Nov 26, 2010

நந்தலாலா - நாவலான கவிதை புத்தகம்

ரொம்ப நாள் கழித்து முதல் நாளே ஒரு திரைப்படத்தை பார்த்தேன். முதல் முறை சுடச்சுட படப்பார்வையும் (இதை விமர்சனம்னு சொல்ல முடியுமா தெரியலை). மிஷ்கின் என்ற பெயர் மீது இருக்கும் ஒரு ஈர்ப்பே காரணம்.

15-20 சிறுகதைகள் கொண்ட ஒரு தொகுதியினை படித்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது இப்படம் (கவிதையை ரசிப்பவர்களுக்கு கவிதைத்தொகுதி). சிறுவயதில் தொலைத்த தன் தாயை தேடிப்போதல் என்ற ஒற்றை இலக்கில், இச்சிறுகதை தொகுதி நாவலாக உருப்பெறுகிறது!


மனநலம் பாதிக்கப்பட்ட மிஷ்கின் மற்றும் ஒரு சிறுவன் தங்கள் தாயை தேடி போகும் பயணமே படம். எல்லா பயணத் திரைப்படங்களும் போலவே, இதிலும் பயணத்தின் மூலமாக வாழ்க்கையை, அதன் சாராம்சத்தை சொல்கிறார்கள். வழியில் சேட்டை செய்கிறார்கள். அடி வாங்குகிறார்கள். தாய்களை பார்க்கிறார்கள். பலருக்கு தாய் ஆகிறார்கள்.

நாயகர்கள் இருவரையும் எப்படிப்பட்டவர்கள் என்று முதலில் சொல்லி விடுகிறார்கள். அதனால் ஒவ்வொரு சிறுகதையிலும், கணேஷ், வசந்த்தை போல (போலதான். அவர்களே அல்ல) அவர்கள் நமக்கு நன்கு தெரிந்தவர்களே. புதிதாக வரும் பாத்திரங்களை கொண்டு கதைகள் சொல்லப்படுகிறது. நாயகர்களும் தங்கள் இலக்கை நோக்கி நகர்கிறார்கள்!

முதலில் படத்தின் சிறப்பு என்று சொல்ல வேண்டியது காட்சி அமைப்புகள். எல்லாமே புதுசு (மிஷ்கினின் ட்ரேட்மார்க் வைட் ஆங்கிள் மற்றும் கால்களை மட்டும் காட்டும் காமிரா). டயலாக்குகள் ரொம்ப குறைவு, உச்ச காட்சிகளில் கூட. எல்லா டயலாக்குகளையும் காமிராவே பேசுகிறது. எப்படி ஒரு காமெடியன் டயலாக் சொல்லி முடித்ததும் சிரிப்போமா, அப்படி ஒரு காமிரா அசைவிற்கு பிறகு சிரிக்கிறோம்! அழுகிறோம்! அதிர்கிறோம்! இதுவே படத்தை மிக மிக வித்தியாசமாக காட்டுகிறது. அதே போல் வசனம் பேசாமல் செயல்களின் மூலம் ரியாக்ஷன்கள் காட்டுவதும் (மிஷ்கின் ஒரு கயிறால் கட்டப்பட்ட கடிக்க வரும் நாயை போல, மெண்டல் என்று கூறிய சிறுவனை நோக்கி பாயும் காட்சி). படம் முழுக்க குறியீடுகள். அனைத்தும் புரிந்துவிடவில்லை. அதனால் திரும்ப பார்த்தால் வேறு அர்த்தங்கள் கிடைக்ககூடும்.

ஒளிப்பதிவு கொள்ளை அழகு (அந்த மஞ்சள் சலித்த மாலை வேளை!). இசை 'வழக்கம் போல' அருமை! பாடல்களை விட பின்னணி இசை அபாரம். நடிப்பு ஒரு சில இடங்களைத்தவிர அருமை. ஓவென அழும் காட்சிகளை தவித்து இருக்கலாம், காட்சிக்கவிதைகள் படைக்கும் மிஷ்கினிக்கு இது ஒன்று பெரிய விஷயம் இல்லை. நான் இன்னும் கிகுஜிரோ பார்க்கவில்லை. ஆனால் அதை அப்படியே அடிக்கும் அளவிற்கு மிஷ்கின் சுய சிந்தனை இல்லாத ஆள் இல்லை என்று நினைக்கிறேன்.

சிறுகதைகளில், ஒரு சில கதைகள் புரியாது. அதுபோல ஒரு சில காட்சிகள் தோய்வாக செல்லுவது போல தோன்றியது, அது எனக்கு புரியாததால். எனக்கு (நன்றாக இருக்கும்) மெதுவாக போகும் படங்கள் பிடிக்கும், அதனால் தடால் புடால் படங்கள் விரும்புகிறவர்கள் தவிர்க்கவும். மற்றபடி புதுமையான அனுபவம் வேண்டுபவர்கள் நிச்சயம் பார்க்கலாம்! 

14 comments:

தம்பி கூர்மதியன் said...

விமர்சனம் போதாது நண்பா.. இன்னும் விளக்கமாக எதிர்பார்க்கிறேன்.. மேலும் கதையை முழுதும் சொல்லாதீர்கள்..

Chitra said...

அப்படி ஒரு காமிரா அசைவிற்கு பிறகு சிரிக்கிறோம்! அழுகிறோம்! அதிர்கிறோம்! இதுவே படத்தை மிக மிக வித்தியாசமாக காட்டுகிறது.


.... Sounds like a good movie.

நித்யகுமாரன் said...

“நாவலான கவிதை புத்தகம்” - என்ற சொல்லாடல் இந்த படத்திற்கு மெத்த பொருந்தும்.

அன்பு நித்யன்

ப்ரியமுடன் வசந்த் said...

கதைதொகுப்பு கவிதை தொகுப்பு

நல்ல விளக்கம்

//எப்படி ஒரு காமெடியன் டயலாக் சொல்லி முடித்ததும் சிரிப்போமா, அப்படி ஒரு காமிரா அசைவிற்கு பிறகு சிரிக்கிறோம்! அழுகிறோம்! அதிர்கிறோம்! இதுவே படத்தை மிக மிக வித்தியாசமாக காட்டுகிறது. //

ம்ம் நந்தலாலா பெஸ்ட் ஆஃப் தமிழ் படம்(மிஷ்கின்)னு சொல்லுங்க!

வெடிகுண்டு வெங்கட் said...

மந்திரவாதியின் தொடுதலுக்காக காத்திருந்த சபிக்கப்பட்ட தவளை போல பலரும் மிஸ்கின் பாத்திரத்தின் மூலம் தங்களின் விமோசனத்தை எதிர் நோக்கியிருந்தனர்.
வெடிகுண்டு வெங்கட் விமர்சனம்: நந்தலாலா - தமிழ் சினிமாவின் முதல் படம்

மணிஜீ...... said...

நல்லா எழுதியிருக்கீங்க பாஸ்..

///ஆனால் அதை அப்படியே அடிக்கும் அளவிற்கு மிஷ்கின் சுய சிந்தனை இல்லாத ஆள் இல்லை என்று நினைக்கிறேன்.//

அதேதான்..புரியாதவர்கள் பிதற்றுகிறார்கள்

Balaji saravana said...

நான் இந்த விமர்சனம் படிக்கல நண்பா..
எந்தவித முன்னேறப்பாடும் இல்லாம படம் பார்த்து அனுபவிக்கப் போறேன்..
ஸோ வோட்டு மட்டும் :)

சௌந்தர் said...

உங்கள் அனுபவம் நன்றாக இருக்கிறது நானும் படம் பார்க்கணும்

Prasanna said...

தம்பி கூர்மதியன்,

நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே.. சொல்லவேண்டும் என்று நினைத்ததை எல்லாம் எழுதாமல் விட்டுவிட்டேன்.. கதையை எப்போதுமே சொல்ல மாட்டேன் :)அடுத்த முறை விலாவாரியாக எழுதுகிறேன்..

கிளைமாக்சில் மிஸ்கின் நீண்ட தூரம் நடந்து பிறகு கருப்பு திரையில் பேர் ஓடும். அது வரையிலும் யாரும் நகரவே இல்லை. ஆச்சர்யமாக இருந்தது! மேலும் நான் சென்ற காட்சிக்கு ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவும் வந்திருந்தார். எனக்கும் பிறரை போல அவர் கை குலுக்கவேண்டும் போல இருந்தது, ஆனால் வந்துவிட்டேன்..

Prasanna said...

@ Chitra,
Yes it is.. movie is a celebration of love :)

@ நித்யகுமாரன்,
மிக்க நன்றி நண்பரே :)

@ ப்ரியமுடன் வசந்த்,
ரொம்ப வித்தியாசமா இருக்கு தல.. பெஸ்ட் ஆப் தமிழ் சினிமானு சொல்ல முடியுமா தெரியல, ஆனால் one of the best!

Prasanna said...

@ வெடிகுண்டு வெங்கட்,
அற்புதமான விவரணை.. வருகைக்கு நன்றி :)

@ மணிஜீ,
மிக்க நன்றி ஜி வருகைக்கும் கருத்துக்கும்:)

@ Balaji saravana,
நானும் இதே மாதிரிதான். நான் பார்க்க விரும்பும் படத்தை பற்றி எதையும் படிக்க மாட்டேன் :) அதனாலேயே கதையை விலாவாரியாக எழுதுவதில்லை

@ சௌந்தர்,
நன்றி நண்பா.. நிச்சயம் பாருங்கள்

Cable Sankar said...

நல்லாருக்கு பாஸ்..

சிநேகிதன் அக்பர் said...

நல்லதொரு விமர்சனம்

Anonymous said...

கிகுஜிரோ
படத்தை பற்றிய அதிகாரபூர்வ இணையதளம் பார்க்க இதை அழுத்தவும் வீடியோ மற்றும் படம் பற்றிய விவரம் போன்றவைகள் உள்ளன

கிகுஜிரோ (ஒரிஜினல் நந்தலாலா ) இணைய தளம் செல்ல இங்கே அழுத்தவும்