Mar 4, 2012

அரவான் - ஒரு பார்வை

George Orwell எழுதிய உலகப்புகழ் பெற்ற 'A Hanging' (இங்கு சென்று வாசிக்கலாம்) என்ற கட்டுரையை (slash கதையை)  வாசித்து முடிக்கும்போது ஏற்படும் ஒரு வெறுமையை, இந்த படத்தின் பிறகும் உணர முடிந்தது. கதைக்கும் கடைசியில் போடும் எண்டு கார்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று சிலர் சொல்கிறார்கள், ஆனால் எனக்கு சொல்லவந்த மையக்கருத்தை வசந்தபாலன் வெற்றிகரமாக சொல்லிவிட்டார் என்றும் தோன்றுகிறது (பிற படங்களிலும் சொல்லித்தான் விடுகிறார். ஆனால் 'சுவாரசியமாக' இருந்ததா என்பது அடுத்த கேள்வி). ஒரு நல்ல படைப்பை பிடிக்குது, பிடிக்கல என்று ஒற்றை வார்த்தைகளில் அடைக்க முடியுமா தெரியவில்லை. அரவான் படத்தில் எனக்கு பல காட்சிகள் பிடித்திருந்தது, சில இடங்கள் தோய்வாக தோன்றியது.


படத்தில் முதலில் பிடித்த அம்சம் ரொம்பவே சுவாரசியமான சம்பவங்களின் கோர்வை - ஒன்றன் பின் ஒன்றாக நாம் வழக்கமாக பார்த்திராத சம்பவங்களின் கட்டமைப்பு, முதல் பாதியில் ஒரு சின்ன முடிச்சு, இரண்டாம் பாதியில் அதை அவிழ்ப்பது என்று திரைக்கதை முதல் பாதியில் மிக நன்றாகவே இருந்தது. ஒளிப்பதிவும், இடங்களின் தேர்வும்  அருமை. பலரின் நடிப்பு அபாரம், ஓரிருவரை மட்டும் சொல்ல முடியவில்லை.

புத்தகம் வாசித்த சிலர் அது மாதிரியே இல்லை, மாற்றிவிட்டார்கள் என்று கூறியிருந்தார்கள். புத்தகங்களை அப்படியே எடுத்து டப்பா டான்ஸ் ஆடின நிறைய படங்களை பார்த்திருக்கிறோம். சினிமாவுக்கு ஏற்றார் போல் அது மாற்றப்படவேண்டும். அப்போதுதான் வெற்றிபெறும்.


பீரியட் படங்களில் நான் முதலில் கவனிப்பது மொழி. ஒரு ஆவணப்படத்தில் வேண்டுமானால் authenticity தேவை, அதை நாம் வணிகப்படங்களில் எதிர்ப்பார்க்க தேவையில்லை (ஆயிரத்தில் ஒருவன் தமிழும் திட்டப்பட்டது என்பதை கவனத்தில் கொள்க). அதற்காக சுத்தமாக சமகால தமிழிலும் கதைப்பது சரியில்லை. அந்த வகையில் அரவானில் பேச்சு மொழி எந்த நெருடலும் தராதது ஆதரவளித்தது. மேலும் கதைகளத்துக்கும் நமக்கும் ஒரு 250 வருடங்கள் தான் இடைவெளி. இதில் மொழி பெரிதாக மாறியிருக்குமா தெரியவில்லை.


சாகும் நாள் தெரிந்த பின் ஆதி முகத்தில் ஏறும் அந்த நிரந்தர சோகம் அருமை. 'நான் பலிக்கு போகல' என்று அவர் மனைவியிடம் அழுவதும் ரொம்பவே உண்மையான உணர்ச்சி. இந்த இடங்களில் இவர் உயிர் போய்விட கூடாதே என்ற நம் தவிப்பு, இறுதி காட்சியில் ஏனோ இல்லை. இதுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம் (கடைசியில் போடும் எண்டு கார்டு எதற்கு என்று கேட்பது இந்த Impact இல்லாததால்தான்). அந்த நீளமான மலை ஏறல் ஒரு காரணமா தெரியவில்லை. இதைவிட ஆதியின் நண்பர் பலியிடப்ப்படும்போது அதிக அதிர்வு இருந்தது.


இதை தமிழர்களின் வரலாறு/பெருமை என்றெல்லாம் முருகதாசுத்தனமாக உளறாமல் இருப்பது ஆறுதல். இது ஒரு மனிதனுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் கதை. இதில் அவன் சார்ந்த அந்த இனக்குழுக்களை/காலத்தை பதிவு செய்திருக்கிறார்கள். சொல்லப்போனால் தமிழர்களின் (அல்லது இந்தியர்களின்) ஒட்டுமொத்த வரலாறு என்று ஒரு படம் எடுக்கவே முடியாது. மேலும் இந்த படம் வெளிவந்திருக்கும் timing அபாரமானது. தூக்கு தண்டனை, என்கவுண்டர் போன்ற 'செய்திகளை' நாம் விவாதித்துக்கொண்டிருக்கும் போது வந்திருக்கிறது!


சிறுதெய்வங்கள் சாதாரண மக்களாக இருந்து அவர்கள் சந்ததியினரால் தெய்வமாக்கப்பட்டவர்கள். பெருதெய்வங்கள் ஒருகாலத்தில் அரசர்களாக இருந்தவர்கள் (அப்படியும் இருக்கக்கூடும்). இதுபோன்ற செய்திகளை உள்வாங்கி நுணுக்கமாக காட்ட வசந்தபாலன் போன்றவர்களால் முடியும், வெளிநாட்டு படத்தை பார்த்து அப்படியே படமெடுப்பவர்களால் முடியாது. அதனால் தான் எனக்கு இந்த படம் பிடித்தது4 comments:

பாலா said...

வசந்தபாலனின் உழைப்புக்காகவே படத்தை பாராட்டலாம்.

Riyas said...

சிறப்பான பார்வை.

தக்குடு said...

"ஒரு நிறுத்தத்திலிருந்து அடுத்த நிறுத்தம் செல்லும் நகரப்பேருந்தின் இயந்திரத்தனம் போன்ற மற்ற சினிமா விமர்சனங்களுக்கு நடுவில் உங்களுடைய சினிமா விமர்சனம் எப்போழுதுமே சுவாரசியமாக இருக்கும்" எனும் என்னுடைய நம்பிக்கை இந்த பதிவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. :)

Prasanna said...

பாலா, Riyas - மிக்க நன்றி :)

தக்குடு, this means a lot to me :)