Mar 22, 2014

ஏழு தலைமுறைகள்


கருப்பென்றால் தாழ்ச்சி, அசிங்கம், கருப்பர்களுக்கு எதுவும் தெரியாது, காட்டுமிராண்டிகள் போன்ற கருதுகோள்கள் நம்மிடையே வெகு பிரபலம். இத்தகைய கருத்துக்கள் எப்படி உருவாகின, யார் உருவாக்கியது, ஏன் அவை வெள்ளையர்களுக்கு மிக முக்கியமாக இருந்தன? கருப்பர்களை வெறும் உடைமையாக, செருப்பு பழசாகிடுச்சு, தூக்கி போட்டுட்டு வேற வாங்கணும் என்பது மாதிரி மட்டும் எப்படி அவர்களால் கருத முடிந்தது?  அவர்களின் உழைப்பை முழுக்க சுரண்டி தன்னை வளர்த்துக்கொண்ட வெள்ளையர்கள் எத்தனை பேர்? அவர்களின் உழைப்பில் அமெரிக்காவே வளர்ந்தது!

இப்படி முற்றிலும் அநியாயமான, மனசாட்சிக்கு விரோதமான ஒன்றை நடத்த ஒரு பெரும் தர்க்கம் வெள்ளையர்களுக்கு தேவைப்பட்டது. எப்படி மத/சாதிக்கலவரங்களில் கொலை, கற்பழிப்பு போன்றவற்றை 'ஆமா, அவனுங்கள இப்படி செஞ்சாத்தான் அடங்குவாங்க' என்று சொல்லி நம்மையே திருப்திபடுத்திக்கொள்கிறோமோ, அது மாதிரி.. அந்த நியாயம்தான் முதல் பத்தியில் சொல்லப்பட்ட கருதுகோள்கள். 'அவர்களுக்கு ஒன்னும் தெரியாது, மிருகங்கள். நாம்தான் வாழ்க்கை தந்தாக வேண்டும்'. ஆனால் அவர்களின் வாழ்வு எத்தகையது? எப்படிப்பட்ட மண்ணில் இருந்து அவர்களை பிடுங்கி வேறு இடத்தில் நட்டார்கள்?


  
1750 வாக்கில் காம்பியாவின் ஜப்பூரை சேர்ந்த குண்ட்டா கின்ட்ட்டே பிறப்பதில் ஆரம்பித்து கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள், ஏழு தலைமுறைகள் கடந்து அமெரிக்காவில் அலெக்ஸ் ஹேலியில் முடிகிறது இந்த நாவல். அலெக்ஸ் ஹேலிதான் நாவலாசிரியர். கருப்பர்களின் வரலாற்றை, அமெரிக்காவில் அவர்களை வைத்து நடந்த மாபெரும் அசிங்கத்தை, அந்த இருநூறு வருட சரித்திரத்தை இந்த ஏழு தலைமுறைகளின் வாயிலாக அனாயாசமாக வரைந்து காட்டுகிறது இக்கதை. பிரச்சார நெடியில்லாமல் சுவாரசியமாக; ஒவ்வொரு இரவும் வெகு நேரம் ஆனாலும் இன்னும் சில பக்கம், இன்னும் சில பக்கம்  என்று படித்துக்கொண்டே இருக்க வைத்துவிட்டது.

முதல் சில அத்தியாயங்களில் ஜப்பூர் கிராமத்தின் வாழ்க்கை முறை விலாவாரியாக சொல்லப்படுகிறது. எல்லாவற்றையும் மிக திட்டமிட்டு, இயற்கையோடு இயைந்த ஒரு வாழ்க்கையை வாழும் சமூகமது. இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மக்கள், மதகுரு வழியாக கல்வி கற்கிறார்கள். வயதுக்கு வந்ததும் சிறுவர்கள் அனைவருக்கும் ஊருக்கு வெளியே போர்ப்பயிற்சி (Training camp!). அது முடிந்து வந்ததும் தனிக்குடிசை, தனி நிலம், பிடித்த பெண்ணை மணந்து கொண்டு வாழ்க்கை என்று ஒரு தொடர்ச்சங்கிலி வாழ்க்கை. அச்சமூகத்தில் இருக்கும் சிற்சில பிற்போக்கான நடைமுறைகளும் எந்தவித பூச்சும் இன்றி இயல்பாக சொல்லப்படுகிறது.

இதில் பெரும்பாலானவை குண்ட்டாவின் பார்வையில் சொல்லப்படுவதால் அந்தந்த பருவங்களுக்கே உரிய கிளர்ச்சிகள், கற்பனைகள், கனவுகள் இயல்பாக விவரிக்கப்படுகின்றன. சொல்லப்போனால் அந்த கனவுகளும், கற்பனைகளும், ஆசைகளும்தான் பின்பு நடக்கும் கொடுமைகளை இன்னும் அழுத்தமாக நம் மனதில் பதிக்கின்றன.

அப்போதே அவர்களுக்கு வெளிறிப்போய் வித்தியாசமான தோற்றம் கொண்ட, (கவனிக்க) கடும் நாற்றம் வீசும் பிள்ளை பிடிப்பவர்களை பற்றி எச்சரிக்கப்படுகிறது. அந்த அடிமைத்தரகர்களின் வேலை கருப்பர்கள் தனியாக இருக்கும் போது பிடித்துக்கொண்டு போய் அமெரிக்காவில் விற்பது என்பது அவர்களுக்கு தெரியாது (யாரும் திரும்பி வந்ததில்லை). குண்ட்டாவும் தனது விடலைப்பருவத்தில் ஒரு நாள் காட்டில் தனியாக இருக்கும் போது பிடிபட்டுவிடுகிறான். அதன்பிறகு அவர்கள்செய்யும் கடுமையான கடல் பயணம், ஏலம், புதிய முதலாளி, அங்கு அனுபவிக்கும் கொடுமைகள், சிறிது சிறிதாக தப்பிக்கும் எண்ணம் மறைந்து அடிமைவாழ்வுமுறையை ஏற்றுக்கொள்ளுதல், பல வருடங்கள் கழித்து திருமணம், அவனின் சந்ததியினர் என்று கதை நீள்கிறது.

வெற்றிமாறன் தனக்கு பிடித்த நூலாக Roots ஐ குறிப்பிடுகிறார். அவரின் ஆடுகளத்தில் வரும் கோழி சண்டையின் inspiration இதில் உள்ளது (ஐயா இது சினிமாவில் ஊறிய உடம்பு.. எதைப்பற்றி ஆரம்பித்தாலும் சினித்துணுக்கு நடுவில் வந்துவிடுகிறது!). ஆப்பிரிக்க-தமிழக தொடர்புபற்றி இங்கும் பல துப்புகள். உதாரணமாக காம்பியாவின் ஊர்கள் ஜப்பூர், கஞ்சூர் மாதிரி ஊர் ஊர் என்று முடிகிறது (கபாலீஸ்வரர் கோவில் எங்க இருக்கு? மைலாப்பூர்).

கதை சொல்முறையில் கடின கசடதபற இல்லை. நியோ போட்டோ பாட்டியின் 'ஏ பேராண்டிகளா, கதை ஒன்னு சொல்றேன் கேளுங்கடா' மாதிரிதான் நாவல் முழுவதுமே இருந்தது. நான் படித்தது ஏ.ஜி. எத்திராஜுலு தமிழில் மொழிபெயர்த்த சவுத் விஷன் வெளியீடு. தமிழில் படித்துவிட்டு ஆங்கிலத்தில் சில பக்கங்கள் மேய்ந்து பார்த்தேன், ஆங்கிலத்திலும் இதே முறைதான் போலும். நாவலின் இறுதியில் தனது முன்னோர்களின் மூலம் பெற்ற சிற்சில குறிப்புகளை எடுத்துக்கொண்டு ஜப்பூரை எப்படியோ கண்டுபிடித்து செல்கிறார் அலெக்ஸ். அங்கு நூற்றாண்டுகளாக முன்னோர் பாடல்களை பாடும் பெரியவர் ஒருவரையும் கண்டுபிடிக்கிறார். ஏழு தலைமுறைகளுக்கு முன், ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காகொண்டு வரப்பட்ட குண்ட்டாவை பற்றியும், அப்போதிருந்தவர்களை பற்றியும் பாடுகிறார் பெரியவர். இந்த இடத்தில் அலெக்சுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை நம்மால் நேரடியாக உணர முடிகிறது.

அடுத்தவர்களின் உழைப்பை சுரண்ட தனக்கென்று ஒரு நியாயம் வைத்துக்கொண்ட வெள்ளையர்கள் பற்றி படிக்கும்போது, இங்கும் பல்லாண்டுகளாக சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் நினைவு எழுவதை தடுக்கவே முடியாது. மேலும் இன்றும் கூட வெறுப்பு அரசியல்களால் போகிற போக்கில் நம்மை சாராதவர்களை பற்றிய பொதுப்படையான மட்டமான கருத்துக்களை உதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.இனவெறி பற்றிய சிந்தனைகளில் இப்போதுதான் நாம் தொடக்க நிலையில் இருக்கிறோம்.  மீண்டும் மீண்டும் பெரும் சண்டைகளுக்கும், பேரழிவுகளுக்கும் பிறகே, மனிதநேயம்தான் முக்கியம் என்பதை மனிதன் கண்டு கொள்கிறான். வரலாற்றின் தவறுகளை திரும்ப செய்யாமல் இருப்பதன் மூலமும், வெறுப்பரசியலுக்கு எதிராக தொடர்ந்து பேசுவதன் மூலமும் அந்த வழக்கத்தை விட்டொழிக்கலாம்.

ஆங்கில மூலம் : அலெக்ஸ் ஹேலி
தெலுங்கில் இருந்து தமிழில் : ஏ.ஜி.எத்திராஜீலு
வெளியீடு : சவுத் ஏசியன் புக்ஸ்
கீழைக்காற்று : 044-28412367
இணையத்தில் வாங்க : உடுமலை ரூ.80 


No comments: