உலகளவில் தகவல் தொழில்நுட்பத்தின்
முதன்மையான நிறுவனங்களைப் பற்றியும், இந்திய ஐடி துறையின் (Information Technology) தற்போதைய நிலையைப்
பற்றியும் பார்க்குமுன், எந்த நிறுவனங்களைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐடி) என்று வரையறுப்பது? "தகவலை கணினி பொருட்கள் கொண்டு கையாள உதவும் நிறுவனங்கள்" எனும்
ஆக்ஸ்போர்டு அகராதியின் விளக்கத்தையே எடுத்துக்கொள்ளலாம். மின்னணு சாதனங்கள், இணையம், கணினி சாதனங்கள், தகவல் தொடர்பு, மின் வர்த்தகம் (e-commerce), செமிகண்டக்டர், மென்பொருள், ஐடி சர்வீசஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள்
இதில் அடங்கும். இதிலும் பெரும்பாலும் முதல் பத்து இடங்களில் வருவாய் அடிப்படையில்
மின்னணு சாதனங்களை விற்கும் நிறுவனங்களே வரும். ஒரு இயங்குதளத்தை விற்பதை விட
லேப்டாப் விற்றால் அதிக வருவாய் அல்லவா? அதனால் ஒவ்வொரு வகைமையின் கீழும் இரண்டு, மூன்று பெரிய நிறுவனங்களைப்
பற்றிப் பார்த்தால் கிட்டத்தட்ட ஐடி துறையின் பெரும்பாலான பகுப்புகளைப் பற்றி ஒரு
பறவைப்பார்வை கிடைத்துவிடும்.
மின்னணு சாதனங்கள்:
இத்துறை நிறுவனங்களுக்குத் தான் இன்றைய
தேதியில் பணப்புழக்கம் அதிகம். கிட்டத்தட்ட அனைவருமே ஸ்மார்ட்போன், டேப்லட் என்று வாங்க
ஆரம்பித்துவிட்டதால் இவர்கள்தான் வருவாயில் முதலிடத்தில் உள்ளனர்.
1. சாம்சங், தலைமையகம்: தென் கொரியா, தொடங்கிய ஆண்டு: 1969
வீட்டு உபயோக மின் சாதன உற்பத்தி
நிறுவனமாகத் தொடங்கிய சாம்சங், இன்று ஸ்மார்ட்போன், டேப்லட், செமி கண்டக்டர் என்று பல்வேறு தொழில்நுட்பங்களில் முன்னோடியாக
விளங்குகிறது. அதற்காகத் தொலைகாட்சி போன்ற வீட்டு உபயோக மின்சாதன சந்தையை அப்படியே
விட்டுவிடவில்லை, அதையும்
விரிவுபடுத்திய படியேதான் உள்ளது.
உலகளவில் அலைபேசி விற்பனை
எண்ணிக்கையில் தற்போது சாம்சங்தான் நம்பர் 1. இது போக வெளியில் பெரிதும் தெரியாத
சாம்சங்கின் தொழில் - செமிகண்டக்டர் சிப் உற்பத்தி. போட்டியாளரான ஆப்பிள் நிறுவனம்
கூட சாம்சங் சிப்புகளின் முதன்மையான வாடிக்கையாளர். சொல்லப்போனால் சிப்
உற்பத்தியில் Intel நிறுவனத்தைக் கூடிய விரைவில் சாம்சங் பின்னுக்குத் தள்ளும் என்று
கணிக்கப்படுகிறது.
2. ஆப்பிள்,
USA, 1976
சாகசக் கதைகள் மாதிரி ஸ்டீவ் ஜாப்ஸ்
பற்றியும் ஆப்பிள் பற்றியும் நிறையக் கேட்டாகிவிட்டது. மேசைக் கணினிகள்
தயாரிப்பின் மூலம் 1976-ல் தனது வரலாற்றைத் தொடங்கிய ஆப்பிள், மேக் லேப்டாப்கள் மூலம் இரண்டாயிரத்துக்குப்
பிறகு மையத்திற்கு வந்தது. அதன்பிறகு ஒன்றன் பின் ஒன்றாக அது வெளியிட்ட சூப்பர்
ஹிட் தயாரிப்புகள் தனி நபர் உபயோக மின் சாதனங்களுக்கான தர அளவுகோளாக மாறின. iPod, iPad, iPhone என்று அது சம்பாதிக்கும் பெரும் பணத்தை
மறுபடி ரிசர்ச் மற்றும் டெவெலப்மன்ட்களில் செலவிட முடிவதால் அடுத்த சில
ஆண்டுகளுக்கு இந்த ஏரியாவில் ஆப்பிளை அடிப்பது கடினம்தான்.
இப்படி அனைவரும் உபயோகிக்கும் மின்
சாதனங்களை ஒரு புறம் மெருகேற்றியபடியே, அதை இயக்கும் இயங்குதளங்களையும் மென்பொருட்களையும் தொடர்ந்து
மேம்படுத்தி வருகிறது ஆப்பிள். சூடான தொழில்நுட்பங்களான மேகக் கணிமை, பிக் டேட்டா போன்றவற்றிலும்
நுழைந்துள்ள ஆப்பிள், வருங்காலத்தில் அத்துறைகளை எப்படி உபயோகப்படுத்தப் போகிறது
என்பது ஆர்வமூட்டும் விஷயம்.
Foxconn (தைவான்), Hitachi (ஜப்பான்), Sony (ஜப்பான்) போன்ற நிறுவனங்கள் மின்னணு சாதனங்களின் கீழ் அடுத்த
நிலைகளில் இருக்கின்றன.
ஹார்டுவேர்:
1. IBM, USA, 1911
மெயின்பிரேம்,
ATM, ஹார்டு டிஸ்க், RDBMS என்று பழம்பெரும் ஐபிஎம் கடந்த நூறாண்டுகளில் இந்த உலகிற்கு அளித்த
தொழில்நுட்பங்கள் ஏராளம். பல்வேறு துறைகளில் கோலோச்சும் ஐபிஎம்மை ஹார்டுவேர்
தலைப்பின் கீழ் குறிப்பிடுவது சற்று அநியாயம்தான். சில வருடங்களுக்கு முன்பு வரை
லாப்டாப், சர்வர் என்று ஹார்டுவேரில் கவனம்
செலுத்தி வந்த ஐபிஎம், இன்று மிகப்பெரும் சர்வீசஸ் நிறுவனமாக உருவெடுத்துள்ளது (சர்வீசஸ்
பற்றி விரிவாகப் பின்னர் வருகிறது). இந்தப் பாதையில் ஐபிஎம் போவதற்கும்
காரணமுண்டு. தடால் தடால் என்று மாறும் தொழில்நுட்பத்தில் பெரிதாக அடி வாங்குவது
ஹார்டுவேர் நிறுவனங்களே. உதாரணமாக நேற்று வரை மேசைக்கணினி உற்பத்தியில் இருந்த
நிறுவனங்கள் இன்று தொடு திரை கொண்ட டேப்லட் உற்பத்தியில் சுலபமாக இறங்கி விட
முடியாது. புதிய கட்டமைப்பையே உருவாக்க வேண்டும்.
ஆனால் மென்பொருள் மற்றும் சர்வீசஸ்
துறையினர் அப்படி மாறும் போக்குகளுக்கு ஏற்ப ஒப்பீட்டளவில் சேதாரமின்றி
மாறிக்கொள்ளலாம். ஐபிஎம் தனது x86 சர்வர் தயாரிப்பை சீன நிறுவனமான லெனோவாவிடம் விற்றதற்கு அதுவும்
ஒரு காரணம். இப்போது தனது வருவாயில் பாதிக்கும் மேல் தனது மென்பொருள் தயாரிப்புகள்
மூலம் ஈட்டுகிறது ஐபிஎம் (Tivoli, Websphere போன்ற நிறைய ஐபிஎம் தயாரிப்புகள் 'நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது'). மீதி பாதி வருமானம் சேவைகள் மூலம்.
வருங்காலத்தில் மேகக் கணிமை, பிக் டேட்டா (பார்க்க பெட்டி),
மென்பொருள் மற்றும் ஐடி சேவைகள் ஆகியவற்றில் ஐபிஎம் கவனம் செலுத்தப்போகிறது.
ஹார்டுவேரை பொறுத்தவரை மெயின்பிரேமை வழக்கம்போல் மேம்படுத்திக்கொண்டு, சேமிப்பக (Storage)
தயாரிப்புகளிலும் அதிகக் கவனம் காட்டப்போகிறது.
மேகக் கணிமை (Cloud
Computing) என்றால் என்ன?
ஒரு உதாரணம் மூலமாகப் பார்க்கலாம்.
வீட்டுக்கு பதினைந்து விருந்தாளிகள் வருகிறார்கள். பிரியாணி செய்யலாம் என்று
முடிவெடுக்கிறீர்கள். அனைத்து பொருட்களையும் அலைந்து வாங்கி, அளவு பார்த்து, சமைத்து, கடினமாக உழைத்தும் போதாமல் ஆகிவிட்டது.
இதையே ஒரு உணவக வலைத்தளத்தில் நுழைந்து, பதினைந்து பிரியாணி என்று ஆர்டர் செய்தால்,
வீடு தேடி வந்து விடும். திடீரென்று அதிக
விருந்தாளிகள் வந்தாலும் இந்த முறையில் எளிதில் சமாளிக்கலாம்.
இதில் பிரியாணிக்கு பதிலாக தொழில்நுட்ப சேவை, உணவகத்திற்குப் பதிலாக மேகக் கணிமை
சேவை நிறுவனம் எனக் கொண்டால், அதுதான் மேகக் கணிமை. இதைப் புதிய தொழில்நுட்பம் என்று சொல்ல
முடியாதென்றாலும், ஒரு புதிய சேவையளிக்கும் முறை எனச் சொல்லலாம்.
உங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு கணினிக்கும்
விலை கொடுத்து Word, Excel போன்ற மென்பொருளை வாங்காமல், இணையம் மூலம் Microsoft office 365 சேவையை கொண்டு தேவையான பொழுது மட்டும் அந்த மென்பொருளை
உபயோகிக்கலாம். எவ்வளவு நேரம் உபயோகிக்கிறோமோ அவ்வளவு மட்டும் பணம் தந்தால்
போதும். இந்தச் சேவையை இணையம் மூலமாகவே எளிதாக வாங்கமுடியும்.
நேற்று வரை நிறுவனங்கள் பெரும்
எண்ணிக்கையில் சர்வர்களை வாங்கி,
தாங்கள் உபயோகிக்கபோகும்
தொழில்நுட்பங்களுக்காக ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டியிருந்தது. அதற்கு நேரமும், சமயங்களில்
செலவும் கூடும். இனி இணையமும், பணமும் இருந்தால், நொடிகளில்
தங்களுக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். தேவைப்படும் கட்டமைப்பை
உருவாக்கி, எளிதாக இணையம் மூலம் துரிதமாகச் சேவைகளை வழங்குவது
அந்தந்த மேகச்சேவை நிறுவனங்களின் வேலை. சாதாரண மின்னஞ்சல் சேவையில் தொடங்கி
சக்தி வாய்ந்த டேட்டாபேஸ், சர்வர்கள், சேமிப்பகங்கள் என்று
எதை வேண்டுமானாலும் மேகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
|
பிக் டேட்டா என்றால் என்ன?
உலகம் முழுக்கத் தகவல்கள்
குவிந்துகொண்டிருக்கிறது. இது வரை சேகரமாகியிருக்கும் மொத்த தகவல்களில் 90%
கடந்த இரண்டு வருடங்களில் உற்பத்தியானவை எனும் செய்தியின் மூலம் எத்தனை வேகமாகத்
தகவல்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நமக்கே
கூட 500GB ஹார்ட் டிஸ்க்
வாங்கினால் இப்போதெல்லாம் போதவில்லை. Terabyte,
Petabyte என்று சாதாரணமாகக் கேட்க முடிகிறது.
இப்படிச் சிதறலாகக் குவியும் தகவல்களை இப்போது இருக்கும் தகவல் கையாளும் அமைப்புகளால்
ஓரளவிற்கு மேல் சாதுர்யமாகக் கையாள முடியவில்லை. இந்த தேவையைப் பூர்த்தி செய்ய
உருவாகி வந்ததே பிக் டேட்டா.
உதாரணமாக CERN ஆராய்ச்சி மையத்தில் ஒரு நாளிலேயே 500
exabytes அளவில் தகவல்கள் குவிகின்றன. பல
ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள், பல நாட்கள் உட்கார்ந்து ஆராய வேண்டிய வேலையைப் பிக் டேட்டா
தொழில்நுட்பம் சில மணி நேரங்களில் செய்து முடிக்கக்கூடும்.
மருத்துவத்துறை, தொலைதொடர்பு, சில்லறை வர்த்தகம், ஆராய்ச்சி என்று பிக் டேட்டாவின் வளர்ச்சி பல துறைகளை மேலும்
ஆற்றலுடன் செயல்பட உதவும்.
SMAC துறைகள்:
இணையம் மற்றும் மொபைல் சாதனங்களின்
ஊடுருவலாலும், தகவல்கள் பல மடங்கு வேகமாக குவிவதாலும் இப்போது வளர்ந்து வரும்
தொழில்நுட்பங்களைக் கூட்டாக SMAC என்று அழைக்கிறார்கள். SMAC - சோஷியல் நெட்வொர்க்கிங், மொபிலிட்டி, அனலடிக்ஸ், கிளவுட் ஆகியவற்றின் சுருக்கம்.
|
Hewlett-Packard Company, USA, 1939:
HP லேப்டாப்புகளையும், பிரிண்டர்களையும் வாழ்வில் ஒரு
முறையாவது கடந்திருப்போம். டேட்டாசெண்டர் ஹார்டுவேர், தனிநபர் கணினி சாதனங்கள்
தயாரிப்பில் முன்னோடியான HP, இரண்டாயிரம் வாக்கில் காம்பேக் நிறுவனத்துடன் இணைந்ததும் மேசைக்கணினிகள்
மற்றும் லேப்டாப் விற்பனையில் புதிய உத்வேகத்துடன் முன்னேறியது. அவற்றை அதிக
விற்பனை செய்யும் நிறுவனங்களில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
குறிப்பிட்ட துறையில் நுழைய புதிதாக முதலில் இருந்து உருவாக்க வேண்டியதில்லை, அதைச் செய்து கொண்டிருக்கும் ஒரு
நிறுவனத்தை வாங்கிப்போட்டால் போதும் எனும் போக்கை கடைப்பிடித்து வருகிறது HP. IBM அளவிற்கு இல்லையென்றாலும் பல மென்பொருள் தயாரிப்புகளை கைவசம் வைத்துள்ளது.
பெருங்கணினிகளான சர்வர் தயாரிப்பிலும் HP தான் தலைவர். 2008-ல் EDS நிறுவனத்தை வாங்கி சர்வீசஸ் துறையிலும் கால் பரப்பியது HP.
கையை மீறி வளர்ந்து நிற்கும் ஒரு
நிறுவனம் எத்தகைய பிரச்சினைகளைச் சந்திக்கும் என்பதை HP சென்ற சில ஆண்டுகளில் காட்டியது. காகிதங்கள் குறைப்பால் பிரிண்டர்
சந்தை பாதிப்பு, தொடுதிரை
சாதனங்கள் வருகையால் குறையும் லேப்டாப் விற்பனை போன்ற பல பிரச்சினைகளைச் சந்திக்க
வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் HP, தற்போது ஒரு மாறுதல் காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறது.
இணையம்:
அமேசான்.காம்,
USA, 1994:
இணைய நிறுவனங்களில் அமேசான், ebay போன்றவற்றை மின் வர்த்தகம் (e-commerce) என்கிற துணை தலைப்பின் கீழ் குறிக்கலாம்.
ஆன்லைனில் புத்தக விற்பனை என்கிற நோக்கோடு ஆரம்பித்த அமேசான்.காம், பிறகு மெல்ல மெல்ல கணினி, மின்னணு
சாதனங்கள், இசை கோப்புகள், விளையாட்டுகள்,
மென்பொருள் என்று பலவற்றையும் விற்கிறது.
வெளியாட்களையும் தங்களது கட்டமைப்பை உபயோகித்துப் பொருட்களை நேரடியாக விற்க
அனுமதிக்கிறது. 2007 வாக்கில் அது வெளியிட்ட கிண்டில் மின் புத்தக ரீடர்கள் புத்தக
விற்பனையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.
அமேசானை பற்றி ஒரு சுவாரசிய தகவல்:
வேறெந்த மின் வர்த்தக நிறுவனத்தை விடவும் பல மடங்கு அதிக வருவாய் ஈட்டும் அமேசான், பல ஆண்டுகளாகவே லாப அளவை மிகவும் குறைவாகவே வைத்துள்ளது.
அமேசானின் மற்றொரு சிறப்பம்சம், 2002-இலேயே ஆரம்பிக்கப்பட்ட மேகக்கணிமை சேவையான Amazon Web Services (AWS). இன்று இந்தச்
சேவையில் அமேசான் தான் மார்கெட் லீடர்.
கூகுள், USA, 1998:
தேடு இயந்திரத்தின் மூலம் இணையச்
சந்தையை ஆக்கரமித்த கூகுளின் மற்ற தயாரிப்புகளான ஜிமெயில்,
கூகுள் பிளஸ், யூடியூப், பிளாக்கர் என்று அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட். அது போதாதென்று
உலகில் இன்று பாதிக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்/டேப்லட்களை இயக்குவது, கூகுளின் ஓப்பன்
சோர்ஸ் முறையில் வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்ட் இயங்குதளம்தான்.
முன்னரே விவாதித்தது போல் பெரும்
வளர்ச்சி காணவும், அதிகமாக ஊடுருவவும் ஆப்பிள், சாம்சங் போல் மின்னணு சாதனங்களைக் கையில் வைத்திருக்க வேண்டும்
என்பதை உணர்ந்த கூகுள், மோடோரோலா நிறுவனத்தின் மொபைல் பிரிவை விலைக்கு வாங்கியது. ஆனால் இந்த
ஆண்டில் அதை விற்கப்போவதாக அறிவித்த கூகுளின் திட்டம், மோடோரோலாவின் ஏராளமான காப்புரிமைகளைக் கைப்பற்றுவதே (அவற்றை மட்டும் விற்கவில்லை).
அந்தத் தொழில்நுட்பங்களைக் கொண்டு ஆண்ட்ராய்டை பல மடங்கு மேம்படுத்த முடியும்.
கூகுளின் பல திட்டங்கள் டெக் உலகில்
வெகு சுவாரசியமாக விவாதிக்கப்படுகிறது. வெளியில் தெரிந்த சில திட்டங்கள் என கூகுள்
கிளாஸ், பொருட்களின் இணையம், தானியங்கி ரோபாட்கள்/கார்கள்
போன்றவற்றைச் சொல்லலாம்.
இணையத்தில் மற்ற முன்னணி நிறுவனங்களாக ஃபேஸ்புக்
(USA), டென்சென்ட் (சீனா) ஆகியவற்றை குறிப்பிடலாம்.
சாஃப்ட்வேர்:
தங்களது சாஃப்ட்வேர் தயாரிப்புகள்
மூலம் வருமானம் ஈட்டும் நிறுவனங்கள்.
மைக்ரோசாஃப்ட்,
USA, 1975
விண்டோஸ் இயங்குதளம் எனும் ஏகபோகத்தைப்
பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் பில் கேட்ஸ் ஆரம்பித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம், சாஃப்ட்வேர் கொண்டு வருமானம்
ஈட்டுவதில் முடிசூடிய மன்னனாக விளங்குகிறது. அது இவ்வளவு சக்தி வாய்ந்ததாக
மாறியதற்கு வேர்டு, எக்ஸ்செல், அவுட்லுக் போன்றவை அடங்கிய மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் தயாரிப்புகளும் ஒரு
முக்கியக் காரணம். தோன்றி வரும் அனைத்து தொழில்நுட்பங்களிலும் தனது தயாரிப்பை
வெளியிட்டு விடும் மைக்ரோசாஃப்ட். அந்தத் தயாரிப்புகள் முதலில் கொஞ்சம் முன்பின்
இருந்தாலும், போட்டியாளர்களின்
தயாரிப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து அதன் நுட்பங்களைத் தங்களுடையதில் பொருத்தி
முன்னுக்குக் கொண்டு வந்துவிடும். மென்பொருள் மட்டுமல்லாது Xbox போன்ற விளையாட்டுச் சாதனங்கள், சர்ஃபேஸ் டேப்லட்டுகள் என்று
வன்பொருளிலும் ஆர்வம் செலுத்துகிறது. கூகுள் மோட்டோவை வாங்கியது போல், இதுவும் நோக்கியாவை வளைத்து போட்டது.
சமீபத்தில் இதன் தலைவராகப்
பொறுப்பேற்றுள்ள இந்தியாவின் சத்யா நாதெல்லாவின் பேட்டிகள் மூலம், தயாரிப்பு நிறுவனமாக இருக்கும்
மைக்ரோசாஃப்ட் வருங்காலத்தில் சேவை நிறுவனமாக மாறும் என்று கணிக்கப்படுகிறது.
மேகக் கணிமையிலும் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது மைக்ரோசாஃப்ட். சுருக்கமாக, எந்தத் தொழில்நுட்பத்திலாவது பணம்
வரும் என்று தெரிந்தால், அதில் மைக்ரோசாஃப்ட் இருக்கும்.
ஆரக்கள், USA,
1977:
அமேசான்.காம் முதல் யாஹூ வரை உலகின்
மிகப்பெரிய பத்து வலைத்தளங்கள் உபயோகிப்பது ஆரக்கள் டேட்டாபேஸ். டேட்டாபேஸ்
சந்தையில் தலைவராக விளங்கும் ஆரக்கள், தனக்கு வரும் வருவாயில் 13% ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காகச்
செலவிடுகிறது. தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள் என்று ஒரு நிறுவனத்தின் முக்கியத் தரப்புகளைக் கையாளும்
பிசினஸ் இன்டலிஜென்ஸ் தயாரிப்புகளிலும் முன்னணியில் இருக்கும் ஆரக்கள் குறி
வைப்பது பெரிய நிறுவனங்களை.. ஜாவா போன்ற பல தொழில்நுட்பங்களை உருவாக்கிய சன்
மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தைச் சமீபத்தில் வாங்கியது ஆரக்கள். சன் கணினி
சாதனங்களையும் தயாரிக்கும் நிறுவனமாகும்.
சாஃப்ட்வேரில் முன்னணியில் இருக்கும்
பிற நிறுவனங்கள் SAP
(ஜெர்மனி), Symantec, VMWare (USA) போன்றவை.
மேற்கூறிய பகுப்புகள் அன்றி செமிகண்டக்டர் தயாரிப்பில் Intel,
Qualcomm (USA) போன்ற நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. இங்கு பேசிய நிறுவனங்கள்
அல்லாமல், வருவாய் குறைவாகவும் மிகவும் தரத்துடனும் இயங்கும் நிறுவனங்களும்
நூற்றுக்கணக்கில் உள்ளன.
சர்வீசஸ் மற்றும் இந்திய ஐடி துறை:
சர்வீசஸ் எனப்படும்
தொழில்நுட்ப சேவைப்பிரிவை கடைசியில்
வைத்ததற்குக் காரணம், இந்திய நிறுவனங்களில் முக்கால்வாசி இந்தத் தலைப்பின் கீழ் வருபவை.
இன்று இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அத்தனையும் சேவை அளிக்கும்
நிறுவனங்களே. சர்வீசஸ் என்பதை எப்படி விளக்கலாம்? மேலே பல மென்பொருள், கணினி சாதனங்கள் தயாரிப்பு (product) நிறுவனங்கள் பற்றிப் பார்த்தோம்.
அந்தத் தயாரிப்புகளை உபயோகித்து வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப மாற்றிக்கொடுத்து, தொடர்ந்து அதைப் பராமரிப்பது இந்தச் சேவை நிறுவனங்களின் வேலை. சேவை
நிறுவனங்களும் புதிய தயாரிப்புகளைத் தயாரிக்கும், ஆனால் அது ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கான பிரத்யேக தயாரிப்பாக
அமையும். மேலும் பிராஜக்ட் முடிந்ததும் அந்தத் தயாரிப்பு வாடிக்கையாளருக்குச்
சொந்தமாகக் கூடும். இவற்றுடன் BPO, LPO போன்றவற்றையும் வசதிக்காக இந்தத் தலைப்பின் கீழ் சேர்த்துக்கொள்ளலாம்.
சுருக்கமாக, சேவை நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு விற்பது ஆட்களின்
திறமையையும், நேரத்தையும்.
இதனால் பொதுவாகச் சேவை நிறுவனத்தில் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் (இதை வேறு மாதிரியும் பார்க்கலாம். பெரும்பாலும் நிறைய
ஆட்கள்/நேரம் தேவைப்படும் வேலைகளை, திரும்பத்திரும்ப செய்ய
வேண்டிய வேலைகளை மட்டுமே அவுட்சோர்சிங்,
ஆப்ஷோரிங் மூலம்
தள்ளிவிடப்பட்டன. ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இப்போது நமது
நிறுவனங்கள் வெகு தூரம் வந்துவிட்டன என்றே சொல்லவேண்டும். போக வேண்டிய தூரமும்
அதிகம்).
இந்த நிறுவனங்கள் அளிக்கும் சேவை என்பது
தொழில்நுட்பம் கொண்டு ஒரு வாடிக்கையாளரின் செலவை குறைத்து, செயல்படு திறனை
அதிகரிக்கும் சேவையாக இருக்கலாம்; புதிய மென்பொருளை வாடிக்கையாளருக்கு
உருவாக்குவதாக இருக்கலாம். ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் மென்பொருளை பராமரிப்பு
மட்டும் செய்வதாக இருக்கலாம். புதிய தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குவதாக, எளிமைப்படுத்துவதாக, மேம்படுத்துவதாக, பராமரிப்பதாக இருக்கலாம். ஏற்கனவே மேலே
பேசிய சில நிறுவனங்களைத் தவிர்த்து இந்தப் பகுப்பின் கீழ் முன்னணியில் இருக்கும்
நிறுவனங்களாக, Fujitsu, Accenture, NTT, Capgemini, CSC ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பியல்பு, ஒரு குறிப்பிட்ட
தொழில்நுட்பத்தில்/துறையில் சிறப்புக் கவனம் போன்றவை உண்டு.
முதன்மையான பத்து சர்வீசஸ் நிறுவனங்கள்
பட்டியலில் சென்ற ஆண்டு முதல் முறையாக இந்திய நிறுவனமான TCS
இடம் பிடித்துள்ளது. கிட்டத்தட்ட 42%
மென்பொருள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பிலும், 12% தொழில்நுட்ப கட்டமைப்பு சேவைகள் (Infrastructure services)
மூலமும் வருவாய் ஈட்டுகிறது. இந்திய அளவில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் பிற
நிறுவனங்கள்: Cognizant, Infosys, Wipro மற்றும் HCL. இன்னும்
சில வருடங்கள் கழித்து சர்வீசஸில் முதல் பத்து இடங்களில் இவர்களும்
இருக்கக்கூடும். இந்த புள்ளிவிவரத்தில் இருந்து இந்திய ஐடி நிறுவனங்கள் அடைய
வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்பது புரிகிறது.
இந்திய ஐடி துறையும் 2007 வாக்கில்
வந்த உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு முன் பாலாறும் தேனாறும் ஓடிய துறைதான்.
ஆனால் மந்தநிலை (Recession) காரணமாக இப்போது தன்னையே பெரும் மாறுதல்களுக்கு
உள்ளாக்கிக்கொண்டுள்ளது. ஐடி துறை செழிப்பாக வளர, மற்ற துறைகள் நல்ல லாபத்துடன் இயங்க வேண்டும். அப்போதுதான் இவர்கள்
அளிக்கும் சேவை, மென்பொருள், சாதனங்கள் போன்றவற்றைப் பணத்தைப்
போட்டு மற்ற துறையினர் வாங்குவார்கள். மந்தநிலை காரணமாக அனைத்து நிறுவனங்களும்
தங்களது ஐடி தேவைகளுக்கான பட்ஜெட்டை குறைக்க, அதனால் ஐடிக்கு வருவாய் குறைய, ஆட்களைக் குறைக்க என்று சங்கிலியாய் சம்பவங்கள் அரங்கேறின. ஆனால் இப்போது
கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சீரடைவதாகச் சொல்லப்பட்டாலும், படுக்கை போர்வையை உதறி விரித்தது மாதிரி மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன.
இது மந்தநிலையினால் வந்த மாற்றமா, தொழில்நுட்பத்தின் அசுர பாய்ச்சலினால் ஏற்படும் மாற்றமா, அல்லது ஆட்கள் குறைவாக வைத்தே பணம்
பண்ணும் போக்கை நிறுவனங்கள் கைவரப்பெற்று விட்டதாலா என்பது விவாதிக்கப்பட
வேண்டியது.
இவை அல்லாமல் புதிய சிக்கல்களாக உள்ளூரில் தான் வியாபாரம் செய்ய வேண்டும்
என்று பல்வேறு நாடுகளின் கட்டுப்பாடுகள், இந்தியாவைப்
போலவே மலிவு விலையில் சேவை வழங்கும் நாடுகளின்
வளர்ச்சி, ரூபாய் மதிப்பின் ஊசலாட்டம், ஊழியர்களின் சம்பளம் உட்பட உயரும்
செலவுகள் ஆகியவை இந்திய நிறுவனங்கள் சந்திக்கும் சவால்கள்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஐடியில் ஆட்களை, குறிப்பாகப் புதியவர்களை, குறைவாக வேலைக்கு எடுப்பதைப் பார்க்க
முடிகிறது. வளர்ச்சி ஓரளவிற்குச் சீரடைந்தும், ஆட்கள் குறைவாக எடுக்கப்படுவதற்குச் சில பல காரணங்கள்
சொல்லப்படுகிறது. முன்பு போல் ஆட்களுக்கு அல்லாமல் அளிக்கப்படும் சேவைக்கே பணம்
என்னும் தேவை பெருகுவதால், வருவாய்க்கு சமமான வேலைவாய்ப்பு வளர்ச்சி இருக்காது. உலக நிறுவனங்கள்
பெரியளவில் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யத்தயாராக இருந்த காலத்தில், சேவை நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை
வளாகத்தேர்வு மூலம் எடுத்து பெஞ்சில் வைத்துக்கொண்டு, புதிய பிராஜக்ட்கள் வந்ததும் அவர்களை உபயோகப்படுத்திக் கொண்டன.
இப்போது பிராஜக்ட் கிடைப்பதே நிச்சயமில்லை என்பதால் தேவைப்படும்போது மட்டும் ஆஃப்
காம்பஸ் முறையில் புதியவர்களை எடுத்துக்கொள்ளும் போக்கு வளர்ந்து வருகிறது. மேலும்
ஆட்கள் செய்த வேலையைத் தன்னிச்சையாகச் செய்யும் நிரலிகள்,
பெருகி வரும் அனுபவசாலிகள், சில்லறை வேலைகளைச் செய்வதற்குப் பதில்
உயர் தொழில்நுட்பங்களில் கவனம் ஆகியவையும் புதியவர்களைக் குறைவாக எடுப்பதற்குக்
காரணமாகச் சொல்லப்படுகிறது. வெளியேறும் பட்டதாரிகளில் குறைவானவர்களே வேலைக்குத்
தகுதி வாய்ந்தவர்கள் எனும் ஆய்வும் பயமுறுத்துகிறது.
இத்தனை ஆண்டுகளில் மொத்தமாக முப்பது
லட்சம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு அளித்திருக்கிறது இந்திய ஐடி துறை. ஆனால்
வெளிவரும் பட்டதாரிகளோ ஒரு ஆண்டுக்கே பத்து லட்சத்திற்கும் மேல். ஆகவே ஐடியை
மட்டுமே நம்பாமல் பல்வேறு துறைகளை வளர்த்து தேவைக்கேற்ப அவர்களை வேலைக்கு
அமர்த்துவதே சமச்சீர் வளர்ச்சியாக அமையும். இது ஒரு புறமிருக்க அதிக சம்பளம்
வாங்கும் அனுபவஸ்தர்களின் தலைக்கு மேலும் எந்நேரமும் கத்தி தொங்கிக்கொண்டுதான்
இருக்கிறது.
வருங்காலம் எப்படி இருக்கும்?
தொழில்நுட்ப மாறுதல்கள் அல்லாமல்
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பும் மாறிக்கொண்டே வருகிறது. குறைவான விலை, வேகமான சேவைகள், பல்வேறு தேவைகளைத் திரளாகப் பூர்த்திச்
செய்தல், புதுமைகள் ஆகியவை
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. SMAC, பொருட்களின் இணையம், மேகக்கணிமை, மென்பொருளால் வரையறுக்கப்பட்ட டேட்டாசெண்டர் ஆகிய பிரிவுகளில்
ஏராளமான தொழில்நுட்ப வாய்ப்புகள் பெருகி வருகின்றன. இந்தியாவிலும் சர்வீசஸ்
மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனங்களும் பெருமளவு வளர வேண்டும்.
மென்பொருளால் வரையறுக்கப்பட்ட டேட்டாசென்டர்
பெருநிறுவனங்கள் தங்களின்
தொழில்நுட்ப தேவைகளுக்கான சர்வர்கள், நெட்வொர்க்/சேமிப்பாக உபகரணங்கள்
போன்றவற்றை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கும் இடம் டேட்டாசென்டர் (உலகம்
முழுக்க பயனர்களுக்கு சேவை வழங்கும் கூகுளின் டேட்டாசென்டரை இணையத்தில் பார்க்கமுடியும்).
ஒவ்வொரு சர்வருக்கும்
தனித்தனியாக ஹார்டுவேர் வாங்காமல்,
ஒரே மெஷினில் பல வர்ச்சுவல் சர்வர்களை
இயக்கும் சர்வர் virtualization தொழில்நுட்பம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. பிறகு சேமிப்பகம், நெட்வொர்க்
என ஒரு டேட்டாசென்டரில் இருக்கும் முக்கிய ஹார்டுவேர்
சாதனங்கள் அனைத்தையுமே
வர்ச்சுவலைஸ் செய்வதை Software
defined datacenter என்கிறார்கள். மேகம்
மூலம் துரிதமாக சேவைகள் அளிக்க இந்த மாற்றம் அவசியம்.
|
அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களை மட்டும் நம்பி, அங்கு ஏதாவது பிரச்சினை என்றால் கையைப் பிசைந்து கொண்டிராமல், வேறொரு முக்கியச் சந்தையைக் கவனிப்பதன்
மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் பெருவளர்ச்சி காணமுடியும். அது நமது இந்திய சந்தை.
மருத்துவம், கல்வி, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், அரசு மற்றும் இந்திய பெருநிறுவனங்கள் தொழில்நுட்பத்தில்
செய்யப்போகும் முதலீடுகள் ஐடி துறைக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. மேலும்
மேகச்சேவை மூலம் சிறு நிறுவனங்களும் தங்களைச் சுலபமாகத் தொழில்நுட்ப மயமாக்கிக்
கொள்ள முடியும். உலக அளவிலும் மெதுவாக மந்தநிலை மறைந்து நிறுவனங்கள்
தொழில்நுட்பத்தில் பெருமளவு முதலீடு செய்யத்துவங்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் தொடர்ந்து டிஜிட்டல் மயமாக மாறிவரும் வேளையில், தொழில்நுட்ப நிறுவனங்களின் தேவை மேலும்
அதிகரிக்கவே செய்யும். பழைய தொழில்நுட்பங்கள் மறைய மறைய புதிய தொழில்நுட்பங்களில்
வாய்ப்புகள் பெருகியபடியே இருக்கும். ஆனால் 2007 ஆம் ஆண்டுக்கு முன்புவரை இந்திய
நிறுவனங்கள் கண்ட வளர்ச்சி அளவிற்கு இனி காண முடியுமா என்பது சந்தேகமே.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது ஐடி
துறைக்காகவே எழுதப்பட்ட வாசகமோ என்று தோன்றுகிறது. அதில் இருப்பவர்களும் தொடர்ந்து
தங்களைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
No comments:
Post a Comment