Apr 25, 2014

தி மேட்ரிக்ஸ் (The Matrix) - எளிய அறிமுகம்

படத்தை ஒருமுறை பார்த்துவிட்டுப் படிப்பது நல்லது. கதை எல்லாம் தெரிந்தால் பரவாயில்லை என்பவர்கள் தொடரலாம். கட்டுரையின் கடைசிப் பகுதியை தவற விட வேண்டாம். 

** 

நீங்கள் இருக்கிறீர்கள். பிறந்து, வளர்ந்து, வேலைக்குப் போய், உண்டு உறங்கி, திருட்டுத்தனம் என்று பலவற்றையும் செய்தவாறு நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால்... ஏதோ ஒன்று உங்களைப் போட்டு அலைகழிக்கிறது. ஏதோ ஒன்று சரியில்லை, உங்களது வாழ்க்கை வேறு யாரோ எழுதிக்கொடுத்தது போல் நடப்பதாகப்படுகிறது. 'உலகமே மாயை' என்றும் "உங்களால் உணரப்படவே முடியாததை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? மீனுக்கு நீர் இன்றி ஓர் உலகம் உண்டு, அதிலும் உயிரினங்கள் வாழ்கின்றன என்பதை புரிந்துகொள்ளவே முடியாது" என்றெல்லாம் தத்துவ, ஆன்மிக விசாரங்களில் விரசமாக ஈடுபடுகிறீர்கள். 

இப்படி ஓர் அகச்சிக்கலிலும் தேடலிலும் உள்ள நியோ என்பவனிடம் ஆரம்பமாகிறது படம். அவனுடன் எளிதாக நம்மைப் பொருத்திக்கொள்கிறோம். அவனுக்குச் சில மனிதர்கள் மட்டும் தனித்துத் தெரிகிறார்கள், ஈர்க்கிறார்கள். மேற்சொன்ன தேடல்களுக்கு அவர்களிடம் விடை கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறான் நியோ. ஆனால் அவர்களோ டெரரிஸ்ட்டுகள் என்கிற முத்திரையுடன் தேடப்படுபவர்கள். அதிசயமாக, அவர்களே இவனைத் தொடர்பு கொள்ளப் பலவாரியாக முயன்று, தோற்று, வென்று ஒரு வழியாகப் பார்க்கிறார்கள். அந்தக் கும்பலின் தலைவர் மார்பியஸ். 

பெரும் மரியாதையுடன் அவரைச் சந்திக்கிறான் நியோ. அவரோ இவனை அதை விட மரியாதையாக அணுகுகிறார். 'என்னடா இது' என்று ஜெர்க் ஆகிவிட்டு, 'ஐயா, இந்த உலகில் என்ன பிரச்சினை? மேட்ரிக்ஸ் என்றால் என்ன?' என்று கேட்கிறான். அதற்கு அவர் சொல்லும் விஷயம், யோசிக்கவே முடியாத கற்பனை. 

"நீ கண்ணால் கண்டு கொண்டிருக்கும் உலகம், அதாவது மேட்ரிக்ஸ், ஒரு பொய். உனக்கு இதைச் சொன்னால் புரியாது. காட்டினால் தான் விளங்கும்" என்றவாறு பின்வரும் சங்கதிகளைக் காட்டுகிறார். 

(நான் பெரும்பாலும் கதையை எழுதுவதில்லை. ஆனால் மேட்ரிக்ஸ் பார்த்த பலரும் சொன்ன கருத்தின்பேரில் அதைப் பேசி விளக்குவது அவசியமாகிறது). இது தான் நேர்க்கதை: 

"நியோ பையா, இது நீ நினைப்பது போல் இரண்டாயிரமாம் ஆண்டு இல்லை. இது இரண்டாயிரத்து இருநூறோ முன்னூரோ.. எனக்கே சரியாகத் தெரியாது. அதாகப்பட்டது, இருபத்தியோராம் நூற்றாண்டில் மெஷின்களுக்குச் சுயமாக யோசிக்கும் திறனை அளித்தோம். அதுகளோ மனிதனை போலவே குயுக்தியாக யோசிக்க ஆரம்பித்து நம்மை அடிமை ஆக்கப்பார்த்தன. அவை தங்களது சக்திக்காகச் சூரியனை நம்பியிருந்தது. உடனே மனிதன் அதைத் தடுக்க வெடிகுண்டோ எதையோ செய்து பூமியை நிரந்திரமாக கருமேகங்கள் சூழ்ந்திருக்குமாறு செய்தான்". 

"சூரிய ஒளி மறைக்கப்பட்டதும் மெஷின்கள் மாற்று சக்தியை தேடின. மனிதனிடம் இருக்கும் சக்தி (The human body generates more bio-electricity than a 120-volt battery and over 25,000 B.T.U.'s of body heat) அவற்றின் கருத்துக்கு எட்டியதும், அமுக்குடா அவன என்று பிடித்து மனிதனிடமிருந்து கரண்ட் எடுக்க ஆரம்பித்தன. ஆனால் சும்மா எடுத்தால் மனிதன் அமைதியாக ஒப்புக்கொள்வானா? ஆகவே, அவனைச் சுயநினைவு எதுவும் இல்லாமல் வைத்து வளர்த்து, மெதுவா, நிதானமா ஒரு பக்கம் கரண்ட் எடுத்துக்கொண்டு, இன்னொரு பக்கம் அவர்களின் மூளைக்குள் சிக்னல்களாக, இதோ இப்போது நாம் இருக்கும் இந்த உலகை, அதன் அத்தனை அம்சங்களோடும் உள்ளிட்டன. சுவை, வெப்பம், காமம், குரோதம் என்று அத்தனையும் கடைசியில் மூளையினால் தான் புரிந்துகொள்ளப்பட்டு இயக்கப்படுகிறது. கழுதைய அதை நேரடியாக மூளையிலேயே சிமுலேட் செய்துவிடலாம் என்பது மெஷின்களின் திட்டத்திற்கு அடிப்படை. அவ்வளவு பேரும் மேட்ரிக்ஸ் அமைப்பில் இணைக்கப்பட்டு அதில் வெறும் சிக்னல்களாக உலா வருகிறார்கள். கூட்டு உணர்வாக ஒருவரோடு ஒருவர் குலவுகிறார்கள். அதாவது குலவுவதாக நினைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் கூட்டை விட்டு வெளிவராமலேயே இறக்கிறார்கள். இறந்து அடுத்த மனிதர்களுக்கு உணவாகிறார்கள்". 

"ஆக, நாம் இப்படிப் பிடித்து வைக்கப் பட்டிருக்கிறோம் என்பதே தெரியாமல், நம் கண் முன் மேட்ரிக்ஸ் உலகை காட்டி நம்மை ஏமாற்றுகிறார்கள்". 

முதல் முறையாக, இந்தச் சிக்னல்கள் அனுப்பும் குழாயை துண்டித்து (இது அனைவரின் புறமண்டையிலும் சொருகப்பட்டுள்ளது), கரண்டு அறுவடை செய்யும் வயலில் (Machines call it a farm!) இருந்து நியோவினை முதல் முறையாக எழுப்பும்போது, அவனைப் போலவே நாமும் 'என்னய்யா இது அக்கிரமமா இருக்கு?' என்று அதிர்கிறோம். முழித்துப் பார்த்தால், சாரி சாரியாக, பெட்டி பெட்டியாக, மனிதர்கள் கிடக்கிறார்கள். மேட்ரிக்ஸ் கனவுலகில் இணைக்கப்பட்டு ஏமாந்தபடி. 

மார்பியஸ் மற்றும் அவர் குழுவினர் தங்களது பறக்கும் கப்பலில் நியோவை வயலில் இருந்து காப்பாற்றி அழைத்துக்கொண்டு மேலும் பல உண்மைகளைப் புரிய வைக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டுத் தெளிந்த மனிதக்குழு இப்போது இருக்கும் இடம் சயான் (Zion). பூமியின் ஆழத்தில், இன்னும் சூடு மிச்சமிருக்கும் இடத்தில். அதான் சூரியனை மறைத்தாயிற்றே? 

இப்படி அனைவரையும் நினைத்தபோதெல்லாம் மேட்ரிக்ஸிலிருந்து விடுவித்து விட முடியாது. அவர்கள் தயாராக வேண்டும். அப்படிப்பட்டவர்களைப் பெரும்பாலும் சிறு வயதிலேயே கிளப்பி விடுவார்கள், பெரிதாகி விட்டால் இந்த உண்மையை அவர்களுக்குப் புரியவைக்க முடியாது அதாவது இந்தப் பிரம்மாண்டத்தைக் கிரகிப்பது, ஏற்றுக்கொள்வது கடினம் (நியோ கூட முதல் தடவை வாமிட் செய்துவிடுவான்). 

ஆனால் அவ்வளவு ரிஸ்க் எடுத்து ஆறு கழுதை வயதாகும் நியோவை விடுவிக்க என்ன காரணம்? மேலும் நியோவை மிகவும் கவனிப்புடனும் மரியாதையுடனும் நடத்துகிறார்கள், குறிப்பாக மார்பியஸ். 

அது ஏன் என்பதற்கு முன்னால், இயல்பாகத் தோன்றும் ஒரு கேள்வி ஒன்று உண்டு. இப்படித் தப்பித்த சில மனிதர்கள் மேலும் பலரை விடுவிக்கிறார்கள். ஆனால், முதன்முதலில் இதில் இருந்து வெளியேறிய மனிதன், இந்த அமைப்பை எப்படிப் புரிந்திருப்பான்? அவன் எப்படி வெளியேறினான்? எப்படி இத்தனை பேரை மீட்டு மெஷின்களுக்கு எதிராகப் போராட ஆரம்பித்தான்? 

இதற்கு மார்பியஸ் "முதன் முதலில் மேட்ரிக்ஸ் உருவாக்கப்பட்ட போது, ஒரு மூதாதையர், மீட்பர், தோன்றினார். அவர் மேட்ரிக்ஸ் உலகை எப்படி வேண்டுமானாலும் வளைத்தார் (மேட்ரிக்ஸ் என்பது கணினி மூலம் உருவாக்கப்பட்ட, ஒரு ப்ரோக்ராம் போன்ற உலகு தான் அல்லவா? வீடியோ கேம்களில் cheat code நினைவுபடுத்திக் கொள்ளவும்). அவர் நமது கூட்டத்தின் முதல் சிலரை விடுவித்து, சயானின் சந்ததியினரை உருவாக்கினார். மேட்ரிக்ஸ் இருக்கும் வரை மனித இனத்துக்கு விடுதலை இல்லை. அவர் இறந்த பின், அத்தகைய மனிதன் திரும்பத் தோன்றுவான், அவனால் உங்களுக்கு மீட்சி உண்டு என்று ஆரக்கள் என்கிற ஜகஜ்ஜால மூதாட்டி கணித்திருக்கிறார்" என்று விவிலியத்தனமாக விளக்குகிறார். அந்த மனிதன், The one, நீதான் என்று குண்டையும் போடுகிறார். 

இதில் அந்த ஆரக்கள் யார்? அவரும் மேட்ரிக்ஸ் உள்ளே நுழைந்து பார்க்க வேண்டிய ஒரு நிரலி (Program) தான். ஆனால் மேட்ரிக்ஸ் பற்றி முழுதும் அறிந்த, மனிதர்களுக்கு உதவும் விரலி நிரலி. இதன் மூலம், மேட்ரிக்ஸ் உலகில் வெறும் மனிதர்கள் மட்டும் உலவுவதில்லை. புறமண்டையில் எதுவும் சொருகப்படாத, மேட்ரிக்ஸ் உலகை கட்டி மேய்க்க என்றே, பல சுத்த நிரலிகளும் உண்டு என்பதும் புரிகிறது. இது படத்தின் ஆரம்பத்தில் இருந்து வரும் ஏஜண்டுகளைப் பற்றிப் புரிந்துகொள்ள உதவுகிறது. இவர்கள்தான் மேட்ரிக்ஸ் உலகின் பாதுகாவலர்கள், அவர்களிடம் மோதி ஜெயித்த மனிதன் இல்லை. முதல் காட்சியில் இவர்களிடம் இருந்து தப்பி ஓடும் ஹீரோயினி ட்ரினிட்டியை இங்கு நினைவுபடுத்தலாம். 

நியோவிற்கு அத்தனையும் விளக்கப்பட்டு, பல்வேறு பயிற்சிகளும் கொடுக்கப்படுகிறது. இது போன்ற பயிற்சிகளுக்காக, மேட்ரிக்ஸ் போன்றே விர்ச்சுவல் உலகுகளைத் தப்பிய மனிதர்களும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மேட்ரிக்ஸ் உலகினுள் போய் வருவதற்கும் மறை வழி ஒன்றை வைத்திருக்கிறார்கள் (Hacking மூலம்), அதற்கு அவர்கள் உபயோகிப்பது தொலைபேசிகள். 

ஓரளவிற்கு நியோ தயாரானதும் ஆர்க்களிடம் ஜோசியம் கேட்க போகிறார்கள். யார் விடுவிக்கப்பட்டாலும் அவரிடம் போய் ஒரு வார்த்தை கேட்பது வழக்கம்தான். 'நீதான் அந்த மீட்பரை கண்டுபிடிப்பாய்' என்று கணிக்கப்பட்ட மார்பியஸ், நியோ தான் அது என்று ஆணித்தரமாக நம்புகிறார். ஆனால் ஆர்க்களோ நியோவிடம், 'உன்னிடம் பைப்பு இருக்கு, ஆனா பம்பு இல்லை' என்கிற ரேஞ்சில் 'உனக்குத் திறன் இருக்கிறது. ஆனால் எதற்கோ காத்திருக்கிறாய். மறுபிறவிக்காகவோ என்னமோ?' என்று கிண்டலாகச் சொல்கிறார். பின், 'உன்னை மார்பியஸ் முழுதும் நம்புகிறான். நீ எல்லாரையும் காக்கப்போகிறாய் என்று நினைப்பதால் உனக்காக அவன் உயிரையும் தருவான். அது நடக்கும்' என்று சொல்லி விரட்டி விடுகிறார். நியோ குழம்புகிறான். 'வெறும்பய என்ன நம்பாதீங்க' என்று சொல்ல முயல்கிறான். யாரும் கேட்பதாகயில்லை. 

இதற்கு நடுவில் மேட்ரிக்ஸ் உலகிற்கும் நிஜ உலகிற்கும் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்துகொள்ள வேண்டும். மேட்ரிக்ஸ் கச்சிதமாக, பச்சை சாயத்துடன், துல்லியமாக. நிஜம் அழுக்காக, ரொம்பக் கஷ்டமாக. எனக்கே கூட இவர்கள் எப்போது மேட்ரிக்ஸ் உலகினுள் போவார்கள் என்றே தோன்ற ஆரம்பித்துவிட்டது. எதற்கு இப்படிக் கிடந்து கஷ்டப்பட வேண்டும்? அடிமையாகவே இருந்துவிடலாமே? (பொதுப்பிரச்சினைகளில் கிட்டத்தட்ட நமக்கு எல்லாவற்றிலுமே இப்படித் தோன்ற ஆரம்பித்துவிட்டது. ப்ராய்லர் கோழி தலைமுறை). இப்படி மார்பியஸ் குழுவில் இருக்கும் ஒருவருக்கும் தோன்றி விடுவதுதான் துரத்ரிஷ்டம். சைபர். நேராகப் போய் ஏஜண்டிடம் ஒப்பந்தம் போடுகிறார். ர் என்ன ர். போடுகிறான். அதாவது "நான் என் கூட்டாளிகளைக் காட்டி கொடுத்து விடுகிறேன். என்னை மறுபடி மேட்ரிக்ஸ் உலகில் இணைத்து விடு. பிரபலமான ஆளாக. நடிகராக. இந்த ஒன்பது வருஷம் வெளிவந்து மனிதர்களுடன் போராடி கஷ்டப்பட்ட எதுவும் நினைவில் இருக்கக்கூடாது". என்னது? நியாயம்தானேவா? 

இதில் இந்த ஏஜன்ட் பாத்திரம் சீக்கிரம் வேலைய முடிச்சிட்டுக் கிளம்பு என்கிற வகையில் எழுதப்பட்ட நிரலி. தப்பிய மனிதர்களின் நகரமான சயானின் மெயின் பிரேம் கணினிகளின் கோட் மார்பியஸ்க்கு தெரியும். அது தெரிந்தால் அங்கும் பரவி மொத்தமாக தப்பியவர்களை அழித்து விடலாம். இங்கு இணைந்திருக்கும் மனிதர்களை விடுவிக்க யாரும் இருக்க மாட்டார்கள். பிழைப்பும் அது பாட்டுக்கு ஓடும். 

அப்படி இருக்க, ஒரு சுபயோக சுபதினத்தில், ஆரக்களைப் பார்த்துவிட்டு திரும்பும் போது மார்பியஸ் குழுவினர் காட்டிக்கொடுக்கப் படுகின்றனர். நியோவை காப்பாற்ற மார்பியஸ் அவர்களிடம் மாட்டிக்கொள்கிறார். நியோ 'யோவ், நீ நினைக்கிற மாதிரி நான் ஒரு ஆள் இல்லை' என்று அவரைக் காப்பாற்ற திரும்ப ட்ரினிட்டியுடன் மேட்ரிக்ஸ் உள்ளே போகிறான். அங்கு யாரும் எதிர்பார்க்காத வண்ணம், ஏஜண்டுகளையே அடித்துக் காலி பண்ணிவிட்டு மார்பியஸ் அவர்களை மீட்டு, காட்டிக்கொடுக்கும் சைபரும் அழிந்து, கடைசியில் சுபம். சுபமா? 

இங்குக் கடைசியில் ஒன்று நடக்கிறது. அது நியோ தன்னையே உணரும் தருணம். அவன்தான் அந்த மீட்பர். அவனால் மேட்ரிக்ஸ் உலகின் கட்டுமானத்தைப் பூச்சுகள் இன்றிப் பார்க்கமுடிகிறது. அதைத் தன் இஷ்டத்திற்கு மாற்ற தயாராகிறான். அங்கு இருப்பது இயற்பியல், புவியியல் விதிகள் அல்ல. மெஷின்கள் அத்தகைய கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கிய codeபாடுகள் (மறுபடி வீடியோ கேமை நினைத்துக்கொள்ளவும்). அதை வளைப்பதற்குத் தன்னையே அறிந்து கொண்டு, மேட்ரிக்ஸ் உலகையும் அறிந்து கொண்டால் போதுமானது. அது அவனுக்குக் கைவருகிறது. 

இது நேர்க்கதை. அவ்வளவுதானா என்றால், முதல் பாகத்தில் அவ்வளவுதான். ஆனால் இது ஒரு துளி தான். நாம் யோசிக்கவே முடியாத பல விஷயங்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களில் நியோவை போலவே நாமும் சிறிது சிறிதாகப் புரிந்து கொள்கிறோம். அல்லது முயல்கிறோம். ஆனால அதன் விஸ்தாரம் நம்மைக் கதி கலக்குகிறது. இதற்காகப் பத்து வருடங்கள் உழைத்திருக்கிறார்கள் வாசாவ்ஸ்கி சகோதரர்கள் (இவர்களில் லாரி இப்போது லானாவாக, அதாவது பெண்ணாக மாறிவிட்டார்). மேலும் படத்தின் முதலில் வரும் அந்தச் சின்ன Prologue படத்தின் மையத்தைப் பற்றிச் சொல்லியும் விடுகிறது. அதையும் கவனிக்காமல் விடக்கூடாது (ஆக எதையுமே கவனிக்காம விட்டுட கூடாது). 

வசனங்கள்

படத்தில் எல்லாமே சிறப்பு என்றாலும், திரைக்கதையும் வசனமும், வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு ஃபிரேமும், வார்த்தையும், காட்சியும் செதுக்கப்பட்டது. அதில் தோன்றும் ஒவ்வொரு எண்ணுக்கும், பெயருக்கும், பேசப்படும் சொல்லுக்கும் அர்த்தமுண்டு. எதுவுமே யோசிக்காமல் வைக்கப்பட்டதல்ல. 

படத்தில் கிட்டத்தட்ட எல்லாமே இரட்டை அர்த்த வசனங்கள்தான். ஜில்பான்சி அர்த்தமல்ல. முதலில் சாதாரணமாகத் தோன்றும் பல வசனங்கள் அடுத்தடுத்த பார்வைகளில் தான் முழுதாகப் புரியும். அனைத்து வசனங்களையுமே நினைவில் வைத்துக்கொள்வது நலம். பின்னால் ஏதோ ஒரு காட்சியில் நமக்கு அந்த நினைவு சுடும். படத்தின் முதல் பாகத்தில் முதல் சில நிமிடங்களில் பேசப்பட்ட வசனம், மூன்றாம் பாகத்தின் முடிவில் கூட ஞாபகம் வந்து சிலிர்ப்பூட்டும். உதாரணமாக, 

"It sounds to me like you need to unplug, man." இது முதலில் நியோவிடம் திருட்டு சி.டி வாங்க வரும் சோய் சொல்லும் வசனம். பார்டிக்கு வா எனும் அர்த்தத்தில். பிறகு, மேட்ரிக்ஸ் உலகில் இருந்து Unplug செய்யப்படும் கான்செப்ட் தெரிந்த பிறகு, இந்த வசனம் விசனம். 

"We're going to kill him" என்று ட்ரினிட்டியிடம் நியோ பற்றி விளையாட்டாகச் சொல்லும் சைபர். 

"Copper Top" என அழைக்கப்படும் நியோ ('டேய் பாட்டரி'). 

எல்லாவற்றையும் விட, பட ஆரம்பத்தில், வேலைக்குத் தாமதமாக வரும் ஆண்டர்சனிடம், அவன் பாஸ் ரைன்ஹார்ட்டின் வசை: 

"You have a problem with authority, Mr. Anderson. You believe that you are special, that somehow the rules do not apply to you. Obviously, you are mistaken. This company is one of the top software companies in the world because every single employee understands that they are part of a whole. Thus, if an employee has a problem, the company has a problem. The time has come to make a choice, Mr. Anderson. Either you choose to be at your desk on time, from this day forth, or you choose to find yourself another job. Do I make myself clear?" 

இது கிட்டத்தட்ட மனித இனத்திடம் மெஷின்கள் சொல்ல நினைப்பதன் சாராம்சம். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி ஒவ்வொன்றையும் செதுக்கினால், படமே செயற்கையாகி விடுமே? May be that is exactly what the W brothers wanted. மேட்ரிக்ஸ் ஒரு செயற்கை உலகம் தானே? அவர்களுக்கு அந்தச் சுதந்திரம் இருந்தது. 

அறை எண்களில் கூட விசேஷம். முதலில் ட்ரினிட்டி மாட்டும் அறை எண் 303 (இதே அறை கடைசியிலும் வரும், நினைவுள்ளதா?). இது ட்ரினிட்டி என்கிற பெயரையும் குறிக்கிறது, அவள் கிட்டத்தட்ட மூன்றாவது முக்கியத்துவம் வாய்ந்த நபர் (நியோ, மார்பியஸ் பிறகு). நியோ இருக்கும் அறை எண் 101. இதில் இரண்டு அர்த்தங்களைக் கொள்ளலாம். பைனரிகளால் ஆன உலகில் இருப்பது. அவன்தான் The One என்பதுவும். இதை இணைத்து இயக்குனர்கள் உபயோகித்த Tagline எனக்கு மிகப்பிடித்தமான ஒன்று:
" In a world of 1s and 0s...are you a zero, or The One". 
இந்த 101 அறை எண் Orwell-ன் 1984 நாவலிலும் முக்கியம். Dystopian படங்களில் ஆர்வெல் தாக்கம் இல்லாமல் பேச முடியாது. 

இப்படம் மேலும் பல விரிவுகளைச் சாத்தியமாக்குகிறது. இப்படத்தைப் பற்றி இயக்குனர்கள் பேசாததற்கு முக்கியக் காரணமாகச் சொல்வது - அத்தகைய விரிவுகளைத் தடுக்க அவர்கள் விரும்பவில்லை. நெகிழ நெகிழ விட்டுவிட்டார்கள். படத்தின் தத்துவ, ஆன்மிக பின்புலங்கள் அதிகம் (கிட்டத்தட்ட கிறித்துவ, நாஸ்டிக், இந்து, பௌத்தம் என்று அத்தனையையும் கவர் செய்தாகிவிட்டது), ஆர்வமுள்ளவர்கள் அந்த கோணத்திலும் ஆராயலாம்.

எல்லா வசனங்களுமே முக்கியம் தான் என்றாலும், இங்கு ஒன்றை பார்க்கலாம். மார்பியஸ் அப்படி இந்தச் சிஸ்டமில் இணைந்திருக்கும் எல்லாரையும் எளிதாக விடுவித்துவிட முடியாது என்பதை இப்படிச் சொல்கிறார் - 
"You have to understand that most of these people are not ready to be unplugged and many of them are so inured, so hopelessly dependent on the system that they will fight to protect it" 
இதை சாதி, மதம் என்று எந்த வெறிபிடித்த மூட சிஸ்டத்தில் இருப்பவர்களுக்கும் பொருத்தலாம். 

பெயர்கள் 
Neo 
One என்பதை மாற்றிபோட்டால் வரும். 'புதிய' என்கிற அர்த்தமும் உண்டு. இன்னொரு பெயரான Anderson - கடவுளின் மகன், மீட்பர். 

Cypher 
காட்டிகொடுக்கும் சைபர். இதைப் பூஜ்ஜியம் என்ற அர்த்தத்திலும் பார்க்கலாம். உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டும் ஒருவன் என்றும் பார்க்கலாம் (Cypher text) 

Rein Heart 
முதலில் வரும் முதலாளி. Rein - கட்டுப்படுத்துதல் என்று ஓர் அர்த்தம் உண்டு. 

இப்படிப் படத்தில் வரும் எதுவுமே தற்செயல் அல்ல. இந்தப் படத்திற்குப் பிறகு என்னால் தரமற்ற படங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தப் படைப்பை பற்றி ஒரு வார்த்தையில் சொல்வதென்றால் - உன்னதம். 

*** 

இது சுய அலம்பல். வேண்டாமென்றால் அடுத்தப் பகுதிக்குத் தாவி விடவும்.. 

மேட்ரிக்ஸ் ஒரு லட்சியப்படம். அனைத்து அம்சங்களும் ஒருங்கே இப்படி அமைந்து விட்டது. அந்தந்த காலகட்டத்துக்கான படம் என்று பத்து வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் (அது என்ன பத்து வருடம்? சும்மா ஒரு மனக்கணக்குதான்). மேட்ரிக்ஸ் அப்படி இந்த நூற்றாண்டை மிகச்சிறப்பாகத் துவங்கி வைத்தது (டெக்னாலஜி உச்சத்தை அடையப்போகும் நேரம், என்ன டைமிங்? அது கூடக் கூடி வந்திருக்கிறது பாருங்கள்!). படம் என்னை எந்தளவிற்குப் பாதித்தது என்றால், நாத்திகனான எனக்கு, ஒரு ஆத்திகரின் அளவு கடந்த பக்தியை புரிய வைத்துவிட்டது. படைப்பூக்கத்தின் உச்சங்களில் ஒன்று இந்தப் படம். மேட்ரிக்ஸ் பாதிப்பை கிட்டத்தட்ட எனது அத்தனை இணைய நடவடிக்கைகளிலும் பார்க்கலாம். இந்த வலைப்பூவில், ட்விட்டரில், எனது டெஸ்க்டாப் வால்பேப்பரில்.... 

மேலும் இப்படம் மேலாகப் பார்ப்பவர்களுக்கும் பிடிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, சண்டைக்காட்சிகள் வந்தாலே வெளியே புகை பிடிக்க வெளியே செல்ல ஆசைப்படும் எனக்கே (இத்தனைக்கும் எனக்குப் புகைப்பழக்கம் கூட இல்லை) இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகள் வெகுவாக ஈர்த்தது. பத்துத் தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பேன். இந்தக் கட்டுரைக்காகப் படத்தை மறுபடியும் பார்த்தேன். அப்படித் திரும்பத்திரும்பப் பார்ப்பவனல்ல நான் (சிறு வயதில் வேறு நாதியில்லாமல் பார்த்த திருவிளையாடல் வகையறாக்கள் கணக்கில் சேராது). அப்படி இந்ததடவை பார்த்த போது கூடப் புதிதாக ஒன்று கண்ணில் படுகிறது! இணையத்தில் சில அலசல்கள் குறியீடு பைத்தியங்களால் ரொம்பப் பிழியப்பட்டு இருக்கும், அதைத் தவிர்த்து விடலாம். 

'வெளிவந்து இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போ என்ன புதிதாகக் கிளம்புகிறான்' என்று ஒருவர் யோசிக்கக்கூடும் (நான் தான் யோசித்தது). இந்தப் படத்திற்கு ஓர் அலசல் எழுத வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. போன வாரம், இரண்டு பேர்.. மேட்ரிக்ஸ் விமர்சனம் என்று தேடி இந்த வலைத்தளத்தை வந்தடைந்தனர். அவர்கள் ஏமாந்திருப்பார்கள். ஒரு வேலை இரண்டு வாரம் கழித்து வந்திருந்தால், அவர்கள் தேடியது கிடைத்திருக்கக்கூடும். மேலும் திரையரங்கில் பார்ப்பவர்களை விட, அதற்குப் பிறகு தொலைகாட்சி, கணினி என்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். அவர்களை நோக்கி இது எழுதப்படுகிறது. 
இப்படியாக, மேட்ரிக்ஸ் என்னை வந்தடைந்தது. நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதுமட்டுமில்லாமல் சென்ற மார்ச்சோடு மேட்ரிக்ஸ் வெளிவந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிறது. 

*** 

இது என்னடா கற்பனை, இதைத் தூக்கி சாப்பிடுகிறேன் பார் என்று வந்தன மேலும் இரண்டு படங்கள். வேறு ஏதோ அல்ல, இதே படத்தின் அடுத்த இரண்டு பாகங்கள். அதில் பல முக்கியமான கேள்விகளுக்கு விடை கொடுத்து, நமது சிந்தனையைக் கிளறி, தூண்டி விட்டுவிடுகிறார்கள் சகோதரர்கள் (சிந்தனைக்காமம் என்கிற வார்த்தை இங்குப் பொருத்தமாக இருக்கும்). அதற்கு ஒரு முன்னோட்டமாக, சில கேள்விகளுடன் கட்டுரையின் இந்தப் பாகத்தை நிறைவு செய்கிறேன். 

  • எல்லாம் வல்ல மெஷின்கள், எப்படிச் சில மனிதர்களை மட்டும் தப்ப விடும்? இவ்வளவு தில்லாலங்கடி செய்யும் மெஷின்களுக்கு இதைத் தடுக்க, தப்பிக்கும் மனிதர்களை நசுக்கத் தெரியாதா என்ன?" (இதற்கான பதிலில் பெரிய சூட்சுமம் உண்டு!). 


  • மெஷின்கள் மனிதர்களைப் போல் யோசித்தால் மட்டும் போதாது. மேட்ரிக்ஸ் போல் ஓர் உலகை உருவாக்க இயற்கை அளவிற்கு யோசிக்க வேண்டும். அப்படிதான் யோசித்ததா? மேட்ரிக்ஸ் உலகை முதன் முதலில் உருவாக்கியதுமே அது வெற்றியடைந்து, அவற்றின் நோக்கம் நிறைவேறியதா? (இது பற்றி ஒரு சின்னத் துப்பு, முதல் பாகத்திலேயே ஏஜன்ட் ஸ்மித் கொடுப்பார், மார்பியஸ் துன்புறுத்தல் காட்சியில்). 


  • ஆரக்கள் யார்? ஏன் மனிதர்களுக்கு உதவுகிறார்? மேட்ரிக்ஸ் உலகை யார் உருவாக்கியது? 


  • முதன் முதலில் மேட்ரிக்ஸ் உலகில் இருந்து வெளிவந்த மூதாதையர், மீட்பர் யார்? அவராகவே வெளிவந்தாரா?(முதல் பாகம் முற்றும்)


References:
http://en.wikipedia.org/wiki/The_Matrix
http://thematrix101.com/
http://people.brandeis.edu/~bobby/pfolio/matrixBuddhism.pdf
http://www.sparknotes.com/film/matrix/quotes.html
http://www.kenwilber.com/blog/show/230
http://en.wikipedia.org/wiki/Room_101
http://sydfield.com/film-analysis/the-matrix/


3 comments:

Anonymous said...

விசாரத்தின் விரசமாக என எதோ எதுகை மோனையில் ஆரம்பித்து தவறான பொருள் தருமாறு ஆகிவிட்டது. ஆரக்கிள் எனும் மூதாட்டி அல்ல, ஆரக்கிள் என்பது எதிர்காலம் உரைக்கும் செயல், தமிழில் விரிச்சி.. விரிச்சி கூறும் முதிரிளம்பெண்டு( மாட்ரிக்சில் அந்தப் பாத்திரம் படு கிழவியாக இருக்காது).. கீழே எடுகோள் மூலங்களைக் குறித்திருப்பதற்கு ஒரு சல்யூட்! தமிழ் மணத்தில் பரபரப்புப் பதிவர்கள் எனப்படுவோர், விக்கியில் உருவி வாரமிரு முறை தங்கள் சொந்தக் கருத்துப் போல் பதிவு போட்டு அரசியல் புழுகுகளை அவிழ்த்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் ரெபரன்சுடன் பதிவு போடும் உங்களைக் கொண்டாடத் தான் வேண்டும்!!!!!

Prasanna said...

மிக்க நன்றி அனானி! பார்ப்பதற்கு வயது தெரியாவிட்டாலும், ஆரக்கள் பல நூறு ஆண்டுகள் வயதானவள்.. பழுத்த பழம்! மற்றபடி விசாரம்-விரசம் எல்லாம் சும்மா காமெடிக்கு :)

raja said...

மேட்ரிக்ஸ் படம் இரண்டாம் முறை பார்ப்பவர்களுக்கு உங்கள் பதிவு மிகுந்த உதவியாக இருக்கும்...