Nov 22, 2015

பரிந்துரை - ஒரு சீரிஸ், ஒரு திரைப்படம்

சக Sitcom வெறியர்களே.. Friends, Big Bang theory, How I met your mother, போன்ற தொடர்களுக்கு இடையில் தவற விடக்கூடாத தொடர் - The Office.
மற்ற தொடர்களின் பெயர்கள் காதில் விழுவது போல் இது ரொம்ப அடிபடவும் இல்லை. எனக்கே தற்செயலாக, அலுவலகங்களை மையமாக கொண்ட நாவல்கள், படங்கள், தொடர்களை தேடும்போதே கிடைத்தது (டாப் டென் சிட்காம்ஸ் னு போட்டா வரப்போகுது பன்றி?). நீங்களும் தவற விடக்கூடாது என்பதற்காக இந்த பதிவு. 
மரபான சிரிப்புத்தொடர்களை பார்த்து விட்டு இதை பார்த்தால் முதலில் சற்றே பிடிக்காமல் போகக்கூட வாய்ப்புண்டு - டாக்குமென்டரி வடிவம் மற்றும் சிரிப்பலைகள் இல்லாமை சில காரணங்கள், வாய்ப்பு தரவும். அட்டகாசமான பாத்திரங்கள், நகைச்சுவை, consistency எனக்கு ரொம்ப பிடித்தவை. தரத்தில் கிட்டத்தட்ட பெல் கர்வ் மாதிரி சீசன் ஒன்றில் பிக் ஆகி ஒன்பதில் கீழே இறங்குகிறது. And ends with a big bang. Don't miss it.
Thats what she said.

***
Clerks பல வருடங்கள் முன்னால் பார்த்தது. பிடித்ததற்கு காரணம் அந்த படத்தின் கேஷுவல் தன்மை, உண்மையில் அதில் வருபவை திட்டு திட்டாகவே நினைவில் இருந்தது. சோர்ந்து போய் கிடந்த ஒரு சமயத்தில் Clerks 2  தற்செயலாக பார்க்கக்கிடைத்தது. எந்த சிறந்த படத்தையும் போலவே இதை பார்த்து முடித்ததும் பறக்க ஆரம்பித்தது மனது. ஜாலியான, சில்லென்ற, துவண்டு போன மனதை செங்குத்தாக தூக்கி நிறுத்தும் படத்தை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் பரிந்துரைப்பேன்.
ஒரே ஒரு வருத்தம் - அதில் வரும் என் விருப்பமானவர்களுக்கு கடந்து போய் விட்ட வயது. முதல் பாகத்திற்கும் இதற்கும் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் ஓடி விட்டிருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே அவர்களை பார்ப்பது பெரும் கிளர்ச்சியை கொடுத்தாலும், அவர்களின் தொலைந்து போன இளவயது ஆயாசத்தை அளித்தது. வயதாகிப்போய் ஒவ்வொரு பருவத்தையும் வேக வேகமாக கடப்பது பற்றி எனக்கு பெரும் பதற்றம் உண்டு, இதைப்பற்றிய நான் அடிக்கடி புலம்புகிறேன் (உண்மையில் படத்தில் இந்த கவலையும் ஒரு அம்சமே - அதனாலும் பிடித்தது), அதில் இப்படி எதையாவது பார்த்தால் அதுதான் - அந்த காலம் கடந்துபோய் விட்டதுதான் - முதலில் தெரிந்து மேலும் பதற்றப்படுத்துகிறது.
இந்த இரண்டாவது பாகம் வந்து எட்டு ஆண்டுகள் ஓடிவிட்டது.

முழுதும் படிக்க..

Jan 12, 2015

படித்த புத்தகங்கள் - 2014


2014 ல் படித்த புத்தகங்கள் பற்றிய சிறுகுறிப்பு.

The Last Juror

கறுப்பின வெறுப்பு பரவலாக இருந்த ஒரு காலகட்டத்தில் நடக்கும் கதை. அமெரிக்காவின் சின்ன ஊர் ஒன்றில் பத்திரிகை நடத்தும் இளம் ஹீரோ. அடுத்தவரை பாதிக்காத அளவிற்கு சுயநலமானவர். அங்கு அவர் பெறும் அனுபவங்கள், வெற்றிகள். Coming of age வகை. 'ஒரு தடவை படிக்கலாம்'.

6174 - சுதாகர்
டேன் பிரவுன் ஸ்டைல் த்ரில்லர்/அறிவியல் புனைவு. 'க்ளூக்கள் மூலம் உண்மையை தேடி நெருங்கும் நல்ல குழு-கெட்ட குழு' கதைகள் நான் பெரிதும் விரும்பிப்படிப்பவை/பார்ப்பவை (உதா. National treasure). ஆகவே இந்த நாவலும் சட்டென பிடித்துவிட்டது.  அதையே தமிழில் படிப்பது ஒரு சுக்ஹானுபவம். பெரும் உழைப்பு தேவைப்பட்டிருக்கும்.

ஏழு தலைமுறைகள்
கருப்பென்றால் தாழ்ச்சி, அசிங்கம், கருப்பர்களுக்கு எதுவும் தெரியாது, காட்டுமிராண்டிகள் போன்ற கருதுகோள்கள் நம்மிடையே வெகு பிரபலம். இத்தகைய கருத்துக்கள் எப்படி உருவாகின, யார் உருவாக்கியது, ஏன் அவை வெள்ளையர்களுக்கு மிக முக்கியமாக இருந்தன? கருப்பர்களை வெறும் உடைமையாக, செருப்பு பழசாகிடுச்சு, தூக்கி போட்டுட்டு வேற வாங்கணும் என்பது மாதிரி மட்டும் எப்படி அவர்களால் கருத முடிந்தது?  அவர்களின் உழைப்பை முழுக்க சுரண்டி தன்னை வளர்த்துக்கொண்ட வெள்ளையர்கள் எத்தனை பேர்? ஆப்ரிக்காவில் ஆரம்பிக்கும் கதை. குதிரை பிடிப்பது போல் அடிமையாக அமெரிக்காவுக்கு இழுத்துச்செல்லப்படும் குண்ட்டா. கதையை எழுதும் அலெக்ஸ் குண்ட்டாவின் வம்சத்தில் ஏழாவது தலைமுறை. விரிவான புத்தக அறிமுகத்தை இங்கே படிக்கலாம்

அறம்
மனிதத்தின் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் கதைகள். 'இந்த லோகத்துல யாருக்கும் மனிதாபிமானம் இல்ல' என அடிக்கடி தலையில் 'ஜலம்' விட்டுக்கொள்வது என் வழக்கம் (ஓடி ஓடி உதவுவதில்லை, ஆனால் முடிந்தவரை அடுத்தவருக்கு சிரமம் கொடுக்காமல் இருக்க விழைகிறேன்). அந்த மனக்குளிருக்கு கதகதப்பாக இருந்தது இந்த புத்தகம்.

புறப்பாடு படித்தது இந்த வருடமா போன வருடமா?



ஆயிஷா
மிகச்சிறிய புத்தகம், மேற்கண்ட இணைப்பில் படிக்கலாம். கல்வித்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் அதோடு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் (ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்.. முக்கியமாக ஆசிரியர்கள்) அவசியம் வாசிக்க வேண்டிய கதை.. ஆயிஷா.. வெளிவந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் இக்கதை பேசும் விஷயம் இன்னும் ப்ரெஷ்ஷாக இருக்கிறது என்பது சோகமான விஷயம்..

அதிலும் நாமக்கல் டைப் பள்ளிகள், ப்ரீகேஜி க்கு ஒரு லட்சம் வாங்கும் பள்ளிகள் (மற்றும் அவை உருவாகி வந்த காரணங்கள்) ஆயிஷாவின் ஆசையை கண்ணுக்கு எட்டாத தொலைவிற்கு கொண்டு சென்று விட்டன..

வந்தாரங்குடி
நெய்வேலி மின் நிலையங்களால் நிலமிழந்தவர்களின் கதை. சமீபமாக அடிக்கடி கேட்கும் சொற்றொடர் 'Need massive investments in Infrastructure'. அதற்கு தொல்லை இல்லாத வகையில் சட்டம் கூட சமீபத்தில் திருத்தி அமைக்கப்பட்டது. அது நல்லதுதானே? கொடுக்கும் நஷ்ட ஈட்டை வாங்கிக்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டியதுதானே? என கேட்பவர்கள் இந்த நாவலை படிக்கவேண்டும். வேதாந்தா முதற்கொண்டு மீத்தேன் வரை பலதை புது விழிகள் கொண்டு பார்க்கவைக்கும் இந்தக் கதை. கட்டற்ற-உடனடி லாப வெறி  vs நிலைநிறுத்தத்தக்க வளர்ச்சியில் எதை நோக்கி நாம் செல்ல வேண்டும் என முக்கிய முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதனாலேயே வந்தாரங்குடி முக்கியமான நூல் ஆகிறது. பாமக ஆதரவு என்பது போல் சில இடங்கள் தென்பட்டாலும், அந்த மக்களின் பார்வையில் எழுதப்பட்டது/காலக்கட்டம் போன்றவற்றை கருத்தில் கொண்டால் அவற்றை எளிதில் தாண்டிவிடலாம்.

இரண்டாவது முகம் - நீல பத்மநாபன்
அருமையான கதைகள் அடங்கிய சிறுகதை தொகுப்பு. நூல் மதிப்புரையை இங்கே படிக்கலாம்.


Museum of Innocence - Orhan Pamuk
இந்த வருடத்தில் எனது பேவரிட் இதுதான். வண்ணதாசனோடு சேர்த்து பாமுக்கையும் நுண்ணிய விஷயங்களின் மனிதன் என்பேன். காதலை அடைய ஒருவன் எவ்வளவு தூரம்  போவான் என நூலை சுருக்கமாக அறிமுகம் செய்யலாம். எதை எதையோ நைச்சியமாக பேசி கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை நம்மை சுமக்க வைத்துவிடுவது ஓரான் சிறப்பம்சம். போகிற போக்கில் இவர் தெளிக்கும் நுண்ணிய விஷயங்கள் ஒவ்வொன்றும் பல நாட்கள் யோசிக்க வைக்க கூடியவை.

இவரின் முந்தைய நாவலான 'பனி'யில் இருண்ட பிரதேசத்தில் ஒரு அரசியல் சடுகுடுவில் மாட்டிய நாயகனின் காதல். இந்த நாவலில் மற்றதை விலக்கிவிட்டு முழுக்க முழுக்க காதல் மட்டுமே. காதலின் ரண வேதனை, obsession, காதலின் நினைவுகளை சுமக்கும் சின்னஞ்சிறிய பொருட்கள் என திக்குமுக்காட்டிய நாவல். கதாசிரியர் ஒரு பாத்திரமாக உள்ளே நுழைவது கதையின் கற்பனைத்தன்மையை காணாமல் ஆக்குகிறது. இது காதலன் காதல் அல்ல, குணா காதல்.


அரசூர் வம்சம் - இரா.முருகன்
கதை பாணியிலேயே எழுதப்பட்ட (ஆசிரியர் மன்னிப்பாராக) ஒரு அபத்தமான நூல் மதிப்புரையை இங்கே படிக்கலாம்.


திரும்பிப் பார்க்கிறேன் - டைரக்டர் ஸ்ரீதர்
டைரக்டர் ஸ்ரீதரின் சுவாரசியமான நினைவுகள். தரமான, சற்றே எதிர்காலத்திற்கு படங்களை எடுத்த ஒரு ஆளுமையை அவர் கூடவே திரிந்ததைப்போல் தெரிந்துகொள்ளலாம். என்ன பிரச்சினை என்றால் ஏதாவது பாட்டை பற்றி குறிப்பு வந்துவிட்டால் அதை ஒருதரம் பக்கத்தில் இருக்கும் கணினியில் கேட்காமல் மேலே நகர முடியவில்லை..


Snow - Orhan Pamuk
Museum of Innocence படித்துவிட்டு வேறு ஒருவரின் பக்கம் போக முடியுமா? ஆகவே இவரின் முந்தைய நாவலான 'பனி'யை ஆரம்பித்தேன். இலக்கியவாதி ஒருவர் அரசியல் த்ரில்லர் எழுதினால் பனி போல்தான் இருக்கும். இன்று நமது தேசம் போய்க்கொண்டிருக்கும் பாதையில் எங்கு போய் சேருவோம் (ஆல்ரெடி சேர்ந்தாச்சு?) என கதையை படிக்கும்போது பதைக்கிறது. அதனாலேயே மிகவும் நெருக்கமும் ஆகிவிடுகிறது.

கொள்கையில் மூர்க்கம் சேர்ந்தால், அது வலதோ இடதோ, என்ன ஆகும்? முதலில் அவர்கள் முக்கியம் என கருதுவது முக்கியம்தானா? சாதி/மதவாதிகள் பேசும் பெரும்பாலான விஷயங்கள் எனக்கு அபத்தமானவையாக, வாழ்க்கைக்கு தேவையே இல்லாதவையாக தோன்றும். அதையே 'கண்ணுக்கு முன் அவ்வளவு வறுமை, இதில் பெண்கள் தலையை மூடுவதுதான் முக்கிய பிரச்சினையா?' என இங்கும் மறைமுகமாக தோன்ற வைத்துவிடுகிறார் ஓரான். 'வாழ்க்கையில் மகிழ்ச்சியை அடைவதே முக்கியம்' எனும் 'கா'விடம். 'மகிழ்ச்சியை துரத்திக்கொண்டே வேண்டுமானால் இருக்கலாம். எப்போதுமே அடைய முடியாது' எனும் 'ப்ளூ'வின் சொற்கள்தான் நாவலின் சாராம்சமா?


Everybody Loves a Good Drought - Palagummi Sainath*
முடிக்கப்போகிறேன். முடித்துவிட்டு எழுதுகிறேன் (அப்புறம் எதற்கு இதை லிஸ்டில் சேர்த்தாய்?)


வெண்முரசு - முதற்கனல் - ஜெயமோகன்
'உலகில் சொல்லப்படும் அனைத்து கதைகளும் ஏற்கனவே மகாபாரதத்தில் உண்டு' எனும் ஆசிரியரின் பேவரிட் கூற்றை அவரே நிரூபிப்பதை போல் எழுதிக்கொண்டிருக்கும் மகாபாரத நாவல்கள். துரோகமிழைக்கப்பட்ட அம்பை - மற்றவர்களை சுமக்கும் பீஷ்மர் முதற்கனலின் மையங்கள். கதை முழுக்க நுரைக்கும் மனித மனத்தின் நுண் உணர்வுகளை படிக்கையில் வெண்முரசு முடிவதற்குள் அந்த முதலில் சொன்ன கூற்று நிஜமாகும் என்றே தோன்றுகிறது. இந்த நாவல் யாருக்கு பயன்பட போகிறது என்பதை பற்றி கவலைப்படாமல் இப்போதைக்கு சுயநலமாக அதன் கலையை மட்டும் ரசிப்பதாக உத்தேசம்.

Short stories by Arthur C Clarke
பிடித்தமான அறிவியல் புனைவு எழுத்தாளராக, ஆதர்சமாக ஆர்தரை ஆக்கிய கதைகள். அத்தனையும் அவ்வளவு தெளிவாக, பெரும் உற்சாகம் ஏற்படுத்துகின்றன. எழுதப்பட்டு ஐம்பது வருடங்கள் கழித்தும் அவை ஏற்படுத்தும் தாக்கம் - நவீன உத்திகளுடன் புரியாத மாதிரி கடினமான கதைகள் கட்டாயமில்லை என்கிற தெளிவை எனக்கு ஏற்படுத்திய கதைகள்.

***

மேலே குறிப்பிட்டவை நினைவில் தங்கியவை மட்டும். இவை இல்லாமல் ஏராளமான சிறுகதைகள், இணைய கட்டுரைகள்..நூற்றுக்கணக்கில்.. அவற்றையும் அடுத்த வருடம் குறித்து வைத்து நல்லவற்றை தொகுக்க உத்தேசம்.

***

2015 இலக்குகள்
வாசிப்பில் பெரும் பாய்ச்சலை (ஆச்சர்யகுறி) நிகழ்த்தப்போகும் வருடம், வேலைகள் குறுக்கிடாதவரை. ஜனரஞ்சக, பல்ப் புத்தகங்களை வாசிக்கும் மனமும் வாய்த்திருக்கிறது. எனது மையமான அறிவியல் புனைவுகளை நிறைய படிக்க உத்தேசம். என் பிரச்சினை, ஒரே புத்தகத்தை பல மாதங்களாக இடைவெளி விட்டு, பாதி கதாபாத்திரங்களின் பெயர்களை மறந்துவிட்டு படிப்பது. அப்படி இல்லாமல் இரண்டு வாரத்திற்கு ஒன்று என கடுமையான ஒரு விதியை நிர்ணயித்துக்கொள்ள போகிறேன் (இதையேதான் போன வருஷமும் சொன்னான்...). ஆக, வருடத்திற்கு குறைந்தது இருபத்தைந்து புத்தகங்கள், இணைய வாசிப்பு நீங்கலாக.

கீழே கொடுத்துள்ளது படிக்க வேண்டிய லிஸ்டில் உள்ளவை. தமிழில் வழக்கமாக லிஸ்ட் வைத்துக்கொள்வதில்லை - கிடைப்பதை எல்லாம் படிப்பதால். இது மிகவும் உத்தேசமான லிஸ்ட் தான் - முற்றிலும் வேறு செட்டை கூட படித்திருப்பேன். அங்கங்கே 'இது அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்' என பார்த்து, புத்தகத்தின் சிறுகுறிப்பும் என்னை கவர்ந்தால் லிஸ்டில் இடம் பெற்றுவிடும்.

English
--My Name is Red (2000)
--Zia Haider Rahman - “In the Light of What We Know”
--Serious men by Manu Joseph
--Aunt Julia and the Scriptwriter by Mario Vargas Llosa
--Chronicle of a Death Foretold by Gabriel Garcia Marquez
--Kazuo Ishiguro, Muragami books (Japan)
--Tell no one, Harlen coben (Thriller)
--My Antonia ; Willa Cather
--One Day In The Life Of Ivan Denisovich

--Capital by Thomas Piketty
--No Place to Hide: Edward Snowden, Glenn Greenwald
--Why Your World Is About to Get a Whole Lot Smaller: Oil and the End of Globalization

SciFi
Ancillary Justice by Ann Leckie
Blackout and All Clear by Connie Willis
Other Nebula/Hugo/ArthurCClarke award winning books

Others
The Execution Channel, by Ken MacLeod (Tor)-political thriller
Pattern Recognition, by William Gibson  - techno thriller
Rainbows End, by Vernor Vinge (Tor) - techno thriller
The Mount, by Carol Emshwiller (Small Beer Press) - Alien
Geoff Ryman’s Air (2005) - Future
M.J. Locke’s Up Against It  (2012) (space) -Future
Benjamin Percy’s The Dead Lands - Post apocalyptic

Workplace novels
Joshua Ferris’ Then We Came to the End
Allegra Goodman - Intuition (medical post doc researcher's)
Personal Daze by Ed Park
Domestic Violets, by Matthew Norman

(பட நன்றி: கூகுள்)


முழுதும் படிக்க..

Jan 1, 2015

பார்த்த படங்கள் - 2014

* அருமை
** அவசியம் பார்க்கவேண்டிய படம்

உலகப் படங்கள்:
Jagten (The Hunt) - Denmark **
Das Boot - Germany *
Y Tu Mamá También (2001) - Mexico
Moebius (2013) - Korea
Kin-dza-dza! (1986) - Russian
A Hard day (2014) - Korea *
Winter.Sleep (2014) - Turkey *
Once Upon a Time in Anatolia (2011) - Turkey **

ஆங்கிலம்:
Gravity *
The wolf of wall street *
The Dictator *
Jackie Brown
Zero Dark Thirty
Now you see me
Stalker
The Thing (1982) *
Shaun of the dead *
Cloud Atlas *
Captain Philips *
Fear and loathing in las vegas
Nymphomaniac *
Dumb and Dumber (1994)
Ace Ventura_ When Nature Calls (1995)
Anchorman The Legend of Ron Burgundy

பிராந்தியம்:
Memories (Malayalam)
North 24 Kaantham (Malayalam) *
Romans (Malayalam)
Artist (Malayalam)
Lucia (Kannada) *
Drishyam (Malayalam) *
Bangalore days (Malayalam)
Paan singh tomar (Hindi)
2 states (Hindi)
Barfi (Hindi)
Ustad Hotel (Malayalam)
Queen (Hindi) **

தமிழ்:
இவன் வேற மாதிரி
என்றென்றும் புன்னகை *
விடியும் முன்
பிரியாணி
ஜில்லா
பண்ணையாரும் பத்மினியும் *
தெகிடி *
மஞ்சப்பை
அரிமா நம்பி *
சதுரங்க வேட்டை**
சைவம்
ஜிகர்தண்டா **
சரபம்
திருமணம் என்னும் நிக்காஹ்
ஆடாம ஜெய்ச்சோமடா
பர்மா
மெட்ராஸ் *
கத்தி
சலீம்
காவியத்தலைவன்
அவள் அப்படித்தான் *
பிசாசு *
அப்புச்சி கிராமம்

தொடர்கள்:
Fargo *
Big Bang Theory *


குறிப்பு: இப்பதிவு ஒரு நினைவுக்காக. சில படங்கள் மீள். சில படங்கள் விடுபட்டுள்ளன. 


முழுதும் படிக்க..

Dec 15, 2014

வால்விழுங்கி நாகம் (அறிவியல் புனைவு)

"சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் மிகவும் முன்னேறிய ஒரு சமூகம் இருந்தது.. அது அழிவற்றது என்று தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டது"

டாக்டர் கோபால் (பிஎச்டி) தனது குறிப்புகளின் முதல் வரிகளை ஆயிரம் முறை படித்திருந்தாலும், அதன் மீது கண்கள் ஓடியதும், மனது தன்னையறியாமல் மறுபடி படித்தது. இந்த வருட புதிய மாணவர்களுக்கு மறுபடியும் முதலில் இருந்து வரலாற்றைச் சொல்ல வேண்டும். ஆனால் சிந்து சமவெளி நாகரிகம் மட்டும் அவனுக்கு அலுக்காத ஒன்று. சமயத்தில் அதைப்பற்றி ஆழமாக வேறு யாராவது பேசினாலோ எழுதிவிட்டாலோ தனது காதலியை வேறு எவனோ வர்ணித்ததைப் போல் எரிச்சலை அப்பிக்கொள்கிறான். பெரும்பாலும் புது மாணவர்கள் முதல் வகுப்பின் முடிவிலேயே அவனது ரசிகர்களாகியிருப்பார்கள். மெட்ராஸ் யுனிவர்சிட்டி வரலாற்று பிரிவின் பேராசிரியர்கள் வரலாற்றிலேயே மிகவும் வயது குறைந்தவனாக (32) இருப்பது மட்டுமே அதற்கு காரணமாக இருக்கமுடியாது. 

வரலாறு/Archeological Survey of India - ASI/எபிக்ரஃபி வட்டார பெரிசுகள் பலரும் கூட அவன் பெயரை தெரிந்து வைத்திருந்தார்கள். சமீபத்தில் கோபாலும் அவனது வழிகாட்டி டாக்டர் ராவும் சேர்ந்து எழுதிய ஆராய்ச்சி பேப்பர் சர்வதேச அளவில் தர்ம அடி வாங்கினாலும், நல்ல கவனத்தைப் பெற்றது. தோண்டி எடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துருக்கள் ஒரு மொழியின் எழுத்துக்கள் என்பது அந்த ஆராய்ச்சியின் சாரம். எதிர்த்தரப்பு அவை வெறும் சின்னங்களே என்கிறது. தகவல்கள் இந்த அளவிலேயே கிடைத்திருப்பதால் அதன் அர்த்தங்களைப் பல்லாண்டுகளாகப் பலர் முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்றுமே கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம்.

கோபால் முந்தைய இரவு சரியாகத் தூங்காததால், பல ஆசிரியர்கள் உபயோகித்து மழுமழுப்பேரிய மேஜையில் சாய்ந்து கண்களை சற்றே மூடியதும், அவனது அறைக்கதவில் யாரோ ‘டக் டகாடக் டக்’ என இசைத்தார்கள். மலர்ந்து உட்கார்ந்தான். இந்த ஒரு வாரத்திலேயே அந்த ராகமான கதவுத்தட்டல் அர்ச்சனாவுடையது என்பது பழக்கமாகிவிட்டது. Theoretical physicist. சுவிட்சர்லாந்தில் கடவுள் துகள் படைக்கும் CERNல் வேலை! ஆனால் துளி பந்தா இல்லை. இங்கு ஏதோ நிகழ்ச்சிக்காக வந்தவள் கோபாலை தேடித்தேடி வந்து பேசினாள். அவனைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்ததோடு, அவனது வேலையையும் கவனமாக நோண்டி நோண்டி கேட்டுக்கொண்டாள்.  ஆனாலும் ரிசர்ச் செய்பவர்களில் சிலர் அரசியல்வாதிகளை விட மோசமானவர்கள். ஏதோவொரு நோக்கத்தை மட்டுமே கொண்டு மற்ற எதையும் கண்டு கொள்ளாதவர்கள் ஆபத்தானவர்கள்தானே?

"வாங்க அர்ச்சனா.. கான்ஃபிரன்ஸ் முடிஞ்சதா?"

"இல்லை.. ரொம்ப அறுவை.. அதான் நழுவி இங்க ஓடி வந்துட்டேன். நீங்க கிளாஸ்க்கு போகனுமா?"

"இல்லை லஞ்சுக்குப் பிறகுதான்.. நீங்க சொல்லுங்க"

"கேக்கணும்னு இருந்தேன். அன்னிக்கு பேசிட்டு இருந்தப்போ நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்க.. சிந்து நாகரிக மக்கள் பல ஆயிரம் வருஷத்துக்கு முன்ன எழுதி வச்சிட்டு போன விஷயங்களைப் படிச்சு புரிஞ்சிக்க என்ன வேணாலும் செய்வேன், எவ்வளவு தூரம் வேணாலும் போவேன்னு.."

"அது ஒரு வார்த்தை இல்லை.. பல வார்த்தைகள்"

ஒரு சிலரின் சிரிப்போ அழுகையோ செயற்கை என்று கண்டுபிடிக்கவே முடியாது. அப்படி ஒன்றை சிரித்துவிட்டு, "ஐயோ.. சரி பல வார்த்தைகள்.. அதுக்காக எவ்வளவு தூரம் போவீங்க?"

அவளின் கேள்வி அந்த இடத்தில் பொருந்தாமல், அவளது குரலின் விளையாட்டுத்தனத்தையும் மீறி தொக்கியிருந்த முக்கியத்துவம் அவனுக்கு நெருடியது.

"அப்படிப் படிச்சிட முடியும்னா, என் உயிரைக்கூடக் கொடுப்பேன்" அவனை மீறி வார்த்தைகள் வந்து விழுந்தன. அவ்வளவு தீர்க்கத்தை அவளும் எதிர்பார்க்கவில்லை.

"நான் ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசணும். எங்க ஆரம்பிக்கனு தெரியலை"

"சும்மா தயங்காம சொல்லுங்க அர்ச்சனா"

"சுருக்கமா சொன்னா லூசோன்னு நினைப்பீங்க.. அதனால விலாவாரியாவே சொல்றேன். இது ரொம்ப ரகசியம். வெளிய போகாம பாத்துக்கறது உங்க பொறுப்பு.. For friends’ sake!"

தெரியாத ஒருவர் தன்னிடம் அவ்வளவு ஆர்வம் காட்டியது ஏதோ வேலைக்காக என்பது வழக்கமான அயர்ச்சியைத் தந்தாலும், இவனுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கோபாலை வேறு எதையும் யோசிக்க விடவில்லை.

"நிச்சயம் யார்ட்டயும் சொல்லலை. ரொம்பப் பயமுறுத்தாம சீக்கிரம் சொல்லுங்க"

"வார்ம்ஹோல் கொண்டு காலப்பிரயாணம் பத்தி உங்களுக்குத் தெரியுமா? ஐன்ஸ்டைன் கூட அதப்பத்தி சொல்லியிருக்கார். இப்போ ஒரு படம் கூட வந்ததே?"






அவனுக்குத் தெரிந்த கொஞ்சத்தைச் சொன்னதும் அர்ச்சனா ‘ஓரளவு சரிதான்’ என மூச்சு வாங்கிக்கொண்டே இப்படி விளக்கினாள்:

இரு வேறு கால வெளிகளுக்கு இடையே சுரங்கப்பாதை போல் ஒரு இணைப்பை ஏற்படுத்தினால் அதுதான் வார்ம்ஹோல். பாதையின் இரண்டு பக்கமும் நுழைய Funnel மாதிரி நுழைவாயில்கள். *வளவளகொழகொழ* ஆனால் இந்த நுழைவாயில்கள், பாதை எல்லாம் உருவாக்குவது அவ்வளவு சுலபம் அல்ல. பிரபஞ்சத்தில் இயற்கையாகவே காணப்படும் பிளாக் ஹோல் மூலம் இந்த நுழைவாயில்கள் சாத்தியம் என பல அறிஞர் மண்டைகள் கருதின.

*வளவளகொழகொழ* பிளாக் ஹோல் தெரியுமல்லவா? ஒரு மாபெரும் நட்சத்திரம் இறக்கும்போது அளவில் மிகவும் சிறுத்து, அவ்வளவு நிறையும் ஒரு புள்ளியில் தேங்கி உருவாவது. அதன் அடர்த்திக் காரணமாக மைய ஈர்ப்பு மிக அதிகமாக, சுற்றி இருக்கும் அனைத்தையும் இழுக்கும். அனைத்தையும் என்றால் ஒளியை கூடத் தப்பவிடாமல் இழுப்பதால் அதன் பெயர் கருந்துளை. *வளவளகொழகொழ* கிட்டத்தட்ட பிரபஞ்சத்தின் அனைத்து கேலக்சியின் மத்தியிலும் இப்படி ஒரு கருந்துளை உருவாகி சுற்றி இருப்பவற்றை இழுத்துக்கொண்டிருக்கிறது.

இப்படி ரொம்ப ரொம்பக் குட்டியான இடத்தில் மாபெரும் அடர்த்தியை உருவாக்க முடிந்தால், கருந்துளையைப் பூமியிலேயே செய்ய முடியும். ஆனால் அதற்கு அபிரிமித சக்தியும், பூமியை அது உறிந்துவிடாமல் கட்டுக்குள் வைக்க மெகா உபகரணங்களும் தேவை. CERNஇல் இருப்பது போல்.

படபடப்பாக நிறுத்தினாள்.

பாதிப் புரிந்து பாதிப் புரியாமல் கேட்டான் “நீங்க கருந்துளையை உருவாக்கிட்டீங்களா என்ன?”

“2005 லேயே”

இன்னும் முழுசாக அதன் பெருமை தெரியாததால் பெரிய ஆச்சர்யம் காட்டாமல் ‘வாவ், குட் வொர்க்’ என்றான்..

“உனக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியலையா?” அவள் கேட்டதை யோசித்ததும் சிறிது நேரம் விட்டு கோபாலுக்கும் படபடக்க ஆரம்பித்தது.

“நீங்க.. அங்க.. வார்ம்ஹோல் காலப்பயணம்?”

“யெஸ்.. யெஸ்” அவள் குதித்ததில் ஏதோ கீழே விழுந்து உருண்டது. இருவருமே அதைக் கண்டுகொள்ளவில்லை. அவளே தொடர்ந்தாள்.

“கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆச்சு அது கருந்துளைதான்னு எங்களுக்குத் தெரிய. அதை அளவில பெரிசாக்கவும், ஸ்திரமா வைக்கவும் இத்தனை வருஷம் ஆகியிருக்கு. இப்போ ஒரு ஆள் அவனுக்குத் தேவையான பொருள்களோட நுழையற அளவுக்குக் கொண்டு வந்தாச்சு!”

“வார்ம்ஹோலின் ஒரு முனை இங்க இருக்கு சரி.. எதிர் முனை?”

“எங்க கணக்குப்படி இன்னிலேர்ந்து ஐயாயிரம் வருஷத்துக்கு முன்னால் இருக்கும்னு தெரிஞ்சிருக்கு”

ஐயாயிரம் வருடம் என்றதும் அவனுக்கு முதலில் சிந்து சமவெளி தான் நினைவுக்கு வந்தது. அப்போது கூட அவள் எதை நோக்கி போகிறாள் என்பது அவனுக்கு உரைக்கவில்லை.

“எடுத்த எடுப்புலேயே ஆளையா அனுப்ப போறீங்க?”

“ஏற்கனவே ஒரு வீடியோ கேமரா, குரங்கு இதெல்லாம் அனுப்பியாச்சு”

“என்ன ஆச்சு”

“ஒண்ணுமே ஆகல. அந்தப் பக்கம் என்ன நடந்ததுன்னே தெரியலை.. நாங்களும் விதவிதமா முயற்சி செஞ்சு பாத்தாச்சு. ஒரு முக்கியமான விஷயம், கருந்துளையை ஸ்திரமா வைக்க அதை வாக்யூம் சேம்பர்ல  வைக்கனும். இந்தப் பக்கம் அத செஞ்சாச்சு. அந்தப் பக்கம் போன உடனே அதை வெற்றிடத்தில் அடைக்கணும். இல்லனா எதுவும் திரும்ப வராது. அதுக்குதான் ஒரு மனுஷன அனுப்ப முடிவெடுத்திருக்காங்க”

சிறிது நேரம் மின்விசிறி சப்தம் மட்டும் பெரிதாகக் கேட்டது. ஆரம்பத்தில் இருந்து அவனுக்குள் ஓடிய கேள்வியை அவளின் பார்வையைப் பார்க்க பயந்து ஜன்னலை பார்த்துக்கொண்டு கேட்டே விட்டான். “இதெல்லாம் ஏதோ கனவுல கேக்கறா மாதிரி இருக்கு. இதுல நான் என்ன செய்யணும்?”

ஐயாயிரம் வருடங்களுக்கு முன் என்றால் ஏதோ ஒரு பண்டைய நாகரிகத்தில் போய்ச் சேரவே சாத்தியம். எகிப்து, மெசபடோமியா, சிந்து என்று மூன்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டு, அரசியல் காரணங்களால் இந்தியா தான் அவர்களின் முதல் தேர்வு. அதைப்பற்றி ஓரளவிற்கு அறிந்த ஒருவனால் தான் அங்குச்சென்று தாக்குப்பிடித்துத் திரும்பி வரமுடியும். கூடவே அறிவு நுட்பம், உடல் தகுதி உள்ளிட்ட நிறைய அம்சங்களை பெற்றிருக்கவேண்டும். இவற்றில் பெரும்பாலானவற்றுடன் அங்கு போய் வர கோபால்தான் பொருந்தி வருகிறான். ஆகவே அவனுக்கு மனித வரலாற்றிலேயே முதல் காலப்பயணியாகும் வாய்ப்பு. அப்படி நடந்தால் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கே தேடி வந்து அவனுக்குக் கும்பிடு வைத்துவிட்டு போகக்கூடும்.

வேக வேகமாக மெல்லிய குரலில் அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே இவனுக்கு வேறு யோசனை ஓடியது.
இதெல்லாம் சாத்தியம்தானா, ஒப்புக்கொண்டு போனாலும் திரும்பி வர முடியுமா? என்னதான் சிந்து காலகட்டத்தை நேரில் பார்க்க வாய்ப்புக் கிடைத்து, முடிந்தால் அவர்களின் மொழியைக் கற்றுக்கொண்டு வந்தாலும்..

அவனுக்கென்று அப்பா தவிர யாருமில்லை, அவரும் ஆசிரமத்தில் சாமியாகி பல வருடங்களாகி விட்டது. அவன் பெரிதாகச் சாதா பயணங்களே போனதில்லை. இதையெல்லாம் விட முக்கியமாக M.Sc., சமயத்தில் சௌம்யாவுடன் ஒரு குருட்டுச் சந்தர்ப்பத்தில் மேலாக நெருக்கமாக இருந்ததைத் தவிர வாழ்க்கையில் பெரிதாக எதையும் சுகித்துவிடவில்லை. போவதற்கு முன் தனது முழுக்காதலையும் அவளிடம் வெளிக்காட்டலாம் என்றால் கூட காலம் கடந்துவிட்டது. அவளும் அவளது கணவனும் சேர்ந்து ஜோடியாக உதைப்பார்கள்.

“எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலீங்க”

அதனாலும் தான் உன்னைத் தேர்ந்தெடுத்தது என்று சொல்லாமல், ‘யோசிச்சி சொல்லுங்க..” என்று மட்டும் சொல்லிவிட்டு அர்ச்சனா போய் விட்டாள்.

***

கோபால் நிச்சயம் வருவான் என்று எண்பது பேர் கொண்ட அவளின் டீமுக்குத் தெரிந்திருந்தது. இவனுக்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருந்தனர். அர்ச்சனா அவனிடம் விளக்கிய ஒவ்வொரு வார்த்தையும் பல நூறு பக்க கணித சமன்பாடுகளாக உருப்பெற்றுக் கிடந்தது. ஏகப்பட்ட உபகரணங்களுடன் அந்த இடம் வயர்கள் செழித்து வளரும் வயல் போலிருந்தது. கருந்துளையைச் சுவிட்சர்லாந்தில் இருந்து வெற்றிட பெட்டியில் கொண்டு வந்தும் விட்டார்கள்.

எந்த இடத்தில் கருந்துளையில் நுழைகிறோமோ, ஐயாயிரம் வருடங்களுக்கு முன் அதே இடத்தில் இறங்குவோம். ஆகவே அது கடலாகவோ காடாகவோ இருந்துவிடாமல், மனித குடியிருப்புகளின் மிக அருகில் இருக்கும் இடமாக இருக்க வேண்டும். குஜராத்தில் லோத்தல் கிராமத்தை தேர்ந்தெடுத்திருந்தார்கள். அந்தக் காலத்தில் கப்பல் போக்குவரத்துக்குப் பெயர் போன இடம், வெளிநாட்டு வர்த்தகர்கள் வந்து போயிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கும் இடம். ஊருக்குள் கோபால் ஒரு வெளிநாட்டு வர்த்தகர் என்று சொல்லிக்கொண்டு நுழைவதாக ஏற்பாடு. அந்தக் காலத்தில் மதிப்பு நிறைந்ததாகக் கருதப்படும் செம்பு, தங்கம் போன்றவற்றைக் கொடுத்தனுப்புகிறார்கள். அதனுடன் ஒரே ஒரு துப்பாக்கி.

கூடவே கதிரியக்க ஐசோடோப்கள் சிலவற்றைப் பழைய ஊர்களின் முக்கியத்துவம் பொதிந்த இடங்களில் புதைத்து விடவேண்டும். பிறகு நிகழ்காலத்தில் Zinc Sulfide டிடக்டர்கள் மூலம் அந்த இடங்களைக் கண்டு பிடித்து ASI உதவியுடன் அகழ்ந்து கிடைக்கும் பொருட்களைச் சாவகாசமாக ஆராய்ந்து கொள்ள வேண்டியது. இவன் கேட்டுக்கொண்டதன் பேரில், சிந்து எழுத்துக்களில் தகவல்களைப் பதிக்கும் இடங்களில் அந்த ஐசோடோப்களைப் போடுவதற்கு ஒப்புக்கொண்டார்கள். அங்கு இருக்கப்போகும் சில நாட்களில் கோபாலின் முக்கிய வேலை அந்த எழுத்துக்கள் பற்றியும் அந்தக்கால வார்த்தைகளையும் தெரிந்து கொள்வது. மற்ற அறிவியல்களை விஞ்ஞானிகள் பார்த்துக்கொள்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை இதெல்லாம் போனஸ், அவர்களுக்குக் காலப்பயணம் சாத்தியப்பட வேண்டும், அவ்வளவுதான்.

பயிற்சியே மூன்று வாரத்திற்குக் கொடுத்தார்கள். கிளம்ப வேண்டிய தினம் வந்ததும் விண்வெளி பயணம் போகிறவர்களுக்கான அதே உடையில் கோபால் ஆர்ம்ஸ்டிராங் மாதிரிதான் தெரிந்தான். முலாமிட்ட கை பெட்டியில் மற்ற சமாச்சாரங்கள். எல்லோரிடமும், அர்ச்சனாவிடமும் சொல்லிக்கொண்டு வெற்றிட பெட்டிக்குள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த கருமுட்டையை நோக்கி இறங்கினான். அதனுள் குதிக்குமுன் கலங்கிய கண்களை முகக்கவசத்தைத் தாண்டி துடைக்கக் கூட முடியவில்லை. குதித்தான்.

***

அர்ச்சனா சரியாகத் தூங்கி மூன்றாவது வாரம் இது. திட்டத்தின் படி கோபால் போய்ச்சேர்ந்ததும் சமிக்ஞை தரவேண்டும். ஆனால் தரவில்லை. வாரத்திற்கு ஒரு முறை எல்லாம் சரி என்று தகவலனுப்ப வேண்டும். எதுவுமே வரவில்லை. ரகசியமாக அந்தச் சமிக்ஞைகளை அனுப்ப முடியாமலும் போகலாம் என்பதால், என்ன ஆனாலும் மூன்று வாரத்திற்குள் திரும்பி விட உத்தரவு. நேற்றோடு மூன்று வாரக்கேடு முடிந்தது. இன்னும் திரும்பவில்லை. தண்ணீர் இருக்க வாய்ப்பு மிகவும் குறைவான ஒரு கருங்கிணற்றில் அப்பாவி ஒருவனை நீச்சலடிக்கத் தள்ளிவிடுவதைப்போல் அவளுக்குத் தொடர் கனவுகள்.

அவள் அறைக்கதவை யாரோ டமடமவெனத் தட்டவும் முகம் வீங்கிய நிலையில் மெதுவாகச் சென்று கதவை திறந்ததும் சக ஆராய்ச்சியாளன் கத்தினான். “வாக்யூம் சேம்பர்ல் ரீடிங்க்ஸ் எகிறுதாம்.. உடனே கிளம்பு”.

கோபால் திரும்பிவிட்டான்!

***

கோபாலுக்கான மருத்துவப் பரிசோதனைகள் நடக்க வெளியில் அர்ச்சனா, பிடித்த இரு விஷயங்களுக்கு இடையில் அல்லாடும் குழந்தையை போல் இங்கும் அங்கும் தத்தளித்தாள். ஒருவழியாக வெளிவந்ததும் அவனிடம் ஓடி தலை திரும்ப அறைந்து “ஏண்டா ஒரு செய்தி கூட அனுப்புல? தட் யூ ஆர் ஓகே?”
அவன் வெகுவாக மாறியிருந்தான். சோர்வாக இருந்தாலும் அட்டகாசமான ஒளி அவன் கண்களில்..

“ஹேய்.. எனக்கு இப்போ வயசு பத்தாயிரம் தெரியுமில்ல? பெரியவங்கள அடிக்கலாமா?” என்று சொன்னதும் அனைவருடனும் சேர்ந்து அவளும் சிரித்தாள்.

***

மூன்று வாரக்கதைதான் என்றாலும் எவ்வளவு சொல்லியும், எழுதியும் அவனுக்குத் தீரவில்லை. பாம்பு மாத்திரை மாதிரி அவ்வளவு சிறிய மனிதனிடமிருந்து ஒரு யுகத்திற்குண்டான தகவல் பொங்கி வந்துகொண்டே இருந்தன. பெரும்பாலான சிந்து எழுத்துக்களையும், ஏராளமான வார்த்தைகளுக்கு அர்த்தமும் சேகரித்திருந்தான். அவனால் தூங்கவே முடியவில்லை, மாத்திரை போட்டு தூங்க வைக்க வேண்டியிருந்தது. நடுநடுவே அர்ச்சனாவின் குழு அவர்களின் ரகசிய ஆராய்ச்சி முடிவுகள் குறித்துச் சொன்னது எதுவும் இவனுக்குக் காதில் ஏறவேயில்லை.

முதல் முறை சிந்து சமவெளி காலத்துக்குப் போய்ச் சேர்ந்ததும் ஏதோ எண்பதுகளின் தமிழகக் கடலோர நகரம் என்று நினைத்திருக்கிறான். பிறகுதான் சரியாகவே போய்ச் சேர்ந்திருக்கிறோம் என்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது. இவர்களின் திட்டம் கிட்டத்தட்ட கச்சிதமாகவே நடந்திருக்கிறது. சிந்து மக்கள் அவனைத் தனியாக எங்கும் விடவில்லை என்பதால் அவ்வபோது வந்து எதிர்முனைக்குச் சமிக்ஞை மட்டும் கொடுக்க முடியவில்லை. அவன் கொண்டு சென்ற செம்பும் தங்கமும் அவனுக்கு நல்ல மதிப்பையும் விரும்பியதை செய்யும் சுதந்திரத்தையும் அளித்திருந்தது. திட்டப்படியே கல்வி நிலையங்கள், நூலகங்கள் போன்றவற்றில் ஐசோடோப்புகளைப் புதைத்துவிட்டு வந்தாகிவிட்டது. இவர்களின் உதவியுடன் ASI அந்த இடங்களைக் கண்டுபிடித்து அகழ்ந்ததில் ஏராளமான செப்புப் பட்டயங்கள், எழுத்து அச்சுக்கள், மண்பாண்டங்கள் மீது வண்ணத்தில் எழுதப்பட்ட கதைகள் என்று கிடைத்தன.

அவனுக்கு நினைவிருக்கும்போதே அத்தனை எழுத்துக்களையும் வார்த்தைகளையும் வரிசைப்படுத்திக் குறித்து வைத்ததும் நல்லதாகப் போயிற்று. அகழ்ந்து கிடைக்கும் தகவல்கள் அத்தனையையும் கட்டுடைக்கக் கோபால் தலைமையிலேயே எபிக்ரஃபி நிபுணர்கள் குழு ஒன்று ராப்பகலாக இயங்கியது. அவனும் நாளை என்பதே இல்லை என்பதைப் போல் அதிலேயே கழித்தான். பல வார்த்தைகள் அவனுக்கு மனப்பாடமாக, குறிப்புகளைப் பார்க்காமலே படிக்குமளவு பயிற்சி வந்திருந்தது. தோண்டத் தோண்ட புதையலைப் போல் சிந்து சமவெளி அரங்கேறிய பல நூற்றாண்டு கதைகள் குவிந்து கொண்டே இருந்தன.

***

களைப்பு மேலிட்ட ஒரு காலையில் வரலாறு என்று தலைப்பிட்ட சில செப்புப் பட்டயங்கள் கோபாலின் கவனத்தை ஈர்த்தன. பல துறைகளில் முன்னேறிய சிந்து சமவெளி சமூகம் அவர்களின் வரலாற்றுக்கும் நிச்சயம் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். 

பல ஆயிரம் வருடங்களுக்கு முன் கோபாலைப்போலவே ஏதோவொரு வரலாற்று ஆய்வாளன் எழுதியது. அதில் பகுதி ஒன்று என்று குறிக்கப்பட்ட பட்டயத்தை எடுத்துக்கொண்டு தனது வழக்கமான இருக்கையில் அமர்ந்து மொழிபெயர்க்க தொடங்கி, முதல் இரண்டு வரிகளைத் தோராயமாக முடித்ததும் வாசித்துப்பார்த்தான்.

"சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் மிகவும் முன்னேறிய ஒரு சமூகம் இருந்தது.. அது அழிவற்றது என்று தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டது"..


(சொல்வனம்.காமில் வெளிவந்த அறிவியல் புனைவு)



முழுதும் படிக்க..

Nov 6, 2014

இரண்டாவது முகம் - நீல பத்மநாபன்


வானம் எப்படி அவ்வளவு தூரம் போனது என்று கர்ண பரம்பரை கதை ஒன்றுண்டு. சிறு வயதில் நாம் அனைவருமே கேட்டதுதான். பாட்டி ஒருத்தி கோலம் போட்டு நிமிர்கையில் வானம் அவள் முதுகில் இடித்ததாம். உடனே 'எட்டாத உயரத்துக்குப் போய்த்தொலை' என்று அதைச் சபித்தாள். அப்போது கைக்கு எட்டாமல் போன அது, பிறகு திரும்பவில்லை. அறுபது வயது திருமணமாகாத அர்ச்சகர் ஒருவர், தனது பால்ய சினேகிதி கோமு இறந்த தினத்தன்று, வானத்தைப் பார்த்தவாறு படுத்திருக்கையில் இக்கதையை நினைத்துப்பார்க்கிறார். கோமுதான் உன் மனைவி என்று சொல்லி வளர்க்கப்பட்ட அர்ச்சகர், அவள் வேறு இடத்தில் வாழ்க்கை பட்டும், இவர் வேறு யாரையும் தேடாமல் அம்மனையே துணையாகக் கொண்டு நடத்தும் வாழ்க்கை நம் முன்னே விரிகிறது. ஆனால் எப்படியோ கோவிலுக்கு நாள் தவறாமல் வந்துவிடுகிறது கோமு அவள் கையாலேயே உருவாக்கும் துளசி மாலை. அதே கோமுதான் அன்று இறந்துவிட்டாள். அம்மன் இனியும் ஒரு மாற்றாக இருக்க முடியுமா?

நைவேத்தியம் என்னும் இக்கதைதான் இந்தச் சிறுகதை தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சற்றே நீளமானதும் அதுவே. சிறுகதைகளுக்கான தேவைதான் என்ன?, ஓரிரு வரிகளில் சொல்ல வந்ததை சட்டு புட்டென்று சொல்ல வேண்டியதானே? என்று சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் கேள்விக்கும் இங்கு விடை கிடைக்கிறது. '60 வயதான பேச்சிலர் தனது பால்ய தோழி இறந்தன்னைக்குத் தானும் இறக்கிறார்' என ட்விட்டர் பாணியில் ஒரே வரியில் இக்கதையைச் சொன்னால், இந்தக் கதை அளிக்கும் விஸ்தாரமான சித்திரம் தவறிவிடும்.


Image courtesy: http://www.eramurukan.in

ரொம்பப் பிடித்த இன்னொரு கதை, காத்திருப்பு. 48 வயது திருமணமாகாத வாத்தியார் (இதுதான் கடைசி, இதற்கு மேல் திருமணமாகாத வயதானவர்கள் யாரும் வரமாட்டார்கள்) ஒருவருக்கு, தன்னிடம் கையும் பிட்டுமாகப் பிடிபட்ட மாணவி ஒருத்தி கொடுக்கும் வாக்குறுதி - 'மாட்டிவிடாதீர்கள் ப்ளீஸ், நான் உங்களை இன்றிரவு திருப்திபடுத்துவேன்' (அதற்கு ட்ரைலராக தனது முந்தானையையும் நழுவ விடுகிறாள்)! அன்றிரவு அவரின் தவிப்பு, கொந்தளிப்பு, வெறி, ஆற்றாமை இத்யாதிகள் அத்தனையும் அருகில் இருப்பதைப் போல் உணரமுடிந்தது. அட்டகாசம்!
பார்க்கப்போனால், இத்தொகுப்பில் உள்ள 21 கதைகளின் அடிச்சரடாக காமம், விடுபடுதல், சாமானியனின் சுயவெறுப்பு, அற்பத்தனம் போன்ற சில பொதுவான அம்சங்களைப் பார்க்க முடிகிறது. அதிலும் இந்த விடுபடுதல் தீம் அந்தத் தலைமுறையின் விருப்பமானது போலும் (அசோகமித்திரன் அடிக்கடி நினைவுக்கு வந்தார் - விடுதலை குறுநாவலில் முற்றிலும் துறந்தவரும், மானசரோவர் கோபாலும்). தனது ஆசைகளை ஒளித்து, போராட்டமாகவே போய்க்கொண்டிருக்கும் லௌகீக வாழ்க்கையை உதறிவிட்டு ஆன்மிகத்தில் தஞ்சமடைய விழையும் கதாபாத்திரத்தை 'விடுபடுதல்' கதையில் பார்க்க முடிகிறது. தன் இஷ்டத்திற்கு வாழ்ந்து கொண்டிருக்கும் சாமியார் ஆகிவிட்ட அவனது நண்பனுடன் ஆசிரமத்திற்கு போகும்போது கிடைக்கிறது அவனுக்கான ஸ்பார்க்.

இதே மையம் '(அ)லட்சியம்' கதையில் வேறு விதமாகப் பரிமளிக்கிறது. சமூகம் எதிர்பார்க்கும் அலங்கார பாவனைகளை அலட்சியமாக மதிக்கும், அதை மூர்க்கமாகத் தவிர்க்கும் நெல்லையப்பன். அந்த பாவனைகளில், வாழ்வின் போராட்டங்களில் இருந்து தப்ப முடியாமல் சிக்கி கிடக்கும் அவனது நண்பன். அப்படி அலட்சியமாக இருந்தும் நெல்லையப்பனுக்கு அவன் விருப்பத்தை விட நிறைவாகவே நடக்கிறது, கிடைக்கிறது. ஆனால் அப்படி அலட்சியமாக இருப்பதே பெரிய லட்சியம்தான் என்பது இறுதியில் புரிகிறது. கடைசிக்கதையான 'பசி', யார் நினைத்தாலும் அப்படி ஒன்றும் முற்றும் துறந்து விடமுடியாது என்பதை முகத்தில் அறைய அறைய உணர்த்துகிறது.

காமத்தின் பன்முகப்புகளை (multiple facets) பேசும் பிற கதைகளில், காமமின்றி அமையாது உலகு என்பதைச் சற்றே அங்கதத்துடன் உணர்த்தும் 'உயிர்' கதை. பிரசவத்திற்குப் பிறகு அம்மா வீட்டில் இருக்கும் ருக்கு. இரவில் 'படுத்துக்கொண்டிருக்கும்' அண்ணா-அண்ணி, அப்பா-அம்மா தம்பதிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது அவளின் அழும் குழந்தை. 'ஒரே ஒரு உதவி' கதையில் மனைவி ஒருத்தி கணவரின் சக ஊழியர் ஒருவருடன் இருப்பதும் அதற்கு அந்தக் கணவனின் எதிர்வினையும் கரு (பள்ளிகொண்டபுரம் நாவலிலும் இதே சம்பவம் மையமாக வரும்). நடந்த 'சம்பவம்' பற்றி உரையாடிக்கொண்டிருக்கும் சக ஊழியர்கள், பின்பு அந்தக் கணவனின் வருகை என்று அந்த அறையின் டென்ஷன் அபாரமாகப் பதிவாகியிருந்தது இக்கதையில்.

களவியல் கதையில் ரதீஷ் ஒரே பெண்ணிடம் சிறு வயதில் இருந்தே மறுபடி மறுபடி ஏமாறுகிறான். அவள் தன்னை உபயோகப்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறான், ஏன்? முத்தாய்ப்பாக 'தேடல்' கதையில் விபச்சாரியிடம் காமத்தை தேடுவதற்கும் வீட்டுக்குள் கணவன் மனைவி சட்டபூர்வமாகத் தேடுவதற்கும் என்ன வித்தியாசம்? அது அற்பம் என்றால் இதுவும் அற்பம் தானா எனும் கேள்வியை எழுப்புகிறது. தலைப்புக்கதையான இரண்டாவது முகம் காமத்தின் மற்றொரு நுட்பமான விஷயம் பற்றிப் பேசுகிறது. மத்திய வயதில் கணவன் மனைவிக்கிடையில் மாறும் கெமிஸ்ட்ரி, அதனால் வரும் விலகல், அப்போது திரண்டு வரும் வெறுப்பு விஷம், ஒருவரை ஒருவர் பழிவாங்கும் தோரணைகள் என்று அருமையான கதை. 

தன கை மீறின விஷயங்களின் முன் சுயகழிவிரக்கத்தில் வாடும் பைல்ஸ் நோயாளி (மூலாதாரம்) மற்றும் சற்றே அநியாயமாக இடம் மாற்றப்படும் அலுவலக ஊழியர் (இட மாற்றம்) கதைகளில் வரும் உணர்ச்சிகளுடன் கிட்டத்தட்ட அனைவருமே ஒன்ற முடியும். இந்த உணர்ச்சிகளை வாழ்வில் ஒரு முறையாவது கடந்திருப்போமே?

கசு அண்டி மற்றும் தரித்திரவாசி கதைகள் எந்தக் காலத்திலும் தீராத விளிம்பு நிலை தொழிலாளர்களின் அவலங்களை எடுத்துரைக்கின்றன. இதில் தரித்திரவாசி monologue வகையில் அந்த வீட்டு வேலை செய்யும் சிறுவனே சொல்வதாக விரிந்திருக்கிறது. புதுமனை புகுவிழா, வட்டு சார், பொருத்தம் போன்ற கதைகள் மனிதனை என்றும் பிரியா அற்பத்தனத்தைப் படம் போல் காட்டுகின்றன.
நீல பத்மநாபன் நாவல்கள், சிறுகதைகள் என்று புகழ்பெற்ற பல படைப்புகளை எழுதிய ஒரு முன்னோடி படைப்பாளி.

அலங்காரங்கள் ஏதுமற்ற இந்தக் கதைகள் 1971-74 காலகட்டத்தில் எழுதப்பட்டவை. அப்போது நீல பத்மநாபன் தனது முப்பதுகளில் இருக்கிறார். இத்தனை வருடங்கள் கழித்து இந்தக் கதைகளைப் படித்தும் நான் எதிர்பார்த்ததைப் போல் அவை எனக்கு பழையதாகத் தோன்றவில்லை. மனிதனின் மாறாத அடிப்படை உணர்ச்சிகள் கால வெளி தாண்டி ஒன்றுதான் எனும்போது, பல கோடி பேர் ஏற்கனவே வாழ்ந்த வாழ்வையே வேறு பல கோடி பேர்கள் திரும்பத்திரும்ப வாழ்கிறோம் எனும்போது பழசெங்கே புதுசெங்கே? இப்போது இணையத்தில் ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட பத்திருபது சிறுகதைகளைப் படிக்கிறேன். அதிலும் சில கதைகளை (பின் நவீனத்துவம்) படித்து முடித்ததும் நான் ஏமாற்றப்பட்டதைப் போல் உணர்வதுண்டு. அவற்றுக்கு நடுவில் இத்தொகுப்பு ஆசுவாசம் அளித்தது எனக்கே வியப்புதான் (கதைகளின் பழைய வார்த்தைகள், உரையாடல்கள், கதை சொல்லும் முறைகள் போன்றவற்றையும் மீறி)!

நீல பத்மநாபன் பற்றி ஒரு சுவாரசியமான தகவல். அவரது அலுவலகத்தில் வைத்தே ஒருமுறை தாக்கப்பட்டார் (இது உனக்கு சுவாரசியமா?) என்று கேள்விப்பட்டேன். அது அவரின் கதைகளைப் படித்து என்றால், தாக்கியவர்கள் அவற்றை ஒழுங்காகப்படிக்கவில்லை என்றே தோன்றுகிறது. சரியாக உள்வாங்கியிருந்தால் வணங்கிவிட்டு வந்திருப்பார்கள்.

முழுதும் படிக்க..