.இந்த பதிவேடுதான் பிட்காயினுக்கு அடிப்படை. இதை வைத்து எந்த முகவரியில் யார் என்ன செய்தார்கள் என்று யார்வேண்டுமானாலும் பார்க்க முடியும் என்பதாலேயே, ஒவ்வொரு முறையும் நமது முகவரியை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

*      கவுண்டமணி-செந்தில் பரிவர்த்தனை உடனே நடந்தாலும், அதை உறுதிப்படுத்த பத்து நிமிடங்கள் வரை ஆகலாம். ஏன் பத்து நிமிடங்கள்? மேலே சொன்ன முறைகளில் யார் எவ்வளவு அனுப்பினார்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்தவும், அதிகமாக செலவழிப்பதை தடுக்க பிளாக் செயின் இருப்பதையும் பார்த்தோம். ஆனால் கடைசியாக செய்யப்பட்ட பரிவர்த்தனை சரியென்று அனைவராலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டு பிளாக் செயின் சங்கிலியின் கடைசி இணைப்பாக ஒப்புக்கொள்ளப்பட வேண்டும். இல்லையென்றால் கவுண்டமணி செந்திலிடம் ஐந்து பிட்காயின்கள் கொடுத்து வாங்கிவிட்டு, அந்த தகவல் வடிவேலுவைச் சேருமுன், வடிவேலுவிடமும் அதே ஐந்து பிட்காயின்களை உபயோகப்படுத்தி விடுவார்.

*      இங்கு தான் மைனர்ஸ் - சுரங்கத்தொழிலாளிகள் வருகிறார்கள். இவர்களின் வேலை கவுண்டமணியும் செந்திலும் செய்த பரிவர்த்தனை எந்தவித தவறுகளும், பித்தலாட்டமும் இன்றி சரியாக நடந்ததா என்று ஊர்ஜிதம் செய்து, ஏற்கனவே ஊர்ஜிதமாகி இருக்கும் முந்தைய பரிவர்த்தனைகளுடன் இணைப்பது.

*      ஆனால் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பார்க்காமல் புதிதாக நடந்த, ஆனால் சரிபார்க்கப்படாத சில பரிவர்த்தனைகளை ஒரு கற்றையாக (பிளாக்) எடுத்துக்கொள்கிறார்கள். ஒரே நேரத்தில் உலகம் முழுக்க பலர் இந்த பிளாக்கை உருவாக்க முனைவார்கள். இதில் யாருடைய பிளாக் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க கணிதப் புதிர் ஒன்று முன்வைக்கப்படும். அதை யார் முதலில் ஊகிக்கிறார்களோ, அவர்களின் பிளாக் ஒப்புக்கொள்ளப்படும். இந்த சிக்கலான புதிரை அளவுகோளாக வைப்பதன் மூலம் பிட்காயின் நெட்வொர்க்கால் சீராகவும் தவறில்லாமலும் இயங்க முடிகிறது. கவுண்டமணியாலும் ஏமாற்றமுடியாது. இந்த வேலையை செய்ததற்கு கூலியாக தொழிலாளிகளுக்கு இருபத்தைந்து பிட்காயின்கள் வழங்கப்படும்.

*      இந்த சுரங்க வேலையை, அதாவது சரிபார்த்தலை, யார் வேண்டுமானாலும் செய்ய முடியாது. அது ஒரு சிக்கலான புதிர். ஒரு நொடியில் பல ஊகங்களை கொடுத்தாலொழிய உங்களின் விடை முதலில் ஒப்புக்கொள்ளப்பட வாய்ப்புகள் மிகக்குறைவு. அதைச்செய்ய கருவிகள் உண்டு (சக்திவாய்ந்த பிரத்யேக கணினிகள் என்று வைத்துக்கொள்வோம்)– அவை சந்தையில் பலவாரியாக விற்பனைக்கு கிடைக்கிறது. லட்சங்களில் கூட உண்டு. சில லட்சங்களை பிட்காயினில் முதலீடு செய்துள்ள IIT மாணவர்களை பற்றிய செய்திகளும் படிக்க கிடைக்கிறது.

*      இவ்வளவு பணம் கொட்டி வாங்கியும் தனியாளாக அந்தப் புதிரை கணிப்பது முடியாத காரியம். எனவே பலர் கூட்டாக இணைந்து இந்த ஊகங்களை செய்கின்றனர். இதற்காகவே BTCGuild, deepbit போன்ற குழுக்கள் இயங்குகின்றன, அவற்றில் பதிந்து கொண்டு உங்கள் கணினியையும் இணைத்துவிட வேண்டியது. ஒவ்வொரு முதல் கணிப்புக்கும் வரும் 25 பிட்காயின்களை அவர்களுக்குள் பிரித்துக்கொள்கிறார்கள்.

*      இப்படி உருவாக்கப்படும் பிளாக் செயின் அதி பாதுகாப்பாக இருக்கிறது. அதில் எங்கு நடந்த பரிமாற்றத்தையும் யாரும் மாற்ற முடியாது. எங்காவது ஒரு இடத்தில் கை வைத்தால் கூட அதற்கு பின் பிளாக் செயினில் உள்ள அத்தனையும் காலாவதியாகிறது. மேலும் தனி ஒருவரால் இந்த புதிர்களை தீர்ப்பது, தொடர்ந்து பிளாக்குகளை உருவாக்குவது போன்றவற்றை செய்யவே முடியாது. அதனால் யாராலும் இதை கட்டுப்படுத்தவும் முடியாது.

*      உண்மையில் மைனிங்கில் ஈடுபடுபர்களுக்கு இந்த சமாச்சாரங்கள் தெரிய வேண்டிய அவசியமில்லை. கணக்கு தொடங்கு, புதிர் தீர்க்க கருவியை வாங்கிப்போடு என்று இருந்தால் போதும். மிச்ச வேலைகளை கணினியே பார்த்துக்கொள்ளும்.

*      சரிபார்க்க ஆகும் பத்து நிமிடங்கள் என்பது இப்போதைக்கு இருக்கும் பிட்காயின் நெட்வொர்க்கின் சிக்கல் அளவுதான். நாளாக நாளாக இந்த சிக்கலின் அளவு அதிகரிக்கப்பட்டு கணிதப்புதிருக்கு விடை காண கூடுதல் நேரம் பிடிக்கும் – அதாவது புதிய பிட்காயின்கள் உருவாக்கப்படுவது மட்டுப்படும். மேலும் இன்று இருபத்தைந்து பிட்காயின்களாக இருக்கும் கூலி நான்கு வருடங்களுக்கு ஒருமுறை பாதியாக குறைக்கப்படும் (பிட்காயின் தொடக்கத்தில் கூலி ஐம்பது காயின்களாக இருந்தது)

*      இப்படி புதிதாக கிடைக்கும் பிட்காயின்களின் வேகத்தை மட்டுப்படுத்துவதன் மூலம் அதன் மதிப்பு அதிகரிக்கிறது. எப்படி அலுமினியம் சொற்பமாக கிடைத்த ஒரு காலத்தில் தங்கத்தை விட அது விலை அதிகமாக இருந்ததோ அது மாதிரி!

*      ஆனால் இப்படி உருவாக்கிக்கொண்டே போனால், நாளடைவில் எல்லாரும் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பிட்காயின்கள் சேகரித்து விடுவார்களே? அதற்குதான் பிட்காயின் ஆரம்பிக்கப்பட்ட போதே மொத்தமாக 2.1 கோடி பிட்காயின்கள் மட்டுமே உருவாக்கப்படும் என்று நிர்ணயிக்கப்பட்டது. இது போதுமா என்பவர்களுக்கு, நாம் பைசா என்று சொல்வது போல் பிட்காயினில் சடோஷி என்று சொல்கிறார்கள். அதன் மதிப்பு 0.00000001 பிட்காயின். இப்படி ஒரு பிட்காயினையே பல கூறுகளாக பிரிப்பதால் இந்த எண்ணிக்கையே போதுமாம்.

*      நான்கு வருடங்களுக்கு ஒரு முறை குறைக்கப்படும் கூலி, அதிகரிக்கும் கணித புதிரின் சிக்கல் ஆகியவையால் அந்த உச்சபட்ச அளவை எட்டிப்பிடிப்பது 2140 ஆம் ஆண்டில் தான் முடியும் என்று சொல்லப்படுகிறது.

*      அதன்பிறகு முழுக்க முழுக்க வாங்குபவரும் விற்பவரும் கொடுக்கும் கூலி மூலமாகவே தொழிலாளிகள் இயங்க முடியும் (புது பிட்காயின் உருவாக்கம் நிறுத்தப்படுவதால்). அதனால் கூடுதல் கூலி கொடுப்பவர்களின் பரிவர்த்தனை முதலில் சரிபார்க்கப்படும். (இப்போதும் கூட இருபத்தைந்து பிட்காயின்கள் கூடவே விற்பவர்/வாங்குபவர் தங்களது பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் அளிக்க சிறிது கூலி கொடுப்பதுண்டு). ஆனால் இந்த கூலி நிச்சயம் வங்கிகள்/சேவைதாரர்களின் வரியை விட குறைவாகவே இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.

இப்படி ஒரு கருத்தாக முன்வைக்கப்படும் பிட்காயின், மாற்றங்கள் அடைந்து அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முறைமையாக கூட மாறலாம். இந்திய ரிசர்வ் வங்கியும் ‘ஏற்கனவே ஸ்திரத்தன்மையின்றி இயங்கும் பொருளாதாரத்தில் இதை வேற தலையில் போட்டுக்கொள்ளாதீர்கள்’ என்கிற ரீதியில் சொல்லிவிட்டது. அதாவது ‘வேண்டுமென்றால் உபயோகித்துக்கொள், பிரச்சினை என்றால் என்னை கேட்காதே’ மாதிரி. அதன் கூற்றில் நியாயம் உண்டு. 2013இல் ஒரு பிட்காயினின் மதிப்பு 16000 ரூபாய்! ஆனால் அடுத்த நாளே ஒரு ரூபாய் ஆனாலும் யாரை போய் கேட்பது?. அதுமட்டுமில்லாமல் இதற்கு இவ்வளவு மதிப்பு இருக்கிறது என்கிற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கும் வரைதான் அந்த மதிப்பு தக்கவைக்கப்படும் (இது எல்லா பண்டங்களுக்குமே பொருந்தும்).

செய்துவிட்ட ஒரு பரிவர்த்தனையை திரும்பப்பெறுவது என்பதும் இங்கு நடக்காது. சொல்லப்போனால் இதை அடிப்படையாகக்கொண்டு தான் பிட்காயினை உருவாக்கினார் சடோஷி. செந்திலாக பார்த்து ‘நீ தெரியாமல் கூடுதலாக அனுப்பிவிட்டாய்’ என்று கவுண்டமணிக்கு பிட்காயின்களை திருப்பிக் கொடுத்தால்தான் உண்டு.

மேலும் யார் விற்கிறார்கள், வாங்குகிறார்கள் என்பது தெரியாது என்பதால் லஞ்சம், சட்டத்திற்கு புறம்பான விஷயங்களின் வியாபாரம் (போதைப் பொருட்கள், ஆயுதங்கள்) போன்றவை பெருகக்கூடும். கணினியில்/மொபைலில் மட்டும் வைத்திருப்பதால், அதில் ஏதாவது கோளாறு வந்தாலோ யாராவது ஹேக் செய்தாலோ மொத்தமும் போய் விடும் (இதை தடுக்கமுடியும்). சமீபத்தில் திவாலான பிட்காயின் இணையச்சந்தையான Mt.Gox, ஹேக்கிங் முறையில் பல்லாயிரக்கணக்கான பிட்காயின்கள் திருடுகொடுத்தது.

விக்கிபீடியா முதன்முதலில் வந்தபோது உலகம் முழுக்க இருக்கும் பயனர்கள் அவர்களாகவே தகவல்களை உருவாக்கி. மட்டறுத்து அறிவுக்களஞ்சியத்தை உருவாக்குவார்கள் என்று கருத்தை முன்வைத்தது. அப்படி ஒரு ஐடியா சாத்தியமே இல்லை, உருவாக்கப்படுவதும் பொய்க்களஞ்சியமாகத்தான் இருக்கும் என்று சொன்னவர்களே அதிகம். ஆனால் அதை மீறி இன்று கற்பனைக்கெட்டாத அளவில் தகவல்களை அள்ளித்தருகிறது விக்கிபீடியா. தொழில்நுட்பத்தில் எது எப்போது சூடு பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் பிட்காயின் வருங்காலத்தின் நடைமுறையாக வருகிறதோ இல்லையோ, அதைப்பற்றி இப்போதைக்கு தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. அதை வைத்து விளையாடுபவர்களை இப்போதைக்கு பார்வையாளர் அரங்கில் இருந்து வேடிக்கை மட்டும் பார்க்கலாம்.



முழுதும் படிக்க..

Mar 9, 2014

கிராவிட்டி - ஈர்த்தது ஏன்?

"விமர்சனம் எழுதி என்ன செய்யப்போகிறோம்? சும்மாவே இருக்கலாம்.
சும்மா இருந்து என்ன செய்யபோகிறோம்? விமர்சனம் செய்யலாம்"

எனது திரைப்படப் பார்வைகளை தொடர்ந்து வாசித்து வரும் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும், நான் படத்தின் கதையினை விவரிப்பதில்லை. படத்தில் என்னை கவர்ந்தவற்றை பற்றி மட்டுமே சிலாகிப்பது வழக்கம். இந்த படம் என்னை ரொம்பவே 'ஈர்த்துவிட்டது'. விண்வெளி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருக்கும் ஒரு சிறுவனுக்குரிய ஆர்வமும் ஒரு காரணம்.

*கதை உண்டு, விருப்பமில்லையேல் மேலே படிக்க வேண்டாம்*

'என்னை எல்லாருக்கும் பிடிக்கும்' என்பது போல் அமைக்கப்பட்டிருக்கும் கொவால்ஸ்கியின் கேரக்டர், எனக்கும் ரொம்பவே பிடித்தது. நூலிழையில் (literally) அண்டத்தில் தவறிப்போகும் அவர் திரும்பி வரவேண்டும், வந்துவிடுவார் என்று ரொம்பவே எதிர்பார்த்தேன். ஆனால் அந்த கனவுக்காட்சி மட்டும் நிஜமாகயிருந்தால் இது ஒரு மிகச்சாதாரண ஹாலிவுட் மசாலாவாகி இருக்கும். அவர் கைவிட்டு நழுவும் காட்சியில் தன்னை காப்பாற்றிக்கொள்ள இன்னும் கொஞ்சம் முயன்றிருக்கலாம் என்று தோன்றியது.
(அந்த காட்சியை அண்டக்குழம்பில் வெண்டைக்காய் ஆனார் என்று எழுதலாம் என்று யோசித்து பின்னர் கைவிட்டேன்)

அந்த கனவுக்காட்சி எத்தனை நிஜம்? பெரும் இடர்களை சந்திக்கும்போது இப்படி கனவுகள் எனக்கு எப்போதுமே வருவதுண்டு. கனவில் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடும். விழித்து பார்த்தால் எல்லாம் அப்படியேதான் கிடக்கும். ஆழ்மனம் தரும் சில நிமிட திருப்தி பிளஸ் நம்பிக்கை!

இது தேவையில்லை. இருந்தாலும் இந்த கோணத்தில் படத்தை அணுகுவதிலும் தவறில்லை. படம் தாய்மை பற்றிய குறியீடுகள் வெளிப்படையாகவே கொண்டுள்ளது (உதா. சாண்ட்ராவின் கருப்பை குழந்தை போஸ் + தொப்புள் கொடி காட்சி). படம் தாய்மையின் மகத்துவத்தை, குழந்தையை மண்ணில் கொண்டுசேர்க்கும் போராட்டத்தை குறிக்கிறதா? Happy Women's Day.

அவ்வபோது தோன்றும் பளிச் நகைச்சுவை காப்பியடிக்க உரியது. பேரிடர் காலங்களில் கூலாக சமாளிப்பது எப்படி என்று கொவால்ஸ்கியிடம் கற்றுக்கொள்ளலாம். கடைசியில் அவரின் 'Sun over the Ganges' சிலாகிப்பில், அந்த ரணகளத்திலும் ஒரு தேசப்பாச புல்லரிப்பு எனக்கு.

பார்வையாளரை விண்வெளி பயணம் செய்ய வைப்பதே படத்தின் பெரிய குறிக்கோள். அதில் வென்று விட்டார்கள். மற்றும் தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் (Houston) குரலாக ஒலிக்கும் Ed Harris - Apollo 13 படச்சம்பந்தம் பற்றி ஏற்கனவே தேவையான அளவு சிலாகிக்கப்பட்டு விட்டது. இன்னுமா அவர் அங்கிருந்து ரிட்டையர் ஆகவில்லை என்று எனக்கு தோன்றியது..

வழக்கமாக ரஷ்யா, சீனாக்காரர்களை இவர்களின் பராக்கிரமத்தால் காப்பாற்றுவார்கள். (ரஷ்ய செயற்கைக்கோள் வெடிப்புதான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லியிருந்தாலும்) இதில் அவர்களின் விண்கலன்கள் உதவியுடன் சாண்ட்ரா தப்பிப்பது அயர்ச்சி தராத ஆரோக்கிய போக்கு (எகனை மொகனை அட்ராசிட்டியை கவனிக்கவும்).

கவர்ந்த மற்ற விண்வெளி திரைப்படங்கள்:
2001 A Space Odyssey
Apollo 13
Interstellar (Mark my words மாதிரி இப்போதே எழுதிவைத்துக்கொள்கிறேன்)

Sunshine, The Moon, Wall-E, Alien போன்ற படங்கள் ஆங்காங்கே ஈர்த்தது. ஸ்டார் வார்ஸ், ஸ்டார் ட்ரெக் போன்று பெரிதும் சிலாகிக்கப்படும் கதைகளில் இன்னும் நான் மூழ்கவில்லை


முழுதும் படிக்க..

Mar 8, 2014

சன்னு குட்டியின் டெடி பொம்மை

சன்னு குட்டி பள்ளிக்கூடத்துக்கு பாட்டி கூட ஆட்டோல டுர்ர்ர்னு போயிட்டு இருந்தான். வழில வர்ற கடை, குளம்னு வேடிக்கை பாத்துட்டே வந்தான். அப்போ திடீர்னு ஆட்டோ பக்கத்துல ரெண்டு காக்கா பறந்து வந்து 'சன்னு குட்டி நில்லு நில்லு'னு கத்துச்சாம். ஆட்டோ அண்ணா கிட்ட வண்டிய நிறுத்தச்சொல்லிட்டு சன்னு கேட்டானாம் 'என்ன காக்கா எதுக்கு பள்ளிக்கு போகும் போது நிக்கச்சொல்ற? நேரம் ஆகுதுல்ல? சீக்கிரம் சொல்லு'.

அதுக்கு காக்கா சொல்லுச்சாம்.. 'நம்ம டெடி பேர் வீட்டுல யார்கிட்டயும் சொல்லாம வெளில வந்துச்சு, அத நரி தூக்கிட்டு போயிடுச்சு. சீக்கிரம் வா' அப்படின்னுச்சாம்.

'டெடி அப்படி சொல்லாம போகாதே? ஆட்டோவ திருப்புங்க'
'காக்கா, நரி போன இடத்த ஆட்டோ அண்ணாக்கு வழி காட்டு ப்ளீஸ்' அப்படின்னு சொல்லிட்டு வேகமா வண்டில ஏறி உக்காந்தான் சன்னு.

காக்கா முன்னாடி வழி காட்டிகிட்டே போக, பின்னாடி ஆட்டோல சன்னு வந்து நரியோட இடத்துக்கு வந்து பாத்தா.....

நரி டெடி பொம்மையை பத்திரமா வீட்டுல வச்சி ஜூஸ் கொடுத்துக்கிட்டு இருந்தது.

'நரி, ஏன் டெடியை தூக்கிட்டு வந்தீங்க?' அப்படின்னு கேட்டான் சன்னு.

அதுக்கு நரி 'டெடி வழி தெரியாம சுத்திட்டு இருந்தான், அதான் இங்க பத்திரமா வச்சு அப்புறமா உங்க வீட்டுல விடலாம்னு வச்சிருக்கேன்'

'ஓ அப்டியா? ரொம்ப நன்றி.. டெடிய இப்போ நான் கூட்டிட்டு போறேன்' னு சொல்லி வீட்டுல பத்திரமா அவனோட இடத்துல டெடிய வச்சிகிட்டான் சன்னு. 'இனி யார்கிட்டயும் சொல்லாம எங்கயும் போகக்கூடாது சரியா?'அப்படின்னு டெடி கிட்டயும் சொல்லி கொடுத்துட்டான்.

அன்னைல இருந்து சன்னுவும் நரியும் பெஸ்ட் பிரண்ட்ஸ் ஆகிட்டாங்க!


முழுதும் படிக்க..