Nov 6, 2014

இரண்டாவது முகம் - நீல பத்மநாபன்


வானம் எப்படி அவ்வளவு தூரம் போனது என்று கர்ண பரம்பரை கதை ஒன்றுண்டு. சிறு வயதில் நாம் அனைவருமே கேட்டதுதான். பாட்டி ஒருத்தி கோலம் போட்டு நிமிர்கையில் வானம் அவள் முதுகில் இடித்ததாம். உடனே 'எட்டாத உயரத்துக்குப் போய்த்தொலை' என்று அதைச் சபித்தாள். அப்போது கைக்கு எட்டாமல் போன அது, பிறகு திரும்பவில்லை. அறுபது வயது திருமணமாகாத அர்ச்சகர் ஒருவர், தனது பால்ய சினேகிதி கோமு இறந்த தினத்தன்று, வானத்தைப் பார்த்தவாறு படுத்திருக்கையில் இக்கதையை நினைத்துப்பார்க்கிறார். கோமுதான் உன் மனைவி என்று சொல்லி வளர்க்கப்பட்ட அர்ச்சகர், அவள் வேறு இடத்தில் வாழ்க்கை பட்டும், இவர் வேறு யாரையும் தேடாமல் அம்மனையே துணையாகக் கொண்டு நடத்தும் வாழ்க்கை நம் முன்னே விரிகிறது. ஆனால் எப்படியோ கோவிலுக்கு நாள் தவறாமல் வந்துவிடுகிறது கோமு அவள் கையாலேயே உருவாக்கும் துளசி மாலை. அதே கோமுதான் அன்று இறந்துவிட்டாள். அம்மன் இனியும் ஒரு மாற்றாக இருக்க முடியுமா?

நைவேத்தியம் என்னும் இக்கதைதான் இந்தச் சிறுகதை தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சற்றே நீளமானதும் அதுவே. சிறுகதைகளுக்கான தேவைதான் என்ன?, ஓரிரு வரிகளில் சொல்ல வந்ததை சட்டு புட்டென்று சொல்ல வேண்டியதானே? என்று சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் கேள்விக்கும் இங்கு விடை கிடைக்கிறது. '60 வயதான பேச்சிலர் தனது பால்ய தோழி இறந்தன்னைக்குத் தானும் இறக்கிறார்' என ட்விட்டர் பாணியில் ஒரே வரியில் இக்கதையைச் சொன்னால், இந்தக் கதை அளிக்கும் விஸ்தாரமான சித்திரம் தவறிவிடும்.


Image courtesy: http://www.eramurukan.in

ரொம்பப் பிடித்த இன்னொரு கதை, காத்திருப்பு. 48 வயது திருமணமாகாத வாத்தியார் (இதுதான் கடைசி, இதற்கு மேல் திருமணமாகாத வயதானவர்கள் யாரும் வரமாட்டார்கள்) ஒருவருக்கு, தன்னிடம் கையும் பிட்டுமாகப் பிடிபட்ட மாணவி ஒருத்தி கொடுக்கும் வாக்குறுதி - 'மாட்டிவிடாதீர்கள் ப்ளீஸ், நான் உங்களை இன்றிரவு திருப்திபடுத்துவேன்' (அதற்கு ட்ரைலராக தனது முந்தானையையும் நழுவ விடுகிறாள்)! அன்றிரவு அவரின் தவிப்பு, கொந்தளிப்பு, வெறி, ஆற்றாமை இத்யாதிகள் அத்தனையும் அருகில் இருப்பதைப் போல் உணரமுடிந்தது. அட்டகாசம்!
பார்க்கப்போனால், இத்தொகுப்பில் உள்ள 21 கதைகளின் அடிச்சரடாக காமம், விடுபடுதல், சாமானியனின் சுயவெறுப்பு, அற்பத்தனம் போன்ற சில பொதுவான அம்சங்களைப் பார்க்க முடிகிறது. அதிலும் இந்த விடுபடுதல் தீம் அந்தத் தலைமுறையின் விருப்பமானது போலும் (அசோகமித்திரன் அடிக்கடி நினைவுக்கு வந்தார் - விடுதலை குறுநாவலில் முற்றிலும் துறந்தவரும், மானசரோவர் கோபாலும்). தனது ஆசைகளை ஒளித்து, போராட்டமாகவே போய்க்கொண்டிருக்கும் லௌகீக வாழ்க்கையை உதறிவிட்டு ஆன்மிகத்தில் தஞ்சமடைய விழையும் கதாபாத்திரத்தை 'விடுபடுதல்' கதையில் பார்க்க முடிகிறது. தன் இஷ்டத்திற்கு வாழ்ந்து கொண்டிருக்கும் சாமியார் ஆகிவிட்ட அவனது நண்பனுடன் ஆசிரமத்திற்கு போகும்போது கிடைக்கிறது அவனுக்கான ஸ்பார்க்.

இதே மையம் '(அ)லட்சியம்' கதையில் வேறு விதமாகப் பரிமளிக்கிறது. சமூகம் எதிர்பார்க்கும் அலங்கார பாவனைகளை அலட்சியமாக மதிக்கும், அதை மூர்க்கமாகத் தவிர்க்கும் நெல்லையப்பன். அந்த பாவனைகளில், வாழ்வின் போராட்டங்களில் இருந்து தப்ப முடியாமல் சிக்கி கிடக்கும் அவனது நண்பன். அப்படி அலட்சியமாக இருந்தும் நெல்லையப்பனுக்கு அவன் விருப்பத்தை விட நிறைவாகவே நடக்கிறது, கிடைக்கிறது. ஆனால் அப்படி அலட்சியமாக இருப்பதே பெரிய லட்சியம்தான் என்பது இறுதியில் புரிகிறது. கடைசிக்கதையான 'பசி', யார் நினைத்தாலும் அப்படி ஒன்றும் முற்றும் துறந்து விடமுடியாது என்பதை முகத்தில் அறைய அறைய உணர்த்துகிறது.

காமத்தின் பன்முகப்புகளை (multiple facets) பேசும் பிற கதைகளில், காமமின்றி அமையாது உலகு என்பதைச் சற்றே அங்கதத்துடன் உணர்த்தும் 'உயிர்' கதை. பிரசவத்திற்குப் பிறகு அம்மா வீட்டில் இருக்கும் ருக்கு. இரவில் 'படுத்துக்கொண்டிருக்கும்' அண்ணா-அண்ணி, அப்பா-அம்மா தம்பதிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது அவளின் அழும் குழந்தை. 'ஒரே ஒரு உதவி' கதையில் மனைவி ஒருத்தி கணவரின் சக ஊழியர் ஒருவருடன் இருப்பதும் அதற்கு அந்தக் கணவனின் எதிர்வினையும் கரு (பள்ளிகொண்டபுரம் நாவலிலும் இதே சம்பவம் மையமாக வரும்). நடந்த 'சம்பவம்' பற்றி உரையாடிக்கொண்டிருக்கும் சக ஊழியர்கள், பின்பு அந்தக் கணவனின் வருகை என்று அந்த அறையின் டென்ஷன் அபாரமாகப் பதிவாகியிருந்தது இக்கதையில்.

களவியல் கதையில் ரதீஷ் ஒரே பெண்ணிடம் சிறு வயதில் இருந்தே மறுபடி மறுபடி ஏமாறுகிறான். அவள் தன்னை உபயோகப்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறான், ஏன்? முத்தாய்ப்பாக 'தேடல்' கதையில் விபச்சாரியிடம் காமத்தை தேடுவதற்கும் வீட்டுக்குள் கணவன் மனைவி சட்டபூர்வமாகத் தேடுவதற்கும் என்ன வித்தியாசம்? அது அற்பம் என்றால் இதுவும் அற்பம் தானா எனும் கேள்வியை எழுப்புகிறது. தலைப்புக்கதையான இரண்டாவது முகம் காமத்தின் மற்றொரு நுட்பமான விஷயம் பற்றிப் பேசுகிறது. மத்திய வயதில் கணவன் மனைவிக்கிடையில் மாறும் கெமிஸ்ட்ரி, அதனால் வரும் விலகல், அப்போது திரண்டு வரும் வெறுப்பு விஷம், ஒருவரை ஒருவர் பழிவாங்கும் தோரணைகள் என்று அருமையான கதை. 

தன கை மீறின விஷயங்களின் முன் சுயகழிவிரக்கத்தில் வாடும் பைல்ஸ் நோயாளி (மூலாதாரம்) மற்றும் சற்றே அநியாயமாக இடம் மாற்றப்படும் அலுவலக ஊழியர் (இட மாற்றம்) கதைகளில் வரும் உணர்ச்சிகளுடன் கிட்டத்தட்ட அனைவருமே ஒன்ற முடியும். இந்த உணர்ச்சிகளை வாழ்வில் ஒரு முறையாவது கடந்திருப்போமே?

கசு அண்டி மற்றும் தரித்திரவாசி கதைகள் எந்தக் காலத்திலும் தீராத விளிம்பு நிலை தொழிலாளர்களின் அவலங்களை எடுத்துரைக்கின்றன. இதில் தரித்திரவாசி monologue வகையில் அந்த வீட்டு வேலை செய்யும் சிறுவனே சொல்வதாக விரிந்திருக்கிறது. புதுமனை புகுவிழா, வட்டு சார், பொருத்தம் போன்ற கதைகள் மனிதனை என்றும் பிரியா அற்பத்தனத்தைப் படம் போல் காட்டுகின்றன.
நீல பத்மநாபன் நாவல்கள், சிறுகதைகள் என்று புகழ்பெற்ற பல படைப்புகளை எழுதிய ஒரு முன்னோடி படைப்பாளி.

அலங்காரங்கள் ஏதுமற்ற இந்தக் கதைகள் 1971-74 காலகட்டத்தில் எழுதப்பட்டவை. அப்போது நீல பத்மநாபன் தனது முப்பதுகளில் இருக்கிறார். இத்தனை வருடங்கள் கழித்து இந்தக் கதைகளைப் படித்தும் நான் எதிர்பார்த்ததைப் போல் அவை எனக்கு பழையதாகத் தோன்றவில்லை. மனிதனின் மாறாத அடிப்படை உணர்ச்சிகள் கால வெளி தாண்டி ஒன்றுதான் எனும்போது, பல கோடி பேர் ஏற்கனவே வாழ்ந்த வாழ்வையே வேறு பல கோடி பேர்கள் திரும்பத்திரும்ப வாழ்கிறோம் எனும்போது பழசெங்கே புதுசெங்கே? இப்போது இணையத்தில் ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட பத்திருபது சிறுகதைகளைப் படிக்கிறேன். அதிலும் சில கதைகளை (பின் நவீனத்துவம்) படித்து முடித்ததும் நான் ஏமாற்றப்பட்டதைப் போல் உணர்வதுண்டு. அவற்றுக்கு நடுவில் இத்தொகுப்பு ஆசுவாசம் அளித்தது எனக்கே வியப்புதான் (கதைகளின் பழைய வார்த்தைகள், உரையாடல்கள், கதை சொல்லும் முறைகள் போன்றவற்றையும் மீறி)!

நீல பத்மநாபன் பற்றி ஒரு சுவாரசியமான தகவல். அவரது அலுவலகத்தில் வைத்தே ஒருமுறை தாக்கப்பட்டார் (இது உனக்கு சுவாரசியமா?) என்று கேள்விப்பட்டேன். அது அவரின் கதைகளைப் படித்து என்றால், தாக்கியவர்கள் அவற்றை ஒழுங்காகப்படிக்கவில்லை என்றே தோன்றுகிறது. சரியாக உள்வாங்கியிருந்தால் வணங்கிவிட்டு வந்திருப்பார்கள்.

2 comments:

சீனு said...

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்தப் பதிவின் மூலம் நான் கற்றுக் கொண்ட மிக முக்கியமான விஷயம், எப்படி ஒரு சிறுகதைத் தொகுதிக்கு அற்புதமாக விமர்சனம் எழுத முடியும் என்பதைப் பற்றி தான். அட்டகாசம்...

Prasanna said...

மிக்க நன்றி சீனு :) ஆனால் எனக்கு திருப்தியேயில்லை..