Jan 6, 2014

என்றென்றும் புன்னகை

இது வரை வெளிவந்த இந்திய மசாலா படங்களிலேயே நேர்த்தியான திரைக்கதை அமைப்பு, நல்ல கதை, கலைத்தன்மை, இசை எல்லாம் ஒருங்கே கூடிவந்த ஒரு படம் தில் சாஹ்தா ஹை (இந்தி). மேல் தட்டு நண்பர்களின் 'பேச்சிலர் வாழ்க்கை டு கல்யாணம்' காலக்கட்டத்தை காட்டும் படம். பல தடவை பார்த்தும் அலுதத்தில்லை. இப்படி ஒரு படம் தமிழில் வர வேண்டும் என்று ரொம்ப நாளாகவே காத்துக்கொண்டு இருக்கிறேன்.

அந்த எண்ணத்திற்கு பதைப்பை ஏற்படுத்தும் விதமாக தில் சாஹ்தா ஹை படத்தில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சீன்களை சுட ஆரம்பித்தனர் சிலர். ஆனால், அந்த படம் முழுதாக சூரையாடப்படுவதற்குள்  'என்றென்றும் புன்னகை' வந்து பீரை வார்த்தது. இதில் தில் சாஹ்தா ஹை படத்தின் பாதிப்புகள் இருந்தாலும், எதையும் திருப்பி எடுக்காமல் யோசித்து வேறு கதையை எடுத்திருக்கிறார் இயக்குனர் (இன்ஸ்பிரேஷன்). ஆனால் இயக்குனரின் முதல் படமான வாமணன் பாலோயிங், எனிமி ஆப் தி ஸ்டேட் போன்ற படங்களின் கலவையாக இருந்ததால் இது சொந்த சரக்காகத்தான் இருக்கும் என்று நம்புவோமாக. குடிகாரரின் பார்வையில் வரும் அந்த சாய்வு காட்சியெல்லாம் புதுசு. இப்போது வரும் காமெடிக்குத்து படங்கள் போல் இல்லாமல், ஜாலியாக பார்க்க ஏற்ற படம்.

**

நேற்று ஏவப்பட்ட GSLV அற்புதமான ஒரு வெற்றியை இஸ்ரோவிற்கு அளித்துள்ளது. ஒரு சின்ன டவுட் மனதின் ஓரத்தில் சொரிந்து கொண்டே இருந்த எனக்கு இந்த வெற்றி புல்லரிப்பை கொடுத்தது!


முழுதும் படிக்க..

Jan 5, 2014

GSLV மற்றும் மாவோ

இரண்டு செய்திகள். முதலாவது இந்தியா ஏவப்போகும் ஜிஎஸ்எல்வி. சொன்னதை அப்படியே கேட்கும் PSLV ராக்கெட் இந்தியாவிற்கு ஒரு வரப்பிரசாதம். ஆனால் PSLVயால் அதிக எடையை சுமக்க முடியாது. இரண்டு டன்னுக்கும் அதிகமான சுமையை தூக்கிச்செல்ல வலுவான ஒரு ராக்கெட் தேவை. அதை பூர்த்தி செய்யவே ஜிஎஸ்எல்வி உருவாக்கப்படுகிறது. ஆனால் கடந்த இரண்டு தடவையுமே ஜிஎஸ்எல்வி சிறிது மக்கர் செய்துவிட்டது. இந்தியா சொந்தமாக தயாரித்த சிக்கலான கிரையோஜெனிக் என்ஜின் ஜிஎஸ்எல்வி-யின் ஹைலைட். இந்த புதிய ராக்கெட்டை கொண்டுதான் சந்திராயன்-2 போன்ற எதிர்கால விண்கலன்களை ஏவ முடியும். அதனால் இஸ்ரோவிற்கு இதை சாத்தியப்படுத்தயே ஆக வேண்டிய கட்டாயம். இன்று மாலை நான்கரை மணி வாக்கில் இதன் முடிவு தெரிந்துவிடும்.

இரண்டாவது மாவோவின் கொள்கைகளால் சீனாவில் 1960 வாக்கில் நடந்த அழிவுகள் பற்றிய ஒரு செய்தி. இந்த பின்புலன் மற்றும் அதற்கு பிறகு நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட Wolf Totem நாவலையும், அந்த காலக்கட்ட வரலாற்றையும் படிக்க ஆவல் கூடியுள்ளது. Wolf Totem ஓநாய் குலச்சின்னம் என்று மொழிபெயர்க்கப்பட்டு தமிழிலும் கிடைக்கிறது (சி.மோகன், நற்றிணை). கம்யூனிசம் சார்ந்த வரலாற்றை எப்போதும் ஒரு வித வெறுப்போடு அணுகும் இன்றைய சூழலுக்காகவே அப்போது நடந்த சம்பவங்களையும், மாவோ மூலம் கிடைத்த நன்மைகளையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகமாகிறது.

5/365


முழுதும் படிக்க..

Jan 4, 2014

தூரம்

'வெளியூரில் இருந்து வர முடியாதவர்கள் பேஸ்புக் வழியாக இறுதி சடங்கை காண்கிறார்கள்' என்கிற தகவல் கவனத்தை ஈர்த்தது. டிவியில் கேட்டது. உடனே எனக்கு எனது தாத்தாவின் இறுதி தருணங்கள் நினைவுக்கு வந்தது.

இரண்டாயிரம் வாக்கில் BSNL மற்றும் போஸ்டல் டிபார்ட்மெண்ட் வேலைநிறுத்தம் செய்திருந்த சமயம். திடீரென்று தாத்தாவுக்கு சீரியசாகி அவர் மகனுக்கு (என் அப்பா) தகவல் அளிக்க ஊரில் இருந்து பல்வேறு வழிகளில் முயல்கிறார்கள். எதிலும் பிடிக்கமுடியவில்லை. தாத்தா வேறு தன் மகனை பார்க்க வேண்டும் என்று ரொம்ப புலம்பியிருக்கிறார். கடைசியில் எப்படியோ ஒரு தந்தி வந்து சேர்ந்து நாங்கள் போய் சேருவதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.

ஒரு வேளை அப்போது பேஸ்புக், ஸ்கைப் எல்லாம் இருந்திருந்தால் போவதற்கு முன் வீடியோ கால் செய்து பேசியிருப்போமா?

சந்தேகம்தான்.

4/365


முழுதும் படிக்க..

Jan 3, 2014

மறக்காத ஒரு கனவு

கதை சொல்வது போல் ஆரம்பமாகும் பாடல்கள் எப்போதுமே எளிதில் கவர்ந்து விடுகின்றன
"ஒரு மலையோரம் 
அங்கு கொஞ்சம் மேகம், 
அதன் அடிவாரம் ஒரு வீடு" 
என்கிற அவன்-இவன் பாடல் மாதிரி.

'தற்செயலாக' இன்றும் 'ஒரு நாள் ஒரு கனவு, அதை மறக்கவும் முடியாது' பாடலை கேட்க வேண்டியதாகிவிட்டது. கண்ணுக்குள் நிலவு என்கிற பாசில் படம். பாசில் படம் என்றதும் மப்பும் மந்தாரமுமான மாலை மஞ்சள் நினைவுக்கு வருகிறதே, ஏன்?

ஆனால் ஒன்று. குழந்தையின் கன்னம் போன்ற மென்மையை இசையில் வடித்தால் ஒரு நாள் ஒரு கனவு பாடல் போல்தான் இருக்கும். மென்மைக்கு காரணம் இசையா, வரிகளா? இந்தளவிற்கு ஒரு மேகத்தொடுதலை 'பூவே செம்பூவே' போன்ற பாடல்களில் அனுபவித்ததுண்டு.

தெரிந்துவிட்டது. அந்தளவு மிருதுத்தன்மை கூடி வர காரணம் அப்பாடல்களை பாடிய ஜேசுதாஸ்!

3/365



முழுதும் படிக்க..

Jan 2, 2014

படித்த முதல் நாவல்

'நீங்கள் படித்த முதல் நாவல் எது?' என்கிற கேள்வி இன்று என்னை கவர்ந்தது. காரணம், யோசித்தாலும் அது எனக்கு சரியாக நினைவுக்கு வரவில்லை. குட்டிக்கதைகள், நீதிக்கதைகள், சிறுகதைகள் என்று சிறுவயதில் இருந்தே படித்தாலும் முதல் நெடுங்கதையை எப்போது படித்தேன், அது என்ன என்பது நினைவில் வர மறுத்தது. பள்ளி நாட்களில் பொன்னியின் செல்வனை கூட நாவலாக அல்லாமல் கல்கியில் தொடர்கதையாகவே படித்தேன்.

நினைவில் தட்டுபட்டபடி, முதல் நாவல் சிட்னி ஷெல்டனின் Master of the game என்று நினைக்கிறேன். வறுத்தெடுத்த ஒரு என்.சி.சி கேம்பில் எனக்கு ஆசுவாசமளித்த புத்தகம். புத்தகத்தை கடன் வாங்கி இருக்கிறேன் என்பதையே மறந்து (அதான) எந்நேரமும் நானே படித்துக்கொண்டிருந்தேன். அதன் விஸ்தாரம் கொடுத்த பிரமிப்பில் சிட்னி மாபெரும் இலக்கியவாதி என்றெல்லாம் கூட நினைத்திருந்தேன்.

பிறகு விடுதிக்கு திரும்பியதும், தமிழில் ஏதாவது ஆரம்பிப்போம் என்று எப்படியோ என்னிடம் வந்து சேர்ந்த சுஜாதாவின் 'நில்லுங்கள் ராஜாவே' ஆரம்பித்தேன்.

திடீரென்று ஒரு நாள் மனைவி, நண்பர்கள், குழந்தைகள் அனைவரும் 'யார் நீ?' என்று உங்களைப்பார்த்து கேட்டால் எப்படி இருக்கும்? அதுவும் உங்கள் இடத்தில் வேறொருவன் இருக்கிறான். அவனைத்தான் நீங்கள் என்று எல்லோரும் நினைத்துக்கொள்கிறார்கள். அனைவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் நாடகமாட வாய்ப்பே இல்லை. இப்படி ஒரு சிக்கலான சூழலில் சிக்கிக்கொள்கிறார் ஒருவர். சிக்கலை தீர்க்கிறார்கள் கணேஷ்-வசந்த் (கிட்டத்தட்ட பாதி கதை முடிந்த பிறகு தான் இவர்களின் என்ட்ரி).

ஒரே மூச்சில் இந்த கதையை படித்ததும், சிட்னியாவது சட்னியாவது என்று ஆகிவிட்டது எனக்கு. அன்று முதல் பலரையும் போல் எனக்கும் சுஜாதா பிடித்தமானவராகிவிட்டார். இன்றும் கூட படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு நான் முதலில் பரிந்துரைப்பது சுஜாதா கதைகளே. தோரணம், சீரியல் லைட்டுலாம் போட்ட நல்ல அலங்காரமான வாசல் அவர் (இவரைப்பற்றிய  உவமைகள் வேகமாக தீர்ந்துகொண்டிருக்கிறது).

சரி, நீங்கள் படித்த முதல் நாவல்?


முழுதும் படிக்க..

Jan 1, 2014

கவர்ந்த விஷயம் - 365 நாள் பிராஜக்டு

365 நாள் பிராஜக்டுகள் என்றழைக்கப்படும் பதிவுகள் வலையில் ஏற்கனவே பிரபலம். ஏதாவது தலைப்பை தேர்ந்தெடுத்து, அது குறித்து தினம் ஒரு பதிவு போடுவது அதன் தார்ப்பாய் (தாத்பரியம்).

அன்றன்றைய தினத்தில் 'கவர்ந்த விஷயம்' (கவி) ஒன்றை பற்றி எழுதலாம் என்று எனக்கு ஒரு எண்ணம். இந்த பிராஜக்ட் ஆரம்பிக்க ஒரு முக்கிய காரணம், ஜனவரி ஒன்று. வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கக்கூடிய 365 பிராஜக்டை கழுதைய புத்தாண்டு வந்து விட்டதே என்கிற காரணத்திற்காக நானும் ஆரம்பிக்கிறேன். எனக்கு தெரிந்து லதாமகனும், கருப்பையாவும் இரண்டு புதிய முன்னூற்று அறுபத்தைந்தை ஆரம்பிக்கிறார்கள் - இரண்டுமே கவிதைகள் பற்றி!

பொதுவாக இப்படி பிராஜக்டுகள் தனி வலைத்தளத்தில் ஆரம்பிக்கப்படுகிறது. சும்மா இருக்கும் கொத்து பரோட்டா துருப்பிடிக்காமல் இருக்க, இதிலேயே என்னுடைய முன்னூற்று அறுபத்தைந்தை எழுதுகிறேன். 'கவர்ந்த விஷயம்' என்கிற தலைப்பை நான் தேர்ந்தெடுக்க 'முக்கிய' காரணம், ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் எழுதுவதெல்லாம் ரொம்ப கஷ்டம் ப்ரோ. இப்படி பொதுவான தலைப்பாக இருந்தால் சுலபமாக ஜல்லியடிக்கலாம். மேலும் எதிலும் கமிட் ஆவதே எனக்கு ஒவ்வாததால், இந்த பதிவுகள் எல்லாம் ஒரு மாதத்துக்கு மேல் தாண்டுகிறதா, பார்ப்போம். இத்தனை கஷ்டப்பட்டு இதை எழுதியே ஆகணுமா என்று நினைப்பவர்களுக்கு - தினம் மார்ச் பாஸ்ட் செய்து கட்டுக்கோப்பாக இருக்கும் ராணுவத்தை போல் இதில் கிடைக்கும் நன்மைகள் பல; என்பது இப்படி பதிவிடுகிறவர்களின் அபிப்ராயம். செய்துதான் பார்ப்போமே?

இன்றைக்கு கவர்ந்த விஷயம் இந்த 365 நாள் பிராஜக்டுகள் தான். இன்னிக்கு கோட்டா ஓவர்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


முழுதும் படிக்க..

Nov 13, 2013

பிரசுரமான படைப்புகள்..

வேறு தளங்களிலும், அச்சிலும் வெளிவந்த எனது படைப்புகள் சில.. ஒரு தொகுப்பிற்காக..

முட்டை (சிறுகதை மொழிபெயர்ப்பு) by Andy Weir (The Martian novelist)
பதாகை (ஜனவரி 2016)
பதாகை இணைய இதழ்


வால்விழுங்கி நாகம் (அறிவியல் புனைவு)
சொல்வனம் (நவம்பர் 2014)
http://solvanam.com/?p=37142


சக்கரம் (அறிவியல் புனைவு)
தினமலர் (ஆகஸ்ட் 2014)
http://www.dinamalar.com/E-malar.asp?ncat=787#top


இரண்டாவது முகம் (புத்தக மதிப்புரை)
மதிப்புரை.காம் (நவம்பர் 2014)
http://mathippurai.com/2014/11/04/second-face/


தகவல் தொழில்நுட்பத் துறை : உள்ளும் புறமும் (கட்டுரை)
ஆழம் இதழ் (ஜூலை 2014):
http://www.aazham.in/?p=4118


பிட்காயின் என்றொரு அதிசயம் (கட்டுரை)
ஆழம் இதழ் (மார்ச் 2014):
http://www.aazham.in/?p=3868


நான் ஈ ரீடர் (ஈ புத்தக ரீடர்கள் பற்றிய அறிமுகக்கட்டுரை)
ஆழம் இதழ் (ஜனவரி 2014):
http://www.aazham.in/?p=3769


மங்கள்யான் : செவ்வாய் செல்லும் இந்தியன் (கட்டுரை)
தமிழ்பேப்பர் (நவம்பர் 2013)
http://www.tamilpaper.net/?p=8413


வாயேஜர் - முடிவில்லா பயணி (கட்டுரை)
கீற்று (அக்டோபர் 2013)
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=25195:2013-10-16-07-56-54&catid=20:space&Itemid=106


திருத்தகம் (சிறுகதை)
திண்ணை (ஆகஸ்ட் 2011)
http://puthu.thinnai.com/?p=3594


85-65-75 : கதை... ஆனால் கதை இல்லை! (சிறுகதை மாதிரி)
யூத்புல் விகடன் (2009)
http://tamilkothu.blogspot.com/2009/12/85-65-75.html


முதல் வேலை (அனுபவம்)
யூத்புல் விகடன் (2010)
http://tamilkothu.blogspot.com/2010/03/blog-post_25.html


வலைபாயுதே (ட்வீட்ஸ்)
ஆனந்த விகடன் (2010)
http://tamilkothu.blogspot.com/2010/10/blog-post.html


குள்ள மனிதன் (ஃபேண்டசி சிறுகதை)
கோகுலம் (1996?)
பதிப்பு கைவசம் இல்லை

முழுதும் படிக்க..

மங்கள்யான் - செவ்வாய்க்கு செல்லும் இந்தியன்

செவ்வாய் கிரகத்துக்கு (Mars) 'ராக்கெட் விடுவது' என்பது அத்தனை அபூர்வமான செய்தியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதை இந்தியா அனுப்புகிறது என்பது பெருஞ்செய்தி. இதுவரை அந்த கிரகத்தை அடைய எடுத்த நாற்பதுக்கும் மேற்பட்ட முயற்சிகளில் பாதிக்கும் மேல் தோல்வி என்பதும் இத்திட்டத்திற்கு கூடுதல் கவனத்தை ஏற்படுத்தி விட்டது. இத்தனைக்கும் அனுப்பியவர்கள் அனைவரும் விண்வெளி ஆராய்ச்சியில் நம்மை விட முன்னேறியவர்கள்.

ஒப்பு நோக்கு அளவில் மற்ற நாடுகளின் மார்ஸ் திட்டங்களை விட, நமது மங்கள்யான் குறைந்த செலவில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் நாசாவும் செவ்வாய்க்கு MAVEN என்கிற விண்கலத்தை அனுப்புகிறது. கிட்டத்தட்ட இந்தியாவின் (450 கோடி) செலவை விட பத்து மடங்கு அதிகம் எப்படி விண்கலத்தை குறைந்த செலவில் செவ்வாய்க்கு கொண்டு சேர்க்கப்போகிறது இஸ்ரோ? 

வேகப்பந்து வீச்சாளர் போடும் பந்தில் இருக்கும் வேகம் போல், பிரபஞ்சமே நமக்கு அபிரிமித சக்தியை வழங்கி உள்ளது. அந்த சக்தியை திறமையான பேட்ஸ்மேன் போல் உபயோகித்து பந்தை இலக்குக்கு அனுப்பவேண்டும். இங்கு நாம் உபயோகிக்கபோவது பூமியின் ஈர்ப்பு சக்தியை. இதை விளக்க மற்றொரு விளையாட்டை துணைக்கு அழைப்போம். வட்டெறிதல் தெரியுமா? Discus Throw என்று 'தமிழில்' சொல்வோமே? அதை கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த வீரர்கள் சில தடவைகள் சுழன்று, ஒவ்வொரு சுற்றுக்கும் வேகம் பெற்று கடைசி சுற்றில் வட்டை அப்பால் எறிவார்கள். கீழே இருக்கும் படத்தில் கிருஷ்ணா பூனியா தான் பூமி. வட்டு தான் மங்கள்யான்.



ஆக PSLV ராக்கெட்டை கொண்டு விண்கலத்தை பூமியின் சுற்றுப்பாதையில் தான் இப்போது சேர்த்திருக்கிறோம், அதற்கு மேல் அனுப்புவது பூமியின் சக்தி மற்றும் கலத்திலேயே இருக்கும் சிறிய எஞ்சின்+எரிபொருள். ஒவ்வொரு சுற்றுக்கும் கலத்தில் இருக்கும் எரிபொருளை கொண்டு கலத்தின் சுற்றுப்பாதையை விரிவாக்க (அதாவது) வேகத்தை அதிகரிக்க சின்ன திருத்தம் செய்யப்படும் - கடைசி சுற்றில் செவ்வாயை நோக்கி மங்கல்யானை கடாசிவிட வேண்டியது. கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும் இது மிக சிக்கலான விளையாட்டு - நவம்பர் இறுதியில் இதன் முடிவு தெரியும். இதற்கு மாறாக நாசா அனுப்பும் ராக்கெட்டோ சக்தி வாய்ந்தது - நேரடியாக செவ்வாய்க்கு செல்லும் பாதையில் கலத்தை செலுத்தி விடுகிறது. அதனால் அதிக செலவு, ஒப்பீட்டளவில் சுலபமானது (நாசாவின் அதிக செலவுக்கு வேறு சில காரணிகளும் உண்டு).

இந்த முதல் வெற்றியை விட முக்கியமான வெற்றி செவ்வாயை நெருங்கும்போது தேவைப்படுகிறது. விண்கலத்தை செவ்வாயின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்துவது என்பது அத்தனை சுலபம் அல்ல. கிரிக்கெட்டில் wide ball மாதிரி விண்கலம் செவ்வாயின் கையில் சிக்காமலே போய் விடக்கூடும்; ஒரே வித்தியாசம் இங்கு பவுண்டரியே கிடையாது (ஜப்பானின் கலம் இப்படித்தான் வழுக்கிக்கொண்டு செவ்வாயை கடந்து சென்று விட்டது). மேலும் கதிர்வீச்சுகளால் விண்கலத்திற்கு பாதிப்புகள் வரக்கூடும். பத்து மாதங்கள் அண்டத்தின் குளிரில் பயணித்த பிறகு, கலத்தின் இயந்திரங்கள் மீண்டும் ஒழுங்காக உயிர் பெற வேண்டும். இப்படி பல 'டும் டும் டும்'கள். இதன் முடிவு Sept. 24, 2014 அன்று தெரிந்துவிடும்.

எதற்கு இத்தனை சிரமப்பட்டு அனுப்புகிறோம்? செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் எப்படி இல்லாமல் ஆனது, உயிர்கள் இருப்பதற்கு அறிகுறியான மீத்தேன் உண்டா, மண் மற்றும் கனிம வளங்களை அளப்பது போன்ற ஆராய்ச்சிகளை மங்கள்யான் மேற்கொள்ளும். ஆனால் மற்ற கிரகங்களுக்கு விண்கலன்களை அனுப்பும் அந்த மாபெரும் ஞானம் - அதை வளர்த்துக்கொள்வது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். டூர் போய் விட்டு கேமரா இல்லை என்றால் எப்படி? மங்கல்யானில் ஒரு கலர் கேமராவும் உண்டு. இந்த உபகரணங்களின் மொத்த எடையே பதினைந்து கிலோதான். இவை தங்களுக்கு தேவையான மின்சக்தியை சூரிய ஒளியில் இருந்து பெற்றுக்கொள்ளும்.

எப்படி தரையில் இருந்துகொண்டு கலத்தை இயக்கப்போகிறோம்/செய்திகளை பெறப்போகிறோம்? பெங்களூர் தான் தலைமை கட்டுப்பாட்டகம். அதனருகே உள்ள deep space network (பெரீய்ய ஆண்டனாக்கள்) மற்றும் தரைக்கட்டுப்பாட்டு அறைகளுடன் இதற்காகவே பிஜி  தீவுக்கருகே இரு கப்பல்கள் தேவையான இயந்திரங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாசாவின் deep space network-ம் இதில் நமக்கு சிறிது உதவ போகிறது. கட்டளைகளை கலத்திற்கு பிறப்பித்துவிட்டு, அதன் முடிவு நமக்கு தெரிய 6-45 நிமிடங்கள் வரை ஆகலாம். மிக மெதுவான இணைய இணைப்பு உள்ள கணினியில் ஒரு லின்க்கை அமுக்கி விட்டு அந்த வலைத்தளம் திரையில் தோன்றும் வரை திட்டிக்கொண்டே காத்திருப்போமே, அது மாதிரி. இதனாலும் கூடுதல் சிக்கல்கள்.

இப்போதுதான் நாம் நிலவையே நெருங்கினோம். அதற்குள் கடினமான செவ்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதுவும் இத்திட்டம் பிரதமரால் அறிவிக்கப்பட்டது 2012ல். அதன்பிறகு ஒரே வருடத்தில் செயற்கைக்கோள் தயார்! ஏன் இந்த அவசரம்? சீனாவின் சமீபத்திய செவ்வாய் திட்டம் தோல்வி, அதனால் கூட நாம் வேக வேகமாக அனுப்பி அவர்களை முந்துகிறோம் என்று ஒரு கருத்து. இது cold war டைப் சண்டைகளை விரும்பும் மேலை நாடுகளால் சொல்லப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அரசால் இது ஒரு சாதனையாகக்கூட காட்டப்படக்கூடும். ஆனால் இதெல்லாம் பல ஆண்டுகள் முன்னமேயே தொலைநோக்காக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது, மற்ற நாடுகளின் திட்டங்களோ, தேர்தல்களோ நம் திட்டங்களை மாற்றி அமைக்க முடியாது என்று ISRO கூறுகிறது ('நமக்கு நாம்தான் போட்டி').

இந்தியாவை பொறுத்தவரை இது ஒரு 'காஸ்ட்லி' திட்டம்தான். இந்த பணத்தில் நிச்சயம் சுகாதாரமான கழிவறைகளை கட்டமுடியும். பாதாள சாக்கடைகளை சுத்தப்படுத்தும் கருவிகளை கண்டுபிடிக்கலாம். இவை ஒரு செயற்கை கோளை விட முக்கியமும் அவசியமும் கூட. ஆனால், எது முக்கியம் என்பதை விட எது அவசியம் என்பதில் இதற்கு ஒரு விடை கிடைக்கக்கூடும். பல ஆயிரம் கோடிகளை கொட்டி சிலைகளை வைப்பது, உயிர்களை கொல்லும் ஆயுதங்கள் தயாரிப்பது போன்ற தேவையில்லாத திட்டங்களில் போடப்படும் பணத்தை, மனிதனின் அறிவை பல மடங்கு பெருக்கும் ஒரு விஞ்ஞான முயற்சியில் போடுவது நல்லது அல்லவா? செவ்வாய் என்பது நிச்சயம் அடைய வேண்டிய, பெருமையான ஒரு இலக்கு. பிரபஞ்சத்தை அளக்க சந்திராயான் நாம் வைத்த முதல் அடி. மங்கள்யான் இரண்டாவது.

நன்றி:
http://www.isro.org/mars/home.aspx
விக்கிபீடியா


(தமிழ்பேப்பர் இணையதளத்தில் வெளிவந்த கட்டுரை)
(திருத்தப்படாதது)


முழுதும் படிக்க..

Nov 1, 2013

வாயேஜர் - முடிவில்லா பயணி

குழந்தையின் அழுகை. முத்தச்சத்தம். ஐம்பத்தைந்து மொழிகளில் வாழ்த்து செய்தி. திமிங்கலம் கத்தும் ஓசை. இதனுடன் மொசார்ட் (Mozart) போன்றோரின் இசை.

தொலைக்காட்சியை வேகமாக மாற்றும்போது கேட்பது போல், மேலே சொல்லப்பட்ட சம்பந்தம் இல்லாத ஒலிகள் ஒன்றாக பதிவு செய்யப்படுகிறது. அதுவும் தங்கமுலாம் பூசிய கிராமபோன் ரெக்கார்ட் போன்ற தகடுகளில். யாருக்காக? அத்தனை விசேசமா அந்த நபர்?

1977-ல் அமெரிக்கா ஏவிய செயற்கை கோளான வாயேஜரில் இந்தத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. பல்லாயிரம் வருடங்கள் கழித்து இந்த ஓசைகளை கேட்கப்போகும் நபர் கேவலமான தோற்றம் கொண்ட ஒரு வேற்றுகிரகவாசியாக இருப்பார் என்பது நம்பிக்கை. பூமி, மனிதகுலத்தின் தோற்றம்/வளர்ச்சி பற்றி, மேலும் தகட்டை எப்படி இயக்குவது போன்ற தகவல்களும் அதிலேயே உண்டு.

பெரும் பயணம்:
1970-களில் பெரும் பயணம் என்ற நாசாவின் திட்ட நோக்கம் சூரிய குடும்பத்தின் வெளிப்பகுதிகளை ஆராய்வது. எழுபதுகளின் பின் பகுதியில் யுரேனஸ், வியாழன், சனி, நெப்ட்யூன், ப்ளூட்டோ போன்ற கிரகங்கள் சீரான வரிசையில் அமையும் அரிய நிகழ்வு விண்வெளியில் நடந்தது (அஜீத்தும் விஜய்யும் சந்தித்துக்கொள்வதை போல் அரியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்). அந்த படிக்கட்டு போன்ற வரிசையை சரியாக உபயோகித்தால், உண்டிவில்லில் கல்லை வைத்து அடிப்பது போல் குறைந்த சக்தியில் செயற்கைகோளை எளிதில் மிக அப்பால் அனுப்பலாம். ஆனால் பணப்பற்றாக்குறையால் அந்த திட்டம் முழு வெற்றியடையவில்லை. ஆனால் அதன் பயனாக நமக்கு கிடைத்தது வாயேஜர் திட்டம், முந்திரி ஸ்வீட் வாங்க போய் காசில்லாமல் பால் ஸ்வீட் வாங்கிய மாதிரி..


1977-ல் வாயேஜர் 1, 2 என்று சிறிய அளவு காரின் எடை கொண்ட இரட்டை விண்கலன்கள் முதலில் ஏவப்பட்டது வியாழன் மற்றும் சனியை ஆராய. அனுப்பிய வேலை முடிந்ததும் அப்படியே விட்டு விடாமல், 'இவனெல்லாம்  அப்படியே போக விட்றணும்' என்று அதற்கு மேலும் பயணிக்க விட்டு விட்டார்கள். சனி பார்வை பட்டால் ஆகாது என்று இங்கு ஒரு மூட நம்பிக்கை. வாயேஜர் இரட்டையர்கள் சனியையே பார்த்துவிட்டு அப்பால் கிளம்பியவர்கள். 

இந்த இரு கலன்களும் சேகரித்த, சேகரித்துக்கொண்டிருக்கும் தகவல்கள் இதுவரை ஏவப்பட்ட செயற்கை கோள்களிலேயே அதிக உபயோகமாக இருப்பவை. சனியின் வளையங்களை பற்றி, வியாழனுக்கும் (யுரேனஸ்/நெப்ட்யூன்-க்கும் கூட) வளையங்கள் உண்டு, யுரேனஸ்/நெப்ட்யூன் போன்ற கிரகங்களின் காற்றுவெளி, வியாழனின் துணை கிரகமான ஐயோ (Io)வில் எரிமலை உண்டு போன்ற என்னற்ற செய்திகளை நமக்காக கொடுத்தன இந்த கலன்கள். 1990 வாக்கில் வாயேஜர்1-ன் கேமராவை திருப்பி எடுக்கப்பட்ட சூரியக்குடும்ப புகைப்படம் மிகவும் பிரபலம். பூமி அதில் ஒரு நீலப்புள்ளி.

அது இருக்கட்டும். முப்பத்தைந்து வருடங்கள் கழித்து இப்போது என்ன வந்தது வாயேஜருக்கு? மனிதன் செய்த பொருட்களிலேயே அவனிடமிருந்து மிகத்தொலைவில் இருக்கும் பொருள் வாயேஜர் - நமது சூரிய குடும்பத்தின் எல்லையை தாண்டும் முதல் மனித சகவாசம் கொண்ட பொருள் அதுவே! சென்ற வருடம் அந்த எல்லையை தாண்டி, நட்சத்திரங்களுக்கிடையில் இருக்கும் வெளியில் தற்போது பயணித்துக்கொண்டு இருக்கிறது. ஹீரோயின் வீட்டை விட்டு ஓடி போய் கொஞ்சம் லேட்டாக தெரிந்து துரத்த ஆரம்பிப்பார்களே, அது மாதிரி எல்லையை தாண்டிவிட்டது என்று நமக்கு தெரிந்தது இப்போதுதான்.

தங்கத்தகடு:
முதலில் சொன்ன அந்த தகட்டை பற்றி பல ரசிக்கக்கூடிய தகவல்கள் உண்டு. பூமியை பற்றியும் மனிதர்களை பற்றியும் வேற்று ஜீவன்களுக்கு தெரிவிக்க முனையும் இந்த 'காலப்பெட்டி'யில் மனிதனின் தோற்றம்/வளர்ச்சி போன்றவற்றை விளக்கும் 115 படங்கள், இந்திய சங்கீதம் உட்பட பல நாட்டுக்கலைஞர்களின் இசைக்கோர்வைகள் ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள் சொல்லப்பட்ட ஐம்பைத்தைந்து மொழிகளில் கன்னடம், தெலுங்கு போன்ற இந்திய மொழிகளும் உண்டு (தமிழ் இல்லை). அவைகளை இங்கு சென்று கேட்கலாம்: http://voyager.jpl.nasa.gov/spacecraft/greetings.html. அதே தகட்டில் இடம் பெற்றுள்ளார் பல்கேரிய நாட்டுப்புற பாடகர் வல்யா. அவர் நாட்டை சேர்ந்த பலரே அறியாத அவரின் குரல், பல்லாயிரம் வருடங்களாக அண்டத்தை சுற்றிக்கொண்டிருக்கும்!

இத்தகட்டை ஒருங்கிணைத்த குழுவின் தலைவர் உலகப்புகழ் பெற்ற அறிஞர் கார்ல் சாகன். இந்த கலன் எல்லையை தாண்ட நிறைய வாய்ப்புண்டு என்று பார்த்து பார்த்து தகவல்களை பதித்தவர். காசட்டில் பல படங்களில் இருந்து கலவையாக பிடித்த பாடல்கள் மட்டும் பதிவு செய்துகொண்டு திரிவோமே, அது மாதிரி (காசட்லாம் போன தலைமுறை ஆகிவிட்டதோ?).

அதன் உள்ளடக்கத்தை பலர் பாராட்டினாலும், 'இருக்கும் இடம் முதற்கொண்டு நம்மை பற்றி அத்தனை தகவல்களும் வேற்றுலகவாசிகள் தெரிந்து கொண்டால், நம்மை அவர்கள் அழிப்பதற்கு நாமே திட்டம் போட்டு கொடுப்பதாகாதா?' என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. வெளியாள் என்றாலே நம்மை அழிக்கத்தான் போகிறான் என்கிற மனித பயத்தில் இருந்து உருவாகும் எண்ணம் -பக்கத்து வீடு/ஊர், பக்கத்து நாட்டு மக்களை காரணமே இல்லாமல் எதிரியாக நினைக்கிறோமே? அது போல்.

கார்ல் சாகன் பதிலளிக்கிறார்:
"நாம் அன்றாடம் உபயோகிக்கும் தொலைக்காட்சி அலைகள் கொண்டு கூட நம் இருப்பிடத்தை எளிதில் கண்டுகொள்ளலாம்" (கொல்லலாம் இல்லை); "அப்படி வருபவர்களிடத்தில் நட்பாக இருக்க நாம்தான் கொஞ்சம் முயல்வோமே?"
மேலும், "இந்த தகட்டை படிக்க 'அவர்கள்' கொஞ்சமேனும் முன்னேறியிருக்க வேண்டும். ஆனால் இந்த பாட்டிலை விண்வெளிக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் இப்புவியின் உயிர் பற்றிய மிக நம்பிக்கையான ஒரு செய்தி அறிவிக்கப்படுகிறது அல்லவா?"

பயண முடிவு?
இப்போது வாயேஜரின் கேமராக்கள் அனைத்து வைக்கப்பட்டுள்ளன. ஏன்? சுற்றுலா போய் விட்டு எப்போது நாம் போட்டோ பிடிப்பதை நிறுத்துவோம்? அதேதான். பேட்டரி பிரச்சினை. மினி ப்ளூட்டோனியம் ரியேக்டர்கள் மூலம் கிடைக்கும் சொற்ப சக்தியை கொண்டு தற்போது இயங்கும் வாயேஜர், இன்னும் 12 ஆண்டுகளில் சுத்தமாக சார்ஜ் இல்லாமல் போய்விடும். அதனால் முடிந்தளவு தேவை இல்லாத சாதனங்களை அணைத்து வைத்துவிடுகிறார்கள். சில அதுவாகவே செயலற்று போய் விட்டது; Cosmic Ray System போன்ற சாதனங்கள் பிரதிபலன் பாராமல் இன்னும் உழைக்கிறது. மின்சக்தி எல்லாம் தீர்ந்து போய் அதற்கும் மனிதனுக்கும் நடக்கும் கடைசி பரிவர்த்தனை 2025 வாக்கில் இருக்கும். அதற்கு பிறகு நாம் இருப்போமோ இல்லையோ, பல ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வருடங்களுக்கு வாயேஜர் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

நன்றி/ஆதாரம்: http://voyager.jpl.nasa.gov/


(கீற்று தளத்தில் வெளிவந்த கட்டுரை)
முழுதும் படிக்க..