May 3, 2010

உலகின் கடைசி மனிதன்

கண் முழித்து பார்த்தால், வீடு கரகர என்று அமைதியாக இருந்தது (மின்விசிறி மட்டும்). முகம் கழுவலாம் என்று போனால், குழாயில் தண்ணி வரவில்லை. என்ன, யாரும் மோட்டர் போடவில்லையா? போய் போட்டு விட்டு வந்தான். பின்னால் போகும்போது தான் கவனித்தான். பக்கத்து வீடும் அமைதியாக இருந்தது. அதற்கு வாய்ப்பு இல்லாததால், சற்று குழம்பி, இவர்களுடன் சேர்ந்து வீட்டில் இருப்பவர்கள் வெளியில் சென்று விட்டார்களா? அப்படியே வெளியில் வந்து பார்த்தால்...

வீதி அம்போ என்று தனியாக இருந்தது. கொஞ்சம் வண்டிகள் நடு நடுவில் நிறுத்தப்பட்டு இருந்தன. ஒரு வேளை, விபத்து ஏதாவது நடந்து, தெருக்காரர்கள் எல்லாம் ஆஸ்பத்திரி போயிருக்கிறார்களா?

வண்டிகளை பார்த்தான். விபத்து நடந்த மாதிரி தெரியவில்லை. அப்படியே சுற்றிலும் உள்ள வீடுகள், கடைகள்.. எல்லாமே கூட்டு களவாணிகள் போல் கம் என்று இருந்தன. பக்கத்து தெரு, அடுத்தவர்கள் வீடு என்று நுழைந்து துழாவினான். ஒரு நாய் கூட இல்லை (நாயைத்தான்). மொபைலை எடுத்து ஒவ்வொரு நம்பராக முயற்சித்து, யாரும் எடுக்காமல் போகவே, நிறுத்திவிட்டு, வீட்டிற்கு திரும்பி வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். பிரதான சாலை முதல் முறையாக யாரும் கண்டு கொள்ளப்படாமல் அமைதியாக, வண்டிகள் அங்கங்கு சிதறி இருந்தது. நெஞ்சம் திடும் திடும் என்றது.

வட இந்தியாவில் இவனுக்கு தெரிந்த ஒரே நண்பனுக்கு கால் பண்ண, 'தி நம்பர் யு டயல்ட்..' என்று சொன்ன குரல் பயமுறுத்தியது. கொஞ்ச தூரம் போய் பார்த்து விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து, அவசரமாக டிவியை போட்டான். பாதி சேனல்கள் கறுப்பு வெள்ளை ரவைகளை காட்டியது. வந்த ஒரு சேனலில் (பொதிகை) யாரோ சொரியாசிஸ் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள்.

பயம் வர ஆரம்பித்தது. முன்னாடியே ஆரம்பித்து விட்டது. இப்போது கொஞ்சம் அதிகமாக, நிச்சயமாக.. ஆங்கில படங்களில் பார்த்தது போல் எல்லாரும் இல்லாமல் ஆகி, நான் தான் கடைசி மனிதனா? அப்படியும் நடக்குமா? கொஞ்சம் யோசித்தான். வந்து மோடத்தை ஆன் செய்து (ஆன் ஆனது) கம்ப்யூட்டரை இயக்கினான். ஒன்றும் தெரியவில்லை. நேற்றைய சம்பவங்களே (வரைக்கும்தான்) இருந்தன.

யாருமே இல்லையா..? அப்பா, அம்மா, பாட்டி, சுப்பு, ஜென்சி எல்லாம் போய் விட்டார்களா? சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்தான். எத்தனை மணி நேரம் ஓடி இருக்கும் தெரியவில்லை.
இப்படி உட்கார்ந்து இருந்தால் சரிப்படாது.. சட்டென்று எழுந்து, தேவைகளை யோசித்தான். முதலில் சாப்பாடு. கடையில் இருக்கும் பொருட்கள், 3 அல்லது 4 மாதங்களுக்கு தாங்குமா? மின்சாரம்.. கண்டிப்பாக வேண்டும். இன்னும் வந்து கொண்டு இருக்கிறது, எப்போது நிற்கும் என்று தெரியாது.. இணையத்தில், ஜெனரேட்டர்களை இயக்குவது எப்படி என்று தேடி, சேமித்து வைத்துக்கொண்டான். ஏதோ பொறி தட்ட, காப்பி போடுவது எப்படி, சோறு வைப்பது எப்படி என்று ஆரம்பித்து பல தரப்பட்ட விஷயங்களை சேமித்து வைத்தான். தனக்கு எத்தனை அன்றாடம் தேவைப்படும் விஷயங்கள் தெரியவில்லை என்பது குறித்து வெட்கப்பட்டான்.

ஏதோ ஒரு நம்பிக்கையில் வெளியே வந்து, தெருவில் சாவியுடன் டக்கென்று நின்று போயிருந்த பைக்கை எடுத்துக்கிளப்பினான். திரும்பவும் தெருத்தெருவாக சுற்றினான். உயிரினங்கள் எதுவும் தட்டுப்படவில்லை.. செடி கொடிகள் மட்டும் இருக்கின்றதே..?

தான் விரும்பிய தனிமை, அபிரிமிதமாகவே கிடைத்துவிட்டது என்று திடீரென்று சந்தோஷப்பட்டான். அது அவனுக்கே ஆச்சர்யத்தை அளித்தது. பயம் வேண்டுமானால் நிரம்ப இருக்கிறது.. எது ஆனாலும், தனிமையில் பைத்தியமாக மட்டும் ஆகக்கூடாது என்று நினைத்துக்கொண்டு திரும்ப வீடு சேர்ந்தான்.. பகலில் பரபரப்பாக ஓடிய பொழுது, இரவில் மெது.......வாக நடந்தது.. தூக்கம் வரவில்லை. ஒவ்வொரு நிமிடமும் பீதியுடன் கழிந்தது..

மறு நாள் காலை, இன்னும் இருந்தான்.. ஒரு முடிவுடன், கடைகளுக்கு போய் புத்தகங்களை சேமிததான். படங்களை, இசை சிடிக்களை  சேகரித்தான். கொஞ்சம் பெரிய பக்கத்து வீட்டை தனது இருப்பிடமாக மாற்றி, ஜெனரேட்டர் இணைத்து சரிபார்த்துக்கொண்டான்.. மனிதர்கள் இருக்கும் போதே வராத மின்சாரம் இன்னும் வந்து கொண்டு இருந்தது.. அறையை விட்டு வெளியே வராமல், பல வருடங்களாக புத்தகங்களை மட்டுமே படித்து வாழ்ந்தவர்களை பற்றி படித்திருப்பதை நினைவு படுத்தி, அப்படி நினைத்துக்கொண்டு போகிறது என்ற முடிவுக்கு வந்தான்.

அந்த பக்கத்து வீட்டு சோபாவில் சாய்ந்து கொண்டு, கண்கள் மூடி அமர்ந்தான். நிலைமையை சமாளிக்க கூட ஒரே ஒரு பெண் இருந்தால்? அது பேராசை.., ஒரு ஆண்? அட்லீஸ்ட், I am legend போல ஒரு நாய்..? ஆனால், எல்லாம் முடிந்து விட்டது என்று இன்னும் நம்ப முடியவில்லை. இப்படியா முடிய வேண்டும்? சுவடே இல்லாமல்..

ஏதோ ஒரு படத்தை போட்டு, மனிதர்களை பார்த்ததும் எச்சிலை முழுங்கி முழுங்கி, டிவியை நிறுத்தி விட்டான். உலகிலேயே தான் ஒரு ஆள் தான் பாக்கி என்ற பிரம்மாண்டத்தை அவனால் கிரகிக்க முடியவில்லை.

அறையை விட்டு வெளியே வராமல் பல வருடங்கள் இருந்தவர்களை திரும்பவும் நினைத்தான். அவர்களுக்கு வெளியில் ஆள் நடமாட்டம் இருப்பது தெரிந்து அல்லவா இருந்தார்கள்? இந்த அண்டத்திலேயே யாரும் இல்லை என்பது தெரிந்து எப்படி நிம்மதியுடன் இருக்க முடியும்? ராபின்சன் க்ரூசோவுக்கும், சக் நோலண்டிற்கும் மனிதர்கள் எங்கோ இருக்கிறார்கள் என்ற அந்த ஒற்றை நம்பிக்கையாவது இருந்ததே? தனக்கு?

ஏன்? ஒரு மனிதன் தனக்கே உரிய இலக்குடன், தனியாக இருக்க முடியாதா? ஒரு வேளை இலக்குகளையே, அடுத்தவர்களுக்காகத்தான் வைத்துக் கொள்கிறோமா? 'பார், நான் இலக்கை அடைந்து விட்டேன். முன்னேறி விட்டேன். ஜெயித்து விட்டேன்' என்பதெல்லாம் அடுத்தவர்களுக்கு சொல்ல மட்டும் தானா? தன்னுடைய சுய மகிழ்வுக்கு இல்லையா? அடுத்தவர்கள் பார்த்தால் தானே அந்த மகிழ்ச்சிக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது?

மண்டை குழம்பியது.. எதிலும் முழுதாக மனதை செலுத்த முடியவில்லை. ரஹ்மானின் உற்சாக பாடல்கள் கூட அழுகையை வரவழைத்தது.. கொஞ்சம் ரொட்டியை கொறித்துவிட்டு, கதவுகளை அடைத்துவிட்டு படுத்தான். அசந்து தூங்கிபோனான். கனவுகளும் அன்று அவனை புறக்கணித்தன..

மூன்றாம் காலை சிறிது புத்துணர்ச்சியாக, தெளிவாக யோசிக்க முடிந்தது. 'ஒரு' காரை எடுத்துக்கொண்டு, தனக்கு தேவையான பொருட்கள் என்று எது எல்லாம் தோன்றுகிறதோ, அதை எல்லாம் சேமித்தான். கூட ஒருத்தராவது இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டான்.

********

ஓடியே விட்டது 2 வருடங்கள்.. இப்போது எல்லாம் 'யாராவது இருக்கிறார்களா' பற்றி அதிகம் சிந்திப்பது இல்லை. ஆனால் அடிக்கடி காரணம் இல்லாமல் அழுவது உண்டு. இப்போது தேர்ந்த விவசாயியாகவும் ஆகியவன், அன்றைய அறுவடையை முடித்துக்கொண்டு தனது இருப்பிடத்திற்கு திரும்பினான்.

பிடித்த புத்தகங்களை எல்லாம் வேகமாக முடித்து விடுகிறான். எங்கே எல்லா புத்தகங்களும் முடிந்து விடுமோ என்று வேகத்தை குறைத்துக்கொண்டு படித்தான். நிச்சயமாக வேறு யாரும் கிடையாது என்று தெரிந்து இருந்தது. பாதுகாப்பிற்கு காவல் நிலையத்தில் எடுத்த துப்பாக்கிகளை வைத்திருக்கிறான் ஆனாலும் என்ன என் இலக்கு? யாருக்காக இவை எல்லாம்? என்று ஒரு வெறுமை எப்போதும். அவனுடைய இருப்பிடத்தை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வளர்த்து, ஒரு ராஜாங்கமே நடத்திக்கொண்டு இருந்தான். இந்த விஷயத்தில் கர்வம் தான்.

********

கடைசியாக அழுதது எப்போது என்று நினைவில்லை. எதிர் பார்த்ததை விட வேகமாக 5 வருடங்கள் ஓடி விட்டது. தனக்கு என்று ஒரு சுழற்சியை உருவாக்கி கொண்டு அவன் பாட்டுக்கு இருந்தான். புத்தகங்களாலா தெரிய வில்லை, ஒரு ஞானி போல் தேஜஸ் அவன் முகத்தில்.
ஆனால், கொஞ்ச நாட்களாக, ஆரம்ப காலத்தில் இருந்த அந்த காரணம் புரியாத பயம் திருப்பி வர ஆரம்பித்தது. என்ன காரணம் என்று ஊகிக்க முடியவில்லை. கொஞ்சம் தீவிரமாக ரோந்து வர ஆரம்பித்தான்.

*********

வழக்கம் போல் சுற்றி வந்து கொண்டிருக்க.. திடீரென ஒரு நாள், சிலிர்க்க வைத்த அந்த காட்சி. இரண்டு கால்களில்.. ஒரு உருவம். வந்து கொண்டிருந்தது. திகைத்து போய், துப்பாக்கியை எடுத்து தயார்படுத்தினான். மனித உருவம் தான். ஒரு பெண். மிகவும் சோர்ந்து போய்.. நெடு நாட்கள் சாப்பிடாமல் இருப்பதை போல். முதல் முறையாக, ஒரு அசையும் உயிரை பார்க்கிறான்.

பலம் எல்லாம் இழந்து போய் எங்கே மூர்ச்சையாகி விடுவோமோ என்று பயந்தான். இல்லை கூடாது.. அவளை நோக்கி கை அசைத்தான். அவள் தட்டு தடுமாறி.. இவன் அருகில் வந்தாள்.

'பசிக்குது.. சாப்பிட எதாச்சும் இருக்கா? '

அமைதியாக பையில் இருந்த சோளத்தை எடுத்து கொடுத்தான். சாப்பிட்டு விட்டு தண்ணி குடித்தாள்.

'எங்க இருந்து வர?'

'ரொம்ப தூரத்துலேர்ந்து..'

'நீ மட்டும் தானா?'

'இல்ல.. ஒரு நூறு பேர் கிட்ட இருக்காங்க.. எல்லாம் பின்னாடி வராங்க'

முகம் இருண்டது. இல்லை.. இல்லை. இப்படி நடக்க முடியாது. முடியவே முடியாது. இப்படியும் இருக்குமா? இது என் இடம்..

'மரியாதையா வேறு எங்கயாச்சும் போயிடுங்க' என்று கண்ணில் நீர் மறைக்க கத்தி விட்டு.. தன் இடத்திற்கு போய் தாழிட்டுக்கொண்டான்.

ஜன்னல் வழியே, தெருவை நோக்கி தயாராக இருந்தது.. ஒரு துப்பாக்கி..!


38 comments:

பிரசன்னா said...

அமரர் சுஜாதாவை எங்களுக்கு தந்த May 3-க்கு இந்த சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்....

ஜில்தண்ணி said...

சுஜாதா அவர்களின் "என் இனிய இயந்திரா" அளவுக்கு ட்ரை பண்ணியிருக்கீங்க

நல்லா இருக்கு,பாராட்டுக்கள்
இந்த sci-fi மாதிரி சிறுகதைகள் எழுத எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்க தல

தமிழ் பிரியன் said...

நல்லா எழுதி இருக்கீங்க!

Haripandi said...

பிரசன்னா, ரொம்ப நல்ல இருக்கு ... வாழ்த்துக்கள் ..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

நல்லா இருக்கு வாழ்த்துக்கள் பிரசன்னா

சாம்ராஜ்ய ப்ரியன் said...

ஆஹா.. அருமை!!

சைவகொத்துப்பரோட்டா said...

சும்மா பின்னி எடுத்திருக்கீங்களே!!!
வாழ்த்துக்கள் பிரசன்னா.

விந்தைமனிதன் said...

நல்ல ஃப்ளோ... நல்லாருக்கு

//கொஞ்ச நாட்களாக, ஆரம்ப காலத்தில் இருந்த அந்த காரணம் புரியாத பயம் திருப்பி வர ஆரம்பித்தது. என்ன காரணம் என்று ஊகிக்க முடியவில்லை.//

ஆதிமனிதனி உள்ளுணர்வு??!!

Chitra said...

interesting story. பாராட்டுக்கள்!

இரகுராமன் said...

அட்டகாசமா இருக்கு பாஸ்.

ருத்ர வீணை® said...

கதையை படிக்கும்போது எங்கோ தொலைந்துபோய் திரும்பி வந்தது போல் ஒரு உணர்வு..
சரி அந்த பொண்ணு யாருங்க ??

அப்பாவி தங்கமணி said...

சிம்ப்ளி சூப்பர். இப்படி எதாச்சும் ஆனா என்ன ஆகும்... ஐயோ சாமி... வேண்டாம்பா

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

ஹேமா said...

அருமை பிரசன்னா.கதையோடேயே பயணிக்க வைத்திருக்கிறீர்கள்.
இன்னும் எழுதுங்கள்.வாழ்த்துகள்.

பிரசன்னா said...

@ஜில்தண்ணி, ஐயையோ.. அப்படி எல்லாம் டிரை பன்னால.. இது சும்மா.. நான் சொல்லி கொடுக்கறதா? அது வேண்டாங்க. அப்புறம் எல்லாரும் க்யூ கட்டி, ட்ராபிக் ஆகி.. எதுக்கு வம்பு ;)
மிக்க நன்றி :)@தமிழ் பிரியன், மிக்க நன்றி :)


@Haripandi, மிக்க நன்றி :)


@மணி (ஆயிரத்தில் ஒருவன்), மிக்க நன்றி :)


@சாம்ராஜ்ய ப்ரியன், மிக்க நன்றி :)

பிரசன்னா said...

@சைவகொத்துப்பரோட்டா, மிக்க நன்றி வெஜ் :)


@விந்தைமனிதன்,உங்களுக்கு கதை பிடித்ததில் மகிழ்ச்சி.. //ஆதிமனித உள்ளுணர்வு?// மிகவும் சரி..! மிக்க நன்றி :)@Chitra, மிக்க நன்றி :)


@இரகுராமன், மிக்க நன்றி :)

பிரசன்னா said...

@ருத்ர வீணை®,
அந்த உணர்வை ஏற்படுத்த முடிந்ததில் மகிழ்ச்சிதான் :) அப்பறம், கதையில் அந்த பொண்ணு வந்தவுடன் உங்கள் மனதில் ஒரு உருவம் தோன்றி இருக்குமே.. அதுதான் அவள்..!
மிக்க நன்றி :)


@அப்பாவி தங்கமணி,
முதலில் கடுப்பாக இருக்கும்.. அப்புறம் பழகிடும்னு நினைக்கிறேன் :)
மிக்க நன்றி :)


@thalaivan, மிக்க நன்றி :)


@ஹேமா,
அந்த பயணத்தின் ஓட்டுனராக இருக்கு முடிந்ததில் மகிழ்ச்சி.. தக்காளி, அழுகின முட்டை எல்லாம் வரும் வரை எழுதி கடுப்படிக்கிறேன் :)
மிக்க நன்றி :)

கலாநேசன் said...

ரொம்ப நல்ல இருக்கு.
வாழ்த்துக்கள்.

ஜெய் said...

அருமையான கதை..

பிரசன்னா said...

@ கலாநேசன்,
மிக்க நன்றி :) தங்கள் வருகைக்கும்..

@ஜெய்,
வாங்க ஜெய்.. ஆமா, இந்த கருவுல எதாச்சும் இங்கிலீஷ் படம் வந்துருக்கா.. மிக்க நன்றி :)

ஜில்தண்ணி said...

அதெல்லாம் முடியாது
நான் sci-fi எழுதியே தீரனும்
ஏதாவது ஐடியா கொடுங்க தல

பிரசன்னா said...

@ஜில்தண்ணி,
//நான் sci-fi எழுதியே தீரனும்
ஏதாவது ஐடியா கொடுங்க தல//


நீங்க இப்படி கேட்டதும் எனக்கு கல்லூரியில் நடந்த சம்பவம் ஒன்று நினைவிற்கு வருகிறது.. நாங்கள் வெளி கல்லூரிக்கு ஏதோ விழாவிற்கு சென்று இருந்தோம். அப்போ அங்கே ஒரு பேச்சு போட்டி கணக்கா ஏதோ ஒரு போட்டி. எங்கள் செட்டில், எங்க கூடவே பேசாத ஒருத்தனை.. உசுப்பேத்தி உசுப்பேத்தி.. மேடை ஏத்தியே விட்டுடோம்.
அங்கே அத்தன பேர் முன்னாடி அவன் பட்ட கஷ்டத்தை பார்த்து.. இனிமே இப்படி விளையாட கூடாதுன்னு ஒரு முடிவுக்கு வந்தோம்..

இதன் மூலம் என்ன சொல்ல வரேன்னா.. என்ன மேடை எத்தி உட்ராதீங்க ஹீ ஹீ

ஜில்தண்ணி said...

சரி விடுங்க,இவ்வளவு சொன்னதுக்கப்புறம் உங்கள் வற்புறுத்த விரும்பல

கண்டிப்பா நான் sci-fi முயற்சி செய்வேன்

எனக்காக இதையாவது செய்யுங்க,அடுத்த பதிவில் "தங்களுக்கு பிடித்த 10 படங்களை" வரிசைப்படுத்துங்கள்

பன்னலாம்ல!!!!

பிரசன்னா said...

@ஜில்தண்ணி,
//இவ்வளவு சொன்னதுக்கப்புறம் உங்கள் வற்புறுத்த விரும்பல//

அப்ப நீங்க நெஜமாத்தான் கேட்டீங்களா? நான் கூட கிண்டலோனு நெனச்சேன் :)

பிடிச்ச பத்து சீக்கிரம் போடறேன்.. மெயில் அனுப்பி இருக்கேன் பார்க்கவும்..

ILLUMINATI said...

நல்லா இருக்கு. I am legend மாதிரி போனாலும்,கடைசியில நல்லா இருந்தது....

பிரசன்னா said...

@ILLUMINATI,
//I am legend மாதிரி போனாலும்//

நான் கூட எழுதி முடிச்சிட்டு பாக்கும்போது, முதல் பகுதி அப்படித்தான் தோனுச்சு.. ஆனா, மையக்கரு சுத்தமா வேறங்கர்தால அப்டியே விட்டுட்டேன்.. அதும் இல்லாம, கடைசி மனுஷனால இத தவிர வேற என்ன செய்ய முடியும் பாவம் :)
மிக்க நன்றி :)

தக்குடுபாண்டி said...

exclltma,,, oru different worldukku ulla poittu vantha maathiri irukku....!

பிரசன்னா said...

@ தக்குடுபாண்டி,

ஆமா ரொம்ப அமைதியா இருக்கும் அந்த உலகம் :) மிக்க நன்றி தக்குடு..

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மிகவும் பெருமையாக இருக்கிறது அவர் நினைவுகளை பல இடங்களில் சுவாசிக்கும்பொழுது . பகிர்வுக்கு நன்றி !

தேசாந்திரி-பழமை விரும்பி said...

நானும் இது போன்று நடந்தால் எப்படி இருக்கும் என்று பல முறை யோசித்திருக்கிறேன்.
நல்லா இருக்குங்க ! :)

பிரசன்னா said...

@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫,

எனக்கெல்லாம் அவர் பேரை பார்த்தாலே ஒரு உற்சாகம் வரும்..
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி :)@தேசாந்திரி-பழமை விரும்பி,

கைய குடுங்க.. நானும் அதே மாதிரி தான்.. இது மாதிரி Scenarios-லயும் (இன்னும் சில மேலயும்) நெம்ப இஷ்டம் :) நன்றி..

பட்டாபட்டி.. said...

சூப்பர் சார்.. கலக்கிட்டீங்க..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அட இன்றைக்குத்தான் படிக்கிறேன்.

ஆஹா! உங்கள மாதிரியே நானும் எழுதிட்டேனே அவ்வ்வ்வ்:)

எனக்கும் 'உலகின் கடைசி மனிதன் அறைக்கதவு தட்டப்பட்டது' என்ற வரிதான் தூண்டுகோல்.

நல்ல காலம் இதே பெயரை வைத்து இது போலவே எழுத நினைத்தேன். ஒருவன் தப்பித்து எல்லோரும் எப்படி இறப்பார்கள்? என்ற கேள்வியில் புனைவை விண்வெளி ஓடத்திற்கு மாற்றினேன். நீங்கள் தனிமையை விரும்பியதாக கொண்டு செல்கிறீர்கள். நான் நவீன ஆதாம் ஏவாளாக அடுத்தது என்ன? எனத்தெரியாது வாழ்வு தொடங்குவதாய் முடித்தேன் :)

என்னுடையதை விட நீங்கள் சொல்லிய விதம் மிக அழகு!

வாழ்த்துகள் பிரசன்னா!!

:))

பிரசன்னா said...

@ பட்டாபட்டி,
மிக்க நன்றி பட்டா சார் :)

பிரசன்னா said...

@ 【♫ஷங்கர்,
//ஆஹா! உங்கள மாதிரியே நானும் எழுதிட்டே//

இல்லையே உங்களுது சூப்பரா இருந்ததே :)


//உலகின் கடைசி மனிதன் அறைக்கதவு தட்டப்பட்டது' //

எனக்கு மிக மிக பிடித்த வரி இது.. அது நம் கண் முன் விரிக்கும் கற்பனைதான் எத்தனை?


//ஒருவன் தப்பித்து எல்லோரும் எப்படி இறப்பார்கள்? என்ற கேள்வியில் புனைவை விண்வெளி ஓடத்திற்கு மாற்றினேன்//

நான் அதை விளக்க கூடாது என்ற முடிவோடுதான் ஆரம்பித்தேன்.. என் இலக்கு அந்த கடைசி மனிதன், அவன் மனநிலை.. அவன் எப்படி மாறுவான் என்பதாகவே இருந்தது..


//என்னுடையதை விட நீங்கள் சொல்லிய விதம் மிக அழகு!/

இது உங்கள் பெருந்தன்மை.., உங்களுடையதை படித்து விட்டு, என்னுடையதை திருப்பி படித்தால் கத்துக்குட்டி தனமாக இருக்கிறது.. தொடர்ந்து கற்றுக்கொண்டு இருக்கிறேன்.., உங்களிடமும் :)

மிக்க நன்றி ஷங்கர் :)

cheena (சீனா) said...

அன்பின் பிரசன்னா

அருமையான அறிவியல் கதை - நன்று நன்று - துப்பாக்கி ஜன்னல் வ்ழியே சுடும் நிலையில் ....... கடைசி மனிதன் கடைசி மனிதனகாவே வாழ ஆசைப் படுகிறான். நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Prasanna said...

சீனா சார், ஊக்கத்திற்கு நன்றிகள் பல :)

சமுத்ரா said...

good one prasanna..