Apr 17, 2010

தனிமை

ரயில் பயணத்தில், வெளியில் தெரியும் இருட்டில், திடீரென்று ஒரு வீடு தெரிகிறது. அதில் ஒற்றை மஞ்சள் பல்பு. வெளியில் ஒரு குழந்தை வேறு உட்கார்ந்திருக்கிறதே? சட்டென்று பார்வையில் இருந்து அக்காட்சியை மறைத்து விடும் ரயிலின் வேகம். இப்படி தனிமையை அப்பட்டமாக பார்த்ததில் ஒரு பிரமிப்பு கலந்த பரிதாபம். அந்த வீட்டை சுற்றி பல கிலோ மீட்டருக்கு ஒன்றும் கிடையாது. அப்படி ஒரு வீட்டை பார்த்தவுடன் பல கேள்விகள் மனதில்..

அந்த தனி வீட்டில் இருப்பவர்கள் உடம்பு சரி இல்லை என்றால், எங்கே போவார்கள்? குழந்தை எங்கு படிக்கும்? மளிகை சாமான் எல்லாம் எங்கு வாங்குவார்கள்? அய்யோ..



இப்படி 'கவிதை'த்தனமாக யோசித்துக்கொண்டு இருக்கும் போதே.. ரயிலில் 3 பேர் உட்கார வேண்டிய இடத்தில் நாலு பேர் உட்கார்ந்து, போட்டு நசுக்கி உயிரை வாங்குகிறார்கள். மனிதர்களை விட்டு தனியாக எங்காவது ஓடிப்போய் விட்டால் என்ன என்று, இப்போது யோசித்து கொண்டிருக்கிறேன்.
முழுதும் படிக்க..

Apr 9, 2010

இன்பர்மேஷன் கலெக்டரா நீங்கள்?

அவருக்கு தெரியாமல் அவர் சுற்று வட்டாரத்தில் ஒரு அணுவும் அசையாது (பாய்ஸ் செந்தில் மாதிரி), என்பது போல் ஒரு காரெக்டர் எல்லா க்ரூப்பிலும் நிச்சயம் இருக்கும்.  உதாரணத்திற்கு, என் அலுவலகதில் இருக்கும் இப்படி ஒரு 'கலெக்டர்'ஐ பற்றி சொல்கிறேன். யார் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் பூர்விகம்/ஜாதி மதம், சொத்து போன்ற எல்லா விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பான். இவனுடைய தகவல் திரட்டும் திறனை கண்டு பல முறை ஆச்சர்யம் (அதிர்ச்சி) அடைந்துள்ளோம்.

இவனால் பெரிதும் பாதிக்கப்படுவது, வெளியில் தெரியாமல் காதலித்துக்கொண்டு இருக்கும் ஜோடிகளே. 'டேய், நேத்து அவுங்க ரெண்டு பேரையும் மாம்பலம்ல பார்த்தேன்' என்று குண்டை வீசுவான். வேறு ஒரு பெண்ணை வேறு யாருடனோ ECR-இல் பார்ப்பான். (நீ மட்டும் எப்படிடாப்பா எல்லா இடத்திலும் எல்லாரையும் பார்க்க முடியுது? வீட்டிலேயே இருக்க மாட்டியா?)

சில சமயங்களில், அவனின் கணிப்பு நம்மை அதிர வைக்கும். 'அவன் கூடிய சீக்கிரம் வேற கம்பனி போயிடுவான்' என்பான். சொல்லி வைத்த மாதிரி அவன் சொன்னவனும் 'மச்சி, அடுத்த வாரம் கெளம்பறேன்' என்று வந்து நிற்பான். 'தெரியுமே' என்று சொன்னால், 'எப்படி டா? நான் யார்ட்டயும் சொல்லவே இல்லையே?' என்று கேட்க, நாங்கள் கலெக்டரை பார்த்து ரகசியமாக சிரிப்போம்.


ஓயாத தேடல் இருந்தால் ஒழிய இந்த அளவிற்கு செய்தி சேகரிக்க முடியாது. விலை நிலவரங்கள், எந்த கடை எங்கு இருக்கிறது, எந்த பஸ் அங்கு போகும், ஹோட்டல், அங்கு எந்த உணவு நன்றாக இருக்கும் என்பது போன்ற நுணுக்கமான பொதுச்செய்திகளும் உண்டு. நான் எப்படி ஆள் என்றால், ஐஸ்லாந்தின் தலை நகரம் என்ன என்றால் சொல்லி விடுவேன். ஆனால் எங்கள் தாஹ்சில்தார் ஆபீஸ் எங்கே என்று தெரியாது! என்னை போன்ற ஆசாமிகளுக்கு கூகுளை போன்று தகவல்களை அள்ளி இறைப்பான்.

இவனை போன்றோரின் ஒரு குணாதிசியம், இவனை போன்றே இருக்கும் மற்றவர்களுடன் 'டச்'சிலேயே இருப்பான். இரண்டு டேட்டாபேஸ்களும் தங்கள் தகவல்களை 'sync' செய்து கொள்வது உண்டு. அந்த நேரத்தில் அங்கே இருந்தீர்கள் என்றால், ஒரே தகவல் சரவெடி தான். இன்னொரு குணாதிசியம் - போலீஸை போன்ற சந்தேகம். எல்லாவற்றையும் சந்தேகப்படுவான். அவ்வளவு சீக்கிரம் சொல்கிறதை ஒப்புக்கொள்ள மாட்டான். ஒரு உதாரணம். எங்கள் செட்டில் எது செய்தாலும் மற்றவர்களுக்கு சொல்லி விட வேண்டும். அப்படி சொல்லாமல் செய்த ஒருவன் கலெக்டரிடம் எப்படி சிக்குகிறான் பாருங்கள்.

அவன்: நேத்து எனக்கு ஆக்சிடன்ட் ஆய்டுச்சு.. கைல பாரு காயம்.
நம் கலெக்டர்: அடாடா.. எங்க டா..
அவன்: கடலைகாரத் தெரு கிட்ட..
நம் கலெக்டர்: அந்த பக்கம் உனக்கு என்ன வேலை..? நீ வெளியவே வர மாட்டியே?
அவன்: அது அது (மாட்டினான்)
நம் கலெக்டர்: அங்க எனக்கு தெரிஞ்சு 'தம்பு IAS அகாடமி' தான் இருக்கு. நீ IASக்கு தான படிக்க போற? எனக்கு ஏற்கனவே அந்த டவுட் இருந்துச்சு. இப்போ கன்ஃபர்ம்டு. ('ஆர்குட்டில் IAS கம்யூனிட்டில இருக்கறத பாத்துட்டேன்')
அவன்: ஆக்சிடன்ட் ஆய்டுச்சு, சொல்லலாம்னு பாத்தா.. இப்படி பண்றியேடா.. என்று சோக மூஞ்சியுடன் இடத்தை காலி செய்தான். இப்படி சமய, சந்தர்ப்ப, சாட்சிகளை வைத்து அவன் குற்றவாளியை (!) கண்டுபிடிப்பது சுவாரஸ்யம்.

இப்படி ஜாலியாக போய்க்கொண்டு இருக்கும் போது, திடீர் என்று வேறு வேலைக்கு போய் விட்டான் (அவன் செய்வதை கண்டு பிடிக்க முடிய்மா?). அவன் போனதில் எங்கள் எல்லாருக்குமே வருத்தம் தான். பின்ன? தகவல்கள் தெரியாமல் பாதிக்கப்படுவது நாங்கள் தானே? அவன் போன கொஞ்ச நாளில், எங்கள் டீமில் ஒருத்தி இப்படி ஃபோன் பேசிக்கொண்டு இருந்ததாக சொன்னார்கள்..

'என்னது? அவன் உன் கம்பெனிக்கா வந்துருக்கான்? அடப்பாவமே..? யார் என்ன பண்றாங்க, எங்க சுத்துறாங்க, இந்த டீடைல்ஸ் கலெக்ட் பண்றது தான் அவன் வேலையே. ஹா ஹா ஹா' என்று நிம்மதியாக சிரித்தாளாம்.
பாதிக்கப்படுவர்களுக்கு தான் தெரியும் கஷ்டம்.

--------

வந்தது வந்துட்டீங்க.. அப்படியே என் முந்தைய பதிவையும் படிச்சுட்டு போய்டுங்க
முழுதும் படிக்க..

Apr 5, 2010

ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது..?

ஏன் எனக்கு மட்டும் இப்படி ஆகுது என்று தோன்ற வைக்கும் சம்பவம் எல்லாருக்குமே நடந்திருக்கும். எப்போது நினைத்தாலும் கடுப்பை ஏற்றும், அப்படிப்பட்ட, எனக்கு நடந்த (அடிக்கடி), இப்போது நினைவில் இருப்பவை சில (பல நடக்கும்..இங்கு சில மட்டும்)
.
.

பேருந்தில் எனக்கு அருகில் இருக்கும் சீட்டில் இருப்பவரை தவிர, மத்த அனைவரும் இறங்குவது.. என் அருகில் இருப்பவர் இறங்கும் போது, பேருந்தே காலியாகி விடுவது..


'முக்கியமான' வேலை ஏதாச்சும் செய்ய வேண்டி இருக்கும் போது (பிளாக் அல்ல)/வேர்த்து விறுவிறுத்து வெளிய போயிட்டு வரும்போது பவர் கட் ஆவது..

கக்கூஸில் இருக்கும் போது, அனைவரும் கங்கனம் கட்டிக் கொண்டு கால் பண்ணுவது.. (இவ்ளோ நேரம் சும்மா தான இருந்தேன்.. அப்போ பண்ண வேண்டீதான?). அப்புறம், ஏண்டா எப்போ ஃபோன் பன்னாலும் எடுக்க மாட்டிங்கற? என்று திட்டுவது..

24/7 இயங்கி வரும் ஒரு கடை, நான் அவசரமாக ஏதாவது வாங்க போகும் போது மூடி இருப்பது.. அன்றைக்கு என்று சுற்று வட்டாரத்தில் அனைத்து கடைகளுமே சாத்தி இருப்பது (பந்த்)

எங்கு சென்றாலும், நான் இருக்கும் இடத்திற்கு, 1 கி.மீ சுற்றளவில், பெண்களின் சுவடே இல்லாமல் இருப்பது (நீ ஒரு ராசி கெட்டவன், எங்க கூட வராத என்று திட்ட துவங்கி விட்டார்கள் சக சிடிசன்ஸ். லேடீஸ் ஸ்பெஷல் பஸ்ஸில் டிரைவராக போய் விடாதே.. கலெக்ஷனே ஆகாது என்று கிண்டல் வேறு)


கழுத்தில் கத்தி இருக்கும் போது முதுகில் பயங்கரமாக அரிப்பது (ரவுடி எல்லாம் இல்ல.. சலூன் கடையில சொன்னேன்)

மிகவும் எதிர் பார்த்து காத்திருக்கும் கிரிக்கெட் தொடர். ஆவலோடு அந்த நேரத்திற்கு போட்டால், தூர்தர்ஷனில் ஒரு சேட்டு ஷெனாய் வாசித்து கொண்டு இருப்பார் (இது சின்ன வயசில்.. அடிக்கடி நடக்கும்)

.
.

இத்தோட நிறுத்திக்கிறேன்..
முழுதும் படிக்க..

Mar 30, 2010

பணம் அய்யா பணம்

பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு பிரச்சினைகள்? ஏன்? எதற்காக? யோசித்தால்.. வெவ்வேறு காரணிகள். ஆனால், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், அனைத்துக்கும் பணமே மூலம் என்பது உரைக்கிறது! சில பிரச்சினைகளையும் அதன் வேரையும் (ரூட் காஸ்) பார்த்தாலே இப்படித்தான் தெரிகிறது.


பொதுப்படையாக பார்ப்போம்,
ஏன் அரசியலில் இப்படி அதிகாரத்திற்கு போட்டி? இறுதியில் வரும் பணத்திற்காகவும், ஏற்கனவே சம்பாதித்த பணத்தை காப்பதற்காகவும் தானே?

'சக்தி' வாய்ந்த சாமியார்கள் எப்படி உருவாகிறார்கள். எப்படி/ஏன் அந்த சக்தி தக்க வைக்கப்படுகிறது (சிலர் திருட்டு பேர்வழிகள் என்று நிரூபமான பிறகும்)?
பெரும்பாலான கொலைகள் எதற்கு நடக்கின்றன?

கொஞ்சம் சப்பையாக பார்க்க வேண்டுமென்றால், சில அலுவகங்களில், எவ்வளவு அலைந்தாலும் ஞயாயமாக நமக்கு கிடைக்க வேண்டியதும் (வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவை) கிடைக்க மாட்டேங்கிறதே.?

Specific ஆக பார்த்தாலும் சரி.
அணு ஒப்பந்தம்? அக்கறையிலா செய்யப்படுகிறது? பின்னனியில் பணம் தான்..
இடைத்தேர்தல்? ஹீ ஹீ
மத வெறி.. ஏன் உருவாகிறது? மூலைச் சலவையினால்.. ஏன் மூலைச் சலவை? கட்சி வளர்க்க.. எதற்கு? அதிகாரம் வேண்டி.. அதிகாரம் ஏன்? மறுபடி பணம்.


இப்படி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணமே 98% செய்திகள்/பிரச்சினைகளுக்கு காரணம் என்று எண்ண வைக்கிறது. சரி, அதற்கு என்ன இப்போ என்று கேட்கிறீர்களா? ஒன்றும் இல்லை.. இது சரி, தவறு என்று எல்லாம் சொல்லவில்லை.. சும்மா பேப்பர் படிக்கும் போது தோன்றிய இந்த பணத் 'தியரியை' எழுதி உங்கள் கருத்துக்களையும் தெரிந்து கொள்ளலாம் என்று தான்..
முழுதும் படிக்க..

Mar 26, 2010

ஒரு புதுப்பதிவனின் மனக்குமுறல்கள்

அவன் எழுத ஆரம்பித்து ஒன்றரை மாதம் ஆகிறது. இது வரை இலக்கியங்கள் எதையும் படைத்து விடவில்லை. பேமஸ் பதிவர்களின் பதிவுகளை உடனுக்குடன் படிப்பான். பின்னூட்டம் ரொம்ப போட மாட்டான். பெரிய பெரிய ஆளுங்க வர்ற இடம், சின்ன பிள்ளத்தனமா ஏதாச்சும் போட்டு, பேர (!) கெடுத்துக்க வேணாமே அப்படின்னு ஒரு நெனப்பு. அவங்க எல்லாரும் நல்ல விதமாத்தான் பதில் போடுவாங்க. இருந்தாலும்..


நல்லா யோசிச்சி வச்சி ஒரு கான்செப்ட எழுதலாம்னு பாத்தா, அதே விஷயத்த ஏற்கனவே எழுதி இருப்பாங்க. வேற ஏதோ ஒன்ன அடிச்சி புடிச்சி போட்டா, views ஓரளவுக்கு இருக்கும், அப்பப்ப நல்ல Comments வரும். தமிழிஷ்ல பிரபலமாயிடும். ஆனா கமென்ட், பாலோவர்ஸ் கொஞ்சம் தான் என்பதில் வருத்தமே. இதனால் ஓட்டு, கமென்ட், பாலோவேர்ஸ் ஆள் சேர்ப்பது போன்ற விஷயங்களில் இவன் கவனம் திசை திரும்ப ஆரம்பித்தது. எதற்க்காக எழுத வந்தோம் என்பதற்கு கொஞ்சம் விடையும் கிடைத்தது..

பெரிய பதிவர்களுக்கு 'மீ த ஃபர்ஷ்டுனு' போட்றதுக்கு பெரிய அடி தடியே நடக்கும் (மீ செகண்ட், தர்ட்க்கு கூட). இப்படி நாமும் ஒரு நாள் வருவோம்னு ( மீ த ஃபர்ஷ்டு போட இல்ல, வாங்க..) பயலுக்கு நப்பாசை. நெலமை இப்படி  இருக்க,

கட் பண்ணா - ஒரு வருடம் கழித்து..

'ஏன் பின்னூட்டத்துக்கு எல்லாம் பதிலே போட மாட்டேங்கரீங்க?'
'ஏன் மீள் பதிவு போட்டு கொல்றீங்க?' 
'நேரமின்மைதான் ஒரே காரணம், உங்க விமர்சனங்களை நோட் பண்ணாம இல்ல'
'தொடர் பதிவுக்கு கூப்ட்டா எழுத முடியாதோ'?
'இலக்கிய பணிக்கு இடையூறாக இருப்பதால்.. சாரி..'
'500௦ பாலோவர்ஸ், வாழ்த்துக்கள்'
'ம்ம்.. நன்றி..'
'சர்வேசன் 2010 கதை போட்டில உங்களுக்குத்தான் முதல் பரிசு..வாழ்த்துக்கள்'
'மகிழ்ந்தேன்.. பணத்துக்காக எழுதவில்லை. பரிசுத்தொகையையும் உதவும் கரங்களுக்கு அளித்து விடுங்கள்'
'ஆஹா என்னே இவர் பரந்த மனப்பான்மை.. ஆஹா ஆஹா'





சட், தூங்குனதுல நேரம் போனதே தெரியல (இனி கனவுன்னு ட்விஸ்ட் கொடுக்கறவங்கள தூக்குல போட்டுடலாம்.. நானே இதுல கடைசியா இருந்துக்கறேனே?). ப்ளாக்கர் ஓபன் பண்ணி பார்த்தா ஒரு புது கமென்ட். பெரிய பதிவர் ஒருத்தர் 'பிடிச்சிருக்கு, ரசித்தேன்'னு போட்டுருக்கார். தலை கால் புரியல (அடுத்தத இன்னும் நல்லா கொடுக்கணும்.. ம் ம்..)

எது எப்படியோ, எழுத ஆரம்பித்ததில் இருந்து, கவனிக்கத்தக்க மாறுதல்கள் அவனிடம். மூளை முன்னிலும் அதிகமாக வேலை செய்தது. அவனை சுற்றி நடக்கும் விஷயங்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் (இத எழுதலாமா? வேணாம்.. அது? ம்ம் மைண்ட்ல வச்சி அப்பறம் யூஸ் பண்ணலாம்.. ). ஒவ்வொரு பாராட்டுக்கும் அளவில்லா மகிழ்ச்சி. அதிக உற்சாகத்துடன் வளைய வந்தான். எழுதணும், எதாச்சும்  எழுதணும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

என்ன ஒரே பிரச்சினை.. எழுத படிக்க என்று, பதிவுலகம் நேரத்தை பயங்கரமாக சாப்பிட ஆரம்பித்து விட்டது. வேலையையும் கெடுக்கிறது. நேரத்தை சரியாக மானேஜ் பண்ண வேண்டும். அச்சச்சோ விடிஞ்சு போச்சா? என் டீம் லீட் வர்றார்.. ஓகே, நைட் ஷிப்ட முடிஞ்சு போச்சு. கெளம்பறேன்.

லாகிங் ஆப்..
முழுதும் படிக்க..

Mar 25, 2010

முதல் வேலை

இந்த பதிவை யூத்ஃபுல் விகடனில் காண..




முதன் முதலில் வேலை கிடைத்த வேளையும், அந்த சூழலும் உங்களுக்கு ஞாபகம் உள்ளதா.? வேலை கிடைத்த செய்தியை சொன்னது யார்? ஆணா? பெண்ணா? கம்பெனி காரரா.? இல்லை உறவினரா? எப்படி இருந்தாலும் அந்த சம்பவம் அத்தனை சீக்கிரம் மறக்க கூடியது இல்லை. எனக்கு வேலை கிடைத்த அனுபவத்தை கொஞ்சம் கொஞ்சம் சொல்கிறேன். 2 நாட்களாக நடந்த அந்த காம்பஸ் இன்டர்வ்யூ கதையை சொல்லப்போவதில்லை. மாறாக கிளைமாக்ஸில் இருந்து..

எல்லாம் முடிந்து, உள்ளே கம்பெனி ஆட்கள் தீவிரமாக விவாதிக்கிறார்கள். வெளியில் படப்படப்புடன் நாங்கள்.. இரவு 9 மணி வாக்கில் நேர்காணல் எல்லாம் முடிந்து விட்டது.. வெளியே வந்து ஒன்றும் அறிவிக்க மாட்டேங்கிறார்கள்.. பெரும் மௌனத்தில் நாங்கள்.. நாங்கள் என்றால் எங்கள் குழு.. அந்த நேரத்திலும் எப்பொழுதும் 'காமெடி' பண்ணும் 'மச்சி' அங்கு வந்து விட்டார். சத்தம் போட்டு அவர் இடைவெளியின்றி சொல்லும் காமெடிகளை (இந்த நேரத்திலுமா?) எங்களால் சிறிதும் பொறுக்க முடியவில்லை. டக்கென்று இடம் மாறினோம்.. மனம் தளராத மச்சி அங்கும் ஆஜரானார். தலை தெறித்து கடைசியில் ஒரு நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வந்தோம்.

திடீர் என்று அதிக அமைதி.. சத்தம் தான் காட்டி கொடுக்க வேண்டும் என்பது இல்லை. அந்த அபிரிமிதமான அமைதி எல்லாரையும் உஷார் படுத்தியது.. சல புல என்று அந்த கட்டிடத்தை நோக்கி நகர்ந்தோம்.. பேச்சு அதிகமானது.. சலசலப்பாக இருந்த கூட்டம் திரும்பி மயான அமைதி ஆகிறது (மணி இரவு 12). அத்தனை காதுகளும், அங்கு திடீர் என்று தோன்றி, கையில் காகிதத்தை வைத்து இருந்த, அதை பார்த்து படித்தவரின் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாக கேட்கிறது (அந்த 4 வருடங்களில், அனைத்து மாணவர்களாலும் அவ்வளவு கூர்ந்து கவனிக்கப்பட்ட ஒரு (ஒரே?) பேச்சு என்று அதை சொல்லலாம்). அவர் ஆரம்பிக்கிறார்..

மன்னிக்கவும்.. சிறிது தாமதமாகி விட்டது (அதான் தெரியுமே.. மேல..)
நிறைய க்ரைடீரியாவை அலசி இந்த முடிவுக்கு வந்துள்ளோம் (சரி..)
இனியும் உங்களை காக்க வைக்க விறும்பவில்லை (அப்பாடி) என்று செலெக்ட் ஆனவர்களை ஒவ்வொரு பேராக படிக்க ஆரம்பித்தார். அது வரை காத்து காத்து குளிர்ந்து போய் இருந்த இதயம் திரும்பி சூடு பிடித்து ஓட ஆரம்பித்தது..

அகிலா, அருண், அவினாஷ்.., ஆ, ஆல்பபெடிகல் ஆர்டர் (அதில் என்ன ஆ? அது எல்லாம் தெரியாது.. அப்போது அங்கு உணர்ந்த/நடந்த எல்லாமே பிரமிப்பு தான்).. பெயர்களை காது வாங்கினாலும் மனசு வாங்க வில்லை. பக் பக் அதிகமானது.. பாண்டி.. ஓ, வந்து விட்டது.. பிரசன்னா.. சொல்லி விட்டு அடுத்ததுக்கு போய் விட்டார். என்ன என் பெயரை சொன்னாரா? இல்லையா..? அடாடா, சொன்ன மாதிரியும் இருந்தது.. இல்லை பிரமையா? யாரிடமும் கேட்க முடியாது. ஓங்கி குத்தி விடுவார்கள் பெயர் பட்டியலை கவனிப்பவர்கள்.. ஒரு இக்கட்டான சூழல் நிலவியது. அடுத்து வந்த எந்த பெயரும் சுத்தமாக கேட்க வில்லை. ஒரு வழியாக முடித்தவர் மேல் அனைவரும் பாய்ந்தோம் (எல்லார்க்கும் அப்படித்தான் இருந்திருக்கும் போல).

ஓ.கே ஓ.கே.. லெட்ஸ் பேஸ்ட் தீ ஷீட் ஹியர்.. அவர் தப்பித்து கொள்ள, உடனடியாக xerox எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டது. என் பெயர்.. என் பெயர்..
காகிதத்தில் என் பெயரை பார்ததும்.. ஆஹா.. பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவு வந்து விட்டது என்று தான் தோன்றியது (நான் ஒன்றும் கஷ்டப்பட்டு எல்லாம் படிக்க வில்லை. என் வீட்டில் என்னை படிக்க வைத்ததை சொல்கிறேன்). அதில் என் பெயர் சிறிது அழகாக கூட இருக்கிறது (சே.. என்ன இது..).

எனக்கு தெரிந்த எல்லார் இடத்திலும் போய் சொல்ல வேண்டும் போல் இருந்தது. யாருக்கு போன் போடலாம்? வீட்டிற்கு தான்.. அடுத்து பெரியப்பாவிடம் சொல்ல வேண்டும்.. ரொம்ப சந்தோஷப்படுவார்.. வீட்டில் முழித்து இருப்பார்களா? இந்த மாதிரி பெரிய விஷயங்களை முன்னாடியே சொல்லுவதில்லை. ரொம்ப 'டென்சன்' ஆகி விடுவார்கள். இருந்தும் அரசல் புரசலாக சொல்லித்தான் வைத்து இருந்தேன்.

ட்ரிங்க்க்க்.. ட்ரிங்க்க்க்.. கட் பண்ணி விடலாமா?

ஹலோ? - அம்மா தான்.. குரலில் மறைக்கப்பார்க்கும் ஒரு எதிர்பார்ப்பு.. சொல்லி விடலாமா? இல்லை ஆட்டம் காட்டலாமா?

'மா, எனக்கு வேலை கிடைச்சிருச்சு..' சொல்லி விட்டேன்.. பக்கத்தில் மரங்களில் இருந்து வந்ததா.. மெலிதாக வருடிச்சென்றது காற்று.. இல்லை நிம்மதி பெருமூச்சாலா..? பெரும் பாரத்தை இறக்கி வைத்த நிம்மதி. அவர்கள் எவ்வளவு சந்தோசமாக இருப்பார்கள்? பார்க்க விரும்பவில்லை.

இவ்வளவும் நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு பெருத்த அழுத்தமோ, ஏதோ.. ஒன்று போட்டு அழுத்திக்கொண்டே இருந்தது.. ஆம்.. ஆம்.. என் நெருங்கிய வட்டாரத்தில் ஒரிருவர் தவிர அந்த பட்டியலில் யார் பெயரும் இல்லை. வேலை கிடைத்த பிரமிப்பு சட்டென்று கொஞ்ச நேரத்திலேயே அடங்கியது.. சந்தோசமும் துக்கமும் அடுத்தடுத்து பார்த்த பட்டியலில், எப்போதும் அந்த நிகழ்ச்சிக்கு முதலிடம் உண்டு.

அடுத்து வந்த கம்பெனிகளில் முயன்று, ஒவ்வொருத்தராக வேலை வாங்கி, எல்லாரும் இன்று நல்ல வேலையில்/தொழிலில் இருக்கிறார்கள் (வேலை தேடியவர்களை மட்டும் சொல்கிறேன்.. கொஞ்சம் பேர் மேலே படித்தனர்.. கொஞ்சம் பேர் தான்). நான் மட்டும் அந்த கம்பெனியில் இடம் கிடைக்கவில்லை என்றால், எனக்கு இருந்த 'கான்பிடன்ஸிற்கு', கண்டிப்பாக அந்த வருத்ததிலேயே மத்ததையும் விட்டிருப்பேன். ஆனால், அப்படி கிடைக்கவில்லை என்றால், எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று என் நண்பர்கள் சொல்லி கொடுத்து விட்டார்கள்.. நம்பிக்கையை இழக்காமல், அடுத்ததில் முழு கவனம் செலுத்தணும்... அது எத்தனையாவது முயற்சியாக இருந்தாலும் சரி.
முழுதும் படிக்க..

Mar 13, 2010

எனது ட்விட்டர் மொழிகள்..


எனது 'ட்விட்டர் மொழி'களை இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.. பிடித்து இருந்தால் ஃபாலோவுங்கள்....



டூர் போய்விட்டு ஆர்குட்டில் போட்டோ போடுவது போய், ஆர்குட்டில் போட்டோ போடுவதற்காகவே டூர் போகும் காலமிது.


                                                              ############


ஒவ்வொரு பவர் கட் போதும் வீட்டில் சண்டை வருவதை கண்டு பிடித்து இருக்கிறேன். மனிதனுக்கு என்னேரமும் பொழுது போக்கு தேவை படுகிறதோ..?


                                                              ############


இந்த 'சேனா'க்கள் பண்ணுகிற கூத்தில், சேன கிழங்கு சாப்பிட கூட பயமா இருக்கு..


                                                              ############


தயவு செய்து,ஒருவர் சாப்பிடும் போது,அவருடைய உள் நாக்கை தேடாதீர்கள்


                                                              ############


பாபு, யமுனாவை சென்னையில் முதல் முறை பார்க்கும் அந்த காட்சி, நம்மையும் கதி கலக்கி விடுகிறது #மோகமுள்


                                                              ############


"தலைவி உன் தமிலுக்கு, என் தமில் நாட்டை தருகிறேன்" - இளையராஜாவின் கிண்டல் :-) #nowhearing கோவா பாட்டு


                                                              ############


சிலர் இயற்கையாகவே செயற்கையாக இருக்கிறார்கள் #அனுபவம்





படு பயங்கர பிஸி ஆகி, இந்த சைடு வர முடியாமல் ஆகி விட்டது. இடைவெளி விழுந்த உடனே, பதிவு எழுதுவதில் உள்ள கவர்ச்சி கொஞ்சம் குறைய வேற ஆரம்பித்தது.. ஒரு 4 புத்தகங்கள் படித்தேன் (ஜெ.மோ -1, சுஜாதா-3).. திரும்பி எப்படியோ எழுத வேண்டும் என்று உண்டாகி விட்டது.. ஆக்கி விட்டார்கள்.. 
முழுதும் படிக்க..

Dec 29, 2009

புது வருடத்தை தொடங்கி வைப்பது யார்?

புத்தாண்டு வந்தால் இந்த 'சம்பவம்'ம் வரும், நினைவுக்கு.. நடந்தது சின்ன வயதில். புதுவருட, தினசரி காலண்டர் ஒன்று கொண்டு வந்தார் அப்பா. சின்ன ஊர் என்பதால் நிறைய எல்லாம் கிடைக்காது. ஒன்று இரண்டு தான். பர்சேசிங் என்ற சர்தார்ஜி அப்போ ரொம்ப இல்லை. அந்த வருடம் வறண்டதால் ஒரு காலண்டர் தான் (மொக்க படம் ஒன்றை போட்டு இருந்தார்கள்).

31 ஆம் தேதி திடீர் என்று சண்டை எனக்கும் என் அக்காவுக்கும். யார் முதலில் தேதி கிழித்து அந்த வருடத்தை தொடங்கி வைப்பதென்று.. வாய்ச்சண்டை முற்றி கைகலப்பாகி, ரத்த காவு கடந்து, அம்மா வந்து சமாதானப்படுத்தி, இருவரும் சேர்ந்தே அந்த வருடத்தை துவக்கி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

வெற்றிகரமாக 31 இரவு 12 மணிக்கு, தள்ளி முள்ளி நான்கு கைகளால் தேதி கிழிக்கப்பட்டு, அந்த வருடம் சிறப்பாக துவக்கி வைக்கப்பட்டது.

எல்லா களேபரமும் முடிந்ததும்., இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எங்கள் பாட்டி.. "ஏண்டா.. இன்னிக்கு தேதி கிழிச்சா, அது ரெண்டாந்தேதி ஆகிடாது..? இன்னிக்கி தேதி ஒன்னு தான?"

பேய் முழி முழித்து, 'ஹீ ஹீ சர்யான லூசு' என்று அக்காவை கிண்டல் செய்து நான் சட்டென்று சைடு மாறி விட்டேன். இந்த வரலாற்று தவறை அவள் மட்டும் செய்ததாக மாற்றி ஓரளவு வெற்றியும் பெற்றேன் (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே)..

இப்பொழுதும் கிண்டலடிப்பதுண்டு அவளை.. என்ன, இப்போ ஏகப்பட்ட காலண்டர் (கர்சீப் வாங்குனா கூட ஒன்னு கொடுக்கிறார்கள்). ஆனால், தேதி எல்லாம் கிழிப்பது இல்லை. ஏன், சுவற்றில் தொங்கும் காலண்டரில் கடைசியாக தேதி பார்த்தது எப்போது என்றே நினைவில்லை..
முழுதும் படிக்க..

Dec 22, 2009

பிடித்த படம் - அன்பே சிவம்

ஒரு பழைய புகைப்பட ஆல்பத்தை திரும்(ப்)பி பார்க்கும்போது கிடைக்கும் உற்சாகம் அலாதியானது. பல தடவை பார்த்திருந்தாலும், ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒரு சந்தோஷம். அதிலும் கும்பலாக பார்க்கும் போது? சிரித்து, கிண்டலடித்து, மாற்றங்களை விமர்சித்து என போகும் நேரம்.. போன தடவை பார்க்கும் போது நம் கண்களில் சிக்காத ஒன்று இந்த தடவை சிக்கும் (சிடு மூஞ்சி குமாரு இதுல எப்படி இளிச்சிட்டு இருக்கார்!..). ரொம்ப பிடித்த ஒன்றை மறுபடி சிலாகிப்பதும் நடக்கும். ரொம்ப நாள் கழித்து நிறைய நண்பர்கள் கூடும் அறைகளில் இப்படி ஃபோட்டோ பார்க்கும் செஷனுக்காக நேரம் ஒதுக்கப்படுவது உண்டு.

அந்த மாதிரி.. (உஸ்ஸ் கொள்கை விளக்கம் கொடுத்தாச்சானு புலம்பல்கள் கேக்குது?), நாம் பல முறை பார்த்து மகிழ்ந்த, கொண்டாடிய, திட்டிய திரைப்படங்களை அசை போடுவதும் சுகமானது தானே? விமர்சனமாக இல்லாமல் பிடித்த காட்சிகள், வசனங்கள் இவற்றை பற்றி.. ஒரு திருப்பி பார்த்தல்.. அனைவருமே பார்த்திருப்பார்களாதலால், விமர்சனம் தேவையும் இருக்காது. ஆக, முதலில் எந்த படத்தை திருப்புவது? கொஞ்ச நாள் கழித்து பார்த்த-பல தடவை ஏற்கனவே பார்த்த-இன்னமும் பிரமிப்பு குறையாத- அன்பே சிவம்.

கமல் படங்களில் எப்போதுமே ஒரு ஸ்பெஷல் - ரொம்பவே நுணுக்கமான பல பல விஷயங்கள் ஒளிந்திருக்கும். பல தடவை பார்த்தாலும், அடுத்த தடவை பார்க்கும் போது ஒரு புது விஷயம் கண்ணில் படும் ('உன்னை போல் ஒருவன்' வலை உலகில் அத்தனை கூறு போடப்பட்டதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை).



அன்பே சிவத்தில் கமலின் character change கவனத்திற்குரியது. ஒரு கோபக்கார இளைஞனாக ஃப்ளாஷ் பாக்கில் வரும் நல்லசிவம், அந்த விபத்திற்க்கு பிறகு ஒரு குழந்தையை போல் நடந்து கொள்வார் (ஆனால் அதே கூர்மை). எதனால் இருக்கும்? ஒரு விபத்து மனித மனத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பிரம்மாண்டமானது. விபத்து எற்படுத்தும் உளவியல் சிக்கலினால் இருக்கலாம் (இது இங்கே கண்டு கொள்ளப்படாத ஒன்று). அல்லது தலையில் பட்ட அடியினால் கூட...

தசாவதாரத்தில் பெரிதாக பேசப்பட்ட பட்டர்ஃபிளை எஃபக்டை  இதிலேயும் பார்க்க முடிந்தது. ஒரு வேளை அந்த நாய் (சங்கு) இல்லை என்றால், கடைசியில் தொழிலாளர்களுக்கு ஞயாயம் கிடைக்காமல் போயிருக்கலாம் அல்லவா? (பல பேர்க்கு சங்கு ஊதினாலும் சங்குவிற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் என்று யோசித்ததில்.. ஹீ ஹீ..).

படத்தின் முக்கிய அம்சம் 'அனைத்து' பேருடைய நடிப்பு. அந்த மலை மேல் கடை வைத்திருக்கும் அம்மா, 'இந்தா, இவங்களுக்கும் சின்ன வயசுல கால் சரி இல்லாம இருந்துச்சு. இப்போ சரி ஆய்டுச்சு'  என்று வெள்ளந்தியாக ஆறுதல் கூறும் அழகை உதாரணத்திற்க்கு சொல்லலாம். 'நாட்டுக்கொரு சேதி' வீதி நாடக கலைஞர்கள் பாதி பேர் உண்மையான கலைஞர்களாம்! அந்த குழுவில் ஆண்-பெண் இருவருக்குள்ளும் இருக்கும் ஒரு கண்ணியம் ரசிக்க கூடியது. இவர்களை போன்ற கலைஞர்களிடம் இயல்பாக இருக்கும் ஒரு விஷயம் இது. ஒரு களத்தை எடுத்துக்கொண்டால், அதன் ஸ்பெஷல்களை சிறப்பாக (விலாவாரியாக அல்ல) காட்டி விடுவார் கமல் (பின்ன சுந்தரா?)..




படத்திற்கு நடந்த மேலும் இரண்டு சிறந்த விஷயங்கள் - வித்யாசாகர் மற்றும் மதன். வித்யாசாகர் தந்ததிலேயே சிறந்த இசை என்று இப்படத்தை நிச்சயமாக குறிப்பிடலாம். 'புதுப்பாட்டு பாடிடுவோம் புதுப்பாட்டு' பாடும் போது சூடாகும் ரத்தம், 'யார் யார் சிவம்' என்று கமல் கேட்கும் போது, குளிர்வதை உணர முடியும். இன்னும் 'மௌனமே பார்வையாய்' கேட்டு இருக்கீர்களா? ரொம்பவும் அருமையான பாடல் (ஏன் இந்த பாடலை படத்தில் சேர்க்க வில்லை என்று S.P.B. செல்லமாக கோபித்து கொண்டார் கமலிடம்.., ஒரு பேட்டியில்).

'இந்த படம் ஒரு காப்பியாண்டா' என்று கொஞ்ச நாள் முன் ஒரு நண்பன் பொலம்ப, அடித்து பிடித்து 'ஒரிஜினல்' என்று சொல்லப்பட்ட 'Planes, Trains and Automobiles' பார்த்தேன். அது முற்றிலும் வேறு தளத்தில் சொல்லப்பட்ட ஒரு கதை. Planes.. படத்தில் வரும் இருவரும் மற்றவரை புரிந்து கொள்வது மட்டுமே படம். மற்றபடி அன்பே சிவத்தின் சிறப்புக்களான.., கடவுள், Ideological clash போன்ற பலது அந்த படத்தில் இல்லை. ஒன்றிரண்டு ஒற்றுமைகள் இருப்பதால், இதை காப்பி என்று சொல்வது அநியாயம். அன்பே சிவம் ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டர் (கண் கலங்கும் அடுத்த நொடி சிரிப்பு வரும்.. பல காட்சிகளில்..).

இறுதியாக, கமல் படம் ஆதலால் அவரை பற்றி ஒரு துணுக்கு. அவர் படங்களில் வரும் சில விஷயங்கள் கொஞ்ச நாட்களிலேயே உண்மையாக நடந்து விடும். உ.தா. சிகப்பு ரோஜக்கள் - ஆட்டோ சங்கர்; அன்பே சிவம் - சுனாமி இப்படி பல (sms, emailஇல் பார்த்திருப்பீர்களே?). அந்த வரிசையில், பேப்பர் படிக்கும் போது 'கண நேரத்தில்' எனக்கு தோன்றிய ஒன்று -
மும்பை தாக்குதல்களில் தொடர்பு என அமெரிக்காவில் கைதான டேவிட் ஹெட்லீ ஒரு முன்னால் CIA ஏஜெண்டாம் (தசாவதாரம் ஃப்ளெட்சர் பாத்திரம்).
முழுதும் படிக்க..

Dec 13, 2009

85-65-75 : கதை... ஆனால் கதை இல்லை!

முதல் முறையாக எனது படைப்பு (கதை) யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது. அதுவும் யூத்ஃபுல் விகடனின் டிசம்பர் மின்னிதழில்... பார்க்க இங்கு கிளிக் பண்ணவும்


யூத்ஃபுல் விகடன் டிசம்பர் மின்னிதழ்





ட்டடங்கள் மட்டும் பெரிது பெரிதாக இருக்கும் கல்லூரிகள் ஒரு வித மிரட்சியை உண்டு பண்ணும். ஆனால் இந்த அமைதியான, மரங்களடர்ந்த கல்லூரி அப்படி இல்லை. நம் சொந்த வீடு, ஊர் போல் ஒரு உணர்வை கொடுக்கிறது. ஓஹோ என்று இல்லாவிட்டாலும், அதுவும் தரமான ஒரு கல்லூரி தான்.

அதோ அந்த துறையின் இறுதி ஆண்டில் படிப்பவர்களை பார்ப்போம். அவர்களை ஒருவாறு மூன்று வகைப்படுத்தலாம். முதல் வகையினர், எந்த நேரமும் செமஸ்டர், டெஸ்ட் என்று திரிபவர்கள். இவர்களுக்கு தெரிந்த (பிடித்த) இடங்கள் இவை தான் - வகுப்பறை, லேப், புத்தக கடைகள் (பாட புத்தகம் மட்டும்). அதிலும் ஸ்டாஃப் ரூம் தான் இவர்களுக்கு சினிமா தியேட்டர். உள்ளே நுழைந்தால் ஒரே உற்சாகம் தான் போங்கள். சராசரியாக 85 சதவீதம் எடுப்பவர்கள் (94 வரை கூட போகும், நான் சொல்வது சராசரி). சுருக்கமாக, உருப்படற பிள்ளைங்க.

இரண்டாவது வகை, இதற்கு நேர் எதிர். அடக்குமுறையை எதிர்ப்பவர்கள். எஃஸாம் நெருங்கினாலும் படிக்காமல் தைரியமாக அரியர் வைப்பவர்கள். இவர்களை 65 சதவீதத்தினர் (அரியர்/ஜஸ்ட் பாஸ்) என்று அழைக்கலாம் அல்லவா? பிரச்னைகளை எப்போதுமே பனியன் போல் அணிந்திருப்பார்கள் (போர்வை என்றால் இரவு மட்டும் தான். அதனால் பனியன்). பிரச்னைகளின் போது தேடவெல்லாம் வேண்டாம், இவர்களாகவே ஆஜர் ஆகிவிடுவார்கள். இவர்களுக்கும், முதல் வகையினருக்கும் ஆகாது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒருவர் மற்றவரை கண்டால், இப்படியும் ஜந்துக்கள் எப்படித்தான் இருக்கிறதோ என்று தவிர்த்து விடுவார்கள் (இதில் மட்டுமே ஒரே மாதிரி சிந்தனை).

மூன்றாவது, இந்த கதைக்கு முக்கியமானவர் இருக்கும் 75 கோஷ்டி (ஓயாம பெயர் காரணம் சொல்லிட்டு இருக்க முடியாது). இவர்களால் மேலே சொன்ன 2 பேருடனும் சேர முடியாது. எஃஸாம் நெருங்கும் போது மட்டும் நன்றாக படித்து (!), பெரிய பிரச்னைகளை முதல் வரிசையில் நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் (சிறியவைகளுக்கு இவர்கள் தான் நாட்டாமை). இவர்கள் 85 கோஷ்டிக்கு சின்ன ரவுடி. 65க்கு கொழந்த பசங்க

நம் நாயக 75-ம் (பெயர் முக்கியமில்லை) அவன் நண்பர்களும், வாழ்க்கை வாழ்வதற்கே என்று எண்ணுபவர்கள். சினிமா, சாப்பாடு, மொபைலில் குறும்படங்கள் எடுப்பது, படங்களுக்கு டப்பிங் கொடுப்பது என்று அவர்களுக்கு தெரிந்த வகையில் எஞ்சாய் செய்து, கல்லூரி வாழ்க்கையை அணுவணுவாக ரசிப்பவர்கள். 85/65 இருவருடனும் சினேகமாகவே இருப்பர் - 85 உடன் படிப்பு சம்பந்தமான உதவிகளுக்காக (xerox எடுக்க உன் புக் குடு, ப்ராக்டிகல்ஸ் இத்யாதிகள்), 65 உடன் கல்லூரியின் சீரான செயல்பாடுகளுக்காக (பின்னே? 65க்கு தெரியாமல் எதுவும் நடக்காதாக்கும்).

கொஞ்ச நாள் முன்னாடி காம்பஸ் இன்டர்வியூக்கென கம்பனிகள் வந்தார்கள். 85 கோஷ்டி டிரைனில் ரிசர்வெஷன் செய்தவர்கள் போல், பெரிதாக அலட்டி கொள்ளாமல் வேலை வாங்கினர். 75-ஐ சேர்ந்தவர்கள் அன்-ரிசர்வர்டில் அடித்து பிடித்து இடம் பிடிப்பதை போல் ஏதோ ஒரு கம்பனியில் வாங்கி விட்டார்கள். 65-இல் கிட்ட தட்ட எல்லாரும் டிரைனை தவற விட்டனர் (கொஞ்சம் பேர் ஊரிலேயே இல்லை).




இது நடந்து கொஞ்ச நாள் ஆகி விட்டது. முதல் ஆண்டில் எல்லாம் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஊருக்கு சென்று கொண்டிருந்த நம் 75, நீண்ட விடுமுறைகளிலும் ஹாஸ்டலிலேயே பழியாக கெடந்தான் (இறுதி ஆண்டும் முடிய போகிறதல்லவா..) இந்த நண்பர்கள் இல்லாத வாழ்க்கையை அவனால் கற்பனை பண்ண முடியவில்லை. அவன் பயந்ததை போல இறுதி ஆண்டு செமஸ்டரும் முடிந்தது. கடைசி நாளும் வந்தது. அன்று தான் நாம் உள்ளே நுழைந்திருக்கிறோம்.

வகுப்பினுள் நின்று கொண்டிருந்த நம்ம 75 அருகில் வந்த 65, "ஒரு வழியா சனியன் முடிஞ்சது... இங்க வந்து சேர்ந்ததுக்கு நல்ல காலேஜ்லயாச்சும் சேர்ந்திருக்கலாம். வேலயாச்சும் கெடச்சு இருக்கும். சரி சரி.. எதாச்சும் கெட்-டுகெதர்லாம் வச்சா கூப்பிடுங்கடா..." என்று கூறி விட்டு நகர்ந்து போனான்.

அப்போது, அங்கு வந்த 85 (இவனை பார்த்து தான் அவன் நகர்ந்திருக்க வேண்டும்), "இன்னிக்கி எஃஸாம் ஈசியாதான் இருந்துச்சு இல்ல (!)? டேய், கம்பனில இருந்து நாம ஜாயின் பண்றதுக்கு முன்னாடி படிக்கறதுக்கு டாகுமெண்ட்ஸ்லாம் அனுப்பி இருக்காங்க பாத்தியா? அத பிரின்ட் அவுட் எடுக்கத்தான் இப்போ போய்ட்டு இருக்கேன். நீ ஏண்டா ஒரு மாதிரி இருக்க?" என்று சொல்லி விட்டு, கடைசி நாள் என்ற நினைப்பே இல்லாமல் கடந்து போனான்.

முதல் நாளில் இருந்து நடந்த ஆயிரமாயிரம் நினைவுகள் அவன் கண் முன்னே ஓடின. நாளையிலிருந்து வகுப்புக்கு அவசரம் அவசரமாக கிளம்ப வேண்டியதில்லை; லேட்டா போய் திட்டு வாங்க வேண்டியதில்லை; ஹாஸ்டல் கிடையாது; கடைசி நேர படிப்புகள் இல்லை; ரெக்கார்ட்/அசைன்மென்ட்டுகள் இல்லை; மட்டமான அந்த மெஸ் சாப்பாடு இனி கிடையாது; சண்டை சச்சரவு இல்லை; ஏன், இனி இந்த கல்லூரியின் மாணவனே கிடையாது என்ற உண்மைகள் சடாரென்று அவனை தாக்க, கண்ணீர் தானாக துளிர்த்து அழ ஆரம்பித்தான்.
முழுதும் படிக்க..