Oct 29, 2009

நாயோ போபியா - பாகம் 2

எப்படி 'நாயோ போபியா பாகம் 2' படிக்க பாகம் 1 அவசியம் கிடையாதோ, அது போல மனுஷங்களுக்கும் நாய் தேவை கிடையாது. அப்படிங்கறது என் வாதம். கேக்க மாட்டீங்களே? ஒ.கே, அதுங்க அட்டூழியத்த பாருங்க..என் சிநேகிதன் வீட்டில் மிகவும் பிடித்து ஒரு நாய் வளர்த்தாங்க, சின்ன வயசில் இருந்தே (அதாவது நாயோட சின்ன வயசு).. அவனுக்கு ஒரே ஒரு குறை, அந்த நாயின் குரை (ரைமிங்கை கவனிக்க). அதாவது அது எப்போமே குரைக்காது. ரொம்ம்ப சோம்பேறி. யாராவது வீட்டுக்கு வந்தால் ஓடி போய் ஒளிஞ்சிக்கும். என்னடா இப்படி கூட ஒரு நாய் இருக்கேனு, எனக்கும் அதைப்பத்தி கேக்கும் போதே புடிச்சு போச்சு. ஒரு டூர் விஷயமா அவன் வீட்டில் நாங்க ஒரு பத்து பேர் தங்க வேண்டி வந்தது.

அவங்க வீட்டுக்குள்ளே நாங்க எல்லாம் நுழைஞ்ச உடனே பயங்கரமா கொலைக்கர (கார) சத்தம். திபு திபுனு ஓடி வந்து 'என் மேல' பாஞ்சிடுச்சு (என்னை சுத்தி பத்து பேர் இருந்தார்கள் என்பதை நினைவில் கொள்க). இப்படி பிறந்ததில் இருந்து எதுவுமே பண்ணாம, 'தூக்கத்தை அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே' என்றிருந்த அது, இவ்வளவு சுறு சுறுப்பானதில் நண்பன் வீட்டில் எல்லார்க்கும் சந்தோஷம் தான். வீட்டுக்கு அடிக்கடி வந்து போக சொன்னார்கள்.அது நடந்தது காலேஜ் படிக்கும் போது. அப்புறம் அடிச்சு புடிச்சு ஒரு வேலையில் சேர்ந்து, நைட் ஷிப்ட் பார்த்துன்னு, 'அது' என் வாழ்க்கைல கொஞ்ச நாள் காணாமல் போய் இருந்தது. ஷிப்ட் என்பதால் வீட்டுக்கு கம்பனி வண்டி அனுப்புவார்கள் (நைட் எல்லாம் எங்க தெருல நடக்க முடியாது. அவ்ளோ நாய்). வண்டிக்குள் ஒரு வசந்தம் என்பது போல் கொஞ்ச நாட்களாக என் கூட எங்க ஏரியா எம்ப்ளாயீ (பொண்ணு) ஒன்ன club செஞ்சி இருந்தாங்க (ஒரே ஷிப்டுங்கர்தால).

எங்க வீடு தாண்டி தான் அவங்க வீடு. சோ, எங்க வீட்டு வழியாத்தான் போகணும். ஒரு நாள் எங்க வீட்டை நெருங்கும் போது.. திடீர்னு எருமை மாட்ட சுத்தின ஓநாய்கள் மாதிரி ஒரு பத்து நாய் (இங்கயும்) வண்டிய சுத்தி ரவுண்ட் கட்டிடுச்சு. டிரைவர் மெதுவா ஓட்டிட்டு போனார், எங்க எதையாச்சும் ஏத்தி தொலைச்சிடுவோமோனு.

திடீர்னு அந்த பொண்ணு ஜன்னல் பக்கம் ஒரு நாய் கால் எடுத்து வச்சி பல்ல க்ளோஸ்-அப்ல காட்டி 'வவ்'னுச்சு. அவ நடுநடுங்கி போய்ட்டா (நானா? தனியா வேற சொல்ணுமா?).

வேகமா ஜன்னல சாத்தி என் பக்கம் திரும்பி, 'உங்க நாய்ங்க மாதிரி நான் எங்கயுமே பாத்தது இல்ல'னு கோவமா நடுங்கிட்டே சொன்னா; கையை கர்சீப்பால் தொடைத்து கொண்டே (நாயின் எச்சில் தெறிச்சு இருக்கலாம்)..
"ஒ, அது என் நாய்ங்க இல்ல. Stray டாக்ஸ். பயந்துடீங்களா.. ஹா ஹா ஹா"னு சத்தமாவே சிரிச்சு தொலைச்சேன் (நம்ப பய புள்ளைக்கு தான் எங்க எப்டி நடந்துக்கணும்னு தெரியாதே? பாவம்!).

'இப்போ எதுக்கு லூசு மாதிரி சிரிக்கர'ன்ற மாதிரி அவ பார்த்த பார்வை, பத்து நாய் மேல விழுந்து புடுங்குன மாதிரி இருந்துச்சு (பத்து என் ராசியான நம்பர் இல்ல போல). அதுக்கு அப்புறம் அவளை அந்த ஷிப்டில் பார்க்கலை.
இப்போ சமீபமா நடந்தத கேளுங்க.. எங்க வீட்டு பின்னாடி, நாய் ஒன்னு சுமார் 4 குட்டி (அதாவது பப்பி) போட்டுடுச்சு. எல்லாம் வித விதமான கலர்ல, அவ்ளோ சூப்பரா. குழந்தைகள் போல அதுகள் வெளயாடினத பாத்து, ஆசப்பட்டு பக்கத்து வீடுகளில் ஆளுக்கு ஒரு குட்டிய எடுத்துகிட்டாங்க. ஒன்னு மீந்தது. அதை நாம வளக்கலாமானு எங்க வீட்ல ஒரு பேச்சு வேற வந்துருக்கும் போல (நான் இல்லாத போது). எனக்கும் அந்த நாய் குட்டி அவ்ளோ பயங்கரமானதா தெரில.

ஒரு வாரம் கழிச்சு திடீர்னு அந்த மீந்த குட்டி செத்து போச்சு. ஈ மொய்த்து கொண்டு அது கிடந்த கோலத்தை பார்த்தா யாராலயும் தாங்க முடியாது. எனக்கு ரெண்டு நாளைக்கு வயிறு சரி இல்லாத மாதிரியே ஒரு பீலிங். அது செத்த அன்னிக்கி என் அக்கா அழுததை போல், வேற எதுக்கும் அவ்ளோ அழுது நான் பாத்தது இல்ல.

வள வளனு எதுக்கு பேச்சு? நாய்கள் வேண்டாம்னு சொன்னா கேட்டு தான் தொலைங்களேன்!!!

2 comments:

விக்னேஷ்வரி said...

செமையா போய்கிட்டிருந்த கதைல என்னா ஒரு வில்லத் தனமான முடிவு...
நல்லா இருந்தது. :)

பிரசன்ன குமார் said...

//விக்னேஷ்வரி கூறியது...

செமையா போய்கிட்டிருந்த கதைல என்னா ஒரு வில்லத் தனமான முடிவு//

ஆமா நல்லபடியா சொன்னா யாரும் கேக்க மாட்றாங்க. அதான் அப்படி ஒரு பிட்டு.

பின்'ஊக்கத்திற்கு' நன்றி விக்னேஷ்வரி!