Dec 15, 2014

வால்விழுங்கி நாகம் (அறிவியல் புனைவு)

"சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் மிகவும் முன்னேறிய ஒரு சமூகம் இருந்தது.. அது அழிவற்றது என்று தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டது"

டாக்டர் கோபால் (பிஎச்டி) தனது குறிப்புகளின் முதல் வரிகளை ஆயிரம் முறை படித்திருந்தாலும், அதன் மீது கண்கள் ஓடியதும், மனது தன்னையறியாமல் மறுபடி படித்தது. இந்த வருட புதிய மாணவர்களுக்கு மறுபடியும் முதலில் இருந்து வரலாற்றைச் சொல்ல வேண்டும். ஆனால் சிந்து சமவெளி நாகரிகம் மட்டும் அவனுக்கு அலுக்காத ஒன்று. சமயத்தில் அதைப்பற்றி ஆழமாக வேறு யாராவது பேசினாலோ எழுதிவிட்டாலோ தனது காதலியை வேறு எவனோ வர்ணித்ததைப் போல் எரிச்சலை அப்பிக்கொள்கிறான். பெரும்பாலும் புது மாணவர்கள் முதல் வகுப்பின் முடிவிலேயே அவனது ரசிகர்களாகியிருப்பார்கள். மெட்ராஸ் யுனிவர்சிட்டி வரலாற்று பிரிவின் பேராசிரியர்கள் வரலாற்றிலேயே மிகவும் வயது குறைந்தவனாக (32) இருப்பது மட்டுமே அதற்கு காரணமாக இருக்கமுடியாது. 

வரலாறு/Archeological Survey of India - ASI/எபிக்ரஃபி வட்டார பெரிசுகள் பலரும் கூட அவன் பெயரை தெரிந்து வைத்திருந்தார்கள். சமீபத்தில் கோபாலும் அவனது வழிகாட்டி டாக்டர் ராவும் சேர்ந்து எழுதிய ஆராய்ச்சி பேப்பர் சர்வதேச அளவில் தர்ம அடி வாங்கினாலும், நல்ல கவனத்தைப் பெற்றது. தோண்டி எடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துருக்கள் ஒரு மொழியின் எழுத்துக்கள் என்பது அந்த ஆராய்ச்சியின் சாரம். எதிர்த்தரப்பு அவை வெறும் சின்னங்களே என்கிறது. தகவல்கள் இந்த அளவிலேயே கிடைத்திருப்பதால் அதன் அர்த்தங்களைப் பல்லாண்டுகளாகப் பலர் முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்றுமே கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம்.

கோபால் முந்தைய இரவு சரியாகத் தூங்காததால், பல ஆசிரியர்கள் உபயோகித்து மழுமழுப்பேரிய மேஜையில் சாய்ந்து கண்களை சற்றே மூடியதும், அவனது அறைக்கதவில் யாரோ டக் டகாடக் டக்என இசைத்தார்கள். மலர்ந்து உட்கார்ந்தான். இந்த ஒரு வாரத்திலேயே அந்த ராகமான கதவுத்தட்டல் அர்ச்சனாவுடையது என்பது பழக்கமாகிவிட்டது. Theoretical physicist. சுவிட்சர்லாந்தில் கடவுள் துகள் படைக்கும் CERNல் வேலை! ஆனால் துளி பந்தா இல்லை. இங்கு ஏதோ நிகழ்ச்சிக்காக வந்தவள் கோபாலை தேடித்தேடி வந்து பேசினாள். அவனைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்ததோடு, அவனது வேலையையும் கவனமாக நோண்டி நோண்டி கேட்டுக்கொண்டாள்.  ஆனாலும் ரிசர்ச் செய்பவர்களில் சிலர் அரசியல்வாதிகளை விட மோசமானவர்கள். ஏதோவொரு நோக்கத்தை மட்டுமே கொண்டு மற்ற எதையும் கண்டு கொள்ளாதவர்கள் ஆபத்தானவர்கள்தானே?

"வாங்க அர்ச்சனா.. கான்ஃபிரன்ஸ் முடிஞ்சதா?"

"இல்லை.. ரொம்ப அறுவை.. அதான் நழுவி இங்க ஓடி வந்துட்டேன். நீங்க கிளாஸ்க்கு போகனுமா?"

"இல்லை லஞ்சுக்குப் பிறகுதான்.. நீங்க சொல்லுங்க"

"கேக்கணும்னு இருந்தேன். அன்னிக்கு பேசிட்டு இருந்தப்போ நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்க.. சிந்து நாகரிக மக்கள் பல ஆயிரம் வருஷத்துக்கு முன்ன எழுதி வச்சிட்டு போன விஷயங்களைப் படிச்சு புரிஞ்சிக்க என்ன வேணாலும் செய்வேன், எவ்வளவு தூரம் வேணாலும் போவேன்னு.."

"அது ஒரு வார்த்தை இல்லை.. பல வார்த்தைகள்"

ஒரு சிலரின் சிரிப்போ அழுகையோ செயற்கை என்று கண்டுபிடிக்கவே முடியாது. அப்படி ஒன்றை சிரித்துவிட்டு, "ஐயோ.. சரி பல வார்த்தைகள்.. அதுக்காக எவ்வளவு தூரம் போவீங்க?"

அவளின் கேள்வி அந்த இடத்தில் பொருந்தாமல், அவளது குரலின் விளையாட்டுத்தனத்தையும் மீறி தொக்கியிருந்த முக்கியத்துவம் அவனுக்கு நெருடியது.

"அப்படிப் படிச்சிட முடியும்னா, என் உயிரைக்கூடக் கொடுப்பேன்" அவனை மீறி வார்த்தைகள் வந்து விழுந்தன. அவ்வளவு தீர்க்கத்தை அவளும் எதிர்பார்க்கவில்லை.

"நான் ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசணும். எங்க ஆரம்பிக்கனு தெரியலை"

"சும்மா தயங்காம சொல்லுங்க அர்ச்சனா"

"சுருக்கமா சொன்னா லூசோன்னு நினைப்பீங்க.. அதனால விலாவாரியாவே சொல்றேன். இது ரொம்ப ரகசியம். வெளிய போகாம பாத்துக்கறது உங்க பொறுப்பு.. For friends’ sake!"

தெரியாத ஒருவர் தன்னிடம் அவ்வளவு ஆர்வம் காட்டியது ஏதோ வேலைக்காக என்பது வழக்கமான அயர்ச்சியைத் தந்தாலும், இவனுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கோபாலை வேறு எதையும் யோசிக்க விடவில்லை.

"நிச்சயம் யார்ட்டயும் சொல்லலை. ரொம்பப் பயமுறுத்தாம சீக்கிரம் சொல்லுங்க"

"வார்ம்ஹோல் கொண்டு காலப்பிரயாணம் பத்தி உங்களுக்குத் தெரியுமா? ஐன்ஸ்டைன் கூட அதப்பத்தி சொல்லியிருக்கார். இப்போ ஒரு படம் கூட வந்ததே?"






அவனுக்குத் தெரிந்த கொஞ்சத்தைச் சொன்னதும் அர்ச்சனா ஓரளவு சரிதான்’ என மூச்சு வாங்கிக்கொண்டே இப்படி விளக்கினாள்:

இரு வேறு கால வெளிகளுக்கு இடையே சுரங்கப்பாதை போல் ஒரு இணைப்பை ஏற்படுத்தினால் அதுதான் வார்ம்ஹோல். பாதையின் இரண்டு பக்கமும் நுழைய Funnel மாதிரி நுழைவாயில்கள். *வளவளகொழகொழ* ஆனால் இந்த நுழைவாயில்கள், பாதை எல்லாம் உருவாக்குவது அவ்வளவு சுலபம் அல்ல. பிரபஞ்சத்தில் இயற்கையாகவே காணப்படும் பிளாக் ஹோல் மூலம் இந்த நுழைவாயில்கள் சாத்தியம் என பல அறிஞர் மண்டைகள் கருதின.

*வளவளகொழகொழ* பிளாக் ஹோல் தெரியுமல்லவா? ஒரு மாபெரும் நட்சத்திரம் இறக்கும்போது அளவில் மிகவும் சிறுத்து, அவ்வளவு நிறையும் ஒரு புள்ளியில் தேங்கி உருவாவது. அதன் அடர்த்திக் காரணமாக மைய ஈர்ப்பு மிக அதிகமாக, சுற்றி இருக்கும் அனைத்தையும் இழுக்கும். அனைத்தையும் என்றால் ஒளியை கூடத் தப்பவிடாமல் இழுப்பதால் அதன் பெயர் கருந்துளை. *வளவளகொழகொழ* கிட்டத்தட்ட பிரபஞ்சத்தின் அனைத்து கேலக்சியின் மத்தியிலும் இப்படி ஒரு கருந்துளை உருவாகி சுற்றி இருப்பவற்றை இழுத்துக்கொண்டிருக்கிறது.

இப்படி ரொம்ப ரொம்பக் குட்டியான இடத்தில் மாபெரும் அடர்த்தியை உருவாக்க முடிந்தால், கருந்துளையைப் பூமியிலேயே செய்ய முடியும். ஆனால் அதற்கு அபிரிமித சக்தியும், பூமியை அது உறிந்துவிடாமல் கட்டுக்குள் வைக்க மெகா உபகரணங்களும் தேவை. CERNஇல் இருப்பது போல்.

படபடப்பாக நிறுத்தினாள்.

பாதிப் புரிந்து பாதிப் புரியாமல் கேட்டான் நீங்க கருந்துளையை உருவாக்கிட்டீங்களா என்ன?”

2005 லேயே

இன்னும் முழுசாக அதன் பெருமை தெரியாததால் பெரிய ஆச்சர்யம் காட்டாமல் வாவ், குட் வொர்க்என்றான்..

உனக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியலையா?” அவள் கேட்டதை யோசித்ததும் சிறிது நேரம் விட்டு கோபாலுக்கும் படபடக்க ஆரம்பித்தது.

நீங்க.. அங்க.. வார்ம்ஹோல் காலப்பயணம்?”

யெஸ்.. யெஸ்அவள் குதித்ததில் ஏதோ கீழே விழுந்து உருண்டது. இருவருமே அதைக் கண்டுகொள்ளவில்லை. அவளே தொடர்ந்தாள்.

கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆச்சு அது கருந்துளைதான்னு எங்களுக்குத் தெரிய. அதை அளவில பெரிசாக்கவும், ஸ்திரமா வைக்கவும் இத்தனை வருஷம் ஆகியிருக்கு. இப்போ ஒரு ஆள் அவனுக்குத் தேவையான பொருள்களோட நுழையற அளவுக்குக் கொண்டு வந்தாச்சு!

வார்ம்ஹோலின் ஒரு முனை இங்க இருக்கு சரி.. எதிர் முனை?”

எங்க கணக்குப்படி இன்னிலேர்ந்து ஐயாயிரம் வருஷத்துக்கு முன்னால் இருக்கும்னு தெரிஞ்சிருக்கு

ஐயாயிரம் வருடம் என்றதும் அவனுக்கு முதலில் சிந்து சமவெளி தான் நினைவுக்கு வந்தது. அப்போது கூட அவள் எதை நோக்கி போகிறாள் என்பது அவனுக்கு உரைக்கவில்லை.

எடுத்த எடுப்புலேயே ஆளையா அனுப்ப போறீங்க?”

ஏற்கனவே ஒரு வீடியோ கேமரா, குரங்கு இதெல்லாம் அனுப்பியாச்சு

என்ன ஆச்சு

ஒண்ணுமே ஆகல. அந்தப் பக்கம் என்ன நடந்ததுன்னே தெரியலை.. நாங்களும் விதவிதமா முயற்சி செஞ்சு பாத்தாச்சு. ஒரு முக்கியமான விஷயம், கருந்துளையை ஸ்திரமா வைக்க அதை வாக்யூம் சேம்பர்ல  வைக்கனும். இந்தப் பக்கம் அத செஞ்சாச்சு. அந்தப் பக்கம் போன உடனே அதை வெற்றிடத்தில் அடைக்கணும். இல்லனா எதுவும் திரும்ப வராது. அதுக்குதான் ஒரு மனுஷன அனுப்ப முடிவெடுத்திருக்காங்க

சிறிது நேரம் மின்விசிறி சப்தம் மட்டும் பெரிதாகக் கேட்டது. ஆரம்பத்தில் இருந்து அவனுக்குள் ஓடிய கேள்வியை அவளின் பார்வையைப் பார்க்க பயந்து ஜன்னலை பார்த்துக்கொண்டு கேட்டே விட்டான். இதெல்லாம் ஏதோ கனவுல கேக்கறா மாதிரி இருக்கு. இதுல நான் என்ன செய்யணும்?”

ஐயாயிரம் வருடங்களுக்கு முன் என்றால் ஏதோ ஒரு பண்டைய நாகரிகத்தில் போய்ச் சேரவே சாத்தியம். எகிப்துமெசபடோமியாசிந்து என்று மூன்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டுஅரசியல் காரணங்களால் இந்தியா தான் அவர்களின் முதல் தேர்வு. அதைப்பற்றி ஓரளவிற்கு அறிந்த ஒருவனால் தான் அங்குச்சென்று தாக்குப்பிடித்துத் திரும்பி வரமுடியும். கூடவே அறிவு நுட்பம், உடல் தகுதி உள்ளிட்ட நிறைய அம்சங்களை பெற்றிருக்கவேண்டும். இவற்றில் பெரும்பாலானவற்றுடன் அங்கு போய் வர கோபால்தான் பொருந்தி வருகிறான். ஆகவே அவனுக்கு மனித வரலாற்றிலேயே முதல் காலப்பயணியாகும் வாய்ப்பு. அப்படி நடந்தால் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கே தேடி வந்து அவனுக்குக் கும்பிடு வைத்துவிட்டு போகக்கூடும்.

வேக வேகமாக மெல்லிய குரலில் அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே இவனுக்கு வேறு யோசனை ஓடியது.
இதெல்லாம் சாத்தியம்தானா, ஒப்புக்கொண்டு போனாலும் திரும்பி வர முடியுமா? என்னதான் சிந்து காலகட்டத்தை நேரில் பார்க்க வாய்ப்புக் கிடைத்து, முடிந்தால் அவர்களின் மொழியைக் கற்றுக்கொண்டு வந்தாலும்..

அவனுக்கென்று அப்பா தவிர யாருமில்லை, அவரும் ஆசிரமத்தில் சாமியாகி பல வருடங்களாகி விட்டது. அவன் பெரிதாகச் சாதா பயணங்களே போனதில்லை. இதையெல்லாம் விட முக்கியமாக M.Sc., சமயத்தில் சௌம்யாவுடன் ஒரு குருட்டுச் சந்தர்ப்பத்தில் மேலாக நெருக்கமாக இருந்ததைத் தவிர வாழ்க்கையில் பெரிதாக எதையும் சுகித்துவிடவில்லை. போவதற்கு முன் தனது முழுக்காதலையும் அவளிடம் வெளிக்காட்டலாம் என்றால் கூட காலம் கடந்துவிட்டது. அவளும் அவளது கணவனும் சேர்ந்து ஜோடியாக உதைப்பார்கள்.

எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலீங்க

அதனாலும் தான் உன்னைத் தேர்ந்தெடுத்தது என்று சொல்லாமல், ‘யோசிச்சி சொல்லுங்க..என்று மட்டும் சொல்லிவிட்டு அர்ச்சனா போய் விட்டாள்.

***

கோபால் நிச்சயம் வருவான் என்று எண்பது பேர் கொண்ட அவளின் டீமுக்குத் தெரிந்திருந்தது. இவனுக்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருந்தனர். அர்ச்சனா அவனிடம் விளக்கிய ஒவ்வொரு வார்த்தையும் பல நூறு பக்க கணித சமன்பாடுகளாக உருப்பெற்றுக் கிடந்தது. ஏகப்பட்ட உபகரணங்களுடன் அந்த இடம் வயர்கள் செழித்து வளரும் வயல் போலிருந்தது. கருந்துளையைச் சுவிட்சர்லாந்தில் இருந்து வெற்றிட பெட்டியில் கொண்டு வந்தும் விட்டார்கள்.

எந்த இடத்தில் கருந்துளையில் நுழைகிறோமோ, ஐயாயிரம் வருடங்களுக்கு முன் அதே இடத்தில் இறங்குவோம். ஆகவே அது கடலாகவோ காடாகவோ இருந்துவிடாமல், மனித குடியிருப்புகளின் மிக அருகில் இருக்கும் இடமாக இருக்க வேண்டும். குஜராத்தில் லோத்தல் கிராமத்தை தேர்ந்தெடுத்திருந்தார்கள். அந்தக் காலத்தில் கப்பல் போக்குவரத்துக்குப் பெயர் போன இடம், வெளிநாட்டு வர்த்தகர்கள் வந்து போயிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கும் இடம். ஊருக்குள் கோபால் ஒரு வெளிநாட்டு வர்த்தகர் என்று சொல்லிக்கொண்டு நுழைவதாக ஏற்பாடு. அந்தக் காலத்தில் மதிப்பு நிறைந்ததாகக் கருதப்படும் செம்பு, தங்கம் போன்றவற்றைக் கொடுத்தனுப்புகிறார்கள். அதனுடன் ஒரே ஒரு துப்பாக்கி.

கூடவே கதிரியக்க ஐசோடோப்கள் சிலவற்றைப் பழைய ஊர்களின் முக்கியத்துவம் பொதிந்த இடங்களில் புதைத்து விடவேண்டும். பிறகு நிகழ்காலத்தில் Zinc Sulfide டிடக்டர்கள் மூலம் அந்த இடங்களைக் கண்டு பிடித்து ASI உதவியுடன் அகழ்ந்து கிடைக்கும் பொருட்களைச் சாவகாசமாக ஆராய்ந்து கொள்ள வேண்டியது. இவன் கேட்டுக்கொண்டதன் பேரில், சிந்து எழுத்துக்களில் தகவல்களைப் பதிக்கும் இடங்களில் அந்த ஐசோடோப்களைப் போடுவதற்கு ஒப்புக்கொண்டார்கள். அங்கு இருக்கப்போகும் சில நாட்களில் கோபாலின் முக்கிய வேலை அந்த எழுத்துக்கள் பற்றியும் அந்தக்கால வார்த்தைகளையும் தெரிந்து கொள்வது. மற்ற அறிவியல்களை விஞ்ஞானிகள் பார்த்துக்கொள்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை இதெல்லாம் போனஸ், அவர்களுக்குக் காலப்பயணம் சாத்தியப்பட வேண்டும், அவ்வளவுதான்.

பயிற்சியே மூன்று வாரத்திற்குக் கொடுத்தார்கள். கிளம்ப வேண்டிய தினம் வந்ததும் விண்வெளி பயணம் போகிறவர்களுக்கான அதே உடையில் கோபால் ஆர்ம்ஸ்டிராங் மாதிரிதான் தெரிந்தான். முலாமிட்ட கை பெட்டியில் மற்ற சமாச்சாரங்கள். எல்லோரிடமும், அர்ச்சனாவிடமும் சொல்லிக்கொண்டு வெற்றிட பெட்டிக்குள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த கருமுட்டையை நோக்கி இறங்கினான். அதனுள் குதிக்குமுன் கலங்கிய கண்களை முகக்கவசத்தைத் தாண்டி துடைக்கக் கூட முடியவில்லை. குதித்தான்.

***

அர்ச்சனா சரியாகத் தூங்கி மூன்றாவது வாரம் இது. திட்டத்தின் படி கோபால் போய்ச்சேர்ந்ததும் சமிக்ஞை தரவேண்டும். ஆனால் தரவில்லை. வாரத்திற்கு ஒரு முறை எல்லாம் சரி என்று தகவலனுப்ப வேண்டும். எதுவுமே வரவில்லை. ரகசியமாக அந்தச் சமிக்ஞைகளை அனுப்ப முடியாமலும் போகலாம் என்பதால், என்ன ஆனாலும் மூன்று வாரத்திற்குள் திரும்பி விட உத்தரவு. நேற்றோடு மூன்று வாரக்கேடு முடிந்தது. இன்னும் திரும்பவில்லை. தண்ணீர் இருக்க வாய்ப்பு மிகவும் குறைவான ஒரு கருங்கிணற்றில் அப்பாவி ஒருவனை நீச்சலடிக்கத் தள்ளிவிடுவதைப்போல் அவளுக்குத் தொடர் கனவுகள்.

அவள் அறைக்கதவை யாரோ டமடமவெனத் தட்டவும் முகம் வீங்கிய நிலையில் மெதுவாகச் சென்று கதவை திறந்ததும் சக ஆராய்ச்சியாளன் கத்தினான். வாக்யூம் சேம்பர்ல் ரீடிங்க்ஸ் எகிறுதாம்.. உடனே கிளம்பு”.

கோபால் திரும்பிவிட்டான்!

***

கோபாலுக்கான மருத்துவப் பரிசோதனைகள் நடக்க வெளியில் அர்ச்சனா, பிடித்த இரு விஷயங்களுக்கு இடையில் அல்லாடும் குழந்தையை போல் இங்கும் அங்கும் தத்தளித்தாள். ஒருவழியாக வெளிவந்ததும் அவனிடம் ஓடி தலை திரும்ப அறைந்து ஏண்டா ஒரு செய்தி கூட அனுப்புல? தட் யூ ஆர் ஓகே?”
அவன் வெகுவாக மாறியிருந்தான். சோர்வாக இருந்தாலும் அட்டகாசமான ஒளி அவன் கண்களில்..

ஹேய்.. எனக்கு இப்போ வயசு பத்தாயிரம் தெரியுமில்ல? பெரியவங்கள அடிக்கலாமா?” என்று சொன்னதும் அனைவருடனும் சேர்ந்து அவளும் சிரித்தாள்.

***

மூன்று வாரக்கதைதான் என்றாலும் எவ்வளவு சொல்லியும், எழுதியும் அவனுக்குத் தீரவில்லை. பாம்பு மாத்திரை மாதிரி அவ்வளவு சிறிய மனிதனிடமிருந்து ஒரு யுகத்திற்குண்டான தகவல் பொங்கி வந்துகொண்டே இருந்தன. பெரும்பாலான சிந்து எழுத்துக்களையும், ஏராளமான வார்த்தைகளுக்கு அர்த்தமும் சேகரித்திருந்தான். அவனால் தூங்கவே முடியவில்லை, மாத்திரை போட்டு தூங்க வைக்க வேண்டியிருந்தது. நடுநடுவே அர்ச்சனாவின் குழு அவர்களின் ரகசிய ஆராய்ச்சி முடிவுகள் குறித்துச் சொன்னது எதுவும் இவனுக்குக் காதில் ஏறவேயில்லை.

முதல் முறை சிந்து சமவெளி காலத்துக்குப் போய்ச் சேர்ந்ததும் ஏதோ எண்பதுகளின் தமிழகக் கடலோர நகரம் என்று நினைத்திருக்கிறான். பிறகுதான் சரியாகவே போய்ச் சேர்ந்திருக்கிறோம் என்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது. இவர்களின் திட்டம் கிட்டத்தட்ட கச்சிதமாகவே நடந்திருக்கிறது. சிந்து மக்கள் அவனைத் தனியாக எங்கும் விடவில்லை என்பதால் அவ்வபோது வந்து எதிர்முனைக்குச் சமிக்ஞை மட்டும் கொடுக்க முடியவில்லை. அவன் கொண்டு சென்ற செம்பும் தங்கமும் அவனுக்கு நல்ல மதிப்பையும் விரும்பியதை செய்யும் சுதந்திரத்தையும் அளித்திருந்தது. திட்டப்படியே கல்வி நிலையங்கள், நூலகங்கள் போன்றவற்றில் ஐசோடோப்புகளைப் புதைத்துவிட்டு வந்தாகிவிட்டது. இவர்களின் உதவியுடன் ASI அந்த இடங்களைக் கண்டுபிடித்து அகழ்ந்ததில் ஏராளமான செப்புப் பட்டயங்கள், எழுத்து அச்சுக்கள், மண்பாண்டங்கள் மீது வண்ணத்தில் எழுதப்பட்ட கதைகள் என்று கிடைத்தன.

அவனுக்கு நினைவிருக்கும்போதே அத்தனை எழுத்துக்களையும் வார்த்தைகளையும் வரிசைப்படுத்திக் குறித்து வைத்ததும் நல்லதாகப் போயிற்று. அகழ்ந்து கிடைக்கும் தகவல்கள் அத்தனையையும் கட்டுடைக்கக் கோபால் தலைமையிலேயே எபிக்ரஃபி நிபுணர்கள் குழு ஒன்று ராப்பகலாக இயங்கியது. அவனும் நாளை என்பதே இல்லை என்பதைப் போல் அதிலேயே கழித்தான். பல வார்த்தைகள் அவனுக்கு மனப்பாடமாக, குறிப்புகளைப் பார்க்காமலே படிக்குமளவு பயிற்சி வந்திருந்தது. தோண்டத் தோண்ட புதையலைப் போல் சிந்து சமவெளி அரங்கேறிய பல நூற்றாண்டு கதைகள் குவிந்து கொண்டே இருந்தன.

***

களைப்பு மேலிட்ட ஒரு காலையில் வரலாறு என்று தலைப்பிட்ட சில செப்புப் பட்டயங்கள் கோபாலின் கவனத்தை ஈர்த்தன. பல துறைகளில் முன்னேறிய சிந்து சமவெளி சமூகம் அவர்களின் வரலாற்றுக்கும் நிச்சயம் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். 

பல ஆயிரம் வருடங்களுக்கு முன் கோபாலைப்போலவே ஏதோவொரு வரலாற்று ஆய்வாளன் எழுதியது. அதில் பகுதி ஒன்று என்று குறிக்கப்பட்ட பட்டயத்தை எடுத்துக்கொண்டு தனது வழக்கமான இருக்கையில் அமர்ந்து மொழிபெயர்க்க தொடங்கி, முதல் இரண்டு வரிகளைத் தோராயமாக முடித்ததும் வாசித்துப்பார்த்தான்.

"சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் மிகவும் முன்னேறிய ஒரு சமூகம் இருந்தது.. அது அழிவற்றது என்று தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டது"..


(சொல்வனம்.காமில் வெளிவந்த அறிவியல் புனைவு)



2 comments:

ஜில்தண்ணி said...

CERN'ல வேலை பாக்குற ஹீரோயின், symbologist ஹீரோ என்னடா எங்கையோ பாத்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சன்..பட் அதுக்கப்றம் பட்டைய கெளப்பிட்டீர் :)

Prasanna said...

அட ஆமால்ல! Dan Brownஐயே மறந்துட்டேன். The similarities are surprising me too (the lonely professor, smart heroine etc).. ஆனா ப்ளாக் ஹோல் அளவுக்கு உருவாக்க (கற்பனையில் கூட) CERN-அ உட்டா வேறு போக்கிடம் இல்லை :) மேலும் டெக்னிகலி நம்ம ஹீரோ symbologist அல்ல..
நீண்ட நாள் கழித்து சந்தித்ததில் மகிழ்ச்சி ஜில்..