Dec 6, 2010

பாட்டின் பொழுதுகள்


ஒரு பாடல். இரு வேறு சூழல்கள். இரண்டு விதமான உணர்ச்சிகளை தருகிறதே? அதை விட, சூழலை பொறுத்து ஒரு பாடல் பிடித்தோ பிடிக்காமலோ கூட போய் விடுகிறது. சின்ன வயதில் (இப்போவும் தான் யூத், நான் சொல்வது குழந்தையில்..), 'சுந்தரி நீயும்.. சுந்தரன் ஞானும்' பாடல், நாங்கள் இருந்த 'லைன்' வீட்டில், பக்கத்து வீட்டின் ஒரு சிகப்பு கலர் டேப் ரெக்கார்டரில் தினம் சாயந்திரம் ஓடும். அந்த வேளை தான் பொடிசுகளுக்கு வீட்டு பாடம் எழுதி, படிக்கும் நேரம். அடுத்தநாள் வகுப்பில் என்ன நடக்குமோ, டெஸ்ட் வைப்பார்களா என்று ஒரே பீதியான பொழுதுகள். துரதிர்ஷ்டவசமாக, அந்த பீதி, சுந்தரி நீயும் பாடலில் வந்து ஒட்டிக்கொண்டது. இன்று அந்த பாடலை கேட்டாலும், இனம் புரியாத பீதி, கருமை என்று ஒரு மாதிரிதான் இருக்கு.
முழுதும் படிக்க..

Dec 4, 2010

நான் எப்படிப்பட்டவன் (ஐம்பதாவது பதிவு)

திக்கி முக்கி ஐம்பது பதிவு வந்தாச்சு (எனக்கும் ஆசைதான் மாதத்திற்கு 15 பதிவு போடணும்னு.. ஹ்ம்ம் என்ன செய்ய?). ஐம்பதாவதா நம்மள பத்தியே எழுதலாம்னு யோசிச்சப்ப, அன்னு அக்கா பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன் எழுத அழைச்சாங்க. நல்லதா போச்சுன்னு, இதோ..

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
Prasanna (பிரசன்னா)

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
உண்மை பெயர்தான். என் பெயரில் ரொம்ப பேர் எழுதவில்லை என்று நினைக்கிறேன். அதனால்..

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
நான் 2008 இல் ஆங்கில வலைப்பூவை தொடங்கினேன் (கொத்து பரோட்டா மாதிரி இல்லை, அதில் நான் பெரிய ஆளாக்கும். போய் பாருங்கள் தெரியும்). அப்போ தமிழில் வலைப்பூக்கள் இருப்பது தெரியாது. எப்படியோ ஏதோ ஒரு லிங்க் கிடைக்க, அதன் மூலம் வினவு பக்கம் வந்து சேர்ந்தேன். அந்த நடை அட்டகாசமாக இருந்தது. அப்புறம் பாலோயர்ஸ் மூலமாக மற்ற வலைப்பூக்களையும் பார்க்க முடிந்து, சென்ற ஆண்டு இறுதியில் (அடடே ஒரு ஆண்டு முடிந்து விட்டது) கொத்து பரோட்டா ஆரம்பித்தேன். ஏன் இப்படி ஒரு பெயர் என்று தனி பதிவு போடுகிறேன் :)

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
கொஞ்சம் படித்தேன். நிறைய ஓட்டும், பின்னூட்டமும் போட்டேன். திரட்டிகளில் இணைத்தேன். வந்த புதிதில் யாரும் வரமாற்றாங்களே என்று நிறைய புலம்பினதுண்டு

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
அவ்வபோது பகிர்வதுண்டு. நான் அவமானப்பட்டதை 'நண்பன்' பட்டதாகவும், நண்பன் 'காமெடி' பண்ணியதை நான் பண்ணியதாகவும் மாற்றி எழுதிக்கொள்வேன் (அத்தகைய படைப்பு சுதந்திரம் எனக்கு உண்டு ஹீ ஹீ).

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
போழுபோக்குக்காக எழுத ஆரம்பித்து, இப்போ என் பொழுதெல்லாம் போகிறது. ஆமா இதுல துட்டு வருமா ;)

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இரண்டு. ஒண்ணு இது, இன்னொன்னு ஆங்கில வலைப்பூ. என் தமிழ் பதிவுகளை (!)மொழிமாற்றம் (!!) செய்து வெளியிட ஆசை. மொழிபெயர்ப்பு எவ்வளவு கடினம் என்பதை இதில் தெரிந்து கொண்டேன். அது வெறுமனே வரிக்கு வரி மாற்றுவதல்ல. திரும்பி முழு கான்செப்டையும் யோசித்து எழுத வேண்டும்!

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.
நான் கொஞ்சம் சாப்ட்டான ஆளா? அதனால அடுத்தவங்கள போட்டு மோசமா திட்றவங்க, சண்டை போடறவங்க எல்லாரையும் பாத்தா கோபம் வரும். ஆனா அது நண்பர்கள் மீது கோபம் வருவது போன்றது தான். என் எதிரி கூட நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன் (கேக்குது, உச்சு கொட்றது. பேசிட்டு இருக்கேன்ல? சைலன்ஸ்). பொறாமை, நல்ல எழுத்துக்களை பார்க்கும்போதெல்லாம்..

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.
முதல் பின்னூட்டம் கடைத்தெரு அவர்கள் போட்டது எனது மூன்றாவது பதிவில். பயங்கர ஹாப்பி பார்த்துவிட்டு. முதலில் தொடர்பு கொண்டு பேசியது என்றால் அண்ணன் ரசிகன் மகேஷ்தான் (அவருக்குதான் என் நம்பர் தெரியும், அதுனால.. இல்லனா நெறைய பேரு போன் பண்ணி இருப்பாங்க).  உலகின் கடைசி மனிதன் என்ற என் அறி-புனை கதையை படித்துவிட்டு ரொம்ப சிறப்பாக இருப்பதாகவும், மேலும் நிறைய எழுத வேண்டும் என்றும் சொன்னார். நம்பவே முடியவில்லை :)

10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
பன்னிரெண்டாம் வகுப்பில் நாந்தான் ஸ்கூல் பர்ஸ்ட் (சரியான பெருமை பீத்தகளையங்கள் என்று திட்டக்கூடாது. என் வாழ்க்கைல பெருமையா சொல்லிக்கற மாதிரி யோசிச்சு யோசிச்சு இது ஒண்ணு தான் தேறுச்சு ஹீ ஹீ)



முழுதும் படிக்க..

Nov 29, 2010

ஒரு என்சிசி மாணவனின் கதை

ஒழுங்கு, ஒழுங்கு. இது தான் தேசிய மாணவர் படை என்னும் என்சிசி (NCC). எல்லா பயல்களையும் போலவே எனக்கும் சிறுவயது முதலே ராணுவம், துப்பாக்கி, camouflage உடை, பச்சை ஜீப், தொப்பி (இது முக்கியம்) இதுங்க மீது ஒரு ஈர்ப்பு. முதல் நாளே கல்லூரியில் பெயர் கொடுத்து ஆர்வத்துடன் சேர்ந்தாயிற்று ('நேர்முகத்தில் இதுக்கெல்லாம் வெயிட் அதிகம்').

கல்லூரியின் அந்த முதல் வார சனிக்கிழமை 'துள்ளுவதோ இளமை' புகழ் செல்வராகவன் எடுத்த காதல் கொண்டேன் படத்திற்கு போயிருக்கலாம். போகவில்லை. திடும் திடும் என்று எல்லா விடுதி அறைகளில் இருந்தும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டு விடுதி முன் வரிசையாக நிற்க வைக்கப்படுகின்றனர். ஒரு 45 வயது சொல்லத்தக்க கண்ணாடி போட்டவர் முன்னாடி நின்று கொண்டு 'நீங்கள் எல்லாரும் இன்று முதல் என்சிசி மாணவர்கள்.. என்ன'? என்று கர்ஜிக்கிறார். நாங்கள் எங்களுக்குள் சாதக பாதகங்களை விவாதிக்கிறோம். சுற்றி நிற்கும் சீனியர்கள் ஸ்தம்பிக்கிறார்கள். ஏன்?
முழுதும் படிக்க..

Nov 26, 2010

நந்தலாலா - நாவலான கவிதை புத்தகம்

ரொம்ப நாள் கழித்து முதல் நாளே ஒரு திரைப்படத்தை பார்த்தேன். முதல் முறை சுடச்சுட படப்பார்வையும் (இதை விமர்சனம்னு சொல்ல முடியுமா தெரியலை). மிஷ்கின் என்ற பெயர் மீது இருக்கும் ஒரு ஈர்ப்பே காரணம்.

15-20 சிறுகதைகள் கொண்ட ஒரு தொகுதியினை படித்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது இப்படம் (கவிதையை ரசிப்பவர்களுக்கு கவிதைத்தொகுதி). சிறுவயதில் தொலைத்த தன் தாயை தேடிப்போதல் என்ற ஒற்றை இலக்கில், இச்சிறுகதை தொகுதி நாவலாக உருப்பெறுகிறது!


மனநலம் பாதிக்கப்பட்ட மிஷ்கின் மற்றும் ஒரு சிறுவன் தங்கள் தாயை தேடி போகும் பயணமே படம். எல்லா பயணத் திரைப்படங்களும் போலவே, இதிலும் பயணத்தின் மூலமாக வாழ்க்கையை, அதன் சாராம்சத்தை சொல்கிறார்கள். வழியில் சேட்டை செய்கிறார்கள். அடி வாங்குகிறார்கள். தாய்களை பார்க்கிறார்கள். பலருக்கு தாய் ஆகிறார்கள்.

நாயகர்கள் இருவரையும் எப்படிப்பட்டவர்கள் என்று முதலில் சொல்லி விடுகிறார்கள். அதனால் ஒவ்வொரு சிறுகதையிலும், கணேஷ், வசந்த்தை போல (போலதான். அவர்களே அல்ல) அவர்கள் நமக்கு நன்கு தெரிந்தவர்களே. புதிதாக வரும் பாத்திரங்களை கொண்டு கதைகள் சொல்லப்படுகிறது. நாயகர்களும் தங்கள் இலக்கை நோக்கி நகர்கிறார்கள்!

முதலில் படத்தின் சிறப்பு என்று சொல்ல வேண்டியது காட்சி அமைப்புகள். எல்லாமே புதுசு (மிஷ்கினின் ட்ரேட்மார்க் வைட் ஆங்கிள் மற்றும் கால்களை மட்டும் காட்டும் காமிரா). டயலாக்குகள் ரொம்ப குறைவு, உச்ச காட்சிகளில் கூட. எல்லா டயலாக்குகளையும் காமிராவே பேசுகிறது. எப்படி ஒரு காமெடியன் டயலாக் சொல்லி முடித்ததும் சிரிப்போமா, அப்படி ஒரு காமிரா அசைவிற்கு பிறகு சிரிக்கிறோம்! அழுகிறோம்! அதிர்கிறோம்! இதுவே படத்தை மிக மிக வித்தியாசமாக காட்டுகிறது. அதே போல் வசனம் பேசாமல் செயல்களின் மூலம் ரியாக்ஷன்கள் காட்டுவதும் (மிஷ்கின் ஒரு கயிறால் கட்டப்பட்ட கடிக்க வரும் நாயை போல, மெண்டல் என்று கூறிய சிறுவனை நோக்கி பாயும் காட்சி). படம் முழுக்க குறியீடுகள். அனைத்தும் புரிந்துவிடவில்லை. அதனால் திரும்ப பார்த்தால் வேறு அர்த்தங்கள் கிடைக்ககூடும்.

ஒளிப்பதிவு கொள்ளை அழகு (அந்த மஞ்சள் சலித்த மாலை வேளை!). இசை 'வழக்கம் போல' அருமை! பாடல்களை விட பின்னணி இசை அபாரம். நடிப்பு ஒரு சில இடங்களைத்தவிர அருமை. ஓவென அழும் காட்சிகளை தவித்து இருக்கலாம், காட்சிக்கவிதைகள் படைக்கும் மிஷ்கினிக்கு இது ஒன்று பெரிய விஷயம் இல்லை. நான் இன்னும் கிகுஜிரோ பார்க்கவில்லை. ஆனால் அதை அப்படியே அடிக்கும் அளவிற்கு மிஷ்கின் சுய சிந்தனை இல்லாத ஆள் இல்லை என்று நினைக்கிறேன்.

சிறுகதைகளில், ஒரு சில கதைகள் புரியாது. அதுபோல ஒரு சில காட்சிகள் தோய்வாக செல்லுவது போல தோன்றியது, அது எனக்கு புரியாததால். எனக்கு (நன்றாக இருக்கும்) மெதுவாக போகும் படங்கள் பிடிக்கும், அதனால் தடால் புடால் படங்கள் விரும்புகிறவர்கள் தவிர்க்கவும். மற்றபடி புதுமையான அனுபவம் வேண்டுபவர்கள் நிச்சயம் பார்க்கலாம்! 
முழுதும் படிக்க..

Nov 25, 2010

பட்டாம்பூச்சி அதிர்வு

ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார் இன்று மதியம்.

நேற்று, தனது வீட்டில் வந்து ஒன்றுக்கு இருந்த ஒரு கொழுத்த நாயை ஒரு கொழுத்த கனவான் கொழுத்த கல்லால் அடிக்க, அது வலி மிகுந்து கத்திக்கொண்டு அதன் முதலாளி சிறுவனிடம் ஓட, அவன் 'அப்சட்' ஆகி வீட்டு (விலை உயர்ந்த) பொருள் ஒன்றை உடைத்தான்.

பதிலுக்கு 'அப்சட்' ஆன சிறுவனின் அம்மா, கரண்டி வளையும் அளவுக்கு அவனை அடித்து விட்டு, அவன் சேட்டையை அடக்க வழி தெரியாமல் உட்கார்ந்து அழுதாள். அந்த நேரம் பார்த்து, வெளியில் போயிட்டு வந்த அவள் கணவன் வழக்கம் போல 'என்னடி இன்னும் டீ போடலியா?' என்று கத்த, ஒரே களேபரமாகி இரவு முழுதும் யாரும் தூங்கவில்லை..

அடுத்த நாள், அதாவது இன்று காலை, அந்த வங்கி மேலாளர் கணவன் சாப்பிடாமல் கொள்ளாமல் கோபமாக தன் வேலைக்கு கிளம்பினார். விவசாயக்கடன் ரத்து/புதுக்கடன் வழங்குதல் என்று பரிசீலனைக்கு வந்த அத்தனை கோப்புகளையும் வேகுவேகென்று நிராகரித்தார்.

ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார் இன்று மதியம்.




இதை ஆங்கிலத்தில் படிக்க...
முழுதும் படிக்க..

Nov 20, 2010

ட்விட்டர் மொழிகள்-2

எனக்கு மதிய நேரத்தில் உறங்கவே பிடிக்காது.. அதனால், இரவு தூங்கி மதியத்திற்கு முன்னமே எழுந்து விடுவேன்..

                                                                              ############
எனக்கு தெரிந்து காதலர்களுக்கு தான் முதலில் திருமணம் நடக்கிறது.. வேறு யாருடனோ..

                                                                              ############


பதிவர்கள் எல்லாரும் இந்து வெறியர்கள். எல்லார் பக்கங்களிலும் RSS-க்கு 
லிங்க் கொடுத்திருக்காங்க.

                                                                              ############
ஹார்ட் டிஸ்கு சைசும், வாங்கும் சம்பளமும், ஒண்ணு.. எவ்வளவு இருந்தாலும் பத்தாது :)
                                                                             ############
நண்பர்கள் சொல்வதுண்டு.'நல்லா சம்பாரிச்சிட்டு,கொஞ்சம் வயசான பெறகு (சொந்த) கிராமத்துல போய் செட்டில் ஆகிடனும்'#isitpossible
                                                                             ############
25ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்கினால் ஒரு iMandu பாய்ண்டு. இப்படி 500 பாய்ண்டுகள் சேர்த்தால் ஒரு கைக்குட்டை
  
                                                                            ############
கூலிங்க்ளாஸ் போட்டா மாதிரி என்னிடம் புகைப்படம் இல்லை.. இப்போ எப்படி ப்ரோபைல் போட்டோ வைக்க?

  
                                                                            ############
வெயில் காலங்களில் விடுமுறைகளே இல்லாததும், Oct-Jan நேரத்தில் அதிக விடுமுறைகள் இருப்பதும் தற்செயலாக நிகழ்ந்ததா? #Diwali
  
  
                                                                          ############
என்னை படுக்கையிலேயே ’நம்பர் ஒன்’ போக வைக்க எப்படியெல்லாம் பிரயத்தனப்படுகிறது கனவு #டாங்க் புல் #Inception
                                                                             ############




ஆங்கிலத்தில் இதை படிக்க...

முழுதும் படிக்க..

Nov 12, 2010

காட்சி மாறுதல் (திடுக்)

நிலவற்ற தனி இரவில்,
நெடுந்தெருவில்
தயங்கி நடக்க
திடீரென்று எங்கிருந்தோ தோன்றி,
பயங்கர சத்தத்துடன்,
எதையோ
விளையாடும் குழந்தைகள்..

*******************

அரட்டை
சிரிப்பு
குழந்தை அழுகை
கும்மாளம்
நிசப்தம்-அலறல்
விபத்து

(விபத்தை போன்ற திடுக் காட்சி மாற்றம் மனிதனுக்கு வேறு இல்லை)

*******************

நூறு
ஆயிரம்
லட்சம்
வைரஸ்

*******************

நொடி தாமதித்தாலும்
சளார் சளார் ஹாரன்கள்
வசைகள்
இன்று அதே தெருவில்
கிரிக்கெட்
பந்த்

*******************

வியர்வை
கொடுத்த
சாவுக் கனவு
முழுதும் படிக்க..

Nov 1, 2010

The Way Home 2002 - வீடு திரும்பல்

ஒரு சூரிய சாப்பாட்டு வேளையில், வழியில் உட்கார்ந்து ஒரு பாட்டி கையேந்திக்கொண்டு இருந்தார். ரொம்ப வருந்தாமல், கண்களாலேயே.. சுலபமாக அவரை பார்க்காமல் கடந்து விட முடியும். ஆனால் நான் பார்த்துவிட்டேன்., பணம் கொடுப்போமா என்றும் எவ்வளவு கொடுக்கலாம் என்றும் யோசித்து முடிக்குமுன் அந்த இடத்தை கடந்தாயிற்று. சரி வரும் போது தரலாம் என்று முடிவு செய்து, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, திரும்பும்போது ஞாபகமாக அவரை தேடிக்கொண்டுதான் வந்தேன். அவர் அங்கே இல்லை. சரி, எனக்கு சமீபத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கும், இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம்?
முழுதும் படிக்க..

Oct 30, 2010

ஆனந்த விகடனில் என் ட்வீட்..!

வாரா வாரம் ஆனந்த விகடன் வாங்கியதுமே, வலைபாயுதேவில் நமக்கு தெரிந்தவர்கள் யார் யாரின் ட்வீட்கள் வந்துள்ளன என்று பார்ப்பது வழக்கம். இந்த தடவை, அந்த பக்கத்தில் இருந்த தோனி சம்சாரம் சகிதம் இருந்த படத்தை பார்த்து கடந்து விட்டேன். திரும்ப புரட்டும் போது அட இதை எப்படி விட்டோம் என்று வந்த ட்வீட்களை படித்துக்கொண்டு இருக்க, கனவு போல என் பெயரும் இருந்தது.. prasannag6@twitter.co (m விட்டு போய் இருந்தது. 'எம்', 'என்' என்று சுயநலத்தை கை விட்டால் நீதான் ராஜா (கோ) என்று சொல்கிறார்களோ?)

வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அடுத்து சில நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தெரிவித்ததும், 'நெருங்கிய நண்பன்' (நானும் ஜவுளி கடைல சேர்ந்த நாள்ல இருந்து பாக்கறேன்..) அழைத்து..
'டேய் என்ன டா எழுதின?'
'அது வந்து சும்மா தாண்டா.. எப்டி போட்டாங்கன்னு தெரில'
'சரி, என்னனு சொல்லு'
'அது சொன்னா அவ்ளோ நல்லா இருக்காதே?'
'*&^ இப்போ சொல்றியா இல்லையா?'
சொன்னேன்..
'என்ன டா? இதையா போட்டாங்க?'
'..... எப்டியோ போட்டுட்டாங்க விடேன்'
'யாருடா இத செலக்ட் செஞ்சது?'
'டேய் சரியா கேக்கல, அப்புறம் கால் பண்றேன்'

****

அவன் கெடக்கான் அந்த ட்வீட் இதுதான்.. மற்ற ட்வீட்களை படிக்க http://twitter.com/prasannag6 பார்க்கவும். அந்த 120 ஆம் பக்கத்தை இங்கு பார்க்கலாம் http://www.vikatan.com/av/2010/nov/03112010/p120a.jpg
(2010 Nov 03 தேதியிட்ட இதழ்)

"ஒரு வேளை கடவுள் இருந்தால்? என்று சந்தேகம் நாத்திகனுக்கு.. ஒரு வேளை வேற்று மதக்கடவுள் இருந்தால்? என்று சந்தேகம் ஆத்திகனுக்கு."

***
(updated on Jan 2011)
விகடனில் வெளிவந்த மற்றொரு ட்வீட்:

"காரில் முன்னிருக்கையில் இருந்துகொண்டு பாடல்கள் மாற்றுபவர் நமக்கு நேர் எதிரான ரசனையையே கொண்டிருப்பார்"


முழுதும் படிக்க..

Oct 18, 2010

Le Grand Voyage (2004) - மகத்தான பயணம்

பயணங்களின் கதை சொல்லும் படங்கள் எப்போதுமே எனக்கு மிக பிடித்தவை..  அதிகம் பயணப்படாதவன் என்பதாலா என்று தெரியவில்லை (அது 'ண', ண் அல்ல) .. அந்த வகையில் எழுத்தாளர் எஸ்.ராவின் வலைத்தளத்தில் தெரிந்துகொண்டு பார்த்த இப்படமும், இதுவரை பார்த்ததிலேயே சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது..


ஒரு சிறப்பான படம் எப்போதும் பல தளங்களில் இயங்கும். அதை நிரூபிக்கும் வகையில் இதுவும் தந்தை-மகன் உறவு, பயணத்தின் மகத்துவம், வாழ்க்கையின் அர்த்தம் என்று பல விஷயங்களை போகிற போக்கில் சொல்கிறது.

முழுதும் படிக்க..