கண் முழித்து பார்த்தால், வீடு கரகர என்று அமைதியாக இருந்தது (மின்விசிறி மட்டும்). முகம் கழுவலாம் என்று போனால், குழாயில் தண்ணி வரவில்லை. என்ன, யாரும் மோட்டர் போடவில்லையா? போய் போட்டு விட்டு வந்தான். பின்னால் போகும்போது தான் கவனித்தான். பக்கத்து வீடும் அமைதியாக இருந்தது. அதற்கு வாய்ப்பு இல்லாததால், சற்று குழம்பி, இவர்களுடன் சேர்ந்து வீட்டில் இருப்பவர்கள் வெளியில் சென்று விட்டார்களா? அப்படியே வெளியில் வந்து பார்த்தால்...
வீதி அம்போ என்று தனியாக இருந்தது. கொஞ்சம் வண்டிகள் நடு நடுவில் நிறுத்தப்பட்டு இருந்தன. ஒரு வேளை, விபத்து ஏதாவது நடந்து, தெருக்காரர்கள் எல்லாம் ஆஸ்பத்திரி போயிருக்கிறார்களா?
வண்டிகளை பார்த்தான். விபத்து நடந்த மாதிரி தெரியவில்லை. அப்படியே சுற்றிலும் உள்ள வீடுகள், கடைகள்.. எல்லாமே கூட்டு களவாணிகள் போல் கம் என்று இருந்தன. பக்கத்து தெரு, அடுத்தவர்கள் வீடு என்று நுழைந்து துழாவினான். ஒரு நாய் கூட இல்லை (நாயைத்தான்). மொபைலை எடுத்து ஒவ்வொரு நம்பராக முயற்சித்து, யாரும் எடுக்காமல் போகவே, நிறுத்திவிட்டு, வீட்டிற்கு திரும்பி வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். பிரதான சாலை முதல் முறையாக யாரும் கண்டு கொள்ளப்படாமல் அமைதியாக, வண்டிகள் அங்கங்கு சிதறி இருந்தது. நெஞ்சம் திடும் திடும் என்றது.
வட இந்தியாவில் இவனுக்கு தெரிந்த ஒரே நண்பனுக்கு கால் பண்ண, 'தி நம்பர் யு டயல்ட்..' என்று சொன்ன குரல் பயமுறுத்தியது. கொஞ்ச தூரம் போய் பார்த்து விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து, அவசரமாக டிவியை போட்டான். பாதி சேனல்கள் கறுப்பு வெள்ளை ரவைகளை காட்டியது. வந்த ஒரு சேனலில் (பொதிகை) யாரோ சொரியாசிஸ் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள்.
பயம் வர ஆரம்பித்தது. முன்னாடியே ஆரம்பித்து விட்டது. இப்போது கொஞ்சம் அதிகமாக, நிச்சயமாக.. ஆங்கில படங்களில் பார்த்தது போல் எல்லாரும் இல்லாமல் ஆகி, நான் தான் கடைசி மனிதனா? அப்படியும் நடக்குமா? கொஞ்சம் யோசித்தான். வந்து மோடத்தை ஆன் செய்து (ஆன் ஆனது) கம்ப்யூட்டரை இயக்கினான். ஒன்றும் தெரியவில்லை. நேற்றைய சம்பவங்களே (வரைக்கும்தான்) இருந்தன.
யாருமே இல்லையா..? அப்பா, அம்மா, பாட்டி, சுப்பு, ஜென்சி எல்லாம் போய் விட்டார்களா? சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்தான். எத்தனை மணி நேரம் ஓடி இருக்கும் தெரியவில்லை.
இப்படி உட்கார்ந்து இருந்தால் சரிப்படாது.. சட்டென்று எழுந்து, தேவைகளை யோசித்தான். முதலில் சாப்பாடு. கடையில் இருக்கும் பொருட்கள், 3 அல்லது 4 மாதங்களுக்கு தாங்குமா? மின்சாரம்.. கண்டிப்பாக வேண்டும். இன்னும் வந்து கொண்டு இருக்கிறது, எப்போது நிற்கும் என்று தெரியாது.. இணையத்தில், ஜெனரேட்டர்களை இயக்குவது எப்படி என்று தேடி, சேமித்து வைத்துக்கொண்டான். ஏதோ பொறி தட்ட, காப்பி போடுவது எப்படி, சோறு வைப்பது எப்படி என்று ஆரம்பித்து பல தரப்பட்ட விஷயங்களை சேமித்து வைத்தான். தனக்கு எத்தனை அன்றாடம் தேவைப்படும் விஷயங்கள் தெரியவில்லை என்பது குறித்து வெட்கப்பட்டான்.
ஏதோ ஒரு நம்பிக்கையில் வெளியே வந்து, தெருவில் சாவியுடன் டக்கென்று நின்று போயிருந்த பைக்கை எடுத்துக்கிளப்பினான். திரும்பவும் தெருத்தெருவாக சுற்றினான். உயிரினங்கள் எதுவும் தட்டுப்படவில்லை.. செடி கொடிகள் மட்டும் இருக்கின்றதே..?
தான் விரும்பிய தனிமை, அபிரிமிதமாகவே கிடைத்துவிட்டது என்று திடீரென்று சந்தோஷப்பட்டான். அது அவனுக்கே ஆச்சர்யத்தை அளித்தது. பயம் வேண்டுமானால் நிரம்ப இருக்கிறது.. எது ஆனாலும், தனிமையில் பைத்தியமாக மட்டும் ஆகக்கூடாது என்று நினைத்துக்கொண்டு திரும்ப வீடு சேர்ந்தான்.. பகலில் பரபரப்பாக ஓடிய பொழுது, இரவில் மெது.......வாக நடந்தது.. தூக்கம் வரவில்லை. ஒவ்வொரு நிமிடமும் பீதியுடன் கழிந்தது..
மறு நாள் காலை, இன்னும் இருந்தான்.. ஒரு முடிவுடன், கடைகளுக்கு போய் புத்தகங்களை சேமிததான். படங்களை, இசை சிடிக்களை சேகரித்தான். கொஞ்சம் பெரிய பக்கத்து வீட்டை தனது இருப்பிடமாக மாற்றி, ஜெனரேட்டர் இணைத்து சரிபார்த்துக்கொண்டான்.. மனிதர்கள் இருக்கும் போதே வராத மின்சாரம் இன்னும் வந்து கொண்டு இருந்தது.. அறையை விட்டு வெளியே வராமல், பல வருடங்களாக புத்தகங்களை மட்டுமே படித்து வாழ்ந்தவர்களை பற்றி படித்திருப்பதை நினைவு படுத்தி, அப்படி நினைத்துக்கொண்டு போகிறது என்ற முடிவுக்கு வந்தான்.
அந்த பக்கத்து வீட்டு சோபாவில் சாய்ந்து கொண்டு, கண்கள் மூடி அமர்ந்தான். நிலைமையை சமாளிக்க கூட ஒரே ஒரு பெண் இருந்தால்? அது பேராசை.., ஒரு ஆண்? அட்லீஸ்ட், I am legend போல ஒரு நாய்..? ஆனால், எல்லாம் முடிந்து விட்டது என்று இன்னும் நம்ப முடியவில்லை. இப்படியா முடிய வேண்டும்? சுவடே இல்லாமல்..
ஏதோ ஒரு படத்தை போட்டு, மனிதர்களை பார்த்ததும் எச்சிலை முழுங்கி முழுங்கி, டிவியை நிறுத்தி விட்டான். உலகிலேயே தான் ஒரு ஆள் தான் பாக்கி என்ற பிரம்மாண்டத்தை அவனால் கிரகிக்க முடியவில்லை.
அறையை விட்டு வெளியே வராமல் பல வருடங்கள் இருந்தவர்களை திரும்பவும் நினைத்தான். அவர்களுக்கு வெளியில் ஆள் நடமாட்டம் இருப்பது தெரிந்து அல்லவா இருந்தார்கள்? இந்த அண்டத்திலேயே யாரும் இல்லை என்பது தெரிந்து எப்படி நிம்மதியுடன் இருக்க முடியும்? ராபின்சன் க்ரூசோவுக்கும், சக் நோலண்டிற்கும் மனிதர்கள் எங்கோ இருக்கிறார்கள் என்ற அந்த ஒற்றை நம்பிக்கையாவது இருந்ததே? தனக்கு?
ஏன்? ஒரு மனிதன் தனக்கே உரிய இலக்குடன், தனியாக இருக்க முடியாதா? ஒரு வேளை இலக்குகளையே, அடுத்தவர்களுக்காகத்தான் வைத்துக் கொள்கிறோமா? 'பார், நான் இலக்கை அடைந்து விட்டேன். முன்னேறி விட்டேன். ஜெயித்து விட்டேன்' என்பதெல்லாம் அடுத்தவர்களுக்கு சொல்ல மட்டும் தானா? தன்னுடைய சுய மகிழ்வுக்கு இல்லையா? அடுத்தவர்கள் பார்த்தால் தானே அந்த மகிழ்ச்சிக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது?
மண்டை குழம்பியது.. எதிலும் முழுதாக மனதை செலுத்த முடியவில்லை. ரஹ்மானின் உற்சாக பாடல்கள் கூட அழுகையை வரவழைத்தது.. கொஞ்சம் ரொட்டியை கொறித்துவிட்டு, கதவுகளை அடைத்துவிட்டு படுத்தான். அசந்து தூங்கிபோனான். கனவுகளும் அன்று அவனை புறக்கணித்தன..
மூன்றாம் காலை சிறிது புத்துணர்ச்சியாக, தெளிவாக யோசிக்க முடிந்தது. 'ஒரு' காரை எடுத்துக்கொண்டு, தனக்கு தேவையான பொருட்கள் என்று எது எல்லாம் தோன்றுகிறதோ, அதை எல்லாம் சேமித்தான். கூட ஒருத்தராவது இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டான்.
********
ஓடியே விட்டது 2 வருடங்கள்.. இப்போது எல்லாம் 'யாராவது இருக்கிறார்களா' பற்றி அதிகம் சிந்திப்பது இல்லை. ஆனால் அடிக்கடி காரணம் இல்லாமல் அழுவது உண்டு. இப்போது தேர்ந்த விவசாயியாகவும் ஆகியவன், அன்றைய அறுவடையை முடித்துக்கொண்டு தனது இருப்பிடத்திற்கு திரும்பினான்.
பிடித்த புத்தகங்களை எல்லாம் வேகமாக முடித்து விடுகிறான். எங்கே எல்லா புத்தகங்களும் முடிந்து விடுமோ என்று வேகத்தை குறைத்துக்கொண்டு படித்தான். நிச்சயமாக வேறு யாரும் கிடையாது என்று தெரிந்து இருந்தது. பாதுகாப்பிற்கு காவல் நிலையத்தில் எடுத்த துப்பாக்கிகளை வைத்திருக்கிறான் ஆனாலும் என்ன என் இலக்கு? யாருக்காக இவை எல்லாம்? என்று ஒரு வெறுமை எப்போதும். அவனுடைய இருப்பிடத்தை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வளர்த்து, ஒரு ராஜாங்கமே நடத்திக்கொண்டு இருந்தான். இந்த விஷயத்தில் கர்வம் தான்.
********
கடைசியாக அழுதது எப்போது என்று நினைவில்லை. எதிர் பார்த்ததை விட வேகமாக 5 வருடங்கள் ஓடி விட்டது. தனக்கு என்று ஒரு சுழற்சியை உருவாக்கி கொண்டு அவன் பாட்டுக்கு இருந்தான். புத்தகங்களாலா தெரிய வில்லை, ஒரு ஞானி போல் தேஜஸ் அவன் முகத்தில்.
ஆனால், கொஞ்ச நாட்களாக, ஆரம்ப காலத்தில் இருந்த அந்த காரணம் புரியாத பயம் திருப்பி வர ஆரம்பித்தது. என்ன காரணம் என்று ஊகிக்க முடியவில்லை. கொஞ்சம் தீவிரமாக ரோந்து வர ஆரம்பித்தான்.
*********
வழக்கம் போல் சுற்றி வந்து கொண்டிருக்க.. திடீரென ஒரு நாள், சிலிர்க்க வைத்த அந்த காட்சி. இரண்டு கால்களில்.. ஒரு உருவம். வந்து கொண்டிருந்தது. திகைத்து போய், துப்பாக்கியை எடுத்து தயார்படுத்தினான். மனித உருவம் தான். ஒரு பெண். மிகவும் சோர்ந்து போய்.. நெடு நாட்கள் சாப்பிடாமல் இருப்பதை போல். முதல் முறையாக, ஒரு அசையும் உயிரை பார்க்கிறான்.
பலம் எல்லாம் இழந்து போய் எங்கே மூர்ச்சையாகி விடுவோமோ என்று பயந்தான். இல்லை கூடாது.. அவளை நோக்கி கை அசைத்தான். அவள் தட்டு தடுமாறி.. இவன் அருகில் வந்தாள்.
'பசிக்குது.. சாப்பிட எதாச்சும் இருக்கா? '
அமைதியாக பையில் இருந்த சோளத்தை எடுத்து கொடுத்தான். சாப்பிட்டு விட்டு தண்ணி குடித்தாள்.
'எங்க இருந்து வர?'
'ரொம்ப தூரத்துலேர்ந்து..'
'நீ மட்டும் தானா?'
'இல்ல.. ஒரு நூறு பேர் கிட்ட இருக்காங்க.. எல்லாம் பின்னாடி வராங்க'
முகம் இருண்டது. இல்லை.. இல்லை. இப்படி நடக்க முடியாது. முடியவே முடியாது. இப்படியும் இருக்குமா? இது என் இடம்..
'மரியாதையா வேறு எங்கயாச்சும் போயிடுங்க' என்று கண்ணில் நீர் மறைக்க கத்தி விட்டு.. தன் இடத்திற்கு போய் தாழிட்டுக்கொண்டான்.
ஜன்னல் வழியே, தெருவை நோக்கி தயாராக இருந்தது.. ஒரு துப்பாக்கி..!