Jan 27, 2014

அசோகமித்திரனுக்கு வயதாகி விட்டது

வயோதிகம் என்னை பயமுறுத்துகிறது. அதைக்கண்டாலே அஞ்சி நடுங்குகிறேன். அடுத்தவர்களின் தள்ளாமையை கூட என்னால் தாங்கமுடிவதில்லை. இந்தப்படம் அந்தளவிற்கு பாதித்ததற்கு காரணம் வயதாவதன் மீதான பயம்தான் என்று நினைக்கிறேன்!

அதில் எது குறிப்பாக பயமுறுத்துகிறது என்பதையும் யோசிப்பதுண்டு. நினைத்ததை செய்ய முடியாமல் இருக்கும் நிலையா? அடுத்தவர்களை சார்ந்து இருப்பதா? தள்ளாமையா? இல்லாமலாதல் பற்றிய பயமா? தெரியவில்லை.



இன்று அசோகமித்திரனின் பேட்டியை படிக்க நேர்ந்தது. அவரின் சமீபத்திய புகைப்படங்களைப் பார்த்தாலே சோகமாகி விடும் எனக்கு, இந்த கேள்வியும் பதிலும் பெரும் துக்கத்தை கொடுத்தது.

உங்களுடைய அன்றாட வாழ்க்கை குறித்து...

மூணு நாலு வருஷத்திற்கு முன்பு இறந்துவிடுவேன் என நினைத்தேன். நினைவே இல்லாமல் இருந்தேன். எல்லோரும் அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. இந்த விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில் நடப்பதாகச் சொன்னார்கள். அங்கே 20 படிகள் இருக்கும். கைப்பிடி இருக்காது. உள்ளே போனால் அது உடனே கீழிறங்கும். உள்ளே ஒரு படி மாதிரி இன்னொரு படி இருக்காது. அத்துடன் எனக்கு என்ன கவலை என்னவென்றால் விருதைப் படியேறி வாங்க வேண்டும். நான் அங்கு ஒரு நாடகத்தின்போது கால் தவறிக் கிழே விழுந்திருக்கிறேன். அந்தக் காயம் ஆற ஆறு மாதம் ஆனது.


இந்த பதிலை திரும்ப திரும்ப படித்தேன். சில தடவைகள் படித்ததும் ஒரு சிறிய புன்முறுவல் தோன்றியது. வயதாகி புலம்புவதைக் கூட இவருக்கு நீட்டி முழக்கி செய்யத் தெரியவில்லை!

27/365

3 comments:

Anonymous said...
This comment has been removed by the author.
Amudhavan said...

இரண்டொருமுறை அசோகமித்திரனைச் சந்தித்திருக்கிறேன். அவர் ஐம்பதுகளில் இருந்த சமயத்தில் பெங்களூர் ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கு வந்திருந்தார். அப்போதே ஒற்றை நாடியுடன்தான் இருப்பார்.பொதுவாகவே கொஞ்சம் தளர்ந்த உடம்பு. மேலும் வயதாகும்போது கூடவே உடம்பும் சேர்ந்து படுத்தினால் மனம் ரொம்பவே தளர்ந்துபோகத்தான் செய்யும்.
தவிர இந்தியாவில் முதியவர்களைப் பார்க்கும் பார்வையும் சரி, அவர்களிடம் நடந்துகொள்ளும் முறையும் சரி உடனடியாக மாற்றப்பட வேண்டியதாக இருக்கிறது. கூடுமானால் சட்டம்போட்டுக்கூட மாற்றலாம்.

\\இச் சமூகம் வயோதிகத்திடம் காட்டும் வெறுப்பும் கக்கும் விசமங்களும் வலிகளை பன்மடங்காய் பெருக்கிவிடுகின்றன. வயோதிகர் சாலையில் நடக்க, மாடிகள் ஏற, இருக்களைகள் பயன்படுத்த, இன்ன பிற உடை, உறையுள், உணவுத் தேவைகளை கவனிக்க என ஒன்றையும் நாம் அவர்கட்கு திருப்பி அளிப்பதே இல்லை. ஆனால் அவர்தம் உழைப்பையும் இளமையையும் அனுபவத்தையும் உறிஞ்சித் தான் இன்று நாம் வளர்ந்து நிற்கின்றோம் என்பதை மறந்தும் விடுகின்றோம். :(\\
மேலே விவரணன் நீலவண்ணன் மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறார். நீலவண்ணன் நீங்கள் மிக நன்றாக எழுதுகிறீர்கள்.

Prasanna said...

இன்னும் சில பத்தாண்டுகளில் பல மடங்காக கூடப்போகும் வயதானோர் எண்ணிக்கை ஒரு பெரிய crisis ஆக மாறவும் வாய்ப்புள்ளது (இப்போது பாதிக்கும் மேல் இருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை).

நீலவண்ணன் மற்றும் அமுதவன் - தங்கள் பார்வையோடு முழுக்கவே ஒன்றுபடுகிறேன்