Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Jan 10, 2017

படித்த புத்தகங்கள் - 2016

புத்தகங்கள்
Serious Men - Manu Joseph
Freedom At Midnight Paperback by Dominique Lapierre, Larry Collins
காடு - ஜெயமோகன்
Things a little bird told me - Biz Stone
கருத்த லெப்பை - கீரனூர் ஜாகிர்ராஜா
Second Foundation - Isaac Asimov
ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா
பிறகு (பூமணியின் ஐந்து நாவல்கள்)
The story of Philosophy - Will Durant
Ancillary Justice - Ann Leckie
வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
தீண்டாத வசந்தம் - ஜி.கல்யாண ராவ்


படிக்கும் புத்தகங்களைப் பற்றி இரு வரிகளாவது எழுத வேண்டும் என்பது எனது உறுதிமொழி, சென்ற வருடம் அதை கடைப்பிடிக்க இயலவில்லை. கீழே சில புத்தகங்களுக்கு மட்டும் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்திருக்கிறேன். ஒன்றுமே குறிப்பிடாமல் காலத்தை ஓட்டுவதற்கு இந்த அவசர கோலத்தையாவது பதிவு செய்ய முடிவெடுத்துவிட்டேன். சில புத்தகங்கள் விடுபட்டுள்ளன, நினைவில் வந்ததும் சேர்ப்பேன்.

***

Freedom at midnight - Dominique Lapierre, Larry Collins

காந்தி-நேரு-மவுண்ட்பேட்டன் ஆகியோரையும் தேசத்தின் முக்கிய நாட்களையும் முழுமையாக புரிந்துகொள்ள படிக்கவேண்டிய புத்தகம். சும்மா அடித்துவிடாமல் வரும் ஒவ்வொரு வரிக்கும் ஆதாரம் வைத்திருக்கிறார்கள். வரலாற்றை 'சுவாரசியமாக' , மிக சுவாரசியமாக சொல்லும் புத்தகங்களுக்கு இது ஒரு முன்னோடி.. பிரிவினை எனும் மிகப்பெரிய வலியைக் கடப்பது அத்தனை எளிதல்ல. அதிலும் இதில் வரும் பல காட்சிகள் தூக்கத்தை கெடுப்பவை.

ஒரு காட்சி: படுகொலைகளையும் படு கொடுமைகளையும் அனுபவித்து, எஞ்சியவர்கள் மனித மந்தைகளாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கும் இங்கிருந்து அங்கும் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஒரு இடத்தில் இந்துக்கள் கூட்டமும் முஸ்லிம் கூட்டமும் சந்திக்க வேண்டிய அபாயம். என்ன நடக்குமோ எனும் பதைப்பு. அவ்வளவு பேரும் மாபெரும் அழிவுகளையும் வெறுப்பையும் சுமந்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் எதிரெதிரே, அதுவும் கூட்டமாக சந்தித்தால்?

நடந்தது வேறு. பெரும் சப்தத்துடன் எதிர் எதிரே வந்த அந்த மாபெரும் ஜன ஆறுகள் கடக்கையில் ஒரு சிறு சத்தம் கூட எழுப்பாமல், திரும்பாமல் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் கடந்து செல்கிறார்கள்!

இப்படி ஏராளமான சம்பவங்கள், தகவல்கள். புத்தகத்தில் எரிச்சல் படுத்தும் ஒரே விஷயம் எத்தனை முயன்றும் அப்பட்டமாக வெளிப்படும் வெள்ளைத்தோல் தூய்மைவாதம். இது பெரும்பாலும் ஆங்கிலேய அதிகாரிகளின் குறிப்புகளைக்கொண்டு எழுதியதால் கூட இருக்கலாம். பிரிவினையில் ஆங்கிலேயர்களின் தவறுகள் பல, ஆனால் தங்கள் தவறேதும் அதில் இல்லை என்று முடிந்தவரை நியாயப்படுத்துகிறார்கள்.


காடு - ஜெயமோகன் 

நாவலைப்பற்றி ஏராளமாக எழுதப்பட்டுவிட்டதால் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திய ஒரு இழையை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன் - சடுதியில் முடிந்துவிடும் வாழ்க்கை, அதன் நிலையாமை, உண்மையில் இந்த அம்சத்தை இப்பொதெல்லாம் நான் காணும், படிக்கும் அத்தனை விஷயங்களிலும் பாம்புத்தொடுகை போல் உடனே பிடித்துவிடுகிறேன் அல்லது அதை மட்டும் அதீதமாக கவனிக்கிறேன். 

 'அவ்வளவேதானா இளமை?' என்பது போல் அவ்வளவேதானா வாழ்க்கை என்று ஒவ்வொரு தினமும் தவிப்படைகிறேன். அப்படி கேட்டுக்கொள்ளாதவர்கள் யார் என கதையில் வருகிறது. இருந்தாலும் முப்பது வயதில் எனக்கு இருக்கும் இந்த தவிப்பு கொஞ்சம் அதிகமாகவே தோன்றுகிறது. கண்ணெதிரே ஒரு தலைமுறை வயதாகி விட்டதையும், இதோ இப்போதுதான் பார்த்து ரசித்த கலைஞர்கள் எல்லாம் பழைய ஆட்களாக ஆகிப்போனதையும் அதிர்ந்தபடியே தான் நோக்குகிறேன்.

இந்த பதட்டத்தை காலங்களை முன்பின்னே கடக்கும் கதையின் அமைப்பு அதிகரிக்கவே செய்கிறது. ஏதோ கனவில் மட்டும் பார்த்துக்கொண்டவர்கள் நேரில் சந்திப்பதைப்போல் இருந்தது கடையில் உட்கார்ந்திருக்கும் குரிசு, குலசேகரத்தில் போத்தி, மலைமேல் அய்யர் போன்ற கிரியின் சந்திப்புகள்.

கிரி, லௌகீக வாழ்க்கையில் தோல்வி அடைவது எதனால் என்ற கேள்வி சில நாட்கள் கழித்து அலைக்கழித்தது. 'உன் அகங்காரம் தான் காரணம்' என அய்யர் சொன்னாலும் அது மட்டுமேவா? அவன் சங்கப்பாடல்களில் லயிக்கும் அளவிற்கு நுண்ணறிவு கொண்டவன். ஆனால் கனவுகளில் வாழ்பவன். அதீதங்களை தேடுபவன். பகலில் அடிக்கடி போய் படுத்து தூங்கிவிடுகிறான், இரவில் விழித்திருக்கிறான். அவனது அப்பா தோல்வி அடைந்து யதார்த்தத்தை புரிந்துகொள்ளாதவர் என்பது இங்கு முக்கியம்.. நடைமுறை வாழ்வில் தோல்வி அடைந்தவர்களின் பிள்ளைகள் அது மறுபடி நடக்கக்கூடாது என்பதில் பெரும் பதட்டம் கொண்டவர்கள், ஆனால் அந்த பதட்டம் கிரிக்கு வரவில்லை - அவனது மகனுக்கு வாய்த்தது.

ஆனால்.. அப்படிப்பார்த்தால் எதிர்வீட்டு தமிழ் வாத்தியார் - கம்ப இராமாயண பித்தர். அவர் குடும்பத்துக்கு அனைத்தையும் சரியாக செய்தவர்தான்.. இருந்தும் கடைசியில் அவர் சந்திப்பது வெறுப்பை மட்டுமே. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?

காமத்தை  முழுமையாக புரிந்து வெல்ல முடியுமா?  வெல்லத்தான் வேண்டுமா? குறிஞ்சிப்பூவை பார்ப்பது போல் புறவயமாக காமத்தை செயல்படுத்திப் பார்த்ததுமே ஏன் அவ்வளவு ஏமாற்றம்? மனத்தில் எத்தனை நாட்கள் நிகழ்த்திப் பார்த்தாலும் அலுப்பதில்லையே? காடு என்பது காமமா, இளமையா?

இது ஒரு புறம். மலையன் புரத்தை வெட்டிக்கொண்டு போகப்போகும் சாலை.. பாடம் பண்ணபட்ட கீரக்காதன்....என பதைக்க வைக்கும் காட்டழிவு காட்சிகள்.. . குறிஞ்சியில் உட்காரும் வண்டை பார்த்து 'இனி எத்தனை தலைமுறை கழித்து வண்டு இனத்திற்கு இந்த தொடுகை வாய்க்குமோ?' என பரிதாபப்படும் கிரி, மனிதனைப்பார்த்து பரிதாபப்படும் இயற்கை...

காமத்தின் அம்சங்களே இதில் எழுத்து வடிவமாக; நீலி-கிரி சந்திப்பு முதலிலேயே நிகழ்ந்து, எடுத்த எடுப்பிலேயே தழுவி எல்லாம் முடிந்திருந்தால் ஏமாற்றமே மிகுந்திருக்கும். எவ்வளவு ஏக்கத்தை கடந்து எத்தனை பக்கங்கள் தாண்டி எல்லாம் நடக்காமல் நடந்து முடிகிறது? அதுவே அந்த நினைவை துடிப்படங்காமல் இருக்க வைக்கிறது.

மேலே உள்ள பத்திகளே காடு போல் கெச்சலாக இருப்பதும் காரணமாகத்தான் போலும். நாவலில் வரும் காட்டின் மனிதர்கள், மிருகங்கள், பருவங்கள், சம்பவங்கள், ஊர், அன்றாடம் என்று அனைத்தும் ஏற்படுத்திய தாக்கத்தை வார்த்தையில் முறையாக வெளிப்படுத்தினாலே அதன் அணுக்கம் போய் விடும். அப்படியே உணர்வாகவே இருந்துவிட்டு போகட்டும்.


Things a little bird told me - Biz Stone
ட்விட்டர் உருவாக்கக்குழுவில் இருந்த Biz-ன் சுயசரிதை மாதிரி இந்த புத்தகம். கிட்டத்தட்ட சுயமுன்னேற்ற புத்தகம். ஆகவே அதில் இருந்தததை சுருக்கி சுயமுன்னேற்ற பாணியிலேயே கீழே.

Biz success mantra:

  • Visualize where u want to be continuously,
  • Create opportunities,
  • Ask questions, a lot. creativity is infinite. Its free.
  • Talk with key stakeholders. Discuss a lot with talented people.
  • Emotional attachment with what you do - would then love your job no matter what.
  • Failure is part of life - deal with it honestly
  • Find bright spot in the environment of negativity. Find things that work and build on it
  • Rules help, but dont have to always stick to it - as long as we are sure whats good and bad
  • Never give into irrational fear - seek knowledge no matter what
  • Show empathy, be kind
  • Altruism compounds - start early within your means.  it helps ourself! E.g. Jobless can go volunteer which can benefit them in myriad ways
  • Money is not all. but having money definitely frees you up

Other interesting things like Twitter's challenges (whale showing up frequently), it's growth, use by powerful people, protests etc., find place in the book. There is also an interesting aspect about Biz Stone, who is not a developer and whose role was always hazy in the company.
There are sermons too towards the end about how capitalism should be people centric while money is made (simultaneously explaining about leadership changes in the company and firing of the founder himself by the company board etc.,).

But isn't 'capitalism' and 'people-centric' oxymoron? It is always about making infinite profits no matter what.


கருத்த லெப்பை - ஜாகிர் ராஜா
முஸ்லிம்களின் அபிரிமித, நிறுவனப்படுத்தப்பட்ட மதப் படிப்பு ஏன் என்பதைத் தாண்டி அதன் மூலம் என்ன நடக்கிறது என்று யோசித்தால், அதிகாரம் ஒரு இடத்தில் குவிகிறது. அதிகாரக்குவியல் என்றுமே பிரச்சினைதான் என்பதை பெரும்பாலும் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். யார் அந்த அதிகாரத்தை கையில் வைத்திருப்பது, அப்படி வருபவர்கள் எப்போதுமே யோக்கியவான்களா, யோக்கியர்களையும் அதிகாரம் எப்படி மாற்றுகிறது போன்ற பிரச்சினைகள்.

நினைப்பதை செய்து கொள்ள முடியாத கையாலாகாத்தனம் தான் இக்குறுநாவலின் மையம் என்று பார்க்கிறேன். அது நியாயமான ரொம்பச்சிறிய விஷயமாக இருந்தாலும் சரி. ஏன் நரகல் போன்ற சூழலில் புகுந்த வீட்டில் இருக்கும் அக்கா ருக்கையாவை கருத்த லெப்பையால் திரும்ப தன் வீட்டுக்கு அழைத்து வர இயலவில்லை? இத்தனைக்கும் மனம் பிறழ்ந்த மாப்பிள்ளையின் கேடுகெட்ட அண்ணன் ஈசாக் கூட்டிக்கொண்டு போகும்போது கூட? அவர்கள் வீட்டு நாய் செய்ய முடிவதைக்கூட அவனால் செய்ய முடிவதில்லை.

ஆனால் ஒன்று. கையாலாகாத்தனங்களில் வகைகள் உண்டு. கருத்த லெப்பையிடம் இருப்பதை இந்த வார்த்தையால் குறிப்பது கூட தவறாக இருக்கலாம். ஒடுக்கப்படுபவர்களிடம் அது கையறு நிலையாக உருமாற்றம் பெறுகிறது. அவனால் என்னதான் செய்ய முடியும்?



Second Foundation - Isaac Asimov (story brief in tamil)
பல்லாயிரம் வருடங்களாக கேலக்ஸி அரசுகள் மாறி மாறி ஆட்சி செய்கிறது. சுபிட்சமான உலகமது..அதாவது, பல உலகங்கள் சேர்ந்த ஒரு பேரரசு. ஆனால் அதன் அழிவை உணர்ந்த விஞ்ஞானி ஹரி செல்டன் உருவாக்கும் அறிவியலாளர்கள் நிறைந்த கட்டமைப்பின் பெயர் Foundation (ஆம், ஹரிதான். ஆனால் இந்தியனா என்று கேட்கக்கூடாது. மனிதகுலம் பூமியில் தோன்றியது என்பதே மறக்கப்பட்டு விட்ட ஓர் யுகம் அது) . மனிதவியலை ஆராய்ந்து அதன் போக்கை கணிக்கிறார் ஹரி. அதன்படி அப்போதிருக்கும் பேரரசு அழிந்து வேறு ஒரு அழிவு அரசு தோன்றும், முப்பதாயிரம் ஆண்டுகள் சண்டையிலும் நாசத்திலும் கேலக்சி மூழ்கும் என்பதை கண்டுகொள்கிறார். அவ்வளவு நாட்கள் இழுக்காமல் குறுகிய காலத்தில் (ஆயிரம் ஆண்டுகளில்!) நாகரிகத்தை மறுபடி தோற்றுவிக்கும் அமைப்புதான் Foundation. சரி, அதையே யாராவது அழித்துவிட்டால்? அதற்காக கேலக்சியின் நேர் எதிர் முனையில் ரகசியமான மற்றொரு Back up Foundation ஒன்றையும் அமைக்கிறார். அது எத்தனை ரகசியம் என்றால், அது வெறும் கற்பனை புரளிதான் என்று அனைவரும் மறந்துவிட்ட அளவுக்கு ரகசியம்.

ஆனால் அவர் கணிக்காதபடி Mule என்றழைக்கப்படும் Mutant (மனிதனின் பரிணாம வாரிசு) பேரரசு + Foundation ஆகியவற்றை சேர்த்து அழித்துவிட்டு அடுத்த கூட்டமைப்பை  உருவாக்குகிறார். எப்படி அவரால் முடிகிறது? ம்யூலை வாலி என்று சுருக்கமாக சொல்லலாம். பிரபஞ்சத்தின் அத்தனை பேரின் உணர்ச்சிகளை அறியவும், மாற்றவும் அவரால் முடிகிறது, கிட்டத்தட்ட கடவுள்! ஆனால் அதுவே நிரந்தர தனிமை எனும் சாபமாகி விடுகிறது. அத்தாம் பெரிய கோட்டையில் தனித்து கிடக்கிறார் அரசர். பேச்சுத்துணைக்கு ஒரு காவலாளி கூட இல்லை (அது தான் தேவையே இல்லையே? எங்கு எந்த எதிரி இருந்தாலும் உடனே அவரின் சிந்தனையை மாற்றி விட வேண்டியது). எனிவே, அவரின் பிரபஞ்சத்தையே ஆளும் கனவின் குறுக்கில் நிற்பது ஒன்றுதான் - ரகசியமான அந்த இரண்டாம் அடித்தளம். கற்பனை என்று புறந்தள்ளினாலும் ஒருவேளை உண்மையாக அது இருந்தால்?

அதை தேடிப்போகும் ராணுவத்தின் தளபதி ஹான் பரிட்சர். கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே அவருடன் இன்னும் மனமாற்றமாகாமல் ம்யூல் விட்டு வைத்திருக்கும் பில் சான்னிசை சேர்த்து அனுப்புகிறார். கண்டுபிடித்தார்களா? இவர்கள் தேடியவர்கள் உண்மையில் இருந்தார்களா, ம்யூல் போன்ற வசியக்காரரை வென்றார்களா?

மதம், அரசியல் கொள்கை என்று எதுவுமே அளவு மிஞ்சிய அதிகாரம் கையில் சேர்ந்ததும் மாறிவிடுமா? அப்படி ஒரு அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் இரண்டாம் அடித்தளத்தை முழுதாக நம்பி விட்டு வைக்க முடியுமா? இரண்டாம் பாதியில் கதை அப்படியே மாறுகிறது, இங்கும் இரண்டாம் அடித்தளத்தை தேடுகிறார்கள். ஆனால் தேடுவது செல்டன் திட்டத்தின் முதல் கண்ணான முதல் அடித்தளத்தை சேர்ந்தவர்கள்.
ஆர்காடி டேரல், சூட்டிகையான சிறு பெண், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆகப்போகிறவர். அவள் அப்பா டாக்டர் டேரல் - ரகசிய நண்பர் Pelleas Anthor ஆகியோர் அடங்கிய ஐந்து சூழ்ச்சியாளர்கள் எதைப்பற்றி ஆராய்கிறார்கள்? இரண்டாம் அடித்தளத்தை ஏன் சந்தேகத்துடன் அணுகுகிறார்கள், ஆராய்கிறார்கள்? ஒரு புள்ளிக்குப் பின் ம்யூலும் இரண்டாம் அடித்தளக்காரர்களும் ஒன்றுதானா?

அதை எப்படி தடுப்பது? டாக்டர் டேரல் அவர்களின் குழு அந்த சதியில் ஈடுபடுகிறது. இவர்கள் தேடும் விடை காலகன் கிரகத்தில் இப்போது யாரும் நுழையாமல் கிடக்கும் ம்யூலின் மாளிகையில் கிடைக்கக்கூடும். அதற்காக தங்கள் ஆள் 'ஹோமிர் மண்'னை அனுப்புகிறார்கள். அவருடன் யாருக்கும் தெரியாமல் சேர்ந்துகொள்ளும்  சுட்டிப்பெண் அர்காடியா. போன இடத்தில் உலகை வெல்லும் கனவுடன் இருக்கும் ராஜாஹ் ஸ்டேட்டின். அவர் படையெடுக்க விருக்கிறார். அவரின் ஆசை நாயகி காலியா. அங்கு எதிர்பாரா விதமாக இரண்டாம் அடித்தளம் எங்கிருக்கிறது என தெரிந்து கொள்ளும் அர்காடியா. ஆனால் அவளும் மண்ணும் தன் வெற்றிக்குமுக்கியம் என புரிந்துகொள்ளும் ராஜாஹ், சிறுமியை நாயகியாக்கிக்கொள்ள விழைகிறார். தப்பி ஓடும் சிறுமிக்கு உதவுகிறது  ஒரு 'ஊர்க்கார' குடும்பம் (ஒரு காலத்தில் கேலக்ஸியையே ஆண்ட ட்ராண்டர் கிரகம் இப்போது விவசாயம் செய்துவருகிறது. அதைச் சேர்ந்தவர்கள்) . ஆர்காடியும் தனது சொந்த ஊருக்கு போகாமல் அவர்களுடன் ட்ராண்டருக்கு போகிறார். அதற்கு முக்கிய காரணம் இரண்டாம் அடித்தளம் எங்குள்ளது என்பதை அவள் அறிந்துகொண்டதே.

இறுதியில் இந்த முதல் அடித்தளக்குழு அவர்களை கண்டுபிடிக்கிறதா, அப்படி ஒன்று இருப்பது உண்மைதானா  என்பதற்கு விடை அளித்து கதை முடிகிறது.

கதை கேலக்ஸி அளவில் நடந்தாலும், உண்மையில் முழுக்க முழுக்க மூளை விளையாட்டாக இருப்பது அதன் சிறப்பம்சம்.. அடுத்தவர் உணர்வுகளை கிரகித்து மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர்கள் விளையாடுவது. நமது சிந்தனை உண்மையில் நம்முடையதுதானா, அல்லது நடப்பட்டதா? (இன்செப்ஷன் மாதிரி). இதைச்சுற்றி அடுத்தடுத்து வரும் திருப்பங்கள், துரோகங்கள், வெற்றிகள் என சுவாரசியமான கான்செப்ட்.

வேறு சில சுவாரசியங்களும் உண்டு. டச் ஸ்க்ரீன் போன்று தொட்டு (zoom கூட செய்யலாம்) அப்போதே எழுதியிருக்கிறார் அசிமோவ். இதில் வந்த இன்னொன்றும் வெகு சுவாரசியம். கிட்டத்தட்ட மதத்தை போல் நடத்தப்படும் 'அடித்தளம்' அமைப்புக்கு பைபிள் போன்ற வழிகாட்டு நூல் உண்டு. அது அவ்வப்போது கூட்டு தணிக்கை (peer review மாதிரி) செய்யப்பட்டு மாற்றங்களை இணைத்து சீராக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்! இப்போதிருக்கும் எந்த மதத்திலும் புனிதவாதிகளின் பிடியே அதிகம். ஆனால் மேற்சொன்ன முறையில் ஒரு மதநூல் இருக்குமானால் அது நூற்றாண்டுகள் கடந்து வலுவுடன் நிற்கக்கூடும்.

பிறகு / தீண்டாத வசந்தம் 
இரண்டு நாவல்களையும் அடுத்தடுத்து படித்தது ஒரு முக்கியமான அனுபவம். எங்கெங்கோ இருக்கும் சேரிகளில் இருக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சூழல்களும் பிரச்சினைகளும் எப்படி ஒன்று போல் உள்ளன என்பது பெரிய ஆச்சரியம். சேரிகளையும் சூழல்களையும் அங்கே வாழும் ஒருவராக உணர வைத்தன இரண்டு புத்தகங்களும்.
சாதிகளைப் பற்றி வரும் வருடம் மேலும் நிறைய படிக்கவேண்டும்.

பிறகு கதைச் சுருக்கம்:
கதைக்களம் கோவில்பட்டியை சுற்றியுள்ள எதோ ஊரில் ஐம்பதுகளின் அருகில் நடக்கிறது. மனலூத்தின் சக்கிளிபுரம். மேலத்தெரு நாயக்கர்கள் ஆகியோரின் கதை. ஊருக்கு வந்தேறியாக, அல்லது வந்து ஏறுங்கள் என மணலூத்துக்காரர்கள் கூட்டிக்கொண்டு வரும் அழகிரி மையப்பாத்திரம். வந்து சக்கிளிபுரத்தில் குடும்பத்துடன் குடியேறுகிறார். மனைவி காளி சீக்காளி, சீக்கிரத்தில் மரணமடைகிறார். மகள் முத்துமாரிக்காக மற்றொரு பெண்ணை மாட்டுத்தாவணியில் இருந்து கூட்டிவருகிறார். ஆவடை.

ஊரின் பெரும்புள்ளிகள் வில்லிச்சேரியார், கோவால் நாயக்கர், சக்கிலியர்களின் ஒரே தோழர் வாழ்ந்து கெட்ட கந்தையா. நடுக்கடை செட்டியார், பின் அவரது இட்லி வியாபாரத்துக்கு போட்டிக்கு வரப்போகும் காப்பி கடைக்காரர். ஊர்ப்பெரிசுகளில் குணத்தில் சிறுபயல் அப்பையா - வட்டி விட்டு ஊரில் பாதியை வளைத்து விடுகிறார். 'பெரிய வீட்டுக்கார'ரே அவரிடம் தப்ப முடியாமல் கூட்டு சேர்ந்து கொண்டு பதவிகளை பிடித்துக்கொண்டு, பொதுப்பணத்தை ஊழல் செய்துகொண்டு... ஒன்று சேர ஒன்று தானாக பின்தொடர்கிறது.

நாவல் கோபல்ல கிராமத்தை நினைவூட்டியது. அதே கிராமத்தை சேரியில் இருந்து பார்ப்பதைப்போல் இருந்தது. தோராயமாக நாற்பது ஆண்டுகள் நிகழ்வுகளை கிட்டத்தட்ட அந்த வேப்ப மரத்தை போல் நின்று பார்க்கிறோம். அழகிரி ஊருக்கு வந்ததில் இருந்து கடைசி வரை உட்கார்ந்து செருப்பு/பொருட்கள் தைக்க நிழல் தந்துதவும் அதே வேப்ப மரம்.


முழுதும் படிக்க..

May 22, 2014

ஆயிஷா.. குறுநாவல்

நிறைய பேர் ஏற்கனவே படித்திருப்பீர்கள்.. நான் வழக்கம் போல் லேட்டு.. மொத்தமே பதின்மூன்று பக்கங்கள்தான். டப்பென்று ஒட்டிக்கொண்டு விட்டது. கல்வித்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் அதோடு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் (ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்.. முக்கியமாக ஆசிரியர்கள்) அவசியம் வாசிக்க வேண்டிய கதை.. ஆயிஷா.. வெளிவந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் இக்கதை பேசும் விஷயம் இன்னும் ப்ரெஷ்ஷாக இருக்கிறது என்பது சோகமான விஷயம்.. 

அதிலும் நாமக்கல் டைப் பள்ளிகள், ப்ரீகேஜி க்கு ஒரு லட்சம் வாங்கும் பள்ளிகள் (மற்றும் அவை உருவாகி வந்த காரணங்கள்) ஆயிஷாவின் ஆசையை கண்ணுக்கு எட்டாத தொலைவிற்கு கொண்டு சென்று விட்டன..



ஆசிரியராக ஆகும் ஆசையையும் இக்கதை தூண்டி விடுகிறது.




முழுதும் படிக்க..

Mar 22, 2014

ஏழு தலைமுறைகள்


கருப்பென்றால் தாழ்ச்சி, அசிங்கம், கருப்பர்களுக்கு எதுவும் தெரியாது, காட்டுமிராண்டிகள் போன்ற கருதுகோள்கள் நம்மிடையே வெகு பிரபலம். இத்தகைய கருத்துக்கள் எப்படி உருவாகின, யார் உருவாக்கியது, ஏன் அவை வெள்ளையர்களுக்கு மிக முக்கியமாக இருந்தன? கருப்பர்களை வெறும் உடைமையாக, செருப்பு பழசாகிடுச்சு, தூக்கி போட்டுட்டு வேற வாங்கணும் என்பது மாதிரி மட்டும் எப்படி அவர்களால் கருத முடிந்தது?  அவர்களின் உழைப்பை முழுக்க சுரண்டி தன்னை வளர்த்துக்கொண்ட வெள்ளையர்கள் எத்தனை பேர்? அவர்களின் உழைப்பில் அமெரிக்காவே வளர்ந்தது!

இப்படி முற்றிலும் அநியாயமான, மனசாட்சிக்கு விரோதமான ஒன்றை நடத்த ஒரு பெரும் தர்க்கம் வெள்ளையர்களுக்கு தேவைப்பட்டது. எப்படி மத/சாதிக்கலவரங்களில் கொலை, கற்பழிப்பு போன்றவற்றை 'ஆமா, அவனுங்கள இப்படி செஞ்சாத்தான் அடங்குவாங்க' என்று சொல்லி நம்மையே திருப்திபடுத்திக்கொள்கிறோமோ, அது மாதிரி.. அந்த நியாயம்தான் முதல் பத்தியில் சொல்லப்பட்ட கருதுகோள்கள். 'அவர்களுக்கு ஒன்னும் தெரியாது, மிருகங்கள். நாம்தான் வாழ்க்கை தந்தாக வேண்டும்'. ஆனால் அவர்களின் வாழ்வு எத்தகையது? எப்படிப்பட்ட மண்ணில் இருந்து அவர்களை பிடுங்கி வேறு இடத்தில் நட்டார்கள்?


  
1750 வாக்கில் காம்பியாவின் ஜப்பூரை சேர்ந்த குண்ட்டா கின்ட்ட்டே பிறப்பதில் ஆரம்பித்து கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள், ஏழு தலைமுறைகள் கடந்து அமெரிக்காவில் அலெக்ஸ் ஹேலியில் முடிகிறது இந்த நாவல். அலெக்ஸ் ஹேலிதான் நாவலாசிரியர். கருப்பர்களின் வரலாற்றை, அமெரிக்காவில் அவர்களை வைத்து நடந்த மாபெரும் அசிங்கத்தை, அந்த இருநூறு வருட சரித்திரத்தை இந்த ஏழு தலைமுறைகளின் வாயிலாக அனாயாசமாக வரைந்து காட்டுகிறது இக்கதை. பிரச்சார நெடியில்லாமல் சுவாரசியமாக; ஒவ்வொரு இரவும் வெகு நேரம் ஆனாலும் இன்னும் சில பக்கம், இன்னும் சில பக்கம்  என்று படித்துக்கொண்டே இருக்க வைத்துவிட்டது.

முதல் சில அத்தியாயங்களில் ஜப்பூர் கிராமத்தின் வாழ்க்கை முறை விலாவாரியாக சொல்லப்படுகிறது. எல்லாவற்றையும் மிக திட்டமிட்டு, இயற்கையோடு இயைந்த ஒரு வாழ்க்கையை வாழும் சமூகமது. இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மக்கள், மதகுரு வழியாக கல்வி கற்கிறார்கள். வயதுக்கு வந்ததும் சிறுவர்கள் அனைவருக்கும் ஊருக்கு வெளியே போர்ப்பயிற்சி (Training camp!). அது முடிந்து வந்ததும் தனிக்குடிசை, தனி நிலம், பிடித்த பெண்ணை மணந்து கொண்டு வாழ்க்கை என்று ஒரு தொடர்ச்சங்கிலி வாழ்க்கை. அச்சமூகத்தில் இருக்கும் சிற்சில பிற்போக்கான நடைமுறைகளும் எந்தவித பூச்சும் இன்றி இயல்பாக சொல்லப்படுகிறது.

இதில் பெரும்பாலானவை குண்ட்டாவின் பார்வையில் சொல்லப்படுவதால் அந்தந்த பருவங்களுக்கே உரிய கிளர்ச்சிகள், கற்பனைகள், கனவுகள் இயல்பாக விவரிக்கப்படுகின்றன. சொல்லப்போனால் அந்த கனவுகளும், கற்பனைகளும், ஆசைகளும்தான் பின்பு நடக்கும் கொடுமைகளை இன்னும் அழுத்தமாக நம் மனதில் பதிக்கின்றன.

அப்போதே அவர்களுக்கு வெளிறிப்போய் வித்தியாசமான தோற்றம் கொண்ட, (கவனிக்க) கடும் நாற்றம் வீசும் பிள்ளை பிடிப்பவர்களை பற்றி எச்சரிக்கப்படுகிறது. அந்த அடிமைத்தரகர்களின் வேலை கருப்பர்கள் தனியாக இருக்கும் போது பிடித்துக்கொண்டு போய் அமெரிக்காவில் விற்பது என்பது அவர்களுக்கு தெரியாது (யாரும் திரும்பி வந்ததில்லை). குண்ட்டாவும் தனது விடலைப்பருவத்தில் ஒரு நாள் காட்டில் தனியாக இருக்கும் போது பிடிபட்டுவிடுகிறான். அதன்பிறகு அவர்கள்செய்யும் கடுமையான கடல் பயணம், ஏலம், புதிய முதலாளி, அங்கு அனுபவிக்கும் கொடுமைகள், சிறிது சிறிதாக தப்பிக்கும் எண்ணம் மறைந்து அடிமைவாழ்வுமுறையை ஏற்றுக்கொள்ளுதல், பல வருடங்கள் கழித்து திருமணம், அவனின் சந்ததியினர் என்று கதை நீள்கிறது.

வெற்றிமாறன் தனக்கு பிடித்த நூலாக Roots ஐ குறிப்பிடுகிறார். அவரின் ஆடுகளத்தில் வரும் கோழி சண்டையின் inspiration இதில் உள்ளது (ஐயா இது சினிமாவில் ஊறிய உடம்பு.. எதைப்பற்றி ஆரம்பித்தாலும் சினித்துணுக்கு நடுவில் வந்துவிடுகிறது!). ஆப்பிரிக்க-தமிழக தொடர்புபற்றி இங்கும் பல துப்புகள். உதாரணமாக காம்பியாவின் ஊர்கள் ஜப்பூர், கஞ்சூர் மாதிரி ஊர் ஊர் என்று முடிகிறது (கபாலீஸ்வரர் கோவில் எங்க இருக்கு? மைலாப்பூர்).

கதை சொல்முறையில் கடின கசடதபற இல்லை. நியோ போட்டோ பாட்டியின் 'ஏ பேராண்டிகளா, கதை ஒன்னு சொல்றேன் கேளுங்கடா' மாதிரிதான் நாவல் முழுவதுமே இருந்தது. நான் படித்தது ஏ.ஜி. எத்திராஜுலு தமிழில் மொழிபெயர்த்த சவுத் விஷன் வெளியீடு. தமிழில் படித்துவிட்டு ஆங்கிலத்தில் சில பக்கங்கள் மேய்ந்து பார்த்தேன், ஆங்கிலத்திலும் இதே முறைதான் போலும். நாவலின் இறுதியில் தனது முன்னோர்களின் மூலம் பெற்ற சிற்சில குறிப்புகளை எடுத்துக்கொண்டு ஜப்பூரை எப்படியோ கண்டுபிடித்து செல்கிறார் அலெக்ஸ். அங்கு நூற்றாண்டுகளாக முன்னோர் பாடல்களை பாடும் பெரியவர் ஒருவரையும் கண்டுபிடிக்கிறார். ஏழு தலைமுறைகளுக்கு முன், ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காகொண்டு வரப்பட்ட குண்ட்டாவை பற்றியும், அப்போதிருந்தவர்களை பற்றியும் பாடுகிறார் பெரியவர். இந்த இடத்தில் அலெக்சுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை நம்மால் நேரடியாக உணர முடிகிறது.

அடுத்தவர்களின் உழைப்பை சுரண்ட தனக்கென்று ஒரு நியாயம் வைத்துக்கொண்ட வெள்ளையர்கள் பற்றி படிக்கும்போது, இங்கும் பல்லாண்டுகளாக சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் நினைவு எழுவதை தடுக்கவே முடியாது. மேலும் இன்றும் கூட வெறுப்பு அரசியல்களால் போகிற போக்கில் நம்மை சாராதவர்களை பற்றிய பொதுப்படையான மட்டமான கருத்துக்களை உதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.இனவெறி பற்றிய சிந்தனைகளில் இப்போதுதான் நாம் தொடக்க நிலையில் இருக்கிறோம்.  மீண்டும் மீண்டும் பெரும் சண்டைகளுக்கும், பேரழிவுகளுக்கும் பிறகே, மனிதநேயம்தான் முக்கியம் என்பதை மனிதன் கண்டு கொள்கிறான். வரலாற்றின் தவறுகளை திரும்ப செய்யாமல் இருப்பதன் மூலமும், வெறுப்பரசியலுக்கு எதிராக தொடர்ந்து பேசுவதன் மூலமும் அந்த வழக்கத்தை விட்டொழிக்கலாம்.

ஆங்கில மூலம் : அலெக்ஸ் ஹேலி
தெலுங்கில் இருந்து தமிழில் : ஏ.ஜி.எத்திராஜீலு
வெளியீடு : சவுத் ஏசியன் புக்ஸ்
கீழைக்காற்று : 044-28412367
இணையத்தில் வாங்க : உடுமலை ரூ.80 


முழுதும் படிக்க..

Jan 25, 2014

மணல்வீடு

மணல்வீடு சிறுபத்திரிகையை வாசிக்க நேர்ந்தது. இரு மாதத்திற்கு ஒருமுறை வரும் இது கதை, கவிதை, கட்டுரை, உலக இலக்கியம் என்று ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ். அம்பையின் சிறுகதை வழக்கம் போல் எளிமை, அருமை. முரகாமியின் சிறுகதை என்று ஒரு குறுநாவல் இருக்கிறது. இனிதான் படிக்கவேண்டும்.

இதில் கவர்ந்தது கெட்டவார்த்தை பேசுவோம் என்கிற பெருமாள்முருகன் தொடர். ஏற்கனவே இதே பெயரில் புத்தகமும் வந்திருக்கிறது. இத்தொடர் அந்த புத்தகத்தில் உள்ளவையா அல்லது அதன் தொடர்ச்சியா தெரியவில்லை.

(18+)

வாயில் விழைதல் என்று ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்னாலேயே வழக்கத்தில் இருக்கும் வாய்வழி புணர்ச்சி பற்றி பேசுகிறது. 'ஆசாரமாக வாழ்வது எப்படி?' என்று இன்று வந்திருந்தால் பெயர் வைத்திருக்கக்கூடிய ஆசாரக்கோவை 'அதை' செய்துவிட்டு குளித்துவிட வேண்டும் என்று சொல்கிறதாம். மேலும் பல சுவாரசிய தகவல்கள்.. நம்மூரிலும் காலம்காலமாக (பிரிவு 377 படி) குற்றவாளிகளாக வாழ்ந்திருக்கிறோம் என்பது உவகையே அளிக்கிறது :)

24/365


முழுதும் படிக்க..

Jan 18, 2014

தமிழகத்தில் தேவதாசிகள்

முனைவர் சதாசிவத்தின் பல்லாண்டு ஆய்வின் பயனாக வந்திருக்கிறது 'தமிழகத்தில் தேவதாசிகள்' புத்தகம். இந்த தலைப்பில் இதுவரை இத்தனை முழுமையான புத்தகம் வந்ததில்லை என்று சொல்லப்படுகிறது. ஆங்கிலத்தில் பல ஆண்டுகள் முன்னமேயே வெளிவந்திருந்த இந்த புத்தகத்தை இந்த ஆண்டு அகநி பதிப்பகம் தமிழில் வெளியிடுகிறது. தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்திருப்பவர் கமலாலயன்.

தேவதாசி முறையின் தோற்றம், வளர்ச்சி, அதன் கோல்டன் பீரியட், பின்பு அதன் சரிவு (கிருஷ்ணதேவராயர் ஆட்சியின் கடைசியில்), அதன் சமூக (முக்கியமாக கலை சார்ந்த) பங்களிப்பு என்று ஏராளமான தகவல்களைக் காண முடிகிறது. அவர்களை குறிப்பிடும் வார்த்தைகள் பின்னாட்களில் வசைச்சொல்லாக மாறும் என்று அந்நிறுவனம் செழித்திருந்த காலத்தில் சொல்லியிருந்தால் தேவர் அடியார்கள் சிரித்திருப்பார்கள். அப்படி ஒரு வாழ்க்கை!



உலகம் முழுக்க, இந்தியா முழுக்க, பல மதங்களில் கோவிலுக்காகவே நேர்ந்து விடும் வழக்கம் பல வாரியாக இருந்து வந்திருக்கிறது என்பது எனக்கு புதிய தகவல். மொகஞ்சதாரோ காலத்திலேயே இந்த வழக்கம் இருந்திருக்கக்கூடும் (நடனப்பெண்ணின் சிலை) என்பதை படிக்கும்போது, கிட்டத்தட்ட வழிபாடு தோன்றிய காலந்தொட்டே இந்த வழக்கம் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

முழுக்க படித்துவிட்டு விலாவாரியாக எழுதுகிறேன். சுவாரசியமாக போகிறது.

தமிழகத்தில் தேவதாசிகள், முனைவர் கே.சதாசிவன்
தமிழில்: கமலாலயன்
அகநி வெளியீடு (ஸ்டால் எண்: 277)
Rs. 300/-

18/365


முழுதும் படிக்க..