Mar 21, 2011

வலைப்பூவுக்கு எப்படி பெயர் வைக்க கூடாது?

சில வருடங்களுக்கு முன்..

சில பல வலைப்பூக்களை படித்து கொண்டிருந்துவிட்டு, சரி ஒன்றை ஆரம்பித்து விடுவோம் என்று முடிவு செய்தாயிற்று. ப்ளாகரில் லாகின் பண்ணி படிவ பூர்த்தியின் போது தான் உரைத்தது பெயர் ஒன்றை வைக்கணும் என்று. நாமதான் மெயின் மேட்டரை விட இந்த மாதிரி துணை பிரச்சினைகளுக்கு அதிக நேரம் ஒதுக்குபவராயிற்றே? எந்த பெயர் யோசித்தாலும் (புலம்பல்கள், கிறுக்கல்கள் இத்யாதிகள்) அதில் ஏற்கனவே யாராவது பதிவு செய்திருந்தார்கள். 'பூதம்', 'ரத்தக்காட்டேரி' உட்பட அனைத்தையும் பிடித்து வைத்திருந்தார்கள்.

சரி இப்போ வேண்டாம் என்று மூடி வைத்து விட்டு பெயர் யோசிக்க ஆரம்பித்தேன். அதோடு மறந்தேன். அடுத்த நாளும் படிவ பூர்த்திவரை யோசிக்காமல், அந்த நேரம் மட்டும் யோசித்ததில் ஒன்றும் தோன்றவில்லை.

அந்த நேரம் பார்த்து நண்பன் 'வாங்கடா, முனியாண்டி விலாஸ்கு சாப்பிட போகலாம்'. அந்த பெயரை கேட்டதும் மறுபேச்சில்லாமல் நானும் சுற்றி இருந்தவர்களும் கிளம்பினோம். பேசாமல் அந்த பெயரையே வைத்தால் என்ன? பொறுமை, பொறுமை.. யோசிப்போம்.


எங்களை பார்த்ததுமே மாஸ்டர் கல்லில் கொத்து குத்த ஆரம்பித்தார். கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் சிநேகமாக சிரித்தார் (நாங்கள் போக ஆரம்பித்த பிறகு அந்த கடையில் நிறைய மாற்றங்கள். டைல்ஸ் ஒட்டி, நெறைய Fan வாங்கி மாட்டி. மொத்தத்தில் சுபிட்சம்).

சூடாக கொத்து வந்தது. 'ஆயிரம் இருந்தாலும் கொத்து கொத்துதான்' என்றான் ஒருவன். தினம் இதை சாப்பிடுகிறோம், அலுக்கவில்லையே? அதுவும் பல வஸ்த்துக்களை போட்டு ஒன்றாக கலந்து, கொத்தி, சுவையாக பரிமாறுவதை பார்த்தால்........  மின்னல் வெட்டு!

திரும்பி ஆபிஸ் வந்து சேரில் உட்கார்ந்ததும் படிவத்தை வேக வேகமாக பூர்த்தி செய்து கொத்து பரோட்டா என்று பெயர் சூட்டினேன் (அந்த பெயரும் புக்ட. அதனால் லிங்க் பெயர் மட்டும் தமிழ் கொத்து).

இதில் இருந்து நான் சொல்ல வருவது என்னவென்றால், புதிதாக வலைப்பூ தொடங்கும் தமிழர்களே தமிழர்களே, வலைப்பூவிற்கு பெயரை கொஞ்சம் யோசித்து வையுங்கள். ஏதோ ஒரு நாள் சாப்பிட்டு பிடித்த உணவு பதார்த்த பெயரை எல்லாம் வைத்தால் பின்னால் வருத்தப்பட வேண்டிவரும்.

முழுதும் படிக்க..