Sep 8, 2014

ஜிகர்தண்டா பற்றி சில உதிரி சிந்தனைகள்

(சில spoilers உண்டு. படம் பார்த்தவர்களும், படம் பார்க்குமுன்னமே முழுக்கதையையும் தெரிந்து கொண்டு போகும் வினோத ஐந்துக்களும் மட்டும் மேலே தொடரவும்)

சமீபத்திய படங்களில் இந்தளவிற்கு குதூகளித்தது ஜிகர்தண்டா பார்த்துதான். It is a treat for movie buffs. நலன் குமாரசாமியை அறிமுகக் காட்சியில் வைத்தது, கார்த்திக் என்கிற கதாநாயகன் பெயர் போன்றவை மூலம் ஆரம்பத்திலேயே படத்தை வெகு நெருக்கமாக்கி (personalize) விடுகிறார் இயக்குனர்.

இந்தப் படத்தை கேங்ஸ்டர் படம், சினிமா படம் என்றெல்லாம் வகைப்படுத்தினாலும், இப்படி ஒரு தரமான முழு நீள நகைச்சுவை படம் வந்து வெகு நாட்களாகிவிட்டது. இரண்டாம் பாதியில் மையத்திலிருந்து தடம் மாறுவதாகச் சொல்லப்படும் மாஸ்டர் கோச்சிங் காட்சிகள் கூட hilarious. நாயகனை ஏமாற்றி எடுக்கும் காட்சிகள் வெள்ளித்திரை படத்தை நினைவு படுத்தியது.

படத்தில் Tarantino வின் தாக்கத்தைப் பற்றி பேசப்பட்டாலும், எனக்குப் பிடித்த இன்னொன்று Nolan ஸ்டைலின் தாக்கம் - இறுதியில் எழுச்சியான இசையில் துண்டு துண்டான பிளாஷ்பேக் காட்சிகள் மூலம் உண்மையை உணர்த்துவது, அதன் பிறகு வரும் open ended climax (பீட்சாவிலும் இவை நன்றாக அமைந்தது).

சேதுவின் வில்லத்தனம் பெரிதாகக் காண்பிக்கப்பட்டாலும், படத்தில் ஜிகர்தண்டனாக (cold heart) வரும் மற்றொருவர், கதாநாயகன் சித்தார்த். மாரல் வேல்யூஸ் துளி கூட இல்லாமல்.. தனது பிழைப்புக்காக அனைவரையும் உபயோகப்படுத்திக்கொள்ளும், அவ்வளவு வன்முறையும் ஒரு சின்னப் பாதிப்பை கூட ஏற்படுத்தாத ஒரு கதாபாத்திரம் அது. சேதுவை அவன் கடைசியில் எதிர்ப்பதும் தன் மடியில் கை வைப்பதால் தான். சொல்லப்போனால் படத்தின் பிரதான பாத்திரங்களில் கொஞ்சமாவது மனசாட்சியுடன், பாசத்துடன் இருப்பது ஊருணி தான். ஆனால் அவர் ஒரு காமெடியன் மட்டுமே (சூது கவ்வும் எம்.எஸ்.பாஸ்கர் நினைவிற்கு வருகிறாரா?). தந்தையின் வளையல் தொழிலை தொடரும் ஒரு பழைய ஆள் அவர். அவரை மாதிரி ஆட்கள் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போயாகிவிட்டது.

சேதுவுக்கும் சித்தார்த்துக்கும் ஒரே வித்தியாசம்தான். சித்தார்த்திடம் அரிவாள் கிடையாது, அவர் இயங்கும் தளமும் வேறு. ஆனால், அதுவும் படத்தின் கடைசியில் முழுமை அடைகிறது. அந்த கடைசிக் காட்சிகளை தேவையில்லாதவையாக நான் கருதவில்லை. சொல்லப்போனால் கார்த்திக் கதாபாத்திரத்தை நிறைவு செய்வதே அந்தக் காட்சிகள்தான். அந்தக் காட்சியில் அவருக்கு வரும் அழைப்பில் மறுமுனையில் மனைவியாக சேலைத்திருடி கயல் இருப்பதற்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு.


1 comment:

தமிழ் பையன் said...

கடைசிக் காட்சியில் அவருக்கு வரும் அழைப்பில் மறுமுனையில் மனைவியாக சேலைத்திருடி கயல் இருப்பதற்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு -- இப்படி நான் யோசிக்கவே இல்லையே.. நன்று.