Jan 17, 2016

வைரல் (அறிவியல் புனைவு)

வினோத தொத்து வியாதி ஒன்று பரவியது. 'இந்த நோய் எனக்கு வந்துவிடுமோ' என்று யாராவது பயந்தால், அந்த நோய் உடனே அவருக்குத் தொத்திக்கொண்டு சரியாக ஒரு நிமிடத்தில் இறப்பு. அதற்கு வாலி என்று சம்பந்தமில்லாமல் பெயர் சூட்டுவதற்குள் அப்படி ஒரு பெயரை யோசித்தவரும் பயந்து பலியானார்.

அந்த வைரஸ் பெரும் சக்தி பெற்றிருந்தது. அதற்குத் தேவையானதெல்லாம் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் மூளையில் அதைப்பற்றின பயம். உடனே பரவிவிடும். இப்படி ஒன்று பரவுகிறது என்று செய்தி வாசிப்பாளர் வாசித்ததுமே ஒரு நிமிடத்தில் இறந்தார். ஒரு சிலர் செய்தி வாசிக்கும்போது யோசிப்பதில்லை என்பதால் அவர்கள் மட்டும் அப்போதைக்குத் தப்பி பிறகு பொறுமையாக இறந்தனர். செய்தி எழுதுபவர்களுக்கும் அதே தான் நடந்தது.

இந்த நோய் ஏற்கனவே கூட ஒருமுறை தோன்றியிருக்கிறது. ஆனால் அப்போது இது சிந்தனையினால் பரவும் என்று தெரியாததால் முதல் சில பேருடன் அமுங்கிவிட்டது. இந்த தடவை பேரழிவை ஏற்படுத்திவிட்டே மறையும் போல் தோன்றுகிறது. பேஸ்புக், ட்விட்டரிலும் அந்த நோயைப்பற்றி பகிர்ந்து பரப்பிக் கொத்துக் கொத்தாக இறந்தனர். பரப்பினால் பரவும் என்று தெரிந்தாலும் பரப்பினார்கள். இனி இந்த நோயைப்பற்றி யாரும் பேசக்கூடாது என அரசு தடை பிறப்பித்தது. ஆனால் தடையாணை வெளியிடுவதற்குள் அதிகாரிகள் அனைவரும் இறந்தனர். ஆனால் உப விளைவாக ஒரு நிமிட அன்பு ததும்பி ஓடியது. முந்தைய நிமிடம் வரை வெறுப்பை உமிழ்ந்தவர்கள் கூட பயந்ததும் கடைசி நிமிடத்தில் அனைவரிடமும் பரபரப்பான அன்போடு பழகினார்கள்.

கடைசியாக எஞ்சியவர்கள் குழந்தைகள், சுயமாக யோசிக்க முடியாத மனநிலை சரியாக இருந்தவர்கள் (இறந்தவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் என்று மாற்றி அழைக்கப்பட்டனர்), செய்தி பரவ முடியாத இடத்தில் இருந்த ஆதிவாசிகள் போன்றவர்கள்.

இவர்களுடன் அம்மாபாக்கம் ஏரியா பஞ்சாயத்து தலைவரும் பிழைத்தார். இப்படி ஒரு நோய் பரவுவதாகச் சொன்ன உதவியாளரிடம் அவர் கேட்டார், "இந்த பிரச்சினையில நமக்கு பணம் எதுவும் கிடைக்க வழியிருக்கா? எவ்வளவு தேறும்?"
உதவியாளர் பதிலேதும் சொல்வதற்குள் இறந்து விழுந்ததும் தலைவர் நோயைப்பற்றி அதற்குப் பிறகு சிந்திக்கவில்லை.


இன்னொரு முக்கியமான விஷயம். இக்கதையின் கடைசி வரியை எழுதி முடித்ததும் கதாசிரியர் ஒரு நிமிடத்தில் மாண்டார். உங்களுக்கு இன்னும் அறுபது நொடிகள் அவகாசம்.


("ஆவி டாக்கீஸ்" குறும்பட சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை)


No comments: