Nov 13, 2013

பிரசுரமான படைப்புகள்..

வேறு தளங்களிலும், அச்சிலும் வெளிவந்த எனது படைப்புகள் சில.. ஒரு தொகுப்பிற்காக..

முட்டை (சிறுகதை மொழிபெயர்ப்பு) by Andy Weir (The Martian novelist)
பதாகை (ஜனவரி 2016)
பதாகை இணைய இதழ்


வால்விழுங்கி நாகம் (அறிவியல் புனைவு)
சொல்வனம் (நவம்பர் 2014)
http://solvanam.com/?p=37142


சக்கரம் (அறிவியல் புனைவு)
தினமலர் (ஆகஸ்ட் 2014)
http://www.dinamalar.com/E-malar.asp?ncat=787#top


இரண்டாவது முகம் (புத்தக மதிப்புரை)
மதிப்புரை.காம் (நவம்பர் 2014)
http://mathippurai.com/2014/11/04/second-face/


தகவல் தொழில்நுட்பத் துறை : உள்ளும் புறமும் (கட்டுரை)
ஆழம் இதழ் (ஜூலை 2014):
http://www.aazham.in/?p=4118


பிட்காயின் என்றொரு அதிசயம் (கட்டுரை)
ஆழம் இதழ் (மார்ச் 2014):
http://www.aazham.in/?p=3868


நான் ஈ ரீடர் (ஈ புத்தக ரீடர்கள் பற்றிய அறிமுகக்கட்டுரை)
ஆழம் இதழ் (ஜனவரி 2014):
http://www.aazham.in/?p=3769


மங்கள்யான் : செவ்வாய் செல்லும் இந்தியன் (கட்டுரை)
தமிழ்பேப்பர் (நவம்பர் 2013)
http://www.tamilpaper.net/?p=8413


வாயேஜர் - முடிவில்லா பயணி (கட்டுரை)
கீற்று (அக்டோபர் 2013)
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=25195:2013-10-16-07-56-54&catid=20:space&Itemid=106


திருத்தகம் (சிறுகதை)
திண்ணை (ஆகஸ்ட் 2011)
http://puthu.thinnai.com/?p=3594


85-65-75 : கதை... ஆனால் கதை இல்லை! (சிறுகதை மாதிரி)
யூத்புல் விகடன் (2009)
http://tamilkothu.blogspot.com/2009/12/85-65-75.html


முதல் வேலை (அனுபவம்)
யூத்புல் விகடன் (2010)
http://tamilkothu.blogspot.com/2010/03/blog-post_25.html


வலைபாயுதே (ட்வீட்ஸ்)
ஆனந்த விகடன் (2010)
http://tamilkothu.blogspot.com/2010/10/blog-post.html


குள்ள மனிதன் (ஃபேண்டசி சிறுகதை)
கோகுலம் (1996?)
பதிப்பு கைவசம் இல்லை

முழுதும் படிக்க..

மங்கள்யான் - செவ்வாய்க்கு செல்லும் இந்தியன்

செவ்வாய் கிரகத்துக்கு (Mars) 'ராக்கெட் விடுவது' என்பது அத்தனை அபூர்வமான செய்தியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதை இந்தியா அனுப்புகிறது என்பது பெருஞ்செய்தி. இதுவரை அந்த கிரகத்தை அடைய எடுத்த நாற்பதுக்கும் மேற்பட்ட முயற்சிகளில் பாதிக்கும் மேல் தோல்வி என்பதும் இத்திட்டத்திற்கு கூடுதல் கவனத்தை ஏற்படுத்தி விட்டது. இத்தனைக்கும் அனுப்பியவர்கள் அனைவரும் விண்வெளி ஆராய்ச்சியில் நம்மை விட முன்னேறியவர்கள்.

ஒப்பு நோக்கு அளவில் மற்ற நாடுகளின் மார்ஸ் திட்டங்களை விட, நமது மங்கள்யான் குறைந்த செலவில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் நாசாவும் செவ்வாய்க்கு MAVEN என்கிற விண்கலத்தை அனுப்புகிறது. கிட்டத்தட்ட இந்தியாவின் (450 கோடி) செலவை விட பத்து மடங்கு அதிகம் எப்படி விண்கலத்தை குறைந்த செலவில் செவ்வாய்க்கு கொண்டு சேர்க்கப்போகிறது இஸ்ரோ? 

வேகப்பந்து வீச்சாளர் போடும் பந்தில் இருக்கும் வேகம் போல், பிரபஞ்சமே நமக்கு அபிரிமித சக்தியை வழங்கி உள்ளது. அந்த சக்தியை திறமையான பேட்ஸ்மேன் போல் உபயோகித்து பந்தை இலக்குக்கு அனுப்பவேண்டும். இங்கு நாம் உபயோகிக்கபோவது பூமியின் ஈர்ப்பு சக்தியை. இதை விளக்க மற்றொரு விளையாட்டை துணைக்கு அழைப்போம். வட்டெறிதல் தெரியுமா? Discus Throw என்று 'தமிழில்' சொல்வோமே? அதை கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த வீரர்கள் சில தடவைகள் சுழன்று, ஒவ்வொரு சுற்றுக்கும் வேகம் பெற்று கடைசி சுற்றில் வட்டை அப்பால் எறிவார்கள். கீழே இருக்கும் படத்தில் கிருஷ்ணா பூனியா தான் பூமி. வட்டு தான் மங்கள்யான்.



ஆக PSLV ராக்கெட்டை கொண்டு விண்கலத்தை பூமியின் சுற்றுப்பாதையில் தான் இப்போது சேர்த்திருக்கிறோம், அதற்கு மேல் அனுப்புவது பூமியின் சக்தி மற்றும் கலத்திலேயே இருக்கும் சிறிய எஞ்சின்+எரிபொருள். ஒவ்வொரு சுற்றுக்கும் கலத்தில் இருக்கும் எரிபொருளை கொண்டு கலத்தின் சுற்றுப்பாதையை விரிவாக்க (அதாவது) வேகத்தை அதிகரிக்க சின்ன திருத்தம் செய்யப்படும் - கடைசி சுற்றில் செவ்வாயை நோக்கி மங்கல்யானை கடாசிவிட வேண்டியது. கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும் இது மிக சிக்கலான விளையாட்டு - நவம்பர் இறுதியில் இதன் முடிவு தெரியும். இதற்கு மாறாக நாசா அனுப்பும் ராக்கெட்டோ சக்தி வாய்ந்தது - நேரடியாக செவ்வாய்க்கு செல்லும் பாதையில் கலத்தை செலுத்தி விடுகிறது. அதனால் அதிக செலவு, ஒப்பீட்டளவில் சுலபமானது (நாசாவின் அதிக செலவுக்கு வேறு சில காரணிகளும் உண்டு).

இந்த முதல் வெற்றியை விட முக்கியமான வெற்றி செவ்வாயை நெருங்கும்போது தேவைப்படுகிறது. விண்கலத்தை செவ்வாயின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்துவது என்பது அத்தனை சுலபம் அல்ல. கிரிக்கெட்டில் wide ball மாதிரி விண்கலம் செவ்வாயின் கையில் சிக்காமலே போய் விடக்கூடும்; ஒரே வித்தியாசம் இங்கு பவுண்டரியே கிடையாது (ஜப்பானின் கலம் இப்படித்தான் வழுக்கிக்கொண்டு செவ்வாயை கடந்து சென்று விட்டது). மேலும் கதிர்வீச்சுகளால் விண்கலத்திற்கு பாதிப்புகள் வரக்கூடும். பத்து மாதங்கள் அண்டத்தின் குளிரில் பயணித்த பிறகு, கலத்தின் இயந்திரங்கள் மீண்டும் ஒழுங்காக உயிர் பெற வேண்டும். இப்படி பல 'டும் டும் டும்'கள். இதன் முடிவு Sept. 24, 2014 அன்று தெரிந்துவிடும்.

எதற்கு இத்தனை சிரமப்பட்டு அனுப்புகிறோம்? செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் எப்படி இல்லாமல் ஆனது, உயிர்கள் இருப்பதற்கு அறிகுறியான மீத்தேன் உண்டா, மண் மற்றும் கனிம வளங்களை அளப்பது போன்ற ஆராய்ச்சிகளை மங்கள்யான் மேற்கொள்ளும். ஆனால் மற்ற கிரகங்களுக்கு விண்கலன்களை அனுப்பும் அந்த மாபெரும் ஞானம் - அதை வளர்த்துக்கொள்வது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். டூர் போய் விட்டு கேமரா இல்லை என்றால் எப்படி? மங்கல்யானில் ஒரு கலர் கேமராவும் உண்டு. இந்த உபகரணங்களின் மொத்த எடையே பதினைந்து கிலோதான். இவை தங்களுக்கு தேவையான மின்சக்தியை சூரிய ஒளியில் இருந்து பெற்றுக்கொள்ளும்.

எப்படி தரையில் இருந்துகொண்டு கலத்தை இயக்கப்போகிறோம்/செய்திகளை பெறப்போகிறோம்? பெங்களூர் தான் தலைமை கட்டுப்பாட்டகம். அதனருகே உள்ள deep space network (பெரீய்ய ஆண்டனாக்கள்) மற்றும் தரைக்கட்டுப்பாட்டு அறைகளுடன் இதற்காகவே பிஜி  தீவுக்கருகே இரு கப்பல்கள் தேவையான இயந்திரங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாசாவின் deep space network-ம் இதில் நமக்கு சிறிது உதவ போகிறது. கட்டளைகளை கலத்திற்கு பிறப்பித்துவிட்டு, அதன் முடிவு நமக்கு தெரிய 6-45 நிமிடங்கள் வரை ஆகலாம். மிக மெதுவான இணைய இணைப்பு உள்ள கணினியில் ஒரு லின்க்கை அமுக்கி விட்டு அந்த வலைத்தளம் திரையில் தோன்றும் வரை திட்டிக்கொண்டே காத்திருப்போமே, அது மாதிரி. இதனாலும் கூடுதல் சிக்கல்கள்.

இப்போதுதான் நாம் நிலவையே நெருங்கினோம். அதற்குள் கடினமான செவ்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதுவும் இத்திட்டம் பிரதமரால் அறிவிக்கப்பட்டது 2012ல். அதன்பிறகு ஒரே வருடத்தில் செயற்கைக்கோள் தயார்! ஏன் இந்த அவசரம்? சீனாவின் சமீபத்திய செவ்வாய் திட்டம் தோல்வி, அதனால் கூட நாம் வேக வேகமாக அனுப்பி அவர்களை முந்துகிறோம் என்று ஒரு கருத்து. இது cold war டைப் சண்டைகளை விரும்பும் மேலை நாடுகளால் சொல்லப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அரசால் இது ஒரு சாதனையாகக்கூட காட்டப்படக்கூடும். ஆனால் இதெல்லாம் பல ஆண்டுகள் முன்னமேயே தொலைநோக்காக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது, மற்ற நாடுகளின் திட்டங்களோ, தேர்தல்களோ நம் திட்டங்களை மாற்றி அமைக்க முடியாது என்று ISRO கூறுகிறது ('நமக்கு நாம்தான் போட்டி').

இந்தியாவை பொறுத்தவரை இது ஒரு 'காஸ்ட்லி' திட்டம்தான். இந்த பணத்தில் நிச்சயம் சுகாதாரமான கழிவறைகளை கட்டமுடியும். பாதாள சாக்கடைகளை சுத்தப்படுத்தும் கருவிகளை கண்டுபிடிக்கலாம். இவை ஒரு செயற்கை கோளை விட முக்கியமும் அவசியமும் கூட. ஆனால், எது முக்கியம் என்பதை விட எது அவசியம் என்பதில் இதற்கு ஒரு விடை கிடைக்கக்கூடும். பல ஆயிரம் கோடிகளை கொட்டி சிலைகளை வைப்பது, உயிர்களை கொல்லும் ஆயுதங்கள் தயாரிப்பது போன்ற தேவையில்லாத திட்டங்களில் போடப்படும் பணத்தை, மனிதனின் அறிவை பல மடங்கு பெருக்கும் ஒரு விஞ்ஞான முயற்சியில் போடுவது நல்லது அல்லவா? செவ்வாய் என்பது நிச்சயம் அடைய வேண்டிய, பெருமையான ஒரு இலக்கு. பிரபஞ்சத்தை அளக்க சந்திராயான் நாம் வைத்த முதல் அடி. மங்கள்யான் இரண்டாவது.

நன்றி:
http://www.isro.org/mars/home.aspx
விக்கிபீடியா


(தமிழ்பேப்பர் இணையதளத்தில் வெளிவந்த கட்டுரை)
(திருத்தப்படாதது)


முழுதும் படிக்க..

Nov 1, 2013

வாயேஜர் - முடிவில்லா பயணி

குழந்தையின் அழுகை. முத்தச்சத்தம். ஐம்பத்தைந்து மொழிகளில் வாழ்த்து செய்தி. திமிங்கலம் கத்தும் ஓசை. இதனுடன் மொசார்ட் (Mozart) போன்றோரின் இசை.

தொலைக்காட்சியை வேகமாக மாற்றும்போது கேட்பது போல், மேலே சொல்லப்பட்ட சம்பந்தம் இல்லாத ஒலிகள் ஒன்றாக பதிவு செய்யப்படுகிறது. அதுவும் தங்கமுலாம் பூசிய கிராமபோன் ரெக்கார்ட் போன்ற தகடுகளில். யாருக்காக? அத்தனை விசேசமா அந்த நபர்?

1977-ல் அமெரிக்கா ஏவிய செயற்கை கோளான வாயேஜரில் இந்தத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. பல்லாயிரம் வருடங்கள் கழித்து இந்த ஓசைகளை கேட்கப்போகும் நபர் கேவலமான தோற்றம் கொண்ட ஒரு வேற்றுகிரகவாசியாக இருப்பார் என்பது நம்பிக்கை. பூமி, மனிதகுலத்தின் தோற்றம்/வளர்ச்சி பற்றி, மேலும் தகட்டை எப்படி இயக்குவது போன்ற தகவல்களும் அதிலேயே உண்டு.

பெரும் பயணம்:
1970-களில் பெரும் பயணம் என்ற நாசாவின் திட்ட நோக்கம் சூரிய குடும்பத்தின் வெளிப்பகுதிகளை ஆராய்வது. எழுபதுகளின் பின் பகுதியில் யுரேனஸ், வியாழன், சனி, நெப்ட்யூன், ப்ளூட்டோ போன்ற கிரகங்கள் சீரான வரிசையில் அமையும் அரிய நிகழ்வு விண்வெளியில் நடந்தது (அஜீத்தும் விஜய்யும் சந்தித்துக்கொள்வதை போல் அரியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்). அந்த படிக்கட்டு போன்ற வரிசையை சரியாக உபயோகித்தால், உண்டிவில்லில் கல்லை வைத்து அடிப்பது போல் குறைந்த சக்தியில் செயற்கைகோளை எளிதில் மிக அப்பால் அனுப்பலாம். ஆனால் பணப்பற்றாக்குறையால் அந்த திட்டம் முழு வெற்றியடையவில்லை. ஆனால் அதன் பயனாக நமக்கு கிடைத்தது வாயேஜர் திட்டம், முந்திரி ஸ்வீட் வாங்க போய் காசில்லாமல் பால் ஸ்வீட் வாங்கிய மாதிரி..


1977-ல் வாயேஜர் 1, 2 என்று சிறிய அளவு காரின் எடை கொண்ட இரட்டை விண்கலன்கள் முதலில் ஏவப்பட்டது வியாழன் மற்றும் சனியை ஆராய. அனுப்பிய வேலை முடிந்ததும் அப்படியே விட்டு விடாமல், 'இவனெல்லாம்  அப்படியே போக விட்றணும்' என்று அதற்கு மேலும் பயணிக்க விட்டு விட்டார்கள். சனி பார்வை பட்டால் ஆகாது என்று இங்கு ஒரு மூட நம்பிக்கை. வாயேஜர் இரட்டையர்கள் சனியையே பார்த்துவிட்டு அப்பால் கிளம்பியவர்கள். 

இந்த இரு கலன்களும் சேகரித்த, சேகரித்துக்கொண்டிருக்கும் தகவல்கள் இதுவரை ஏவப்பட்ட செயற்கை கோள்களிலேயே அதிக உபயோகமாக இருப்பவை. சனியின் வளையங்களை பற்றி, வியாழனுக்கும் (யுரேனஸ்/நெப்ட்யூன்-க்கும் கூட) வளையங்கள் உண்டு, யுரேனஸ்/நெப்ட்யூன் போன்ற கிரகங்களின் காற்றுவெளி, வியாழனின் துணை கிரகமான ஐயோ (Io)வில் எரிமலை உண்டு போன்ற என்னற்ற செய்திகளை நமக்காக கொடுத்தன இந்த கலன்கள். 1990 வாக்கில் வாயேஜர்1-ன் கேமராவை திருப்பி எடுக்கப்பட்ட சூரியக்குடும்ப புகைப்படம் மிகவும் பிரபலம். பூமி அதில் ஒரு நீலப்புள்ளி.

அது இருக்கட்டும். முப்பத்தைந்து வருடங்கள் கழித்து இப்போது என்ன வந்தது வாயேஜருக்கு? மனிதன் செய்த பொருட்களிலேயே அவனிடமிருந்து மிகத்தொலைவில் இருக்கும் பொருள் வாயேஜர் - நமது சூரிய குடும்பத்தின் எல்லையை தாண்டும் முதல் மனித சகவாசம் கொண்ட பொருள் அதுவே! சென்ற வருடம் அந்த எல்லையை தாண்டி, நட்சத்திரங்களுக்கிடையில் இருக்கும் வெளியில் தற்போது பயணித்துக்கொண்டு இருக்கிறது. ஹீரோயின் வீட்டை விட்டு ஓடி போய் கொஞ்சம் லேட்டாக தெரிந்து துரத்த ஆரம்பிப்பார்களே, அது மாதிரி எல்லையை தாண்டிவிட்டது என்று நமக்கு தெரிந்தது இப்போதுதான்.

தங்கத்தகடு:
முதலில் சொன்ன அந்த தகட்டை பற்றி பல ரசிக்கக்கூடிய தகவல்கள் உண்டு. பூமியை பற்றியும் மனிதர்களை பற்றியும் வேற்று ஜீவன்களுக்கு தெரிவிக்க முனையும் இந்த 'காலப்பெட்டி'யில் மனிதனின் தோற்றம்/வளர்ச்சி போன்றவற்றை விளக்கும் 115 படங்கள், இந்திய சங்கீதம் உட்பட பல நாட்டுக்கலைஞர்களின் இசைக்கோர்வைகள் ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள் சொல்லப்பட்ட ஐம்பைத்தைந்து மொழிகளில் கன்னடம், தெலுங்கு போன்ற இந்திய மொழிகளும் உண்டு (தமிழ் இல்லை). அவைகளை இங்கு சென்று கேட்கலாம்: http://voyager.jpl.nasa.gov/spacecraft/greetings.html. அதே தகட்டில் இடம் பெற்றுள்ளார் பல்கேரிய நாட்டுப்புற பாடகர் வல்யா. அவர் நாட்டை சேர்ந்த பலரே அறியாத அவரின் குரல், பல்லாயிரம் வருடங்களாக அண்டத்தை சுற்றிக்கொண்டிருக்கும்!

இத்தகட்டை ஒருங்கிணைத்த குழுவின் தலைவர் உலகப்புகழ் பெற்ற அறிஞர் கார்ல் சாகன். இந்த கலன் எல்லையை தாண்ட நிறைய வாய்ப்புண்டு என்று பார்த்து பார்த்து தகவல்களை பதித்தவர். காசட்டில் பல படங்களில் இருந்து கலவையாக பிடித்த பாடல்கள் மட்டும் பதிவு செய்துகொண்டு திரிவோமே, அது மாதிரி (காசட்லாம் போன தலைமுறை ஆகிவிட்டதோ?).

அதன் உள்ளடக்கத்தை பலர் பாராட்டினாலும், 'இருக்கும் இடம் முதற்கொண்டு நம்மை பற்றி அத்தனை தகவல்களும் வேற்றுலகவாசிகள் தெரிந்து கொண்டால், நம்மை அவர்கள் அழிப்பதற்கு நாமே திட்டம் போட்டு கொடுப்பதாகாதா?' என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. வெளியாள் என்றாலே நம்மை அழிக்கத்தான் போகிறான் என்கிற மனித பயத்தில் இருந்து உருவாகும் எண்ணம் -பக்கத்து வீடு/ஊர், பக்கத்து நாட்டு மக்களை காரணமே இல்லாமல் எதிரியாக நினைக்கிறோமே? அது போல்.

கார்ல் சாகன் பதிலளிக்கிறார்:
"நாம் அன்றாடம் உபயோகிக்கும் தொலைக்காட்சி அலைகள் கொண்டு கூட நம் இருப்பிடத்தை எளிதில் கண்டுகொள்ளலாம்" (கொல்லலாம் இல்லை); "அப்படி வருபவர்களிடத்தில் நட்பாக இருக்க நாம்தான் கொஞ்சம் முயல்வோமே?"
மேலும், "இந்த தகட்டை படிக்க 'அவர்கள்' கொஞ்சமேனும் முன்னேறியிருக்க வேண்டும். ஆனால் இந்த பாட்டிலை விண்வெளிக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் இப்புவியின் உயிர் பற்றிய மிக நம்பிக்கையான ஒரு செய்தி அறிவிக்கப்படுகிறது அல்லவா?"

பயண முடிவு?
இப்போது வாயேஜரின் கேமராக்கள் அனைத்து வைக்கப்பட்டுள்ளன. ஏன்? சுற்றுலா போய் விட்டு எப்போது நாம் போட்டோ பிடிப்பதை நிறுத்துவோம்? அதேதான். பேட்டரி பிரச்சினை. மினி ப்ளூட்டோனியம் ரியேக்டர்கள் மூலம் கிடைக்கும் சொற்ப சக்தியை கொண்டு தற்போது இயங்கும் வாயேஜர், இன்னும் 12 ஆண்டுகளில் சுத்தமாக சார்ஜ் இல்லாமல் போய்விடும். அதனால் முடிந்தளவு தேவை இல்லாத சாதனங்களை அணைத்து வைத்துவிடுகிறார்கள். சில அதுவாகவே செயலற்று போய் விட்டது; Cosmic Ray System போன்ற சாதனங்கள் பிரதிபலன் பாராமல் இன்னும் உழைக்கிறது. மின்சக்தி எல்லாம் தீர்ந்து போய் அதற்கும் மனிதனுக்கும் நடக்கும் கடைசி பரிவர்த்தனை 2025 வாக்கில் இருக்கும். அதற்கு பிறகு நாம் இருப்போமோ இல்லையோ, பல ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வருடங்களுக்கு வாயேஜர் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

நன்றி/ஆதாரம்: http://voyager.jpl.nasa.gov/


(கீற்று தளத்தில் வெளிவந்த கட்டுரை)
முழுதும் படிக்க..

Oct 14, 2013

அழிந்து போன உலகம்

GD 61 என்று ஒரு நட்சத்திரம் இருந்தது. நமக்கு நூற்றைம்பது ஒளி வேக தூரத்தில். அதை சுற்றிக்கொண்டு இருந்த கிரகங்களில் அளவுக்கதிகமாக, பூமியை விட அதிகமாக, தண்ணீர் இருந்தது. நிச்சயம் உயிர்களும் இருந்திருக்கும். ஆனால், அந்த GD 61 நட்சத்திரத்தின் ஆயுட்காலம் ஒரு கட்டத்தில் முடிந்தது. பொதுவாக ஒரு நட்சத்திரம் அழிந்தால், அது அளவில் பெருமளவு உப்பி, அருகில் இருக்கும் அனைத்தையும் அழிக்கும் (Red Giant). (தெரிந்தேதான் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்று பெயர் வைத்தார்களா?). பிறகு எஞ்சி இருப்பவையை தன்னை நோக்கி அதி வேகத்தில் இழுத்து கொல்லும். பின்பு மிகவும் குறுகி, சாந்தமடைந்து வெண் குறுமீன் ஆகும் (White Dwarf). இது விண்மீனின் கடைசி கட்டம்.

சூரியன் அழியும்போதும் அதே கதைதான் நடக்கும். ஆனால் அது நடக்க ஆறு பில்லியன் வருடங்கள் இருக்கிறது. நம்மையே அழித்துக்கொள்ள அல்லது தப்பி ஓட இந்த அவகாசம் ரொம்பவே அதிகம்..

சரி பேச வந்த செய்திக்கு திரும்புவோம், அப்படி ஒரு அழிவின் இறுதியில் இருக்கும் விண்மீன், முதலில் பேசினோமே அதேதான் - அந்த வெண்மீன் அழியும் போது நிறைய தண்ணீர் இருந்த கிரகத்தையும் சேர்த்து இழுத்துவிட்டது.. அந்த கிரகம் சுக்கலாக உடைந்து  'மணாளனே மங்கையின் பாக்கியம்' என்று தன்னை அழித்தவனையே இன்னும் விண்கல்லாக சுற்றிக்கொண்டு இருக்கிறது. அந்த கல்லை தான் இப்போது கண்டு பிடித்திருக்கிறோம்.



பூமியில் முதன்முதலில் ஒரு விண்கல்தான் தண்ணீரை கொண்டு வந்திருக்கும் என்று ஒரு வாதம் உண்டு. அந்த வாதத்திற்கு வலு சேர்க்கிறது இந்த கண்டு பிடிப்பு. நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே தண்ணீர்+ஆக்சிஜன்+பாறைப்பகுதிகளை கொண்ட ஒரு பொருள் இருப்பது தெரிய வந்துள்ளதும் இதுவே முதல் முறை.

சரி, அது என்ன சூரிய குடும்பத்துக்கு வெளியே முதல் முறை? நம்ம குடும்பத்தில் மட்டும் பூமியைத்தவிர்த்து தண்ணீர் இருக்கிறதா என்ன? ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. செரஸ் என்ற குறுங்கோள் (asteroid), வியாழனின் நிலவான யூரோப்பா மற்றும் சனியின் என்செலாடஸ் ஆகிய இடங்கள் பனிப்படர்ந்து காணப்படுகிறது - அதனடியில் தண்ணீரும் இருக்கக்கூடும்.

செரஸ்-க்கு தற்போது போய்க்கொண்டு இருக்கும் நாசாவின் Dawn செயற்கைக்கோள் நமக்கு நல்ல செய்தி ஏதாவது தருமா என்று பார்ப்போம். அது 2015ல் அங்கு போய் சேரும்.

நன்றி/ஆதாரம்:
http://www.space.com/23149-watery-asteroid-habitable-planets-white-dwarf.html


குறிப்பு: இனி இந்த தளத்தில் அறிவியல் கட்டுரைகள், மாணவர்களை நோக்கிய விஷயங்கள் இடம்பெறும். அடிக்கடியா? அவ்வபோது என்று சொல்லி வைப்போம்.


முழுதும் படிக்க..

Oct 12, 2013

கடலை

அவன்: பரவால்லையே? பப்லாம் போறியா?

அவள்: எஸ். பட் தண்ணிலாம் அடிக்க மாட்டேன்.. நல்லா சுத்துவோம் நாங்க. போன வாரம் கூட ஈசிஆர் போயிட்டு நைட்டு புல்லா ஆட்டம்..

அவன்: குட்.. ஐ ரியலி லைக் யுவர் Progressive மைண்ட்செட்..

அவள்: நான் கூட நீ ஒரு பழைய ஆளோன்னு பயந்தேன்.. பரவால்ல.. ஹே நீ தண்ணி அடிப்பியா?

அவன்: எப்பவாச்சும் அடிப்போம்.. உனக்கு புடிக்காதா?

அவள்: சேச்சே.. பசங்கனா தண்ணி அடிக்கத்தான் செய்வாங்க.. இதெல்லாம் ஒரு விஷயமா..

அவன்: அதான.. அதுல என்ன இருக்கு.. வாரத்துக்கு ரெண்டு தடவ மட்டும் அடிப்பேன்..

அப்புறம் ஒரே லவ்ஸ்.. கொஞ்ச நாள் கழித்து, ரெண்டு பேரு வீட்லயும் 'அலையன்ஸ்' பாக்க ஆரம்பிக்க,.

அவள் வீட்டில்..
'என்னம்மா, எப்படி பையன் பாக்கலாம் உனக்கு?'
'குடி, சிகரட்னு இல்லாம, நல்ல வேலை இருந்தா போதும்பா'

அவன் வீட்டில்..
'எப்படி பொண்ணு புடிக்கும்டா உனக்கு?'
'வேலைக்கு போக வேணாம், வீட்லயே இருக்கட்டும்.. நல்ல ஹோம்லியா இருக்கணும்..'
முழுதும் படிக்க..