Jan 13, 2014

நார்த் 24 காதம்

அருமையான ரோட் மூவி பார்த்து கொஞ்ச நாள் ஆகிவிட்டதே என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே, இதோ, நார்த் 24 காதம் பார்த்தாகிவிட்டது. ரோட் மூவிக்களை விரும்ப முக்கிய காரணம், அதில் இழையோடும் மனிதாபிமானம். இதிலும் அது நிரம்பவே உண்டு.

பந்த் நடக்கும் நாளில் கிட்டத்தட்ட நானூறு கிலோமீட்டர் வடக்கு நோக்கி பயணிக்க வேண்டிய கட்டாயம் ரொம்ப வயதான ஒரு பெரியவருக்கு. அந்த பயணத்தில் அவருக்கு உதவும் இரண்டு பேர். அந்த மூன்று பேரும் பயணத்தில் எதை இழக்கிறார்கள், எதைப் பெறுகிறார்கள் என்பது கதை.

ட்ரெயின், பேருந்து, படகு, நடை, வேன் என்று பலவாரியாக செல்லும் பயணம், கேரளாவின் கலாச்சாரத்தை அழகாக, அனாயாசமாக காட்டிச்செல்கிறது. கதாபாத்திரங்களின் இயல்பான தன்மையும் நடிப்பும் படத்தை இன்னும் நெருக்கமாக்கி விடுகிறது. வயதான காம்ரேட், களப்பணி ஆற்றும் சேவகி, obsessive compulsive disorder இருப்பவர் -  அப்படித்தானே இருப்பார்கள்? ஒரு துக்க செய்தியை கூடவே இருப்பவரிடம் சொல்லாமல் பயணிப்பது என்பது பெரிய கொடுமை. அந்தக் கொடுமையை நான் அனுபவித்து இருக்கிறேன். சொல்லாமல் விட்டால் மட்டும் துக்கம் மாறிவிடுமா என்ன? அது என்னமோ, போய்ச்சேர்ந்ததும் விழப்போகும் இடியைத்தாங்க அந்த பயணத்தையாவது அவர் நிம்மதியாக கடக்கட்டுமே என்கிற நப்பாசை.

கடைசியில் ஆட்டோவில் வரும்போதே செய்தியை உள்ளுணர்வால் உணர்ந்துவிடும் பெரியவர், இறங்கியதும் நிச்சயித்துக் கொள்கிறார். தெருவில் இருந்து வீட்டுக்கு ரொம்ப தூரம், ரொம்ப தூரம் என்று உடன் வந்தவர்களிடம் சொல்லிக்கொள்கிறார். 24 காத தூரம் வந்தவருக்கு இந்த தூரத்தை எளிதில் கடக்க முடியவில்லை. மொகிதீனே மொகிதீனே என்று அரற்றிக்கொண்டே வரும் அந்த நீண்ட நடை.. கிளாசிக்!

விஜய் சேதுபதியை பார்த்தே ஆச்சர்யம் கொள்ளும் எனக்கு, ஃபகத் ஃபாசிலுக்கு கிடைக்கும் படங்களை பார்க்கையில்... அவரை லக்கி என்று மட்டும் சொல்லி விலக முடியாது. அவர் ஒரு அற்புதமான நடிகன் என்பதைத்தாண்டி சிறந்த ரசிகனாகவும் இருக்கவேண்டும். விஜய், அஜீத் போன்றவர்களுக்கு இப்படியெல்லாம் படங்களை பார்த்து ஆசையாக இருக்குமா இருக்காதா?

ரோட் மூவிக்கள் சில:

அன்பே சிவம்
Le grand voyage
நந்தலாலா


13/365


2 comments:

தமிழ் பையன் said...

Planes, Trains, and Automobiles பாருங்கள். அன்பே சிவத்தின் மூலம் - கம்யுனிஸம் பகுதியை விட்டுவிட்டு பார்த்தால்.

Prasanna said...

அன்பே சிவம் பற்றிய பதிவிலேயே அந்த படத்தையும் எழுதியிருக்கிறேன். ஒன்றாக பயணித்து புரிந்துகொள்வதை பற்றி மட்டுமே அது பேசுகிறது.