Oct 20, 2009

சாப்ட்வேர் - 'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009'


அட எவ்வளவு பயமாக இருக்கிறது கொஞ்ச நாட்களாக? ஏன் என்றா கேட்கிறீர்? ஒருவித நிச்சயமற்ற தன்மை தருகிற பீதிதான். பின்னே? என் நண்பர்கள் ஒருவார் பின் ஒருவராக வெளியில் துரத்தப்படுவதை பார்த்தால், அடி வயிறு கனமாகி லப்டப் அதிகம் ஆகுமா ஆகாதா?

இதை பார்த்து அவன் குஷியடையத்தான் செய்வான். யாரா? நாங்கள் உட்கார்ந்த இடத்தில் சாப்பிடுவதை பார்த்து எரிச்சல்படுகிறானே, அவன்தான். ஒரு பருக்கை உண்ண அவன் காடு மேடு எல்லாம் அலைய வேண்டி இருக்கிறதாம். அதற்காக எங்களை திட்டலாமா? விலை ஏற்ற இறக்கத்திற்கு எல்லாம் எங்களை காரணகர்த்தாவாக்கி திட்டுகிறான். திடீர் தட்டுபாடுகளுக்கும் எங்களை கை காட்டி கொக்கரிக்கிறான்.

அவனுக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறேன். `நாட்டு பயல்’. பிடித்திருக்கிறதா? என்ன இது ஒரு பேரா என்று முகம் சுளிக்காதீர்கள். என் தரப்பு நியாயங்களை கேட்டால் கடைசியில் நீங்களும் அவனை அப்படித்தான் அழைப்பீர்கள்.

இப்படி திட்டும் அளவிற்கு நாங்கள் செய்த பாவம்தான் என்ன? நாங்கள் சௌகரியமாக இருப்பது கண்ணில் அகப்பட்ட தூசிபோல இருக்கிறது அவனுக்கு. தனித்தனி அறையாம் எங்களுக்கு. அதை பார்த்து அரை லிட்டர் அமிலம் அவன் வயிற்றில். இதில் அன்று என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வி வேறு- `அது எப்பிட்ரா எல்லாரும் சொல்லி வெச்ச மாதிரி வெள்ளையா இருக்கீங்க?’ செகப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல் இப்படி புரளிகள் வேறு.





ஆனால் நாங்கள் படுகிற அல்லல்களை அறிவானா அவன்? முன்னெல்லாம் கொஞ்சம் பேர் தான் இருந்தோம். இப்போ எங்கே பார்த்தாலும் வதவத என்று எங்கள் வகையறாதான். பிறந்த ஊர்களைவிட்டு எங்கோ பாஷை தெரியாத ஊர்களில் பிழைப்பு. அவனை மாதிரியா? பிறந்த ஊரிலேயே வேலை செய்து, குடும்பத்துடன் சாப்பிட்டு -அதுவல்லவா சொர்க்கம் (இன்னும் திருமணம் ஆக வில்லை)? நாங்கள் அலையாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதை பற்றி அங்கலாய்க்கிறானே- உட்கார்ந்தால்தான் தெரியும் அதில் உள்ள நமைப்பு.

அட, என் பீதியை பற்றி பாதியிலேயே விட்டுவிட்டேன் பார்த்தீர்களா? முதலில் ஆங்காங்கே தூரமாக துரத்தப்படுவதை கேள்விப்பட்டபோது, நமக்கு அந்த நிலை வராது என்று நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால், என் நண்பர்கள்- பக்கத்து அக்கத்தில் வேலை பார்த்தவர்கள்- காணாமல் போவதை பார்த்தால் கலங்குமா? கலங்காதா?

இதோ -என் உயிர் நண்பன்- நானும் அவனும்தான் ஒரே அறையில் வேலை செய்தோம். அவனை துரத்தப்போகிறார்கள். என் கண் எதிரே அந்த காட்சி நடந்ததுதான் ரொம்ப கஷ்டமாக இருந்தது. இவ்வளவு நாளாக எங்களுக்கு படியளந்து சோறுபோட்ட மேனேஜர், கண்ணில் இறக்கமில்லாமல் இவனை அழைத்துக்கொண்டு போகிறார். இவனது கலக்கத்தை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. எத்தனை பேரை துரத்தி இருப்பார்? எல்லாம் பழக்கம்தான் போல. என்ன ஒரு கழுத்தறுப்பு? சே! என் கழுத்துக்கு எப்போ வரப்போகுதோ தெரியலை -கத்தி.

உங்களை கேட்க மறந்தேனே? என்னை பார்த்திருக்கிறீர்களா நீங்கள்? நேற்று கூட எங்கள் கறிக்கடையை தாண்டி போகும்போது உங்களை பார்த்தேனே? ம்ம்ம்... என்னை திரும்பி பார்த்தால்தானே உங்களுக்கு முகம் தெரிய? கறுப்பு கூண்டுக்குள் இருக்கும் இந்த பிராய்லர் கோழியை உங்களுக்கு எங்கே நினைவிருக்கப்போகிறது?

சரி பரவாயில்லை. அதோ வருகிறான் பார் -நாட்டுக்கோழிப்பயல்- கேலிச்சிரிப்புடன். என் நண்பன் கதியை பார்த்திருப்பானோ?

டேய் என்னடா சிரிப்பு? என்னா மறுபடி ஆரம்பிக்கப் பாக்கறியா? போடா அந்தாண்ட!


                                                            ***************


சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

11 comments:

கடை(த்)தெரு said...

தங்கள் சொந்த அனுபவம்
நல்லா பேசியிருக்கு திரு.பிரசன்னா

அன்புடன்,
இன்பா

Prasanna said...

எப்படித்தான் கண்டு புடுக்கிறாங்களோ :))

நன்றி இன்பா (உங்க உண்மையான பேரும் தெரிஞ்சிடுச்சு கடை(த்)தெரு வியாபாரி அவர்களே)!

கே. பி. ஜனா... said...

'கொன்னு'ட்டீங்க! -- கே.பி.ஜனா

ராம்குமார் - அமுதன் said...

நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...

Prasanna said...

//'கொன்னு'ட்டீங்க! -- கே.பி.ஜனா//

அவ்ளோ கொடூரமாவா இருக்கு :))

@ராம்குமார் - அமுதன்..

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அமுதன் :)

கே. பி. ஜனா... said...

'கொன்னு'ட்டீங்க என்றது கோழியை! நல்ல நச் கொடுத்து எங்களையும்!

Prasanna said...

//கொன்னு'ட்டீங்க என்றது கோழியை! நல்ல நச் கொடுத்து எங்களையும்!//
ஹி ஹி நன்றி ஜனா..
ஒரு சொல் பல பொருள்னு மொத்தத்துல தமிழில் விளையாடறீங்க..

தமிழினியன் said...

//நேற்று கூட எங்கள் கரிக்கடையை தாண்டி போகும்போது உங்களை பார்த்தேனே? //

தலைவா அந்த ரி'யை றியாக மாத்திடுங்க தப்பர்த்தம் வருது.

மத்தபடி சூப்பர் ட்விஸ்டு.

Prasanna said...

@ சுப.தமிழினியன்

மாற்றி விட்டேன். மிக்க நன்றி, வருகைக்கும், கருத்திற்கும், சுட்டி காட்டியதற்கும் :)

CS. Mohan Kumar said...

எதுவோ நினைக்க வைத்து கடைசியில் வேறு விதமாய் முடித்துள்ளீர்கள் நன்றாக உள்ளது

கதை போட்டியில் "அடுத்த வீட்டு பெண்" என்ற எனது கதை படிக்க blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/.

மோகன் குமார்

Prasanna said...

@ Mohan Kumar,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
நானும் உங்கள் கதையை படித்து விட்டேன் :)